Daily Archives: மார்ச் 1st, 2011

துணிவுமில்லை, மனமுமில்லை

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ, பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.சீனா கொதித்தெழுந்துவிட்டது. இது நமது நாட்டின் தன்மானத்துக்கே இழுக்கு என்று கருதி, அதை ஒரு தேசியப் பிரச்னையாக்கிவிட்டது. எல்லா விதத்திலும் ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது சீனா.முதலில், அனைத்து மட்டங்களிலுமான ஜப்பானியத் தொடர்புகளை நிறுத்தி வைத்தது. நிலக்கரி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புக்கான கூட்டுமுயற்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜப்பானிய எலெக்ட்ரானிக் தொழிலுக்குத் தேவைப்படும் முக்கியமான சில தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.பயந்துபோய், நமக்கேன் வம்பு என்று ஜப்பான் அந்தப் படகின் கேப்டனை நிபந்தனையின்றி விடுவித்து, சீனாவுடன் சமாதானம் செய்துகொண்டது. ஏதோ ஒரு தனியார் படகின் கேப்டன் என்று பாராமல், ஒரு சீனக் குடிமகன் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பிரச்னையை அணுகியது அந்த அரசு.ரெய்மண்ட் டேவிஸ் ஓர் அமெரிக்கப் பிரஜை. இவர் ஓர் அமெரிக்க ஒற்றர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் சென்றிருந்த இவரை இரண்டு பாகிஸ்தானியர்கள் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர்கள் என்றும், வரம்புமீறி ரெய்மண்ட் டேவிஸ் துப்பறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அந்த இருவரும் பின்தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிலர், அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் சமூகவிரோதிகள் என்றும், ரெய்மண்ட் டேவிஸின் பர்சையும், கைப்பேசியையும் பறிப்பதற்குத்தான் பின்தொடர்ந்தார்கள் என்றும் கூறுகின்றனர்.ரெய்மண்ட் டேவிஸ் தன்னைப் பின்தொடர்ந்த அந்த இருவரையும் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல சுட்டுக் கொன்றுவிட்டார். ரெய்மண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றத்துக்கான எல்லா ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது நாட்டுக் குடிமகன் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா என்றால், இல்லை.கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதி உதவி முற்றிலுமாக முடக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ரெய்மண்ட் டேவிஸ் விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் அமெரிக்க – பாகிஸ்தானிய உறவு இருக்கும் என்று அழுத்தம்திருத்தமாகப் பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.தனது நாட்டு ஒற்றருக்காக, தனது நாட்டுக் குடிமகனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் சுயமரியாதைப் பிரச்னை. அமெரிக்க உதவியால் மட்டுமே உயிர் வாழும் நாடாக இருந்தாலும், கொலையுண்ட தனது நாட்டுக் குடிமக்கள் இருவருக்காகப் போராடுகிறது பாகிஸ்தான். இது பாகிஸ்தானின் தன்மானப் பிரச்னை என்றும், வெளிநாட்டவர் ஒருவர் தங்களது நாட்டில், தங்கள் நாட்டுப் பிரஜைகளை சுட்டுக்கொல்வதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறது பாகிஸ்தான்.முடிவில், அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் என்றாலும் முடிந்தவரை தனது நாட்டுப் பிரஜைகளுக்காகப் போராடுகிறது பாகிஸ்தான்.இனி நமது இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்மீது காரணமே இல்லாமல் நிறவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதுவரை நமது இந்திய மாணவர்களைத் தாக்கிய ஒருவரைக்கூட ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுதான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு தரும் மரியாதை!அமெரிக்காவில், வனவிலங்குகளின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கக் கட்டிவிடப்படும் கழுத்துப் பட்டைகளைப்போல, பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கப்போன இந்திய மாணவர்களுக்கு “ரேடியோ டாக்’ அணிவித்து மகிழ்கிறது அமெரிக்க அரசு. நமது அரசு அதற்கு உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடத் தயங்குகிறது. கேட்டால், அந்நிய முதலீடு பாதிக்கப்படும், அமெரிக்க உறவு சிதைந்துவிடும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். ஓர் இந்தியக் குடிமகனின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விடவா, அந்நிய முதலீடு பெரியது? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?பக்கத்தில் இருக்கும் “கண்ணீர்த் துளி’ அளவிலான நாடு இலங்கை. இந்தியாவையே கேலிசெய்வதுபோல சர்வசாதாரணமாக நமது மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்கிறது அந்நாட்டு ராணுவம். நாம் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறோமே தவிர, நமது தன்மான ரத்தம் துடிக்கவில்லை. இதுவே, ஒரு சீன அல்லது அமெரிக்க மீனவருக்கு இலங்கை ராணுவத்தால் அப்படி ஏற்பட்டிருக்குமேயானால், இப்போது இலங்கை என்கிற ஒரு தீவே இருந்திருக்காது.அதெல்லாம் போகட்டும். ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை, மனமும் இல்லை.”அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே ஊமைச் சனங்களடீ’.

சர்க்கரையை தவிர்ப்பது அவசியம்!

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லா நோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.    குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் அது 92 சதவிகித வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்துங்கள், போதும். நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

நன்றி-தினத்தந்தி

தலைவலி காரணிகள்!

`நோய் நாடி நோய் முதல் நாடி….’ என்று கூறுகிறார் வள்ளுவர். அதாவது நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுத்தால், நோயை முற்றிலும் நீக்கலாம் என்பதே அதன் அர்த்தம். அப்படி பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கும் தலைவலியின் காரணியை அறிந்து கொண்டால் அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

* மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும்.

* மன உளைச்சல், உறக்கமின்மை, படபடப்பு இருந்தால் வரும்.

* காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற்றுக்களாலும் தலைவலி வரும்.

* தலையில் ஏதாவது அடிபட்ட காயம் இருந்தாலும் தலை வலிக்கும்.

* கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலிக்கும்.

* தொடர்ந்து மது மற்றும் போதை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான தலைவலி ஏற்படும்.

* நோய்க்காக நாம் சாப்பிடும் மருந்துகளின் ஒவ்வாமையால் தலைவலி வரும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், கருவற்ற போதும் தலைவலி ஏற்படும். கருத்தடை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலும் தலைவலி உண்டாகும்.

* பட்டினி கிடப்பது, உடம்பில் சர்க்கரை சத்து குறைந்தாலும் தலைவலி ஏற்படும்.

தேர்தல் திருவிழாவின் பலியாடுகள்!

மாசி மாதம் பெரும்பாலான தென்மாவட்டக் கிராமங்களில் மாசிக்களரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுகின்றன.களரித் திருவிழா நெருங்க… நெருங்க ஆடுகளுக்கு மரியாதை கூடுகிறது. பின்னர் உற்றார் உறவினர் கூடவர கோயிலுக்கு மேள தாள மரியாதையுடன் ஆட்டை அழைத்துச் செல்கின்றனர்.கோயிலின் முன் ஆட்டை நிறுத்தி திடீரென தண்ணீர் ஊற்றுகின்றனர். அப்போது, எதற்காக நம்மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள்? எனத் தெரியாமலே ஏதோ ஓர் உணர்வில் ஆடு தலையை அசைக்கும். ஆடு சந்தோஷமாகச் சம்மதம் சொல்லிவிட்டது. வெட்டுங்கள்..! எனக் கூடியிருப்போர் சத்தமிட… பெண்களின் குலவைச் சத்தம் கேட்கும். இப்படிப்பட்ட வேளையில்தான் அந்த ஆட்டின் கழுத்தை, அரிவாள் பதம்பார்க்கும்.தன்னைப் பலியாக்கவே தனக்கு நல்ல உணவும், மரியாதையும் அளித்துள்ளனர் என்பதை அறிந்து, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அந்த வாயில்லா ஜீவனால் முடியாது.ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் இப்போது தங்களது சுயநலத்தால் தமக்குத்தாமே தீமையைத் தேடிக்கொள்ளும் அவலநிலை உலகளவில் பெருகி வருவதைக் காணமுடிகிறது.மக்களின் அடிப்படைத் தேவையை அறிந்து, ஆள்வோர் அவர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தாமல் சுயநலமிக்கவர்களாக இருந்ததாலேயே எகிப்து, ஏமனில் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டது.நமது மண்ணில் அண்மைக்காலமாக நடப்பது என்ன? ஊழலில் திளைக்கும் அரசுகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தைப் புறக்கணித்துத் தொழிலதிபர்களை அரவணைக்கும் போக்கு, இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிவரும் அப்பாவி மீனவர்கள். இதுபோதாதென மின்தடை. அதனால் பாதிக்கப்படும் சிறு, குறுந்தொழில்கள், இதனால் வேலை இழந்த ஏழைத் தொழிலாளர்கள். பசி, பிணி, பகைவர் அச்சம் இல்லாத தேசமே உண்மையான தேசம் என்கிறார் வள்ளுவர். ஆனால், நமது அரசியல் தலைவர்கள் இந்த மூன்றையும் நிரந்தரமாகப் போக்குவதற்கான திட்டங்களைத் தீட்டுவதில்லை.இந்த மூன்றையும் முன்வைத்து தங்களது தனிப்பட்ட பெயரைப் பிரபலப்படுத்த மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது துரதிருஷ்டமாகும்.பணம் இருப்பவருக்கே தரமான கல்வி! பணம் இருந்தாலே உயிர் பிழைக்க வைக்கும் சிகிச்சை என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறதே! இதற்கு யார் காரணம்?அரிவாள் இன்றி கதிர் அறுக்கப் போகும் விவசாயிபோலத் தான் அரசு மருத்துவர்களின் செயல்பாடு உள்ளது. மருத்துவச் சாதனங்கள் இல்லாத அரசு மருத்துவமனைகள். கிராமப்புறச் சுகாதார மையங்களில் மருத்துவர் இன்றி சிகிச்சைபெற முடியாமல் அவதிப்படும் ஏழை மக்கள்.எக்ஸ்ரே, ஸ்கேன், மருத்துவப் பரிசோதனைகள் அனைத்துக்கும் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளிடம் கட்டணம் வசூல். விபத்தில் தலையில் அடிபட்டவர் குறைந்தது ரூ. 500 இல்லாமல் அரசு மருத்துவமனைக்குப் போனால் அவர் ஆயுள் முடிந்துபோகும் என்பதுதான் இப்போதைய நிலை.ஒரு குடும்பத் தலைவர், தனது மகனின் மருத்துவச் செலவுக்கு அடுத்த வீட்டுக்காரரிடம் பணத்தைக் கொடுத்தா செலவிடச் சொல்வார்? அதுவும் கமிஷனை எடுத்துக்கொள் என்று கூறுவாரா? அப்படிக் கூறினால் அவர் நல்ல தந்தையா?ஆனால், சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அறுவைச் சிகிச்சைக்கு தனியார் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகத்தானே நிதி வழங்குகிறது. அரசு மருத்துவமனைக்குத் தேவையான அத்தியாவசிய சாதனங்களை வாங்க நிதி ஒதுக்கப்படுவதில்லையே…! ஏன் இந்த முரண்பாடு..? அனைத்து நகர்களிலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலும் தினமும் ஆயிரக்கணக்கான குடிநீர் பாட்டில்கள் தனியார் மூலம் விற்கப்படுகின்றன. அப்படி எனில், அந்தந்த மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தில் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க முடியவில்லை என்றுதானே பொருள்.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எந்தச் சாலையாவது மேடு, பள்ளம் இல்லாமல் இருக்கிறதா?தேர்தல் கால அவசரத்தில் வேகவேகமாகப் போடப்படும் சாலைகள், அடுத்த ஆறு மாதத்தில் என்னவாகும் என்பது அந்த ஒப்பந்தக்காரர்களுக்கே தெரியும்.குடிநீர், மருத்துவம், கழிப்பிடம், சாலை வசதி என மக்களின் எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி அடையாத நிலையில்தான், இலவசங்கள் இல்லம் தேடிவரும் என்கிறார்கள். அதேபோல, வாக்களிக்கும் சாமானியரைச் சமாதானம் செய்யவே இலவசத் திட்டங்களும், தேர்தல்நேர வாக்குறுதிகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றால் நமது பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாது.ஆங்கிலேயர் அளித்த பதவி, பணம் உள்ளிட்டவற்றுக்கு மயங்கி நமது முன்னோர் அவர்களை எதிர்த்துப் போராடாமல், நாட்டின் நலனை முன்னிறுத்திச் சிந்திக்காமல் போயிருந்தால் நாம் இப்போதைய சுதந்திரக் காற்றைச் சுவாசித்திருக்க முடியுமா?முன்னோர்கள் நமக்கு அளித்த சுதந்திர உரிமையை, நமது பிற்காலச் சந்ததிகளும் சுவாசிக்க வேண்டாமா?ஆக, வருமுன் காப்போம் என்பதை உண்மையாக்க வேண்டும். அதற்கு நாம் நமது உரிமைகளை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் காலகட்டம் ஏற்பட்டிருப்பதை உணரவேண்டிய தருணமிதுதான்.திருவிழாக்காலப் பலி ஆடுகளைப்போல ஏமாறாமல், எதிர்காலத்தை நினைத்து நமது உரிமையை நிலைநாட்டுவது அவசியம். அப்படி நிலைநாட்ட வேண்டும் எனில் இலவசம் எதற்கும் மனதை அலைபாயவிடாமல், நாட்டு நலனை மட்டுமே முன்னிறுத்தி நமது வாக்கு உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

நன்றி-தினமணி

வாயில் புண் இருந்தால்..!

வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது” என்கிறார், பல்மருத்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி.

வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நிசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக் கிறது.

அறிகுறிகள்
* வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.

* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.

* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமான கன்னங்களும், ஈறு வீக்கங்களும் உண்டாகும்.

* நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் வாயில் உண்டாகும் நோய்களுக்கு காரணமா கின்றன. அந்த வகையில் நம் வாயை சுத்தப்படுத்து வதற்கும் சில உணவுகள் உள்ளன.

அந்த உணவுகள்
கிரீன் டீ: தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.

பாலாடைக்கட்டி: இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக் கப்படுகிறது.

கேரட்: கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது.

புதினா: புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.

எள்: இவை பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.

பற்களில் உண்டாகும் பிரச்சினைகள்

* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.

பற்களை பாதுகாக்கும் முறை
பல் துலக்குதல்: இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

கொப்பளித்தல்: சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.

நாக்கை சுத்தம் செய்தல்: பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.

பரிசோதித்தல்: ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.

கனிமொழி எஸ்டேட் : ஜெ., அறிக்கை

“கோத்தகிரியில் உள்ள விண்ட்சர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள், “கனிமொழி எஸ்டேட்’ என்று தான் அழைக்கின்றனர்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராடியா டேப் விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதில், சமீபத்தில் கோத்தகிரியின், “விண்ட்சர் எஸ்டேட்’டை “கனிமொழி எஸ்டேட்’ என உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் அன்று வெறும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. விண்ட்சர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை தி.நகர், 12, சவுத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் சேஷாத்ரியின் மகன் சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி-தினமலர்

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.
கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய வசதிகள், புதிய பதிப்புகளை விரைவில் கொண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், இப்போதைய இணைய வரையறைகளை ஒட்டி இயங்குவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துள்ளது. வேகத்தைக் கூட்டுவதிலும் ஆர்வம் காட்டுவதுடன், யூசர் இன்டர்பேஸ் விஷயத்திலும் அக்கறை காட்டுகிறது.
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில், யூசர் இன்டர்பேஸ் முழுமையாக மாற்றப்படுகிறது. புதிய பதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருகிறது. ஆப்பரா தொகுப்பு புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அடிப்படையில் வேகமாக இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.
சபாரி தொகுப்பில் புதிய வசதிகளும், எக்ஸ்டன்ஷன்களும் தரப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் அடிப்படையில் மக்கள் மனதில் வெற்றி பெற இருப்பதாக உள்ள பிரவுசர் எது என்று பார்ப்போமா!
1.கூகுள் குரோம் 47.27% (1,032 வாக்குகள்)
2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.97% (174 வாக்குகள்)
3. மொஸில்லா பயர்பாக்ஸ் 36.92% (806)
4. ஆப்பரா 6.6% (144)
5.சபாரி 0.92% (20)
6. மற்றவை 0.32% (7)
இந்த அடிப்படையை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பிரவுசர் கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரவுசர்கள் மாற்றம் குறித்த செய்திகள், சோதனைத் தொகுப்புகளின் புதிய வசதிகள் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்ற கணக்கினைக் காட்டுவதாகவே எண்ண வேண்டும். இதுவும் வாரா வாரம் மாறலாம்.

 

எளிமையை விரும்பும் இறைவன்!-மார்ச் 2 சிவராத்திரி

இறைவன் எளிமையானவன். அவன், பக்தனிடம் விரும்புவதும் எளிமையை தான். இதை வலியுறுத்தும் விரதம் தான் சிவராத்திரி. சிவனை வணங்க பெரிதாக எதுவும் தேவையில்லை. ஒரு கைப்பிடி வில்வ இலை, கொஞ்சம் தண்ணீர்… இதைக் கொண்டு தனக்கு செய்யும் பூஜையை, அவன் அன்புடன் ஏற்றுக் கொள்கிறான்.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியை, சிவராத்திரியாக அனுஷ்டிக்கிறோம். இந்த நாளில், எல்லா சிவன் கோவில்களும் இரவு முழுவதும் திறந்திருக்கும். நான்கு ஜாம பூஜை நடக்கும். இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்குரிய காரணத்தைக் கேளுங்கள்…
ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, கங்கை நதியைக் கடக்க உதவியவன் குகன் எனும் படகோட்டி. இவன், முற்பிறவியில் வேடனாகப் பிறந்தான். ஒருநாள், பகல் முழுக்க வேட்டையாடியும் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை. குடும்பத்தார் பட்டினியுடன் கிடப்பர், இரவானாலும் பரவாயில்லை, வேட்டையாடி, ஏதாவது ஒரு மிருகத்தைப் பிடித்துச் செல்லலாம் என, ஒரு மரத்தின் மீதேறி காத்திருந்தான். அவனுக்கு கடும் பசி; சாப்பிட ஏதுமில்லை. தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து, அவ்வப்போது, தண்ணீர் குடித்துக் கொண்டான். அப்போது, தண்ணீர் கீழே சிந்தியது. அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அவ்வப்போது வரும் மிருகங்களை, அவன் குறி வைக்கும் போது, மரம் அசைந்து, வில்வ இலைகள் கீழே விழுந்தன. இப்படியே விடிய விடிய விழித்திருந்தான்.
பொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். மரத்தடியில் சிவலிங்கம் இருந்தது. அதன் மேல், வில்வ இலைகளும், இவன் சிந்திய தண்ணீரும் சிதறி இருந்தது. அவன், அதைக் கண்டு கொள்ளாமல், சென்று விட்டான். அவன் தன்னையறியாமல் வழிபட்ட நாள், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி. இதன் காரணமாக, அந்த வேடனுக்கு, சிவன் காட்சியளித்தார். அவரைக் கண்டதும், அவனுக்கு ஞானம் பிறந்தது. பாவத் தொழிலான வேட்டையாடுவதை விட்டு விடுவதாகக் கூறினான். விஷ்ணு, ராமாவதாரம் எடுக்கும் போது, அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை கொடுப்பதாக வரமளித்தார் சிவன். அதன்படி, அவன் குகனாகப் பிறந்து, நதியைக் கடக்க உதவினான். “குகனொடு ஐவரானோம்…’ என்று அவனைத் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டார் ராமபிரான். அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே, குகனுக்கு இவ்வளவு பெரிய பெருமை கிடைத்தது என்றால், மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கிடைக்கும் பலனுக்கு அளவே இருக்காது.
இந்த விரதம் மிகவும் எளிமையானது. சிவராத்திரியன்று காலையில் நீராடியதும், சுத்தமான ஆடை அணிய வேண்டும். சிவாலயத்துக்குச் சென்று, “இன்று முதல் எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டேன். என் மூச்சுக்காற்று கூட, “சிவ சிவ’ என்று தான் சொல்லும். சிவபெருமானின் திருவிளையாடல்களை வாழ்நாள் முழுவதும் கேட்பேன். அவரைப் பாடிய அருளாளர்களின் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை தினமும் படிப்பேன்…’ என, உறுதியெடுக்க வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து நீர் மட்டும் அருந்தி, சிவபுராணங்களைப் படிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் பழம், எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
மாலையில், சிவாலயத்துக்கு அபிஷேகப் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும். முதல் ஜாம பூஜை முடிந்ததும் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாம பூஜை முடிந்ததும் கோதுமை, நான்காம் ஜாம பூஜை முடிந்ததும் அரிசி, உளுந்து, பாசிப்பயறு, தினை ஆகியவற்றை அர்ச்சகருக்கு தானமாக வழங்க வேண்டும். முதல் ஜாம பூஜைக்கு தாமரை, செவ்வரளி, வெள்ளை அரளி பூக்களும், இரண்டாம் ஜாம பூஜைக்கு வில்வமும், மூன்றாம் ஜாம பூஜைக்கு அருகம்புல்லும், நான்காம் ஜாம பூஜைக்கு வாசனை மலர்களும் வாங்கிக் கொடுக்கலாம். பலா, மாதுளை உள்ளிட்ட பழங்களும் படைக்கலாம்.
ஜாம பூஜைகள் முடிந்ததும், வீட்டுக்கு வந்து விழித்திருந்து, காலையில் நீராடி, மீண்டும் கோவிலுக்குச் சென்று, விரதத்தை முடிப்பதற்கான அனுமதிப் பெற வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை என்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த எளிய விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, வாழும் காலத்தில் செல்வ வளமும், பின்னர் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.***