Daily Archives: மார்ச் 2nd, 2011

தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார் ஜெ., : 4ம் தேதி விஜயகாந்துடன் சந்திப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, நான்காம் தேதி விஜயகாந்த் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவுள்ளார் என, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

 

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவாகியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி – புதிய தமிழகம் – இந்திய குடியரசுக் கட்சி – அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் – பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., – ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

 

தமிழக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என்று அனைத்து கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ம்தேதி நடக்கவுள்ளதாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, பிரசாரத்தில் இறங்க, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

 

தற்போது தேய்பிறை நடந்து வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதை தே.மு.தி.க., விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேய்பிறை முடிந்து, வரும் 4ம்தேதி அமாவாசை வருவதால், அன்று இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்கும் வகையில், வரும் 4ம்தேதி ஜெயலலிதாவை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் முடிவில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதே நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது.

 

தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பின், வரும் 6ம்தேதி ஜெயலலிதா கொடநாடு செல்கிறார். ஏற்கனவே இருமுறை மாவட்டச் செயலர் கூட்டம் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், கொடநாட்டில், ஏழாம் தேதியன்று, மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலர்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்ப மனு பெற்று, அவற்றின் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. மனுக்களின் அடிப்படையில், ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.இத்துடன், ஏழாம் தேதி நடக்கவுள்ள மாவட்ட செயலர் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், ஒரு தொகுதிக்கு மூன்று பேர் என பரிந்துரைப் பட்டியல் பெறப்படுகிறது. இந்த இரு பட்டியல்களையும் ஆய்வு செய்து, வேட்பாளர்களை ஜெயலலிதா முடிவு செய்து அறிவிக்கவுள்ளார்.அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அல்லது முதல்கட்ட வேட்பாளர் பட்டியல், வரும் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 12ம்தேதி வரை கொடநாட்டில் தங்கவுள்ள ஜெயலலிதா, அங்கிருந்து தனது பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாகவும் அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்டர்நெட்டில் புதுப்பாதை

இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது.
ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது. இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும். ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும். IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.
இந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.
வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன. வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் முன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார்.
அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.
விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே: சிவராத்திரி ஸ்பெஷல்

தங்கம் போல் பளிச்சிடும் கயிலாய மலை : சிவபெருமானின் இருப்பிடம் கைலாயம். இதனை வடமொழியில் “கைலாஷ்’ என்பர். நாவுக்கரசர் கயிலைத்தாண்டகத்தில் “காவாய் கனகத்திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி”( தங்கக்குவியல் போல் காட்சியளிக்கும் சிவனே வணக்கம், கயிலையில் வசிக்கும் இறைவனே வணக்கம்) என்று இம்மலையைப் போற்றி வணங்குகிறார். பனி சூழ்ந்த இம்மலை காலையில் சூரியோதய வேளையில் பொன்மலையாகக் காட்சி தரும். அக்காட்சியை அப்பர் “கனகத்திரள்’ என்று குறிப்பிடுகிறார். இம்மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்பதைவிட, இம்மலையையே சிவபெருமானாகக் கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த மலையின் அருகில் மானசரோவர் என்னும் புனித ஏரி உள்ளது. இது பார்வதிதேவியின் அம்சமாகும். இந்துமதம் மட்டுமல்லாமல், புத்தம், சமணம், பொம்பா (திபெத் பழங்குடியினர் மதம்) மதங்களிலும் இது புனிதமலையாகப் போற்றப்படுகிறது. உலகத்தின் கூரையாகப் போற்றப்படும் நாடு திபெத். இங்கு தான் கயிலாயமலை அமைந்துள்ளது. கயிலைமலையின் உயரம் 22 ஆயிரம் அடி. சுற்றளவு 52கி.மீ. இதனைச் சுற்றிவருவதை “பரிக்ரமா’ என்று குறிப்பிடுவர். மலை அடிவாரத்தில் 50கி.மீ.,தூரம் கடந்தால் மானசரோவர் ஏரியை அடையலாம். அதன் சுற்றளவு 100 கி.மீ., கைலாஷ், மானசரோவர் ஏரி தரிசனமும், பரிக்ரமாவும் சேர்ந்ததே கைலாஸ் மானசரோவர் யாத்திரையாகும். சாப்பாடு, உணவு, உடை என்று பலவகையிலும் சிரமம் நிறைந்தது இந்த யாத்திரை. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் தான் யாத்திரை செல்லமுடியும். மற்ற மாதங்களில் கடும்குளிரால் அங்கு செல்ல இயலாது. ஜூன், ஜூலை மாதங்கள் மிகவும் சாதகமானது, இருப்பினும் மழையில் நனைவதை தவிர்க்க முடியாது.

மழை தரும் “வெற்றித்திருமகன்’ : கயிலாயமலைக்குச் செல்லும் வழியில் மாந்தாதா மலை உள்ளது. மாந்தாதா ராமபிரானின் முன்னோர்களில் ஒருவர். அவர் தவம் செய்த இடம் இம்மலை. இம்மலைக்கு இருசிறப்புகள் உண்டு. விநாயகர் மாந்தாதா மலையில் உள்ள குகையிலும், முருகன் சரவணப்பொய்கையிலும் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இம்மலை 15கி.மீ., நீளமும், 25 ஆயிரத்து 355அடி உயரமும் கொண்டது. இம்மலைத்தொடரில் பெரியதும், சிறியதுமாக பலமலைகள் உள்ளன. இம்மலையை “மெமோ நாம் கியால்’ என்று அழைக்கின்றனர். “வெற்றித்திருமகன்’ என்பது இதன் பொருள். மழை தரும் கடவுளாக மாந்தாதா மலையை திபெத் மக்கள் வழிபடுகின்றனர்.

கயிலை பற்றி தமிழ்ப்பாடல்கள் : கயிலாயமலையை “கைலாசபதி’ என்பர். இதற்கு “கயிலைநாதன்’ என்று பொருள். கயிலாயமலையை அடிவாரம் முதல் உச்சிவரை மிக அருகில் இன்று தரிசிக்க வேண்டுமானால் “அஷ்டபத்’ என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து தரிசிப்பதை “தென்முக கயிலாய தரிசனம்’ என்பர். கயிலாயமலையின் சிறந்த புகைப்படங்கள் அனைத்தும் அஷ்டபத்தில் இருந்தே எடுக்கப்படுகின்றன. ஜைனமதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் ஒரு மகாசிவராத்திரி நாளில் அஷ்டபத்தில் முக்தி பெற்றதாக கருதுவதால் ஜைனர்களுக்கு புனிதமான இடமாக விளங்குகிறது. அதாவது ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தி கோலமாகும். தமிழர்களுக்கு கயிலாயமலை மீது ஈடுபாடு அதிகம். வடமொழியில் கயிலைநாதனைத் துதிக்கும் ஸ்தோத்திரங்களை விட தமிழில் ஏராளமான பாடல்கள் உள்ளன. “கண் பெற்ற பயனே கயிலைநாதனைக் காண்பது தான்’ என்று நாயன்மார்கள் சிவபெருமானைப் போற்றியுள்ளனர். காரைக்காலம்மையார், இந்த மலை மீது நடந்து சென்றால் அது மரியாதைக் குறைவெனக் கருதி, தலையால் ஏறிச் சென்றதாக வரலாறு கூறுகிறது.

சர்வமத வழிபாடு : “பொம்பா’ என்பது திபெத் மக்களின் ஆதி மதம். எப்போதும் ஆன்மிகசக்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கும் மலையாக கயிலாயத்தை இம்மக்கள் கருதுகின்றனர். ஒன்பது முகம் கொண்ட சுவஸ்திக் மலையாக கயிலையைப் போற்றுகின்றனர். இந்துக்களைப் போல பொம்பா மதமக்களும் கூட்டம் கூட்டமாக மலையைச் சுற்றிவருவர். ஆனால், இந்துக்கள் கயிலாயமலையை வலமாகச் சுற்றுவர். இவர்களோ இடமாகச் சுற்றுகின்றனர். கற்கள் நிறைந்த மலைப்பாதை நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், இவர்கள் அங்கப்பிரதட்சணம் போல, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தபடியே 52கி.மீ., தூரத்தையும் கடந்து செல்வர்.புத்தமதம் கயிலாயமலையை “பிரபஞ்சத்தின் மையம்’ என்று குறிப்பிடுகிறது. மானசரோவர் ஏரியின் கரையில் பல பவுத்த மடங்கள் உள்ளன. திபெத்தில் புத்தமதத்தைப் பரப்பிய பத்மசம்பவர் கயிலாயமலையில் நீண்டகாலம் தவம் செய்தார். கயிலாயத்தை பவுத்தர்கள் “காங் ரிம் போசே’ என்றும் மானசரோவர் ஏரியை “ஸோ மாபம்’ என்று சொல்லி இருகரம் குவித்து வணங்குவர். ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் முக்தி அடைந்த புனிதமலையாக கயிலாயம் கருதப்படுகிறது.

நீங்களே அபிஷேகம் செய்ய வேண்டுமா?இந்தியாவிலேயே புகழ்பெற்ற சிவத்தலம் கங்கை கரையில் இருக்கும் காசி. இங்கு 64 நீராடும் துறைகள் உள்ளன. இதில் மிக முக்கியமான தீர்த்தக்கட்டமாக மணிகர்ணிகா காட் உள்ளது. இங்கு தான் இறந்தவர்களின் உடல்கள் எரிந்து கொண்டே இருக்கும். அங்கு சிவபெருமானும், உமையவளும் உயிர்களிடம் தாரகமந்திரத்தை உபதேசித்து, முக்திக்கு கொண்டு செல்வதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் மணிகர்ணிகாவில் நீராடி, கங்காதீர்த்தத்தை எடுத்துச் சென்று தாங்களே கருவறையில் இருக்கும் விஸ்வநாதருக்கு கங்காபிஷேகம் செய்வது சிறப்பு. தினமும் இரவு 7.45மணியில் இருந்து 8.30 மணிவரை சப்தரிஷி பூஜை என்னும் சிறப்பு வழிபாடு இங்கு நடக்கிறது. ஒரே நேரத்தில் ஏழு பண்டாக்கள்(அர்ச்சகர்கள்) கூடி நின்று அர்ச்சனை செய்வர். அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகிய ஏழுரிஷிகளும் விஸ்வநாதரை வழிபடுவதாக ஐதீகமாகும்.

பச்சைநிற பனிக்குளம் : உலகிலேயே கடல்மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள குளம் “கவுரிகுண்டம்’. பனிமலைகள் சூழ அமைந்திருக்கும் இக்குளம் 18 ஆயிரத்து 600அடி உயரத்தில் உள்ளது. சிவபெருமானைக் கணவனாக அடைய பார்வதிதேவி இக்குளத்தில் நீராடியே தவம் செய்ததாகக் கூறுவர். இதன் நீர் எப்போதும் பச்சை நிறத்தில் இருக்கும். உமாதேவி தினமும் வந்து நீராடுவதாக ஐதீகம் உண்டு. கவுரிகுண்டத்தின் இடப்பக்கம் தூரத்தில் தெரியும் மலையை ஹயக்ரீவமலை என்கின்றனர்.

சோனியாவுடன் ஐவர் குழு சந்தித்து ஆலோசனை : பிடிவாதத்தை தளர்த்த முடிவு?

தி.மு.க.,வுடனான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை ஐவர் குழுவிடம் சோனியா நேற்று கேட்டறிந்தார். தமிழக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடக்கவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை உடனடியாக முடிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, நேற்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பு அரை மணிநேரம் நீடித்தது.

 

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., ஐவர் குழுவுடன், சென்னையில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை சோனியா கேட்டறிந்துள்ளார். பின்னர், அடுத்த கட்டமாக தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே 90 தொகுதிகள் வரை கேட்கப்பட்ட நிலையில், தற்போது 78 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியதை ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 53 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க., தயாராக உள்ளது. இதை மேலும் வலியுறுத்தி 60 இடங்கள் பெற்றுக் கொண்டு, தொகுதி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற யோசனையும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. எனவே, இனியும் தொகுதி பங்கீட்டில் இழுபறியை ஏற்படுத்திக் கொண்டே செல்லாமல், சுமுக முடிவுக்கு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் வீட்டில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்யும் என்று தெரிகிறது.

லட்சக்கணக்கில் பெருகும் பென்குயின்!

கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதியில் காணப்படும் உயிரினம், “பென்குயின்!’ இந்த பென்குயின்கள் எண்ணிக்கை ஒரு தீவில் லட்சக் கணக்கில் பெருகி விட்டன.
தெற்கு அட்லாண்டிக் கடலில் ஜார்ஜியாவின் தென் பகுதியில் உள்ள மக்களே வசிக்காத ஒரு தீவில் தான் இவ்வாறு அவைகள் பெருகி விட்டன. இந்த தீவில் மட்டும் மூன்று லட்சம் பென்குயின்கள் உள்ளன.
இந்த பென்குயின்கள் வித்தியாச மானவை. பனிப்பாறைகள் மிதக்கும் கடலுக்குள் புகுந்து, மீன்களை பிடித்து சாப்பிடும். கரையில் சிறிது தூரம் பறவைகளைப் போல பறக்கும். பறவை மற்றும் மீன் இன கலவையாக காணப்படும் இந்த பென்குயின்கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், மனிதர்கள் வசிக்காத இடத்தில், மனிதர்கள் வசிக்க முடியாத குளிர் பிரதேசத்தில் வசிப்பதால் மனிதர்களால் வேட்டையாடப் படுவதும் கிடையாது. இந்த காரணங்களால் பென்குயின்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
பிரிட்டனுக்கு சொந்தமான இந்த தீவுக்கு, இப்போது பலர் சுற்றுலாவாக செல்லத் துவங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், பென்குயின்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என, கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் கவலை அடைகின்றனர்.

கொழுகொழு குழந்தைகளா… அம்மாக்களே உஷார்!

‘கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியம்’ என்கிற எண்ணம், காலங்காலமாக அம்மாக்கள் மத்தியில் ஊறிப்போன விஷயம். குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது அதன் புசுபுசு உடல்வாகில்லை என்பதில் படித்த பெண்களுக்கே இன்றளவும் விழிப்புணர்வு இல்லை. பருமன் என்பது பெரியவர்களுக்கு எந்தளவு ஆபத்தானதோ, அதே போன்றதுதான் குழந்தைகள் விஷயத்திலும்! வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிற குழந்தைகளை சமீபகாலமாக பரவலாக பல வீடுகளிலும் பார்க்கிறோம். “குழந்தைதானே… வளர வளர சரியாயிடும்” என்கிற சமாதானத்துடன் அதை அலட்சியப்படுத்துகிற பெற்றோரையும் பார்க்கிறோம். “அந்த அலட்சியம் மிகத்தவறானது. குழந்தைப்பருவ பருமனை உடனடியாகக் கவனித்து சரி செய்ய வேண்டும்” என்று எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சங்கர்.

“அதிக எடையும் பருமனும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது. குழந்தை சராசரியைவிட கூடுதல் பருமன் இருக்கிறதாக நினைக்கிற பெற்றோர், குழந்தைகள் நல மருத்துவர்கிட்ட காட்டி உயரத்துக்கேற்ற எடை இருக்காங்கிறதை சரி பார்த்துக்கணும்” என்று ஆரம்பிக்கிற டாக்டர், குழந்தைப் பருவ பருமனுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

“பாரம்பரியம் காரணமாக சில குடும்பங்கள்ல பருமன் தொடரலாம். “ஹைப்போ தைராய்டிசம்”னு சொல்ற தைராய்டு குறைவா சுரக்கிறது, நீரிழிவு போன்ற சில வகை நோய்களும் பருமனுக்குக் காரணமாகலாம். பாரம்பரிய உணவுப்பழக்கம் தவிர்க்கப்பட்டு, அதிகக்கொழுப்பு சேர்ந்த பீட்சா போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம், நடை என்ற விஷயமே மறக்கப்பட்டு, வாகன சுகத்துக்கும் லிஃப்டுக்கும் பழகிப் போனது. உடற்பயிற்சிங்கிற பேச்சுக்கே இடமில்லாம எந்நேரமும் டி.வி., கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருக்கிறது…. இதெல்லாம் பிரதான காரணங்கள்” என்கிற டாக்டர் சங்கர், குழந்தைப்பருவ உடல் பருமனுக்கான முதல் வித்து குழந்தை பிறந்த உடனேயே விதைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

“குழந்தை பிறந்ததும், தாய்ப்பால் கொடுக்கிறதைத் தவிர்த்து, ஊட்டச்சத்துள்ள ‘டின்’ பால் பயன்படுத்தறாங்க பல அம்மாக்கள். அந்தப் பருவத்துலதான் கொழுப்புத் திசுக்கள் அதிகமாக உடம்புல உற்பத்தியாகும். அதிகப்படியான பால் உணவுகள், இந்த கொழுப்புத் திசுக்கள் அதிகரிக்கக்காரணம். இந்தத் திசுக்கள்தான் வருங்காலத்துல குழந்தைகளோட பருமன் நோய் பாதிப்புக்கு காரணமாகுது.”

பருமனை சாதாரண பிரச்சினையாக நினைத்து ஏன் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களையும் விளக்குகிறார் டாக்டர்.

“குண்டா இருக்கிற குழந்தைகளுக்கு உடல் விகாரமா மாறும். மத்தவங்களோட கிண்டலும் கேலியும் சேர்ந்து, ஒரு கட்டத்துல அந்தக் குழந்தையோட தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். சின்னச் சின்ன பயிற்சிகளை செய்யறதுல கூட சிரமத்தை உணர்வாங்க குண்டுக் குழந்தைகள். உதாரணத்துக்கு வகுப்பறை மூணாவது, நாலாவது மாடியில இருக்கலாம். புத்தகப்பை, சாப்பாட்டுப் பைகளைத் தூக்கிட்டு படியேறவே சிரமப்படுவாங்க. சுவாசப்பையில மூச்சுத் திணறல், இதயக்கோளாறு போன்ற பிரச்சினைகளுக்குக் கூட பருமன் காரணமாகலாம்.”

கணவன்மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிற குடும்பங்களில், தனித்து விடப்படுகிற குழந்தைகள் அதிகளவு உண்கிற அபாயம் இருப்பதாகச் சொல்கிற சங்கர், குழந்தைகளின் பருமனைக் குறைக்க எளிய வழிகளைக் காட்டுகிறார்.

* பெரியவங்களுக்கு சொல்ற மாதிரியான அளவு சாப்பாடோ, பத்தியச் சாப்பாடோ, குழந்தைகளுக்குத் தேவையில்லை. குழந்தைகள் ஏங்கிப் போயிடும். தவிர அந்த வயசுல அவங்களுக்குத் தேவையான முழுமையான சத்துகள் கிடைக்காமப் போகும் அபாயமும் உண்டு. உணவுக்கட்டுப்பாட்டுக்குப் பதிலா, உடற்பயிற்சிப் பழக்கத்தைக் கொண்டு வருவதே சிறந்தது.

* இன்னிக்கு பல வீடுகள்ல விளையாட இடம் இருக்கிறதில்லை. இருக்கிற சின்ன இடத்துலயோ, மொட்டை மாடியிலயோ குறுக்கே ஒரு கயிற்றைக் கட்டி, டென்னிகாய்ட் விளையாடச் செய்யலாம். இது சிம்பிளான, அதே சமயம் பலன் தரக்கூடிய உடற்பியிற்சி. பெரியவங்களும் சேர்ந்து விளையாடினா குடும்ப உறவுகளும் பலப்படும்.

* வீட்டுக்குள்ளேயே ஸ்டாட்டிக் சைக்கிள் வாங்கி வச்சு, டி.வி. பார்த்தபடியே குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய வைக்கலாம்.

* பார்ட்டி, விருந்துகளுக்குப் போறதைத் தவிர்க்கணும்.

* பாரம்பரிய உணவுகள் பக்கம் கவனத்தைத் திருப்பணும். பள்ளிக்கிடம் முடிஞ்சு வர்ற குழந்தைகளுக்கு பாக்கெட் தீனிகளை வாங்கித் தராம, வீட்லயே ஆரோக்கியமான முறைல செய்யக்கூடிய வேர்க்கடலை உருண்டை, பொரிமா உருண்டை, சுண்டல் தரலாம்.

* எல்லாத்தையும் விட முக்கியமா, அளவான உடல்வாகுதான் அழகானது, ஆரோக்கியமானதுங்கிற எண்ணத்தைக் குழந்தைங்க மனசுல பதிய வைக்கணும்.

ஆரோக்கியமான அளவான உணவும், உடற்பயிற்சியுமே குழந்தைப்பருவ பருமனுக்கான தீர்வுகள் என்கிற ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி, பெற்றோருக்கான அறிவுரைகளுடன் தொடர்கிறார்.

“ஒரு வயசுல 9 கிலோ எடை இருந்தாலே போதும். குப்புற விழ வேண்டிய வயசுல குப்புற விழுந்து, தவழ வேண்டியபோது தவழ்ந்து… குழந்தையோட செய்கைகள் சாதாரணமா இருக்கிறதும், அடிக்கடி இன்ஃபெக்ஷன் வராம இருக்கிறதும்தான் முக்கியம். குழந்தைப் பருவத்துல குண்டா இருக்கிறவங்களுக்கு, வளர்ந்ததும் கொழுப்பு செல்கள் 3 மடங்காக அதிகரிக்கிற அபாயம் உண்டு.

“என் குழந்தை காய்கறியே சாப்பிடாது”ன்னு பெருமையா சொல்லிக்கிற அம்மாக்களை நிறைய பார்க்கலாம். குழந்தைகளுக்கு காய்கறி, பழங்களை சாப்பிடப் பழக்க வேண்டியது அம்மாக்கள்தான். அடுத்து, குழந்தை விரும்பி சாப்பிடுதுங்கிறதுக்காக சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்ற அயிட்டங்களை வாங்கிக் கொடுக்கிறதும் கூடாது. குழந்தை வளர்ந்ததும் அவனுக்கு சிகரெட் பிடிக்கும்னா வாங்கித் தருவாங்களா பெற்றோர்? அப்படித்தான் இதுவும். பிறந்த நாளோ, வேறு ஏதாவது கொண்டாட்டமோ, குழந்தைக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் கொடுக்கிறதுல தப்பில்லை. ஆனா, அளவைக் குறைச்சுத் தரலாம்.

எல்லாத்தையும் விட, இது வளரும் பருவங்கிறதால, குழந்தையை நிறைய விளையாட விடறது, வாக்கிங் போக வைக்கிறது, சைக்கிள் ஓட்டச் சொல்றதுனு உடல் இயக்கத்துக்கு வேலை கொடுத்தாலே போதுமானது.”

டிஜிட்டலாகும் நினைவுகள்

நம் வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிட்டலாகி வருகின்றன. நினைவுகளைத் தாங்கி நிற்கும் படங்கள், போட்டோக்கள் ஆகியன இதில் முதலிடம் பெறுகின்றன. இவற்றை டிஜிட்டலாக்குவது மிக எளிமையான ஒரு பணியாகக் கம்ப்யூட்டர் மூலம் நிறைவேறி வருகிறது. முன்பெல்லாம் சித்திரங்கள் வரையப்பட்டு அதில் சிருங்கார வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது டிஜிட்டல் பைல்களாக படங்கள் எடுக்கப்பட்டு, அவற்றை நம் விருப்பங்களுக்கேற்ப நகாசு வேலைகளை மேற்கொள்கிறோம். படங்களையே மாற்றி அமைக்கிறோம். இந்த போக்கின் அடிப்படை வசதிகளை இங்கு காணலாம்.
முதலில் கம்ப்யூட்டரில் படங்கள் எந்த எந்த பார்மட்களில் உருவாக்கப்படுகின்றன என்று பார்க்கலாம்.
1. பி.எம்.பி. (BMP Bit Map) பைல் பார்மட்டாகும். இது முன்னாலேயே வரையறை செய்யப்பட்ட வகையில் உருவாக்கப்படும் பார்மட். இந்த வகையிலான பார்மட் படம் எப்படி டிஸ்பிளே செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில் அல்லாமல், படத்திற்கேற்ற வகையில் பிக்ஸெல் மற்றும் கலர் ஆழம் அமைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தன்மைகளில் இது உருவாகிறது. இதன் அனுகூலம் என்னவென்றால் இதனைப் பல சாப்ட்வேர் தொகுப்புகளில் நம் விருப்பப்படி பயன்படுத்தலாம்.
2. JPG (Joint Photographic Expert Group) என்பது இரண்டாவது வகை. கிராபிக் டேட்டா மற்றும் படங்களை டிஜிட்டல் நெட்வொர்க்குகளில் பரிமாறுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பார்மட். இதற்கு முந்தைய பி.எம்.பி. மற்றும் டிப் (TIFF) ஆகிய பார்மட்டில் அமைந்த படங்கள் கொண்ட பைல்களை கம்ப்ரஸ் செய்திடுகையில் டேட்டாவை சிறிது இழக்க நேரிடும். ஆனால் ஜேபெக் பைல் பார்மட்டில் இழப்பு ஏற்படாது. எனவே நெட்வொர்க்கிங்கில் பைல் பரிமாற்றத் திற்கு மிக மிக ஏற்ற பார்மட்டாக இன்றும் இது கருதப்படுகிறது. ஜேபெக் இமேஜ்களை மீண்டும் மேம்படுத்த முடியாது.
3. GIF (Graphics Image Format): Compuserv Inc நிறுவனத்தால் இன்டர்நெட் தளங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பார்மட். படங்களை இன்டர்நெட் தளங்களில் புகுத்துவதற்கு படங்கள் இந்த பார்மட்டில் இருப்பது வேலையை எளிதாக்கும். இதனை கம்ப்ரெஸ் செய்திடுகையிலும் டேட்டா இழப்பு நேரிடாது. பெரிய அளவிலான இமேஜ் பைல்களுக்கு இந்த பார்மட் உகந்தது.
4. PCX பார்மட்: பயன்படுத்த மிகவும் வகையான இமேஜ் பார்மட். முதலில் டாஸ் இயக்கத்தில் இயங்கிய பி.சி. பெயிண்ட் பிரஷ் என்னும் சாப்ட்வேர் தொகுப்புக்கென இந்த பார்மட் உருவானது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் உரிமையை வாங்கி விண்டோஸ் சாப்ட்வேர்களுக்கும் இதனை மாற்றியது. கிராபிக் டேட்டாவை பாதுகாத்து வைத்திடவும் டெஸ்க்டாப் பப்ளிஷிங் சிஸ்டத்தில் பயன்படுத்தவும் இந்த பார்மட் உகந்தது.
5. TIFF (Tagged Image File Format): ஆல்டஸ் நிறுவனத்தின் தலைமையில் சில நிறுவனங்கள் சேர்ந்து இந்த பைல் பார்மட்டை உருவாக்கின. டெஸ்க் டாப் பப்ளிஷிங் சிஸ்டத்தில் கலர் மற்றும் கிரே வண்ணத்திலான படங்களைக் காட்ட இந்த பார்மட் பயன்படுகிறது.
6. PNG: இந்த பார்மட் அண்மைக் காலத்திய வடிவமைப்பு. பார்மட் புழக்கம் இழந்த நிலையில் அதன் இடத்தில் இந்த பார்மட் கொண்டு வரப்பட்டது. நெட்வொர்க் இணைப்புகளில் பயன்படுத்த உகந்தது. இதனைக் கம்ப்ரஸ் செய்திடுகையில் டேட்டா இழப்பு ஏற்படாது.
7. WMF: விண்டோஸ் அல்லாத அப்ளிகேஷன்களால் விண்டோஸ் அப்ளிகேஷன்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு இந்த பார்மட் பயன் படுகிறது. எனவே இது ஒரு பொதுவான பார்மட்டாகக் கருதப்படுகிறது. இது அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
படங்கள் பரிமாற்றம்: படங்கள் உருவானவுடன் அவற்றிற்கு பொலிவு சேர்க்க கம்ப்யூட்டருக்கு மாற்றப்பட வேண்டும். முதலில் படங்களை உருவாக்கும் சாதனங்களைப் பார்க்கலாம். டிஜிட்டல் கேமரா அந்த வகையில் முதல் இடம் பெறுகிறது. ஒளித் தூண்டுதல்களுக்கு உள்ளாகக் கூடிய சென்சார்களில் படங்களைப் பதிக்கும் வேலையை டிஜிட்டல் கேமரா மேற்கொள்கிறது. இந்த சென்ஸாரின் அளவு,லென்ஸின் தன்மை, பிக்ஸெல் அமைப்பு ஆகிய மூன்று தான் அடிப்படையில் இமேஜ் ஒன்றின் தன்மையை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் படங்களை கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் பிற சாதனங்களுக்கு மாற்றுவதற்கு யு.எஸ்.பி. டிரைவ் போன்ற பல டிஜிட்டல் சாதனங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த படங்கள் மாற்றப்படுகின்றன. இவை அனைத்திலும் PTP Picture Transfer Protocol என்னும் வழி பின்பற்றப்படுகிறது.
படங்களை உருவாக்கி தருவதில் ஸ்கேனர்களும் பயன்படுகின்றன. படங்கள், அச்சடிக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது கையெழுத்துப் பிரதி அல்லது ஒரு ஆப்ஜெக்ட் (நகையணி) போன்றவற்றை அலசிப் பார்த்து டிஜிட்டல் இமேஜ் பார்மட்டில் தரும் வேலையை ஸ்கேனர்கள் மேற்கொள்கின்றன. இந்த படங்களும் மேலே கூறப்பட்ட பார்மட்டுகளில் டிஜிட்டல் இமேஜ்களை அளிக்கின்றன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இமேஜ்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றியபின் அவற்றைச் சரி செய்து பொலிவூட்டும் பணி கம்ப்யூட்டரில் நடைபெறுகிறது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இங்கு காணலாம். இவ்வகைப் பணிகளுக்குப் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இருந்தாலும் அனைத்திற்கும் முதன்மையாய் அனைத்து வசதிகளும் கொண்டு இயங்குவது அடோப் போட்டோ ஷாப் சாப்ட்வேர் தொகுப்புதான்.
1. கிராப்பிங்: (Cropping): ஒரு டிஜிட்டல் இமேஜை வலுப்படுத்தவும் குறிப்பிட்ட நிலைக்கு முக்கியத்துவம் அளித்திடும் நோக்கத்துடன் தேவையற்ற பகுதிகளை நீக்குதலே கிராப்பிங் ஆகும்.
2. ரீசைஸிங்: (Resizing) இமேஜின் உயரம், அகலம் மற்றும் அதனை உருவாக்கியவற்றின் விகித நிலையை மாற்றி அமைத்தலே ரீசைஸிங் பணியாகும்.
3. ரொடேட்டிங்: (Rotating) இது இமேஜை சுழற்றி வைத்திடும் பணியாகும். இது முழு படத்தையும் சுழற்றும். தனி ஒரு லேயரை மட்டும் எடுத்துக் கொள்ளாது.
4. இமேஜ் வண்ணங்கள்: பலவகையான வண்ணக் கலவைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. CMYK, Lab Color, Bitmap Color, Indexed Color, Duotone Color, Multichannel Color என்ற பலவகை வண்ணக் கலவைகளை இமேஜ்களில் மேற்கொள்ளலாம். படத்தினை எதற்கு எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதே இவற்றைத் தீர்மானிக்கின்றன.
5. ரெட் ஐ ரிமூவல்: (Red Eye Removal) டிஜிட்டல் போட்டோ எடுக்கையில் பயன்படுத்தப்படும் பிளாஷ் கண்களில் பட்டு ஒளி மீண்டும் கேமராவை அடையும்போது கண்களின் மீது சிகப்பு சிறிய வட்டம் ஏற்படும். இதனை நீக்குவதே இந்த பணி. இதனை சில கேமராக்களில் முதலிலேயே தடுத்து விடலாம். இல்லையேல் சாப்ட்வேர் தொகுப்பின் துணையுடன் எடுத்துவிடலாம்.
6. நாய்ஸ் ரிமூவல்: (Noise Removal) போதுமான ஒளி இல்லாத வேளைகளில் படம் எடுக்கும் போதும் தூசுகள் அதிகம் எழுந்து வரும்போது படம் எடுக்கப் போதும் தெளிவில்லாத படம் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்து படங்களுக்குப் பொலிவு ஊட்டுவதனை நாய்ஸ் ரிமூவல் என்கிறார்கள். இதனையும் சாப்ட்வேர் துணை கொண்டு மேற்கொள்ளலாம்.

வேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள்

Ctrl + > : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டா வது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)
Ctrl + ] : இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.
Ctrl + Shift + H : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத்திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.
Alt + Shift + D : நீங்கள் உருவாக்கிடும் ஆவணத்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதியை டைப் செய்திட விரும்பு கிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண்டியதில்லை. பலருக்கு தேதி நினைவிலும் இருக்காதே. இதற்காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.
Alt + Shift + T : மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்துங்கள். நேரம் அழகாக டைப் செய்யப்பட்டுவிடும்.
Ctrl + Shift + W : வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக்கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.
Alt + F11 : வேர்ட் தொகுப்பில் பணியாற்றுகையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்படுத்தவும்.
Alt V, H : ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தவும்.
Shift + F7 : ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

விளை பொருள்களுக்கு கட்டுபடியாகாத விலை, இடுபொருட்கள் விலை உயர்வு, வறட்சி என்ற பன்முனை தாக்குதலால், தென் மாவட்டங்களில் விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயம் செழிக்க, விளை நிலங்களை பிளாட்களாக மாற்றுவதை தடுக்க வேண்டும். விவசாயம் செய்ய தகுதியற்ற நிலங்களில் மட்டுமே, மனைகள் கட்ட அனுமதிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்கள் துவக்கினால், மக்கள் இடம் பெயர்வதை தவிர்க்க முடியும்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், பெரியாறு பாசனப்பரப்பு ஒருபுறம். ஆற்றுப்பாசனமே இல்லாத மானாவாரி நிலம் ஒருபுறம். விருதுநகர் கந்தக பூமி. “பெய்தே கெடுக்கும் மழை, பெய்யாமல் கெடுக்கும் மழை’ மற்றொரு புறம்.நெல் நடவு செய்து, அறுவடை செய்யும் வரை, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. விதை கிலோ 30 முதல் 180 ரூபாய், யூரியா 257, பொட்டாஷ் 519, காம்ப்ளக்ஸ் ரகத்திற்கேற்ப 400 ரூபாய் முதல் விற்பனையாகிறது. இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 20 சதவீதமும், பூச்சி மருந்து விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.விவசாயத்தில் நடவு முதல் அறுவடை வரை, இயந்திரங்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. டிராக்டர் உழவு ஏக்கருக்கு 1,000 ரூபாய், அறுவடைக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவையும் கடன் வாங்கி, நிலத்தில் போட்டால், ஏக்கருக்கு 4,000 ரூபாய் கூட மிஞ்சுவது கடினம் தான்.

மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் ஒருவருக்கு 100 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. விவசாய வேலையின் போது தான் கண்மாய், குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதனால்,விவசாயப் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி விளைநிலங்கள் பாழாகின்றன.இதனால், நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள விளைநிலங்கள் பிளாட்களாக மாறி வருகின்றன. இரண்டாம் நிலை நகரங்களுக்கு அருகில் ஒரு சென்ட் 30 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய், புறநகரங்களில் 5 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழில் புரிவோர் தங்கள் கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்கின்றனர்.மேலும் சிலர், கிடைக்கும் பெருந்தொகையை விவசாயிகளுக்கு கந்துவட்டிக்கு விடுகின்றனர் அல்லது வங்கியில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பலர் குடும்பத்துடன் கோவை, திருப்பூர், சிவகாசி, கேரளாவிற்கு இடம் பெயர்கின்றனர். இதனால், விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு குறைந்துள்ளது.

மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் தேவராஜன் கூறியதாவது:அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்கு 80 முதல் 90 சதவீதம் மானியம் அரசே வழங்குகிறது. இங்கு, வர்த்தகர்களுக்கும் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் அரசு மானியம் தருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு விதை, உரத்திற்கு மானியம் கிடையாது.முப்போகம் விளையும் பெரியாறு – வைகை பாசன பகுதியிலும் இதேநிலை தான். விவசாயம் நடக்காத நேரங்களில் 100 நாள் வேலையை செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறினார்.

மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர் வைரவன் கூறியதாவது:விவசாயம் பற்றி எல்லாருக்கும் அக்கறை தேவை. விளை நிலங்களை பிளாட்களாக மாற்றுவதை தடை செய்ய, அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். விவசாயம் செய்ய தகுதியற்ற நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். விளை பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நிலைவர வேண்டும்.மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிளகாய் அதிகம் விளைகிறது. அங்கு மிளகாய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கலாம். தேனியில் பழங்கள் அதிகம் உற்பத்தியாவதால், பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கலாம்.மதுரையில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகம். தற்போது கிலோ 1,500 முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்கலாம்.துல்லிய பண்ணை திட்டத்தின் மூலம், காய்கறிகள் உற்பத்தியை பலமடங்கு பெருக்கலாம். விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். கரும்பு ஏக்கருக்கு 100 டன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் 1.20 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு வைரவன் கூறினார்.

நன்றி-தினமலர்

போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்

`20-ம் நூற்றாண்டின் இயல்புகளில் ஒன்றாக மன அழுத்தம் உருவாகிவிட்டது’ என்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நிபுணர் டாக்டர் கான் செல்லி. மனஅழுத்தம் என்பது 1930-ம் ஆண்டுக்கு முன்பு அதிகமாக வழக்கில் வராத சொல்லாகும்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் `லி ஸ்ட்ரெஸ்’ என்றும், ஜெர்மனில் `டெர் ஸ்ட்ரெஸ்’ என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

உண்மையில் கவலையை களைவதற்குப் பதிலாக அணிந்து கொள்வதால்தான் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வது நமது வாழ்க்கைச் சூழலையே மாற்றுகிறது. உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி விபரீத வியாதிகளில் தள்ளுகிறது.

நீங்கள் நினைத்தால் மனஅழுத்தத்தை எளிதாக விரட்ட முடியும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது உடல் சார்ந்ததல்ல. மனம் சம்பந்தப்பட்டதுதான். தற்போது ஆண், பெண் எல்லோருமே லட்சியத்தின் பின்னால் ஓடுகிறார்கள். அந்த லட்சியங்கள் எளிதில் அடைய முடியாததாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் தோல்விகள், பின்தங்குதல் போன்றவை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது கவலை, ஏக்கம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மனஅழுத்தத்திற்கு வழி வகுக்கிறது.

`மனஅழுத்தம் என்பது மனிதனுக்கு ஆற்றலை வழங்கும் உயர்ந்த சக்தி’ என்று ஓசோ குறிப்பிடுகிறார். `மனஅழுத்தம் வரும்வேளைகளில் உடல்- மனத்தை தளர்வுறச் செய்யும் வேலையில் இறங்காதீர்கள். மாறாக அதை பயனுள்ள ஆற்றலாக மாற்றும் வேலையில் இறங்குங்கள்’ என்று அவர் கூறுகிறார்.

மனஅழுத்தத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்கிறீர்களா? இதற்கு வேறு எங்கும் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நீங்களும் அதைச் செய்துவிட முடியும்.

மனஅழுத்தத்தை மாற்றும் எளிய வழிகள் இதோ…

மனஅழுத்தம் உங்களைத் தூங்கவிடாமல் துரத்து கிறதா? அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சிறிது தூரம் நடந்தாலே மனஅழுத்தம் மாறத் தொடங்கிவிடும். சிறிது தூரம் துள்ளோட்டம் (ஜாகிங்) செல்வது. நீண்டதூரம் நடப்பது, மாடிப்படி களில் சில முறை ஏறி இறங்குவது என ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்.

ஆட்டம்போட வைக்கும் துள்ளலான பாடல்களைக் கேட்டு ரசியுங்கள். முடிந்தால் ஆட்டமும் போடுங்கள். இப்போது மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். தூங்கச் செல்லலாம் என்று தோன்றினால் தூங்குங்கள், நிம்மதியாக உறக்கம் வரும். கவலைகள் மனதை அடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இதைச் செய்வது எளிதான காரியமில்லைதான். மனம் எப்போதுமே பிரச்சினை களுடன் போராடிக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் இதுபோல மாற்று செயலில் இறங்கும்போது மனமும் கவலையை மறந்து வேறு திசைக்குத் திரும்பி விடுகிறது.

மனஅழுத்தத்தால் லேசான தலைவலியோ, உடல்வலியோ ஏற்படுவதுபோல் உணர்ந்தால் உடனே மருந்து மாத்திரை என்று இறங்க வேண்டாம். நோய்க்கு எதிராக போராட உங்களை தயார் செய்ய வேண்டாம். இதை ஒரு பிரச்சினையாகக் கருதாமல் `தலைவலி, தலைவலி’ என்றோ, `டென்சன் டென்சன்’ என்றோ மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு எண்ணங்களை குறுக்கே புக விடாதீர்கள். உடனே 90 சதவீத தலைவலி ஓடிப்போகும். ஏனெனில் தலைவலி என்பது உண்மையில் வலியல்ல. ஏதோ ஒரு எண்ணத்தின் மீது வளர்ந்து வரும் வெறுப்புதான் தலைவலியாகத் தெரிகிறது. உண்மை யில் இதைச் செய்து பார்த்தால் அதன் உன்னதத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வலியை உணர்ந்தால் உங்கள் அறைக்குச் செல்லுங்கள். இருக்கையில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். வெளிச்சம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தப் பகுதியில் வலி தெரிகிறதோ அந்த பகுதியை கையால் தொடுங்கள். `பிளீஸ் ரிலாக்ஸ்’, `போய்விடு வலியே… போய்விடு…’ என்று சொல்லியவாறு மிதமாக வருடுங்கள். 5 நிமிடங்கள் இப்படிச் செய்யுங்கள். உடனே மாற்றத்தை உணரலாம்.