Daily Archives: மார்ச் 3rd, 2011

வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்

அமெரிக்கப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமை – ராபர் லீபர்மான் தமிழில்: கானகன்

அமெரிக்கச் சமூகம் பற்றி அண்மையில் வெளிவந்து பெரும் பரபரப்டை உருவக்கியிருக்கும் இந்நூல் பற்றி ராபர் லீபர்மான் என்பவர் ஃபாரின் அஃப்ஃபேர்ஸ் இதழில் எழுதியுள்ள விமர்சனத்தின் தமிழாக்கம்:

அமெரிக்கப் பொருளாதாரம் நிலைகுலைந்துவருவதாகத் தோன்றுகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழப் பத்து விழுக்காடு. இந்த எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. லட்சக்கணக்கானோர் தாம் பெற்ற வீட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவற்றை இழந்து தெருவுக்கு வந்திருக்கிறார்கள். 1930களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது நடந்ததைப் போலவே மக்களின் வருவாய் தலைகுப்புற வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத் தேக்கத்தின் காரணமாகத் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பவர்களில் (லே ஆஃப் செய்யப்பட்டிருப்பவர்களில்) பலருக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இல்லை.
இவ்வளவு அவலத்திற்கிடையேயும் அமெரிக்காவின் மிகப் பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. உலகளாவிய நிதிச்சந்தைகளில் இவர்களில் பலர் புகுந்து விளையாடியதன் விளைவே இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சரிவு. இவர்கள் ஆட்டங்களால் உலகமே விலைகுலைந்தது. பலர் வறியவர்களாக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் கொழிக்கிறார்கள். 2009ல் மக்கள்தொகையில் ஐந்து சதவீதமே உள்ள அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களின் சராசரி வருமானம் பெருகியது, மற்ற அமெரிக்கர்களின் வருமானமோ வீழ்ச்சியடைந்தது. ஆனால் இது திடீரென்று நிகழ்ந்து விடவில்லை. நாற்பது ஆண்டுகளாகத் தொடரும் கதை. மேல்தட்டு வர்க்கத்தினரின் வருவாய் அதிகரித்துக் கொண்டே போக, நடுத்தர வர்க்கம், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் வருவாய் தேங்கிப் போய்விட்டது. நாட்டின் மொத்த வருவாயில் எட்டு விழுக்காடு மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியதாயிருந்தது. இப்போது 20 விழுக்காடு அவர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையைத்தான் தங்கள் புத்தகத்தில் ஜேக்கப் ஹாக்கர் பால் பியர்சன் ஆகியோர் “வெல்பவர் அனைத்தையுமே அள்ளிச் செல்லும் பொருளாதாரம்’ என வர்ணிக்கின்றனர். சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு இது உகந்ததல்ல. இந்த அளவு ஏற்றத்தாழ்வை அமெரிக்கா எணூஞுச்தூ ஈஞுணீணூஞுண்ண்டிணிண எனக் கூறப்படும் 1930களின் பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கிறது. பொருளாதார முன்னேற்றத்தின் மொத்தப் பயன்களும் குறுகிய எண்ணிக்கையிலுள்ள மேல்தட்டு வர்க்கத்திற்குச் சென்று சேர்கிறது. இழப்புகளோ நடுத்தர வர்க்கத்தினர்மீது சுமத்தப்படுகிறது.
துருக்மேனிஸ்தான், கானா, நிகாராகுவா, கானா போன்ற நாடுகளின் மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வு இப்போது அமெரிக்கர்களிடையே நிலவத் தொடங்கியிருக்கிறது. வேறெந்த வளர்ந்த ஜனநாயக நாட்டிலும் இத்தகையதொரு அவலச் சூழல் இல்லை. இதன் விளைவாக முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. வறியோரின் ஆத்திரம் கூடுகிறது. பணத்தில் எதையும் வாங்கிவிடலாம் என்னும் எண்ணம் மேலோங்கும்போது ஜனநாயக முறையே தறிகெட்டுப் போகிறது.
இவ்வாறு செல்வம் குவியும் பின்னணியில் பொருளாதாரக் காரணங்கள் மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறானது. தொழில் நுட்பரீதியிலான மாற்றங்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. குறிப்பாகக் கணினித் துறை வளர்ச்சியின் விளைவாகத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது. அதேநேரம் உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளுக்கான மதிப்புக் குறைகிறது. அறிவுசார்ந்த பணிகளுக்கான முக்கியத்துவம் கூடுகிறது. இதன் இன்னொரு பரிமாணம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை நோக்கியே அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக நகர்ந்து செல்கையில், உலகமயமாதலின் பின்புலத்தில் உற்பத்தித் துறையில் செங்கோலோச்சிய அந்நாட்டுக்கு இப்போது விழிபிதுங்குகிறது. சேவைகள் எங்கெங்கோ செல்கின்றன. உள்நாட்டிலுங்கூடச் சேவைத் துறை அதில் தேர்ந்தவர்களைத்தான் ஆதரிக்கிறது. அவர்களுக்குக் கொட்டிக்கொடுக்கவும் செய்கிறது. அதே துறையில் கீழ்மட்டங்களில் பணிபுரிவோருக்கோ மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம். கேட்பாரில்லை. அவர்களது தொழிற்சங்கங்கள் மிகப் பலவீனமானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் உலகமயமாதலைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள், சந்தைப் பொருளாதாரத்தில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானவை எனவும் இறுதியில் நன்மை பயக்குமெனவும் எப்படியும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது எனவும் சொல்கிறார்கள்.
உலகமயமாதல் மக்கள் நலன்களுக்கு எதிரானது எனக் கருதுபவர்களோ வருவாய் சரிவரப் பங்கிடப்படாமல் ஏற்றத்தாழ்வு பெருகுவதை, குறிப்பாக மிக அதிகம் படித்த, தேர்ச்சிபெற்ற பிரிவினருக்கான வருவாய் அதிகரிப்பதையும் சாதாரணத் தொழிலாளர்கள் போதிய வருவாயின்றிப் பரிதவிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் இருதரப்பினருமே ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரிப்பதில் அரசின், அரசியல்வாதிகளின் பங்கென்ன என்பதை விவாதிப்பதில்லை.
ஹாக்கர், பியர்சன் தங்கள் புத்தகத்தில் அதைத்தான் செய்திருக்கிறார்கள். 1970களின் பிற்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் அனைத்துமே பணக்காரர்களின் நலனுக்கானவை என்பது அவர்களது வாதம். அமெரிக்கக் காங்கரஸ் உயர்வருவாய்ப் பிரிவினர்மீதான வரியைத் தொடர்ந்து குறைத்துவந்திருக்கிறது. முதலீடுகள், பங்கு மார்க்கெட்டின் விளைவாய்க் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இவை மிகப் பெரும் பணக்காரர்கள் கொழிக்கவே வழிசெய்தன.
இன்னொருபுறம் கடுமையான தொழிலாளர் துறைச் சட்டங்களின் விளைவாகத் தொழிற்சங்கங்கள் அமைப்பதும் பெரும் சிக்கலானதாகியிருக்கிறது. பெருமுதலாளிகளின் அதிகாரத்தை எதிர்கொள்வதற்கான அமைப்புகள் அருகிவருகின்றன. நிதிச்சந்தைமீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் முற்றுமுழுவதாக நீக்கப்பட்டுவிட்ட நிலையில், நிர்வாகத் துறையினர், வசதிபடைத்த முதலீட்டாளர்கள் போன்றோர் தங்குதடையற்ற அளவில் லாபமடைகின்றனர். பாவப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டுக் கடன் பெறுவோரும் ஓய்வூதியர்களும்தாம் நிர்க்கதியாய் நிற்கின்றனர். நிறுவனங்கள் திவாலானாலும் தலைமை நிர்வாகிகள் வருவாயில் தங்கள் பங்காக எடுக்ககொள்ளும் தொகை நமக்கு மலைப்பூட்டுகிறது.
இந்தப் போக்கு பல தினசரிகளிலிருந்தும் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. சிலநேரங்களில் காங்கிரசும் செனட்டும் அமைந்திருக்கும் கேபிட்டால் ஹில்லிலிருந்து ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் குடியரசுத் தலைவர்களாக இருந்தபோது ஏகப்பட்ட வரிச்சலுகைகள், கிளாள்-ஸ்டீகால் சட்டம் 1999இல் விலக்கிக்கொள்ளப்பட்டது ஆகியவற்றின் விளைவாக வங்கிகளும், நிதிநிறுவனங்களும் தனித்தனியே, தத்தம் துறைகளில் செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறை மாறி வங்கிகளும் நிதிநிறுவனங்களை நடத்தலாம் என்னும் நிலை ஏற்பட்டதால் சிட்டி குரூப் போன்ற பிரம்மாண்டக் குழுமங்கள் உருவாயின. இத்தகைய முயற்சிகளுக்கு ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் ஆகிய இருதரப்பினரும் ஆதரவளித்தனர்.
அமெரிக்கக் காங்கிரசில் வீட்டோ எனப்படும் நிராகரிக்கும் அதிகாரம், மணிக்கனக்கில் பேசியே ஒரு சட்டவரைவைக் கொன்றுவிடக்கூடிய ஃபிலிபஸ்டர் முறை ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன, தோற்கடிக்கப்படுகின்றன. சீராக முறைப்படுத்தப்பட்ட மற்ற நாடாளுமன்ற அமைப்புகளில் இதைப் போன்ற அமைப்புகளில் இதைப் போன்ற உள்ளடி வேலைகளைச் செய்ய முடியாது.
ஓர் இலக்கை நோக்கிக் கொள்கை வகுப்பார்கள். மாறிவரும் சூழலில் அக்கொள்கை அந்த இலக்கை எட்ட முடியாமல் போய்விடும் விலை உருவாகும். ஒரு கட்டத்தில் எந்த நோக்கத்திற்காக வகுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே முறியடிப்பதாகக்கூட அக்கொள்கை அமைந்துவிடக் கூடும். இப்படியெல்லாம் நடப்பதை எவரும் உணர்வதில்லை.
எடுத்துக்காட்டாக 1981 வரை பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அட்டவணை உருவாக்கப்படவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சம்பள உயர்வு காரணமாக அதிகமாக வரிகட்டும் நிலை ஏற்பட்டது. பணவீக்கம் சம்பள உயர்வைப் பொருளற்ற தாக்கிவிடுகிறது என்னும் புரிதல் இல்லாமல் இருந்தது.
இன்னொருபுறம் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கக்கூடிய வழிகளைப் புறக்கணித்துவிட்டுக் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேல்தட்டு வகுப்பினருக்கு, பெரும் நிறுவன நிர்வாகிகளுக்கு வசதியாகவும் சட்டங்கள் கொண்டுவருவார்கள். ஸ்டாக் ஆப்ஷன் எனப்படும் முறையின் விளைவாக, நிறுவனம் நொடித்துப் போனாலும் நிர்வாகிகள் முடிந்தவரை சுருட்டிக்கொள்ள முடிகிறது. கீழ்மட்ட ஊழியர்கள்தாம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வேலையை இழந்து நிர்க்கதியாய் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நிறுவனத்தில் விழும்போது, அவர்களது ஓய்வூதிய முதலீடுகளும் செல்லாதவையாகிவிடுகின்றன.
1990களில் நிதிக்கணக்கு முறைகளை நெறிப்படுத்தும் வாரியம் இத்தகைய ஆபத்துகள் எழக்கூடும் என அஞ்சி அவற்றைத் தடுக்கப் புதிய விதிகளை வகுக்க முற்பட்டது. ஆனால் பெரும் நிறுவனங்கள் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு அத்தகைய முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தன.
அதேபோன்று தொழிலாளர் நலச் சட்டங்களும் மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்கள் தொழிற்சங்கம் அமைக்க, முதலாளிகளை எதிர்கொள்ள வகைசெய்யும் வகைசெய்யும் எவ்விதச் சட்டமும் இயற்றப்படவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் 21ஆம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தை நிர்வகிக்க இன்னமும் 1940களில் உருவாக்கப்பட்ட விதிகளையே அமெரிக்கா நம்பியிருக்கிறது. நிறுவனங்களை கொழிக்கவைத்து நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்கும் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் பணியைத்தான் இன்று குடியரசுக் கட்சியினர் செய்துவருகின்றனர்.
ஆக, சந்தைப் பொருளாதாரத்தில் இயல்பான நிகழ்வாக அல்ல, தொடர்ந்து 40 ஆண்டுகளாக அரசியல்ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே இவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. சந்தைப் பொருளாதாரம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்பே வெல்பவர் அனைத்தையும் அள்ளிச் செல்வதற்கு வழிசெய்கிறது என்பதை நூலாசிரியர்கள் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கிறார்கள்.
பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற ஆட்சி என்னும் பிரமை இருந்தாலும் அரசின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக உருவாக்குவதில் பல்வேறு குழுக்கள் தமக்குள் மோதிக்கொள்கின்றன. அவற்றில் வெற்றிபெறுவோரே அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள். இப்போட்டியில் நடுத்தர வர்க்கத்தினர் முற்றிலுமாக நசுக்கப்படுகின்றனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கம்யூனிசம், பாசிசம் ஆகிய இரு பெரும் ஜனநாயக விரோத அமைப்புகளுக்கு மாற்றாக அமெரிக்க ஜனநாயகம் பார்க்கப்பட்டது. ஏறத்தாழ சமபலம் படைத்த பல்வேறு தரப்பினருக்கிடையே நடக்கும் போட்டி, பிறகு அவர்களுக்கிடையே உருவாகும் ஒப்பந்தம், இதுவே அந்த ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமாகக் கருதப்பட்டது. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான போராட்டத்திற்கு மாற்றாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செயலாற்றுவதன் விளைவாக மெல்ல மெல்ல மக்களின் வளம் பெருகும். பாதுகாப்பும் கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால் வியட்நாம் போருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், கறுப்பினத்தவரின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தவிர பண்பாட்டுத்தளத்தில் எழுந்த பல்வேறு கலகக் குரல்கள் ஆகியன பலதரப்பினரும் இணக்கமாக வாழக்கூடிய நாடு அமெரிக்கா என்பது மிகையான மதிப்பீடே என்பதற்கான சான்றுகளாக இருந்தன.
குழுக்களாக இணைந்த செயல்பட்டுச் சாதித்துவிட முடியும் என்பதெல்லாமே பகற்கனவாக முடிந்தது. மாறாகத் தனிநபர்கள் தத்தம் நலன்களுக்காகப் போராடிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொல்ல ஆரம்பித்தனர். அவ்வாறு ஒவ்வொருவரும் தனித்தனியே குரல்கொடுத்தலும்கூட அக்குரல்களைப் பொறுத்தே நாட்டின் கொள்கைகள் அமைகின்றன என்றும் கூறப்பட்டது. தேர்தல்களின் மூலம் பெருமான்மையினரின் வாக்குகளைப் பெறும் கட்சியே அரசமைக்கிறது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் பெரும்பாலான மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுப் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன?
அமெரிக்காவின் பன்முகத் தன்மை குறித்துப் புளகாங்கிதம் அடைவோர் அதன் அரசியல் கட்சிகளெல்லாம் எப்படி ஒரு குறுகிய வட்டத்தின் நலனை மேம்படுத்துவதாக அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. 1960இல் ஸ்காட்ஷ்னெய்டர் கூறியதுபோல் பலதரப்பினரும் இணைந்து எழுப்பும் ஓசைகளில் மேல்தட்டு வர்க்கத்தினரின் குரலே ஓங்கி ஒலிக்கிறது.
1960களில்தாம் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன, சிறுபான்மையினரின் உரிமைகளும் குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன, நல வாழ்வுக் காப்பீட்டுத் திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. (அத்தகைய சூழலிலும் ஷ்னெய்டர் அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதை இங்கே நோக்க வேண்டும்.)
அந்தப் போக்கை, தங்கள் செல்வாக்கு மெல்ல மெல்லச் சரிந்து போவதை முதலாளிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடுமையாக எதிர்த்துப் போராடினர். பழமைவாதிகளின் எதிர்ப்புரட்சி தொடங்கியது. கருத்தியல், அரசியல், அமைப்பு ஆகியவற்றின் வழியாக முதலாளிகள் தங்கள் பிரச்சாரத்தை நடத்தினர். பல தரப்பினரின் தேவைகளை உணர்ந்து பொதுநீதி உருவாக்குவதை முதலாளிகளின் அரவணைப்பில் இருந்த அரசியல்வாதிகள் தீவீரமாக எதிர்த்தனர். அனைவருமே முன்னேறுவதற்கு வழிசெய்யும் திட்டங்களைத் தகர்ப்பதற்கான முயற்சிகளில் பழமைவாதிகள் இறங்கினர்.
1970களில் உலக அரங்கில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீச்சு குறையத் தொடங்கியது. ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் உருவாக்கிய புதிய திட்டமான “நியூடீல்’ ஓரளவுக்குமேல் பயன் தராது என்பது புலப்படத் தொடங்கிய நேரம் அது.
ஓய்வூதியமோ அல்லது நலவாழ்வுக் காப்பீடோ தனியார் துறைவசமே இருந்தது. பொருளாதாரம் செழித்து, முன்னேற்றத்தின் பயனைப் பலரும் அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தபோது அத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தனியார் வசம் இருந்ததில் தவறேதும் இல்லை.
ஆனால் உலகமயமாக்கத்தின் பின்னணியில், அமெரிக்காவில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படத் தொட்ங்கிய வேளையிலும் பாதுகாப்புத் திட்டங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த தனியார் வசம் இருந்ததால் தொழிலாளர்களுக்குச் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்குக் கைகொடுக்க அரசும் முன்வரவில்லை. பெரும் சீர்குலைவு தொடங்கியதை எவருமே கருத்தில் கொள்ளவில்லை. இதைத்தான் ஹாக்கரும் பியர்சனும் எவரும் உணராமலே அரசுக் கொள்கை மக்களுக்கெதிராகத் திரும்பும் முறை என்கிறார்கள்.
மக்கள் பரிதவித்த நேரத்தில் பழமைவாதிகள் ரூஸ்வெல்ட்டின் “நியூடீல்’ கைவிடப்பட வேண்டும், நிதிச்சந்தைமீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், மேல்தட்டு வர்க்கத்தினர்மீதான அதிக வரிகள் நீக்கப்பட வேண்டும், குடிமக்கள் உரிமைகள் அகற்றப்படவேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தத் தொடங்கினர். அதில் வெற்றிபெறவும் தொடங்கினர்.
ஜிம்மி கார்ட்டர் குடியரசுத் தலைவராக இருந்த காலம் தொட்டு முதலாளிகளின் நலனைப் பாதிக்கும் கொள்கைகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
பழமைவாதிகளின், பெருநிறுவனங்களின் வெற்றிகளையும் நடுத்தர வர்க்கத்தினரின் வீழ்ச்சியையும் விவரிக்கும் இந்நூல் அரசு நிர்வாகம் குறித்துப் பரந்துபட்ட மக்களிடையே நிலவிவரும் அதிருப்தியைக் குறைத்து மதிப்பிடுகின்றது எனலாம்.
1960களிலும் 70களிலும் வியட்நாம் யுத்தம், நிக்சனின் வாட்டர்கேட் ஊழல், கறுப்பர்களின் கலகம் எனப் பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் அமெரிக்கர்கள் அரசின் மீது நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையே பிளவுகள் மேலும் ஆழமாயின.
இதன் ஒரு பரிமாணமாகக் குடியரசுக் கட்சியினர் வசதிபடைத்தவர்கள், வெள்ளையர் ஆகிய இரு சாராரின் பிரசிநிதிகளாகத் தங்களை வளர்த்தெடுத்துக்கொண்டனர். லிண்டன் ஜான்சனுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எவரும் வெள்ளை இனத்தவர் மத்தியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்று ஒபாமா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இனங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே இருக்கின்றன; முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கின்றன; கசப்புணர்வு கூடியிருக்கிறது. இன்னொருபுறம் நடுத்தர வர்க்கத்தினரைக் கைகழுவிவிட்ட அரசின் மீதும் ஆத்திரம் பெருகியிருக்கிறது. இத்தகைய உணர்வுகளைத்தான் “டீபார்ட்டி’ இயக்கத்தினர் வெளிப்படுத்துகின்றனர்.
அத்தகைய நிலையைப் பயன்படுத்திப் பழமைவாதிகள் தங்களுக்குச் சாதகமான கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், அவற்றில் பெறுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் முற்போக்குக் கருத்துடையவர்களும் பின்தங்கிவிட்டனர். விளைவு வெல்பவர் எல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் இன்றைய நிலை.
மற்ற பல விமர்சகர்களைப் போன்றே ஹாக்கரும் பாட்டர்சனும் பிரச்சனை என்ன என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறார்கள். ஆனால் என்ன தீர்வு என்று கூறவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் தொழிலாளர்களும் அரசியல் கட்டமைப்பைச் சீரமைக்க முயல வேண்டும் என்கிறார்கள். எப்படிச் சீரமைப்பது என்பது குறித்து அவர்கள் ஏதும் சொல்லவில்லை. அது அவ்வளவு எளிதில் நடக்கப் போவதாகவும் தெரியவில்லை.
சாத்தியமா இல்லையா என்பதற்கெல்லாம் அப்பால், வெல்பவரே அனைத்தையும் சுருட்டிக்கொள்ளும் நிலைமை மாறினால்தான் அமெரிக்கச் சமூகம் தற்போது தன்னைப் பீடித்திருக்கும் கொடுமையான நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமான நிலைக்குத் திரும்ப முடியும்.

நன்றி-காலச்சுவடு

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்!

விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.

பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:

* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக ‘மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ‘பாக்கெட் மணி’ கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் ‘வாக்கிங்’ அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, ‘இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்’ என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு?  இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு  இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

தண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்

நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படியானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்தளவை கண்ட்ரோல் கீ அழுத்தியபடி + அல்லது – அழுத்தி, பெரியதாகவும், சிறியதாகவும் மாற்றுகிறீர்கள். இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனுவில் பிரிவுகள் உள்ளன.
இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் அளவை மாற்றுவதையே பலரும் விரும்புகின்றனர். ஷார்ட் கட் கீகள் மூலம் ஏற்படுத்துவதனை பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு, தண்டர்பேர்ட் மவுஸ் வீல் மூலம் ஸூம் செய்திடும் வசதி இருப்பது தெரிவதில்லை. ஏனென்றால், இதற்கு சில செட்டிங்ஸ் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் விரும்பும் பலவகை வசதிகளை ஏற்படுத்தலாம். அவற்றை இங்கு காணலாம்.
முதலில் தண்டர்பேர்ட் தொகுப்பின் பொதுவான ஆப்ஷன் மெனு பெற Tools > Options செல்ல வேண்டும். அடுத்தபடியாக Advanced பிரிவில் General டேப் கிளிக் செய்திட வேண்டும். இதன் மூலம் தண்டர்பேர்ட் தொகுப்பின் Config எடிட்டர் பிரிவிற்குச் செல்லலாம். இப்போது about:config விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்கள் இருப்பதால், பில்டர் விண்டோவில் நமக்குத் தேவையான கட்டளை சொற்களைக் கொடுத்து கேட்கலாம். இங்கு mousewheel.withcontrolkey.action எனக் கொடுக்கவும். பட்டியல் விண்டோவில் ஒன்று மட்டும் இருப்பது நல்லது. ஏற்கனவேமாறா நிலையில் டாகுமெண்ட்டில் உள்ள வரிகளில் எத்தனை வரிகள் என்பதனைக் கொண்டிருக்கும். இங்கு இருக்கக் கூடிய மதிப்புகள்: 0 – எத்தனை வரிகள் ஸ்குரோல் செய்திட வேண்டும் என்பதனை செட் செய்திட. 1- பக்கங்களில் சென்றிட, 2- முன்னும் பின்னுமாகச் சென்றிட, 3- டெக்ஸ்ட்டை சிறிது பெரிதாக மாற்ற, 4- பிக்ஸெல்களைக் கூட்டிக் குறைத்துப் பார்க்க.
இந்த மதிப்புகளில் விளக்கத்துடனும் வரிகள் காட்டப்பட்டிருக்கும். இந்த வரியில் டபுள் கிளிக் செய்தால், மதிப்பினை திருத்தும் வசதி கிடைக்கும். 0 முதல் 3 வரையில் தரப்படும் மதிப்பிற்கேற்ப, கண்ட்ரோல் கீயுடன் மவுஸ் வீல் சுழல்கையில் செயல்பாடு இருக்கும்.
கண்ட்ரோல் கீயுடன் செயல்பாட்டுக்கான மாற்றம் இருப்பது போல, மற்ற கீகளுடனும் செயல்பாடுகளை இங்கு செட் செய்திடலாம். அந்த வரிகள் கீழே உள்ளது போல கிடைக்கும்.
·mousewheel.withnokey.action
·mousewheel.withshiftkey.action
·mousewheel.withmetakey.action
·mousewheel.withaltkey.action
·mousewheel.withcontrolkey.action
இவை அனைத்தும் ஒரே முயற்சியில் பெற பில்டரில் mousewheel.with என அமைக்க வேண்டும். பின்னர் நம் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி அமைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஷிப்ட் கீ அழுத்தி மாற்றங்களை ஏற்படுத்த, mousewheel.withshiftkey.action என்ற பாராமீட்டரில் மதிப்பை 3 எனத் தர வேண்டும்.

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் நோய்…!-கிளப்டோமேனியா

`கிளப்டோமேனியா’ என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர் கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர் களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவியாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திருட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை” என்கிறார், மனநல மருத்துவர் பான்சேல்.

பிரபலமான `திருடி’ பற்றியும் அவர் சொல்கிறார்:

“சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந்துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து’ விடுவார். அல்லது பொருட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோமேனியா’ என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட்களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள்கிறார்.

இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொருளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள்ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப்பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.

“ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந்தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர்களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக் கிறார்கள். அவை அடுத்தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக்காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்” என்கிறார்.

மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், “கிளப்டோமேனியா என்கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.

இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிக மாகக் காணப்படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.

டேப்ளட் பிசி-க்குத் தயாராவோம்

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது.இந்த 2011 ஆம் ஆண்டில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூட்டரில் உள்ள சிறப்பம்சங்களைக் கூறி விளம்பரப்படுத்தத் தொடங்கி விட்டனர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விளம்பரங்களால் ஒரு குழப்பமான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை எல்லாம் பார்த்து, கவனித்து, ஆய்வு செய்து, பின்னர் நம் பட்ஜெட்டிற்குள்ளாக, ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. ப்ராசசர் (Processor): வழக்கம்போல, எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் ப்ராசசர் மற்றும் அதன் இயங்கும் வேகமே மிக முக்கியம். இதனைச் சுற்றியே நம் கம்ப்யூட்டர் இயக்கம் இருக்கப் போவதால், இதன் திறனை முதல் அம்சமாக நாம் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள பட்டயக் கம்ப்யூட்டர்கள் அனைத்துமே குறைந்தது 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் கொண்டுள்ளன. எச்.பி. நிறுவனம், தன் டச் பேட் கம்ப்யூட்டரில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் நிறுவன ப்ராசசரைக் கொண்டுள்ளது. ப்ராசசரைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களாகப் பரவலாக, ஆப்பிள், என்-விடியா, ஏ.ஆர்.எம்., இன்டெல் மற்றும் குவால்காம் ஆகியவை முன்னணியில் உள்ளன. என் -விடியாவின் டெக்ரா 2 ப்ராசசரை, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
2. டிஸ்பிளே (Display): கைக்கு அடக்கமாக, சிறிய அளவில் ஒரு பட்டயக் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என நாம் விரும்பினாலும், நம் கம்ப்யூட்டர் பணிகளுக்கு ஓரளவிற்கு திரையின் அளவினை எதிர்பார்க்கிறோம். 7, 8.9, 9.7, 10.1, 12.1 அங்குல அளவுகளில் டிஸ்பிளே திரைகளைக் கொண்டு, இந்த நிறுவனங்கள் இக்கம்ப்யூட்டர்களை வடிவமைத்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. Eee Slate EP 121 கம்ப்யூட்டரில் திரை 12.1 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதில் இவற்றின் ரெசல்யூசன் அளவையும் நாம் ஒப்பிடலாம். 800×480 என்பதில் தொடங்கி 1280×800 வரை இக்கம்ப்யூட்டர் திரைகளின் ரெசல்யூசன் உள்ளது.
3. ராம் நினைவகம் (RAM): ஆப்பிள் நிறுவனம் தன் கம்ப்யூட்டரில் 256 எம்பி நினைவகத்தினைக் கொண்டிருந்தாலும், இப்போது இந்த சந்தையில் வரும் பிற நிறுவனங்களின் கம்ப்யூட்டரில் 1ஜிபி ராம் நினைவகம் தொடக்க நிலையாகவே அமைக்கப்படுகிறது. EP121 கம்ப்யூட்டரில் 2 ஜிபி நினைவகம் உள்ளது. இனி அடுத்து வரும் பட்டயக் கம்ப்யூட்டர்களில் இவை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
4. கேமரா (Camera): இந்த வகைக் கம்ப்யூட்டர்களில் இரண்டு கேமராக்கள் தரப்படுகின்றன. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் இவை அமைக்கப்படுகின்றன. வீடியோ சேட்டிங் என அழைக்கப்படும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியாகவும், போட்டோ எடுத்து உடனடியாக அனுப்பவும் இவை உதவுகின்றன. ஆப்பிள் ஐ-பேட் கம்ப்யூட்டரில் எதுவும் இல்லை. மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுமான வரை இரண்டு கேமராக்கள் உள்ளன. முன்பக்க கேமரா 1.3 எம்.பி முதல் 3.2 எம்பி வரை திறன் கொண்டதாகவும், பின்புறமுள்ள கேமரா 3.2 எம்பி முதல் 5 எம்பி வரை திறன் கொண்டதாகவும் அமைந்துள்ளன. எச்.பி. டச்பேட் மற்றும் இ.பி. 121 கம்ப்யூட்டர்களில் பின்புறக் கேமரா தரப்படவில்லை.
5. ஹார்ட் டிஸ்க் (Storage): தகவல்களைத் தேக்கி வைத்து இயக்க கம்ப்யூட்டரில் நாம் அதிக அளவில் கொள்ளளவு திறன் கொண்ட டிஸ்க்குகளை எதிர்பார்க்கிறோம். ஆப்பிளின் ஐ-பேட் இந்த வகையில் 16, 32 மற்றும் 64 ஜிபி திறன் கொண்ட கம்ப்யூட்டர்களை வெளியிட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் 16 மற்றும் 32 ஜிபி கொள்ளளவுடன் இவற்றை வடிவமைத்துள்ளன.
6. யு.எஸ்.பி (U.S.B): துணை சாதனங்களை இணைக்க யு.எஸ்.பி. ட்ரைவ்களை மட்டுமே நாம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விரும்புகிறோம். ஸ்மார்ட் போன்களிலும் இவை கட்டாய மாக அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் ஆப்பிள் தன் ஐ-பேட் சாதனத்தில் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவ் கூடத் தரவில்லை. அதே போல டெல் நிறுவனத்தின் ஸ்ட்ரீக் கம்ப்யூட்டரிலும், யு.எஸ்.பி. ட்ரைவ் தரப்படவில்லை. மற்ற நிறுவனங்களின் பட்டயக் கம்ப்யூட்டர்களில் இவை தரப்பட்டுள்ளன.
7. வயர்லெஸ் இணைப்பு (Wireless Connectivity): மற்றவர்களுடன் நெட்வொர்க் கில் இணைந்து தொடர்பு கொள்வது, இத்தகைய கம்ப்யூட்டர்களில் முக்கிய செயல்பாடாக உள்ளது. எனவே இந்த கம்ப்யூட்டர்களில் தரப்படும் வயர்லெஸ் இணைப்பு வகை மற்றும் திறன், இவற்றின் மதிப்பை நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், வைபி, புளுடூத், 3ஜி/4ஜி ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளதா என்று கவனித்து தேர்ந்தெடுக்கலாம். 4 ஜி வசதியை அவ்வளவாக நாம் எதிர்பார்க்க முடியாது. பொதுவாக, கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் இந்த மூன்று வசதிகளும் தரப்படுகின்றன.
8.ஜி.பி.எஸ். (GPS): வயர்லெஸ் இணைப்பு கிடைப்பதனால், நாம் எந்த இடத்திலும் இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். எனவே, இடத்தைச் சுட்டிக் காட்டும் ஜி.பி.எஸ். வசதி, ஒரு பட்டயக் கம்ப்யூட்டரின் சிறந்த அம்சமாகக் கருதப்படுகிறது. பொதுவாக அனைத்து பட்டயக் கம்ப்யூட்டர்களிலும் இது கிடைக்கிறது. இருப்பினும் ஓரிரு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் இந்த வசதி தரப்படவில்லை. எனவே ஒன்றை வாங்குகையில், இந்த வசதி உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
9. ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OSOperating System): அனைத்திலும் முக்கிய ஒரு விஷயம் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். இதன் இயக்க அடிப்படையில் தான், நமக்கு வசதிகள் திறனுடன் கிடைக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் வழக்கம்போல, தன்னுடைய ஐ.ஓ.எஸ். 4.2.1 ஐ தன் ஐ-பேடில் தந்துள்ளது. மற்ற பட்டயக் கம்ப்யூட்டர்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பல நிறுவனங்கள் தருகின்றன. பல பதிப்புகளில் (Honeycomb, Froyo, Gingerbread) இவை கிடைக்கின்றன. Eee Slate EP 121 கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 எச்.பி. என்னும் ஓ.எஸ். தரப்படுகிறது. எச்.பி. நிறுவனக் கம்ப்யூட்டரில் வெப் ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின ஐ- பேட் தவிர, மற்ற அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பிளாஷ் இயக்கம் சப்போர்ட் செய்யப் படுகிறது. இந்த வகை கம்ப்யூட்டர்களில் செயல்படுத்த, சின்னச் சின்ன அப்ளிகேஷன்கள் நிறைய தேவைப்படும். இவற்றைத் தர அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கும் நிறுவனங்கள், இணையத்தில் தங்கள் அப்ளிகேஷன் ஸ்டோர்களை இயக்குகின்றன. iTunes, Android Market, App World, webOS AppStore ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
10. எடை: இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் எந்த இடத்திற்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த என வடிவமைக்கப்படுவதால், இதன் எடையில், அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தி உள்ளன. சராசரியாக ஒரு பட்டயக் கம்ப்யூட்டரின் எடை 700 கிராம் என்ற அளவில் அமைக்கப்படுகிறது. பிளாக் பெரி மற்றும் டெல் நிறுவனக் கம்ப்யூட்டர்கள் 400 முதல் 450 கிராம் எடையிலும் இவற்றை அமைத்துள்ளன. Eee Slate EP 121 கம்ப்யூட்டரின் எடை 1,160 கிராம் உள்ளது.
இவை அனைத்தும், ஒன்றிரண்டினைத் தவிர, இந்தியாவில் அதிகார பூர்வமாக இன்னும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. பல நிறுவனங்களின், குறிப்பாக பல சீன நாட்டுத் தயாரிப்புகள், பட்டயக் கம்ப்யூட்டர்கள் கிரே மார்க்கட் மற்றும் இணைய வெளி விற்பனை மையங்கள் வழி கிடைக்கின்றன. மெதுவாக உயர்ந்து வரும் இந்த பட்டயக் கம்ப்யூட்டர் பயன்பாடு, நிச்சயம் விரைவில் சூடு பிடிக்கும். அப்போது மேலே கூறப்பட்டுள்ள முக்கிய அடிப்படை விஷயங்களின் திறன் மற்றும் வேகம் உயரும். இவற்றை மனதில் கொண்டு நாம் நமக்கென ஒன்றை வாங்கலாம்.

உலகின் மிகப் பெரிய “குடும்பஸ்தன்’ ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, “இளைஞர்’ தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். “நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்’ என்று கூறியுள்ளார், “காதல் மன்னன்’ ஜியோனா சானா.

கடலில் உதித்த கந்தன்

ஆர்ப்பரிக்கும் அலைகள் திருச்செந்தூர் கோயில் மதில் சுவரை முத்தமிட்டு, மணல் மீது நுரை பொங்கச் சரிந்து வீழ்கின்றன. “மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்’ எனப் பாட வைத்த திருத்தலம். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். இங்கு கந்தன், அருள் வள்ளி – தெய்வானையுடன் காட்சியருளுகிறார். தினசரி அபிஷேக நேரத்தில் திருப்புகழ் பாடல்களோடு, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களும் பாடப்படுகின்றன. நிறைய திருவிளையாடல்களுக்குச் சொந்தக்காரர் இந்த கந்தன். அதில் ஒன்று தான் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்.
“”பகழிக் கூத்தர் எனும் வைணவருக்குத் தீராத வயிற்றுவலி. அவரது கனவில் முருகன் தோன்றி, தம் மீது பிள்ளைத் தமிழ்பாடும்படி பணிக்கிறார். அவரும் திருச்செந்தூர் வந்து பிள்ளைத் தமிழ் பாட, வயிற்று வலி மெல்ல மெல்ல குறைந்தது. அதனால்தான் தினசரி முருகன் சன்னிதியில் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடப்படுகிறது” என்கிறார் கோயில் பூசாரி.
கருவறை கந்தப்பெருமான் திருமுகத்தில் ஒருபுறம் ஏதோ அரித்தாற்போல இருக்கிறது. அதற்குக் காரணம். மூலவர் விக்கிரகம் ஆழ்கடலின் உள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாம்.
திருநள்ளாறு கோயிலில் நடராஜர் விக்கிரகத்தை அபகரித்த டச்சுக்காரர்கள், கப்பலில் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்து முருகன் விக்கிரகத்தை அபகரித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்குகின்றனர். கப்பல் செல்லச் செல்ல கடல் நடுவே பெரும் சூறாவளி சூழ்ந்து கொள்கிறது. கப்பல் நிலை தடுமாறுகிறது. டச்சுக்காரர்கள் அச்சப்படுகிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கிறார்கள்.
கடவுள் விக்கிரகங்களைக் களவாடியதால்தான் இத்தனை பெரிய சூறாவளியோ என எண்ணிய டச்சுக்காரர்கள், நடராஜர் விக்கிரகத்தைக் கடலில் தூக்கிப் போடுகின்றனர். அப்படியும் சூறாவளி அடங்கவேயில்லை. தெய்வக் குற்றம் செய்து விட்டதாகக் கருதியவர்கள், அடுத்து கந்தன் விக்கிரகத்தையும் கடலில் வீசியெறிகின்றனர். சில நிமிடங்களில் கடல் அமைதியாகிறது. டச்சுக்காரர்கள் தங்கள் பயணத்தைத்தொடர்ந்து, தங்கள் தேசத்தை அடைகின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் முருகன் விக்கிரகம் இல்லையென்கிற செய்தி பரவுகிறது. பக்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது திருநெல்வேலியை ஆண்டு வந்த வட மலையப்பப் பிள்ளை, பெரும் கவலை கொள்கிறார். பல நாட்கள் விரதம் மேற்கொள்கிறார். முருகப்பெருமான் அவர் கனவில் தோன்றுகிறார். “”கவலை வேண்டாம். கோயிலிலிருந்து சற்றுத் தூரத்தில் கடலுக்கடியில் நான் பத்திரமாக இருக்கிறேன். என் விக்கிரகம் இருக்குமிடத்துக்கு மேலாக ஒரு எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருக்கும்!” என்கிறார் முருகப்பெருமான். வடமலையப்ப பிள்ளைக்கு மேலும் தலைசுற்றுகிறது. கடல் நடுவே மிதக்கின்ற ஒற்றை எலுமிச்சம் பழத்தை நான் எவ்விதம் காண்பேன்? எனக் கேட்கிறார். “” அந்த இடத்தில் வானில் கருடன் பறந்தபடி இருப்பான். கண்டுகொள் அந்த இடத்தை” என்கிறார் சுந்தரப்பெருமான்.
கடல் நீச்சல் நன்கு தெரிந்த பத்துப்பேரை ஒரு பத்துப்பேரை ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கடல் மீது கிளம்பி விடுகிறார் வடமலையப்ப பிள்ளை. கடல் நடுவே வானில் ஓரிடத்தில் கருடன் வட்டமிட, மீனவர்கள் சிலர் கடலில் குதித்துத் தேடுகின்றனர். நடராஜர் விக்கிரகம் கிடைக்கிறது. கடைசியில் வடமலையப்ப பிள்ளையே கடலில் குதித்துத் தேடுகிறார். அவரது கைகளுக்குக் கந்தன் விக்கிரகம் கிடைத்துவிடுகிறது. கரைக்குக் கொண்டு வரப்படுகிறது. 1653 ஆம் ஆண்டு தை 29 ஆம் தேதியன்று கருவறையில் கந்தப்பெருமான் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சில காலம் கடல் நீருக்குள் கந்தன் விக்கிரகம் அமிழ்ந்து கிடந்ததால், முகம் ஒருபுறம் அரித்துப் போனதாகச் சொல்லப்படுகிறது!

* பழனி முருகனுக்கு தைப் பூசம் மாதிரி, திருச்செந்தூர் முருகனுக்கு சூரசம்ஹாரம் பெரிய திருவிழா. பத்து நாள் திருவிழா. பிரதி ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் சஷ்டி அன்று சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெறும்.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலை போல கூடுகின்ற பெருந்திருவிழா, பத்தாம் நாள் பால சுப்பிரமணியர் – வள்ளி – தெய்வானை திருக்கல்யாணம்.

பள்ளி கொண்ட பரமேஸ்வரன்

பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நம்மை அறியாமலேயே பக்தி பரவசத்தில் திளைக்கிறோம். பள்ளி கொண்டுள்ள இறைவனுக்கு அருகில் மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு முனிவர், பிரம்மா ஆகியோர் வணங்கி நிற்கிறார்கள்.    அவர்களுக்கு அருகில் சூரிய, சந்திரர்கள், குபேரன், சப்த ரிஷிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் போன்றோரும் சிவனை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.

கோவில் தல வரலாறு

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது அமுதம் வருவதற்கு முன் ஆலகால விஷம் வந்தது. அனைவரும் அஞ்சி ஓடியபோது மகாவிஷ்ணு அருகில் சென்றார். விஷ நெடி தாக்கியதில் அவரது மேனி நீல நிறமானது. இதுபற்றி அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.

அதன்தொடர்ச்சியாக சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார். பக்கத்தில் இருந்த பார்வதிதேவி, பதறிப் போனாள். தன் கணவனின் கழுத்தை இறுக்கி பிடித்தாள். இதனால் ஆலகால விஷம் அவரது கழுத்தைத் தாண்டாமல் கண்டமாகிய கழுத்தில் நீல நிறத்தில் நின்று விட்டது. சிவனும் `திருநீலகண்டன்’ ஆனார்.

இதன்பிறகு, சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் கைலாயம் நோக்கி புறப்பட்டார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே… சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தார்.

பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.

தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் காலத்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இக்கோவில் தல வரலாறு. பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனை தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்கிறார்கள்.

இந்து மங்கையர்-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

இந்துக்களின் குடும்ப வாழ்க்கை பலவித சம்பிரதாயங்களைக் கொண்டது.

அந்தச் சம்பிரதாயங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எப்படி இருந்தன என்பதை, சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் சொற்பொழிவுகளால் அறிய முடிகிறது.

சுவாமி கூறுகிறார்:

“இந்தியாவில் லட்சியப் பெண்மணி, தாய். அன்னையே முன்னறி தெய்வம். இறுதியாக, அறியப்படுவதும் அன்னையே. `பெண்’ என்ற சொல் இந்தியனுக்கு எண்ணத்தில் தாய்மையையே நினைவுபடுத்துகிறது. ஆண்டவனையே அவர்கள் `அன்னை’ என்றுதான் வணங்குகிறார்கள். குழந்தைப் பருவத்திலே, நாங்கள் ஒவ்வொரு நாளும் விடியற்காலத்தில் சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று அன்னையின் முன் வைப்போம். அவள் அதிலே தன் காற் பெருவிரலைத் தோய்ப்பாள். அந்நீரை நாங்கள் பருகுவோம்.    மேலை நாட்டிலே பெண் என்றால் மனைவி. பெண்மை என்னும் லட்சியம், இங்கே மனைவியாகக் குவிந்திருக்கிறது. இந்தியாவில் பாமரன் கருத்துப்படி பெண்மணியின் முழுச் சக்தியும் தாய்மையில் ஒருமுகப்பட்டுள்ளது. மேல் நாட்டிலே மனைவி, வீட்டை ஆள்கிறாள். இந்தியக் குடும்பத்திலே வீட்டை ஆள்பவள் தாய். மேலை நாட்டுக் குடும்பத்தில் ஒரு தாய் ழைந்தால் அவர் மனைவிக்கு அடங்கியே இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நாட்டிலே மனைவிதான் தாய்க்கு அடங்க வேண்டும்.

மனைவி என்ற இடத்தில் இந்தியப் பெண்மணி வகிக்கும் நிலை என்ன? இன்னும் என்னை ஈன்றெடுத்துப் புகழுக்கெல்லாம் பாத்திரமாகிய அன்னையின் நிலை என்ன? ஒன்பது மாதம் என்னைக் கருவிலே காத்த அவள் நிலை யாது? தேவைப்பட்டால் இருபது தடவையானாலும் எனக்காகத் தன் உயிரைத் தரக்கூடிய அவள் எங்கே? நான் எவ்வளவு தீயவனானாலும் தன் அன்பு என்றும் மறவாத தாயின் நிலை எது? ஒரு சிறிது யான் அவளைத் தவறாக நடத்தியதும் உடனே மணமுறிவு வேண்டி நீதிமன்றம் செல்லும் மனைவியோடு ஒப்பிடுங்கால் அந்தத் தாய் எங்கே? ஓ! அமெரிக்க மங்கையரே! அவள் எங்கே?

எங்கள் தாய்! அவளுக்கு முன்னால் நாங்கள் இறப்பதாயினும் அவள் மடியிலே தலைவைத்தே இறக்க ஆசைப்படுகிறோம். `பெண்ணென்பது உடலோடு உறவு ஏற்படுத்தக்கூடிய பேர்தானா! இந்துக்கள் அந்தப் பெயரை நிரந்தரமாகப் புனிதமாக்கி விட்டார்கள். `காமம்’ என்பதே என்றும் அணுகாத, தீய நினைவுகளே என்றும் நெருங்காத ஒரு பெயர், தாய் எனும் ஒன்றைத் தவிர வேறு எது?

எங்கள் நாட்டிலே ஒவ்வொரு பெண்ணையும், `தாயே’ என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். சிறுமியைக் கூட `அம்மா’ என்றுதான் அழைக்கிறோம்.

இங்கே அமெரிக்கப் பெண்களை நான் `தாயே’ என்று அழைத்தபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். எனக்குக் காரணம் புரிந்தது. தாய் என்றால் வயது முதிர்ந்தவர்கள் என்று இங்குள்ளவர்கள் எண்ணுகிறார்கள். எங்கள் நாட்டில் பெண்கள் அனைத்துமே தாய்மை.

தாய்தான் முதலில்; பின்புதான் மனைவி; நான் மணம் புரிந்துகொண்டிருந்தேனாயின், என் மனைவி, என் அன்னையை வருத்தப்படுத்தத் துணிந்தால் நான் அவளை வெறுப்பேன். ஏன், நான் என் தாயை வணங்கவில்லையா? அவளுடைய மருமகள் ஏன் அவளை வழிபடலாகாது? நான் வழிபடும் ஒருவரை அவள் வழிபட்டால் என்ன? என் தலைமேலே ஏறிக்கொண்டு என் தாயை அதிகாரம் செய்ய அவள் யார்? தாய்மையிலிருந்தே பெரும் பொறுப்பு ஏற்படுகிறது. அதுதான் அடிப்படை! அங்கிருந்து முன்னேறுங்கள்”.

ஆம், இந்துவின் குடும்பம் என்பது தாய்மையையே தலையாகக் கொண்டது.

அங்கிருந்துதான் ஒவ்வொரு கிளையும் தொடங்குகிறது.

தாயை மகன் நேசிப்பதுபோல், மருமகளும் நேசித்தாக வேண்டும்.

தன் தாயை நேசிக்காத மனைவியை, கணவன் தான் நேசிக்கக் கூடாது.

தாய் வேர்.

மகன் மரம்.

அந்த மரக்கிளையில் வந்தமரும் பறவையே மனைவி.

தன்மீது விளையாட அந்தப் பறவைக்கு மரம் இடம் கொடுத்ததால் மரத்தின் வேரை அது கொத்தித் தின்ன முடியாது.

இந்துக் குடும்பத்தில் மருமகள் என்பவளின் அந்தஸ்து வீட்டுக்கு ராணி என்னும் அந்தஸ்தல்ல; தாய் என்னும் ராணியின் தோழி என்னும் அந்தஸ்தே.

கணவன் தன்னிடம் பெறும் சுக அனுபவங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும், அவனது தாயை அவள் விலையாகக் கேட்க முடியாது.

எவள் இல்லையென்றால் இந்தப் பூமியில் அவன் ஜனித்திருக்க முடியாதோ, அவளேதான் எல்லோரையும்விட உயர்ந்தவள்.

அந்தத் தாயின் அந்தஸ்தை ஒப்புக்கொண்ட மருமகள்தான், தனக்கு வரப் போகும் மருமகளிடம் அந்த அந்தஸ்தை எதிர்பார்க்க முடியும்.

மருமகளும் ஒரு நாள் மாமியார் ஆகத்தான் போகிறாள்.

ஆகவே, குடும்பக் கோவிலின் கோபுரம் அன்னையே.

இந்துக்கள் பொருளாதாரத் திலும் அதே நிலையை வைத்திருந்தார்கள்.

மகன், தான் தனியாகச் சம்பாதிக்கிற பணத்தைத் தாய் தந்தைக்குத் தெரியாமல் மனைவியிடம் கொடுக்க முடியாது.

மகனையும், மருமகளையும் அதே அளவிலே கட்டுப்படுத்துவதற்குத்தான், `பாட்டனின் சொத்து பேரனுக்கு’ என்ற சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார்கள்.

தன் தகப்பன் சொத்தை மகன் விற்றுவிட்டால், பேரன் கோர்ட்டுக்குப் போனால், அந்த விற்பனை செல்லுபடியாகாது.

இந்துக்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் இதிலே அடங்கியிருக்கிறது.

`தாயின் தனி உடைமைகள் பெண் மகளுக்கே’ என்பது இந்துக்களின் சம்பிரதாயம்.    மகனது குடும்பத்துக்குப் பாதுகாப்புக்காக, `தகப்பன் சொத்துப் பேரனுக்கு’ என்றும், பெண் மக்களுக்குப் பாதுகாப்பாகத் `தாயின் சொத்து பெண் மக்களுக்கு’ என்றும் வகுத்தார்கள்.

அதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய் வழியில் சொத்து வருகிறது.

அவளது பிள்ளைக்குப் பாட்டன் வழியில் சொத்து வருகிறது.

மகன் சம்பாதிப்பது அவனது பேரனுக்குப் போகிறது.

ஆகவே, ஒவ்வொரு தலைமுறைக்கும் சொத்துப் பாதுகாப்பு இருக்கிறது.

இதிலே இன்னும் ஒரு கௌரவத்தை இந்து மகன் தாய்க்கு அளித்தான்.

அதாவது, தாயின் முன்னிலையில் மனைவியோடு பேசுவதில்லை.

இன்று காலம் மாறிவிட்டது.

சம்பிரதாயங்கள் மீறப்படுகின்றன.

தாயின் முன்னிலையில் மனைவியின்மீது கைபோடுவதுகூட வேடிக்கையாகி விட்டது.

போன தலைமுறை வரை நமது இந்து சமுதாயம் கண்டிப்பான சம்பிரதாயங்களை அனுஷ்டித்தது.

தாய் தகப்பன் விழித்துக் கொண்டிருக்கும் போது கணவனும் மனைவியும் தனியறைக்குள் செல்ல மாட்டார்கள்.

கணவன் பெயர் `சங்கரன்’ என்றிருந்தால் இதே சங்கரன் என்ற பெயரில் அவனுக்கொரு தம்பியோ வேலைக்காரனோ இருக்கலாம்.

அவனை, `டேய் சங்கரா?’ என்று அழைக்க நேரிடலாம்.

அது கணவனை அவமானப்படுத்துவதாக அமையலாம்.

ஆகவேதான், கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்று வைத்தார்கள்.

பெண்ணுக்கு அடக்கம் போதிக்கப்பட்டது.

சத்தம் போட்டுச் சிரிப்பது இழிவான பெண்களின் குணம் என்று கருதப்பட்டது.

அதனால், `நகுதல் – நகைத்தல’ என்று மெல்லச் சிரிப்பதை, அது பெண்ணுக்கு வலியுறுத்தியது.

அந்தச் சிரிப்பையும் அவள், பிற ஆடவர் முன்னிலையில் சிரிக்கக் கூடாது.

காரணம், எவனாவது ஒரு ஆடவன் அந்தச் சிரிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.

“பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது பழமொழி.

நேருக்கு நேராக அவள் யாரையும் பார்க்கக் கூடாது.

இந்தப் பார்வை, சிரிப்பு – இரண்டையும் ஒரு குறளில் சொன்னான் வள்ளுவன்.

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

ஆம், பாராத போது பார்க்கும், மெல்ல நகும். அவ்வளவுதான்.

காதல் உணர்ச்சியில் அவள் உடலில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படும்.

அவள் உள்ளம் கொதிக்கும். ஆனால், அப்போதும் அவள் ஊமையாகவே இருப்பாள்.

`நாணம்’ என்பது தமிழ்ச் சொல்தான்; என்றாலும், இமயமுதல் குமரிவரையிலே உள்ள இந்துப் பெண்களுக்கு அது பொதுச் சொல் ஆகும்.

இந்துக்கள் இந்த நாணத்தை மனப் பழக்கமாகத் தொடங்கி, உடற் பழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

இந்துப் பெண்களுக்கு நாணம் சொல்லித் தெரியவேண்டிய கலையல்ல; அது அவள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.

சாந்தி முகூர்த்தத்தன்று, மணமகளை இரண்டொரு மங்கல மங்கையர் அழைத்துக் கொண்டு போய் பள்ளியறையில் உட்கார வைக்கும் பழக்கம் இந்துக்களிடையே உண்டு.    ஏனிந்தப் பழக்கம்?

காமத்தால் துடித்தும், நாணத்தால் நடக்க முடியாமலிருக்கும் அந்தப் பெண்ணை, நாலுபேர் நடத்திக் கொண்டு போவதாக ஐதீகம்.

இதைத் `தனியறை சேர்த்தல்’, `அமளியிற் சேர்த்தல்’ என்று இதிகாசங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன.

இவையனைத்தும் பலமான கட்டுக்காவற் சம்பிரதாயங்கள்.

இவற்றை மீறுவோர் உண்டு. தவறுவோர் உண்டு.

இவர்கள் சமுதாய அங்கவீனர்கள்.

இவர்கள் நற்குடிப் பிறவாதவர்கள்.

வள்ளுவன் தெளிவாகவே சொன்னான்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும், என்று.

`ஒருவன் அல்லது ஒருத்தியின் நடத்தை தவறாயின் அவர்களது குலமே சந்தேகத்திற்குரியது’ என்றான் வள்ளுவன்.

இன்னும் மணமாகாத இந்து இளைஞன், தனது சம்பிரதாயங்களின்படி அமையப்பெற்ற ஒரு பெண்ணோவியத்தைப் தேர்ந்தெடுத்தால், அவனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

நீண்ட நாள் கணவனைப் பிரிந்திருந்தாலும், நெறிமுறை பிறழாது, உலை மூச்சைப்போல அனல் மூச்சை ஜீரணித்து உப்பைக் குறைத்துச் சாப்பிட்டும், குளிர்ந்த நீராடியும் காம உணர்ச்சியே இல்லாமல் வாழும் ஓர் இந்துப் பெண் கிடைப்பதுபோல், கணவன் பெறக்கூடிய பெரும்பேறு வேறு எதுவுமே இல்லை.

கண்களையும் கவர்ச்சிகளையும் நம்பி, கட்டுப்பாடற்ற பெண்ணின் வலையில் விழுவோர் ஒன்று பைத்தியமாவார்கள்; அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள்.

இந்துச் சட்டங்கள் மட்டுமல்லாது, சம்பிரதாயங்களும்கூட, சகல வழிகளிலும் செம்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கின்றன.

வாழ்க்கை என்பது உடல் இச்சை மட்டுமன்று.

அதனையும் மீறிச் சில சுகங்களும் பெருமைகளும் உண்டு.

உடல் இச்சை மட்டும் மூல ஆதாரமாக இருந்து விட்டால், பெண்ணைத் தேர்வதில் இளைஞன் தவறி விழுவான்.

தாய்க்கும் தனக்கும், அடங்கிய பெண்ணுக்கு அழகு தேவையில்லை.

அவள் அழகில்லாதவளானாலும், அவளுக்குத் தெய்வமும் நிகரில்லை!