Daily Archives: மார்ச் 4th, 2011

சைக்கிள் பிறந்த விதம்!

1700-களின் பிற்பகுதியில், கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்’ என்ற வண்டியை வேடிக்கைக்காகப் பயன்படுத்தினார்கள். காலால் தரையை உந்தித் தள்ளி அதை நகர்த்த வேண்டும். வண்டி ஓட்டுபவருக்குக் கஷ்டமாகவும், பார்ப்பவருக்கு ஜாலியாகவும் இருக்கும். 1817-ல் டிரய்சினா என்ற கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்’ வண்டி உருவானது.

1839-ல், கிராங் மூலம் பின்சக்கரத்துடன் பெடல்கள் இணைக்கப்பட்ட சைக்கிளை கிர்க் பேட்ரிக் மெக்மில் லன் உருவாக்கினார். இவ்வாறு ஆரம்பகட்ட சைக்கிள் பிறந்தது.

1861-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிக்காவ்ஸ், இன்னும் சுலப மாகப் பயன்படுத்தப்படுக்கூடிய சைக்கிளாக அதை மேம்படுத்தினார். அதன் பெடல்கள் முன்சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. காலப் போக்கில் முன்சக்கரம் பெரிதாக மாறி, `பென்னி பார்த்திங்’ என்று அழைக்கப்பட்டது.

1885-ம் ஆண்டில்தான் இன்றைய சைக்கிள் அறிமுகமானது. ஜான் ஸ்டேர்லி என்பவர் தயாரித்த `ரோவர் சேப்டி’ சைக்கிள்தான் அது.

1888-ம் ஆண்டில் பிரிட்டன் சாலைகளில் சைக்கிள்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஓட்டுபவர், தொடர்ந்து மணி அடித்துக்கொண்டே செல்ல வேண்டும்!

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.

வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.
பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.
சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.
சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.

பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

`தூக்கத்தில் நடக்கும் வியாதி’க்குக் காரணம்!

ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம்’ குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை’ அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.    அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.

அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20′-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

தட்டச்சு எந்திரம்

எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப்ரைட்டர்’ என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத்துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன்றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற்காக கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரியப்படுவீங்க!

பார்வையற்றவர்களுக்கு உதவுற மாதிரி தான் முதன்முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக அமெரிக்காவுல 1827-ம் ஆண்டு வில்லியம் பர்ட் என்பவர் ஒரு தட்டச்சு எந்திரத்தை உருவாக்கினார். அது `டைப்போகிராபர்’னு அழைக்கப்பட்டுச்சு. ஆனால், அதனுடைய மாதிரி எதுவும் இப்ப கிடையாது. அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தட்டச்சு எந்திரத்தை வடிவமைக்க முயற்சி செஞ்சாங்க. 1873-ம் ஆண்டு அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான தட்டச்சு எந்திரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஷோவ்ஸ், சாமுவேல் சோல், கார்லோஸ் கிளிட்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்களும் சேர்ந்து அதை தயாரிச்சாங்க. அதன்பின்னர் பல்வேறு வசதிகளுடன் தட்டச்சு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. கணினிகளுக்கு முன்னோடியா இதைச் சொல்றாங்க. தற்போது இதன் பயன்பாடுகள் குறைவா இருந்தாலும், கணினியை எளிதா பயன்படுத்த தட்டச்சு எந்திரம் உதவுது.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

வாழைப்பூ:

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்:

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

உப்பு`சுவை’

மனித குல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதன் நெருப்பை உருவாக்க கற்றுக் கொண்டதை நாகரீக வளர்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாத முக்கியத்துவம் வாய்ந்தது மனிதன் உப்பை பயன்படுத்தத் தொடங்கியது. அதில் இருந்துதான் வேதியியல் என்ற விஞ்ஞானத்துறை தொடக்கம் பெறுகிறது.

***

உப்பு என்ற தமிழச் சொல்லுக்கு `சுவை’ என்று பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தவை. உப்பு தமிழர் வாழ்வியல் சார்ந்தது.’உப்பிட்டவரை உள்ளளவும் நினை’, `உப்புப்போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?’, `உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும்’, `தின்ற உப்புக்கு துரோகம் செய்யலாமா?’ என்பன போன்ற தமிழ் வழக்குமொழிகள் இதனை நன்கு உணர்த்தும்.

***

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை `வெள்ளுப்பு’ என்பார்கள். செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா), உப்பும் (அளம்) கொடுத்த வழக்கத்தால் தான் `சம்பளம்` என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்தில் `சாலரி’ என்ற சொல் `சால்ட்’ என்பதன் அடியொற்றிப் பிறந்ததே! பயனற்ற வேலையை `உப்புப் பெறாத வேலை’ என்று கூறுவார்கள்.

***

பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு. சுவையின் சின்னமாகவும், வளத்தின் ஆதாரமாகவும் உப்பு கருதப்பட்டது. இன்றும் பலரிடத்தில் புது மணமகள் கணவன் வீட்டிற்குள் ழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே ழையும் வழக்கமிருக்கிறது. அரிசி – உப்பு அன்பளிப்பாக வழங்குவோரும் உண்டு.

***

உப்பு உறவின் தொடர்ச்சியை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது. ஒருவர் இறந்த ஒன்பது அல்லது பதினாறாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இப்படி செய்கிறார்கள். தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தரும் உப்புபோல மனிதனும் பயன்பட வேண்டும் என்ற தத்துவமும் புழக்கத்தில் உண்டு.

***

உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். சந்தைக்குரிய முக்கிய உற்பத்திப் பொருளாக உப்பு இருந்துள்ளது. உப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்பவர்கள் `உமணர்’ எனப்பட்டனர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை ஏடுகளில் காணலாம். அவை பேரளம், கோவளம் என்று வழங்கப்பட்டன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

***

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டது. அதனால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும், கல்மரவை எனப்படும் மாக்கல் சட்டியிலும் வைத்து உப்பை பயன்படுத்தினார்கள். இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாகி விட்டன. உப்பு நன்றி உணர்ச்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. `தின்ன உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா’ என்று பாரதி பாடியிருக்கிறான்.

***

காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. உப்பு வரிக்கு எதிரான இப்போராட்டங்கள் உப்பின் முக்கியத்துவத்தையும், உப்பு மக்கள் வாழ்வு தழுவியிருந்தது என்பதையும் குறிக்கும் வரலாற்றுச் சம்பவங்களாகும். `உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா?’ என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத் தகுதியற்றது என முழங்கினர் தேசியவாதிகள். உப்பு விடுதலை உணர்வையும் ஊட்டியிருக்கிறது அல்லவா!

இணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள்.
Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க
Ctrl + U – அடிக்கோடிட
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க
Ctrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க
Ctrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற
Ctrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச் செருக
Ctrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க
Ctrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட
Ctrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட
Ctrl + S – ஆட்டோ சேவ் செய்திட
பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்:
Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க
Alt+2 – உங்களுடைய புரபைல் கிடைக்க
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்)
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட்
Alt+7 – பிரைவசி செட் செய்வது
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம்
Alt+0 – உதவி மையம்
யு-ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Spacebar – வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த
Left Arrow – ரீவைண்ட் செய்திட
Right Arrow – இயக்கிய முன் பக்கம் செல்ல
Up Arrow – ஒலி அளவை அதிகரிக்க
Down Arrow – ஒலி அளவைக் குறைக்க
F key – முழுத் திரையில் காண
Esc key – முழுத்திரையிலிருந்து விலக

விண்டோஸ் 7 டிப்ஸ் – ட்ரிக்ஸ்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது.
டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.
2.விண்டோக்களைக் கையாளுதல்: விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது. செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும். பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.
3. பல மானிட்டர் செயல்பாடு: ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.
4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக: விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும். இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.
5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு: நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும். மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.
6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி: என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது. இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.
7.டாஸ்க் பாரில் போல்டர்கள்: வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது.
அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம். அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

பொன்மொழி WIN மொழி – சிந்திக்க…

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “”என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு.
“”எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.”
அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
ஒரு ஊருக்கு வெளில மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா ஒருத்தன் வந்தான்.
“”நான் பக்கத்து ஊர்லருந்து வர்றேன். இந்த ஊர்ல எதாவது வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன். இந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி? நல்லபடியா பழகுவாங்களா?” என்று கேட்டான்.
அதற்கு ஒரு பெரியவர், “”நீ இருந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி? என்று எதிர் கேள்வி கேட்டார்.
“”ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஒருத்தன் கூட சரியில்ல, எல்லாம் பொறாமை பிடிச்சவங்க. அதான் இங்க வரேன்” என்றான் வந்தவன்.
“”அப்படியா? இந்த ஊர் ஜனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். பெரிய வித்தியாசமில்லை” என்று பதிலளித்தார் பெரியவர். வந்தவன் வேறு வழியாக போய்விட்டான்.
சிறிது நேரம் அதே வழியாக இன்னொருவன் வந்தான். அவனும் அந்த ஊரைப் பற்றி விசாரித்தான். இவனிடமும் அவனுடைய பழைய ஊரைப் பற்றி விசாரித்தார் பெரியவர்.
“”அந்த ஊர் ரொம்ப நல்ல ஊர், ஜனங்கலாம் ரொம்ப நல்ல மாதிரி, இனிமையா பழகுவாங்க. அந்த ஊர்ல வியாபாரம் செஞ்ச மாதிரி இங்கேயும் வியாபாரம் செய்யலாம்னு நினைக்கிறேன்”என்று சொன்னான் வந்தவன்.
உடனே பெரியவர், “”இந்த ஊரும் அப்படித்தான். ஜனங்கலாம் நல்லவங்க. உனக்கேத்த ஊரு”என்று சொல்லி ஊருக்குள் அனுப்பி வைத்தார்.
அப்போது அருகிலிருந்த இன்னொரு பெரியவர், “”என்ன அவனுக்கு அப்படிச் சொன்ன, இவனுக்குச் இப்படிச் சொல்ற?” என்று கேள்வி எழுப்பினார்.
“”ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே ஊரைப் பத்திதான் கேட்டேன். முதல்ல வந்தவன் எல்லாத்தையும் எதிர்மறையா பாக்கிறவன். அவனால எந்த ஊர்லயும் குப்பை கொட்ட முடியாது. இரண்டாவது வந்தவன் எல்லாத்தையும் நல்லவிதமாக பாக்கிறவன், அதனால அவனால எங்கேயும் சாதிக்க முடியும்” என்றார் பெரியவர்.
குரு சொன்ன கதையைக் கேட்டதும் இளைஞனுக்கு தன்னுடைய குறை புரிந்தது.
அன்று குரு அவனுக்குச் சொன்ன Win மொழி: நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ அதேபோல்தான் மற்றவர்கள் உன்னைப் பார்ப்பார்கள்.

தேனீயாய் வந்த மகரிஷி ! – திருக்கொட்டாரம்

பசுமையான மரங்களும் பூஞ்சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்த அற்புதமான தலம், திருக்கொட்டாரம், குரவ மலரும், கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இத்தலம் காவிரித் தென்கரையில் அமைந்துள்ளது.
கி.பி.1253ஆம் ஆண்டு குலோத்துங்கச் சோழனால் இங்கு சிவாலயம் கட்டப்பெற்றுள்ளது. இம்மன்னனை கல்வெட்டு ஒன்று சோழ மண்டலத்து மண்ணிநாட்டு முழையூர் உடையான் அரையான் மதுராந்தகனான் குலோத்துங்கச் சோழன் எனக் குறிப்பிடுகின்றது.
“”இரங்காய் உனது இன்னருளே…” என சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலப்பெருமானை துர்வாச முனிவரது சாபத்தினால் நிலைகுலைந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தனது கொம்பினால் மேகத்தினை இடித்து, மழையை ஆறுபோல் உருவாக்கி அந்நதி தீர்த்தத்தால் இத்தல ஈசனை வழிபட்டுள்ளது. கோட்டினால் (கொம்பு) ஆறு ஏற்படுத்தி இங்கு பரமனை ஐராவதம் பூஜித்ததால் இத்தலம் கொட்டாரம் என அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவரும் சுபமகரிஷியும் இங்குள்ள சிவனாரை பூசித்துள்ளனர். சுபர் ஒரு நாள் இறைவனை தரிசிக்க தாமதமாக வந்ததனால் கோயில் நடைக்கதவு சாற்றப்பட்டுவிட்டது. உடன் சுபர், தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று ஈசனை வழிபட்டார். இதன் பொருட்டு ஆண்டுக்கொருமுறை இங்கு இறைவனுக்கு தேன் அபிஷேகம் சிறப்புறச் செய்யப்படுகின்றது. இப்போதும் மூலவர் சன்னதி முன் தேன் கூடு இருப்பது கண்டு மெய்சிலிர்க்கலாம். இன்றும் சுப மகரிஷி தேனீயாய் இங்கு வந்து சிவபெருமானை வழிபடுவதாக ஐதிகம்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களை இத்தலத்தின் மீது பாடியுள்ளார். சுந்தரரும் தனது ஊர்த் தொகையில் இத்தலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
தேவர்களும், சித்தர்களும் இங்கு வந்து வழிபட்டதாக கூறும் சம்பந்தர், இப்பரமனை பாடித் தொழும் அடியவர்களின் வருத்தமும், வீண்பழியும் நீங்குவதோடு ; சிறந்த ஞானமும், புகழும் அடைவார்கள் என்றும் பாடியுள்ளார்.
ரம்மியமானதொரு சூழலில் அமைந்த திருக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நாற்புறமும் மதில் சூழ அழகுற விளங்குகிறது.
உள்ளே கொடிமரமும், துவார கணபதி சிலையும் உள்ளன. கொடி மரத்தின் வடபுறம் அகத்திய லிங்கம் கொண்ட தனிச் சன்னதி மேற்குமுகம் கொண்டு திகழ்கிறது. அதன் பின்னே, கிழக்குத் திருமாலைப்பத்தியில் சூரியன், சந்திரன், பைரவர் போன்ற சிலாரூபங்களும்; நவகோள் நாயகர் சன்னதியும் உள்ளன.
கொடிமரத்தின் நேரே மண்டப வாயிலின் மேலே சுதைவடிவ கயிலை தரிசனம் கண்குளிர வைக்கிறது. வாயிலின் இடப்புறம் பாலகணபதி வீற்றுள்ளார். வலப்புறம் மதில் மேல் பழமையான கண்டாமணியொன்று காணப்படுகிறது. முதலில் இருபது தூண்களை உடைய முன் மண்டபம் வவ்வால் நெத்தியமைப்புடைய கூரையைக் கொண்டு திகழ்கிறது. அதனுள் வலப்புறம் அம்பாள் சன்னதி அர்த்தமண்டபமும், மூலஸ்தானமும் கொண்டு விளங்குகிறது.
அம்பாள் அதியற்புதமாக நின்ற கோலத்தில் நம்மை ஆட்கொள்கின்றாள். வண்டார்குழலியென்று அழைக்கப்படும் இவ்வம்மையை சம்பந்தர் கோலவார் குழலாள் என்று வர்ணிக்கின்றார். எழிலுடன் திகழும் அம்பிகையை வணங்கியபின், முதல் வாயிலுள் நுழைந்து மகாமண்டபத்தை அடைகிறோம். அங்கே உற்சவர் அறை உள்ளது. நடுவாக நடராஜப்பெருமானும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்க, இவருக்கு எதிரே ஓர் வாயில் உள்ளது. இங்கே செப்புத் திருமேனியாக உள்ள முருகன் வில்லேந்தி அருள்புரிகின்றார். உடன் சோமாஸ்கந்தரும் தரிசனமளிக்கின்றார்.
அடுத்து, ஸ்தபன மண்டபம், அதன் இருபுறமும் கணபதி மற்றும் நாகராஜர் வீற்றுள்ளனர். வடக்கேயும், தெற்கேயும் இரு வாயில்கள் காணப்படுகின்றன. பின்னர் அர்த்த மண்டபம். அதன் வடமேற்கு மூலையில் போக சக்தி, உற்சவ விக்ரமாய் காட்சியளிக்கின்றாள்.
கருவறை இரண்டு அடுக்குகளைக் கொண்டு அழகிய விமானத்தோடு மனதை ஈர்க்கின்றது.
கருவறையுள் சுயம்புநாதனாய் சிறிய லிங்கமாக நமக்கு அருட்பெருந் தரிசனம் அகமகிழ்ந்து வணங்கி, ஆனந்தம் அடைகிறோம்.
ஆலய வலம் வருகையில் மடைப்பள்ளியை ஒட்டி தல விருட்சமான பாரிஜாத மரம் மணம் வீசுகிறது.
தென்மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி தனியே சன்னதி கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார்.
மேற்குத் திருமாலைப் பத்தியில் கிழக்குப் பார்த்தவாறு சுந்தரர்- பரவை நாச்சியார், கைலாசநாதர், நால்வர், சுப மகரிஷி, நாகராஜர், ஓர் சிவலிங்கம் என வரிசையாக தரிசனமளிக்கின்றனர். மேற்கில் கந்தன் சன்னதியும், வடமேற்கில் கஜலெட்சுமி சன்னதியும் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் சண்டேசர் சன்னதியும் அதனருகே கிணறும் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணிவரையும்; மா லை 5 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்தலத்தின் தீர்த்தமாக வாஞ்சியாறும், சூரிய தீர்த்தமும் உள்ளன. ஒரு காலத்தில் கோட்டாறு என்று வழங்கப்பட்ட நதியே இன்று வாஞ்சியாறு என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.
இங்கு சுவாமிக்கும், அம்பிகைக்கும் தேனால் அபிஷேகம் செய்து பாரிஜாத மலர்களால் அர்ச்சித்து வழிபடுபவர்களின் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறுகிறதாம்!
காரைக்கால் – மயிலாடுதுறை பேருந்து சாலையில் உள்ள வேலங்குடியிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருக்கொட்டாரம். அம்பகரத்தூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை ஆட்டோ மூலம் சென்றடையலாம். அனைத்து வசதிகளும் காரைக்கால் மற்றும் திருநள்ளாறில் உள்ளது.