மத்திய அரசிலிருந்து விலகல்! – திமுக அதிரடி

மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி – திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர்.

இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்லை. 63 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறிச் சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் வரவில்லை.

எனவே திமுக தனது உயர்நிலை செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கூடி கூட்டணி நெருக்கடி குறித்து விவாதித்தனர்.

இறுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சி விரும்பாததால், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இனி பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜினாமா..

இந்த முடிவைத் தொடர்ந்து, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகுகிறார்கள்.

திமுகவின் இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

%d bloggers like this: