Daily Archives: மார்ச் 6th, 2011

மதுரை பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு அங்கீகாரம்: கெஜட்டில் வெளியீடு

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும், இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசுதேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கவும் முடிவு செய்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல், இவற்றை ஜல்லிகளில் கலந்து “பிளாஸ்டிக் கோட்டிங்’ கொடுத்து அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்கவும் ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் தார்ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் தார் ரோடு, கோவில்பட்டியில் 2002ல் போடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடால் ஏற்படும் பயன்கள், தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2002-03ல் தமிழக அரசு புத்தகமாக வெளியிட்டது. மத்திய அரசு 2002ல் பிளாஸ்டிக் ரோட்டிற்கு காப்புரிமை வழங்கியது. கிராம வளர்ச்சி துறைமூலம் தமிழகத்தில் 2000 கி.மீ., அதிகமான பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை, கேரளா, சிம்லாவிலும் வாசுதேவன் மேற்பார்வையில் பிளாஸ்டிக் ரோடுகள் அமைக்கப்பட்டன.

காப்புரிமை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கேட்டது. ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது 2006ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு மத்திய அரசு 2006ல் காப்புரிமை வழங்கியது. 2002 முதல் 2008வரை இந்தியாவில் போடப்பட்ட பிளாஸ்டிக் ரோடுகளின் தன்மை, பயன்கள், தரம், உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுக்கு இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கியதுடன், இவரது அறிக்கையை ஆய்வு செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் ரோடு அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும் பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள், உழைப்புகள் குறித்து (கைடு லைன்) மற்றொரு புத்தகம் வெளியிட்டது. இந்த புத்தகத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்பு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு, அந்த புத்தகத்தில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் தரமானது, நீடித்து உழைக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளது.

அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமங்களில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்து கொடுத்து, அதற்கான கைடு லைன் வெளியிட்டது. அதில், பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்க விரும்பும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள், தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பினால், செலவில் பாதியை மானியமாக வழங்க இருப்பதாகவும், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பேராசிரியர் வாசுதேவனை அணுகலாம் என கைடு குறிப்பிடப்பட்டிருந்து. சிம்லாவில் பிளாஸ்டிக் ரோடு: அதன்பின் சிம்லாவில் வாசுதேவன் மேற்பார்வையில் 150 கீ.மீ,. ரோடு அமைக்கப்பட்டது. “பிளாஸ்டிக் மறு சுழற்சி கமிட்டியில் டேட்டா புத்தகம் தயாரிக்கும் உறுப்பினராக வாசுதேவனை, கேரள அரசு சேர்த்தது.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பிப்.,4ல் வெளியிட்டுள்ள அரசு கெஜட்டில், பிளாஸ்டிக் ரோடு போட தடை இல்லை என்றும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலைகள் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது: இது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண ரோட்டை காட்டிலும், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பாதிப்படைவதில்லை. தேய்மானம் மிக குறைவு. பராமரிப்பு செலவுகள் கிடையாது. தார் பயன்பாடு 10 சதவீதம் குறைவு. ஒரு கி.மீ.,க்கு 50 ஆயிரம்வரை செலவு மிச்சம். கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் மாசு தவிர்க்கப்படும். தட்பவெட்ப நிலை சீராகும். பிளாஸ்டிக்கை பிரித்துவிடுவதால், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது எளிது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரோடு அமைத்தால், பிளாஸ்டிக்கால் இவ்வுலகிற்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை நீக்கலாம்.பிளாஸ்டிக் ரோடு அமைக்க விரும்புவோர் 0452 248 2240 அல்லது 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்.

என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ்?

மத்திய அரசிலிருந்து தனது அமைச்சர்களை விலக்கிக் கொள்வது என்றும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனை ஆதரவு வழங்குவது என்றும் தி.மு.க. உயர்மட்டக் குழு முடிவெடுத்திருப்பது யாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறதோ இல்லையோ, பெருவாரியான தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலையில் இடியாக இறங்கி இருக்கிறது. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறி மாறி கூட்டணி அமைத்துத் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஒரு டஜனுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.  தி.மு.க.வின் உயர்மட்டக் குழு இப்படி ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இரண்டு மூன்று நாள்களாகவே இருந்து வந்தது. முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி “குட்டக் குட்டக் குனிய வேண்டிய அவசியமில்லை’ என்று தி.மு.க.வுக்கு வேண்டுகோள் விடுக்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் உடனடியாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். இந்த அறிக்கைதான் தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையை மிகவும் எரிச்சலூட்டி மேலும் அழுத்தமாகத் தி.மு.க. தலைமையிடம் தனது கோரிக்கைகளை வலியுறுத்த வைத்தது என்றும் கூறுகிறார்கள்.  தங்களுடன் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தாமலே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கியதும், குலாம் நபி ஆசாத்திடம் அடுத்த நாள் பேச்சுவார்த்தை தொடரும் என்று சொல்லிவிட்டுக் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 இடங்களைத் தி.மு.க. தலைமை ஒதுக்கியதும் காங்கிரஸைச் சீண்டிப் பார்க்கத் தி.மு.க. மேற்கொண்ட உத்தி என்கிறது காங்கிரஸ் தரப்பு. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை விடுத்த காங்கிரஸின் நியாயமற்ற கோரிக்கை பற்றிய அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் அவர்கள்.  “”நாங்கள் 90 தொகுதிகள் கேட்டோம். குறைந்தது ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்று 78 இடங்களாவது தரப்பட வேண்டும் என்று கேட்டோம். 48லிருந்து 60 இடங்கள் வரை நாங்கள் உயர்த்தினோம் என்கிறார் முதல்வர் கருணாநிதி. நாங்கள் 90லிருந்து 63 வரை குறைத்து வந்திருக்கிறோம் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்? கடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத தி.மு.க. 5 ஆண்டு காலம் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் ஒரு “மைனாரிட்டி’ அரசாகத் தொடர முடிந்தது என்றால் அதற்கு நாங்கள் பேசாமல் இருந்ததுதான் காரணம். மத்திய அமைச்சரவையில் பதவி சுகத்தை அனுபவித்தது மட்டுமின்றி, “ஸ்பெக்ட்ரம்’ போன்ற “மெகா’ ஊழல்களால் எங்களையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருப்பதை மறுக்கவோ மறக்கவோ முடியுமா? நாங்கள் இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியும் என்று தி.மு.க.வுக்கு இருக்கும் அதே துணிவும், தைரியமும் எங்களுக்கும் இருக்கிறது” என்கிறது காங்கிரஸ் தரப்பு.  காங்கிரஸ் தேசிய அளவில் பல பிரச்னைகளை எதிர்நோக்குகிறது. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராகப் பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு “ஸ்பெக்ட்ரம்’ பழியிலிருந்து தப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால், எதிர்க்கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக எடுக்கப் போகும் மிகப்பெரிய ஆயுதம் ஸ்பெக்ட்ரமாகத்தான் இருக்கும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்தியப் புலனாய்வுத் துறை செயல்படுவதால், தி.மு.க. மீதும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் காங்கிரஸால் தடுக்க முடியாத நிலைமை. தி.மு.க. மீதான நடவடிக்கைகள், மத்திய ஆட்சியில் அந்தக் கட்சி அங்கம் வகிப்பதால், காங்கிரஸுக்கு மேலும் மேலும் கெட்ட பெயரையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டால், ஒருவேளை எதிர்பாராத விதமாகக் தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு அதிர்ச்சிகளை காங்கிரஸ் ஏற்படுத்தக்கூடும் என்பதும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு. முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுமார் 6 மாதம் முன்பு ஒரு வார இதழில் வெளிவந்த தனது பேட்டியைப் படிக்கச் சொல்லித் தந்தார்.  அந்தப் பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டிருந்தது இதுதான்- “”தமிழகத்தில் ஏறத்தாழ 15 லட்சம் பேர் இளைஞர்கள் காங்கிரஸின் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களில் 5 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள் என்றே சொன்னாலும், மீதமுள்ள 10 லட்சம் பேர் நிஜமான உறுப்பினர்கள்தானே? பூத் வாரியாகத் தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள். அதனால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் தோரணம் கட்டக்கூட ஆளிருக்காது, தொண்டர்களே கிடையாது, பூத் ஏஜெண்டுகள் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். அதிகமான இடங்களில் நாங்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது காங்கிரஸுகத்தான் இருக்கும்.”  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த தைரியம்தான் காங்கிரஸ் தலைமையையும், அதிக இடங்களைக் கேட்கத் தூண்டியிருக்கும் என்று கருத வாய்ப்பிருக்கிறது. “”கடந்த 40 ஆண்டுகளாக, பெருவாரியான தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால் காங்கிரஸ் தனது அமைப்புகளை இழந்து விட்டிருக்கிறது. வெற்றி பெற்ற தொகுதிகளை, மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்று வந்ததால், பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்புகளே இல்லாமல் போய்விட்டது. இப்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகுதான் காங்கிரஸ் புத்துயிர் பெற்றிருக்கிறது” என்று விளக்கினார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர். தனித்துப் போட்டியிடுவதில் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்கிறார்கள், இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலர். 2001-ல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதுபோல, காங்கிரஸும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் போனால், நாமும் தமிழகத்தில் செல்லாக் காசாகி விடுவோம் என்கிறார்கள். திமுக இப்போது உள்ள காங்கிரஸ் தொகுதிகளை உள்ளடக்கிய 60 தொகுதிகள் தருவதே பெரிது. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தி.மு.க.விடம் சமரசமாகப் பேசி 50 இடங்களுக்கே கூட ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறார்கள் இந்த தி.மு.க. கூட்டணி ஆதரவாளர்கள். இளைஞர் காங்கிரஸாரின் கருத்து இதற்கு நேரெதிராக இருக்கிறது.  “”தமிழகத்தில் காங்கிரஸுக்குக் குறைந்தது 12% வாக்கு வங்கி உண்டு என்பதும்,234 தொகுதிகளிலும் அது பரவலாக இருக்கிறது என்பதும் மாற்றுக் கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. அதேபோல, கடந்த தேர்தல்களில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த 10% வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்று தேவை என்று கருதியவர்களின் வாக்குகள் என்பதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் கடந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற 10% வாக்குகளிலிருந்து 4% வாக்குகள் காங்கிரஸுக்கு மாறும். காங்கிரஸ் 15% முதல் 18% வாக்குகள் பெறக்கூடும். சுமார் 20 முதல் 30 இடங்களில் வெற்றியும் பெறக்கூடும்” என்பது இளைஞர் காங்கிரஸார் மட்டுமல்ல, காங்கிரஸ் மேலிடமும் எதிர்பார்க்கும் முடிவு. சுமார் 15% வாக்கு வங்கி காங்கிரஸுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி அமைப்புகளை உறுதிப்படுத்தவும், தி.மு.க., அ.தி.மு.க. ஆதரவுடன் தொடர்ந்து பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வரும் பழம்பெருச்சாளிகளை ஓரங்கட்டவும், காங்கிரஸ் தனித்து நிற்பது உதவும் என்று ஒரு புதிய விளக்கத்தை அளிக்கிறார் தில்லியிலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.  இன்னொரு திடுக்கிடும் தகவல் அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் கூறப்படுகிறது. கடலோர மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் என்னென்ன என்று முதலில் கேட்டதும் ஃபேக்ஸ் மூலம் தி.மு.க. தலைமை தொகுதிகளின் பட்டியலைத் தெரிவித்ததாகவும், அதில் 50 தொகுதிகள் நிச்சயமாகத் தோல்வியை அடையும் தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது. நகர்ப்புறத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு அளித்துவிட்டு கிராமப்புறத் தொகுதிகளை தி.மு.க. தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தது என்கிறார்கள். அடுத்த வாரத்தில், மத்திய புலனாய்வுத் துறை மேலும் சில அதிர்ச்சி சோதனைகளை மேற்கொள்ள இருக்கும் நிலையில், காங்கிரஸ் பழிவாங்க முற்பட்டிருக்கிறது என்று கூறி தி.மு.க. அனுதாபம் தேடக்கூடும் என்பதால் கூட்டணியை முறித்துக் கொள்ளக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை “தளபதி’ என்று குறிப்பிடும் தி.மு.க. விசுவாசிகளான காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.  என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ் மேலிடம்!

நன்றி-தினமணி

வேர்டில் டேபிள் பார்டர் அமைக்க

அழகாய் அமைத்த டேபிளுக்கு நாமே ஒரு பார்டர் அமைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? ஏற்கனவே இருக்கிற பார்டரை மாற்றி அமைக்கலாம் என்று ஆசைப்படுகிறீர்களா? கீழ்க்கண்டவாறு செயல்படலாமே!
1. View மெனு சென்று Toolbars என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 2.இதில் கிடைக்கும் சிறிய நீண்ட கட்டத்தில் Line Style என்று இருக்கும் பீல்டில் உங்களுக்குப் பிடித்த கோட்டினைத் தேர்ந்தெடுக்கவும். 3.கோடு வண்ணத்தில் வேண்டும் என்றால் பார்டர் கலர் பட்டன் அழுத்தி வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள். இனி டிரா டேபிள் பட்டனை அழுத்துங்கள். அங்கே இருக்கும் பென்சில் படத்தின் மீதாகக் கிளிக் செய்தால் கர்சர் பென்சிலாக மாறும். எளிதாக இப்போது கட்டங்களை, வரிசை வரிசையாக உருவாக்கலாம். வண்ணம் பார்டர் லைன் மாற்ற வேண்டுமென்றால் மேலே சொன்ன 2 மற்றும் 3 செயல்பாடுகளை மேற்கொள்ளவும். அவ்வளவுதான் நீங்கள் எண்ணிய படியான வண்ணக் கோடுகளில் டேபிள் ரெடி. கொஞ்சம் பொறுங்கள். இந்த கோட்டை இங்கு எடுத்து விடலாமே; இங்கு நன்றாக இல்லையே என மனதிற்குள் சின்ன ஆசை பளிச்சிடுகிறதா? கவலையே வேண்டாம். மீண்டும் Tables and Borders மெனு சென்று லைனைத் தேர்ந்தெடுத்த கட்டத்தைக் கவனியுங்கள். அதில் எரேசர் என்னும் அழி ரப்பர் படம் இருக்கும். இதனைக் கிளிக் செய்து பின் அதனை நீக்க விரும்பும் கோடு மேல் மெதுவாக நகர்த்துங்கள். கோடு மறைந்துவிடும். திருத்தங்களுடன் டேபிள் ரெடியா! இனி நீங்கள் அமைத்திட விரும்பும் டெக்ஸ்ட்டை இதில் அமைக்கலாம்.

புதுவித டிக் ஷனரி

பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப் படும். அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும்.
இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும். பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன.
இத்துடன் இந்த டிக் ஷனரி நின்று விடவில்லை. உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன. இந்த டிக் ஷனரியைப் பெற http://www.dicts.info என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.