Daily Archives: மார்ச் 7th, 2011

ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்!

ஒரு மரத்தை, “பரிசோதனை சாலை’ என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்கத்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத்தான், “பரிசோதனை சாலை’ என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தில், ஆராய்ச்சியின் மூலம், 315 வகையான மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கியவர் கலிமுல்லா கான்.
மலிகாபாத் என அழைக் கப்படும் இந்த பகுதிக்கு, இயற்கையின் கருணை அதிகம். மாம்பழ சீசனில் இங்கிருந்து தினமும், 150 லாரி லோடு மாம்பழம், விற்பனைக்குச் செல்கிறது. ஆனால், கலிமுல்லா கானின், 14 ஏக்கர் மாம் பழங்களும், 15 நாட் களில் விற்றுத் தீர்ந்து விடும்.
இந்த தொழி லில், 17 வயது பைய னாக, 1957ல் நுழைந்தவர் கலிமுல்லாகான். ஏழாம் வகுப்பில் தோல்வி அடைந் ததும், படிப்புக்கு, “குட்- பை’ சொல்லி விட்டு, 150 வருட குடும்பத் தொழி லான மாம்பழ சாகுபடியை ஏற்றார்.
அப்போதே தன்னுடைய மரத்தில், ஏழு வகையான மாம்பழங்களை உருவாக்கி, அசத்தினார். ஆனால், இயற்கை சதி செய்தது. கடும் மழையும், வெள்ளமும் ஏற் பட்டு, அந்த பகுதியே நாசமானது. இதனால், கலங்கிப் போய் ஓடி விடாமல், புதிதாக கடன் வாங்கி, வெள்ளம் பாதிக்காத இடத்தில் புதியதாக நிலம் வாங்கி, மாமரங்களை நட்டார். அங்கு தான், இன்று வரை அவருடைய தோப்பு இருக்கிறது.
மாம்பழம் மூலம் பணம் சேர்ந்ததும், 1987ல் புது முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தன்னுடைய மாமரம் ஒன்றில், 50க்கும் அதிகமான வகைகளை உருவாக்கினார்.
நான்காவது வருடம், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, அதன் எண்ணிக்கை, ஒரே மரத்தில், 250 என உயர்ந்தது; இந்தியாவே வியந்தது.
அதன் மூலம் வருடா வருடம், அந்த மரத்தில் பழங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இதில், என்ன சிறப்பு என்றால், ஒரே கிளையில் மூன்று வகையான மாம் பழங்கள் தொங்கி, பார்ப்போரை அசத்தும். அத்தனை வகை மாம் பழங்களையும், தனித்தனியாக கண்டுபிடித்து, அதன் பெயரை சரியாக கூறி விடுவது இவரின் தனிச்சிறப்பு.
ரசாயன மருந்துகள், பூச்சி மருந்துகள் கலப்பு உரங்களை, தன் மரங்களில் பயன்படுத்துவதில்லை. மாறாக வேப்ப எண்ணையை பயன்படுத்துகிறார். “ரசாயன உரங்களை வைப்பது, சொந்த குழந்தையை கொல் வதற்கு சமம்; அதை, ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்.
“துபாயும், அபுதாபி யும் என்னை, தங்கள் நாட்டிற்கு வந்து, மாம் பழம் பயிரிட இருகரம் கூப்பி அழைக்கின்றன. எனக்கு பணம் பெரிதல்ல; அதனால், அங்கெல்லாம் செல்ல மாட்டேன். அதே சமயம், ஒரு வருத்தம் உள்ளது. எனக்கு தெரிந்தவற்றை என்னுடைய வாரிசுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஆனாலும், எனக்கு பிறகு, என்னுடைய ஆராய்ச்சியும், புதைக்கப்பட்டு விடுமோ என பயமாக இருக்கிறது…’ என்கிறார் கலிமுல்லா கான்.
***

* மாம்பழத்திற்கான இவருடைய தனிப்பட்ட உழைப்பையும், சேவையையும் பாராட்டி, 2008ல் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
* சில ஆண்டுகளுக்கு முன், அபூர்வமான சுவை கொண்ட ஒரு மாம்பழத்தை உருவாக்கி, அதற்கு சச்சின் (டெண்டுல்கர்) என பெயரிட்டார்.
*இவருடைய தோப்பில், மூன்று ஆயிரம் கொய்யா மரங்கள் உள்ளன. அவற்றிலும், புதுமை களை செய்து, வித்தியாசமான ரகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில், தற்போது, படு சுவையான ஒரு கொய்யாவை உருவாக்கியுள்ளார். இதற்கு, ஆப்பிள் போன்ற கவர்ச்சி உள்ள தால், “ஐஸ்வர்யா ராய்’ என பெயரிட்டுள்ளார்.
* இந்தியாவின் பிரபல நகரங்களில் மாம்பழ கண்காட்சி நடக்கும் போது, இவருக்கு சிறப்பு அழைப்பு வந்துவிடும்.
* இந்த, 315 வகையான வித்தியாசமான மாம்பழங்களை ஒரே மரத்தில், வருடத்தில், 15 நாட்கள் மட்டுமே காண முடியும். மற்றொரு மரத்தில், 150க்கும் அதிகமான வகை மாம்பழங் களை உருவாக்கியுள்ளார்.
இவற்றில் அல்போன்சா, லங்ராஸ், ஹிம்சாகர், பங்கனபள்ளி, நீலம், மல்கோவா என அனைத்து வகைகளும் அடக்கம். ***

குதிரைக்கு அழகுப்போட்டி

நாய்களுக்கு அழகுப்போட்டி நடத்தப்படுவதுபோல் குதிரைகளுக்கும் அழகுப்போட்டி நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது துருக்கி அரசு.

குதிரைகளுக்கு புகழ்பெற்ற நாடு துருக்கி. மாவீரன் அலெக்சாண்டர் பயன்படுத்தியது இந்நாட்டு மரபில் தோன்றிய குதிரை தான். துருக்கி நாட்டு தேசியக் கொடியிலும் குதிரை இடம் பெற்றிருக்கிறது. இங்குள்ள அக்கால் தேகே இன குதிரைகள் கம்பீரமானவை.

“குதிரைகளின் சிறப்பிடமாக விளங்கும் நம்நாட்டில் அக்கல் தேகே இனக்குதிரையின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதத்தில் இனி ஆண்டுதோறும் குதிரைகளுக்கான அழகுப்போட்டி நடத்தப்படும்” என்று அந்நாட்டு பிரதமர் குர்பங்கலி உத்தரவிட்டுள்ளார்.

கம்பீரமான மினுமினுப்பான தோற்றம், நீளமான கழுத்து, பலமிக்க கால்கள், முடி நிறைந்த வால் என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது. சிறந்த குதிரைக்கு `துருக்கியின் சிறகு’, `புனிதமான குதிரை’ போன்ற பட்டங்களும், பரிசுகளும் வழங்கப்படும்.

குதிரைகளுக்கான சிறப்பு அழகு நிலையங்கள், மருத்துவமனை போன்றவை அங்கு அரசு சார்பில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

***

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க…

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள்  புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க…

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய….

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

லகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.

சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் நோக்கில் இருப்பதாக சர்வதேச அறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். உளவியலார்கள் இணைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளனர். அவற்றை தெரிந்து கொண்டு அதன்படி நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவற்றை இங்கே பார்ப்போம்,

சிரிப்பு

சிரிப்பு… எதிரே இருக்கும் யாரையும் எளிதில் கவர்ந்து விடும். பன்சால் என்ற இளம்பெண்ணின் மகிழ்ச்சி ததும்பிய நாட்களில் இவளுடைய முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னர் இவளுடைய முகத்தில் கவலை மட்டுமே குடியிருந்தது. இவளுடைய கணவர் ஆர்மியில் பணியாற்றுபவர் என்பதால், முகத்தில் சிரிப்பு என்பதே இல்லை. இதனால் இவளுக்கும் சிரிப்பு மிஸ் ஆனது. இதன் தாக்கம் இவளுடைய உடம்பும் மெலிந்து ஆரோக்கியம் கெட்டுப் போனது. இதை அறிந்த அவளுடைய தோழிகள் அவளுக்கு நன்றாக சிரிக்குமாறு அறிவுரை கூறினர். சிரிப்பு என்பது நம்முடைய உடம்பு, மனதில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வலி நிவாரணி. இதுவொரு முகத் தசைகளை அழகாக்கும் அழகியல் காரணி என்பதை பன்சாலுக்கு புரியவைத்தனர். சிரிப்பதால் இளமை மெருகேறும். தற்போது பன்சால் நன்றாக சிரிக்கிறாள்.

சிரிப்பு என்பது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மன்னிப்பு

சிலரது இயல்பே அவர்கள் எத்தனை உயர்நிலையில் இருந்தாலும் அவர்களை எளிதில் அணுகும் விதத்தில் இருக்கும். அதேநேரம் இந்த மனநிலை எல்லாருக்கும் வராது. மேலும் இதே மனநிலையில் தொடர்ந்து வாழ்வதும் மிகவும் கஷ்டமானது. அப்படியொரு மனநிலை உங்களுக்கும் வரும்போது கண்டிப்பாக இந்த வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றமுடியும். தீயவற்றை மறப்பதும், அதனால் ஏற்பட்ட தவறுகளை மன்னிப்பதும் நம் வாழ்க்கையின் சந்தோஷத்திற்கான அடிப்படை காரணிகள்.

உள்வாங்குதல்

நமக்கு எதில் விருப்பம் அதிகம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விஷயங்களை தேடிச் செல்வது, அதற்கான கருத்துக்களை உள்வாங்கி காதில் போட்டுக் கொள்வது, அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவது என நம்மை நாம் அறிந்து கொண்டால் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.

நாம் அடிக்கடி கேட்கும் மனதுக்கு பிடித்த ஒலியின் மூலம் நம்முடைய உடலும், மனதும் உற்சாகமாகும் என்பதை ஒப்புக் கொள்கிறார் பிரபல சைக்யாட்ரிஸ்ட். ஹாரன் சப்தம் எரிச்சலை உண்டு பண்ணும். மென்மையான ஒலிகள் நம்மை தாலாட்டும்.

சுவாசத்தின் வாசம்!

நம்முடைய சுவாசம் மிகச் சரியாக இருக்கும்பட்சத்தில் நம்முடைய உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அடிப்படையில் உருவானதுதான் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி.

ஒவ்வொரு மனிதனும் சுவாசத்தை மிகச் சரியாக செய்யாதபோது, செயல்பாடுகளில் சிறந்த முறையில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப்பயிற்சியை மிகச் சரியாக செய்ததால்தான் யோகிகள் தாங்கள் நினைத்த இலக்கை அடைந் தனர். தியானமும் இதன் அடிப்படையில் உருவானதே. ஆனால் இதில் மூச்சுப் பயிற்சியை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த பலன்களை பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்ததாகவும், அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையில் பல மாற்றங்களை சாதிக்க முடிந்ததாகவும் கூறுகிறார் பிரபல மருத்துவர். உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், சீரான மூச்சு விடுதல் மூலம் அதை குணப்படுத்த முடியும். மூச்சு விடுதலை நாம் முறையாக செய்யும்போது மனதை அமைதியாக்கி, நமது குறிக்கோளை கண்டிப்பாக அடைய முடியும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதையே பத்துமுறையாக்கும்போது கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை பெறமுடியும். புத்துணர்ச்சி, அதிக எனர்ஜி, சூழலை எளிதாக கையாளும் திறன் ஆகிய மூன்றும் கிடைக்கும். இதைத் தான் தியானம் மூலம் நாம் பெறுகிறோம்.

தினமும் எட்டு நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் போதும், பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டுப் பாருங்கள்… புது அனுபவத்தை உணர்வீர்கள்!

கனிவு… அன்பு!

மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், நமது ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். மற்றவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமான அன்பை செலுத்தும்போது நமது உடலில் உள்ள ஹார்மோன் நமக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அன்பை வெளிப்படுத்தும்போது ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரிக்கிறது.

ஒருவர் மீது அன்பு வைத்தால் போதும், தொடர்ந்து நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும். குறிப்பாக தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அன்பை செலுத்தும்போது அதற்கேற்ப குடும்பத்தில் இல்லறம் இனிக்கும் என்று கூறுகிறார் பிரபல செக்ஸ் மருத்துவர்.

அன்புக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அன்பை செலுத்தும்போது, அந்த பிராணியும் உங்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். இதனால் நம்முடைய மனது அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகும்.

***

`ரப்பரின்’ கதை!

`ரப்பர்’ இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் முக்கியத்துவம் புரியும்! `ரப்பர்’, பல்வேறு தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்ந்தது, அதன் தன்மையைப் போலவே `நீ…ளமானது’. 1800-களின் தொடக்கத்தில் நி இங்கிலாந்தில் வாழ்ந்தவர் சார்லஸ் குட் இயர். மரத்திலிருந்து கிடைக்கும் `ரப்பர்’ என்ற பொருளைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்தார் அவர். நன்கு இழுக்கக்கூடியதாகவும், மீண்டும் பழைய நிலையை அடையக்கூடியதாகவும் ரப்பர் இருப்பது சார்லஸ் குட்இயருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ரப்பரால் `வாட்டர் புரூப்’ செய்யப்பட்ட புதுவகை பூட்ஸ்களையும், மழை கோட்களையும் அந்தக் காலத்தில் பலரும் வாங்கினார்கள். ஆனால் அந்தப் பொருட்கள் எல்லாம் கோடை காலத்தில் ஒட்டக் கூடியதாகவும், மழைக்காலத்தில் விரிசல் விடக்கூடியதாகவும் இருந்தன. எனவே ஆரம்பத்தில் அவற்றில் ஆர்வம் செலுத்தியவர்களும்கூட பின்னர் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

சார்லஸ் குட்இயருக்கு மட்டும் ரப்பர் மீதான ஆர்வம் குறையவே இல்லை. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ரப்பரில் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்த்து, அதை எப்போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க அவர் உழைத்தார். ரப்பரை மென்மையாக்க அதனுடன் டர்பன்டைன் கலக்கப்படுவதை குட்இயர் அறிந்தார். அதனால் வெவ்வெறு மென்மையாக்கும் பொருள்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தார்.    புதுவித ரப்பர் தயாரானவுடன் சுருட்டி வைத்துவிட்டுக் காத்திருப்பார். குளிர் காலம் வந்தவுடன் விரிசல் விழுகிறதா என்று சோதிப்பார். தோல்வி மேல் தோல்வி. அதனால் குட்இயர், பணத்தையெல்லாம் இழந்து ஏழையாகிப் போனார்.

குட்இயர் ஒருநாள் ரப்பரில் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். காத்திருந்தார். வெற்றி கிடைத்தது போல் இருந்தது. அவருடைய `அமில வாயு’ முறைக்கு காப்புரிமை கிடைத்தது. அமெரிக்க தபால்துறைக்கு புதிய ரப்பர் பைகள் தயாரிப்பதற்கான ஆர்டரும் கிடைத்தது. சில மாதங்களியே அந்தப் பைகள் ஒட்டிக்கொள்கின்றன என்று திருப்பி அனுப்பப்பட, குட்இயர் நொந்துபோய்விட்டார்.

குட்இயர் ஒருநாள் ரப்பரை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது கொஞ்சம் கந்தகமும், வெள்ளை காரீயமும் அதில் விழுந்துவிட்டன. அப்போது அவர் அதைக் கவனிக்கவில்லை. மறுநாள் எடுத்துப் பார்த்தபோது அந்த ரப்பர், தோல் போல மென்மையாக இருந்தது. நன்றாக வளைந்தது. ஒட்டவும் இல்லை.

அந்த விபத்து, குட்இயரின் ஆராய்ச்சியை சரியான திசையில் திருப்பியது. வெப்பமும், வேதிப்பொருட்களும் சேர்ந்துதான் ரப்பரை பயன்படுத்தக்கூடியதாக மாற்றும் என்று அவர் அறிந்துகொண்டார். 1844-ல் அந்த முறைக்கு `வல்கனைசேஷன்’ என்று குட்இயர் காப்புரிமை பதிவு செய்தார். ரோமானிய நெருப்புக் கடவுளின் பெயர் `வல்கன்’ என்பதாகும்.

தான தர்மத்தில் கிடைக்கும் பலன்கள்!

புண்ணியத்தை பல விதங்களில் சம்பாதிக்கலாம். வீட்டிலிருந்தபடியே, அனுஷ்டானங்களைச் செய்வதாலும், அதிதி சத்காரம் போன்றவைகளைச் செய்வதா லும் புண்ணியம் கிடைக்கும். வசதியிருந்தால், வெளியில் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடியும், ஆலய தரிசனம் செய்தும், மகான்கள் வாழும், வாழ்ந்த இடங்களுக்குச் சென்று மகான்களை தரிசித்தும் ஆசி பெறலாம். மகான்களின் சமாதி தரிசனம் செய்து வரலாம்; எல்லாமே புண்ணியம்தான்.
தீர்த்தங்களில் (அதாவது, புண்ணிய நதிகளில்) ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்கள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும். கங்கையில் ஸ்நானம் செய்வதும், காசி விஸ்வநாதர் தரிசனமும் முக்திக்கு வழி.
பிரசித்தி பெற்ற ÷க்ஷத்ரம் பிரயாகை. இது, அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகிறது. இதற்கு தனிப்பெருமை உண்டு. அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தை, திரிவேணி சங்கமம் என்றும் கூறுவர்.
கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம்.
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம். இந்தப் பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு.
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து, தான தர்மங்கள் செய்ய வேண்டும். இந்த இடத்தில் கோ தானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ, அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எந்த தானம் கொடுத்தாலும், அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்க வேண்டும். தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும்.
கோ தானம் கொடுப்பது என்றால், நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து (இளங்கன்று சிறந்தது) பசுவுக்கு அலங்காரம் செய்து, கொம்பில் கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும்.
கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலனில்லை. நல்ல கறவை மாடு, இளங்கன்று என்றால், ஒரு வருஷத்துக்கு பால் கறந்து சாப்பிடுவர். சிலர் பூஜைக்கும், அபிஷேகத்துக்கும் அதன் பாலை பயன்படுத்துவர். இதனால், பசுவை தானம் செய்த புண்ணியமும், பூஜை அபிஷேகத்துக்குப் பசும்பால் கிடைக்க உதவி செய்த புண்ணியமும் கிடைக்கிறது.
ஒரு தடவை இப்படியொரு கோ தானம் செய்து விட்டால், நிரந்தர புண்ணியம் கிடைக்கும். பாலைக் கறந்து, வேளா வேளைக்கு கெட்டிக் காபியும், கெட்டித் தயிரும், பசும் வெண்ணையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், புண்ணியம் எப்படி கிடைக்கும்? சிவலோக வாசம் எப்படி கிடைக்கும்? எல்லாம் மனசு தான்
காரணம். புண்ணியத்தை யாரும் பங்கு கேட்க முடியாது; நாம் செய்யும் புண்ணியம், நமக்கே தான். மறந்து விடக் கூடாது!***