Daily Archives: மார்ச் 8th, 2011

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது: தி.மு.க., 121, காங்., 63 தொகுதிகளில் போட்டி

காங்கிரசுடனான இழுபறிக்கு முடிவு எட்டப்பட்டதையடுத்து, தி.மு.க., கூட்டணி இறுதி வடிவம் பெற்றது. இதன்படி, தி.மு.க., 121 தொகுதிகளிலும், காங்., 63 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதர கூட்டணி கட்சிகளான, பா.ம.க., 30, விடுதலைச்சிறுத்தைகள் 10, கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7, முஸ்லிம் லீக் 2, மற்றும் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இக்கூட்டணியில் சிறிய கட்சிகளான மூவேந்தர் முன்னேற்றக்கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பா.ம.க., 31 தொகுதிகளும், விடுதலைச்சிறுத்தைகள் 10 தொகுதிகளும், கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7 தொகுதிகளும் பெற்றன. தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையின் போது பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பிலும் ஐவர் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்களுக்கு 63 தொகுதிகள் தரவேண்டும், அதுவும் தாங்கள் குறிப்பிடும் தொகுதிகளாக வேண்டும் என்ற காங்கிரசின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் வெறுத்துப்போன தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது மத்திய அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பார்கள் என்றும் அக்கட்சி அறிவித்தது.

“காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.

“தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்’ என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது. அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும், காலை 11 மணியளவில் பிரதமர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. பார்லிமென்ட் நடந்து கொண்டிருப்பதால் அங்கு, பிரதமர் அலுவலகம் எதிரே நிருபர்கள் குவிந்தனர். திடீரென நிலைமை மாறியது.

மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்வதில் பிரதமர் வட்டாரங்கள் பிசியாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே, மறுபடியும் பரபரப்பும், சஸ்பென்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மதியம் 12 மணியளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில், பிரணாப் முகர்ஜியின் அறைக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் வந்தார். அங்கு, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோரும் உடன் இருக்க மீண்டும் ஆலோசனை தொடர்ந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த சிதம்பரம், எதுவுமே கூறாமல் சென்றார். குலாம் நபி ஆசாத்தோ, “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எதுவுமே எந்தவொரு அறிகுறியையும் காட்டாமலேயே நடந்து கொண்டிருந்ததால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க கூட முடியாத அளவுக்கு மிகுந்த பரபரப்பும், சஸ்பென்சும் நீடித்தபடி இருந்தது. பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், “மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட்டனர். காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுகமான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் மற்றும் மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, தி.மு.க., காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் பேச்சுவார்த்தையையடுத்து, இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, காங்கிரஸ் தமிழகத்தில் 63 தொகுதிகளில் போட்டியிடும் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படும் என்றும், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அழகிரி, பேச்சுவார்த்தை இழுபறி, தொண்டர்களின் செயல்பாட்டை பாதிக்காது என்றும், இருகட்சியினரும் இணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தி.மு.க., 121 தொகுதிகளில் போட்டி: காங்கிரசுடனான இழுபறிக்கு முடிவு எட்டப்பட்டதையடுத்து, தி.மு.க., தமிழக சட்டசபை தேர்தலில்121 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் கேட்ட கேள்வி: கடந்த 5ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: காங்கிரசுக்கு 60 இடங்கள் கொடுக்க தி.மு.க., ஒப்புக் கொண்ட நேரத்திலே, பா.ம.க.,விற்கு 31 இடங்கள், வி.சி.,க்கு 10 இடங்கள், கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் என, தி.மு.க.,விற்கு 122 இடங்கள் தான் எஞ்சியிருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: தற்போதைய நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கினாலும், தி.மு.க., வசம் மீதமிருப்பது 122 தொகுதிகள் தான். எனவே, 63 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தால், தனிப்பெரும்பான்மை பெற 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க.,வால் 119 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை திரும்பப் பெற்று, காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க., முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

தி.மு.க., ……………………………………………121
காங்கிரஸ்………………………………………….63
பா.ம.க., ……………………………………………. 30
விடுதலை சிறுத்தைகள் …………………………… 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் …………….. 7
முஸ்லிம் லீக் ……………………………………….. 2
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ………………… 1

நன்றி-தினமலர்

வெளிநாட்டு மோகம் போயே போச்சு…நாடு திரும்பும் இந்தியர்கள்!

 

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

அதென்ன இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர்.

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!

சமீபகாலமாக வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வரலாற்று, கலாசார, பாரம்பரிய இடங்கள், கோவா போன்ற பீச்
பகுதிகள், மகாபலிபுரம் போன்ற மகத்தான இடங்களைப் பார்க்கிறவர்கள், நமது வாழ்க்கை முறையையும் பார்த்து வியந்து போகின்றனர். காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பது முதல் இரவு படுப்பது வரை இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டவரை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர். இப்போது பல தலைமுறைகளுக்கு முன் போய் செட்டில் ஆன அமெரிக்க இந்தியர், பிரிட்டிஷ் இந்தியர்களுக்கும் அதே நினைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்கிக் குடியேறியவர்களில் இவர்களின் எண்ணிக்கையும் அடங்கும் என்றால் வியப்பில்லை.

வேலைக்கு இங்கே வர்றாங்க!

மாநகராட்சி பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டம் முடித்து, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று பலரும் அலையும் நிலையில், அமெரிக்க இந்தியர்கள் பலரும் இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் போதும்; இங்கே அளவு அதிக சம்பளம் அங்கும் கிடைக்கிறதே என்று நினைக்கின்றனர்.  இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் கணிசமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களூரு தெருக்களில் இவர்களை பார்க்கலாம். இந்தியோ, தமிழோ சரிவர வராவிட்டாலும், பல தலைமுறைக்கு முன் இவர்கள் மூதாதையர் இந்த மொழி பேசியவர்கள்தான். தடுக்கியாவது பேசி பழகி வருகின்றனர்.

அமெரிக்காவில், அமெரிக்கனாக பிறந்த அமெரிக்க இந்தியர் நிலை மட்டுமல்ல… பத்து, இருபது ஆண்டுக்கு முன் போய் செட்டில் ஆன இந்திய குடும்பத்தினருக்கும்கூட இதே நினைப்புதான்! சம்பாதித்தது போதும் என்று அவர்களில் பலரும் சென்னை, பெங்களூரு என்று நகரங்களிலும், மதுரையை தாண்டிய கிராமங்களிலும் வீடு, நிலங்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் திரும்பி வர காரணம் வேறு; இனியும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில், பிரிட்டனில் வளர்ந்தால், அவர்களின் பழக்கவழக்கம்தான் வரும்; அப்புறம் சந்ததியே மாறி விடும் என்ற பயம்தான் காரணம்.

ஐயோடா, இங்கேயுமா பர்கர்

கிழக்கு கடற்கரை சாலையில் போய்ப் பார்த்தால் சில அமெரிக்க, பிரிட்டிஷ் முகங்களை பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியர்கள். இங்கே வீடு வாங்கி குடியேறி இருப்பர். இவர்கள் தேடித் தேடி கீரை, காய்கறி என்று வாங்கி சாப்பிடுகின்றனர். பீட்ஸா, பர்கர் பக்கமே போக மாட்டார்கள். ‘‘அங்கேதான் பர்கர், பீட்ஸா என்று பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் சமாசாரங்களை சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது. இங்கே பார்த்தால் இவற்றை நம்மாட்கள் கொண்டாடுகின்றனர்; ஒரு தமாஷ் தெரியுமா? அமெரிக்கர்கள் கூட, காலையில் கேரட் போன்ற காய்கறிகளைத்தான் பச்சையாக சாப்பிடுகின்றனர்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.

ஃபாரின் கனவு தேவைதான்; ஆனால் நாம் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் உறுதி என்று இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது.

நன்றி-தினகரன்

குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்சம் தயாராகணும்!

“எக்ஸாம் வரப்போகிறது… இன்னும் பொறுப்பில்லாமல் இருக்கிறியே… படிக்கவே மாட்டேங்கிற… என்னத்த மார்க் வாங்கப் போறியோ?” என்று குழந்தைகளை, திட்டித் தீர்ப்பவரா நீங்கள்? குழந்தை படிக்க வேண்டும் என்பதில் நீங்கள் காட்டும் அக்கறை சரிதான். ஆனால், உங்கள் குழந்தையின் தேர்வுக்கு அவர்கள் மட்டுமல்ல, நீங்களும் கொஞ்சம் தயாராக வேண்டும். நீங்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?

நெருங்கிய உறவினர்களிடம் உங்கள் குழந்தையின் தேர்வு தேதிகளை தெரிவியுங்கள். அப்படி கூறுவதால், உறவினர்கள் குழந்தைகளின் தேர்வு சமயத்தில் உங்கள் வீட்டிற்கு வருவதை தவிர்க்கலாம். அப்படியே வந்து விட்டால், நாசூக்காக எடுத்துச் சொல்லி விடுங்கள்.

அக்கம் பக்கத்து வீட்டினர், நண்பர்கள் போன்றோர், உங்கள் வீட்டிற்கு அரட்டை அடிக்க வந்தால், அவர்களையும் நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.

சில பெற்றோர், பிள்ளைகளை மட்டும் படிக்கச் சொல்லிவிட்டு, தாங்கள், ‘டிவி’ பார்ப்பர். நீங்கள் ‘டிவி’ பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள். குழந்தைகள் வேறு அறையில் உட்கார்ந்து படித்தாலும், அவர்கள் கவனம் முழுவதும் ‘டிவி’யில் ஓடும் நிகழ்ச்சிகளில் தான் இருக்கும்.

நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால், உங்கள் குழந்தையின் தேர்வு நேரத்தில், லீவு போட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதும், டியூஷன், ஸ்கூல் என்று விட்டுவிட்டு, உங்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடாதீர்கள்.

குழந்தைகளின் தேர்வு சமயத்தில், பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, “நன்றாகப் படித்திருக்கிறாய். நிச்சயமாக நிறைய மார்க் வாங்குவாய்” என்று ஊக்கமளியுங்கள். அப்படி இல்லாமல், “நீ படிச்ச படிப்புக்கு கோழி முட்டை தான் வாங்குவே… தேர்வு முடிவு வரட்டும், அப்பறம் உனக்கு வச்சுக்கிறேன்..” என்று எதிர்மறையாக கூறினால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு ஓரளவு படித்ததையும் மறந்து போய்விடுவர்.

பொதுவாக உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஒரே வீட்டில் மற்ற குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். (குறிப்பா என் மூத்த மகளை விட இளைய மகள் ரொம்ப புத்திசாலி இப்படியான பேச்சுகள்) தேர்வு நேரத்தில் அடுத்த வீட்டு குழந்தையை ஒப்பிட்டு, “அவனும் உன்ன மாதிரி தானே… அவன் மார்க் வாங்கலே? நீ தண்டம்… படிச்சாத்தானே? எப்பவும் ‘டிவி’ முன்னாடியே உக்காந்திட்டிருந்துட்டு கடைசி நேரத்துல முட்டி மோதினா, படிப்பு எங்கே வரும்” என்று ‘அர்ச்சனை’ செய்யாதீர்கள்.

சமையல் தவிர, இதர வேலைகளை குறைத்துக் கொண்டு, குழந்தைகள் படிப்பிற்கு துணை செய்யலாம். அல்லது அவர்கள் அருகில் அமர்ந்தவாறு நீங்களும் ஏதாவது புத்தகத்தை படித்து, நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தலாம். இது மனரீதியாக, நேர்மறையான விளைவை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தும்.

`கர்ப்யூ’ எப்படி உருவானது?


கலவர வேளையில் வெளியே ஆட்கள் நடமாடக் கூடாது என்பதற்காக `ஊரடங்கு உத்தரவு’ பிறப்பிக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் `கர்ப்யூ’ (Curfew) எனப்படுகிறது. பிரெஞ்சுச் சொல்லான கவுரே பியூ என்பதில் இருந்துதான் `கர்ப்யூ’ வந்தது. அதன் பொருள், நெருப்பை மூடுவது. வெற்றி வீரர் வில்லியம், இந்தச் சொல்லை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார்.

ஒவ்வொரு தினத்திலும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்று `சிக்னல்’ அளிக்கப்படும். நெருப்பால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த கர்ப்யூ சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்திலும் அதே கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன்மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே இரவு தங்கியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

விண்கல எரிபொருள்கள்

விண்வெளியில் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல `ராக்கெட்’ எனப்படும் விண்கலம் பயன்படுகிறது.

எரிபொருளின் உதவியால் தான் ராக்கெட்டால் இவ்வளவு உயரத்துக்குச் செல்ல முடிகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள்களை திரவ எரிபொருள், திட எரிபொருள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். எரிபொருளைப் பொறுத்து ராக்கெட்டின் உள்ளமைப்பும், எஞ்ஜின் வடிவமைப்பும் மாறுபடும்.

திட எரிபொருள் ராக்கெட்டுக்கு ஆகக்கூடிய செலவு குறைவு. இந்த வகை ராக்கெட்டின் உள்ளமைப்பு எளிதானது. எரிபொருளும், அது எரிவதற்குத் தேவையான ஆக்சிஜன் அடங்கிய பொருளும் கூழ் போல கலக்கப்பட்டு உள்ளே வைக்கப்படும். ஆக்சிஜனை அளிக்கின்ற பொருளை `ஆக்ஸிகரணி’ என்று குறிப்பிடலாம். ஆனால், திரவ எரிபொருள் ராக்கெட்டில், எரிபொருளும், ஆக்ஸிகரணியும் தனித்தனி அறைகளில் வைக்கப்படுகின்றன. ராக்கெட்டைச் செலுத்துகிறபோது இரண்டும் எஞ்ஜின் அறையில் ஒன்று சேர்ந்து எரிய ஆரம்பிக்கின்றன.

திட எரிபொருள் ராக்கெட்டில் எரிபொருளை முன்கூட்டியே நிரப்பி வைத்து விடலாம். எனவே, எந்த நேரத்திலும் ராக்கெட்டை இயக்க முடியும். இதனால் தான் ஏவுகணைகளாகப் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் பலவற்றிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

திரவ எரிபொருள் ராக்கெட்டைப் பொறுத்தவரை, ராக்கெட்டைச் செலுத்துவதற்கு நேரம் நிர்ணயித்து, கடைசி நேரத்தில் தான் திரவ எரிபொருளை நிரப்ப முடியும். ஒருவேளை ராக்கெட் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ, திரவ எரிபொருளை ராக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தாக வேண்டும்.

திரவ எரிபொருள் ராக்கெட்டில், எரிபொருளும், ஆக்ஸிகரணியும் அடங்கிய அறைகளில் இருந்து, அவற்றை ராக்கெட் என்ஜின் அறைக்கு கொண்டு வர நீளமான குழாய்கள் தேவை. மிகுந்த அழுத்தத்தில் உள்ள எரிபொருள்களை என்ஜின் அறைக்கு அனுப்ப பம்புகள் தேவை. பம்புகளை இயக்க மோட்டார்கள் அவசியம். இந்த மோட்டார்களை இயக்குவதற்கு எரிபொருள் தேவை. ஆனால், திட எரி பொருள் ராக்கெட்டில் பம்புகளோ, மோட்டார்களோ தேவையில்லை.

திரவ எரிபொருள் ராக்கெட்டில், என்ஜினை நொடிப்பொழுதில் நிறுத்தி, மறுபடியும் இயங்கச் செய்யலாம். திட எரிபொருள் ராக்கெட்டில் இது சாத்தியமில்லை. ராக்கெட் உயரே பாய்ந்து செல்லும்போது, திரவ எரிபொருள் ராக்கெட்டுக்குள் இருக்கும் திரவப் பொருள்கள் ததும்பும். ஆனால், திட எரிபொருள் ராக்கெட்டில் இந்தப் பிரச்சினை கிடையாது.

முதன்முதலில் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ராக்கெட், ஜெர்மன் வி-2. சில ராக்கெட்டுகளில் இரண்டுவிதமான எரிபொருள் களுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் திட மற்றும் திரவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

***

`மைக்ரோவேவ் ஓவன்’!

இன்று நம்மூர் சமையலறைகளில் `மைக்ரோவேவ் ஓவன்’கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. மைக்ரோவேவ் ஓவன் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்று தெரியுமா? இரண்டாம் உலகப் போரின்போது நடந்தது அது.

விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் `மேக்னட்ரான்’ என்ற பொருள் பயன்படுத்தப்படும். அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒரு பெரிய பல்பில் இருந்துவரும் வெப்பம் அந்த `மேக்னட்ரானில்’ இருந்து வரும். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு, `இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே!’ என்று தோன்றியது. உடனே `மைக்ரோவேவ் ஓவன்’ பிறந்தது.

ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.

1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது `மைக்ரோவேவ் ஓவன்’. பெர்சி ஸ்பென்சரின் கவனிக்கும் திறனும், ஆர்வமும் ஒரு கண்டுபிடிப்பாக மலர்ந்து, இன்று பலரது சமையல் வேலையை எளிதாக்கி இருக்கிறது.

உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்… உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஜாக்கிரதை

“உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேற்கத்திய நாடுகளில், பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது’ என, ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்பதாக உள்ளது. காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். நினைவுத் திறனும் குறைந்து, சீரான சிந்தனை தடை படும். இருபது வயதை அடைந்து விட்டாலே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால், ஆண்டுதோறும், ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது, ரத்த நாளத்தின் மீது, இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும். இது, இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று, இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்); மற்றொன்று, இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்.) அதாவது, 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை; 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது. வயது ஏற ஏற, ரத்தக் குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன.

இந்த பாதிப்பு ஏற்படும் போது, சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தினருக்கு, இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பிறப்பிலேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். எந்த காரணமும் இன்றி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கு, “எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ என்று பெயர். இதனால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, அவசியம் மருந்து உட்கொள்ள வேண்டும். “சிஸ்டோலிக்’ வகை உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குக் கூட மருந்து உட்கொள்ளுதல் அவசியம். உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு, சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில், 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள்.

சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொத்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அளவை கணக்கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் – குடிநீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது. எல்லா வகையான உணவு தயாரிப்பிலும், ஏதாவது ஒரு வகையான உப்பு சேர்க்கப்படுகிறது. மோனோசோடியம் க்ளூடாமேட், சோடியம் நைட்ரைட், சோடியம் சாச்சரின், சோடியம் பைகார்பொனேட் (பேக்கிங் சோடா), சோடியம் பென்சொயேட் ஆகிய ஏதாவது ஒரு உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ், ஊறுகாய் வகைகளில் சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, இறைச்சியை உள்ளடக்கி செய்யப்படும் பலகாரங்கள், பர்கர், பிட்சா ஆகியவற்றில், அதிகளவு உப்பு சேர்க்கப்படுகிறது.

ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு சுய முயற்சி தேவை. பல மருத்துவர்களும், நோயாளிகளும், மாத்திரையின் அளவைக் கூட்டிக் கொள்வதோடு சிகிச்சை முடிந்ததாக கருதுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்… வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, மாத்திரை உட்கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகளைக் கொண்டது அல்ல!
உங்கள் உடல் எடை, சீராக இருக்க வேண்டியது அவசியம். உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து, தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். எனவே, இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். 6 வயது முதலே இதை துவங்கலாம். முதலில் 20 நிமிட ஓட்டமாக துவங்கி, 18 வயது நிரம்பியவுடன், ஒரு மணி நேர ஓட்டமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையிலை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகையிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன. இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது. உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தினமும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதிகளைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாதுகாக்கும். எனினும், அதிகளவிலோ அல்லது தாறுமாறாகவோ வெயிலில் அலைய நேர்ந்தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும். மது அருந்துவது, இதயத்தை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கோப்பை மது அருந்தினால் கூட, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றும். அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, இதயம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும். தொடர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம். பதட்டத்தை தவிர்க்க, சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகள். இப்போதெல்லாம், 6 – 8 வயது குழந்தைகள் கூட, அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்கின்றனர். அதை ஈடு கட்டும் வகையிலான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. எனவே, அவர்களின் வாழ்க்கையை முறையை, இளம் வயதிலேயே மாற்றினால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.

தொல்லை தரும் போன் அழைப்பு விடிவுக்கு வர இன்னும் 20 நாள்

மொபைல் போன்களுக்கு வரும், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இம்மாதம் 21ம்தேதி வரை தள்ளி வைத்துள்ளது.

மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற, பல்வேறு விதமான விளம்பரங்கள், மொபைல் போன் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. இப்பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்களிடமிருந்து, வெறுப்படைச் செய்யும் அழைப்புகளும், குறுந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன. “அழைக்காதீர்’ பட்டியலில் தங்கள் மொபைல் எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த “டிராய்’ முடிவு செய்தது.

டிராய் விதித்த விதிமுறைகளின் விவரம் வருமாறு: டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளை விரும்பாதவர்கள், 1909 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது இதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, “என்னை அழைக்காதீர்’ என்று குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் “700′ என்ற இலக்கத்தில் துவங்கும் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிலிருந்து தான் விளம்பர எஸ்.எம்.எஸ்.,க்களை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சேவையை நடத்துவதற்க டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற அழைப்புகள் குறித்து பதிவு செய்யாத சந்தாதாரர் ஒருவரது மொபைல் போனில் இருந்து, வர்த்தக தொடர்பான விளம்பரங்களை அனுப்பினால், அவருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்த முறையும் தவறை செய்தால், அவரது தொடர்பு துண்டிக்கப்படும். டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விளம்பரங்களை இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அனுப்பும் தகவல்கள், சேவை வழங்கும் மொபைல் நிறுவனம் வழியாக வர வேண்டும். அந்த தகவல்களை, அந்நிறுவனம் பரிசோதித்து தேவையற்றதை நீக்கவும் உரிமை உள்ளது. இவ்வாறு டிராய் விதிமுறைகளை வகுத்தது.

வேண்டாத அழைப்புகளை தவிர்க்க ஒதுக்கப்படும் எண் குறித்து, பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால் டிராய், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதித்த கெடுவை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. தேவையற்ற அழைப்புகளை தடுக்க ஒதுக்கப்பட்ட எண்ணுக்கும், எஸ்.டி.டி.,எண்ணுக்கும் இடையே சில இடங்களில் குழப்பம் காணப்படுகிறது. தொலை தொடர்புத் துறை இதற்கென இன்னும் உரிய எண்களை ஒதுக்கீடு செய்யாததால், நேற்றுடன் முடிவடைந்த கெடுவை வரும் 20ம் தேதி வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வரும் 21ம்தேதி வரை தொல்லை தரும் அழைப்புகளையும், குறுந்தகவல்களையும் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

அற்புதக் கொய்யா

* குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப்பானவை.

* ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி’ உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.

* கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும், தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.

* தோல் நோய்களை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெறவும், சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவுகிறது.

* தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீட்டுத்தருகிறது.

* அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது

புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்

நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால், நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பிய படி ஆட்டோமேடிக் எண்கள் அமையும்.