Daily Archives: மார்ச் 9th, 2011

ஹேர் டை அடித்துவிட்டுக் குளிக்கலாமா?

கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது. பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும். அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள். அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.

சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.)

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள். எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம்.

கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.

தற்பொழுது ‘பெர்மனென்ட்’ டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும்.

ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.

ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா  250 கிராம்
ஒரு முட்டை  வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில்  2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன்  2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர்  50 கிராம்
தயிர்  2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு  5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 முதல் 80 வயது வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!

சோஷியல் நெட்வொர்க்கில் தளங்கள்

இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites). இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் கிடைக்கின்றன.
இணையத்தில் வலம் வருபவர்களில் 95% பேர் நிச்சயம் இந்த தளங்கள் மூலம் நண்பர்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இணையத்தில் உள்ள சமுதாய இணைய தளங்கள் குறித்துச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1. ட்விட்டர் (Twitter): 2006 ஆம் ஆண்டில் ஜாக் டார்சி (Jack Dorsey)என்பவரால் தொடங்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்.க்குப் பதிலாக இணையம் தரும் மாற்றாக இயங்குகிறது. நிறுவனங்களோ, தனி நபர்களோ, தங்களுக்குள் சிறிய அளவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் அக்கவுண்ட் தொடங்குவது எளிது. முதலில் ஆங்கிலத்தில் தொடங்கினாலும், பின்னர் பிற மொழிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
2. யு-ட்யூப் (You Tube): வீடியோ பைல்களை இணையம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள, கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் இணைய தளம். “நீங்களாகவே உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்’ என்ற இலக்குடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வுலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என, டைம் இதழ் நவம்பர் 2006ல், இந்த தளத்தினை அறிவித்தது. மிக எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். பல அறிவு சார்ந்த தேடல்களுக்கு நல்ல தீனி வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இருப்பினும் சில மோசமான அநாகரிகத் தகவல்களும் இடம் பெற வழி தருகிறது. இதன் சமுதாயத் தணிக்கை சரியானால், நன்றாக இருக்கும்.
3. பேஸ்புக் (Facebook): ஹார்ட்வேர் பல்கலைக் கழக முன்னாள் மாணவரான மார்க் ஸக்கர் பர்க் (Mark Zuckerberg) என்பவரால் தொடங்கப்பட்டது. மிக அதிகப்படியான எண்ணிக்கையில் வசதிகளைக் கொண்ட சமுதாய இணக்க இணைய தளமாக இது இயங்குகிறது. வெற்றிகரமான ஓர் தளமாக உலகெங்கும் புகழ் பெற்று இது இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர் களைத் தேடி அறிந்து அளவளாவவும், ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்களை அறிந்து நண்பர்களாக்கிக் கொள்வதிலும் இந்த தளம் உதவுகிறது. கணக்கற்ற அளவில் போட்டோக்களை அப்லோட் செய்திட உதவுகிறது. மொபைல் போன் வழி தொடர்பும் எளிதாக உள்ளது.
4. ஹி 5 (Hi 5): இந்திய மண்ணிலிருந்து உதயமான சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். 2003ல் ராமு எலமாஞ்சி என்பவரால் தொடங்கப்பட்டது. 2008ல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 20 தளங்களில் ஒன்றாக இடம் பெற்றது. ஒருவருக்கொருவர் நட்பு தேடி, அழைப்புகளை அனுப்பி, அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் தொடரும் உறவுகளால் இந்த தளம் இயங்குகிறது. இதில் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்க, இந்த தளம் தனக்கென ஒரு மீடியா பிளேயரைக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.
5. ஆர்குட் (Orkut): கூகுள் நிறுவனத்தால், 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் ஊழியர் ஆர்குட் என்பவரால் இது வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. எனவே அவர் பெயரையே இந்த தளமும் கொண்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும் இது பிரபலமானது. பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டது.
வேவ், பஸ் (Wave, Buzz) போன்ற தளங்கள் தொடங்கப்பட்டு சில காலம் கழித்து நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே, பல சோஷியல் தளங்கள் உருவாகி, அவ்வளவாக ஆதரவு இல்லாமல் அப்படியே முடங்கிப் போய்விட்டன. இன்னும் பல தளங்கள் தோன்றலாம். சில பிரபலமாகலாம். சமூக உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறப்பான இடம் பெறலாம்.
இந்த தளங்கள் அனைத்தும் புதிய சமுதாய கூடல்களுக்கு இடம் தருகின்றன என்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். இருப்பினும் இந்த தளங்களில் நம் இடத்தைச் சற்று பாதுகாப்புடனே தான் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகையில், உங்கள் விருப்பங்களையும், விரும்பாதவற்றையும் அழுத்தமாகவே குறிப்பிடவும். நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைச் சந்தேகத்திடமின்றி விளக்க மாகத் தந்துவிடுங்கள். போட்டோ பதிப்பதாக இருந்தால், உங்களின் இன்றைய போட்டோவினைப் பதிக்கவும். இது உங்கள் நண்பர்கள் உங்களை அடையாளம் கண்டு, தொடர்பினைப் புதுப்பிக்க உதவும். பிரைவசி செட்டிங்ஸ் எந்த நிலைகளில் அமைக்கலாம் (‘All’, ‘Friends and Networking’,’Friends of Friends’, ‘just friends’, மற்றும் ‘personalised’) என்பதனை உணர்ந்து அமைக்கவும். எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றின் விளைவுகளைப் புரிந்து கொண்டு, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கவும்.
நீங்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் எந்த சொல் அல்லது சொல் தொடரையும் இந்த தளங்களில் எங்கும் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். உங்களை மற்றவர்கள் காண்பதைச் சற்று வரையறைகளுடன் அமைக்கவும்.
உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் என்பதனைச் சரியாக செட் செய்திடவும். இந்த தளங்களைப் பயன்படுத்து கையில் அதீத கவனம் தேவை. இல்லை எனில் மற்றவர்கள் கைகளில் பட்டு, சிதறிவிடுவீர்கள்.

புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்ட மரபணு குறைபாடு


புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களுக்கு மட்டுமே வரும் வியாதி ஆகும். அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ள புரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளே நாளடைவில் புற்றுநோய் ஆக மாறுகிறது. பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறி தெரிவதில்லை. இந்த வியாதி இங்கிலாந்தினரையே அதிகம் தாக்குகிறது. அவர்களில் வருடத்திற்கு சுமார் 35,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 10,000 பேர் வரை இறக்கின்றனர். தற்போது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முதற்கட்டமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட 7 பேர்களின் புற்றுகட்டிகளின் மரபணுவை முழுவதும் பகுப்பாய்வு செய்தனர். பின்னர் அவை ஆரோக்கியமான ஒருவரது மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. அப்பொழுது புற்றுநோய் பாதிப்பு கண்ட மரபணுவின் குறியீடுகளில் ஏறத்தாழ 5,900 எழுத்து பிழைகள் காணப்பட்டன. எனினும் இந்த பிழைகள் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றில் காணப்படுவதை காட்டிலும் மிக குறைவே ஆகும். மேலும் மரபணுவின் பெரும்பான்மையான பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய தீர்வினை தரும் என கருதப்படுகிறது.

டில்லியில் நடந்த பரபரப்பு கிளைமாக்ஸ் காட்சிகள்

தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பது என முடிவே செய்து முடிக்கப்பட்டு, அதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டு, தி.மு.க., அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக தயார் நிலையில் இருந்தனர். தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிவிடும் என்ற செய்தியும் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், கடைசி நேர திருப்பமாக, விரிசல் ஒட்ட வைக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டது. 63 தொகுதிகள் காங்கிரசுக்கு என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் டில்லியில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கே ராஜினாமா கடிதங்களை அளிக்க இருந்தனர். ஆனால், மாலையில் பிரதமர் நேரம் அளித்திருப்பதாக தி.மு.க., கூறியது. தி.மு.க., – காங்கிரஸ் இடையில் பலசுற்று பேச்சுவார்த்தையை தலைவர்கள் தொடங்கினர். மாலையில் முடிவு தெரியும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், மேலும் ஒருநாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டதாகவும், அதை ஏற்பதாகவும் தி.மு.க.,வே சென்னையிலிருந்து அறிவித்தது.

திங்களன்று இரவு சோனியாவின் இல்லத்திற்கு அழகிரியும் மற்றொரு தி.மு.க., அமைச்சரும் விரைந்தனர். ஆனால் அங்கு எதிர்பார்த்த வரவேற்பு இருந்த மாதிரி தெரியவில்லை. பொதுவாக ஒரு பிரச்னைக்காக யாரையாவது சோனியா சந்திக்கிறார் என்றால், இறுதி முடிவு எடுக்கப்படுவதாக மட்டுமே அர்த்தம். ஆனால், அன்றைய தின சந்திப்பின்போது, தங்களை சந்திக்க வந்த தி.மு.க., பிரதிநிதிகள் சந்திப்பின்போதுகூட சோனியாவின் பேச்சில் கடுமையும், காரசாரமும் நீடித்ததாக கூறப்படுகிறது. தவிர, பிரணாப் முகர்ஜியுடன் நடந்த மற்றொரு சந்திப்பின்போது, தன்னிச்சையாக தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றியது பற்றியும் காங்கிரஸ் தரப்பில் கடும் வருத்தம் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்தாக வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் அழகிரி வீட்டில் தி.மு.க., அமைச்சர்கள் கூடினர். இருதரப்பும் பேச்சுவார்த்தை எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்த சமயத்தில், அழகிரியும் இன்னொரு அமைச்சரும், நார்த் பிளாக்கில் உள்ள பிரணாப் முகர்ஜி அலுவலகத்திற்கு விரைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்புக்கு பிறகு இரு தரப்பிலிருந்தும் எந்தவொரு சாதகமான அறிகுறிகளும் வெளியாகவில்லை. காங்கிரஸ் தரப்பில் கடுமையான இறுக்கம் நீடித்தபடி இருந்தது. அழகிரி இல்லத்தில் கூடியிருந்த தி.மு.க., அமைச்சர்கள் ஒவ்வொருவராக கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அதன்பிறகுதான், கூட்டணியில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இனி பேசிப்பயனில்லை என்றும், ராஜினாமா கடிதங்களை தி.மு.க., அமைச்சர்கள், பிரதமரிடம் அளிக்க புறப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதை தி.மு.க., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தரப்பு முக்கிய வட்டாரங்களுமே உறுதி செய்தன. அதற்கு ஏற்ப, பிரதமர் அலுவலகத்தில் விசாரித்தபோது தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை சந்திப்பதற்காக 5.30 மணிக்கு நேரம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. பார்லிமென்டில் வைத்து பார்ப்பதா அல்லது வீட்டிலேயே பார்ப்பதா என்பது மட்டுமே உறுதி செய்யவேண்டியிருந்தது. ராஜ்யசபாவில் பிரதமர் முக்கிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. பார்லிமென்டில் நிருபர்களை சந்தித்த கனிமொழியும், “முட்டுக்கட்டை நீடிக்கிறது’ என்றே கூறினார்.

எந்நேரமும் ராஜினாமா கடிதங்களை எடுத்துக் கொண்டு அழகிரி இல்லத்தில் இருந்து அமைச்சர்கள் புறப்படலாம் என்ற செய்தியால், அழகிரி இல்லம் மற்றும் பிரதமர் இல்லம் முன்பாக மீடியாக்கள் குவிய ஆரம்பித்தன. மாலை 5 மணி வரை இந்த நிலையே நீடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அழகிரி இல்லத்தில் இருந்து தி.மு.க., அமைச்சர் பார்லிமென்டுக்கு விரைந்தார். அங்கு பிரணாப் முகர்ஜி அலுலகத்திற்கு வந்து சேர்ந்த அவரிடம், அங்கு அகமது படேல்,பிரணாப் முகர்ஜி, இ.அகமது ஆகியோர் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் இடையிலேயே பிரணாப் முகர்ஜி வெளியில் கிளம்பிச் சென்றார். பின், இ.அகமதுவும் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

அறைக்குள் இருந்த தி.மு.க., அமைச்சரும், அகமது படேலும் உள்வாயில் வழியாக வெளியே கிளம்பி மீடியாக்களை தவிர்த்துவிட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வெளியேறுவதற்கு என்றே உள்ள வாயில் வழியாக ரகசியமாக கிளம்பிச் சென்றனர். பின், 6.40 மணிக்கு சோனியா இல்லத்திற்குள் காரில் நுழைந்த தி.மு.க., தரப்பு இரண்டொரு நிமிடங்களுக்குள் வெளியே வந்தது. அப்போது அழகிரி உடன் இருக்க குலாம்நபி ஆசாத், “காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்’ என்றார். இந்த அறிவிப்பை ஆசாத் வெளியிட்டபோது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட உடன் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினமலர்

வேப்ப இலை மகத்துவம்

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

***

எக்ஸெல் எர்ரர் செக்கில்

எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், டேட்டாவினை செல்களில் நிரப்புகையில், அதன் பின்புலத்தில், எக்ஸெல், செல்களில் இடப்படும் டேட்டாவில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்று சோதனை இடும். பிழைகள் இருந்தாலும், அல்லது எக்ஸெல் பிழை என முடிவு செய்தாலும், செல்லின் இடது ஓரத்தில் மேலாக, பச்சை நிறத்தில் ஒரு சிறிய முக்கோணம் ஒன்றினை ஏற்படுத்தும். இந்த முக்கோணங்கள் எனக்குக் காட்டப்படத் தேவையில்லை; என்னால் பிழைகள் இல்லாமல் டேட்டாவினை அமைக்க முடியும். அப்படியே பிழைகள் இருந்தால், நானாக அவற்றைக் கண்டறிந்து திருத்திக் கொள்ள முடியும்; எனக்கு இந்த முக்கோணங்கள் எல்லாம் வேண்டாம் என நீங்கள் எண்ணினால், அப்படியே செட் செய்துவிடலாம். கீழ்க்குறிப்பிட்டவாறு செயல்படவும். (இந்த டிப்ஸ் எக்ஸெல் 2002, 2003, மற்றும் 2007 ஆகிய தொகுப்புகளுக்குப் பயன்படும்.)
1. எக்ஸெல் Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Options டயலாக் பாக்ஸினைத் தரும்.
2.இந்த விண்டோவில் Error Checking என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இதில் Enable Background Error Checking என்ற பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பின், அதனை நீக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதுவரை காட்டப்பட்டு வந்த பச்சை நிறத்திலான, முக்கோணங்கள் எல்லாம் மறைந்து, இனி புதிதாக எதுவும் தோன்றாது.

எக்ஸெல் டிப்ஸ்-செல்லில் குறுக்குக் கோடுகள்

செல்லில் குறுக்குக் கோடுகள்
ஒர்க்ஷீட் ஒன்றின் செல்களில் வழக்கமாக, வேறுபடுத்திக் காட்ட பார்டர்களில் கோடுகள் அமைப்போம். அவற்றை வண்ணங்களில் அமைப்பது குறித்து இந்த பகுதியில் டிப்ஸ் ஏற்கனவே தரப்பட்டது. இங்கு எவ்வாறு குறுக்குக் கோடுகளை அமைப்பது எனக் காணலாம்.
எக்ஸெல் தொகுப்பைப் பொறுத்தவரை, தன் செல்களில் எந்த இடத்திலும் கோடுகளை அமைக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இடது, வலது, மேல் மற்றும் கீழாக அமைக் கலாம். இவற்றுடன் குறுக்காகவும் அமைக்கலாம். அதாவது மேல் இடது புறம் இருந்து கீழாக வலதுபுறம் வரை கோட்டினை உருவாக்கலாம். அதே போல வலது மேல் புறம் இருந்து, இடது கீழ் புறம் வரை அமைக்கலாம்.
முதலில் எந்த ஒரு செல் அல்லது செல்களில் குறுக்குக் கோடுகளை அமைக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Format மெனுவில் இருந்து Cells என்பதைக் கிளிக்செய்து தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இந்த இடத்தில் Format Cells டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில் Border என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அடுத்து பார்டர் என்ற பிரிவில், இடது மற்றும் வலது முனை கீழாக, குறுக்குக் கோடுடன் சிறிய படங்கள் இருக்கும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுத் ததற்கு ஏற்றபடி கோடுகள் அமைக்கப்படும்.
பின்னர் ஓகே கிளிச் செய்து வெளியேறவும்.
இதன் சுவராஸ்யமான விஷயம் என்ன வென்றால், நீங்கள் அடுத்து செல்களில் உள்ள தகவல்களை அழித்தாலும், இந்த கோடுகள் அப்படியே இருக்கும்.
இந்த குறுக்குக் கோடுகளை செல்களுக்கு அமைக்கலாம். செவ்வக ஏரியாவைத் தேர்ந்தெடுத்து அமைக்க முடியாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் A5:C12 என்ற செல்களைத் தேர்ந் தெடுத்து, குறுக்குக் கோடுகளை அமைக்க முடியாது. குறுக்குக் கோடுகள் A5 செல்லின் மேல் இடது புறம் இருந்து C12 செல்லின் வலது கீழ் புறத்திற்குச் செல்லாது.
அனைத்து ஒர்க்ஷீட்களையும் மூட
ஒன்றுக்கு மேற்பட்ட பல ஒர்க்ஷீட்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு கட்டத்தில் அனைத்தையும் மொத்தமாக மூடிவிட்டுச் செல்ல விரும்புகிறீர்களா? ஒவ்வொன்றாக அவற்றை மூட வேண்டாம். ஒரே கிளிக் செய்து மூடும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.
Shift கீயை அழுத்திக் கொண்டு, File மெனுவினைத் திறக்கவும். இவ்வாறு கீகளை அழுத்துகையில், பைல் மெனுவில் உள்ள Close கட்டளை, Clsoe All என்று மாறுவதனைப் பார்க்கலாம். அதனைத் தேர்ந்தெடுத்தால், திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளும் மூடப்படும்.
இந்த வசதி, எக்ஸெல் தொகுப்பில் மட்டுமல்ல; அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் (ஆபீஸ் 97, 2000, 2002 மற்றும் 2003) உள்ளது.
தேதியும் நேரமும்
எக்ஸெல் தொகுப்பின் ஒர்க் ஷீட் ஒன்றில் உள்ள செல்லில் அன்றைய தேதியை இட விரும்பினால் Ctrl + ; (semicolon) என்ற கீகளை அழுத் தவும். நேரத்தை இட விரும்பினால் Ctrl + Shift + : (colon) என்ற கீகளைஅழுத்தவும்.
ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற
எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திடவும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும்.
இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம்.
1.ஒர்க் ஷீட்டிற்கான ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் மெனுவில் Move அல்லது Copy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இதில் To Book என்ற டிராப் டவுண் லிஸ்ட் கிடைக்கும். இதில் புதிய ஒர்க் புக்கும் உருவாக்கலாம்.
4. புதிய ஒர்க் புக்கில் உள்ள ஷீட்களில் எந்த ஷீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் இதனை விட்டுவிடலாம். அல்லது Move தேர்ந்தெடுத்து முடிக்கலாம்.
5. செய்வதற்குப் பதிலாக காப்பி செய்திடத் திட்டமிட்டால் Create a Copy என்பதில் கிளிக் செய்து செயல்படவும்.
6. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

மலர்கள் மணம் பரப்புவது எப்படி ?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.

மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.

பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.

சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.

எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.

ஜாதிக்கு போடும் ஓட்டு…ஜனநாயகத்துக்கு வைக்கும் வேட்டு…

தென் மாவட்டங்களில் தேவர், வடக்கு மாவட்டங்களில் வன்னியர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் என சமுதாய ஓட்டு வங்கியைக் குறி வைத்தே, முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தனித் தொகுதிகளாக இருந்தாலும், தலித் சமூகத்தில் எந்தச் சாதிக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதைப் பார்த்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளரின் தகுதி இவற்றையெல்லாம் தாண்டி, “ஜாதிக்காரர்’ என்ற அடிப்படையில் ஓட்டு கிடைக்கும் என்பதே தமிழக மக்களின் மீது திராவிட மற்றும் தேசியக்கட்சிகள் குத்தியிருக்கும் நிரந்தர முத்திரை. ஒரு தொகுதியில் எண்ணிக்கையில் குறைவாகவுள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும் “சீட்’ கிடைக்காமல் போக அடிப்படையும் இதுவே. கட்சிக்காக மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் அதிகபட்சமாய் கட்சிப் பதவி அல்லது உள்ளாட்சிப் பதவிகளோடு அவர்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கட்சிக்காகவும், மக்களுக்காகவும் (!?) உழைப்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தும் “ஜாதி அரசியலை’ தாண்ட முடியாமல், இளைஞர்கள் அரசியலை வெறுக்கின்றனர்.

பல்வேறு ஜாதிகளிலும், கல்வியறிவு, அரசியல் அறிவு, சமூக அக்கறை என எல்லாத்திறமைகளையும் கொண்ட நேர்மையான கட்சி நிர்வாகி ஒருவர் இருந்தாலும், அவரை தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்க்கும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. இந்த விஷயத்தில் திராவிடக்கட்சிகள் வழிகாட்டுகின்றன; தேசியக் கட்சிகள் பின்பற்றுகின்றன. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஓட்டுப் போட்டதால்,ஜாதியின் வேட்பாளரை கட்சிகள் தேர்வு செய்கின்றனவா, ஜாதி வேட்பாளரை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்பது ஆழமாய் ஆராய வேண்டிய விஷயம். சில ஆண்டுகளில் நடந்துள்ள தேர்தல் முடிவுகளை அலசி, ஆராய்ந்து பார்த்தால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.

கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளில், ஜாதி என்கிற மாயை இன்னும் அரசியலில் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இதன் ஆதிக்கம் குறைந்து, மறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நகர மயமாதலில், எல்லா மக்களும் எல்லா இடங்களிலும் கலந்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது. நகரங்களில் உள்ள தொகுதிகளில் ஜாதி ஓட்டுக்களைக் கணக்கெடுப்பது, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது போன்றது. நகர மக்களைப் பொறுத்தவரை, விலைவாசி, குடிநீர், மின் தடை என அன்றாடப் பிரச்னைகளுக்கும், உள்ளூரில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்குளே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்களைப் பதிவு செய்கின்றனர்.

இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டு, இந்த தேர்தலிலாவது ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யாமல், கட்சிக்கும், மக்களுக்கும் உண்மையாக உழைக்கத் தயாராயிருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். குறைந்தபட்சமாக, இந்த ஒரு மாற்றத்தையாவது கொண்டு வருகிற தேர்தலாக இது அமைந்தால், அதுவே மக்களுக்குக் கிடைக்கிற முதல் வெற்றி.

நன்றி-தினமலர்