Daily Archives: மார்ச் 12th, 2011

அந்நியர் புகலென்ன நீதி?-லிபியா

லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின.1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே!

நன்றி- தினமணி

சுனாமி என்றால் என்ன?

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.

ஜெட் வேகத்தில் சீறும் சுனாமி : * கடற்பரப்புக்கு கீழ், கண்ணுக்கு தெரியாத சிறிய வடிவத்தில் சுனாமி உருவாகும். கடலின் மேல் பகுதியில் இருக்கும் கப்பலில் கூட, சுனாமி உருவாவதை உணர முடியாது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்த சுனாமி மிகப்பெரிய அளவில் உருவாகி, கடல் பரப்பு முழுவதும் வேகமாக பரவும்.
* சுனாமி என்பது ஒரே ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக கருதப்படுகிறது.
* சுனாமி அலைகள் கரையை நோக்கி அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும்போது, கடலுக்குள் இருந்த தண்ணீரின் கணிசமான பகுதி காலியாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப் பாறைகள் கூட, கண்ணுக்கு தெரியும். அந்த அளவுக்கு, தரைப்பகுதி தெரியும்.
* சுனாமி அலைகள் மிகவும் பிரமாண்ட உயரத்தில் வருவதால்தான், அழிவு ஏற்படுவதாக தவறான கருத்து கூறப்படுகிறது. கடலில் உள்ள பெரும்பகுதி தண்ணீர், வெள்ளமென புறப்பட்டு வருவதன் காரணமாகவே அழிவு ஏற்படுகிறது. கடலில் இருந்து வேகமாக வரும் வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும். இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும். சுனாமி அலைகள் கரையை நோக்கி வரும்போது, ஒருசிலர், அதை சமாளித்து தப்பி விட முடியும். ஆனால், சுனாமி அலைகள், கடலை நோக்கி வேகமாக திரும்பும்போது, கடலுக்குள் எல்லாமே அடித்துச் செல்லப்படும்.

உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெருமளவில் பயனளித்து வருகின்றன.
* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.
*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.
*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.
* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.
* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.
*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறை
யினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.

பசிபிக் கடல் பகுதியில் அச்சத்தில் பல நாடுகள் : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பயங்கரமான சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. இதனால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க நிலவியல் நிபுணர்கள், அதன் விளைவு குறித்து ஆராய்ந்தனர். ஜப்பானின் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், அங்கு புறப்படும் சுனாமி அலை மணிக்கு 500 மைல் வேகத்தில், பசிபிக் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் தாக்கும் என்பதால், அப்பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலைகளின் உயரம்15 அடி முதல் 21 அடி உயரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம், தைவான், ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, சமாவோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹவாய், வட அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா, தென் அமெரிக்காவின் பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இவை தவிர சிறு தீவு நாடுகளான பிஜி, கவுதமாலா, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் இருந்து, உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜப்பானின் வடபகுதியில் உள்ள குரில் தீவுகளில் இருந்து, 11 ஆயிரம் மக்களை ரஷ்ய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி ஏற்படுவது குறித்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த பால் கன்னலி கூறுகையில்,”இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதுதான் எங்களது பெரும் கவலையாக உள்ளது. இந்த சுனாமி அந்த நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கும்’ என்று தெரிவித்தார்.

பூமிக்கு அருகே சந்திரன் அழிவுக்கு பஞ்சமில்லை : பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் வருகிறது. எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, “சூப்பர் மூன்’ என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத்தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்குஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷிமாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின்சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன?ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Japan Tsunami 2011 photos

————————————————————————————————-———-———————-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-

விண்டோஸ் 7:32/64 பிட்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்வது என்று முடிவெடுக்கையில் தோன்றும் அடிப்படைக் கேள்வி இதுதான்  32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே மாறிய பலர், இப்படி ஒரு வேறுபாடு உள்ளதா? அப்படி யானால் என் கம்ப்யூட்டரில் என்ன போட்டுள்ளனர் என்றும் கேட்டு வருகின்றனர்.
நீங்கள் எந்த பிட் (32/64) சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், விண்டோஸ் ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, புதிய ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் ஒன்றை இணைக்கையில் கிடைக்கும் அனுபவத்தில் இதனைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த “பிட்’ என்பது என்ன?
64 அல்லது 32 பிட் என்று சொல்கையில், பிட் என்பது, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் குறிக்கிறது. இந்த எண் பைனரி எண் ஆகும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 1,2,3, என்ற டெசிமல் எண்கள் இல்லை. எனவே 32க்கும் 64க்கும் உள்ள வித்தியாசம், முதல் எண்ணை இரண்டால் பெருக்கிக் கிடைப்பது இல்லை. 64 பிட் கம்ப்யூட்டர், 32 பிட் கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் காட்டிலும் ஏறத்தாழ 400 கோடி மடங்கு அதிகமாகவே கையாளும். அவ்வளவு வேகமா? என்று கேட்க வேண்டாம். இது வேகத்தைக் குறிக்க வில்லை. இரண்டும் ஒரே வேகத்தில் தான் இயங்கும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு, அது கையாளும் தகவல்களின் அடர்த்தியில்தான் உள்ளது. 64 பிட் கம்ப்யூட்டர், மிகப் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும். கேம்ஸ் பயன்படுத்துகையில் தரப்படும் கிராபிக்ஸ் சிறப்பான தோற்றத்தில் அமையும். அதனால் தான், அறிவியல் பணிகளுக்கான கம்ப்யூட்டர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே 64 பிட் சிஸ்டத்தில் அமைக்கப்பட்டன.
64 பிட் சிஸ்டம் தரும் மிக முக்கிய நன்மை என்னவெனில், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரி, அதிக அளவில் அமைந்திருக்கும். 32 பிட் மாடல் கம்ப்யூட்டரின் மெமரி 4 ஜிபி வரை தான் இருக்கும். இது வந்த புதிதில் மிக அதிகமாகத் தோன்றினாலும், இப்போது பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், கேம்ஸ் ஆகியவை, 4 ஜிபி மெமரியினைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஹோம் கம்ப்யூட்டர்களில் 64 பிட் பயன்பாடும் தரப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிலேயே, ஏ.எம்.டி. நிறுவனம் ஏத்லான் 64, சிப்பினை வெளியிட்டது. தொடர்ந்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட 64 பிட் சிப்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்பட்டன. இப்போது ஹோம் கம்ப்யூட்டர்களிலும் இவை வந்து விட்டன.
தொடக்கத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றாலும், ஏற்கனவே பழக்கத்தில் இருந்த சாப்ட்வேர் புரோகிராம்கள், பிரிண்டர் மற்றும் சவுண்ட்கார்ட் போன்ற துணை சாதனங்கள், 64 பிட் சிப்களுடன் இணைந்து செயல்பட மறுத்தன. ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும் 64 பிட் இயக்கத்திற்கும் இணையாக இயங்கும்படி அமைக்கப் பட்டுக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழக்கத்தில் வந்துள்ளதால், இந்த மாற்றம் முழுமையாக நமக்குக் கிடைத்து வருகிறது.
நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுகையில் 64 பிட் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், புதிய ஹார்ட்வேர் எதனையேனும் இணைக்கையில், அதன் ட்ரைவர் புரோகிராம்கள், 64 பிட் இயக்கத்திற்கேற்ற வகையில் அமைக்கப் பட்டுள்ளனவா என்று கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். (ஒரு ட்ரைவர் புரோகிராம் என்பது, விண்டோஸ் சிஸ்டம் ஹார்ட்வேருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும்.) விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலும் 64 பிட் பதிப்பு இருந்தது. ஆனால் அது அவ்வளவாகப் பிரபல மாகாததால், ஹார்ட்வேர் சாதனங்களை உருவாக்கிய பல நிறுவனங்கள், 64 பிட் திறனுக்கேற்ற ட்ரைவர்களைத் தயாரித்து வழங்கவில்லை.
ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும், 64 பிட் திறனுக்கான ட்ரைவர்களைக் கொண்டுள்ளன. இதனை, அந்த ஹார்ட்வேர் சாதனத்தினைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஹோம் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, 64 பிட் சிஸ்டம் பயன்படுத்துவதில் கிடைக்கும் பெரிய அளவிலான பயன், அந்தக் கம்ப்யூட்டரில் 4ஜிபிக்கும் மேலான அளவில் மெமரி கிடைக்கும் என்பதே. இது பொதுவான பயன் பாட்டிற்கு அதிகமாகத் தோன்றினாலும், இன்றைய அளவில் வரும் பல புரோகிராம்கள், கிராபிக்ஸ் இணைந்த விளையாட்டுத் தொகுப்புகள், அதிக அளவில் மெமரியைப் பயன்படுத்து கின்றன. எனவே, 4 ஜிபிக்கு மேலாக மெமரி இருந்தால், பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்துவது எளிதாக அமையும். மேலும் விண்டோஸ் 7 சிஸ்டம் தன் இயக்கத்திற்கே அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டரில் மெமரி அளவு குறைவாக இருப்பின், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும். இதனை நாம் அதிக புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து இயக்குகையில் அறியலாம். நவீன முப்பரிமாண கேம்ஸ்களை இயக்குகையில், இதனை அறியலாம். இந்த கேம்ஸ்கள், மெமரியில் அதிகப் பங்கினைக் கேட்கும். எனவே மற்ற புரோகிராம்களை நாம் இயக்கவே முடியாது. 4ஜிபி அளவு இதற்கு ஈடு கொடுக்க முடியாது. எனவே, அதிக மெமரியினை அனுமதிக்கும் 64 பிட் சிஸ்டம் நமக்கு சிக்கலைத் தருவதில்லை. புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர் களுக்கு, கம்ப்யூட்டர் தரும் நிறுவனங்கள், பெரும்பாலும் 64 பிட் சிஸ்டங்களையே வழங்குகின்றன. நீங்கள்,உங்கள் பழைய கம்ப்யூட்டரில், புதிய விண்டோஸ் 7 தொகுப்பினை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், கம்ப்யூட்டரின் திறன் அறிந்து மேற்கொள்ள வேண்டும்.

எது முக்கியம்?-தேர்வு காலம்

தற்போது தேர்வு காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் படிப்பு சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சமயத்தில் படிப்பை சிதைக்கும் அமைதி ஆயுதமாக வந்துவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நம்மை மனத்தளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் உலகப் போட்டி என்பதால், தேர்வுக்காக படிப்பவர்களின் மனது கண்டிப்பாக அலைபாயும். ஆனாலும் `கிரிக்கெட்-ஐ’ நாம் நெருங்காமல் இருப்பதற்கு சில ஐடியாக்கள்…

தேர்வு ஒரு மைல்கல்: நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேர்வு எழுதும் வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்குப் பின்னர், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கலாம்.

தினமும் படிப்பு: தொடர்ந்து படியுங்கள்… கடைசி கட்ட படிப்பு என்பது உங்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதால் தினமும் படித்துக் கொண்டே இருங்கள். தினமும், தொடர்ந்து படிப்பவர்களுக்கு சோம்பல் ஏற்படாது.

ஸ்கோர் ஆர்வம்: படிக்கும்போது எக்காரணம் கொண்டும், கிரிக்கெட் ஸ்கோர் குறித்து யாரிடமும் கேட்க வேண்டாம். அப்படி கிரிக்கெட் குறித்து உங்களுடைய ஆர்வம் அதிகமாகும்போது, கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.

இடைவேளை ஆர்வம்: பல மணி நேரம் தொடர்ந்து படிக்காமல் கொஞ்சம் இடைவெளி விடுவது மனதுக்கு ரிலாக்ஸாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் தியானம், யோகா என்று பயிற்சி எடுத்தால் நல்லது. அதை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டியை பார்த்தால், படிப்புக்கும், போட்டிக்கும் இடையே உங்களுடைய மனது ஊசலாடும்.

டிவிக்கு தடை!?: ?இது தேர்வு காலம் என்பதால் டெலிவிஷன் பெட்டியை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். பாடங்களை தேர்வுக்காக படிக்காமல், புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் படியுங்கள்.

கட்டுப்பாடு அவசியம்: தேர்வு காலத்தில் வெளியே செல்லும்போது, கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது, அதைப் பற்றி பேசுவது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். இது உங்களின் நினைவுத் திறனை பாதிக்கும். இதன் தாக்கம் தேர்வில் வெளிப்படும். மேலும் அது தொடர்பாக பேசும் நண்பர்களையும் தவிர்த்து விடுங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்: தேர்வு காலத்தில் உங்களுடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் கட்டுப்பாடாக இருப்பது அவசியம். அதற்காக மனதை கசக்கி பிழிய வேண்டும் என்பதல்ல. படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக இருங் கள்.

வெற்றிக்கான சூத்திரம்: தேர்வுக்கு தயாராகும் போது அதைப் பற்றிய எண்ணங்களும், கனவுகளுமே அதற்கான முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆதலால், வெற்றி ஒன்றே உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சாம்பியன்: நீங்கள் ஹீரோவாக நினைக்கும் அனைத்து சாம்பியன்களுமே, தங்களுடைய விளையாட்டில், போட்டியில்… கவனமாக இருப்பார்களே ஒழிய, மற்ற விஷயங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏன்… நீங்களும் அப்படி இருக்கக் கூடாது?!

அனுபவியுங்கள்: தேர்வுக்காக நீங்கள் படிப்பதை ஒருபோதும் கஷ்டமாக எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து தேர்வு எழுதுங்கள். இந்த தேர்வு உங்களுடைய எதிர்கால முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் ஒரு முத்திரை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டெலிவிஷனுக்கும், கிரிக்கெட்டுக்கும் `தடா’ சொன்னால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் முன்னேறலாம்.

மாசி கருவாடு சம்பல்

கருவாட்டை வற்றல்போல சுவைத்துக் கொண்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கும் அசைவப் பிரியர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு பிடித்தமானதுதான் நாம் இந்த வாரம் கற்றுக் கொள்ளப்போகும் மாசி கருவாடு சம்பல். சுவையுள்ள இந்த சம்பலை ஓரிரு நாட்கள் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடலாம் என்பது அசைவப் பிரியர்களுக்கு ஆனந்தம் தரக்கூடியது.

மாசி கருவாடு சம்பல்

தேவையான பொருட்கள்

மாசி கருவாடு – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
பச்சைமிளகாய் – 4
எலுமிச்சம் பழம் – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* கருவாட்டை மண் போக நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். தலை, வால் பகுதிகளை நீக்கி எடுத்து விடவும்.

* பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை இடித்து கொள்ளவும்.

* வாணலியில் இவற்றை நன்கு வறுத்து, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.

* பிறகு கருவாட்டைச் சேர்த்து நன்கு வறுக்கவும்.

* வறுத்தபின் இறக்கி சூடு ஆறியதும் இவற்றை பொடி செய்தால் மாசி கருவாடு சம்பல் ரெடி.

* சாதத்துடன் சேர்த்து சாப்பிட `கருவாடு சம்பல்’ சுவையாக இருக்கும்.

* 2 நாட்கள் பிரிஜ்ஜில் வைத்திருந்து சாப்பிட்டாலும் கெட்டுப்போகாது.

நகர்ப்புற வீடுகளில் வளரும் காய்கறி தோட்டங்கள்

வீடுகளில் தோட்டம் வளர்த்து பராமரிப்பது ஒரு தனிக்கலை. கிராமப்புறத்தில் தோட்டம் அமைப்பதற்கேற்ற வசதிகள் அதிகம். ஆனால், நகர்புறத்தில் இந்த வசதி குறைவுதான். அதையும் தற்போது சாத்தியமாக்கி வருகிறார்கள், இன்றைய வேளாண் விஞ்ஞானிகள்.

சதுர அடிக்குள் அழகிய தோட்டத்தை உருவாக்க வழிகள்:

* ஜன்னலில் பொருந்துகிற அளவில் பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் மண்ணை நிரப்பி, உங்களுக்குப் பிடித்தமான செடியை அதில் நடுங்கள்.

* பால்கனியில் இருந்து வரும் சூரிய ஒளி செடியின்மீது படும்படி பக்கெட்டை நேராக வைத்துக் கொள்ளுங்கள்.

* தென்பக்கத்தில் இருந்து சூரிய ஒளி செடியின்மீது விழுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால், செடி வேகமாக வளரும். படர்கொடி வகை தாவரங்கள் இன்னும் வேகமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.

* இதன் விதைகள் சில சமயங்களில் வீட்டின் வெளிப்புற சுவரையும் தாண்டி, மண்தரையில் விழுந்து வளர ஆரம்பித்து விடுகிறது. இதனால், புதிதாக மரம் நட்ட பலனும் உங்களுக்கு கிடைக்கிறது.

* வேம்பு, கொய்யா, மாதுளம்பழம் போன்ற மரங்களை உங்கள் வீட்டைச் சுற்றிலும் வளர்த்து வந்தால் பிற்காலத்தில் அவற்றால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

* சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன.

* நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது.

* நகர்ப்புற மக்களும் இனி விவசாயிகளாக மாறலாம். உங்கள் வீட்டிலேயே ஒரு ஓரமாக விரும்பிய தாவரங்களை வளர்த்து அழகிய கிராமப்புற சூழலை உருவாக்கலாம். அதனால் கிடைக்கும் பலன்களால், தனியொரு மனிதனுக்கு உண்டாகும் உணவுப்பஞ்சமும் தீர்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம் என்ற வார்த்தைகள் இனி கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.