Daily Archives: மார்ச் 13th, 2011

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டி?

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த திருக்குவளையில் 1924-ம் ஆண்டில் பிறந்தவர் மு. கருணாநிதி. இப்போது திருக்குவளை நாகை மாவட்டத்தில் உள்ளது.
1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் இதுவரை 11 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரையில் போட்டியிட்டதில்லை.
கருணாநிதி திருவாரூரில் போட்டியிட வேண்டுமென்ற விருப்பத்தை முதலில் வெளியிட்டவர் உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு. திருவாரூரில் 27.7.2010 அன்று நடைபெற்ற திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் கருணாநிதி முன்னிலையிலேயே தனது பேச்சில் இதை குறிப்பிட்டார் எ.வ. வேலு.
அது முதலே திருவாரூரில் கருணாநிதி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் ஏற்பட்டு விட்டது.
அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற திமுகவின் திருவாரூர் தொகுதி கூட்டத்தில், தமிழக முதல்வர் திருவாரூரில் போட்டியிட வசதியாக, திமுகவினர் யாரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமெனக் கோரி விருப்ப மனுவைத் தாக்கல் செய்வதில்லை என்றும், முதல்வர் இங்கு போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்களுக்கான நேர்காணல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாரூர் மாவட்டத்துக்கான நேர்காணலில் திருவாரூர் தொகுதிக்கு (கருணாநிதி பெயரைத் தவிர) வேறு யாரும் விருப்ப மனுத் தாக்கல் செய்யாததால் நேர்காணல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழக முதல்வர் மு. கருணாநிதி திருவாரூரில் போட்டியிட்டால், அவரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய திமுகவினர் அனைவரும் பாடுபடுவோம்’ என்றார் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன்.

நன்றி-தினமணி

காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., கைவிடாதது ஏன்? டில்லி சென்ற பின் ஞானோதயம்

“இனி மத்திய அரசுக்கு பிரச்னைகள் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவோம், சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது’ என, சென்னையில் நடந்த தி.மு.க., உயர்மட்ட செயல் திட்ட குழுவில் எடுத்த முடிவு, அடுத்த சில நாட்களிலேயே டமால் ஆனதற்கு காரணம் அழகிரியின் முயற்சி தான் என தெரியவந்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முதலில் இடம் பெற்றன. இதில் எந்த கட்சிக்குமே திருச்சிக்கு கீழே தென் மாவட்டங்களில் ஓட்டு வங்கியே கிடையாது. கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணிக்கு உள்ள ஒரே பலம் காங்கிரஸ் தான். இந்த மாவட்டங்கள் எல்லாமே மத்திய அமைச்சர் அழகிரியின் பொறுப்பில் உள்ளன. காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க., தேர்தலை சந்தித்தால் இந்த மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட தி.மு.க.,வுக்கு கிடைக்காது. வட மாவட்டங்களில் மட்டும் தி.மு.க.,வுக்கு தொகுதிகள் கிடைக்கும்.அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள். எனவே, தேர்தலுக்குப் பின் அமையும் சட்டசபையில் அழகிரிக்கு ஆட்களே இருக்கமாட்டார்கள். கட்சியிலும் ஸ்டாலின் கை ஓங்கிவிடும். இந்த பின்னணியில் தான் ராஜினாமா என்ற மிரட்டலுடன் டில்லி வந்து இறங்கினர் தி.மு.க., அமைச்சர்கள்.

அதன் பின் நடந்த காங்கிரஸ் – தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை ஏறக்குறைய டி-20 கிரிக்கெட் மேட்சை விட அதிக பரபரப்பாக இருந்தது. முடிந்து விடும் என்று நினைக்கும் போது, அதிரடியாக பிரச்னை ஏற்படும். அவ்வளவு தான், ஊத்திக் கொண்டது தொகுதி பங்கீடு என்று செய்தி வெளியாகும் தறுவாயில், திடீரென காட்சி மாறும்.

தி.மு.க., எம்.பி., மீது பிரணாப்பின் கோபம்! திங்கள் காலை தி.மு.க., அமைச்சர்கள் டில்லி வந்தனர். காலை 11 மணிக்கு, பார்லிமென்டில் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த சந்திப்பு நிகழவில்லை. காரணம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முயற்சி. இவர், முதல்வர் கருணாநிதியுடன் பேச முயற்சித்து, கருணாநிதி அருகே அப்போது அமர்ந்திருந்த ஒரு தி.மு.க., எம்.பி.,க்கு போன் செய்தார். எதற்கு அவசரப்படுகிறீர்கள்? சற்று பொறுங்கள் என்று சொன்னார் பிரணாப். தி.மு.க., எம்.பி.,யோ எஸ் சார்… நோ சார்… என்றாராம்.தி.மு.க., தலைவரிடம் “பிரணாப் நோ என்கிறார்’ என்று சொன்னார். அடுத்த முனையில், இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரணாப், “எதற்கு தவறாக மொழி பெயர்க்கிறீர்கள். நான் பேசுவதை ஒழுங்காக மொழிபெயர்ப்பு செய்து சொல்லுங்கள்’ என்று கோபத்துடன் கத்தியதோடு, போனை கருணாநிதியிடம் கொடுங்கள் என்றார். ஒரு நாள் தவணை கொடுங்கள் என்று கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார் பிரணாப்.

அழகிரியின் முயற்சி : டில்லி என்றாலே, வேண்டாம் என்று தவிர்த்துக் கொண்டிருந்தவர் அழகிரி. ஆனால், பிரணாப் முகர்ஜியுடன் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தினார். காங்கிரசின் பிரச்னையை அறிந்து கொண்டதோடு, தி.மு.க.,வின் நிலையையும் தெரிவித்துவிட்டு, தீர்வு காண முயற்சித்தார் அழகிரி. உடனே விவரங்களை கருணாநிதியிடமும் தெரிவித்தார். அதோடு சற்று கறாராகவே, காங்கிரசோடு கூட்டணி தொடர்ந்தால் தான் நல்லது என்று முதல்வரிடமும் சொன்னார் அழகிரி.

சோனியா டோஸ் : திங்களன்று இரவு அழகிரி வீட்டு வாசலில் காத்திருந்த மீடியா சென்ற பிறகு, அதிரடியாக சோனியாவை சந்திக்க சென்றார் அழகிரியும், மற்றொரு அமைச்சரும். சோனியாவின் அறைக்குள் நுழைந்ததுமே இவர்களுக்கு அதிர்ச்சி. காரணம், சோனியாவின் இறுக்கமான முகம். “ஏழு வருடமாக உங்களுடன் நட்புடன் இருந்ததற்கு, இது தான் உங்கள் பதிலா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், நீங்களாகவே பதவி விலக முடிவெடுத்து, மீடியாவில் அறிவித்துவிட்டீர்கள். காங்கிரசை அவமானப்படுத்தி விட்டீர்கள். ஏன் என்னிடம் பேசவில்லை?’ என, சோனியா பொரிந்து தள்ள, பதில் சொல்ல முடியாமல் இருவரும் அமர்ந்திருந்தனர். “தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடுவீர்களா?’ என, கிண்டலாக கேட்டார் சோனியா. உங்களுடைய செயலுக்கு நீங்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். அனைத்தையும் கேட்டுக் கொண்டு, தி.மு.க.,வின் நிலையை எடுத்துச் சொன்னார் அழகிரி. காங்கிரசோடு கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று அழகிரி பதில் சொல்லிவிட்டு, தி.மு.க., தலைவரிடம் பேசி நல்ல முடிவை எடுக்கிறோம் என்று சொல்லி, இடத்தை காலி செய்தனர் தி.மு.க., அமைச்சர்கள்.

சி.பி.ஐ., விவகாரம் : தி.மு.க., 60 தொகுதிகள் தர தயாராக இருக்க, காங்கிரஸ் 63 கேட்க, வெறும் 3 தொகுதிகளுக்காக, இந்த ராஜினாமா நாடகம் என்று டில்லி வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. விஷயம் அதுவல்ல, சி.பி.ஐ., விசாரணை தான் முக்கிய காரணம் என்கின்றன காங்கிரஸ் – தி.மு.க., வட்டாரங்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை உடனடியாக தொடங்கக் கூடாது. தேர்தலுக்கு பிறகு தான் தொடர வேண்டும்’ என்று தி.மு.க., தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் பார்வையில் இந்த விசாரணை நடப்பதால், எதுவும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. போபர்ஸ் வழக்கை மட்டும் எப்படி சி.பி.ஐ., மூடிவிட்டது என்ற கேள்வி தி.மு.க., தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. கடைசியில், குடும்ப உறுப்பினரை சி.பி.ஐ., விசாரித்தாலும், குற்றப் பத்திரிகையில் அந்த உறுப்பினர்கள் பெயர் வரக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. முடிந்த வரை பார்க்கலாம் என்று மட்டும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்., வேண்டாம் – தி.மு.க., கோஷ்டி : செவ்வாய் காலை தி.மு.க., தலைவர் மற்றும் வேறு சில தலைவர்களுடன் போனிலேயே ஆலோசனை நடத்தினார் அழகிரி. எதற்கு காங்கிரஸ் கூட்டணி? பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை போதும். நம்முடைய நலத் திட்டங்கள் மூலமாகவே ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஒரு கோஷ்டி சொன்னது. இதற்கு ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்தார். விஷயத்தை புரிந்து கொண்ட அழகிரி, கருணாநிதிக்கு போன் செய்து, நமது கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது அவசியம் என்று வற்புறுத்தி அனுமதி வாங்கிவிட்டார். மீண்டும் சோனியாவை சந்தித்து, தி.மு.க.,வின் முடிவை தெரிவித்து 63 தொகுதிகள் தர ஒத்துக் கொண்ட விஷயத்தை தெரிவித்தார் அழகிரி.

நன்றி-தினமலர்

விந்தையான விஞ்ஞான உண்மைகள்!

ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

உயிர் தோன்றி எவ்வளவு காலமாகிறது?


பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகியிருக்க வேண்டும் என்பதற்குத் துல்லியமான கணக்கு இல்லை. என்றாலும் ஏறத்தாழ 500 கோடி ஆண்டு களுக்கு முன்னால் பூமி தோன்றியிருக்கக்கூடும் என்று அறிவியல் முறைகளைக் கொண்டு அறிஞர்கள் ஊகிக்கிறார்கள்.

பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிரினங்கள் தோன்றிஇருக்க முடியும் என்று கணித்துள்ளனர்.

அதிலும் எடுத்த எடுப்பிலேயே இன்று உள்ளது போன்ற உயிரினங்கள் தோன்றி விடவில்லை. ஏறத்தாழ நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீரில் பாசி போன்றவை தோன்றின. இம்மாதிரி தோன்றியதற்கு அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததே காரணமாகும்.

சுமார் 50 கோடி ஆண்டுகள் கடந்தபிறகுதான் உயிர்த் தோற்றங்கள் பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் போன்ற கெட்டியான கூடுகளில் அவை வசிக்க ஆரம்பிக்க, மேலும் ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகின. பின்னர்தான் படிப்படியாக முறைப் படியான உயிரினங்கள் தோன்றி வளர்ந்தன.

செல்போனை அதிகம் பயன்படுத்தினால் கழுத்து வலிக்கும்!

தற்போது எந்நேரமும் செல்போனும் கையுமாக (காதுமாக?) இருப்பவர்களை அதிகம் காண முடிகிறது. செல்போன்களையோ, ஐ-பாடுகளையோ அதிகம் பயன்படுத்தினால் கழுத்தில் வலி ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

`டெக்ஸ் நெக்’ என்ற இந்தப் பாதிப்பு, செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.

குனிந்து செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் அந்தத் தோற்றத்துக்கு ஏற்ப முதுகுத் தண்டுவட எலும்புகளும், தசைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கழுத்து வளைவு, ஆதரவுத் தசைகள், மெல்லிய இணைப்புகளில் ஏற்படும் மாற்றம், கடைசியில் தசைகளில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய நவீன யுகத்தில் செல்போன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது என்றபோதும், அவற்றால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது கையில் உள்ள உபகரணத்தை நாம் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்து செல்போனைக் கேட்கவோ, குறுந்தகவல்களைத் தட்டி அனுப்பவோ செய்யாமல் முகத்துக்கு நேராகப் பிடித்தபடி அவற்றைச் செய்ய வேண்டும். அதிக நேரம் தலை குனிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே இருந்தாலும் இடையிடையே கழுத்தை நிமிர்த்தி `ரிலாக்ஸ்’ செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். கையடக்க எம்பி 3 பிளேயர், ஈ- ரீடர் எனப்படும் மின்னணு புத்தகம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.

“சிற்சில மாற்றங்கள் மூலம் நீங்கள் உங்களின் ஆரோக்கியம், முதுகுத் தண்டுவடம், கழுத்து எலும்பு மற்றும் தசைகளின் ஆயுட்காலத்தைக் காத்துக்கொள்ளலாம்” என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொதுவாக செல்போன் பித்தர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்கள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது!

விண்டோஸ் 7 டிப்ஸ்

இன்னொரு இயக்கம்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அதே அப்ளிகேஷன் புரோகிராமின் இன்னொரு இயக்கத்தையும் தொடங்கலாம். அந்த அப்ளிகேஷன் அதற்கு இணங்க வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள வேர்ட் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கத்தினை அனுமதிக்கும். ஆனால் அடோப் நிறுவன புரோகிராம்கள் அனுமதிக்காது.
அனுமதிக்கும் அப்ளிகேஷன் புரோகி ராமில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கத்தை மேற்கொள்ள, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.
தெளிவான காட்சி அமைப்பு: விண்டோஸ் 7 உங்கள் மானிட்டர் திரைக் காட்சியினை மிகத் தெளிவாகக் காட்டுவதற்கு வழி தருகிறது. இதன் மூலம், படங்கள், டெக்ஸ்ட் போன்றவற்றைச் சிறப்பான தோற்றத்தில் காணலாம். இதற்கு உதவிட இரண்டு சிறிய புரோகிராம்கள் இயங்குகின்றன. அவை – Clear Type Text Tuning and Display Color Calibration. இவற்றின் பைல் பெயர்கள் cttune.exe, dccw.exe. இந்த பைல்களை இயக்கி டெக்ஸ்ட் மற்றும் படக் காட்சிகள் தெளிவாக இருக்கும் வகையில் ட்யூன் செய்திடலாம்.
ஐகான் வரிசை: நாம் விண்டோஸ் இயக்கத்தில், புரோகிராம்களைத் திறந்து பயன்படுத்துகையில், அவற்றிற்கான ஐகான்கள் டாஸ்க்பாரில் அமைக்கப்படும். நாம் திறக்கும் வரிசைக்கேற்ற வகையில் அடுத்தடுத்து இவை அமையும். சில வேளைகளில் இவற்றை நம் விருப்பப்படி வரிசையில் அமைக்க ஆசைப்படுவோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, நாம் விரும்பும் வரிசையில் அமைக்கலாம். முதல் ஐந்து ஐகான்களில் கிளிக் செய்து, புரோகிராம் விண்டோக்களைக் கொண்டு வர, விண்டோஸ் கீயுடன், அந்த புரோகிராம் ஐகான்கள் அமைந்துள்ள வரிசை எண்ணுக்கான கீயை அழுத்தலாம்.
டாஸ்க் பார் இயக்கம்: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களுக்கான மெனுவினைத் திரையில் கொண்டு வந்து, தேர்ந்தெடுக்கும் புரோகிராமினை இயக்க விண்டோஸ் 7 வழி தருகிறது. விண்டோஸ் கீ + T அழுத்த, டாஸ்க்பார் மெனு திரையில் கிடைக்கிறது. இதில் நாம் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்க, அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தலாம். தேர்ந்தெடுத்து பின்னர் என்டர் தட்ட, அந்த புரோகிராம் விண்டோ ஆக்டிவ் விண்டோவாகக் காட்டப்படும்.
காட்சிகளை மாற்ற: நம் கம்ப்யூட்டரின் திரையில் நம் மனதிற்குப் பிடித்த காட்சிகளை செட் செய்து அமைத்திருப்போம். இந்த காட்சியின் தன்மையிலிருந்தே, பயனாளரின் மனநிலையை அறியலாம். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள் விருப்பமாயிருக்கும். அதற்காக அடிக்கடி காட்சியை மாற்றும் வேலையை மேற்கொள்ள முடியாது. விண்டோஸ் 7 சிஸ்டம், நமக்காக இந்த வேலையை எடுத்துச் செயல்படும். நமக்குப் பிடித்த திரைக் காட்சிகளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், எத்தனை நிமிட இடைவெளியில் இவை காட்டப்பட வேண்டும் என்பதனை செட் செய்திட வேண்டும். நாம் செட் செய்வதற்கேற்ப, இந்த காட்சிகள் அடுத்தடுத்து திரையில் தோன்றும். இதற்கு டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில், personalise என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கிடைக்கும் பட்டியலில், Desktop Background என்பதைக் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த இமேஜஸ் மற்றும் போட்டோக்கள் உள்ள போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றிலிருந்து உங்களுக்கு விருப்பமான எத்தனை படங்களையும் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் இதில் உள்ள Shuffle என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தியிருப்பதை உறுதி செய்திடவும். இங்கு எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை இந்த காட்சிகள் மாற்றப்பட வேண்டும் என்பதனை ஏற்படுத்தவும். அவ்வளவுதான். இனி நீங்கள் விரும்பியபடி,குறிப்பிட்ட கால இடைவெளியில் திரையில் தேர்ந்தெடுத்த படங்கள் அடுத்தடுத்து காட்டப்படும். திரைக்காட்சிகளை இவ்வாறு நம் மனதிற்கேற்றபடியும் வேடிக்கையாகவும் அமைக்கலாம்.
டெஸ்க்டாப் அமைப்பு: டெஸ்க்டாப் திரையில் உள்ள ஐகான்களை வகைப்படுத்தி நம்மால் அமைக்க முடியும். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, அதில் Sort By என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் மெனு மூலமாக ஐகான்களை வகைப் படுத்தி அமைக்கலாம். விண்டோஸ் 7 இதனை இன்னும் எளிதாக்குகிறது. நீங்கள் ஏற்படுத்தி வைத்த டிபால்ட் செட்டிங்ஸ் படி, ஐகான்களை அமைத்திட, எப்5 கீயை அழுத்தியபடி இருந்தால் போதும். தேர்ந்தெடுத்த வகையில் ஐகான்கள் வரிசைப்படுத்தப்படும்.
ரைட் கிளிக் மெனுக்கள்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரைட் கிளிக் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, திரையின் ரெசல்யூசனைச் சரி செய்திடலாம். டாஸ்க்பாரில் உள்ள ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், “Unpin this program from the Taskbar” என்பதில் கிளிக் செய்து ஐகானை எடுத்துவிடலாம். டாஸ்க்பார் எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, நாம் அடிக்கடி பயன்படுத்தும் போல்டரைப் பெற்று பயன்படுத்தலாம்.

அரைக்கீரை கொத்துக்கறி தொக்கு

கொத்துக்கறியுடன், அத்தியாவசியமான ஊட்டச்சத்தான கீரையை சேர்த்து தொக்கு செய்து சாப்பிடுவதும் சந்தோஷம் தரக்கூடியதுதான்

அரைக்கீரை கொத்துக்கறி தொக்கு

தேவையான பொருட்கள்

மட்டன் (கொத்துக்கறி) – அரை கிலோ
அரைக்கீரை – ஒரு கட்டு
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
லவங்கம் – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1 குழிக்கரண்டி

செய்முறை

* கீமாவை (கொத்துக்கறி) சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.

* கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் லவங்கம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், தக்காளி இவற்றை வதக்கவும். தட்டிய இஞ்சி, பூண்டு சேர்க்கவும், கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* கீமாவைச் சேர்த்து வதக்கி, போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.

* இப்போது மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* கீரை, மசாலா வெந்து பச்சை வாசனை போய் மட்டனுடன் சேர்ந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கிவிடவும்.

வண்டி மறித்த காளியம்மன்

ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் ரோட்டில் முறம்பு என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வண்டி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மன் படுத்த கோலத்தில் காட்சித் தருகிறார்.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் நடந்த சந்தைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் வணிகர்கள், கிராம மக்கள் வருவார்கள். இந்த சந்தைக்கு ஒரு வயதான வியாபாரியும், அவரது பேத்தியும் மாட்டு வண்டியில் வந்தனர். மாட்டு வண்டியை வியாபாரி ஓட்டி வர பேத்தி வண்டியில் அமர்ந்து இருந்தாள். தற்போது கோவில் இருக்கும் இடத்துக்கு அருகே வண்டி வந்ததும் காளை மாடுகள் இரண்டும் நகர மறுத்தன. எவ்வளவோ முயன்றும் காளைகள் நகர்ந்தபாடில்லை.

அந்த இடத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என நினைத்த வயதான வியாபாரி, சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றுமே அவரது கண்ணுக்கு புலப்படவில்லை. அப்போது திடீரென வண்டியில் அமர்ந்து இருந்த அவரது பேத்தி அருள் வந்து ஆடினாள்.

“என்னை யாருன்னு உனக்கு தெரியலையா? நான்தான் காளி வந்து இருக்கேன். இங்கே தான் படுத்து இருக்கேன். என்னை இந்த வழியாக செல்பவர்கள் வணங்கி சென்றால் அருள் தந்து காப்பேன்” என கூறி கண்கள் சிவந்தபடி நின்றாள்.

அப்போது வியாபாரி, “நீ தான் காளி என எப்படி நம்புவது?” என வினவினார்.

“என்னையே நம்ம மறுக்கிறாயா? கொஞ்சம் தள்ளி சென்று பார்த்தால் நான் யாருன்னு உனக்கு புரியும் போ… போய் பாரு” என ஆக்ரோஷமாக கூறினாள்.

இதனால் அந்த வியாபாரி பேத்தி கை காட்டிய இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காளியம்மன் கண்களை உருட்டியபடி சிவப்பு பட்டு உடுத்தி படுத்த கோலத்தில் ஆங்காரமாக காட்சி அளித்தாள்.

இதை பார்த்து பரவசம் அடைந்த வியாபாரி அவளிடம் மன்னிட்டு கேட்டு தரையில் விழுந்து வணங்கினார். அதற்குள் அங்கிருந்து காளியம்மன் மறைந்துவிட்டாள். அந்த இடத்தில் காளிக்கு கோவிலும் எழுப்பப்பட்டது. வண்டியை மறித்து காட்சி அளித்ததால் இந்த அம்மனை `வண்டி மறித்த காளியம்மன்’ என அழைக்கின்றனர்.

சிறப்பு அம்சம்

12 அடி நீளத்தில் கம்பீரமாக படுத்த நிலையில் வீற்றிருக்கும் இவள் கேட்டவர்களுக்கு கேட்டவரம் அருளும் தாய் உள்ளம் கொண்டவள். குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அருள் கிடைப்பது நிச்சயம். இவள் எழுந்து நின்றால் உலகம் தாங்காது என கருதி இவளது காலில் சங்கிலி போட்டு உள்ளனர். இந்த சங்கிலியை தொட்டு வணங்கினால் தீராத பிரச்சினைகள் உடனே தீரும் என்கிறார்கள்.

தலைமுடியையே பாயாக விரித்து அதன்மேல் தலை வைத்து படுத்து இருக்கும் இந்த காளியம்மனை இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் வணங்கி செல்கின்றனர்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் முறம்பு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இந்த கோவில் அமைந்துள்ளது.