Daily Archives: மார்ச் 14th, 2011

துன்பக்கடலில் ஜப்பான்!

இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இதை ஜப்பான் பிரதமரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய துன்பக்கடலில் மிதக்கிறது ஜப்பான்.ஜப்பானில் நிலநடுக்கம் என்பது புதிதல்ல. அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னை. இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு ஜப்பானியரும் பள்ளிக்கூடத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறார். எப்படி உணர்ந்துகொண்டு, எப்படிப் பாதுகாப்பாகப் பதுங்குவது என்பதெல்லாம் அந்த நாட்டில் குழந்தைகளும் அறிந்த விஷயம். நிலநடுக்கத்தால் வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து சரிந்ததாகச் செய்திகள் இல்லை. ஒவ்வொரு கட்டடமும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான், ஆழிப்பேரலையில் பாதுகாப்புக்காக பலமாடிக் கட்டடத்தின் உச்சியில் நிற்பவர்கள், தங்கள் கட்டடம் கீழே முழுமையாக ஆழிப்பேரலையால் சேதமடைய, அவர்கள் மேலே அப்படியே பாதுகாப்பாக நிற்பதைப் பல தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆழிப்பேரலையும் அவர்களுக்குப் புதிதல்ல. சுனாமி என்ற சொல்லே ஜப்பானியச் சொல்தான். ஆனால், இந்த முறை 8.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கமும், 10 மீட்டர் உயரத்துக்கு ஆழிப்பேரலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்து வந்துவிட்டது. ஜப்பானின் கடலோரப் பகுதியில், ஆழிப்பேரலை எச்சரிப்பு மணி, வானொலி அறிவிப்புகள், ஊடகங்கள் என மக்களுக்குச் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதால், பல லட்சம் உயிர்கள் சற்று முன்னதாகவே காப்பாற்றப்பட்டுவிட்டன. இப்போது இயற்கையின் சீற்றம் முடிந்து, அணுஉலையின் சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் ஜப்பானியர்கள். ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு மின் தேவையை அணுமின் உலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. அனல் மின்நிலையமோ புனல் மின்நிலையமோ அமைக்கப் போதுமான இயற்கை வளம் அங்கு இல்லை. அமெரிக்க அணுகுண்டு வீச்சால், கதிர்வீச்சைச் சந்தித்த தைரியத்தாலோ என்னவோ, அந்த நாட்டில் 50-க்கும் மேற்பட்ட அணுஉலை மின்நிலையங்கள் உள்ளன. தற்போது இவற்றில் 11 மின் நிலையங்கள் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. ஆனகவா அணுஉலைக்கூடத்தில் உள்ள மூன்று உலைகளும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தானாகவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. ஆனால் மற்ற இடங்களில் உள்ள உலைகள் பெரும்பாலும் 1970-ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை. அவை மனிதர்களால் நிர்வகிக்கப்படுபவை.புகுஷிமா அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலைக்கூடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவுடன் அதில் கடல்நீரைப் பாய்ச்சி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இனி அந்த முதல் உலையைப் பயன்படுத்தவே முடியாது. இப்போது மூன்றாவது உலை வெடித்து, உருகிக்கொண்டிருக்கிறது. உலைக் கலன் 15 செ.மீ. கனமுள்ள எஃகு தகட்டினால் மூடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது உருகிக்கொண்டிருக்கிறது. இது வெடித்தால், ஹைட்ரஜன் அணுவெடிகுண்டு விளைவித்த சேதத்தைக் காட்டிலும் அதிக சேதம் விளையும்.ஏறக்குறைய, இந்த நிலைமை செர்னோபில் அணுஉலைக் கூடத்துக்கு ஏற்பட்டதைப் போன்றதுதான். ஏற்கெனவே, அங்கே கதிர்வீச்சினால் உயிரிழப்புகள் நூற்றுக்கணக்கில் ஏற்பட்டுவிட்டதாகவும், 1.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்புகள் உள்ளதா என்பதை அறிய ஜப்பானியர்கள் தாற்காலிக முகாம்களில் சோதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானின் நிலைமைக்காகப் பரிதாபப்பட்டாலும், வேதனையைத் தெரிவித்தாலும் அவர்களை வேறு இடங்களுக்கு, தேவைப்பட்டால் வேறு நாடுகளுக்குப் பாதுகாப்பாகச் சிறிதுகாலம் கொண்டுபோய் வைத்திருக்கும் வாய்ப்புகளையும்கூட நல்க வேண்டும். அந்த அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மின்சாரத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில், அணுஉலை விபத்து காரணமாக தற்போது மின்உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. தொழில்துறைக்கு மின்சாரம் அளிக்க முடியவில்லை. வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. மின்சாரம் கிடைத்தால், தற்போது உருகும் உலைக்கூடத்தில் கருவிகள் செயல்படத் தொடங்கி, நிலைமையை விரைந்து கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள். அதற்கும்கூட வழியில்லை. 2007-ம் ஆண்டு காஸிவாஸகி அணுமின் நிலையம் (8000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது, அதை இரண்டு ஆண்டுகளுக்கு மூடி வைத்த அனுபவம் ஜப்பானுக்கு உண்டு. இருந்தாலும்கூட, தற்போதைய நிலைமை, எல்லா அனுபவங்களையும் மீறியதாக இருக்கிறது. இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள எந்தவொரு நாட்டாலும் முடியாது என்பதைத்தான் மீண்டும் இயற்கை நமக்குச் சொல்கிறது. இந்தியாவில் அணுமின் நிலையங்களை தனியார் அமைக்க ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். அதற்கான இழப்பீடு குறித்துத்தான் நாம் முரண்படுகிறோம். உயிர்இழப்புகள் குறித்து அல்ல. அணுஉலைக்கூடங்களைப் பொறுத்தவரை இந்தியா ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.விஞ்ஞானம் மனிதனின் நாகரிக மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது என்பது உண்மை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்தாக மட்டுமே முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வசதிகளைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவது சரி. எப்படி, எந்த அளவுக்கு என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு நாம் என்ன விலை கொடுக்க நேரும் என்பதை இயற்கையின் சீற்றம் ஜப்பான் மூலம் உணர்த்தி இருக்கிறது.பட்டுத் திருந்துவது ஒருவகை. பார்த்துத் திருந்துவதும் ஒருவகை.

நன்றி-தினமணி

 

குழந்தைகள் குற்றவாளிகளாக வளருவார்களா? என்பதை கண்டறியும் ஆய்வு


அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வொன்றில், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவார்களா? என்பதை அவர்களுடைய மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்து அதன் வழியாக அறிய இயலும் என தெரிவித்து உள்ளார். அவரது ஆய்வின்படி, மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் கொண்டு வரும் மூளையின் பகுதிகளான அமிக்டலா மற்றும் ப்ரிப்ரென்டல் கார்டெக்ஸ் ஆகியவை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறியதாக உள்ளது தெரிய வந்துள்ளது. இத்தகையோர்களுக்கு மூளையை வளப்படுத்தும் ஒமேகா 3 நிறைந்த உணவு கொடுப்பதனால் அவர்களுடைய நடத்தையில் மாற்றம் கொண்டு வர இயலும் என அவர் தெரிவிக்கிறார். மேலும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவது இல்லை என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்துவதில்லை. மாறாக, நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது தொட்டே கற்று கொடுத்து வருவதே அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதை காட்டிலும் மிக சிறந்தது என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 2.3.2011

முகப்பரு தழும்பு மாற!

உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது. இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது.

சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும்.  இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.

முகம் பொலிவு பெற:

வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம்

சந்தனத் தூள் – 5 கிராம்

வசம்பு பொடி – 2 கிராம்

எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.

முகச்சுருக்கம் மாற:

ஆவாரம் பூ காய்ந்த பொடி – 5 கிராம்

புதினா இலை காய்ந்த பொடி – 5 கிராம்

கடலை மாவு – 5 கிராம்

பயத்த மாவு – 5 கிராம்

எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.

வெள்ளரி – 2 துண்டு

நாட்டுத் தக்காளி – 1 பழம்

புதினா – சிறிதளவு

எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும். இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.

முகம் பளபளக்க:

காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

முகப்பரு தழும்பு மாற:

புதினா சாறு – 2 ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்

இவற்றில் பயத்த மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.

ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற:

ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி – 5 கிராம்

புதினா – 5 கிராம்

எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.

வேர்ட் டிப்ஸ்-டேபிளில் எண்கள்:

டேபிளில் எண்கள்: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள எண்களுக்கான ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.
வேர்டில் – ஷார்ட் கட் கீகள்
ShiftF3: தேர்ந்தெடுத்த சொல்லை சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து என மாற்றி மாற்றி அமைத்திடும்.
F4: இறுதியாக நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டினைத் திரும்பச் செயல் படுத்தும். இது தேடுதல், டைப்பிங், பார்மட்டிங், கலரிங் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
ShiftF4: இறுதியாகக் கொடுத்த Find கட்டளையை மீண்டும் செயல்படுத்தும்.
ShiftF5: டாகுமெண்ட்டில் இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்த் தாவிச் செல்லும். தொடர்ந்து அப்படியே மூன்று அல்லது நான்கு எடிட் செய்த இடங்களுக்குச் செல்லும்.
CtrlF6: வேர்ட் விண்டோக்களுக்கு இடையே தாவிச் செல்லும்.
AltF6: டாகுமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ்களுக்கு (பைண்ட் டயலாக் பாக்ஸ்) இடையே தாவிச் செல்லும்.
F7: ஸ்பெல் செக்கரை இயக்கும்.
ShiftF7: தெசாரஸை இயக்கும்.
F8: செலக்ஷன் பகுதியை இயக்கும். எதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ அதன் அளவைப் பெருக்கும். (சொல், வாக்கியம், பாரா அல்லது முழு டாகுமென்ட்)
Altclick: பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள சொல் சார்ந்த தகவல் கட்டத்தினைத் திறக்கும்.
வேர்டில் குறுக்குக் கோடுடன் ஸீரோ
நம் கோயமுத்தூர் வாசகர் ஒருவர், தன் ஆதங்க வேண்டுகோளை விடுத்திருந்தார். தான் ஒரு டெக்னிகல் பொறியாளர் எனவும், தன் டாகுமெண்ட்களில் சைபர் மற்றும் ஆங்கில எழுத்து ‘O’ வினைத் தனிமைப் படுத்தி அமைக்க, சைபரின் குறுக்காக, ஒரு குறுக்குக் கோடு ஒன்றை அமைத்து, டாகுமெண்ட் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும் எனக் கேட்டு, அதற்கான வழி என்னவென்று கேட்டிருந்தார். இதற்கு ஒவ்வொரு முறையும், இந்த எழுத்து அடையாளம் உள்ள பாண்ட் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டியுள்ளது என்றும் எழுதி இருந்தார்.
அவருக்கான வழியாக இதனை இங்கு தருகிறேன்.
இந்த அடையாளம் உள்ள பாண்ட் வகைக்குச் சென்று அமைக்க விரும்ப வில்லை என்றால், கீழ்க்காணும் வழியைப் பின்பற்றலாம்.
டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர், எந்த இடத்தில் குறுக்குக் கோடுள்ள சைபரை அமைக்க வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
1. அடுத்து Shift+F9 கீகளை அழுத்தவும். வேர்ட் பீல்ட் ஒன்றுக்கான அடைப்புக் குறிகளை அமைக்கும்.
2. இந்த சிறப்பு அடைப்புக் குறிக்குள்ளாக eq \o (0,/) என டைப் செய்திடவும்.
3. இப்போது மீண்டும் Shift+F9 கீகளை அழுத்தவும். வேர்ட் பீல்டை எடுத்து விட்டு குறுக்குக் கோடு உள்ள சைபரை அமைத்திடும்.
டைப் செய்திட வேண்டியதை ஏதேனும் ஒரு வகையில் சேவ் செய்து வைத்துக் கொண்டால், அடிக்கடி இதனை அமைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். நேரம் மிச்சமாகும்.
பெரிய டாகுமெண்ட்டில் உலாவ
வேர்டில் அதிக பக்கங்களில் டாகுமெண்ட்களை அமைக்கையில், அதன் சில பக்கங்களுக்கு அடிக்கடி சென்று, என்ன டெக்ஸ்ட் அமைத்தோம் என்று பார்த்து பார்த்து தொடர வேண்டியதிருக்கும். அல்லது தயாரித்த டாகுமெண்ட்டில் புதிய தகவல்களை இட, பல இடங்களில் எடிட் செய்திட வேண்டியதிருக்கும். அப்போது நாம் கர்சரை அம்புக் குறி அழுத்திச் சென்றால், பின்னர் எந்த இடத்தில் நாம் எடிட் செய்தோம் என்று அறிவது சற்று சிரமமாக இருக்கும். இது போல டாகுமெண்ட்டில் விரும்பும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வர, வேர்ட் இரண்டு வழிகளைத் தருகிறது.
முதலாவதாக, நாம் எடிட் செய்திடும் டெக்ஸ்ட் இடத்தில் டெக்ஸ்ட் கர்சரை அப்படியே வைத்துவிட்டு, வலது ஓரத்தில் கிடைக்கும் ஸ்குரோல் பாரில் மவுஸ் முனையை வைத்து, கீழ் அல்லது மேல் நோக்கி இழுத்துச் சென்று, டாகுமெண்ட்டின் பிற இடங்களைக் காணலாம். இவ்வாறு காண்கையில், டெக்ஸ்ட் கர்சர் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் நாம் டாகுமெண்ட்டில் பிற இடங்களுக்குச் செல்வதால், நம் கண்களுக்குத் தெரியாது. மற்ற இடங்களைப் பார்த்த பின்னர், மீண்டும் டெக்ஸ்ட் கர்சர் இருந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இதற்கென்ன செய்வது? ஸ்குரோல் பாரை அங்கும் இங்கும் நகர்த்திச் சென்றால், எந்த இடம் என்று எப்படி அறிவது? இந்த தொல்லையே வேண்டாம். ஜஸ்ட், ஏதேனும் ஒரு கேரக்டர் கீயை அழுத்துங்கள். டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் திரை காட்டப்படும். இதில் ஸ்பேஸ் பாரைக் கூட அழுத்தலாம்.
இதற்கான இன்னொரு வழி ஷிப்ட் + எப்5 கீகளை அழுத்துவது. இந்த கீகளை அழுத்தும்போது, அதற்கு முன்னர் எங்கு டெக்ஸ்ட் கர்சரைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அங்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். இவ்வாறு பின் நோக்கி மூன்று இடங்களுக்குச் செல்லலாம்.
டயலாக் பாக்ஸில் உதவி
வேர்ட் போன்ற அப்ளிகேஷன் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் என்று சொல்லப்படும் தகவல் பெறும் வழிகாட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன. நாம் நம் விருப்பத்தினை, சம்பந்தப்பட்ட புரோகிராமிற்கு எடுத்துக் காட்டி, அதன்படி புரோகிராம் செயல்பட இவை உதவுகின்றன. எனவே இந்த டயலாக் பாக்ஸ்களில், நாம் எதனை எல்லாம் எதிர்பார்ப்போம் என்று முன் கூட்டியே திட்டமிடப்பட்டு, ஆப்ஷன் கள் பல பிரிவுகளில் தரப்பட்டிருக்கும். சில வேளைகளில், அதிகமான எண்ணிக் கையில் இவை இருப்பதால், ஒரு சில ஆப்ஷன்கள் எதற்குத் தரப்பட்டுள்ளன, அவற்றைத் தேர்ந்தெடுத்தால், என்ன மாதிரியான செயல்பாடு நடக்கும் என நமக்குத் தெரிவதில்லை. இவற்றைத் தெரிந்து கொள்ள இந்த டயலாக் பாக்ஸ்களில் ஒரு வசதி தரப்பட்டுள்ளது.
டயலாக் பாக்ஸின் மேல் மூலைகளைப் பார்க்கவும். வலது மூலையில் நம் கண்களுக்கு உடனே தெரிவது, பாக்ஸை மூட நாம் பயன்படுத்தும், எக்ஸ் அடையாளக் குறியாகும். சில டயலாக் பாக்ஸ்களில், அதன் அருகே ஒரு கேள்விக் குறி தரப்பட்டிருக்கும். இதில் கர்சரை அழுத்தினால், சம்பந்தப்பட்ட டயலாக் பாக்ஸ் குறித்த விளக்க, சிறிய விண்டோ ஒன்று வலது புறமாகத் தனியே தோன்றும். அதில் சில பிரிவுகளும் இருக்கும். இவற்றில் கிளிக் செய்தால், அந்த டயலாக் பாக்ஸ் தரும் செட்டிங்ஸ் குறித்த விபரங்கள் கிடைக்கும். இணைய இணைப்பில் இருந்தால், மைக்ரோசாப்ட் சர்வரிலிருந்து தகவல்கள் பெறப்பட்டுக் கிடைக்கும்.

தேசியப் பறவை மயில்

நமது தேசியப் பறவை மயில். அழகு வண்ண தோகைகளால் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவை. மயில் `பாசியானிடே’ எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெப்பமண்டல நாடுகளில் ஈரப்பதமான பகுதிகளே மயில்களின் வசிப்பிடம். மரங்களில் ஓய்வெடுக்கும். மழைவந்தால் ஆட்டமிடும்.

***

மயில்களில் மூன்று வகை பிரபலமானவை. நீல மயில் அல்லது இந்திய மயில் என்று அறியப்படுவது ஒருவகை. இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டும் இந்த வகை மயில்கள் காணப்படுகிறது. பச்சை நிற மயில் பர்மா மற்றும் தெற்காசிய பகுதிகளில் காணப்படுகிறது. வெண்மை நிற மயிலும் பரவலாகக் காணப்படும் மயிலினமாகும். எத்தியோப்பிய மயில்களுக்கு இரட்டைக் கொண்டைகள் இருக்கும்.

***

மயில்கள் நீண்டகால புகழ் பெற்றவை. சாலமோன் மன்னருக்கு இந்திய அரசர்கள் மயில்களை அன்பளிப்பாக வழங்கினர் என்று அறியமுடிகிறது. இது பண்டைக்காலத்தில் மயில்கள் பொன்னுக்கு நிகராக மதிக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. மாவீரன் அலக்சாண்டரும் இந்தியாவிலிருந்து தன் நாட்டுக்கு மயில்களை கொண்டு சென்றாராம். அங்கிருந்து ரோம் நாட்டிற்கும், மற்ற நாடுகளுக்கும் மயிலினம் பரவியதாக தெரிகிறது.

***

மயில்களின் குரலும் குயிலிசை போல மெல்லியதுதான். பிஹுன், பிஹுன் என்று கிரீச்சிட்டுக் கூவும். அடர்ந்த புதர்களில் சருகுகளில் நடக்கும்போது ஒரு ஓசை, ஒலியெழுப்பிக் கத்தும்போது ஒரு ஓசை, பொழுது அடையும் போதும், விடியும்போதும் ஒரு சந்தோஷக் கூவல் என பல விதங்களில் ஒலியெழுப்பும்.

***

மயில்கள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வழக்கமுள்ளவை. பெரிதாக குச்சிகளை பொறுக்கி வந்து கூடு கட்டாது. அந்த இடத்தில் உள்ள சருகுகளை லேசாக சேர்த்தும், லேசாக பள்ளம் பறித்தும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூடு கட்டிக் கொள்ளும். 4 முதல் 6 முட்டை வரை இடும். அரிதாக வேறு பறவைகளின் கூட்டிலும் முட்டையிடும் பழக்கமுண்டு.

***

மயிலின் அடையாளங்கள் அதன் நீண்ட தோகையும், கொண்டையும் தான். இந்திய மயில்களுக்கு கண்ணின் அடியில் வெண்மையான திட்டு புருவம் போல காணப்படுகிறது. கழுத்து நீண்டும், மார்பகம் உறுதியுடனும் இருக்கிறது. ஆண்மயில் உருவத்தில் பெரியது. மயிலினத்தில் பெண் மயில்களைவிட ஆண் மயில்கள் அழகு மிக்கவை.

***

மயில்களின் அழகும், ஆட்டமும் மனிதர்களுக்கு உந்து சக்தியை அளிக்கும். மயில் முட்டையை ஆதிவாசிகளும், பிரபுக்களும் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது மயில்களை வேட்டையாட தடை செய்யப்பட்டிருக்கிறது. முட்டையில் இருந்து மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. அழகான தோகைகள் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

***

மயில்கள் தாவர உணவு, மாமிச உணவு இரண்டையும் சாப்பிடும். பழங்களும், விதைகளும் அதன் முக்கிய உணவு. அத்திப்பழங்களை அதிகம் விரும்பும். கிழங்குகள், இலைகள், தேன் ஆகியவற்றையும் உண்ணும். புழு, பூச்சிகள், தவளைகள், கரையான்களைக் கண்டால் கொண்டாட்டத்துடன் ருசிக்கத் தொடங்கி விடும். பாம்புகள் கிடைத்தாலும் வேட்டையாடி ஒரே `லபக்’கில் முழுங்கி விடும்.

***

மற்ற மிருகங்களை விட மயில்கள் அதிகமாக தோட்டப்பயிர்களை நாசம் செய்யும். 18-ம் நூற்றாண்டில் அட்லாண்டிக்கில் ஹெலனா தீவில் மயிலை அழகுப் பறவையாக நினைத்து வளர்க்கத் தொடங்கினார்கள். சில ஆண்டுகளில் மயில்கள் நாடு முழுவதும் பெருகி விட்டன. அவற்றிடம் இருந்து தோட்டம் துரவுகளைக் காப்பது பெரும் பிரச்சினையாகி விட்டது. அதன்பிறகு மயில்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்யப்பட்டு அடியோடு அழிக்கப்பட்டு விட்டன.

“பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்’

“பனங்கற்கண்டு தேங்காய் சுசியம்’ செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் சமையல் நிபுணர் உன்னி கிருஷ்ணன்.

தேவையானவை :
இட்லி மாவு – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கரண்டி அளவு
சோடா உப்பு – இரண்டு சிட்டிகை
பனங்கற்கண்டு – 100 கிராம்
தேங்காய் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
முந்திரிபருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உடைத்த கடலை – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு
இளமஞ்சள் நிற உணவுக்கான பொடி – சிறிதளவு

செய்முறை:
இட்லி மாவு, மைதா, சோடா உப்பை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.இதனுடன் உடைத்த கடலை மாவை சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட வேண்டும். கரைத்து வைத்த மாவில் உருண்டைகளை நனைத்தெடுத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தீயை மிதமாக வைத்தால் சுவை கூடும்.

சமையல் நேரம்: 20 நிமிடங்கள்

சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா?

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.

பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்தன.

ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும் படி கூறினர்.

உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார் எச்சதத்தன். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.

அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும் மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.

எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார்.

அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.

இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேசுவரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேசுவரரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்டகால நம்பிக்கை.

சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும்.

எனவே இனி அவர் முன்னால் கைத்தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குங்கள். சண்டிகேசுவரரை வணங்குபவர்களுக்கு மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.

வீண் வம்பு வேண்டாம்!

யோகிகள் மிகுந்த தவ வலிமை பெற்றவர்கள். உடல் வலிமையை விட, இவர்களது தவ வலிமை பெருமை வாய்ந்தது. இவர்கள், சந்தோஷப்பட்டு ஆசி கூறினாலும், மனம் வருந்தி சாபம் கொடுத்தாலும், அது பலிக்கும்.
ஏதோ அவசரத்தில் சாபம் கொடுத்தாலும் உடனே பச்சாதாபப்பட்டு, சாப நிவர்த்திக்கான மார்க்கத்தையும் சொல்வர். அதனால், இப்படிப்பட்ட சாதுக்கள் மற்றும் யோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒரு கந்தர்வன், முனிவரின் சாபத்தால் பாம்பானான். எப்படி? ஒரு சமயம் கோபர்கள் எல்லாரும் அம்பிகாவனம் சென்று, சரஸ்வதி நதியில் நீராடி, மகாதேவரையும், பார்வதி தேவியையும் பூஜித்தனர். பிறகு, நிவேதனம் செய்யப்பட்டவைகளை புசித்து, அன்றிரவு அங்கு தங்கினர். எல்லாரும் படுத்திருந்த போது, ஒரு பெரிய பாம்பு வந்து, நந்தகோபரை விழுங்கத் துவங்கியது.
“கிருஷ்ணா… கிருஷ்ணா… என்னைக் காப்பாற்று…’ என்று கத்தினார் நந்தகோபர். மற்றவர்கள் ஓடி வந்து, அந்த பாம்பை அடித்தனர்; ஆனால், அந்தப் பாம்பு சாகவில்லை. அப்போது, பகவான் கிருஷ்ணன் வந்து, அந்த பாம்பின் மீது, தன் பாதங்களை வைத்தார். அடுத்த வினாடி, அந்தப் பாம்பு, கந்தர்வனாக மாறியது.
“நீ யார்?’ என்று கேட்டார் பகவான். அவன், “நான் சுதர்சனனென்ற கந்தர்வன். நான் விமானத்தில் சஞ்சரித்த போது, விரூபமான ஆங்கீரச மகரிஷியைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன். அதனால், அவர் என்னை பாம்பாகும்படி சபித்து விட்டார். அத்துடன், கருணா மூர்த்தியான உம்முடைய பாதம் பட்டதும், சாபம் நிவர்த்தியாகும் என்றும் அருளினார்.
“உம்முடைய பாதம் பட்டதால், பாம்பாக இருந்த நான், இப்போது மீண்டும் கந்தர்வரூபம் பெற்றேன்.
“பாபங்களை நிவர்த்திப்பவரே… உம்மை சரணடைகிறேன். எனக்கு விடை கொடுத்தனுப்ப வேண்டுகிறேன்.
“மகா புருஷ, சாதுக்களுக்கு அதிபரே… சகல லோகங்களுக்கும் அதிபதிகளாகிய பிரம்ம தேவர் முதலியவர்களுக்கு அதிபரே… கிருஷ்ணா… உம்மை தரிசித்த மாத்திரத்தில் பாப நிவர்த்தியாகியது.
“எவருடைய திவ்ய நாமதேயம், கேட்பவர் களையும், உச்சரிப்பவர்களையும், கேட்கச் செய்பவர்களையும் உடனே சுத்தப்படுத்துகிறதோ, அப்படிப்பட்ட உம்முடைய திவ்யமான பாதத்தால் தொடப்பட்ட எனக்கும் பாப, சாப நிவர்த்தி ஏற்பட்டது…’ என்று சொல்லி, அவரை நமஸ்காரம் செய்து, மறைந்தான், கோபர்களும், பயம் நீங்கி கோபாலனைத் தொழுதனர்.
கந்தர்வனுக்கு இது வீண் வம்புதானே… தன் அழகில் பெருமை கொண்டு, அழகில்லாத முனிவரை கேலி செய்வானேன்; பாம்பாக மாறி பரிதவிப்பானேன்! அகம்பாவம் தான் காரணம்.
இன்னும் கூட சிலர் தங்களை ரொம்பவும் அழகு, மன்மதன், ரதி என்றெல்லாம் நினைத்து, ஏதோ ஒரு மாதிரியாக இருப்பவர்களை பரிகாசம் செய்வதுண்டு. பரிகாசம் செய்யப்படுபவரின் மனம் எவ்வளவு புண்படும். அவரும், மனதுக்குள் சாபமிடுவார்; சாபம் பலிக்காமலா போகும்.
அதுவும், சாதுக்களின் சாபம் பலிக்காமல் போகாது. ஜாக்கிரதை… வீண் வம்பு வேண்டாம்.