Advertisements

தேசியப் பறவை மயில்

நமது தேசியப் பறவை மயில். அழகு வண்ண தோகைகளால் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவை. மயில் `பாசியானிடே’ எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. வெப்பமண்டல நாடுகளில் ஈரப்பதமான பகுதிகளே மயில்களின் வசிப்பிடம். மரங்களில் ஓய்வெடுக்கும். மழைவந்தால் ஆட்டமிடும்.

***

மயில்களில் மூன்று வகை பிரபலமானவை. நீல மயில் அல்லது இந்திய மயில் என்று அறியப்படுவது ஒருவகை. இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டும் இந்த வகை மயில்கள் காணப்படுகிறது. பச்சை நிற மயில் பர்மா மற்றும் தெற்காசிய பகுதிகளில் காணப்படுகிறது. வெண்மை நிற மயிலும் பரவலாகக் காணப்படும் மயிலினமாகும். எத்தியோப்பிய மயில்களுக்கு இரட்டைக் கொண்டைகள் இருக்கும்.

***

மயில்கள் நீண்டகால புகழ் பெற்றவை. சாலமோன் மன்னருக்கு இந்திய அரசர்கள் மயில்களை அன்பளிப்பாக வழங்கினர் என்று அறியமுடிகிறது. இது பண்டைக்காலத்தில் மயில்கள் பொன்னுக்கு நிகராக மதிக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. மாவீரன் அலக்சாண்டரும் இந்தியாவிலிருந்து தன் நாட்டுக்கு மயில்களை கொண்டு சென்றாராம். அங்கிருந்து ரோம் நாட்டிற்கும், மற்ற நாடுகளுக்கும் மயிலினம் பரவியதாக தெரிகிறது.

***

மயில்களின் குரலும் குயிலிசை போல மெல்லியதுதான். பிஹுன், பிஹுன் என்று கிரீச்சிட்டுக் கூவும். அடர்ந்த புதர்களில் சருகுகளில் நடக்கும்போது ஒரு ஓசை, ஒலியெழுப்பிக் கத்தும்போது ஒரு ஓசை, பொழுது அடையும் போதும், விடியும்போதும் ஒரு சந்தோஷக் கூவல் என பல விதங்களில் ஒலியெழுப்பும்.

***

மயில்கள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வழக்கமுள்ளவை. பெரிதாக குச்சிகளை பொறுக்கி வந்து கூடு கட்டாது. அந்த இடத்தில் உள்ள சருகுகளை லேசாக சேர்த்தும், லேசாக பள்ளம் பறித்தும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூடு கட்டிக் கொள்ளும். 4 முதல் 6 முட்டை வரை இடும். அரிதாக வேறு பறவைகளின் கூட்டிலும் முட்டையிடும் பழக்கமுண்டு.

***

மயிலின் அடையாளங்கள் அதன் நீண்ட தோகையும், கொண்டையும் தான். இந்திய மயில்களுக்கு கண்ணின் அடியில் வெண்மையான திட்டு புருவம் போல காணப்படுகிறது. கழுத்து நீண்டும், மார்பகம் உறுதியுடனும் இருக்கிறது. ஆண்மயில் உருவத்தில் பெரியது. மயிலினத்தில் பெண் மயில்களைவிட ஆண் மயில்கள் அழகு மிக்கவை.

***

மயில்களின் அழகும், ஆட்டமும் மனிதர்களுக்கு உந்து சக்தியை அளிக்கும். மயில் முட்டையை ஆதிவாசிகளும், பிரபுக்களும் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது மயில்களை வேட்டையாட தடை செய்யப்பட்டிருக்கிறது. முட்டையில் இருந்து மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. அழகான தோகைகள் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

***

மயில்கள் தாவர உணவு, மாமிச உணவு இரண்டையும் சாப்பிடும். பழங்களும், விதைகளும் அதன் முக்கிய உணவு. அத்திப்பழங்களை அதிகம் விரும்பும். கிழங்குகள், இலைகள், தேன் ஆகியவற்றையும் உண்ணும். புழு, பூச்சிகள், தவளைகள், கரையான்களைக் கண்டால் கொண்டாட்டத்துடன் ருசிக்கத் தொடங்கி விடும். பாம்புகள் கிடைத்தாலும் வேட்டையாடி ஒரே `லபக்’கில் முழுங்கி விடும்.

***

மற்ற மிருகங்களை விட மயில்கள் அதிகமாக தோட்டப்பயிர்களை நாசம் செய்யும். 18-ம் நூற்றாண்டில் அட்லாண்டிக்கில் ஹெலனா தீவில் மயிலை அழகுப் பறவையாக நினைத்து வளர்க்கத் தொடங்கினார்கள். சில ஆண்டுகளில் மயில்கள் நாடு முழுவதும் பெருகி விட்டன. அவற்றிடம் இருந்து தோட்டம் துரவுகளைக் காப்பது பெரும் பிரச்சினையாகி விட்டது. அதன்பிறகு மயில்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்யப்பட்டு அடியோடு அழிக்கப்பட்டு விட்டன.

Advertisements
%d bloggers like this: