Daily Archives: மார்ச் 15th, 2011

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம் பற்றி பரபரப்பு தகவல்


சர்வதேச நாடுகள் பற்றி பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் தகவல் திரட்டிகள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவீடனின் ஸ்டாக்ஹோம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைந்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட் மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. பெரிய குகை போல் காணப்படும் இந்த தகவல் மையம் கிரானைட்டை குடைந்து கட்டப்பட்டுள்ளது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் ஆகியவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன. மேலும் செயற்கையான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த உயிருள்ள செடிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைந்துள்ளன. விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கிறது.

30 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது மனித இனம்


அமெரிக்காவின் மிசவுரி பல்கலைகழக பேராசிரியர் கேரல் வார்டு தலைமையில் மனித இனம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், உலகின் மிக பழமையான மனித மூதாதையர்கள் என ஹோமோ எரக்டஸ் இனம் கருதப்பட்டது. அவர்கள் வாழ்ந்த காலம் 1.8 மில்லியன் முதல் 70 ஆயிரம் வருடங்களுக்கு இடைப்பட்டவை ஆகும். தற்போது எத்தியோப்பியா நாட்டில் மனித கால் எலும்பு ஒன்று புதைபொருளாக கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வில் அதன் காலம் 3.2 மில்லியன் வருடங்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது கடந்த 1974-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட லூசி என்ற பெயரிடப்பட்ட எலும்பு கூடுடன் பொருந்துகிறது. மேலும் அந்த இனம் ஆஸ்டிராலொபிதிகஸ் அபாரென்சிஸ் வகையை சேர்ந்தது. மரத்திலிருந்து கீழிறங்கி தரையில் கால் பதித்து நடப்பதற்கு ஏற்ற கால் எலும்புகள் மற்றும் பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றை நன்கு கடித்து உண்பதற்கு ஏற்ப அமைந்த பெரிய தாடைகள் ஆகியவை இந்த இனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். எனவே இதனடிப்படையில் பார்க்கும் போது, மனித இனத்தின் மூதாதையர்கள் சுமார் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க கூடும் என பேராசிரியர் கேரல் தெரிவித்துள்ளார்

எந்த நாட்டுப் பெண் எப்படியிருப்பார்?

ரு சீனப்பெண்ணை நம்மால் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட முடியும். இடுங்கிய கண்கள், சப்பை மூக்கு, இளமஞ்சள் தேகம் என்றிருப்பார். ஆனால் சீனப்பெண்ணையும், நம் நாட்டின் வடகிழக்கு பகுதியையே சேர்ந்த பெண்ணையும் நம்மால் இனம் பிரித்து அறிய முடியாது.

ஆசியப் பெண் எப்படியிருப்பார், ஆப்பிரிக்கப் பெண் எப்படியிருப்பார், ஐரோப்பியக் கண்டப் பெண் எப்படித் தோற்றமளிப்பார் என்று பொதுவாகத்தான் நம்மால் கூற முடியும். முதல்முறையாக, ஒவ்வொரு நாட்டுப் பெண்ணும் எப்படியிருப்பார் என்பதை கணினி முறையில் உருவாக்கியுள்ளார், ஒரு புகைப்படக்காரர். இங்குள்ள பெண்களின் படங்களைப் பாருங்கள். இந்த முகங்களின் பின்னணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அம்சங்கள் இணைந்திருக்கின்றன.

இவற்றை உருவாக்கியவர், தென் ஆப்பிரிக்கப் புகைப்படக்காரர் மைக். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வசிக்கும் மைக்குக்கு, பல்வேறு இனப் பெண்களின் முகங்களில் ஆர்வம். அதனால், `நாளைய முகம்’ என்ற புராஜெக்டை தொடங்கினார். தான் காணும் பெண்களை எல்லாம் அவர்களின் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துத் தள்ளினார். மறக்காமல், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும் கேட்டுக் குறித்துக் கொள்வார்.

ஒரு நாட்டுக்கு நூறு முகங்கள் சேர்ந்ததும், அதிநவீன மென்பொருள் கொண்டு அந்தப் பெண்களின் அம்சங்களை நுணுக்கமாகக் கோர்த்தெடுத்து ஒரே படமாக ஆக்கிவிடுவார். இவ்வாறு பல ஆண்டுகால உழைப்புக்குப் பின் ஒரு தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் மைக். அதில் தங்கள் நாட்டுப் பெண் முகத்தைப் பார்ப்பவர்கள், `அப்படியே எங்க ஊர் பெண் மாதிரி இருக்கிறார்!’ என்று சிலிர்க்கிறார்கள். (நீங்களும்கூட இந்திய, தென்னிந்தியப் பெண்களின் முகங்களைப் பார்த்து சரிதானா என்று தெரிந்து கொள்ளலாம்.)

மைக் தனது படத்தொகுப்பை வெளியிட்டிருக்கும் அவரது இணையதளம் மிகவும் பிரபலமாகிவிட்டது. லண்டனில் ஒருநாள் பாதாள ரெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுதான் மைக்குக்கு இந்த யோசனை தோன்றியதாம்.

“நான் ரெயிலில் அமர்ந்திருந்தபோது, அமெரிக்கப் பெண்கள், இந்தியப் பெண்கள், ஜிம்பாப்வே, சோமாலிய, ஸ்காண்டிநேவிய என்று பலநாட்டுப் பெண்களைப் பார்த்தேன். `என்னடா இது? உண்மையில் ஒரு லண்டன் பெண் எப்படித்தான் இருப்பார்?’ என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படையில்தான் நான் பெண்களைப் பற்றிய தேடலைத் தொடங்கினேன்” என்கிறார் மைக். எல்லாப் பெண்களுக்கும் இடையே ஓர் அடிப்படையான தொடர்பு இருப்பதையும் தன்னால் உணர முடிகிறது என்கிறார் இவர்.

ஒவ்வொரு நாட்டுப் பெண்ணும் சராசரியாக எப்படி இருப்பார் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தப் படங்களை உருவாக்கியிருக்கிறார் மைக். அதனால், வெளிநாட்டுப் பெண்களில் வெள்ளை அல்லது பொன்னிற முடி கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், `சராசரி’ என்று வருகிறபோது கறுப்பு முடியாகி இருக்கிறது. உலகின் பெரும்பாலான நாட்டுப் பெண்கள் கருங்கூந்தல் அழகிகள்தான்.

“ஐஸ்லாந்து பெண்கள்தான் முழுக்க முழுக்க பொன்னிறக் கூந்தல் கொண்டவர்கள்” என்கிறார், 47 வயது மைக்.சென்னா மசாலா

சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தற்காலத்தில் அனைவரும் வயது வித்தியாசமின்றி தொட்டுக் கொள்ள விரும்பும் சைடு டிஷ் `சென்னா மசாலா’ அதி அற்புத சுவையை தன்னகத்தே அடக்கி உள்ள சென்னா, புரதம், நார்ச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. குறைந்த கொழுப்புச்சத்துடன் வயிற்றை நிரப்பும் தன்மை வாய்ந்தது.

சென்னா மசாலாவுடன் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு சீரகத்தூள் போன்றவற்றை சென்னா உறிஞ்சிக் கொள்வதால் நம் வயிற்றில் சேரக்கூடிய வாயுவை தடுக்கும்.

சிறப்பு மிகுந்த சென்னா!

சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து கையால் நன்கு நசுங்கும் பதத்திற்கு வேக வைப்பது மிக மிக அவசியம். இது சென்னா எளிதில் ஜீரணமாக உதவும்.

தானிய வகைகளில் மிகுந்த சுவையும், சத்தும் வாய்ந்த சென்னாவை நன்கு ஊறப்போட்டு வேக வைத்து கமகமவென மசாலா கிரேவி செய்து சேர்த்து சுவைத்தால் அதி அற்புதமாக இருக்கும்.

இம்முறை நாம் சென்னா மசாலா செய்வோமா?

சென்னா மசாலா

தேவையான பொருட்கள்

வெள்ளைச் சென்னா – 2 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைக்க

எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்

அலங்கரிக்க

கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை

* வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

* வதக்கி அரைக்க என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை நன்கு சுருள வதக்கி, 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த சென்னா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைக்கவும். (வேக வைத்த சென்னா 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்ப்பதானது கிரேவியை கெட்டியாக்குவதுடன் சுவையை அதிகரிக்கும்.)

* அரைத்த விழுதை மேலும் சிறிது எண்ணையில் நன்கு வதக்கி, வேக வைத்த சென்னா, உப்பு, வேக வைத்த சென்னாவில் இருந்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவைக்கான குறிப்பு

* தேவையானால் வேக வைத்த உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி கடைசியில் சேர்த்து ஒரு கொதி விடலாம். சுவை பிடித்தோர் உண்பதற்கு முன்பு சென்னாவில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்ணலாம்.

* சுவையான, சத்தான சென்னா மசாலா தயார்.

காய்கள் – அவரைக்காய்

இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.

இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.

ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.

அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி

-தேரையர் குணபாடம்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.

· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.

· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

· சிறுநீரைப் பெருக்கும்

· சளி, இருமலைப் போக்கும்

· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்

· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்

· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.

சாதனைப் பெண்மணி!- “காரடையான் நோன்பு’

பெண்களுக்கு, எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு, உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப் பிறவியாக அவள் திகழ்ந்தாள்.
மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக, 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து, 18 ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை, அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. அந்தக் குழந்தைக்கு, தனக்கு வரமளித்த தேவதையின் பெயரையே இட்டார்.
சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. காரணம், அவளை ஒரு தெய்வப் பிறவியாக கருதினர். கவலையடைந்த அஸ்வபதி, மகளை நேரடியாக மாப்பிள்ளை பார்க்க அனுப்பினார். “உனக்குரிய கண வனை நீயே தேர்ந்தெடு…’ எனச் சொல்லி அனுப்பினார்.
அவள் பல நாடுகளுக்கும் சென்று திருப்தி ஏற்படாமல், ஒரு காட்டிற்குச் சென்றாள். அங்கே த்யுமத்சேனன் என்ற பார்வையற்ற ராஜா, தன் மனைவி ஸைவ்யையுடன் வாழ்த்து வந்தார். அவர்களது மகன் சத்தியவான், அவர்களுக்கு தகுந்த உதவி செய்தான். சத்தியவான் மிகுந்த குணவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். பெற்றவர்களுக்கு சேவை செய்யும் அவனது பண்பு, மிகவும் பிடித்து விட்டது, அவர்கள் எதிரிகளிடம் தங்கள் நாட்டைப் பறிகொடுத்து, காட்டில் தங்கியிருந்தனர்.
ஊர் திரும்பிய சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்ய விரும்புவதாக தந்தையிடம் சொன்னாள். அப்போது, அங்கு வந்த அஸ்வபதியின் குருநாதரான நாரத முனிவர், “சத்தியவான் குணவான் என்பதில் ஐயமில்லை. உலகில் அப்படி ஒரு ஆணை பார்க்க இயலாது. சாவித்திரிக்கு தகுதியானவன் என்றாலும், அவனது ஆயுள் இன்னும் ஓராண்டே இருக்கிறது…’ என்றார்.
“அப்படியானால் வேறு மாப்பிள்ளை பார்…’ என, மகளிடம் அஸ்வபதி சொல்ல, “வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம்; அதை, எதிர்கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம்…’ என்று, திடமாகச் சொன்ன சாவித்திரியை, நாரதர் பாராட்டினார். அந்த திருமணத்தை தைரியமாக நடத்தும்படி அஸ்வபதியிடம் சொன்னார்.
அஸ்வபதியும் திருமணத்தை முடித்து விட்டார். இந்நிலையில், நாரதர் சொன்ன கணக்குப்படி நான்கு நாட்களே இருந்த நிலையில், சாவித்திரி ஒரு விரதத்தை துவங்கினாள். அதன்படி, மூன்று நாட்கள் இரவும், பகலும் விழித்திருந்து, உண்ணாமல் இருக்க முடிவு செய்தாள்.
“அம்மா… இது சாத்தியம் தானா!’ என மாமனார் கேட்டார்.
“எல்லா செயல்களிலும் <உறுதிப்பாடே வெற்றிக்கு காரணம்…’ என்று பதிலளித்த சாவித்திரி, விரதத்தை துவங்கினாள்.
அன்று, பெற்றோருக்கு பழம் கொண்டு வர காட்டுக்கு கிளம்பினான் சத்தியவான்; சாவித்திரியும் உடன் வருவதாகச் சொன்னாள். “காட்டில் நடக்க கஷ்டமாக இருக்குமே…’ என்ற கணவனிடம் அனுமதி பெற்றாள். மாமனார், மாமியாரும் பத்திரமாக சென்று வர அறிவுறுத்தினர். அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலை வலி ஏற்பட்டது.
அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது.
“நீங்கள் யார்?’ என்றாள் சாவித்திரி.
“நீ பதிவிரதை என்பதால், உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்ம ராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன்…’ என்றவன், சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான்.
சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, “நண்பரே…’ என்றாள்.
“நான் உன் நண்பனா?’ என்ற எமனிடம், “ஒருவன், மற்றொரு வனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகின் றனர் என்று சான்றோர் சொல்வர்…’ என்று பதிலளித்த சாவித்திரியிடம், “தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைக் கேள்… உன் கணவனின் உயிர் தவிர…’ என்றான் எமன்.
“என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும்; அவரது நாடு மீட்கப்பட வேண்டும்… என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை; அவருக்கு, நூறு குழந்தைகள் வேண்டும்…’ என்றாள் சாவித்திரி. எமன் அந்த வரத்தைத் தந்து, “இனி போய் விடு!’ என்றான். சாவித்திரி பின் தொடர்ந்தாள்.
“உமக்கு தர்ம ராஜா என்று பெயர் உண்டு. தர்மவான்களுடன் உறவு கொண்டால் பலனளிக்காமல் போகாது. உம்முடன் சிறிது நேரம் நட்பு கொண்ட எனக்கும், அதற்குரிய பலன் உண்டல்லவா?’ என்ற சாவித்திரியின் பேச்சைக் கேட்ட எமன், மேலும் சில வரங்களைக் கேட்கச் சொன்னான்.
“எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்…’ என்றாள் அவள்.
அவளது சமயோசிதத்தை பாராட்டிய எமன், கணவனின் உயிரைத் திருப்பித் தந்தான். நூறு குழந்தைகள் வேண்டுமென கேட்டதன் மூலம், சத்தியவானும், சாவித்திரியின் தந்தையும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர்.
இதன் காரணமாகத்தான், சாவித்திரியின் கதையைக் கேட்பவர்கள் தீர்க்காயுளுடன் இருப்பர் என்று கூறுவர்.
கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குத்தி எடுத்த அரிசியை மாவாக்கி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடை செய்ய வேண்டும். இதை திருவிளக்கின் முன் வைத்து, விளக்கை சாவித்திரி யாக கருதி வழிபட வேண்டும். இதனால் தான் இந்த விரதத்துக்கு, “காரடையான் நோன்பு’ என பெயர் வந்தது.
சாவித்திரியின் கதை கேட்ட பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.