Daily Archives: மார்ச் 16th, 2011

கருப்புபண முதலைகளின் சொர்க்கம் சுவிஸ் வங்கி!

உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாமல், உலக பணக்காரர்களையும் கவர்ந்த நாடு சுவிட்சர்லாந்து. உலக நாடுகளின் கருப்பு பண முதலைகள் பலர், சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கை துவக்கி, ஏராளமான பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி உள்ளதாக, அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர் களும் அலறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை, கூட்டுறவு வங்கி எங்கிருக்கிறது என்பதை அறியாத, நம் பாமர ஜனங்கள் கூட, சுவிஸ் வங்கிகளையும், அதில் காட்டப்பட்டிருக்கும் இந்திய பணத்தையும் அறிந்து, டீக்கடைகளில் சூடாக விவாதிக்கின்றனர்.
அரசியல்வாதிகளும், பண முதலைகளும் சுவிஸ் வங்கிகளை நாட காரணம், “வெரி சிம்பிள்… ரகசியம் காப்போம்!’ என்ற அவர்களின் தாரக மந்திரமே. சுவிஸ் வங்கிகளில் கணக்குத் துவக்க, நம்மூர் வங்கிகளில் கேட்கப்படும், பான் கார்டு, ரேஷன் கார்டு, லொட்டு, லொசுக்கு என, எவ்வித ஆதாரமும் தேவையில்லை; குண்டக்க, மண்டக்க கேள்விகளுக்கும் பதில் கூற அவசியமில்லை. பணம் இருந்தால் மட்டும் போதும்; கணக்கு, “ரெடி!’ ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழைகள் அதிகம் வசிக்கும் நாடு என்ற பெயர் பெற்ற நம் பாரத தேசம், சுவிஸ் வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தான். அரசியல்வாதிகளையும், கருப்பு பண முதலைகளையும் கவர்ந்த சுவிஸ் வங்கி, 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. அப்போதே, வங்கி உரிமையாளர்கள், தங்களது வாடிக்கையாளர்களின் விவரத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள, ரகசிய குறியீட்டை பயன்படுத்தினர்.
வாடிக்கையாளர் விவரங்களை முறையாக பதிந்து, ரகசியமாக வைத்து கொள்ள, 1713ல், “கிரேட் கவுன்சில் ஆப் ஜெனீவா’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் பணத்தை பாதுகாப்பதில் சிறந்த வங்கி என்ற பெயர், சுவிஸ் வங்கிக்கு ஏற்பட்டது. சுவிஸ் வங்கிகளில் பிரதானமானது, “சுவிஸ் பாங்க் கார்ப்பரேஷன்!’ 1854ல், ஆறு வங்கிகள் ஒன்றிணைந்து, “பேஸ்லர் பேங்க்வேரின்’ என்ற பெயரில் இயங்கி வந்தன. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பல வங்கிகள் இணைந்தன. பின்னர், 1917ம் ஆண்டு தற்போதைய பெயரான, “சுவிஸ் பாங்க் ஆப் கார்ப்பரேஷன்’ என பெயர் மாற்றப்பட்டது. இது தவிர, யூனியன் பாங்க் ஆப் சுவிஸ், கிரடிட் ஸ்யூஸே, சுவிஸ் நேஷனல் பாங்க் போன்ற பல வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நாட்டில் உள்ள வங்கி செயல்பாடுகளை வரையறுக்க, “சுவிஸ் பாங்க் அசோசியேஷன்’ 1995ல் ஏற்படுத்தப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் சுவிஸ் நாட்டில், 327க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.
வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காப்பதில், சுவிஸ் நாடு உறுதியாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரத்தை யாராவது வெளியிட்டால், அவருக்கு, ஆறு மாதம் சிறை, 50 ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதம் என்கிறது சுவிஸ் நாட்டு சட்டம். கடந்தாண்டு, “விக்கிலீக்ஸ்’ இணைய தளத்திற்கு, சுவிஸ் வங்கி வாடிக்கையாளர் ரகசியத்தை வெளி யிட்ட முன்னாள் வங்கி ஊழியருக்கு, ஆறு மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவிஸ் வங்கி அசோசியேஷன், 2004ல் கொண்டு வந்த டெபாசிட்டர் பாதுகாப்பு ஒப்பந்தப்படி, வங்கி மீது வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்து, ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாக பெற முடியும். அதே சமயம், ஒருவர் வங்கி கணக்கு துவக்க கெடுபிடி காட்டும் ஷரத்துக்களும், சுவிஸ் நாட்டு சட்டத்தில் உண்டு. ஒருவர் வங்கியில் செலுத்தும் பணம், எந்த வழியில் வந்தது என்பதையும், சட்ட விரோதமாக வந்ததல்ல என்பதற்கான உறுதியும் அளிக்க வேண்டும். சுவிஸ் வங்கி, பணக்காரர்களுக்கோ, கிரிமினல்கள், பதுக்கல்காரர்களின் புகலிடமாக இருப்பதாக கூறுவது தவறு. 5,000 சுவிஸ் பிராங்க் இருந்தாலே கணக்கு துவக்கிக் கொள்ளலாம். கணக்கு துவக்க ஏஜென்டுகளை நாட வேண்டியதில்லை. நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ துவக்கிக் கொள்ளலாம். வெளிநாட்டுக்காரர்கள் என்றால், பாஸ்போர்ட் அவசியம் என சுவிஸ் வங்கி கூட்டமைப்பு கூறுகிறது. இருப்பினும், சுவிஸ் வங்கிகள் இவற்றை கண்டு கொள்ளாமல், டெபாசிட் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. இதனால், பலரும், கோடிக்கணக்கான ரூபாய்களை சுவிஸ் வங்கிகளில் குவித்து வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில், பணத்தை பாதுகாக்கும் சொர்க்கமாக திகழ்வது சுவிஸ் வங்கிகள் தான்.

* இரண்டாம் உலகப் போர் சமயத்தில், (1939-1945) ஜெர்மன், 400 மில்லியன் டாலர் தங்கத்தை (இன்றைய மதிப்பில் நான்கு பில்லியன் டாலர்) பெர்னில் உள்ள தேசிய சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
* இங்குள்ள வங்கிகளில் பல, 200 ஆண்டு கள் பழமை வாய்ந்தவை.
* மற்ற வங்கிகளைப் போலவே, சுவிஸ் வங்கிகளும், கிரடிட், டெபிட் கார்டுகளை வழங்குகிறது.
*”யு.பி.எஸ்.,’ வங்கி, தங்களது முக்கிய வாடிக்கையாளர்களுக்கு, தங்க பிஸ்கெட் டாலான சாவி வழங்குகிறது; இதன் எடை ஒரு கிலோ.
* அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இங்கு உள்ளன. தனியார் வங்கி துவங்க, அவர்களிடம், 7.15 பில்லியன் டாலர் இருக்க வேண்டும்.

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு

உங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப்படுத்த உங்களுக்கு விருப்பமா? எதற்கு இந்த கேள்வி? யார் தான் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம். ஆங்கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரிந்ததைச் சோதித்து அறிந்து கொள்ளவும், அருமையான ஓர் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் முகவரி http://vocabgenii.com. இந்த தளத்தில் நுழைந்து முதலில் உங்களைப் பதிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்துப் பின்னர் பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்த பின்னர், இதில் விளையாடத் தொடங்கலாம். விளையாடுவதற்கு முன்னர், உங்கள் லெவல் என்னவென இந்த தளத்திற்குக் கொடுக்க வேண்டும். பின்னர் விளையாடத் தொடங்கலாம். இதில் பல சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றிலும் ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் மாற்றிக் கொடுக்கப்படும். குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளும் விளக்கமும் தரப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு, சொல்லைக் கண்டுபிடித்து, முதல் எழுத்திலிருந்து வரிசையாகக் கிளிக் செய்திட வேண்டும். சொல் முழுவதும் கிளிக் செய்துவிட்டால், சரி/தவறு எனச் சுட்டிக் காட்டப்பட்டுப் பின் அடுத்த சொல் காட்டப்படும். இப்படியே முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனச் சென்று, இறுதியில் நீங்கள் பெற்ற மதிப்பெண் காட்டப்படும்.
இதனால், நாம் ஒரு அகராதியைப் புரட்டிப் பார்த்த அனுபவத்தினைப் பெறுகிறோம். பல புதிய சொற்களை அறியும் வாய்ப்புகளையும் பெறு கிறோம். நம் ஆங்கிலச் சொல்வளம் பெருகிறது.

அறிமுகமானது ஐ பேட் 2

ஐபேட் டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தி, இந்த சந்தையில் முதலாவதாக நுழைந்து பெரிய அளவில் வர்த்தகத்தினை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம், சென்ற மார்ச் 2ல் தன்னுடைய ஐபேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பான ஐபேட்-2 டேப்ளட் பிசியை வெளியிட்டது. முந்தையதைக் காட்டிலும் ஸ்லிம்மாக, குறைவான எடையில், வேகமான இயக்கத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலை சிறிது கூட குறைக்கப் படவில்லை. வை-பி திறன் கொண்ட 16 ஜிபி மாடல், 499 டாலருக்கும், 64 ஜிபி 699 டாலருக்கும், 3ஜி ஐபேட் 629 மற்றும் 829 டாலருக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ல் அமெரிக்காவில் வெளியான இந்த ஐபேட் மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 25ல் வெளியாகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என அறிவிக்கப்பட்டவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட A5 என அழைக்கப் பட்ட புதிய டூயல் கோர் ப்ராசசர் இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இது இயக்க வேகத்தினை இரு மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரு மடங்கு பணிகளை மேற்கொள்ளலாம். இணையத்தில் உலா வரும் போதும், திரைப்படங்களைப் பார்க்கும் போதும், ஒரு அப்ளிகேஷ னிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போதும், இந்த வித்தியாசத்தினை உணரலாம். பல புரோகிராம்களின் இயக்கம் ஒரே நேரத்தில் மேற்கொள்கையில் இந்த வேகம் புலப்படுகிறது. கிராபிக்ஸ் ப்ராசசர் வேகம் ஒன்பது மடங்கு கூடுதலாக மேற்கொள்ளப்படுகிறது. கேம்ஸ் விளையாடுகையில் இதனை உணரலாம். அல்லது போட்டோ லைப்ரேரி மற்றும் வீடியோ எடிட்டிங் செயல்பாடுகளில் கிராபிக்ஸ் வேகத்தை அறியலாம்.

2. முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் என இரண்டு கேமராக்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கலாம். வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை மிக எளிதாக இந்த கேமராக்களின் மூலம் மேற்கொள்ளலாம். குறிப்பாக பேஸ் டைம் (Face Time) வீடீயோ அழைப்பு மற்றும் அரட்டைக்கு இது உதவுகிறது.

3. முந்தைய ஐபேடைக் காட்டிலும் 33% ஸ்லிம்மாகவும் அழகாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட் 13.4 மிமீ தடிமன் கொண்டிருந்தது. இது 8.8. மிமீ கொண்டுள்ளது. ஐபோன்4 9.3 மிமீ அளவில் தடிமன் கொண்டது என்பது நினைவிற்குரியது. எடை 1.5 பவுண்டுக்குப் பதிலாக 1. 3 பவுண்டு உள்ளது. முதல் முறையாக கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உள்ளது. இதன் உயரம் 9.5 அங்குலம்; அகலம் 7.3; தடிமன் 0.34 அங்குலம்.

4. இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 4.3 பதிப்பிற்கு உயர்த்துகிறது. இது அனைத்து ஐபேட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம். மேலும் சில ஐபாட் சாதனங்களிலும், சில ஐபோன்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த பதிப்பில், மேம்படுத்தப்பட்ட சபாரி பிரவுசர் தரப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்க 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் உள்ளன.

5. ஏர் பிரிண்ட் எனப்படும் தொழில் நுட்பம் மூலம், எந்த வித வயர் இணைப்பு இல்லாமல் டாகுமெண்ட்களையும், போட்டோக்களையும், இணையப் பக்கங்களையும் அச்செடுக்கலாம். வை-பி இருந்தால் போதும். அதனையும் தானே உணர்ந்து அறிவிக்கிறது.

6.ஒரு தொழில் நுட்பம் எப்போது அதிகப் பயன் தருவதாக அமைகிறது என்றால், பயன்படுத்துகையில் அது ஒரு தொழில் நுட்பமாக அறியப்படக் கூடாது. ஐபேட் அந்த சிறப்பைப் பெற்றுள்ளது. விரல்களினால் மெதுவாகத் தட்டியே, இணையத்தை உலா வரலாம்; இமெயில்களைப் படித்து பதில் தரலாம்; போட்டோக்களை விரித்துப் பார்த்து எடிட் செய்திடலாம். நூல்களின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கலாம். நம் ஸ்கிரீன் தொடுதல்கள் இப்படி பல செயல்களாக மாறுகையில் ஏதோ மந்திரக் கோல்களினால் செயல்கள் நடைபெறுவதைப் போல் உள்ளது.

7. இதன் பேக்லைட் எல்.இ.டி. டிஸ்பிளே திரை 9.7 அங்குல அளவில் உள்ளது. அதிக ரெசல்யூசன் கொண்ட போட்டோக்கள், திரைப்படங்கள், விளையாட்டுக்கள் உயிர்த்துடிப்புடன் நம் முன்னே உலா வருகின்றன. நாம் எப்படி இதனைப் பிடித்தாலும், அதற்கேற்ப டிஸ்பிளே மாறிக் கொள்கிறது. இந்த காட்சி 178 டிகிரி கோணத்தில் அகலமாக அழகாக காட்சி அளிக்கிறது.

8. பத்து மணி நேரம் திறன் தரும் பேட்டரி, முந்தைய ஐபேடில் உள்ளது போலத் தரப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. 10 மணி நேரம் கடல் தாண்டும் விமானப் பயணங்களில் இது கை கொடுக்கிறது.

9. இதன் மேல்கவர் புதுமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனத்துடன் இணைந்தே உள்ளது. ஸ்கிரீனை மட்டும் மூடுகிறது. சாதனத்தை மூடினால், இயக்கம் தானாக நின்றுவிடுகிறது. திறந்தால் உடனே இயங்கத் தொடங்கிவிடுகிறது. கவர் மைக்ரோ பைபர் துணியால் ஆனது. இதனைக் கொண்டு ஸ்கிரீனைச் சுத்தம் செய்திட முடியும். மேலாக உள்ள கவர் பாலியூரிதின் அல்லது லெதர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுகையில், இந்த 2011 ஆம் ஆண்டு புதிய ஐபேட் 2 சாதனத்தின் ஆண்டாக இருக்கும். இது அடுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் என ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் கருதுவதாகவும் அது தவறு எனவும் கூறினார். ஐபேட் சாதனம், கம்ப்யூட்டருக்கு அடுத்த நிலையில் மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் பயன்படுத்தக் கூடிய சாதனமாகும் என்று தெரிவித்தார்.

10. இதில் அதிகம் எதிர்பார்த்த யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் புதிய டிஸ்பிளே ஸ்கிரீன் இல்லை. ராம் நினைவகத்தின் திறன் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஐபேடிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இது உள்ளது. புதிய, பெரிய மாற்றங்கள் எல்லாம் எதுவும் கொண்டிருக்கவில்லை. இதனால், போட்டி நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களில் அதிக மாற்றங்களும் வசதிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

யாரை எதிர்த்து யார் போட்டி? உத்தேச பட்டியலால் கட்சிகளில் பரபரப்பு

தி.மு.க.,வில், துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரிலும், சேகர்பாபு ஆர்.கே.நகரிலும், அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்திலும், தி.நகரில் முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமியும், மயிலாப்பூரில் மைத்ரேயன் எம்.பி.,யும் போட்டியிடுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் நிற்க வேண்டும் என, கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வடசென்னை, ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான ஜெயக்குமார் நிறுத்தப்படுகிறார். இத்தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ., சேகர்பாபு தி.மு.க., வேட்பாளராகிறார். அ.தி.மு.க.,வில் மாநில அவைத் தலைவர் மதுசூதனன் அல்லது ஐகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் பால்கனகராஜ் நிறுத்தப்படுகிறார். துறைமுகம் தொகுதியில் தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகன் தமிழரசு அல்லது துறைமுகம் காஜா வேட்பாளராக வாய்ப்புள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டால் திருப்பூர் அல்தாப் போட்டியிடுவார். அ.தி.மு.க, கூட்டணியில் ம.தி.மு.க., இடம் பெற்றால், அக்கட்சிக்கும் ஒதுக்கப்படலாம். கடந்த முறை போட்டியிட்டு 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த சீமாபஷீர் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் கேட்டுள்ளதால், அதன் தலைவர் ஜவாஹிருலுல்லா போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.திரு.வி.க., நகர் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, செங்கை செல்லப்பா, மீனாட்சிசுந்தரம் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., வில் நீலகண்டன் போட்டியிட வாய்ப்புள்ளது.

பெரம்பூர் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் மாவட்டச் செயலர் வி.எஸ்.பாபு, பெருந்தலைவர் காமராஜர் கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.தனபாலன் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., சார்பில், கூட்டணி கட்சியாக மார்க்சிஸ்ட் கோரியுள்ளதால், தற்போதைய எம்.எல்.ஏ., மகேந்திரன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., போட்டியிட்டால் வெற்றிவேல் வேட்பாளராக வாய்ப்புள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் சாமி, கவி.கணேசன் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அ.தி.மு.க., சார்பில் மீனவருக்குத் தான் தொகுதி ஒதுக்கப்படும் என்பதால், முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் வேட்பாளராக வாய்ப்புள்ளது. எழும்பூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அ.தி.மு.க., சார்பில் பிருதிவிராஜன், வக்கீல் கவுரி அசோகன், வெங்கடேசன் ஆகியோர் சீட் கேட்டுள்ளனர். ஆனால், இத்தொகுதியில் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்டால் தேர்தல் பிரிவுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை மாவட்டச் செயலர் யுவராஜ் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க., சார்பில் தென் சென்னை மாவட்டச் செயலர் அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில் பதர்சயீது, விஜயராமகிருஷ்ணா, முகமது அலி ஜின்னா, நூர்ஜஹான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., ஆதிராஜாராம், முகில், வெங்கடாசலபாண்டியன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது. தி.மு.க., சார்பில் முகமதுஅலிஜின்னா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அண்ணாநகரில் இலக்கிய அணி மாநிலச் செயலர் வைகைச்செல்வன், பாண்டுரங்கன், கோதண்டராமனும் மோதுகின்றனர். காங்கிரஸ் சார்பில், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போட்டியிட வாய்ப்புள்ளது. தி.நகரில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி அல்லது கலைராஜன் எம்.எல்.ஏ., வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது. சைதாப்பேட்டையில், செந்தமிழன் அல்லது வக்கீல் பாலசுப்பிரமணியம், மயிலாப்பூரில் மைத்ரேயன் எம்.பி., அல்லது முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், வேளச்சேரியில் ராஜேந்திரபாபு அல்லது முருகன், விருகம்பாக்கத்தில் சரஸ்வதி ரங்கசாமி, கோ.சாமிநாதன், வைத்தியநாதன், அர்ச்சுணன், சுந்தர்ராஜன் ஆகியோர் கேட்டுள்ளனர்.

மதுசூதனனுக்கு கட்சியில் எதிர்ப்பு: அ.தி.மு.க.,வில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவைத் தலைவர் மதுசூதனனுக்கு டிக்கெட் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஆனால், இவருக்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அமைச்சராக இருந்தார் மதுசூதனன். பின்னர், தி.மு.க., ஆட்சியில் இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் கீழ்கோர்ட்டில் விடுதலை ஆனார். அந்த வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தி.மு.க., அரசு முயற்சி செய்தது. தி.மு.க.,வில் தனக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி, அந்த வழக்குகளை மேல்முறையீடு செய்ய முடியாமல் மதுசூதனன் தடுத்துவிட்டார் என, அவருக்கு எதிராக ஆதாரங்களுடன், கட்சி தலைமைக்கு அ.தி.மு.க.,வினர் புகார் கூறியுள்ளனர். “தி.மு.க.,வினருடன் தொடர்பு வைத்திருப்பவர்களை கட்சியை விட்டே ஜெயலலிதா விரட்டும் போது, நெருக்கமாக இருக்கும் மதுசூதனனுக்கு எப்படி சீட் கிடைக்கும்?’ என அ.தி.மு.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர். தி.மு.க., கூட்டணியில், ஆலந்தூர் தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் காயத்ரிதேவி போட்டியிட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க., சார்பில் முகலிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் களத்தில் உள்ளனர். கோவிந்தராஜ் மற்றும் வெங்கட்ராமன் நேர்காணலுக்கும் சென்றதால், இருவரில் ஒருவருக்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலமான வேட்பாளரை நிறுத்தினால், ஆலந்தூர் தொகுதியில் நிச்சயம் அ.தி.மு.க., வெற்றி பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தாம்பரம்: தாம்பரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா களம் இறங்க உள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலர் கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., எல்ல.ராஜமாணிக்கத்தின் மகன் எல்லார் செழியன், நகரச்செயலர் சின்னையா ஆகியோர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கே சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தாம்பரம் தொகுதியை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்லாவரம்: பல்லாவரம் தொகுதியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தி.மு.க., சார்பில் களம் இறங்க உள்ளார். அ.தி.மு.க., சார்பில் பல்லாவரம் நகரச்செயலர் தன்சிங், பம்மல் நகரச்செயலர் இளங்கோவன், அனகாபுத்தூரைச் சேர்ந்த வேலாயுதம், துரைபாபு உள்ளிட்டோர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், தன்சிங்கிற்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இத்தொகுதியை தே.மு.தி.க.,விற்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தே.தி.மு.க.,விற்கு கிடைத்தால் மாவட்ட செயலர் அனகை முருகேசன் களம் இறக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

நன்றி-தினமலர்

ஸ்குவிட் பற்றிய விஞ்ஞானிகள் ஆய்வு மனிதனுக்கு உதவுமா-?


அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் என்ற இடத்தை சேர்ந்த உயிரியியலாளர்கள் கடல் வாழ் உயிரினமான ஸ்குவிட் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதில் குறைந்த அலைவரிசை கொண்ட ஒலி அலைகளை கேட்டு அதற்கேற்ப ஸ்குவிட்கள் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மனிதன் சுமார் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலி அலைகளை கேட்க இயலும். ஆனால் 500 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலியை மட்டுமே ஸ்குவிட்கள் கேட்க முடிவதால் சில சமயங்களில் டால்பின்கள் மற்றும் சில வகை திமிலங்களுக்கு இரையாகவும் நேரிடுகிறது. நகர்ந்து கொண்டே ஸ்குவிட்கள் ஒலிகளை உணர முடியும். அதன் மூளையின் அடிப்பகுதியில் ஹேர் செல்கள் அமைந்துள்ளன. இது ஒலியினை கண்டறிந்து உடனே தகவலாக மூளைக்கு அனுப்புகிறது. மனிதனின் காதுகளும் இதே போன்ற பணியினை செய்கின்றன. எனவே ஸ்குவிட் பற்றிய இந்த ஆராய்ச்சி மனிதன் தனது கேட்கும் திறன் இழப்பை தடுப்பது எப்படி என்பதற்கு விடை காண வழி வகுக்கும் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி?

“சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை.”
வாஷிங்மெஷின்…. உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்…? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால்… வம்புப் பிரசாதமாகி, “ஏண்டா வாங்கினோம்” என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.

இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சுரமுத்து. இவர், சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் “ஸ்ரீசர்வீஸஸ்” என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது…எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, “இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை” என்று நீங்களே சொல்வீர்கள்!” என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது; அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை; நிதி நிலைமை; வீட்டில் தண்­ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.

* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.

* அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ‘ராடு’ போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.

* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீ­ரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

என்ன விலை மெஷினே?

* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.

* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன. 4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.

* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீ­ர் குழாயுடன் இணைத்து விடுங்கள். செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீ­ரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, ‘சுவிட்ச் ஆன்’ செய்ய வேண்டும்.

துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்­ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்­ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீ­ரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்… துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீ­ர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.

* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்­ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.

* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்­ணீர்தான் என்றாலோ… குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்­ணீர் வரும் என்றாலோ… செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீ­ர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்­ணீர்  ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீ­ர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.

* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.

* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.

* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.

* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.

பயன்படுத்துவது எப்படி?

* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.

* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்­ரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீ­ரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.

* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.

* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.

* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.

இந்த மெஷினில் தண்­ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்­ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்­ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.

* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.

* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.

* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீ­ரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு ‘ஃபஸ்ஸி லாஜிக்’ (திuக்ஷ்க்ஷ்ஹ் றீஷீரீவீநீ) என்று பெயர். மெஷினின் உள்ளே வரும் தண்­ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு ‘நியூரோ ஃபஸ்ஸி’ (ழிமீuக்ஷீஷீ யீuக்ஷ்க்ஷ்ஹ்) என்று பெயர். இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.

* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும்.

துவைச்சு, தூள் கிளப்புங்க!

உடலையும், உறுப்புகளையும் சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்!

நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. இந்த உறுப்புகள் பல ஆயிரக்கணக்கான செல்களை கொண்ட திசுக்களால் ஆனது. திசுக்கள் செயல்பட, ப்ரீ ஆக்சிடன்ட், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை, தராசு போல செயல்பட வேண்டும். ப்ரீ ஆக்சிடன்ட், பிராண வாயுவை கொடுக்கிறது. திசுவில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால், பல ப்ரீ ராடிக்கல்கள் வெளியே வருகின்றன.இந்த ப்ரீ ராடிக்கல்கள், உடலையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. ப்ரீ ராடிக்கல்கள் தான், ஆக்சிடேட்டிவ் ஆக்சிடன்ட் (Oxidative Oxidants) என்றழைக்கப்படுகின்றன. இந்த, (Oxidant) களை வெளியேற்றி, உடலுறுப்புகளை காப்பாற்றுவது, ஆன்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) எனும் மூலக்கூறு.வியாதிகள், சர்க்கரை நோய், சாதாரணமாக வரும் ஜுரம், இருமல், விபத்து, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, தொப்பை, சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலைகள், காற்று மாசுபடுதல், கதிரியக்க வீச்சு, புகைப்பிடித்தல், ஊதாக்கதிர்கள் என பல காரணிகள், “ப்ரீ ராடிக்கல்’களை உருவாக்குகின்றன.இதே, “ப்ரீ ராடிக்கல்’ தான், முதுமைக்கும் காரணமாகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களை உருவாக்கி, உறுப்புகள் செயலிழக்க செய்து விடுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுப் பொருட்கள்…கரோடினாய்ட்ஸ் – இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறமுள்ள தக்காளி, காரட், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், ஆப்ரிகாட், பேரீட்சை, பிஸ்தா, பாதாம். இந்த கரோடினாய்ட் நிறமுள்ள சிறு மீன்கள்.ஆன்டி ஆக்சிடன்ட், புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. கொழுப்பு, ரத்தக்குழாயின் உட்சுவரில் ஒட்டிக் கொள்வதை தடுக்கிறது. மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உண்டு.

வைட்டமின் “இ’: இது, “ஆல்பா டோக்கோபரால்’ எனப்படுகிறது. இது கார்ட்டினாடு வகுப்பை சார்ந்தது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், கீரை வகைகள், காரட் ஆகியவற்றில் கிடைக்கிறது.மாமிச உணவை உட்கொள்ளும் புலி, சிறுத்தை ஆகியவை, தாவர உணவை மட்டும் உட்கொள்ளும் மாடுகளை கொன்று, முதலில் அதன் வயிற்றை கிழித்து, அதிலுள்ள இயற்கை உணவான பச்சை இலை, காய்களை உணவாக உட்கொண்டு, பிறகு தான் மாமிசத்தை சாப்பிடுகின்றன; எப்படி நம் அரசியல்வாதிகள் ஓட்டைப் பெற்று, முதலில் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனரோ, அதுபோல!

செலினியம் (Selenium): “டிரேஸ் எலிமென்ட்’ எனப்படும் இது, நிலத்தில் இருக்கிறது. இது நிலத்திலிருந்து விளைந்து வரும் பயறு வகைகள் மற்றும் முட்டையில் அதிகம் உள்ளது. இந்த செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வைட்டமின் “சி’: இதை, “அஸ்கார்பிக் ஆசிட்’ என்பர். இது, “ப்ரீ ராடிக்கலை’ அழிக்கிறது. மேலும், புண்ணில் ஏற்படும் நச்சுகளை அழித்து, புண்ணை ஆற வைக்கிறது. உடல் இரும்பு சத்தை அதிகம் உறிஞ்ச உதவுகிறது. பல் ஈறுகளை பாதுகாக்கிறது. அடிபடும் போது ஏற்படும் சிராய்ப்புகளை, உடனே போக்குகிறது. இதய நோய், கண் புரையை தடுக்கிறது. இச்சத்து, தக்காளி, பப்பாளி, மாம்பழம், உருளைக்கிழங்கில்அதிகம் உள்ளது.

யார் யாருக்கு இவை தேவை?: காலை முதல் இரவு வரை வேலை செய்யும் உழைப்பாளிகள்; தொழில்துறை வல்லுனர்கள்; அதிக பயணம் செய்பவர்கள்; காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை பார்க்கும் நிறுவனம் நடத்தும் முதலாளிகள்.
# நாள் ஒன்றுக்கு 1,200 கலோரி உணவு உட்கொள்பவர்கள்.
#கொழுப்புள்ள உணவு உட்கொள்பவர்கள்.
#குடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி, இவர்களில் இதய நோய், புற்றுநோய் இருந்தால், இவர்களுடைய வாரிசுகள் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை எடுத்து கொள்வது நல்லது.
நீங்கள் நீண்ட பயணம், இரவு தூக்கம் விழித்து இருந்தால் வரும் அலுப்பு ஆகியவற்றுக்கு, “ப்ரீ ராடிக்கல்’கள் தான் காரணம். இதை வெளியேற்ற, “ஆன்டி ஆக்சிடன்ட்’ தேவை.

என்ன நன்மை?

செலினியம் (Selenium): நகம், முடி நன்றாக இருக்க உதவுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் “இ’யுடன் இணைந்து திசுக்களை பாதுகாக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது. நுரையீரல், புராஸ்ட்ரேட், பெருங்குடல் ஆகியவற்றை பாதுகாக்கிறது.

பீட்டாகெரோட்டின்: தோல், எலும்பு, கண் இவைகளை காக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் “இ’: திசுவை சுற்றியுள்ள உரையை காக்கிறது. சிவப்பு அணுவையும் காக்கிறது. தாவர எண்ணெய், பட்டாணி, கோதுமை, சாலட் ஆகியவற்றில் பீட்டா கெரோட்டின் அதிகம்.

வைட்டமின் “சி’: “ப்ரீ ராடிக்கல்’களை அழிக்கிறது. சிமென்ட் போன்ற பசையை உருவாக்கி, எலும்பை சேர்க்கிறது. புண் ஆற உதவுகிறது. பல் ஈறை காக்கிறது. புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.

-பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி

கூகுள் தரும் உடனடி தகவல்

ஒரு நாடு குறித்த பல தகவல்கள் நமக்கு அடிக்கடி தேவையாய் இருக்கும். குறிப்பாக நாம் ஒரு நாட்டைப் பற்றிய சிறு அறிக்கை அல்லது தகவல் தொகுப்பினைத் தயாரிக்க பல வகையான தகவல்கள் தேவைப்படும். எடுத்துக் காட்டாக, அதன் ஜனத்தொகை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி, அது உலக மேப்பில் எங்குள்ளது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடையாகப் பலவகை தகவல்கள் தேவைப்படுகின்றன.
இவற்றைப் பெற, நாம் ஏதேனும் சர்ச் இஞ்சின் சென்று, நாட்டின் பெயரைக் கொடுத்துப் பின்னர் கிடைக்கும் தளமுகவரிகளைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெறுவோம்.
ஆனால், இப்போது கூகுள் சர்ச் இஞ்சின் இந்த தகவல்களை மிகவும் எளிமையாவும் வேகமாகவும் பெறும் வகையில் இயங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனியின் ஜனத்தொகை என்னவென்று அறிய என சர்ச் இஞ்சின் கட்டத்தில் population Germany என்று கொடுத்தால் போதும். ஒரு நாட்டின் தேசிய கீதம் அறிய நாட்டின் பெயருடன் anthem என்றும், தலைநகர் அறிய capital city என்றும், தேசியக் கொடி குறித்துத் தெரிந்து கொள்ள flag என்றும் கொடுத்தால் போதும். எவ்வளவு எளிது பார்த்தீர்களா !!

`கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?

`கிரெடிட் கார்டு’ குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந்தாலும், ஆத்திர அவசரத்துக்கு உதவும் அதன் சிறப்பு மறுக்க முடியாதது. சரியாகப் பயன்படுத்தினால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது.

எனவே, `கிரெடிட் கார்டு’ பெறத் தீர்மானிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்…

ஆண்டுக் கட்டணம் கூடாது

நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் பெற நினைக்கும் கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் எதுவும் இருக்கக் கூடாது. ஆண்டுக் கட்டணம் இல்லாமல் பல நல்ல கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. இந்நிலையில், ஆண்டுக் கட்டணத்துடன் கூடிய கார்டை தேர்வு செய்வதில் அர்த்தமில்லை.

ஆனால் சில கிரெடிட் கார்டுகளின் ஆண்டுக் கட்டணத்தை விட அவற்றின் அனு
கூலங்கள் அதிகம் என்று யோசிப்பவர்கள் இருக்கிறார்கள். இருந்த போதும், நீங்கள் புதிதாக கிரெடிட் கார்டு பெறப் போகிறீர்கள் என்றால், ஆண்டுக் கட்டணம் இல்லாததையே தேர்வு செய்வது நல்லது.

புதுப்பித்தல் கட்டணம் இல்லாதது

சில கிரெடிட் கார்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், புதுப்பித்தல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆக இதுவும் `ஆண்டுக் கட்டணத்துடன்’ கூடிய கார்டுதான். எனவே இந்த கார்டை தேர்வு செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது.

நிலுவைத் தொகையைச் செலுத்தும் வசதி

நீங்கள் உங்கள் வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு பெற்றால், அனேகமாக கார்டுக்கும், வங்கிக் கணக்குக்கும் இணைப்புப் பெறலாம். கார்டுக்கான நிலுவைத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். இது பெரிய வசதி. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த முடிகிறபோது, நீங்கள் ஊரில் இல்லாமல் போவது போன்றவற்றால் தவணைத் தொகையைச் செலுத்தத் தவறும் நிலை ஏற்படாது.

கிரெடிட் கார்டில் நிலுவை ஏதும் இல்லாமல் வைத்திருப்பது ஒரு நல்ல விஷயம். அதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். `பாலன்ஸ் ஜீரோ’வாக வைத்திருப்பது, தேவையற்ற கட்டணங்கள் குறித்த கவலையைக் குறைக்கும்.
செலவழிக்கும் விஷயம்

ஆண்டுக் கட்டணம் இல்லாத `கிரெடிட் கார்டில்’ நீங்கள் அடுத்துக் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் எதற்கு அதிகமாகச் செலவழிக்கிறீர்களோ அதற்கு, குறிப்பிட்ட கார்டு, `ரிவார்டு பாயிண்டுகள்’ அளிக்கிறதா என்பது.

உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை செய்கிறீர்கள். ஆண்டுக்கு மூன்று முறை சொந்த ஊருக்குச் சென்று வருகிறீர்கள், அதற்கான பயணக் கட்டணத்தைச் செலுத்த கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் நல்ல `ரிவார்டு பாயிண்டுகள்’ அளிக்கும் கிரெடிட் கார்டை பரிசீலிக்கலாம். மாறாக, நீங்கள் சொந்த கார் வைத்திருக்கிறíர்கள், அதிலேயே ஊருக்குச் சென்று வருவீர்கள் என்றால், பெட்ரோல் போடும்போது `ரிவார்டு பாயிண்டுகள்’ அளிக்கும் கிரெடிட் கார்டு உங்களுக்கு நல்லது.

வெவ்வேறு கார்டுகள் அளிக்கும் பல்வேறு வகையான சலுகைகளை அலசிப் பார்த்து, உங்களுக்கு எது பொருந்துமோ, எது அதிகப் பயனளிக்குமோ அதைத் தேர்வு செய்யுங்கள்.

வட்டியைத் தவிர்க்க வேண்டும்

கிரெடிட் கார்டுக்கான வட்டி செலுத்துவதை கூடியமட்டும் தவிர்க்க வேண்டும். காரணம் அது மிகவும் அதிகமாக இருக்கும்.

எனவே, தவிர்க்க முடியாத நிலையிலேயே வட்டியைச் செலுத்த வேண்டும். இது மோசமான நிலுவை, மிகச் சீக்கிரமாக பூதாகரமாக வளரக்கூடியது என்பதால் இந்நிலையை அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகமான வட்டி விகிதம் விதிக்கக்கூடிய கார்டுக்கு பதில் குறைவான வட்டி விகிதம் விதிக்கக்கூடிய கார்டை தேர்வு செய்வது நல்லது என்றால், `பாலன்ஸ் ஜீரோ’ நிலையைப் பராமரிப்பது இன்னும் நல்லது.

கடைசியாக, கிரெடிட் கார்டை தேர்வு செய்வதில் எந்த அறிவியல் சூத்திரமும் இல்லை. கார்டுகளின் பல்வேறுவித `சாய்ஸ்கள்’, சலுகைகளைப் பார்த்து, உங்களுக்கு ஏற்றதைப் பெறலாம். நாங்கள் இரண்டு வார காலம் வழங்கிய யோசனைகள், கிரெடிட் கார்டு குறித்து ஒரு பொதுவான `ஐடியா’வை உங்களுக்கு வழங்கியிருக்கும் என்று நம்புகிறோம்.

அடிப்படையான விஷயம் ஒன்றுதான்- கிரெடிட் கார்டை பர்சில் வைத்துச் செலவழிக்காமல், வீட்டில் வைத்து, அத்தியாவசியத்துக்கு மட்டும் செலவழிப்பது!

தமிழக அரசியலில் விசுவாசம் வீழ்ந்தது!

இன்றைய தமிழக அரசியலில் விசுவாசத்திற்கு இடமில்லை என்பது, சாதாரண தொகுதி பங்கீட்டு விஷயத்திலேயே தெரிந்து விட்டது. இதில், அ.தி.மு.க., தி.முக., என்று கூட்டணிகளில் பாகுபாடு இல்லை.

வைகோவை பாருங்கள்… பாவம். கடந்த சட்டசபை தேர்தல் முதல், ஐந்தாண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் விசுவாசமாக தொடர்கிறார். ஐந்தாண்டுகளில் எந்த போராட்டம் என்றாலும், இவர் சொந்தமாக தன் கட்சிக்கென்று நடத்தவில்லை. சாதாரண அறிக்கை வெளியிடுவது என்றாலும், ஒவ்வொரு பிரச்னையிலும், ஜெயலலிதாவின் முடிவு என்ன என்று அறிந்த பின்பே அரசியல் செய்தார்.கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, “ஜெ., எவ்வழியோ அவ்வழி’ என்று செயல்பட்டவர் வைகோ. தன் கட்சியின் பொதுச்செயலராக செயல்பட்டாரோ இல்லையோ, ஜெ.,வின் தளபதியாக இருந்தார். அவரது விசுவாசத்திற்கு இப்போது கிடைத்த பரிசு…? ஓரிரு நாளில் தொகுதி ஒதுக்கப்பட்டாலும், முதலில், “கூட்டணி பஸ்’ ஏறியவருக்கு கிடைப்பது, “கடைசி சீட்’ தானே! இந்த கூட்டணியில் வேறு சில புதுவரவுகளும், ஓரிரு தொகுதிகளை பெற்றாலும் கூட, முதலில் வாங்கி மரியாதையோடு, “செட்டில்’ ஆகிவிட்டன. ஏன்… இந்த பக்கமா, அந்த பக்கமா என்று அலைந்த சரத்குமாருக்கே இரண்டு சீட் கிடைத்து விட்டதே! இதுவே, வைகோவிற்கு இப்படி இழுபறி ஏற்பட்டிருக்காவிட்டால், இதற்குள் பிரசாரத்தை துவங்கி இருப்பார். கடந்த தேர்தலில் சென்னை, கோவை, மதுரை பகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, வைகோவின் தொடர் பொதுக்கூட்டங்களே முக்கிய காரணம். வாக்காளர் மனதில் ஓரளவேனும் சலனம் ஏற்படுத்த அவரது உரைகள் உதவின.

விசுவாசத்திற்கு மரியாதை இல்லை என்பது தி.மு.க., கூட்டணிக்கும் பொருந்தும். தி.மு.க,வின் உறுதியான கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு முதலில் சீட் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. “அமைச்சர்கள் ராஜினாமா’ என்ற நாடகம் டில்லி வரை நடந்தேறிய பின், பேரங்கள் படிந்த பின் தான், சீட் எண்ணிக்கை உறுதியானது. ஆனால், தி.மு.க.,விடம் முதல்மரியாதை பெற்று முன்னதாவே, பா.ம.க., சீட் பெற்றுக் கொண்டது. கூட்டணியின் புதுவரவான கொ.மு.க.,வுக்கு இழுபறியும், தடங்கலும் இல்லாமல் ராஜமரியாதை.இப்படி, கூட்டணி விசுவாசம் இழந்து, இழுபறிகளில் துவங்கி, அவமானப்பட்டு, இறுதியில் தலைவர்கள் வேறு வழியின்றி தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம். ஆனால், தேர்தலுக்கு உழைக்கும் தொண்டன் மனம் இணையுமா? கட்சித் தலைவர்களுக்கே வெளிச்சம்.

நன்றி-தினமலர்