Daily Archives: மார்ச் 19th, 2011

இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு

தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். ‌தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையி்ல், கல்வியை மாநில பட்டிய‌லில் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும், தமிழகத்தில் மேல் முறையீட்டு மையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், நுழைவு தேர்வு கூடாது என்பதை தி.மு.க., வலியுறுத்தும், நதிகளை தேசியமயமாக்கவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் எழுத அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறளை தேசய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறத்துவோம், ஈழத்தமிழர் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். கரும்பு பருத்தி, காய்கறி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்போம். நகர்புறங்களில் நுகர்வோம் யைம் அமைக்க நடவடிககை எடுக்கப்படும். சிறப்பாக இயங்கும் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் போன்றவற்றிற்க்கும் விரிவு படுத்துவோம். விவசாய நிலங்‌களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம், சொட்டு நீர் இல்லா விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

மேலும் நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை பெருக்குவோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தொழி்ற்சா‌லைகள், வீடுகளுக்கு தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மீனவர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி மீனவர் நலன் காக்கப்படும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவோம். கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். பால், முட்டை உற்பத்தியை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அரசின் சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்கு ‌முறை ஆணையம் அமைக்கப்படும், மஞ்சள், காமாலை போன்றவற்றிற்கு போடப்படும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாதம் ஒரு முறை முதியோருக்கு அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் காசநோய் மையம் அமைக்கப்படும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படும்.

திருச்சி மதுரையில் மன நல மருத்துவமனை அமைக்கப்படும். அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.

அரசு அலுவலர்களில் கோரிக்கைகளை கலையவும், அரசு ஊழியர்கள் சங்கங்களின் ‌கோரிக்கைளை களைய ஆணையம் அமைக்கப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களிலிருந்து 4 மாதமாக உயர்த்தப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு ஓய்வரை அமைக்கப்படும்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வழங்கப்படும் ஒரு ரூபாய்க்கு 30 கிலோ அரிசி வழங்கும் திட்டம் இலவசமாக வழங்கப்படும்.

தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகள் மேல் நிலை பள்ளிகளாகவும் மாற்றப்படும். மாணவர்களுக்கு 3 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை., அமைக்கப்படும். பல்கலைகழகங்களில் பிரெஞ்ச், ஜெர்மன், அராபி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லாத நிலை உருவாக்குவோம். அரசு கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் 2 லட்ச ரூபாய் கடன் 4 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். இதில் 2 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். பொங்கல் அன்று கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு அரசு பேருந்தில் இலவச பாஸ் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும். முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 750 ரூபாயாக உயர்த்தப்படும்.

நெசவுத்தொழில் நசியாமல் இருக்க அதிக கூட்டுறவு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து 300 யூனிட்டாக உயர்த்தப்படும்.

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண அதிக உப்புத்த‌ன்மை கொண்ட சாய நீரை ஆவியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும். தலித் கிறிஸ்துவர்கள் ஆதிதிராவிட பட்டியலில் இடம்பெற்றிட மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

திருநங்கைகளுக்கு தனியாக சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும். எஞ்சிய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.

சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீ்ட்டை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம். முன்பேர வணிகம், யூக வணிகத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தல்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் காங்கீரிட் வீடு கட்ட வழங்கப்படும் 75 ஆயிரம் இனி ஒரு லட்சமாக உயர்த்தப்படும். ஏற்கனவே அடையாள அட்டை ‌பெற்றவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். சுற்றுலா தளங்களை சிறந்த சுற்றுலா தளங்களாக மாற்றப்படும்.

பெண்களுக்கு வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி 2ல் ஒன்றை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க, புகார்கள் விரைவாக விசாரித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். சென்னைக்கு அருகே புதிய துணை நகரம் உருவாக்குவோம். புதிய ஏரிகளை உருவாக்கி குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

கண்மாய்கள், ஆறுகளை தூர்வாறும் பணிகள் நடக்கும். கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலிருந்து அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

நன்றி-தினமலர்

“சூப்பர் மூன்’ இன்று பார்க்கலாம்

பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். “சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும். இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகோவுடன் – அ.தி.மு.க.,நிர்வாகிகள் சந்திப்பு; ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதி,ஒரு ராஜ்யசபா சீட் தர முடிவு

ம.தி.மு.க.,வுக்கு ‌13 தொகுதிகளும் , ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கி தரப்படும் என அ..தி.மு.க., தரப்பில் வைகோவிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ம.தி.மு.க., உயர்நிலைக்கூட்டத்தில் பேசி விவாதிக்கப்படும் . இதனை தொடர்ந்து மாலையில் மாவட்ட செய்லாளர்களிடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க, தலைமையிலான கூட்டணியில் கசப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று அவசர, அவசரமாக , கூட்டணி கட்சி தலைவர்களை ஜெ., சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் பார்வர்டுபிளாக் கட்சி, மனிதயேமக்கள் கட்சி, புதிய தமிழகம், இ.கம்யூ., மார்க்., கம்யூ என அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ,சமத்துவ மக்கள் கட்சி, என அனைத்து கட்சிகளுக்கும் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்குவதாக ஜெ., சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டடது. ஆனால் தே.மு.தி.க., நிர்வாகிகள் நடத்திய சந்திப்பில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை. நள்ளிரவு வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்றும் தொடரும் என்று தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க., உயர்நிலை கூட்டம் : இதற்கிடையில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என்றும் இது தொடர்பாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதித்து வருகின்றனர்.மாலையில் மாவட்ட செயலர்களுடன் வைகோ கலந்து பேசுகிறார். எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்படும் கூட்டமாக இது இருக்கும்.

இதற்கிடையில் அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு குறித்து உயர்நிலைக்கூட்டத்திலும், மாவட்ட செயலாளர்களுடனும், வைகோ கலந்து ஆலோசிக்கிறார். பின்னர் வைகோ போயஸ்கார்டனுக்கு சென்று தொகுதிகள் குறித்து சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி-தினமலர்

அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு : அனைவரையும் சமாதானப்படுத்தினார் ஜெ.,

அ.தி.மு.க., கூட்டணியில், கடந்த இரு நாட்களாக பெரும் பரபரப்பும், சலசலப்பும் நடந்து வந்த நிலையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. தொகுதி ஒதுக்கீட்டில், கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் ஜெயலலிதா நேரடியாக சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது.

 

அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு 41 இடங்கள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை, அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவிடம் அளித்திருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தங்கள் வசம் உள்ள தொகுதிகளை மீண்டும் கேட்டிருந்தனர்.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதி மாலை திடீரென 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இது, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர் பார்த்த பல தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்ததும், அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

 

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். உடனே, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர், நேற்று முன்தினம் தே.மு.தி.க., அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்தை சந்தித்து பேசினர். இதனால், தே.மு.தி.க., தலைமையில், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணி ஏற்படப்போவதாக தகவல்கள் பரவின. ஆனால், இக்கருத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுத்தனர்.இரண்டாவது நாளாக நேற்றும், காலையில் இருந்து அ.தி.மு.க., கூட்டணியில் பரபரப்பு தொடர்ந்தது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்காத நிலையில், தன்னிச்சையாக அ.தி.மு.க., 160 தொகுதிகளை அறிவித்துவிட்ட நிலையில், அக்கட்சி கொடுக்கும் தொகுதிகளை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்த நிலையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.

 

அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களான ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க., தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை, ஜெயலலிதாவிற்கு தெரிவித்ததும், அடுத்தகட்ட முன்னேற்றம் ஏற்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், பிற்பகலில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில், தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகிய அனைவரும், அடுத்தடுத்து ஜெயலலிதாவை சந்தித்தனர்.

 

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சமாதானப்படுத்தியதை அடுத்து, அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்களாக நடந்துவந்த பரபரப்பும் முடிவுக்கு வந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஜெ.,வை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அ.தி.மு.க.,வில் யாரோ சிலர் ஏற்படுத்திய குழப்பத்தை, ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு சரிசெய்ததால்அ.தி.மு.க.,வினர் உற்சாகமடைந்துள்ளனர். அ.தி.மு.க., இறுதியாக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என தெரிகிறது.

 

கூட்டணி கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார் ஜெ., : அ.தி.மு.க., கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளை ஜெயலலிதா நேற்று ஒதுக்கீடு செய்தார்.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நேற்று மாலை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதையடுத்து, அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. குடியரசு கட்சிக்கு கே.வி.குப்பம், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குனேரி ஆகிய தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கொங்கு இளைஞர் பேரவை கட்சிக்கு பரமத்தி வேலூர் தொகுதியும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சம்பந்தபட்ட கட்சிகளின் தலைவர்கள், தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு : அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:

 

1. பென்னாகரம்
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. புதுக்கோட்டை
4. வால்பாறை (தனி)
5.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
6. சிவகங்கை
7. தளி
8. குடியாத்தம் (தனி)
9. பவானிசாகர் (தனி)
10. குன்னூர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மாகம்யூக்கு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு:சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ., வீட்டில் நடந்த 11 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மா.கம்யூ., போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன.அதன்படி திண்டுக்கல் , அரூர் ,சிதம்பரம் கீழவேளூர் (தனி),பெரம்பூர் (தனி), விக்கிரவாண்டி ,விளவங்கோடு, மதுரை தெற்கு, பெரியகுளம், திருப்பூர் தெற்கு, மதுரவயல், பாளையங்கோட்டை ஆகியன என முடிவு செய்யப்பட்டிருப்பதாக மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்ர் தெரிவித்தார்.

 

கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை(தனி) தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், இ.கம்யூ.,கட்சிகளுக்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்ட நிலையில் தே.மு.தி.க.,சார்பில் இன்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

 

அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் சமரசம்: மணிக்கு மணி நிலவரம் : காலை 11 மணிக்கு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினர் சென்ற பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.
*மதியம் 1 மணி: போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இல்லத்திற்கு, தொகுதி பங்கீட்டு குழுவினர் வந்தனர்.
*மதியம் 2 மணி: தே.மு.தி.க., தொகுதி பங்கீடு குழுவினர், ஓட்டலுக்கு வந்தனர். அவர்களிடம், நீண்ட நேரம் அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், தொகுதி அடையாளம் காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
*மதியம் 2.40 மணி: ஜெயலலிதா இல்லத்தில் இருந்து அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்கா ஆகிய நான்கு பேர் தங்களது காரில் புறப்பட்டு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
*மாலை 3.05 மணி: அ.தி.மு.க., தலைமை அலுவகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகிய இருவரும் வந்தனர்.
*மாலை 3.30 மணி: அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன், இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்தனர்.
*மாலை 3.35 மணி: நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மகேந்திரன் பேட்டி அளித்தார்.
*மாலை 3.40 மணி: ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு சென்றனர்.
*5.30 மணி: அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், பொதுச் செயலர் இசக்கிமுத்து ஆகியோர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தனர்.
*மாலை 5.35 மணி: இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 5.40 மணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தனர்.
*மாலை 6.30 மணி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.40 மணி: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.43 மணி: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார்.
*மாலை 6.55 மணி: சரத்குமார் வெளியே வந்தார்.
*மாலை 6.57 மணி: தனியரசு வெளியே வந்தார்.
*மாலை 7 மணி: சேதுராமன் வெளியே வந்தார்.
*மாலை 7 மணி: தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலர் சுதீஷ் ஆகியோர், ஜெயலலிதா வீட்டிற்கு உள்ளே சென்றனர்.
* மாலை 7:50 மணி: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன், ஜெயலலிதா வீட்டிற்கு சென்றார்.

நன்றி-தினமலர்