Daily Archives: மார்ச் 21st, 2011

வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.  தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?  தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. அவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்?  இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.  தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன?  குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது. வசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி.  ÷மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது.  ÷இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்?  இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?  அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர்  காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும்.  தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா? ஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.  இலவசங்களையும் கடன்பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது. இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி?  இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப்படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள். பாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்?

நன்றி-தினமணி

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

புதிய பட்டியல் : ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா, அண்ணாநகர்- கோகுல இந்திரா, தியாகராய நகர்- வி.பி. கலைராஜன், வாலாஜாபாத்- ப.கணேசன், வேளச்சேரி- எம்.கே.அசோக், ‌செய்யூர் ( தனி) – வி.எஸ்.ராஜி, பொன்னேரி ( தனி) – பொன்ராஜா, அம்பத்தூர்- எஸ்.வேதாச்சலம், வில்லிவாக்கம்- பிரபாகர், ராயபுரம் – டி.ஜெயக்குமார், மயிலாப்பூர் – ராஜலட்சுமி, சோழிங்கநல்லூர்-கே.பி.கந்தன், ஆவடி- எஸ்.அப்துல் ரஹிம், மாதவரம்- வி.மூர்த்தி, கொளத்தூர் -சைதை துரைசாமி, திருவொற்றியூர் – கே.குப்பன், ஆயிரம் விளக்கு- ப.வளர்மதி, துறைமுகம்- பழ.கருப்பையா, போளூர் – எஸ்.ஜெயசுதா லட்சுமிகாந்தன், வந்தவாசி (தனி) – செய்யாமூர் .வெ. குணசீலன், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் – பி.வெற்றிவேலு, திண்டிவனம்- டாக்டர் த.அரிதாஸ், விழுப்புரம் – சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை-ரா.குமரகுரு. சங்கராபுரம்-ப.மோகன், கள்ளக்குறிச்சி (தனி). ப.அழகுவேல், ஆத்தூர் (தனி) எஸ்.மாதேஸ்வரன், ஏற்காடு-பெருமாள், ஓமலூர்-பல்பாக்கி ஸ்ரீகிருஷ்ணன், சேலம் மேற்கு- ஜி.வெங்கடாச்சலம், எடப்பாடி-பழநிச்சாமி, சங்ககிரி- விஜயலட்சுமி, சேலம் தெற்கு- எம்.கே.செல்வராஜ். வீரபாண்டி-எஸ்.கே.‌செல்வம், ராசிபுரம் (தனி) ப.தனபால், நாமக்கல்-கே.பி.பி.பாஸ்கர், ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம், குமாரபாளையம்-பி.தங்கமணி, மொடக்குறிச்சி- ஆர்.எம்.கிட்டுச்சாமி. தாராபுரம் (தனி) – கே.பொன்னுசாமி, காங்கேயம்-என்.எஸ்.என்.நடராஜ், அந்தியூர்-எஸ்.எஸ்.ரமணிதரன், பவானி-பி.ஜி.நாராயணன், கோபிச்செட்டிபாளையம்-கே,ஏ.செங்கோட்டையன், உதகமண்டலம்- புத்தி சந்திரன், மேட்டுப்பாளையம்-ஓ.கே.சின்னராஜ், அவிநாசி (தனி)-ஏ.ஏ.கருப்பசாமி, திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.என்.ஆனந்தன், பல்லடம்-கே.பி.பரமசிவம், கவுண்டம்பாளையம்-வி.சி.ஆறுகுட்டி, கோயம்புத்தூர் வடக்கு- த.மலரவன், தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூர்- ஆர்.சின்னசாமி, கிணத்துக்கடவு-சே.தாமோதரன், பொள்ளாச்சி-எம்.கே.முத்துக்கருப்பண்ணசாமி, உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி வி ஜெயராமன், மடத்துக்குளம்- சி.சண்முக வேலு, பழநி- கே.எஸ்.என்.வேணுகோபாலு, ஒட்டன்சத்திரம்- பி.பாலசுப்ரமணி, குளித்தலை-ஏ.பாப்பாசுந்தரம், மணப்பாறை-ஆர்.சந்திரசேகர், நத்தம்-ரா.விஸ்வநா‌தன், திருச்சி மேற்கு-என்.மரியம் பிச்சை, திருச்சி கிழக்கு- ஆர்.மனோகரன், மணச்சநல்லூர்-டி.பி.பூனாட்சி, முசிறி-என்.ஆர்.சிவபதி, வேடசந்தூர்- பழனிச்சாமி, அரவக்குறிச்சி- வி.செந்தில்நாதன், துறையூர் (தனி) – டி.இந்திராகாந்தி, பெரம்பலூர் (தனி) – இளம்பை ரா.தமிழச்‌செல்வன், அரியலூர்- துரை மணி‌வேல், நெய்வேல்- எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியம், புவனகிரி- செல்வி ராமஜெயம், குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ரா. ராஜேந்திரன், கடலூர். எம்.சி.சம்பத், காட்டுமன்னார்கோயில் (தனி)- என்.முருகமாறன், சீர்காழி (தனி) ம.சக்தி, கோயம்பத்தூர் தெற்கு- சேலஞ்சர் துரை என்ற துரைசாமி, பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ, வேதாரண்யம்- என்.வி.காமராஜ், மன்னார்குடி – சிவா ராஜமாணிக்கம், திருவாரூர்- குடவாசல் எம். ராஜேந்திரன், நன்னிலம்- ஆர்.காமராஜ், திருவிடைமருதூர் (தனி) – டி.பாண்டியராஜன், கும்பகோணம்- ராமநாதன், பாபநாசம்- ர.துரைக்கண்ணு, திருவையாறு- ரத்தினசாமி, தஞ்சாவூர் – எம். ரங்கசாமி, ஒரத்தநாடு- ஆர்.வைத்திலிங்கம், அறந்தாங்கி-மு.ராஜநாயகம், காரைக்குடி- சோழ சித பழனிச்சாமி, விராலிமலை – சி.விஜயபாஸ்கர், திருப்பத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மானாமதுரை (தனி) – ம. குணசேகரன், மேலூர்- ஆர்.சாமி, மதுரை கிழக்கு- கே.தமிழரசன், சோழவந்தான் (தனி) – எம்.வி.கருப்பையா, மதுரை வடக்கு- ஏ.கே.போஸ், மதுரை மேற்கு- ‌செல்லூர் ராஜூ, திருமங்கலம் – முத்துராமலலிங்கம், ஆண்டிப்பட்டி- தங்கத்தமிழ்ச்செல்வன், போடி நாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம், ராஜபாளையம்- கே.கோபால்சாமி, சாத்தூர்- ஆர்.பி.உதயகுமார், சிவகாசி-கே.டி.ராஜேந்திர பாலாஜி, அருப்புக்கோட்டை- வைகை செல்வன், பரமக்குடி (தனி) – எஸ். சுந்தர்ராஜன், முதுகுளத்தூர் – மு.முருகன், விளாத்திகுளம்- வி.வி.மார்க்கண்‌டேயன், தூத்துக்குடி – ஏ.பால், திருச்செந்தூர் – பி.ஆர். மனோகரன், ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன், கோவில்பட்டி – கடம்பூர் சே. ராஜூ, சங்கரன்கோயில் (தனி)- சொ. கருப்பசாமி, வாசுதேவநல்லூர் (தனி) – எஸ்.துரையப்பன், கடையநல்லூர்- பி.செந்தூர் பாண்டியன், ஆலங்குளம் – பி.ஜி. ராஜேந்திரன், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா, கன்னியாகுமரி – கே.டி.பச்சைமால், நாகர்கோவில்- நாஞ்சில் நா. முருகேசன், குளச்சல் – லாரன்ஸ், கிள்ளியூர்- ஆர்.ஜார்ஜ், சைதாபேட்டை – ஜி.செந்தமிழன், ஜெயங்கொண்டான்- பா.இளவழகன், பூவிருந்தவல்லி- என்.எஸ்.ஏ. ரா.மணிமாறன், மதுராந்தகம் (தனி) – கணிதா சம்பத், உத்திரமேரூர் – பா.கணேசன், காட்பாடி – அப்பு என்ற ராதாகிருஷ்ணன், ராணிப்பேட்டை- முகமது ஜான், வாணியம்பாடி – சம்பத் குமார், ஆற்காடு- ஆர். ஸ்ரீநிவாசன், வேலூர்- வி.எஸ்.விஜய், ஜோலார்பேட்டை – சி.வீரமணி, திருப்புதூர்- ரமேஷ், பர்கூர்- கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி- முனுசாமி, பாலக்கோடு-கே.பி.அன்பழகன், ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் காமராஜ், கலசப்பாக்கம்- அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி – பழநியப்பன், திருவண்ணாமலை- ராச்சந்திரன், கீழ்பென்னாத்தூர்- அருங்கநாதன், செய்யாறு- முக்கூர் சுப்ரமணியம், மைலம்- நாகராஜன், வானூர்- ஜானகிராமன், பல்லாவரம்- தன்சிங், அரக்கோணம் ( தனி) – ரவி,

தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர்கள் யார், யார் என்ற விவரம் இன்று இறுதி செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று காலை கூடியது. மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்த ஒரணியில் திரண்ட அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு பக்கம் பலமாக இருந்து வந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
இதன் காரணமாக சற்று மனக்சப்பு உருவானது. மேலும் 160 தொகுதிகளில் தான் போட்டியிடுவதன் மூலம் எங்களுக்கு பெரும்பான்மை கிட்டும் வகையில் வெற்றி பெறமுடியும் என்பதில் அ.தி.மு.க., விடாப்பிடியாகவே இருந்தது. இதன் வெளி ரூபம் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கும் முன்பாக 160 வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டது. இதனையடுத்து இந்த கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதிர்ச்சியில் ஜப்பான் பூகம்பத்தை விட ஆடிப்போயின.
ஜெ., பிரசாரம் ரத்தானது : இந்த அறிவிப்பிற்கு பின்னர் இடதுசாரிகள், தே.மு.தி.க., பார்வர்டு பிளாக்கட்சி, அகிலஇந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், ஆகியன தனித்தனியாக ஆலோசனை நடத்தின. இதனால் அ.தி.மு.க., கூட்டணி உடைந்து 3 வது அணி உருவாகுமோ என்ற நிலைமை உணர்ந்த ஜெ., முதன் முதலாக துவக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சமரச பேச்சு நடத்தினார். இந்த தருணத்திலும் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

 

ஒரளவுக்கு சமரசம் ஏற்பட்டு கேட்ட தொகுதிகள் மார்க்கம்யூ., 12, இந்திய கம்யூ., 10, சமத்துவமக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 1, அகில இந்திய மூவேந்தேர் முன்னேற்ற கழகம் ஓதுக்கப்பட்டன. ஆனால் தே.மு.தி.க., வுடனான 41 தொகுதிகள் எவை, எவை என்ற பேச்சு 2 நாட்களாக நள்ளிரவு வரை நீடித்தது.

 

தென் மாவட்டத்தில் ஒரு இடம் இல்லை : பேச்சுவார்த்தை முடித்து வெளியேவந்த தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், ” தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இருப்பினும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதல் பெறப்பட்டு அறிவிக்கப்படும் ” என்றார்.

 

மாவட்ட செயலர்களுடன் விஜயகாந்த் இன்று காலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். அ.தி.முக., ஒதுக்கியிருக்கும் தொகுதிகள் குறித்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தார். இதனையடுத்து நிர்வாகிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

 

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விவரம் வருமாறு:

 

1. விருத்தாசலம்
2. திருக்கோயிலூர் ,
3. ரிஷிவந்தியம்
4. திருச்செங்கோடு
5. ஆரணி
6. செங்கம் (தனி)
7. பட்டுக்கோட்டை
8. கும்மிடிபூண்டி
9. திருத்தணி
10. சோளிங்கர்
11. தருமபுரி
12. கங்கவல்லி (தனி)
13. மதுரை மையம்
14. கூடலூர் (தனி)
15. திருவாடானை )
16. திட்டக்குடி (தனி)
17. குன்னம்
18. மயிலாடுதுறை
19. திருவெறும்பூர்
20. சேலம் (வடக்கு)
21. ராதாபுரம்
22. சூலூர்
23. விருகம்பாக்கம்
24. ஒசூர்
25. லால்குடி
26. பேராவூரணி
27. செங்கல்பட்டு
28. எழும்பூர் (தனி)
29. செஞ்சி
30.ஈரோடு (கிழக்கு)
31. கம்பம்
32. சேந்தமங்கலம்
33. திருப்பரங்குன்றம்
34. விருதுநகர்
35. ஆத்தூர்
36. பண்ருட்டி
37. அணைக்கட்டு
38. பத்மநாபபுரம்
39. வேப்பனஹள்ளி
40. மேட்டூர்
41. ஆலந்தூர் ஆகிய 41 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஆனது. இதன்படி பொதுசெயலர் ஜெயலலிதா ஒப்புதலின்படி இந்த தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமைகழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேட்பாளர் பட்டியல் :தே.மு.தி.க., போட்டியிடும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன்படி

 

மதுரை (மத்தி) – ஆர். சுந்தர்ராஜன்
கம்பம்-முருகேசன்
விருதுநகர்- பாண்டியராஜன்
பட்டுக்கோட்டை-செந்தில்குமார்
கூடலூர்-எஸ். செல்வராஜ்
ஈரோடு கிழக்கு-சந்திரகுமார்
ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன்
சேந்தமங்கலம்- சாந்தி ராஜமாணிக்கம்
சேலம் வடக்கு- மோகன்ராஜ்
திருக்கோவிலூர்- எல்.வெங்கடேசன்
ஆத்தூர்- எஸ் ஆர் கே பாலசுப்ரமணியன்
ஆரணி-மோகன்
கெங்கவல்லி-சுபா
பேராவூரணி-அருண்பாண்டியன்
சோளிங்கர்-பி.ஆர் மனோகர்
திருவாடனை-முஜிபுர் ரஹ்மான்
லால்குடி-செந்தூரேஸ்வரன்
திருப்பரங்குன்றம்-ஏ கே டி ராஜா
அணைக்கட்டு- வி.பி.வேலு
திருவறும்பூர்-எஸ்.செந்தில்குமார்
வேப்பனஹல்லி-எஸ் எம் முருகேசன்
ஓசூர்-ஜான்சன்
செஞ்சி-சிவா
மயிலாடுதுறை-பால அருட்செல்வன்
செங்கலபட்டு-டி முருகேசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்பவரா நீங்கள்?

தற்போது சராசரியாக குடும்ப வருமானம் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டு ஆர்வமும் கூடிவருகிறது. இது நல்ல விஷயம்தான். ஆனால், கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது ஆலோசகர்களின் ஆலோசனையை மட்டும் நம்பி கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்கிறார்கள், நிதித் துறை நிபுணர்கள்.

இப்படி, எல்லோரும் முதலீடு செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட திட்டத்தில் விழுந்தடித்துக் கொண்டு முதலீடு செய்பவர்களை `மந்தை முதலீட்டாளர்கள்’ என்கின்றனர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சாக்கோ ஓர் உதாரணம்.

`வெறும் 694 நாட்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகிவிடும்’ என்ற விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட சாக்கோ, 35 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்தத் திட்டத்தைப் பரபரப்பாக அறிமுகம் செய்தது. அந்தத் திட்டத்தில் ஆண்டு `ரிட்டர்னாக’ 40 சதவீதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. `பொன்னான’, `வாழ்நாள் வாய்ப்பு’ என்று விளம்பர வாசகங்கள் `பளிச்’சிட, பணத்தைப் போட்டார் சாக்கோ.

ஆனால் `ரிட்டர்ன்’ கிடக்கட்டும், முதலீட்டுத் தொகையே சாக்கோவுக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட நிறுவனத்துக்குத் திரும்பத் திரும்ப பலமுறை தொடர்புகொண்டும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும் பலனில்லை.

இத்தனைக்கும் சாக்கோ ஒரு முன்னணி தனியார் வங்கியில் பணிபுரிகிறார். முதலீட்டுத் திட்ட வருவாய்கள், `ரிஸ்க்’குகள், வட்டி விகிதங்கள் பற்றி எல்லாம் நன்கு அறிந்தவர். ஆனாலும் இப்படி பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.

“கடந்த காலத்தில் அநëதத் திட்டத்தில் நல்ல `ரிட்டர்ன்’ அளிக்கப்பட்டிருப்பதால் நான் அதில் முதலீடு செய்தேன்” என்கிறார் சாக்கோ. சரி, அப்படி நல்ல `ரிட்டர்ன்’ பெற்ற யாரையாவது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டால், “எனக்குத் தனிப்பட்ட முறையில் யாரையும் தெரியாது. ஆனால் அப்படி பெற்றவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று மழுப்புகிறார்.

இந்த `மந்தை மனோபாவம்’தான், மயக்கும் முதலீட்டுத் திட்டங்கள், சங்கிலித் தொடர் திட்டங்கள் (எம்.எல்.எம்) போன்றவற்றின் குறி. சங்கிலித் தொடரில் மேலும் மேலும் பலரை நீங்கள் சேர்த்துவிட, உங்களுக்கு அதிகப் பலன்கள் கிட்டும் என்று ஆசைகாட்டுவார்கள். ஆனால் நடைமுறையிலோ அது கல்லில் நார் உறிக்கும் வேலை. இத்துறையில் போலியான நிறுவனங்களும் அதிகம்.

ஆசை வேகத்தில் பலர் எச்சரிக்கைகளை தூக்கித் தூர எறிந்துவிடுகிறார்கள். அதில் விஷயம் அறிந்தவர்களும் அடக்கம் என்பதுதான் சோகம். பிரபல நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ஐந்து பேரில் ஒருவர், போலியான முதலீட்டுத் திட்டங்களால் ஈர்க்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

சில விளம்பரங்களைப் பார்த்து உங்களுக்கும் கூட சலனம் ஏற்பட்டிருக்கலாம். உஷார்!

இடி இடிக்கும் போது காமா கதிர்கள் வெளிப்படும்: கண்டறிந்தனர் நாசா ஆய்வாளர்கள்


சாதாரணமாக மின்னல் தோன்றும் போது இடி இடிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த சமயத்தில் வானில் ஆன்டிமேட்டர் துகள்கள் நிறைந்த மேகக்கூட்டம் தோன்றுவது போன்ற நிகழ்வு காணப்படுகிறது. இதனை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழக்கமான அணுக்களில் இருந்து வேறுபட்டு நெகட்டிவ் உட்கரு பகுதியும், பாசிட்டிவ் தன்மை வாய்ந்த எலெக்ட்ரான் துகள்களும் கொண்டது ஆன்டிமேட்டர் துகள்கள். இந்த துகள்கள் வானில் இடி இடிக்கும்போது மேக கூட்டம் போல் பூமியில் இருந்து வானத்தை நோக்கி செல்கிறது. அப்போது மின்புலம் தோன்றி காமாகதிர் வெளிப்பட்டு சிதறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் தங்களது பெர்மி காமா கதிர் விண்வெளி தொலைநோக்கி ஒன்றின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இதுவரை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் நிகழ்வு இடியின் உச்ச பகுதியில் இருந்தே தோன்றுவதாக கருதப்பட்டு வந்துள்ளது. கடந்த 2008&ஆம் ஆண்டில் இருந்து தொலைநோக்கி உதவியுடன் இந்த காமா கதிர் வெளிப்படும் நிகழ்வினை கவனித்து வந்துள்ளனர். அதில் இதுவரை 130 முறை இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது என தகவல் தெரியவந்துள்ளது. வழக்கமாக தினமும் உலகம் முழுவதிலும் 500 முறை கூட இந்த காமா கதிர் நிகழ்வு ஏற்படும். இந்த கண்டுபிடிப்பினால் தற்போது ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் தன்மை வாய்ந்த ஒரு புது உலகம் நம்மை சுற்றி காணப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் தற்போது தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

மரம் – கருங்காலி

மரங்கள்  மனிதனுக்கு ஆதார மானவையாகத் திகழ்கின்றன.  மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன.  இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர்.

ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.   இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை.  எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.

பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுமைக்கும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை.  துவர்ப்புத் தன்மை மிக்கது.

கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார்

கருங்காலி கட்டைக்குக் கோணாத கோடாலி

என்று பாடியுள்ளார்.   இதிலிருந்து கருங்காலி கட்டையின் தன்மை நமக்கு விளங்கும்.

அகத்தியர் பெருமான் கருங்காலி மரத்தை ஆராய்ந்து  அதன் குணத்தை பாடலாகத் தந்துள்ளார்.

குட்டங் கயலோகங் குன்மம் பெருவயிறு
நெட்டைப் புழுதிமிரு நீரிழிவும்-விட்டே
யடுங்கான கத்தேக முஞ்சுகமே நல்ல
கருங்காலி நீரதனைக் கண்டு
-அகத்தியர் குணவாகடம்.

நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.

கருங்காலி வேர்

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும்.

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருங்காலி மரப்பட்டை

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது.

வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி மரப்பிசின்

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

“மூன்று நாள்’ அவதியிலும் ஒரு நன்மை:ஸ்டெம் செல் ஏராளமாய் கிடைக்குதாம்

தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல் எடுத்ததைப் போல, இப்போது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது, வெளியேறும் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் எடுக்க முடியும் என, கண்டறியப்பட்டுள்ளது. இது போன்று எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை, “லைப் செல் இன்டர்நேஷனல்’ என்ற தனியார் நிறுவனம், விற்பனைக்கே வைத்துள்ளது.வயிற்றில் குழந்தை உருவாகும் போது, அது வளர, தாயின் கர்ப்பப் பைக்கும், குழந்தையின் வயிற்றுக்கும் இணைப்பாக ஒரு கொடி உருவாகும். இது, தொப்புள் கொடி என அழைக்கப்படுகிறது. இந்த தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்தில், எந்த பாதிப்புக்கும் ஆளாகாத, புதிய வேர் செல்கள் இருக்கும். இந்த வேர் செல்களைக் கொண்டு, புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களைத் தீர்க்கலாம் என, ஆய்ந்தறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் தற்போது பக்க வாதம், முதுகெலும்பு பாதிப்பு போன்றவற்றுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல் சேகரிக்க என்று வங்கிகள் ஏற்கனவே வந்துவிட்டன.இத்தகைய வேர் செல்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தில் இருப்பது தெரிய வந்தது. இந்த ரத்தத்தை எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், இதில் உள்ள வேர் செல்கள், வேகமாக பல்கிப் பெருகும் தன்மை கொண்டவையாகவும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையதாகவும் இருப்பது தெரிந்தது. எனவே, இந்த ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பல நோய்களுக்கு எளிதில் தீர்வு காணலாம் என கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து, மும்பையில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் இந்திரா ஹிந்துஜா என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவர், சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளியிடுவதற்காக, இது குறித்து கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.அதில், “கரு உருவாவதை எதிர் பார்த்து, கர்ப்பப் பையில் மாதா மாதம் உருவாகும் கர்ப்பப்பை உள் படிமங்கள், கரு உருவாகாமல் போகும் போது, தானாகவே ரத்தத்துடன் வெளியேறி விடுகின்றன. இந்த உள் படிமங்களில், ஏராளமான வேர் செல்கள் உள்ளன. இவை, கருவில் உள்ள வேர் செல்களை ஒத்திருக்கின்றன. இவற்றைப் பதப்படுத்தி, வேர் செல்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டால், பல நோய்களுக்குத் தீர்வு காணலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் தான், தற்போது, லைப் செல் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், “லைப் செல் பெமே ‘ என்ற பெயரில், மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லை, அறிமுகப்படுத்தியுள்ளது.இதை அறிமுகப்படுத்தியவரும், வேர் செல் மாற்று சிகிச்சையால், ரத்தப் புற்றுநோயிலிருந்து முற்றிலும் வெளிவந்தருமான மாடல் அழகி லிசா ரே கூறுகையில், “வேர் செல் மாற்று சிகிச்சை செய்து கொண்டதன் மூலம், நோயிலிருந்து முற்றிலும் வெளி வந்த தன் முழு உதாரணமாக நான் திகழ்கிறேன். பெண்கள், மேலும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ, மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் வேர் செல்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன’ என்றார்.மும்பையில் வில்லே பார்லே, முலுண்ட், தாதர் ஆகிய இடங்களில் இதற்கான வங்கி கிளைகளை லைப் செல் இன்டர்நேஷனல் திறந்துள்ளது.
தீர்வு:மாத விலக்கின் இரண்டாம் நாளில், பிறப்புறுப்பில், “மென்ஸ்ட்ருவல் கப்’ செலுத்தி, ரத்தம் சேகரிக்கப்படும். பின், இந்த ரத்தத்தில் கிருமிகள் நீக்கப்பட்டு, வேர் செல்கள் பிரிக்கப்படும்.பிரித்தெடுக்கப்பட்ட வேர் செல், திரவ நைட்ரஜனில், மைனஸ் 150 டிகிரி செல்ஷியசில் பாதுகாக்கப்படும்.இதைக் கொண்டு மூட்டு வலி, சில வகையான இதய நோய்களுக்கு தீர்வு காணலாம்

சிக்கன் பால்ஸ்

சிக்கன் பால்ஸ்

சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக சத்து நிறைந்தது.

தேவையான பொருட்கள்

சிக்கன் கொத்தியது – 1/4 கிலோ

வெங்காயம் – 200 கிராம்

பச்சை மிளகாய் – 4

முட்டை – 1

ரொட்டித் துண்டு – 4

உப்பு – தேவையான அளவு

எண்ணை – பொரிப்பதற்கு

செய்முறை

* கொத்திய கோழி இறைச்சியை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* பிறகு மிக்சியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

* இதனுடன் சிக்கன் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு இறுக்கமாக பிசையவும்.

* இந்தக் கலவையை கோலியளவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* ரொட்டியைச் சதுரமாக சிறிய க்யூபாக வெட்டிக் கொள்ளவும்.

* சிக்கன் உருண்டைகளை ரொட்டித் துண்டில் வைத்து ரோல் செய்யவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சிக்கன் பால்சை பொரித்தெடுக்கவும்.

`செப்’ தாமு

பிரிண்ட் ஸ்கிரீன் பெற புதிய வழி

மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அதனை நாம் விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்து எடிட் செய்து வருகிறோம். இன்னும் சற்றும் திறமையாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள்.
இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தின் சில பதிப்புகளில் கிடைக்கிறது. இது மிக வேகமாகவும், எளிமையாகவும் இந்த வேலையைக் கையாள்கிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, snip என டைப் செய்திடவும். பின்னர், Snipping Tool என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக இந்த புரோகிராம் செயல்படத் தொடங்கும். இப்போது உங்கள் மானிட்டர் திரையின் ஒளி சற்றுக் குறைவாக இருப்பதாகக் காட்டப்படும். கவலைப்பட வேண்டாம். இப்போது காட்சிகளை கட் செய்திட நீங்கள் தயாராக இல்லை என்றால், உடனே இந்த செயலைக் கேன்சல் செய்துவிடலாம். Snipping என்பது படத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஒரு பெட்டியாகக் கட்டம் கட்டி, நறுக்குவதாகும். மவுஸ் மூலம், நீங்கள் விரும்பும் காட்சியினைக் கட்டம் கட்டலாம். இதற்கு சிகப்புக் கோடு உங்களுக்குத் துணை புரியும். மவுஸ் பட்டனை விலக்கியவுடன், அதன் மூலம் கட்டச் சிறையில் பிடிக்கப்பட்ட காட்சி தோன்றும். இப்போது இதனை நீங்கள் விரும்பும் பார்மட்டில் (GIF, JPEG, PNG, அல்லது HTML) இதனை சேவ் செய்து விடலாம். கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடலாம். அப்படியே இமெயில் செய்தியாக அனுப்பலாம். அல்லது அதில் குறிப்புகளை எழுதலாம்.

இறைவனின் அம்மா!- மார்ச் – 22, காரைக்கால் அம்மையார் குருபூஜை!

தாயும், தந்தையும் இல்லாதவன் இறைவன். அவனுக்கு பிறப்புமில்லை, முடிவுமில்லை. “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே…’ என்று, சிவபெருமான் குறித்து, திருவெம்பாவையில் துவங்குகிறார் மாணிக்க வாசகர். இப்படி, பிறப்பற்ற இறைவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்றார் ஒரு பக்த சிரோன்மணி. அவர் தான் காரைக்கால் அம்மையார்.
இந்த உலகத்தில் அனைவரும் அழகு, இளமையைத் தேடி அலைவர். அழகைக் காத்துக் கொள்ள எத்தனையோ முயற்சிகளை எடுக்கின்றனர். காரைக்கால் அம்மையாரின் பக்தியோ மிகவும் உயர்ந்தது. ஒரு பெண்ணாக இருந்தும், தன் கணவனுக்கு பயன்படாத இளமை தனக்குத் தேவையில்லை என்று நினைத்தவர்.
காரைக்காலில் வசித்த தனதத்தன் – தர்மவதி தம்பதிக்கு பிறந்தவர் புனிதவதி. இவரை பரமதத்தன் என்ற வணிகருக்கு திருமணம் செய்து வைத்தனர். புனிதவதி சிறந்த சிவபக்தை. பரமதத்தனோ வியாபாரத்தில் பெரும் பணம் சம்பாதித்து, இன்ப வாழ்வு வாழ எண்ணம் கொண்டவன். ஆனாலும், பொறுமை மிக்க புனிதவதியால் கணவனுடன் கருத்தொருமித்து வாழ முடிந்தது.
இந்த தம்பதியரின் வாழ்வில் திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்டார் சிவபெருமான். தன் பக்தையை குடும்ப வாழ்வில் இருந்து விடுத்து, கைலாயம் சேர்த்து, பிறப்பற்ற நிலையை அருள விரும்பினார். இதற்காக, ஒரு நாடகம் நடத்தினார்.
ஒரு சமயம், பரமதத்தனுக்கு இரண்டு மாம்பழங்கள் கிடைத்தன. அவற்றை வீட்டுக்கு கொடுத்து அனுப்பினான். அந்நேரத்தில், ஒரு அடியவர் வேடத்தில், சிவன் அங்கு வர, மாம்பழங்களில் ஒன்றை அவருக்கு அளித்தாள் புனிதவதி. அன்று பணி முடிந்து வந்த பரமதத்தனுக்கு, இன்னொரு மாம்பழத்தை வைத்தாள். அதைச் சாப்பிட்ட அவன், “இது ருசியாக இருக்கிறதே… இன்னொன்றையும் கொண்டு வா…’ எனச் சொல்ல, இதை எதிர்பாராத புனிதவதி அதிர்ச்சியுடன் சிவனை வேண்டினாள். அவளது கையில் ஒரு பழம் வந்து அமர்ந்தது.
அதை வெட்டி, கணவனுக்கு கொடுத்தாள். இது, முன்பு சாப்பிட்ட பழத்தை விட, பல மடங்கு ருசியாக இருக்கவே, சந்தேகமடைந்த பரமதத்தன், “இரண்டும் ஒரே மரத்தின் கனிகள்; ஒன்றை விட ஒன்று எப்படி ருசிக்கும்?’ என மனைவியிடம் கேட்டான். அவள் நடந்ததைச் சொல்லவே, அதை நம்பாத அவன், “அப்படியானால் இன்னொரு பழத்தை என் கண்முன் வரவழைத்துக் காட்டு…’ என்றான்.
புனிதவதியும் அவ்வாறே செய்ய, அவளது பக்தியின் மேன்மையை உணர்ந்த அவன், இனி, அவளோடு குடும்ப வாழ்வு நடத்த தனக்கு தகுதியில்லை என்பதை <உணர்ந்தான். தன் மனைவியை தெய்வப் பிறவியாக நினைத்து, ஊரை விட்டே போய்விட்டான். மற்றொரு பெண்ணை மணந்து, அவளுக்கு பிறந்த குழந்தைக்கு, முதல் மனைவியின் பெயரை வைத்தான். இதையறிந்த புனிதவதி அதிர்ச்சியுடன் சிவபெருமானிடம், “என் கணவருக்கு பயன்படாத இந்த இளமை எனக்கு தேவையில்லை; பேய் வடிவத்தைக் கொடு…’ என வேண்டினாள். அதன்படி பேய் உருவம் கிடைக்கவே, இறைத்தொண்டு செய்து, அதே வடிவிலேயே கைலாயத்துக்கு தலைகீழாக நடந்தே சென்றாள். சிவன் அந்த தாயை, “அம்மையே வருக’ என்று எதிர்கொண்டு வரவேற்றார்.
“சிவபெருமானே… நீ எனக்கு வரும் துன்பங்களை போக்காவிட்டாலும், கருணை செய்யாவிட்டாலும், வாழும் வழி காட்டாவிட்டாலும் பரவாயில்லை. உன் மீதுள்ள அன்பு எனக்கு சற்றும் குறையாது…’ என்ற பொருளில் பாடினார் அம்மையார். இறைவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பக்தி செலுத்த வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருந்தவர்.
பக்தியால் இறைவனுக்கு தாயாகும் தகுதியைப் பெற்ற அந்தத் தாயின் குருபூஜை, பங்குனி சுவாதியில் நடக்கிறது. காரைக்காலில் பிறந்த அவரை, “காரைக்கால் அம்மையார்’ என மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
அழகும், இளமையும் அழியக் கூடியது. இறைபக்தி ஒன்றே என்றும் நிலைத்திருக்கும். காரைக்கால் அம்மையார் குருபூஜை நன்னாளில், ஆன்மிகத்தை வளர்க்க உறுதியெடுப்போம்.