Daily Archives: மார்ச் 22nd, 2011

மூட்டு வலியை விரட்ட.

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.
எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.  மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.

பாதுகாப்பு முறை

விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம்,  பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம்.  முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும்.

பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார்

சிலந்தியின் அதி வேக காதல்: வித்தியாசமான தகவல்


பூச்சி இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது. இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி செல்கின்றன. அதனை கண்டவுடன் இனப்பெருக்கம் நடைபெற்று விடுவதில்லை. முதலில் பெண் சிலந்தியின் வலையை ஆண் சிலந்தி தனது காலால் மெல்ல தட்டுகிறது. அதற்கேற்ப பெண் சிலந்தியிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆண் சிலந்தி இனப்பெருக்கத்திற்கு உரிய சில அங்க அசைவு களை செய்கிறது. அதில் ஈர்க்கப்படும் பெண் சிலந்தியுடன் ஆண் சிலந்தி ஒன்றாய் கூடுகிறது. எனினும் சில சமயங்களில் இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அந்த சிலந்தியின் இனமே பிற்காலத்தில் இல்லாத வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்த்து அவை எவ்வாறு வாழ்கின்றன என கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோனாதன் ப்ரூட் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக ஆய்வகத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலையிலுள்ள சில இளம் சிலந்திகளை ஜோடியாக விட்டனர். சில இளஞ்சிலந்திகளை தனியாக வைத்திருந்தனர். இனப்பெருக்கத்திற்கு உரிய பருவத்தில் சிலந்திகளில் ஒரு ஜோடி மிக வேகமாக தங்களுக்குள் ஒன்றாக கூடின. இந்த வேகம் தங்களது சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவ்வாறு இல்லாவிட்டால் வேறு சிலந்தியால் குறுக்கிடப்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக தான். மேலும் அதி விரைவாக செயல்படுவதால் அது ஜோடிகளுக்கு பாதுகாப்பினை தருகிறது. இந்த கூடுதலில் பெண் சிலந்திக்கு ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா-? என ஆராய்ந்ததில் ஆம் என்பதே பதிலாக இருந்தது. ஜோடிகள் ஒன்றாக கூடும் இந்த நிகழ்வில் ஆண் சிலந்தி சாதனை செய்த பெரியவராகி விடுகிறது. மேலும் வேறு சிலந்தியினால் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுபட்டு போதுமான பாதுகாப்பும் ஏற்பட ஏதுவாகிறது என ஆய்வாளர் ப்ரூட் தெரிவித்தார்

குழந்தைகளை குறிவைக்கும் கோடை!


வந்தாச்சு… சுள்வெயில்! இனி எல்லோருமே நிழலையும், குளிர் சார்ந்த பொருட்களையும் தேடுவோம். பெரியவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் பாடுதான் திண்டாட்டம்.

கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பெரும்பாலும் குழந்தைகளை கோடைவெயில் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கோடையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களுள் ஒன்று சின்னம்மை. இது ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். மேலும், குளிர் நடுக்கம், குமட்டல், வாந்தி ஆகியவையும் ஏற்படும்.

பெரும்பாலும், குழந்தையின் உடலில் அரிப்பு ஏற்பட்டு அவை கொப்புளங்களாக மாறும். இதை வைத்து சின்னம்மை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது தொற்றுநோய் என்பதால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது.

தகுந்த டாக்டரிடம் சிகிச்சை பெறுவதுடன், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றையும் சின்னம்மை நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பின்பற்ற வேண்டும்.

பாலக் பன்னீர்

ண்களுக்கு குளுமையான பச்சைப் பசேல் நிறம், மென்மையான தன்மை மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்தது பாலக்கீரை. எலும்புகளுக்கு போஷாக்கு அளித்து வலுவூட்டும் கால்சியம் நிறைந்து நோய் தீர்க்கும் சக்தியும் இதில் உள்ளது.

தற்போதைய இயந்திர வாழ்வில் மிகமிக வேகமாக சமைக்கக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பாலக்கீரை. பாலக்கீரைகளை ஆய்ந்தாலே போதுமானது. பொடியாக நறுக்க வேண்டிய தேவை இல்லை. ஆய்ந்த கீரையை தண்ணீரில் குறைந்த நேரம் (ஒரு கட்டுக்கு 4 அல்லது 5 நிமிடங்கள்) கொதிக்கவிட்டாலே போதும். மிகக்குறைந்த நேரம் கொதிக்கவிடுவதால் பாலக்கீரையில் உள்ள சத்துக்களும் வீணாவதில்லை.

மிகமிக வேகமாக சமைக்கக்கூடிய பாலக்கீரையில் பன்னீர் சேர்த்து மேலும் சுவையையும் சத்தையும் கூட்டி பாலக் பன்னீர் இம்முறை செய்வோமா?

பாலக் பன்னீர்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை – 1 கட்டு

எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்

பன்னீர் – 200 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 2

பச்சைமிளகாய் – 4

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

* வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய பன்னீரைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு அதே வாணலியில் பொடியாக அரிந்த, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடிகனமான ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஆய்ந்த பாலக்கீரைகளைப் போட்டு 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு ஆறியவுடன் மிக்சியில் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.

* இதனுடன் நன்கு வதங்கிய வெங்காயம்- தக்காளிக் கலவையை ஆறியவுடன் மிக்சியில் போட்டு மேலும் ஒரு சுற்று அரைக்கவும்.

* இப்போது கனமான பாத்திரத்தில் மிக்சியில் அரைத்த கலவை, பொன்னிறமாக வறுத்து உள்ள பன்னீர், சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும்.

* சூடாக இறக்கி பரிமாறவும்.

சுவைக்கான குறிப்பு

பன்னீர் துண்டுகளை எண்ணையில் வறுக்காமல் அப்படியே பாலக் பன்னீர் செய்ய உபயோகித்தாலும் சுவையாகவே இருக்கும்.

கீதா பாலகிருஷ்ணன்

கண்களின் செயல்பாடு

லக வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க உதவுபவை கண்கள். கண்களின் செயல்பாடு அதிசயமானது. நமது வாழ்வில் 82 சதவீத அனுபவங்கள் கண் பார்வையின் மூலமாக கிடைப்ப தாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை கண்கள்.

இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது. எனவே கண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவசியம்.

ண்ணில் `அக்வஸ்’ என்ற நிறமற்ற திரவம் உள்ளது. இது சீராக உற்பத்தியாகி வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கண்ணில் அழுத்தம் ஏற்படும். இது கிளகோமா வியாதி எனப்படுகிறது. இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே இதை `சைலன்ட் விஷன் ஸ்டீலர்’ என்கிறார்கள். பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சரி செய்யலாம். பாதிப்பை உணர்ந்தவர்கள் நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டாக வேண்டும்.

பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை (மையோபியா- மைனஸ் பவர்). தூரப்பார்வை (ஹைபரோபியா -பிளஸ் பவர்) என இரு வகைப்படும். கிட்டப் பார்வையில் கண்ணின் அளவு பெரிதாக இருக்கும். தூரப்பார்வையில் கண்ணின் அளவு சிறியதாக இருக்கும். இவை இரண்டும் அல்லாமல் கருவிழியின் வளைவான அமைப்பில் மாறுபாடு இருந்தால் `அஸ்டிக்மாடிஸம்’ பாதிப்பு எனப்படுகிறது. இந்த குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸ்களோ அணியலாம். அறுவைச் சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.

ண்ணுக்குள் எப்போதும் கண்ணீர் உற்பத்தியாகிக் கொண்டிருக் கிறது. கண்ணீரின்றி கண் வறண்டால் பிரச்சினை. மின்விசிறியின் கீழ் நீண்ட நேரம் இருந்தால் இந்த பாதிப்பு வரலாம். கண்ணில் சதை வளர்வதை டெரிஜியம் என்பார்கள். இதை அறுவைச் சிகிச்சை மூலம் சரிப்படுத்தலாம். கண்ணில் தூசி விழுந்தால் கண்ணை கசக்கக்கூடாது. கண்ணைக்கசக்கினால் அந்த அழுத்தத்தால் கண்களில் வெள்ளைத் தழும்பு ஏற்பட்டு பார்வை போகும் ஆபத்தும் இருக்கிறது. எனவே கண்ணில் தூசி விழுந்தால் தண்ணீர் விட்டு கழுவுங்கள். தொடர்ந்து கண்ணில் நெருடல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.

நம் நாட்டில் பார்வைக் குறைவுக்கு மிகமுக்கிய காரணம் கண்புரை எனப்படும் காட்ராக்ட் வியாதி. கண்களில் உள்ள பார்வை லென்ஸ்கள் பாதிக்கப்பட்டால் `காட்ராக்ட்’ எனப்படுகிறது. இந்த கண்புரைப் படலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதற்கு `பேகோ எமல்சிபிகேசன்’ என்ற நவீன அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறை இருக்கிறது. இதில் கண் புரையை சிறு துவாரம் வழியாக கரைத்துவிட்டு அதே வழியாக லென்சை பொருத்தி விடுவார்கள். 10 நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டி.வி. பார்க்கலாம், கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம்.

கண்ணில் குச்சி, கூரான பொருள் குத்தினாலோ, வேதிப்பொருட் கள் பட்டுவிட்டாலோ பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவரை அணுக வேண்டும். கண்ணில் கட்டி வந்துவிட்டது என்றால் தாய்ப்பால் ஊற்றுவது, நாமக்கட்டியை தேய்த்துப் பூசுவது கூடாது. கருவிழியில் தழும்பு ஏற்பட்டால் கண்மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பார்வை பெறச் செய்யலாம். கருவிழியை மட்டுமே மாற்றுவதுதான் கண் அறுவைச் சிகிச்சையாகும். கேரட் ஜுஸ், கீரை ஜுஸ் குடிப்பதால் பார்வைக்குறைபாடு சரியாகாது.

ஒருவயதுக் குழந்தை முதல் நோய் பாதித்தவர்கள் உள்பட எல்லோரும் கண்தானம் செய்யலாம். எய்ட்ஸ் மற்றும் தொற்று நோய் பாதித்தவர்களின் கண்கள் ஏற்கப்படுவதில்லை. கண்தானம் செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது.

கண்தானம் செய்ய விரும்பியவர் இறந்துவிட்டால் உடனே பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு இறந்தவரின் நெற்றியில் வைக்க வேண்டும். மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். மூடிய கண்களின் மீது ஈரமான துணி அல்லது பஞ்சை வைத்துவிட்டு மருத்துவர்களை அழைக்க வேண்டும்.

கணினியில் பணி செய்வதால் பார்வைக் குறைபாட்டுக்கு வழி இருக்கிறது. கணினி எழுத்துக்கள் பல புள்ளிகள் இணைந்து (பிக்செல்) உருவாகுபவை. இதனால் அடிக்கடி பார்வை விலகி குவிக்க வேண்டி இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும். இதனால் வலி உண்டாகும். இதை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். தொடர்ந்து பல மணி நேரம் ஓய்வில்லாமல் கணினியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். பணி செய்யும்போது சரியான தூரத்திலும், சரியான நிலையிலும் அமர்ந்து கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் நீண்டகாலமாக இருந்தால் அவர்களுக்கு கண் கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் கண் மருத்துவரையும் அவ்வப்போது அணுகுவது நல்லது. இவர்களின் கண் பாதிப்பை `23 ஜி விட்ரக்டமி’ சிகிச்சை மூலம் சரி செய்ய லாம். அதிக ரத்த அழுத்த வியாதியும் கண்ணைப் பாதிக்கும். இதனால் கண்பார்வை போய்விடும் அபாயமும் இருக்கிறது. எனவே இந்த பாதிப்புள்ளவர்களும் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.குடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ தோல் உதவும்

குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் இன்று வெளியிடுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு “மிக மிக அழகான இணையம்’ என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கடந்த ஏழு மாதங்களில் 3 கோடியே 60 லட்சம் பேர், சோதனைத் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பதிப்பு 8 வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பதிப்பு 9 வெளியாகிறது. பதிப்புகள் 7க்கும் 8க்கும் இடையே, இரண்டு ஆண்டுகள் ஐந்து மாத இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ன் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் இல்லை. இதுவரை சோதனைப் பதிப்பின் பயன்பாடு 0.6% என்ற அளவில் மட்டுமே உள்ளது.
இதுவரை வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களைக் காட்டிலும், காட்டப்படும் இணைய தளச் செய்திகளுக்கு இந்த பிரவுசர் அதிக இடம் தரும்.
விண்டோஸ் டாஸ்க் பாரில், இணைய தளங்களை “பின் அப்’ செய்திடலாம். இதன் மூலம் இணைய தளங்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் போலச் செயல்படலாம். ஏறத்தாழ விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ளது போல ஜம்ப் லிஸ்ட் போலச் செயல்படும். மேலும் இதன் மூலம், நாம் ஒரு இணைய தளத்தில் குறிப்பிட்ட தகவல் பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும்.
இயக்க செயல்முறைகளிலும் நிறைய மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. பிரவுசர் இயங்கி திரைக்கு வர மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு இந்த பிரவுசரில் பயன்படுத்தப்படும் சக்ரா (Chakra) எனப்படும் புதிய ஜாவா இன்ஜின் தான் காரணம். Chrome, Opera, Firefox, மற்றும் Safari பிரவுசர்களைக் காட்டிலும் இது வேகமாக இயங்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. இன்றைக்கு விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் 45.3% பேர் இன்னும் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 எட்டாக் கனிதான். இவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த இடைவெளியினை, மற்ற போட்டி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பிரவுசர்களை அமைத்து வருகின்றனர்.
இதன் சோதனைத் தொகுப்பு வந்த காலத்திற்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு மொத்தத்தில் 3% குறைந்துள்ளது.
இந்த வேளையில் பயர்பாக்ஸ் பதிப்பு 4 பிரவுசரின் முழுத் தொகுப்பினை வெளியிட மொஸில்லா தயாராகி வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு9 வெளியீட்டிற்குக் காத்திருந்தது. நவம்பர் 2009க்குப் பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரின் பங்கும் 3% குறைந்தது. அப்போது பயர்பாக்ஸ் 24.7% பேரால் பயன்படுத்தப்பட்டது.
புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் http://download.cnet.com /83012007_42003127912.html என்னும் முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்றைய இளைஞனுக்கு-கவியரசு கண்ணதாசன்

நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்
நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!

– பட்டினத்தார்.

`ஏ மனிதர்களே! நாக்கே பிளந்துவிடும்படியாகப் பொய் பேசுவீர்கள்!

புதிய புதிய செல்வங்களைத் தேடுவீர்கள்!

பூமியைப் பிளந்துக்கொண்டு வருகின்ற புற்றீசல் போலப் பொல பொலவென்று கலகலவென்று பிள்ளைகளைப் பெறுவீர்கள்!

காப்பதற்கும் உங்களுக்கு வழி தெரியாது; அவர்களைக் கைவிடவும் மாட்டீர்கள்.

பாதி பிளந்து ஆப்பு வைக்கப்பட்ட மரத்துளையில் காலை வைத்துக்கொண்டே ஆப்பைப் பிடுங்குகிற குரங்கு, மரத்துளையில் கால் மாட்டிக் கொண்டு திண்டாடுவது போல பந்த பாசத்தில் கிடந்து உழலுவீர்கள்!’ என்று சிரிப்போடு சொல்கிறார் பட்டினத்தார்.

தொட்ட பின்பே பாம்பு என்றறியும் மனிதர்கள்… –

சுட்ட பிறகே நெருப்பென்றறியும் அப்பாவிகள் –

அவர்கள் பட்ட பின்புமே கெட்ட பின்புமே பரம்பொருளை நினைக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே வாழ்வை வகுத்துக்கொள்ள அவர்களால் முடிவதில்லை.

ராமலிங்க வள்ளலாரைப் போலவோ, ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவோ, சுவாமி விவேகானந்தரைப் போலவோ, இளம் பருவத்திலே ஞான ஒளியைப் பெற அவர்களால் முடியவில்லை.

`ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!’

சாட்டை இல்லாப் பம்பரம் போல் ஆட்டி வைக்கிறான் கண்ணன்.

`உண்டு, உண்டு’ என்று ஓடி, பிறகு `இல்லை, இல்லை’ என்று ஏமாந்து, `எங்கே எங்கே’ என்று தேடி, `இதோ, இங்கே இங்கே’ என்று கண் மயங்கி, வெட்ட வெளிப் பொட்டலிலே விட்டெறிந்த பந்தினைப்போல், `ஆடி ஓடி அமர்ந்தேன் பராபரமே!’ என்று அமர்ந்து விடுகிறார்கள்.

அனுபவங்களுக்குப் பிறகுதான் உண்மை அவர்களுக்குத் தெரிகிறது.

அந்த உண்மையை ஆரம்பத்திலேயே கண்டு கொள்வதெப்படி?

இது இன்றைய இளைஞனுக்குச் சொல்லவேண்டிய பாடம்.

குத்திய பின்பே முள்ளென்று அறியாமல், `இது முள்’ என்று பார்வையிலேயே அவன் தெரிந்துக் கொள்ளவேண்டும்.

அதற்கு என்ன வழி?

இதோ ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

“வீட்டு ஈயானது ஒரு சமயம் அழுகிய புண்ணின் மீதும், மறு சமயம் நிவேனத்துக்கு வைத்திருக்கும் பொருளின்மீதும் உட்காரும். ஆனால், தாமரையிலுள்ள தேனை அருந்தும் வண்டு, அதைத் தவிர வேறொன்றையும் மதியாது. நீ வீட்டு ஈயைப் போலிராமல் தேன் வண்டைப் போலிரு”. -பரமஹம்சரின் இந்த வாக்கு, இன்றைய இளைஞன் கடைபிடிக்க வேண்டிய அறிவியல் அரிச்சுவடி.

வாழ்க்கைப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்யவிருக்கும் இளைஞன் முதற்கோணல், முற்றும் கோணல் என்பதை நினைத்தே தன் படிப்பைத் தொடங்க வேண்டும்.

அந்தப் படிப்பையும் தேன் வண்டைப்போல் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

வாழ்க்கைக்குத் தேவையில்லாத, பயன்படாத, நூல்களைப் படித்துக் காலத்தை வீணாக்கக் கூடாது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

– என்றான் வள்ளுவன்.

பயனற்ற நூல்களில் காலம் வீணாகிறது.

பண்பாடற்ற நண்பர்களால் மனம் பாழாகிறது.

அலட்சிய மனப்பான்மையால் அறிவு மயங்குகிறது.

வெறும் ஆரவாரங்களில் போலி வாழ்க்கையே கிட்டுகிறது.

அஞ்சியஞ்சிச் சாவதால் ஆன்மா அடிமையாகி விடுகிறது.

படிப்பது என்பது, வரப்போகும் காலங்களுக்குப் போடப்படும் அஸ்திவாரம். ஆனால், தவறாகப் படிக்கும் படிப்புப் பயனற்றுப் போகிறது.

எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாத வயது இளம் வயது.

ஆனால், சிந்தித்தே தீரவேண்டிய வயதும் அதுதான்.

`சித்திரப்பாவையின் அத்தக அடங்கி’ நல்ல பாடங்களைக் கேட்டு, நாளையப் பொழுதுக்குத் தன்னைத் தயார் செய்துக் கொள்ள வேண்டிய வயது, பள்ளி வயதுதான் என்பதை இளைஞன் மறக்கக்கூடாது.

அவனுக்குச் சாப்பாட்டைப் பற்றியும், தூக்கத்தையும் பற்றியும் இந்துமதம் கூறுகிறது.

கீதையில் பரந்தாமன் கூறுகிறான்:

“அர்ஜுனா!

அதிமாக உண்ணுபவனுக்கும் யோகமில்லை; ஒன்றும் உண்ணாதவனுக்கும் இல்லை; தூக்கத்தில் அதிக விருப்பமுடையவனுக்கும் இல்லை; தூங்காமலேயே விழிப்பவனுக்கும் இல்லை. அளவான ஊணும், உழைப்புமுடையவனுக்கும், அளவான உறக்கமும், விழிப்புமுடையவனுக்கும் துன்பம் துடைக் கும் யோகம் கிட்டுகிறது”.

– அதையே பரமஹம்சர் கூறுகிறார்:

“பகலில் திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால் இரவில் உணவு, அளவு குறைந்ததாயும் சத்துக் குறைந்ததாயும் இருக்கட்டும். சரீரத்திற்கு உஷ்ணத்தையும் மனத்துக்குச் சஞ்சலத்தையும் கொடுக்கும் உணவை உட்கொள்ளாதே! இழவு வீடுகளில் நடக்கும் சாப்பாட்டுக்குப் போகாதே. புரோகிதத்தால் பிழைப்பவர் வீட்டிலும் சாப்பிடாதே. இறைவனுக்குப் படைக்கக்கூடியது போன்ற சுத்தமான ஆகாரத்தையே சாப்பிடு”.

ஆம். முதலில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்கும் படிப்பு; அடுத்து அளவான சுத்தமான உணவு; அடுத்தது அளவான உழைப்பும் உறக்கமும்.

நான் சின்ன வயதில் படித்த எல்லாப் பாடங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன.

அவைதான் இத்தனை ஆண்டுகளாக எனக்குக் கை கொடுத்து வருகின்றன.

ஆனால், முறையற்ற உணவு, அதற்கு நேர்மாறான பட்டினி, அளவற்ற தூக்கம் – இவற்றால் என் உடம்பு கெட்டுவிட்டது.

ஆரம்பத்திலிருந்தே உணவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லையே என்று இன்று நான் வருந்துகிறேன்.

நல்ல வேளையாக இறைவன் எனக்களித்த வரம், அன்று நான் அர்த்தம் தெரியாமலே மனப்பாடம் செய்த பாடல்கள் அனைத்தும் இன்று அர்த்தத்தோடு வந்து உதவி புரிகின்றன.

இந்துமதத்தின் உபதேசங்களை இன்றைய இளைஞன் ஒதுக்கிவிடாமல் படிக்கவேண்டும்.

நோய்கள் பற்றியும் மருந்துகள் பற்றியும்கூட இந்துமதம் முழு அளவில் சொல்லி வைத்திருக்கிறது.

இன்றைய இளைஞன் திருமூலரின் திருமந்திரத்தை மனப்பாடம் செய்யவேண்டும்.

அவை இப்போது உதவாவிட்டாலும், பின்னாளில் உதவும்.

சந்தம் நிறைந்த பாடல்கள் விரைவிலே மனத்தில் பதியும்.

“சித்தர் ஞானக்கோவை” என்று வழங்கப்படும் நூலில் பட்டினத்தார், சிவவாக்கியர், பத்திரகிரியார் பாடல்களை மனப்பாடம் செய்தால், பெண்ணாசை குறையும்.

எப்படிப்பட்ட பெண்ணைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

ஆரம்பப் படிக்கட்டுகளை இவ்வளவு அழகாகப் போட்டுக் கொண்டு விட்டால், எதிர்காலத்தில் துன்பமிருக்காது; சோர்விருக்காது; அவமானம் நிகழாது. சென்ற இடமெல்லாம் சிறப்பும் கிடைக்கும்.

நண்பர்கள் இருப்பார்கள்; எதிரிகள் இருக்க மாட்டார்கள்.

வரவறிந்து செலவு செய்யும் புத்தி வந்து விடும்.

வாழ்க்கை என்பது பங்கீடு செய்யப்பட்ட சாலையாகி விடும்.

என்னைப்போல அடிக்கடி சோகப்பாட்டுப் பாட வேண்டியிராது.

சராசரி மனிதன் லெளகீக வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அடைவதற்கு, இந்துமத நூல்கள் நல்ல வழி காட்டுகின்றன.

வரவு செலவு பற்றிக்கூட நமது பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.

“ஒருவரிடம் கடன் வாங்கினால் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரே தவணையில் பணத்தைக் கொடுத்துப் பத்திரத்தைத் திருப்பி வாங்கிவிடு. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டத் தொடங்கினால், அதன் வட்டிக் கணக்கு தலைமுறை தலைமுறைக்கு வரும்”.

ஆம், அதிலும் இன்றைய இளைஞன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடைசியாக சாப்பாடு பற்றிய அனுபவம்.

எதை எதைச் சாப்பிடக்கூடாது என்று நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.

…………………….

தட்டைப் பயறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கில்
கொடியதோர் வாய்வு தோன்றும்
தொட்டுப் பாராதே என்றும்
சுவைக்காக நோய் பெறாதே!

-நமது மூதாதையர்கள் வாய்வு, உஷ்ணம், சீதம், சிலேட்டுமம், பித்தம் என்று நோய்களுக்கான காரணங்களையே தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

இன்றைய இளைஞன் மர்ம நாவல்களை விட்டு விட்டு, மதநூல்களைப் படித்தால், வாழ்க்கையில் சகல பகுதிகளுக்கும் வழி கிடைக்கும்.