Daily Archives: மார்ச் 23rd, 2011

விண்டோஸ் 7 கிராஷ்!

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.
பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.
இமேஜ் உருவாக்குதல்: விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும். இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்; சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும். இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.
நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.
பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.
இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும். எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.
மீட்புப் பணி: விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும். இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும். இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.
பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.

கார்பன் – வாழ்வின் உயிர்நாடி!

வாழ்வின் உயிர்நாடியாக இருப்பது கார்பன். எல்லா உயிரினங்களிலும், எல்லா பொருட்களிலும் குறைந்தது ஒரு சதவிகிதமாவது இத்தனிமம் உள்ளது. தனிம அட்டவணையில் 6-வது இடத்தில் இருப்பது இதுதான். கார்பனில் ஒவ்வொரு அணுவும் மற்ற நான்கு அணுக்களுடன் உறுதியாகப் பிணைந்துள்ளன. இந்த நான்கில் ஒவ்வொன்றும் வேறு நான்கு அணுக்களுடன் இணைந்துள்ளன. இவற்றைப் பிரிப்பது கடினம்.

கரியின் பலவகைகள் கார்பனையே குறிக்கின்றன. கார்பன் என்ற இத்தனிமம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை. `கிரா’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு `கொதிக்க வைக்கும்’ என்ற பொருள் உண்டு. கரி என்ற பொருள்படும் லத்தீன் மொழிச் சொல்லின் வேர் இதிலிருந்து தோன்றியது என்று கூறப்படுகிறது.

கார்பனில் படிக வடிவம் கொண்டவை, படிக வடிவம் இல்லாதவை என இரு வகைகள் உள்ளன. வைரமும், கிராபைட்டும் படிக வடிவம் கொண்டவை. கார்பனானது, மற்ற தனிமங்கள், சேர்மங்களுடன் எளிதில் சேராது. எனினும் மிக உயர்ந்த வெப்பநிலையில் மற்ற தனிமங்களுடன் வினை புரியும். அங்கக வேதியியல் என்ற ஒரு பிரிவு உண்டாகக் காரணமே கார்பன்தான். விண்ணிலும் கார்பன் நட்சத்திரங்கள் என்று தனி நட்சத்திரங்களே உள்ளன.

பெண்களின் காதிலே மின்னும் வைரத் தோடுகள், ஓவியர்கள் கையில் உள்ள பென்சில் எல்லாமே கார்பன்தான். உயிரினங்கள் வாழ கார்பன் இன்றியமையாதது. கார்பனோ அதன் சேர்மங்களோ இல்லாத பொருட்களே இல்லை.

சூரியனின் ஹீலியோபாஸ் பகுதியை நெருங்கியது வாயேஜர் 1


கடந்த 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 என்ற இரு விண்கலங்களை விண்ணிற்கு அனுப்பியது. வாயஜர் 1 விண்கலம் ஆனது மணிக்கு 38,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் வடக்கு பகுதியிலும், வாயேஜர் 2 விண்கலம் மணிக்கு 35,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் தென் பகுதியிலும் சுற்றி வருகிறது. பூமியில் காற்று இருப்பது போல் சூரியனின் வெளிப்பகுதியில் காற்று மற்றும் வாயுக்கள் ஆகியவை உள்ளன. ஆனால் இவை மணிக்கு 1 மில்லியன் மைல்கள் அளவு திசைவேகம் கொண்டவை. இந்த பகுதியை ஹீலியோபாஸ் என அழைக்கின்றனர். இந்த காற்று பகுதியை 2004 ஆம் ஆண்டிலிருந்து வாயேஜர் விண்கலம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த பகுதியை விண்கலம் வாயேஜர் 1 நெருங்கியதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஹீலியோபாஸின் எல்லை பகுதியில் உள்ள காற்றின் திசைவேகம் விண்கலத்தின் சுற்றுவேகத்திற்கு இணையாக இருப்பது இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதனை கடந்த சில மாதங்களாக நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். நாசாவின் விஞ்ஞானியான எட்வர்டு ஸ்டோன், இந்த தருணத்தை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். விண்கலம், ஹீலியோபாஸ் பகுதியை நெருங்கி கொண்டிருக்கிறது, இன்னும் 4 வருடங்களில் விண்கலம் வாயேஜர் 1 சூரிய மண்டலத்தை கடந்து மிகவும் குளிர்ந்த மற்றும் அடர்ந்த வாயுக்கள் அடங்கிய இன்டர்ஸ்டெல்லார் என்ற பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

பூமியின் உட்புற காந்த சக்தி மைய வலிமையின் அளவு முதன்முதலாக ஆய்வில் கண்டுபிடிப்பு


நாம் வாழும் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு முழு காரணம் காந்த சக்தி மையமே இந்த காந்த சக்தி மைய வலிமையை பற்றி கலிபோர்னிய பல்கலைகழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறை பேராசிரியர் புரூஸ் ஏ. பபெட் என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன்படி பூமியின் உட்புறம் ஏறத்தாழ 1800 மைல்கள் (2,896 கி.மீ.) ஆழத்தில் இந்த காந்த சக்தி மையம் அமைந்திருக்கிறது என கண்டறிந்துள்ளார். இது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த சக்தி மையத்தை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. வெப்பமானது பூமிக்கு 3 விதமான வழிகளில் கிடைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை

1) சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது ஏற்பட்ட வெப்பம்
2) பூமிக்குள் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவியீர்ப்பு ஆற்றல் வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும்
3) நீண்ட காலமாக பூமியில் உள்ள பொட்டாசியம், யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் என வெப்பமானது பூமிக்கு கிடைக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
மேலும், பூமியின் உட்புறம் உள்ள காந்தபுலம் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடித்து வருகிறது. அதற்கு பூமியில் காணப்படும் இந்த வெப்பமே அடிப்படை ஆகும். உற்பத்தியாகும் வெப்பமானது தொடர்ந்து காந்தபுலத்தை தோற்றுவிக்கும் ஒரு சிறந்த சக்தியாக விளங்கி வருகிறது. ஏறத்தாழ 1,400 மைல்கள் (2,253 கி.மீ.) அளவிற்கு அடர்த்தி மிகுந்த பூமியின் வெளிப்புற அடுக்கு வெப்பத்தின் உதவியால் கொதிப்படைகிறது. இதனால் உள்ளே உள்ள தனிமங்கள் ஆற்றலை உற்பத்தி செய்து பின்னர் சிறிது சிறிதாக அவற்றை மின்னாற்றலாக மாற்றுகிறது. அந்த மின்னாற்றல் காந்த சக்தி மையம் பூமியில் தொடர்ந்து நீடிக்க உதவுகிறது. இந்த காந்த சக்தி மையம் பின்னர் பூமியின் மேற்புறம் வரை பரவுகிறது. இது பற்றிய தகவல்களை கண்டறிந்துள்ள அறிவியலாளர் புரூஸ் பூமியின் உட்புறம் காணப்படும் அரிய விசயங்கள் பற்றிய தனது ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அல்சரா…? இதை பாலோ பண்ணுங்க!

வயசுல பெரியவங்களா இருப்பாங்க…. சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

அதென்ன அல்சர்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு… இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது….

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.

ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், ‘சத்து மாத்திரை வேணாம்’னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க… காரணம் இதுதான்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்… இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி… இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க…? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு  ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.

அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்…

நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.

நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்… விருந்தும் கூடாது… விரதமும் கூடாது!

மெலிவான மேனியழகு…! மறைந்திருக்கும் ரகசியங்கள்

ல்லியான உடலழகை விரும்பாத பெண்களே இல்லை. தனது உடல் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்களோ, கேலி செய்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். பசியும், பட்டினியுமாக கிடக்கிறார்கள். உடற்பயிற்சி எந்திரங் களுடன் அன்றாடம் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

உண்மையில் ஒல்லி உடல்தான் அழகா? மெலிவான மேனியைப் பெற பெண்கள் கடைப்பிடிக்கும் வழிகள் சரிதானா? என்பது பற்றி இங்கே சில பிரபலங்கள் பேசுகிறார்கள்.

ஒல்லியாக இருப்பதுதான் அழகா? என்ற கேள்விக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சலி பதிலளிக்கிறார்…

“மேலைநாட்டுப் பெண்கள் இயல்பாகவே ஒல்லியாக இருப்பார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளைப் பார்த்து நம்நாட்டுப் பெண்களும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைக்கின்றனர்.

பிரபலமான கம்பெனிகளின் விளம்பர மாடல்கள், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் மட்டுமன்றி சாதாரண குடும்பப் பெண்கள்கூட ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று நினைத்து வருகின்றனர். மெலிவான உடலைப் பெறுவதற்காக தங்களுடைய அன்றாட உணவைக் கட்டுப்படுத்துவதும், பசியில்லை என்று கூறும் அனோரெக்ஸியா என்கிற மனோவியாதிக்கு ஆளாவதும் தற்போது சகஜமாகிப் போயிருக்கிறது.”

“உணவின்றி அதிகமாகப் பட்டினி கிடப்பதும் ஒல்லியாக எலும்புந்தோலுமாக இருப்பதும் நமக்கு உகந்தது அல்ல. ஏனென்றால் நமது உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், மலட்டுத்தன்மை இல்லாதிருப்பதற்கும் 12 சதவீத கொழுப்புச்சத்து அவசியம் தேவை. எனவே ஒல்லி உடல் வேண்டுமென்று பட்டினி கிடப்பது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து” என்று எச்சரிக்கையும் செய்கிறார் டாக்டர் அஞ்சலி.

புகைப்பட நிபுணர் விக்ரம் பாவா:

“கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் ஜீரோ சைஸ் உடல், அனோரெக்ஸியா என்கிற பேச்சிற்கே இடமில்லாது இருந்தது. பத்திரிகைகளும் மீடியாக்களும் தான் ஒல்லியாக இருப்பதையே அழகு என்று மிகையாக காண்பித்து வந்தன. நான் சில ஒல்லி யான பெண்களைப் படம் பிடித்துள்ளேன், ஆனால் அவர்களோ தங்களைப் பருமனான பெண்களாக நினைத்துக் கொண்டு மின்சார எந்திரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் செய்ய வேண்டியது இவர்களின் உடம்பின் தசை இறுக்கத் திற்கான முறையான உடற்பயிற்சியே.

பழங்கால கிரேக்க ரோமானியச் சிற்பங்களில் பெண்களின் உருவங்கள் ஒல்லியாக இருக்க, நம் நாட்டுப் பெண்களின் உருவங்கள் சற்று குண்டாக சதைப்பிடிப்புடன் அழகுடன் கூடிய கவர்ச்சியுடன் இருப்பதைக் காணலாம். எனவே, இந் தியப் பெண்கள் என்றாலே சற்றுப் பருமனாகத் தோன்றுவதே கண்ணைக் கவரும் கவினுறு அழகு!” என்கிறார் விக்ரம் பாவா யதார்த்தமாக.

மாடல் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்:

“ஜீரோ சைஸ் உடலைப் பெறுவதற்காக பெரும்பாலான இந்தியப் பெண்கள் உணவு உட்கொள்ளாமல் எடையைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடக்கின்றனர். ஒருசில பெண்களே சுகாதாரமான ஊட்டச்சத்து எடுத்துக் கொண்டு தங்கள் எடையைக் குறைக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உலக அழகிப்போட்டியில் பங்கு கொள்வதற்காக அரைகுறையாக சாப்பிட்டு எனது எடையை 48 கிலோவாகக் குறைத்து எலும்பும் தோலுமாகிப் பார்ப்பதற்கே எரிச்சலூட்டும்படியாகத் திகழ்ந்தேன். தற்போது சுகாதாரமான ஊட்டச்சத்து உட்கொண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

ஒரு சிலர் எனது உடல் எடையை நான் குறைக்க வேண்டும் என்று கூறினாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. எனது தற்போதைய எடை எனக்கு சவுகரியமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்!

மேனியழகில் நாட்டம் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு கூச்சப்படுவார்கள். மாடல்கள் மற்றும் பல வெள்ளித்திரை நடிகைகள் உட்கார்ந்து உண்ணும் திடஉணவை விட, நின்று கொண்டு அருந்தும் திரவ உணவையே பெரிதும் விரும்புகின்றனர். பட்டினி கிடப்பது பெண்களின் எடையைக் குறைக்காது, மாறாக எதிர்மறை விளைவுகளை விளைவிக்கும். `பாலி சிஸ்பிக் ஓவரியன் டிசீஸ்` (பி.சி.ஓ.டி) எனப்படும் கருப்பைக் கோளாறுகளைத் தோற்றுவிக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்!” என்கிறார் நடிகை ஜாக்குலின்.

அழகுக்கலை நிபுணர் ரீட்டா தோடி:

“இந்தியாவில் உள்ள பல பெண்கள் தங்கள் மேனியழகும், கொஞ்சும் இளமையும் தங்களின் உடலில் அமைந்துள்ள எலும்பு களின் வடிவமைப்பைச் சார்ந்தே உள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள். நான் சந்தித்த 17 முதல் 21 வயதிற்குட்பட்ட மாடலிங் நடிகைகள் பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால் அடிக்கடி சோர்வுடனும், களைப்பு டனும் காணப்படுவார்கள். இதனால் இவர்களுக்கு ஒளியிழந்த கண்களும், மெலிந்த உடலும் உண்டாகிறது என்பதை மறந்து போகின்றார்கள். புகை நமக்குப் பகை என்பதைத் தெரிந்து புகையைத் துறந்தால் இவர்களது கவர்ச்சியான மேனியழகு மங்காது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!”

தன்னம்பிக்கை பயிற்சியாளர் தியான்னி பாண்டே:

“சைஸ் ஜீரோ என்றொரு உடல் அளவே கிடையாது! உண்மை யில் இந்த அளவு 8 வயது நிறைந்த குழந்தைகளின் நீள உயர பருமன் அளவையே குறிக்கிறது. இப்படி, இல்லாத உடல் அளவுடன் தங்கள் உடல் எடையை ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்வது புத்திசாலித்தனமான காரியமாக எனக்குப் படவில்லை.

பல பெண்கள் எப்போதும் தங்கள் உடல் எடை கொழுப்பினைக் குறைப்பது, இறுக்கமான தசைகளைத் தரும் கருவிகளைப் பற்றிச் சிந்திப்பது என்றே காலத்தைக் கழிக்கின்றனர். இவர்கள் முதலில் ஒரு உளவியல் அறிஞரையோ அல்லது மனநலவியல் மருத்துவரையோ அணுகி அறிவுரை பெற வேண்டும்.

நான் இப்படி கூறுவதால் எனக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலரை இழந்திருக்கிறேன். தங்கள் எடையைக் குறைக்கும் பெண்கள் முதலில் தங்கள் மேனியழகை விட தங்களது வளமான உடல்நலத்தையே கருத்தில் கொள்ள வேண்டும்”

பிரபல நடிகை ஜாரினிகான்:

“தற்போதைய நடிகைகள் ஒல்லியான உடல்அளவைப் பெற முனைந்து தங்கள் உடல் நலத்தினைக் கெடுத்துக் கொள்கி றார்கள். நானும் முதலில் 100 கிலோ எடையுடன் இருந்தவள். தற்போது 64 கிலோவாக எடை குறைந்துள்ளேன். இந்த எடை குறைப்பு எனது உடல்நலத் திற்கு உகந்ததாக இருப்பதற்குக் கார ணம், பெரிய எலும்புள்ள எனது உடல் வடிவமைப்பு தான். ஒருபோதும் நான் ஜீரோ சைஸ் உடல் அமைப்பிற்குள் பிர வேசிக்க முடியாது!” என்கிறார், ஜாரினி கான் தெளிவாக.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் உள்ள மக்களின் உடல்வாகிற்கும், நமது நாட்டுமக்களின் உடல்வாகிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. ஆதலால் உடல்நலத்தைக் கெடுக்காத உடல் எடைக் குறைவே உன்னதமானது என்பதை நம்நாட்டுப் பெண்கள் உணரவேண்டும்!

நன்றி-தினத்தந்தி

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! யூசர் இன்டர்பேஸ்

யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் கவனம் செலுத்தியதில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்து கிறீர்கள். அடிப்படையில் ஒரு புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட சாதனத்தோடு உங்களை இணைக்கும் வேலையை அறிமுக அடிப்படையில் செயல் படுவதே யூசர் இன்டர்பேஸின் வேலை. அந்த புரோகிராமுடன் வரும் சிறிய கண்ட்ரோல்கள் (எ.கா. மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்றவை) அனைத்தும் இந்த யூசர் இன்டர்பேஸில் தான் காட்டப்படுகின்றன. ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் உங்களுக்குக் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ். அல்லது புதிய ஹார்வேர் சாதனம் ஒன்றை நீங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தால் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ் ஆகும். அந்த புரோகிராம் உள்ளே செல்ல உங்களுக்கு ஒரு லைட் ஹவுஸ் போல செயல்படுவதே யூசர் இன்டர்பேஸ்.
பெரும்பாலும் அனைத்து புரோகிராம்களும் எளிய பயன்படுத்த இலகுவான இன்டர்பேஸையே அளிக்கின்றன. அதனை பயன் படுத்துவது எளிதாக இருப்பின் அதுவே அதனுடைய சிறப்பு தன்மை ஆகும். இன்டர்பேஸ்களில் பல வகை உண்டு. கிராபிகல் இன்டர்பேஸ், வெப் அடிப்படி யிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் போன்ற வகைகளை எடுத்துக் காட்டுக் களாகக் கூறலாம். இது எத்தகைய புரோகிராமுடன் நீங்கள் செயல் படுகிறீர்கள் என்பதனைப் பொறுத்து மாறும். புதிய புரோகிராம் ஒன்றின் இன்டர்பேஸுடன் பழக சில நாட்கள் ஆகும். அது நீங்கள் அந்த புரோகி ராமினைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது ஆகும்.

அரேபிய குச்சி சிக்கன்

சிறு குழந்தைகள் லாலிபாப் குச்சி மிட்டாய் சாப்பிடுவதே அழகு தான். கோழி இறைச்சி துண்டுகளை, இதேபோல குச்சியில் செருகி சாப்பிட கொடுத்தால், ஆசையாய் குழந்தைகள் சாப்பிடுவர். காரம் இல்லாத அரேபிய குச்சி சிக்கன் செய்யகற்றுத் தருகிறார், மதுரை சங்கம் ஓட்டல் சமையல்நிபுணர் சரவணன்.

தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
குடைமிளகாய் – ஒன்று
மிளகுப் பொடி – ஒரு ஸ்பூன்
கடுகுப் பொடி – ஒரு ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)
தயிர் – 50 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – அரை மூடி
எண்ணெய் – வதக்கும் அளவிற்கு
நீளமான குச்சி (சாஸ்டிக்) – இரண்டு (கடைகளில் கிடைக்கும்)

செய்முறை:சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒரே அளவான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுடன், மேற்குறிப்பிட்ட அனைத்து பொடி வகைகள், உப்பு, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக காயவிட வேண்டும்.நீளமான குச்சியில் சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக செருகி, தோசைக்கல்லில் வேகவிட வேண்டும். சதுர துண்டுகளாக இருப்பதால், நான்கு பக்கமும் திருப்பி வேகவிட வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வெந்தபின், தக்காளி கெட்ச் அப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சற்றே காரம் வேண்டுமென விரும்புபவர்கள், மிளகுப் பொடியை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.
சமையல் நேரம்: ஊற வைக்கும் நேரம் தவிர 25 நிமிடங்கள்.: