Daily Archives: மார்ச் 25th, 2011

டைபாய்டு


இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. “சல்மோநெலா’ என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. கழிவுநீர் மூலமும், இந்நோய் தாக்கியுள்ள ஒருவர் அளிக்கும் உணவை சாப்பிடுவதன் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.நம்மூர் அனைத்திலும் கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்ற சிறந்த முறை பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டைபாய்டு தொற்று ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக, டைபாய்டை தவிர்க்க தடுப்பு மருந்துகள் உள்ளன. 2 வயது நிறைந்தவுடன், ஒரு ஊசி போடலாம்.
பின், ஒவ்வொரு 3 வயது கூடும்போதும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து உட்கொள்ள வேண்டும். வாய் வழியே சாப்பிடும், நோய் தடுப்பு மருந்தும் உள்ளது. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இதை சாப்பிட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு நோய் வராமல் தடுக்கலாம்.நோய் தடுப்பு மருந்தை, அரசு இலவசமாக வழங்குவதில்லை. எனவே, பெரும்பாலான மக்களுக்கு, இம்மருந்தின் அவசியமும், முக்கியத்துவமும் புரிய வில்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மருந்து கிடைக்கிறது.ஒரு டோஸ் மருந்தின் விலை 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இம்மருந்தை உட்கொண்டால், லேசான காய்ச்சலும், உடல் வலியும் ஏற்படும். பின் தானாகவே சரியாகி விடும்.டைபாய்டை ஏற்படுத்தும் பாக்டீரியா, உடலில் நுழைந்தவுடன், கடுமையான காய்ச்சலும், இரண்டு வாரங்களில், உடல் முழுவதும் சிவந்த கீறல்களும் ஏற்படும். நாக்கில் மேல்படலம் படிந்து, வெண்மையாகி விடும். அடிவயிறு வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். நாளமில்லா சுரப்பிகள், கல்லீரல் வீங்கி விடும்.ரத்தப்பரிசோதனை செய்தால், வெள்ளை அணுக்களின் அளவு குறைந்திருக்கும். கிருமி, ரத்தம், மலம், சிறுநீர் ஆகியவற்றிலும் காணப்படும்.முன்பு, டைபாய்டுக் கென தனியான பரிசோதனை முறை கிடையாது.”விடால்’ என்றழைக்கப்படும் இந்த பரிசோதனை, பல நோய்களுக்கும் பொதுவானபரிசோதனை யாக மட்டு மே அமைந் தது.இரண்டு வாரங்கள் வரை காத் திருந்து, பிறகு மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு நாள் எப்படி காத்திருக்க முடியும்?இப்போது, அட்டை முறை உட்பட பல பரிசோதனை முறைகள் வந்து விட்டன. டைபாய்டை கண்டறியாவிட்டால், மூன்றாவது வாரத்தில், மூளை, நுரையீரல், எலும்புகளில் தொற்று பரவி, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.இத்தகைய நோயாளி களில் 10 சதவீதம் பேருக்கு, நோய் திரும்ப ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 1 முதல் 4 சதவீதத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிருமிகள் மலம் வழியே தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இதனால், பலருக்கும் நோய் தொற்றும் ஆபத்து ஏற்படும். எனினும், பரிசோதனை செய்யாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே டைபாய்டுக்கு மருந்து கொடுப்பது நல்லதல்ல.இதற்கு பல ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. 7 முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை காலம், சிகிச்சை முறை, மருந்து சாப்பிட வேண்டிய அளவு, இடைவெளி ஆகியவை சரியான முறையில் அமைதல் வேண்டும்.இல்லையெனில், மருந்துகளுக்கு, கிருமிகள் கட்டுப்படாத நிலை ஏற்படும்; நிலைமை சிக்கலாகும். கிருமி உடலில் தங்கும் நிலை ஏற்படும்.
– டாக்டர் கீதா மத்தாய்

பைசா கோபுரம் சாய்விலிருந்து தடுத்து நிறுத்தப்படுகிறது


உலக அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம், வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது. மேலும் மத்திய தரை கடலிலிருந்து வரும் உப்புக்காற்றும் மழைகாலங்களில் ஏற்படும் மண் அரிப்பும் கேட்டினை அதிகப்படுத்தி வருகின்றன. கோபுரம் சரிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் இந்த கோபுரத்தை பாதுகாக்கும் பணியை கடந்த 1989 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. சுமார் 6 மில்லியன் பவுண்டு செலவில் கோபுரம் சாய்விலிருந்து மீட்கப்படுகிறது. கோபுரத்திற்கடியில் சேர்ந்துள்ள மண் மற்றும் கழிவுப்பொருட்களை லேசர், உளி மற்றும் சிறிய வகை ஊசிகளை பயன்படுத்தி நீக்கி வருகின்றனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 5.5 டிகிரி சாய்ந்திருந்த கோபுரம் மீட்கப்பட்டு தற்போது 3.9 டிகிரி சாய்வு நிலைக்கு நேர் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி இன்னும் 200 வருடங்களுக்கு போதுமானது என்று இதன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொறியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?

உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:

ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக் கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் “காஸ்ட்லி ஸ்கிரப்பர்”களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.

வைட்டமின் “டி” குறைபாட்டை சரிகட்டுங்களேன்!

காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி, மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு வாருங்கள்.

வைட்டமின் “டி” சத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். சூரியன் நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் “டி” சத்து கிடைக்கும்; உணவு வகைகள் மூலம் வைட்டமின் “டி” சத்து கிடைப்பது மிக மிகக் கடினம். காசு செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்!

கண்கள் சோர்வடையாமல் இருக்க:

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.

கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.

ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல் இருக்கும். இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும்.

கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில் தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.

தரையை சுத்தமாக்க…


நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்.

கீறல்கள் மறைய

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

எண்ணை பிசுக்குளை நீக்க

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்’ என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்.

யூசர் நேம்/பாஸ்வேர்ட் சரியா?

இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக்கமாக, உடனே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளைகளில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். “அய்யோ! சரியாகத்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் என்ன வாயிற்று?’ என்ற பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்த பதற்றத்திலேயே இன்னும் பல தவறுகளைச் செய்திடத் தொடங்குவோம். இன்டர்நெட் இணைப்பிற்காவது பரவாயில்லை; ட்ரெயின் டிக்கெட், பேங்க் அக்கவுண்ட் கையாளுதல், ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகையில் இந்த பிரச்னை வந்தால் நம் ரத்த அழுத்தம் இன்னும் எகிறும், இல்லையா? இந்த சூழ்நிலைக்கு நாம் தான் காரணம். எனவே இது போல லாக் இன் செய்திடுகையில் செய்யக் கூடாதவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் இங்கு காணலாம்.
செய்யக் கூடாதவை:
1. லாக் இன் செய்திடுகையில் “ஓகே’ அல்லது “சப்மிட்’ பட்டனை ஒரு முறை மட்டுமே தட்டவும்.
2.தட்டிய பின் மேற்கொண்டு எதுவும் செய்திடாமல் இருக்கவும். வேறு புரோகிராம்களுக்கான எந்தவிதமான செயல்பாடும்களையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
3.மவுஸைத் தட்டாமல் அல்லது அதைக் கொண்டு வேறு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. சிஸ்டம் உங்களை லாக் இன் செய்திடும் வரை பொறுமை காப்பது நல்லது. ஏதாவது செய்தால் நீங்கள் இன்டர்நெட்டிலிருந்து வெளியே தள்ளப்படலாம்.
4. வேறு ஸ்கிரீன், வேறு புரோகிராம், வேறு மெனு என்று எதற்கும் செல்ல வேண்டாம்.
5. ஏற்கனவே இருக்கும் புரோகிராம் மட்டுமின்றி புதிய புரோகிராம் எதனையும் திறக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்.
6. உங்கள் பாஸ்வேர்ட் அல்லது யூசர் நேம் எதனையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் செயலை அறவே நிறுத்துங்கள். எத்தனை முறை அவற்றை டைப் செய்திட வேண்டியது இருந்தாலும் டைப் மட்டுமே செய்திடவும்.
செய்ய வேண்டியவை:
1. இன்டர்நெட்டில் அல்லது அதன் ஒரு தளத்தில் லாக் இன் செய்திடுகையில் இயங்கும் புரோகிராம் எண்ணிக்கையை கூடுமான அளவு குறைவாகவே இருக்கட்டும். நிறைய புரோகிராம்கள் இருப்பது உங்கள் இன்டர்நெட் லாக் இன் செயலில் நிறைய குறுக்கீடுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் ராம் மெமரி குறைவான அளவில் இருந்தால் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படலாம்.
2. பென் டிரைவ் போன்ற சாதனங்களை இணைத்தல், மியூசிக் புரோகிராம்களை தொடங்குதல் போன்றவற்றை நீங்கள் லாக் இன் செய்திடும் வரை ஒத்தி போடவும்.
3. லாக் இன் செய்திடுகையில் முற்றுப் புள்ளி கீயினைப் பயன்படுத்தும் இடத்தில் கமா புள்ளியைப் பயன்படுத்த வில்லை என்பதனை உறுதிப் படுத்திக் கொள்ளவும். அதே போல பலரும் என் மற்றும் எம் (mn) கீகளை மாற்றி அமைத்து டைப் செய்வார்கள். எடுத்துக் காட்டாக அவசரத்தில் com என்பதற்குப் பதில் con என டைப் அடிப்பவர்கள் உண்டு. இது ஒரு மிகச் சிறிய தவறு தான் என்றாலும் நம் பணியைக் கெடுத்துவிடும் அல்லவா?
4. யூசர் நேம் டைப் செய்கையில் ட்ராப் பாக்ஸ் என்னும் விரியும் மெனு வசதி இருந்தால் ஏற்கனவே சரியான முறையில் டைப் செய்து லாக் இன் செய்தததைத் தேர்ந்தெடுத்து அமைத்திடவும். இது பிழைகளைத் தவிர்க்கும்.
5. அடுத்த அடுத்த கட்டங்களுக்குச் செல்ல மவுஸ் கர்சரைப் பயன்படுத்தவும். டேப் கீயைப் பயன்படுத்த வேண்டாம்.
6. எப்போதும் கீ போர்டில் உள்ள கேப்ஸ் லாக் கீ இயக்கப்படவில்லை என்பதனை லாக் இன் செய்திடும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக பெரும்பாலான லாக் இன் அக்கவுண்ட்கள் சிறிய பெரிய எழுத்துக்கேற்றபடி வேறுபடும். எனவே சரியான முறையில் நீங்கள் எழுத்துக்களை டைப் செய்திடுகிறீர்கள் என்பதனை உறுதி செய்திடவும்.
மேற்சொன்ன அனைத்து பாதுகாப்பு வழிகளையும் நீங்கள் பின்பற்றிய பின்னாலும் உங்களால் லாக் இன் செய்திட முடியவில்லை. இந்த கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்ட பிழைச் செய்திதான் வருகிறது என்றால் லாக் இன் செய்திடும் முயற்சியை அப்போதைக்குக் கைவிட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து மேற்கொள்ளவும். அல்லது கம்ப்யூட்டரை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து பின் லாக் இன் செய்திடவும்.

மண்ணின் மக(ரு)த்துவம்

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆட்கொள்ளப் பட்டு  இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும்.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு என்றாலும் உலகம் அழிவு நிலைக்குச் சென்றுவிடும்.

இவற்றுள் மண்ணைப் பற்றியும், அதில் அடங்கியுள்ள மருத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.

மண் உயிர்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் அரண். மண்ணை பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வார்கள்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணில் மருத்துவக் குணங்களும் உண்டு.  இதை சித்தர்கள் அன்றே உணர்ந்து மண்ணின் மருத்துவ மகிமையைக் கூறியுள்ளனர்.

மனிதனின் பேராசையால் மண் சீரழிக்கப்பட்டு வருகிறது.  இரசாயன வேதிப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகள் இவற்றால் மண் வளம் கெட்டுவிட்டது.  விவசாயம் செழித்த நிலங்கள் உவர் நிலங்களாகக் காட்சியளிக்கின்றன.  மண்ணின் மகத்துவம் புரியாமல் அவற்றின் மேல் கான்கிரீட் தளங்களை அமைத்துவிட்டோம்.  இதனால் பசுமையை இழக்கிறோம்.

நிலத்தடி நீரை இழக்கிறோம். எல்லாவற்றையும் இழந்து செயற்கை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.  இதனால் பூமி அங்காங்கே நில நடுக்கமாகவும், எரிமலையாகவும் வெடித்துக் கொண்டு இருக்கிறது.

உலக உயிர்களை எல்லாம் வாழ வைப்பது மண்தான்.  அதோடு அதற்கு தேவையான உணவு வகைகளை வளர்த்துத் தருவதோடு தானே மருந்தாகவும் அமைகிறது.

மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதிலுள்ள மருத்துவ மகிமைகளைகண்டு மண்குளியல், மண்பட்டி என இரு சிகிச்சை முறைகளைக் கூறியுள்ளனர் சித்தர்கள்.

மண் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கிறது.

இதில் மருத்துவத்திற்காகப் பயன்படுவது சுத்தமான புற்று மண் மட்டுமே.  இதில் உப்பு, உவர், சுண்ணாம்பு, கந்தகம், மைக்கா என எதுவுமே கலந்திருக்கக் கூடாது.  மண் ஊறவைக்கும் நீரும் அவ்வாறே தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இத்தகைய மண் இரத்த ஓட்டத்தடை, தூக்கமின்மை, நரம்புத் தளர்வு, தோல் நோய்கள் போன்றவற்றுக்குச் சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது.

இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பலவகைச் சிகிச்சை முறைகளில் மண் சிகிச்சையும் ஒன்று.

புற்று மண்ணுக்கு உறிஞ்சும் சக்தி உண்டு. வெப்பத்தை கிரகிக்கும் தன்மையும் உண்டு.

மண் சிகிச்சை இரு வகைகளில் அளிக்கப்படுகிறது.

1. மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் சிகிச்சை.

2. மண்பட்டி – மண்ணை துணியில் சுருட்டி, வேண்டிய இடத்தில் பட்டி போடுவது.

மண்பூச்சு

உடல் முழுவதும் மண் பூசுவது அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் பூசுவது என இரு வகைகளில் மண்பூச்சு சிகிச்சை முறை நடைபெறுகிறது.

நன்கு குழைத்த மண்ணைப் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வருவதுதான் இந்த சிகிச்சை முறை.  இதனை குளிர்காலத்தில் செய்யக் கூடாது.  வெயில் நேரத்தில் நிழலில் அமர்ந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.

குழைத்த மண்ணை காலிலிருந்து மேல் நோக்கி பூச வேண்டும்.  கண், வாய், காது தவிர்த்து உடல் முழுவதும் பூசுதல் நல்லது.

இதனால் உடல் சூடு தணிகிறது.

உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தின் நிலை சீராகுகிறது.  தச வாயுக்களின் செயல்பாடு தூண்டப்படுகிறது.  பித்த அதிகரிப்பு குறைவதால் இரத்தம் சுத்தமாவதுடன் இரத்தம் தங்குதடையின்றி உடல் முழுவதும் சென்று அடைகிறது.

உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நீர்களை மண் உறிஞ்சிக் கொள்கிறது.  இதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றன.  நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன.  எலும்புகள் வலுவடைகின்றன.  மேலும் மன அழுத்தம் குறைகிறது.  சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பாதுகாப்படைகிறது.  அதுபோல் உடலில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கட்டி, புண், படை போன்றவற்றுக்கு அப்பகுதியில் மண் பூச்சைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.

வயிற்றைச் சுற்றி மண் பற்றுப் போட்டால் அசீரணம், மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.  நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

இன்றும் கிராமங்களில்,  சோப்புகளுக்குப் பதிலாக கரப்பான் என்ற மண் வகையை உடம்பில் தேய்த்து குளிக்கும் வழக்கம்  உள்ளது.

மண்ணை, வயிற்றுப்  பகுதியில் வைத்துக் கட்டினால் அஜீரணம், வாயுக் கோளாறு, வயிற்றுப்பொருமல் போன்றவை நீங்கும்.  மேலும் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதால் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.

பொதுவாக மண் பட்டியை 15 நிமிடங்களுக்கு மேல் கட்டியிருக்கக் கூடாது.

கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு மண்பட்டி சிகிச்சை நல்லது.

ஆகையால்தான் இயற்கை சிகிச்சை முறைகளில் மண் குளியல் முக்கிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள்.  பழங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் இதை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  இன்றைய கால கட்டத்தில் சிறந்த சிகிச்சை முறையாக செய்தும் வருகிறார்கள்.