Daily Archives: மார்ச் 26th, 2011

கருணாநிதி ரூ.50 கோடி – ஜெயலலிதா ரூ.51 கோடி: 5 ஆண்டுகளில் சொத்து 3 மடங்காக உயர்வு

முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கலின் போது, தங்கள் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்ததை விட, இப்போது இருவருக்கும் மூன்று மடங்கு அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

கருணாநிதி: முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரங்களில் தன் பெயரில் உள்ள பணம் கையிருப்பு அசையும், அசையா சொத்துக்கள், தன் மனைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை காட்டியுள்ளார். ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த கடனை ராஜாத்தி மற்றும் கனிமொழியிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்தாண்டு வருமான வரித்துறைக்கு வழங்கிய கணக்கின்படி, கருணாநிதிக்கு 37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தயாளுக்கு 64 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், ராஜாத்திக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. மற்ற அசையும், அசையா சொத்துக்களையும் சேர்த்து 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளையும் தனது சொத்தாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால், அவற்றின் மதிப்பை குறிப்பிடவில்லை. போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத், கோட நாடு சொத்துக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவிடம் இருக்கும் சொத்துக்கள் என்ன? அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் அளித்த தனது சொத்து விவரம் வருமாறு:

அசையும் சொத்துக்கள்

1. கையிருப்புத் ரொக்கம்- 25,000 ரூபாய்
2. பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டிபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டிபாசிட் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இவை சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
3. பாண்டுகள், கம்பெனிகளில் பங்கு முதலீடு-50,000 ரூபாய். இவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது.
4. சொந்தமான வாகனங்களில் மொத்த மதிப்பு 8.35 லட்சம் ரூபாய்.
5.நிறுவனங்களில் முதலீடுகள் விவரம்:
* ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ்-8.5 கோடி ரூபாய்.
* சசி எண்டர்பிரைஸஸ்-75 லட்சம் ரூபாய்.
* கோட நாடு எஸ்டேட்-1 கோடி ரூபாய்.
* ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட்-65 லட்சம் ரூபாய் உட்பட நிறுவனங்களில் முதலீட்டின் மொத்த மதிப்பு 10.9 கோடி ரூபாய். அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979 ரூபாய்.

அசையாச் சொத்துக்கள்

1. வேளாண் நிலம்:
* ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
* செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
* 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
* 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
* ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
* எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.
3.குடியிருப்பு கட்டடங்கள்:
* 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.
கடன் இல்லை
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.
அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் .

கருணாநிதியின் சொத்து மதிப்பு: திருவாரூர் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேட்பு மனு தாக்கலின் போது, வெளியிடப்பட்ட சொத்து பட்டியல் விவரம் வருமாறு: கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு பெயரில் 30 ஆயிரம் ரூபாய், மற்றொரு மனைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது. வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய், கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய். கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் “டிவி’ நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப் போன்று துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய். ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சிதமாக இருப்பதே அழகு!

நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:

* பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி.

* கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள்.

* ஆடை அணிவது முதலில் வசதிக்காக என்பது நினைவிருக்கட்டும். உடை உடலை கவ்விப் பிடிக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டாம். ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.

* வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடிவதில்லை. சுடிதார், சல்வார் கமீஸ் சவுகர்யமாக இருக்கிறது. புடவை கட்ட முடியவில்லையே என்ற ஏக்கமின்றி அணியுங்கள்.

* வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.

* கூந்தலில் சிக்கு விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.

* வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது கூந்தலை இறுக்கிக் கட்டக்கூடாது. முடி அதிகமாக உதிரிந்து விடும். தூக்கி குதிரைவால் போட்டு கட்டலாம். ரப்பர் பாண்ட் போட வேண்டாம்.

* தலையை துடைக்க தனியாக டவல் வைத்துக்கொள்ளுங்கள். முகத்துக்கு அதே துண்டை பயன் படுத்தும்போது, தலையில் இருக்கக் கூடிய பொடுகு முகத்தில் பருக்கள் வரக் காரணமாகலாம்.

* பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.

* என்னதான் பொறுமையாக நடந்து கொண்டாலும் அதை மீறி ஆத்திரம் உண்டாக்கும் வகையில் யாராவது ஏதாவது பேசுவார்கள், செய்வார்கள். இது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் பொதுவானது. ஆனால் நம்மால் கோபத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். இதனால் உணர்ச்சிகள் உள்ளேயே அடக்கப்பட்டு டென்ஷன் நிறைந்திருக்கும். இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய சந்தர்ப்பத்தில் என்னதான் முயன்றாலும் நம்மால் அழகாக காட்சியளிக்க முடியாது. தியானம், யோகாசனம், இசை கேட்பது, பாடுவது, நடனமாடுவது போன்ற ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

நாசாவின் ஆர்செனிக் பாக்டீரியா பற்றிய தகவலை ஏற்க விஞ்ஞானிகள் மறுப்பு


பூமியை தவிர வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன என நாசா விஞ்ஞானிகள் கருத்தரங்கில் அறிவித்திருந்தனர். மேலும் அவர்கள் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மோனோ ஏரியில் வாழும் பாக்டீரியா தனது டி.என்.ஏ. மூலக்கூறில் பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்செனிக் என்ற நச்சு தன்மை வாய்ந்த பொருளை கொண்டு உயிர் வாழ்கிறது என கூறியிருந்தனர். இதனை மற்ற விஞ்ஞானிகள் ஏற்க மறுத்துள்ளனர். இது பற்றி அலெக்ஸ் பிராட்லி என்ற நுண்ணுயிரியியலாளர் கூறும்போது, பாக்டீரியாவின் டி.என்.ஏ. ஆர்செனிக் கலந்த நீரில் அமிழ்ந்து வைத்திருக்கும்போது, அது கண்டிப்பாக தன்னுள் பாஸ்பேட் பொருளை கொண்டிருக்கும் என கூறினார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், பாக்டீரியாவானது குறைந்த அளவிலான பாஸ்பேட் பொருளை தன்னுள் கொண்டு உயிர் வாழும் தன்மை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வகை பாக்டீரியா இனங்கள் பல உள்ளன என்றும் கூறப்படுகிறது. பாக்டீரியா குறித்து கருத்தரங்கில் தகவல் வழங்கியிருந்தவர்களில் ஒருவரான ரொனால்ட் ஒரெம்லேண்ட் கூறும்போது, இந்த விவாதங்களுக்குள் தற்போது நாங்கள் நுழைய விரும்பவில்லை. நாங்கள் தெரிவித்த கருத்து தவறானால் மற்ற விஞ்ஞானிகள் எங்கள் கண்டுபிடிப்பை பற்றி ஆராய்ந்து தெளிவு பெற ஒரு உந்துசக்தியாக அது இருக்கும். நாங்கள் தெரிவித்தது சரி என்றால் எங்களுடன் போட்டியிடுபவர்கள் அதனை ஏற்று கொள்வார்கள். மேலும் இந்த விசயத்தில் அவர்கள் எங்களுக்கு உறுதுணையாகவும் இருப்பார்கள். அதற்காக நான் ஆவலாக உள்ளேன் என கூறினார்.
இது போன்ற தகவல்களை கூறுவது நாசா மையத்திற்கு புதிதல்ல. கடந்த 1996-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட ஒருவகை பாறையின் மீது வேற்று கிரகத்தில் வாழும் நுண்ணுயிர் படிவங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது. புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. அது அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேலும், அதிக வெப்பம் உண்டாகி அதனால் பாறை வெடித்து தாதுபொருள்கள் உற்பத்தியாகி இருக்கிறது. அது நுண்ணுயிர் படிவங்கள் என தவறாக கருதப்பட்டுள்ளது என்றும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

வேர்ட் டிப்ஸ்-வட்டமும் சதுரமும் சரியாக அமைய

வட்டமும் சதுரமும் சரியாக அமைய
வேர்டில் சில தகவல்களை விளக்க நாமே சிறிய படங்களை டெக்ஸ்ட்டுடன் உருவாக்குவோம். இவற்றிற்கான வட்டங்களையும் சதுரங்களையும் வரைய வேர்ட் தொகுப்பில் சாதனங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் பலரும் இதில் சற்று மனம் தளர்கின்றனர். எவ்வளவுதான் சரியாக மவுஸ் கொண்டு இழுத்தாலும் வட்டமும் சதுரமும் சரியாக அமையவில்லையே என குறைபட்டுக் கொள்கின்றனர். தேவையே இல்லை. இதற்கான சரியான கீகளைப் பயன்படுத்தினால் நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சரியாக வட்டமும் சதுரமும் அமையும். அது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த சூட்சுமம் ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளைப் பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. முதலில் டிராயிங் டூல் பாரில் சரியான டூலைத் தேர்ந்தெடுங்கள். உடன் உங்கள் கர்சர் ஒரு கூட்டல் அடையாளம் ஆக மாறும். இப்போது நீங்கள் வரைய தயாராகிவிட்டீர்கள். வரையத் தொடங்குமும் ஷிப்ட் கீயினை அழுத்திக் கொள்ளுங்கள். கீ அழுத்துவது அப்படியே தொடரட்டும். இப்போது வரையத் தொடங்குங்கள். வித்தியாசம் தெரிகிறதா. ஆம். இதுவரை சரியாக வராத வட்டம், சதுரம் மற்றும் பிற உருவங்கள் நன்றாக வருகின்றனவா? ஓகே. ஏதேனும் ஒரு முறை ஷிப்ட் கீயை அழுத்தாமல் வரையத் தொடங்கிவிட்டு பின் அடடா! ஷிப்ட் கீயை அழுத்த மறந்துவிட்டோமே என்று அங்கலாய்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். வரைவது பாதியில் இருக்கையில் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். வரைந்த பகுதி மற்றும் இனி வரையப் போகும் பகுதி அனைத்தும் சரியாக மாறிவிடுவதனைப் பார்க்கலாம். இன்னொன்றை கவனித்தீர்களா! நீங்கள் எந்த உருவம் வரைந்தாலும் அது இடது மூலையிலிருந்தேதான் தொடங்கும். அதாவது நீங்கள் எந்த பாய்ண்ட்டில் கிளிக் செய்கிறீர்களோ அந்த புள்ளி வரையப் போகும் உருவத்தின் இடது மூலையாக அமைகிறது. அடடா! நடுவில் இருந்து வரைய வேண்டும் என்றால் என்ன செய்வது? கவலையே வேண்டாம்.இங்கு தான் கண்ட்ரோல் கீ உதவுகிறது. கண்ட்ரோல் கீயை ஷிப்ட் கீக்குப் பதிலாக அழுத்திக் கொண்டு வரையத் தொடங்கினால் உருவத்தின் நடுப் பகுதியிலிருந்து நீங்கள் விரும்பும் டிசைன் கிடைக்கும். சில வேளைகளில் நாம் படத்தை வரைந்து விட்டு பின் குறிப்பிட்ட இடத்தில் அமைக்க அதனை நகர்த்த சிரமப்படுவோம். அது போன்ற இடங்களில் இந்த கண்ட்ரோல் கீ நமக்கு உதவி செய்கிறது. தேவையான இடத்தில் கர்சரை நடுநாயகமாக வைத்து வரைவதனைத் தொடங்கலாம். இந்த இரண்டு கீகளையும் இவ்வாறு படம் வரையும் சாதனத்துடன் இணைத்துப் பயன்படுத்தி சரியான முறையில் படங்களைப் பெறலாம். கிளிப் ஆர்ட் படங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை உங்கள் விருப்பப்படி மாற்றுகையில் இந்த இரண்டு கீகள் தரும் உதவி உங்களுக்குப் புரிய வைக்கும்.

வேர்டில் எப்2 கீயின் சிறப்பு பயன்பாடு
டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல் வழியாகும். காப்பி அல்ல.

அளவைகளும், எடையும்

அறிவியலில் எடைகள் மிக முக்கியமானவை. அளவைகள் இல்லாவிடில் அறிவியலே இல்லை. எல்லாப் பொருட்களும் வெளியில் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. பொருட்கள் இல்லாத இடைவெளிகளும் உண்டு. ஒரு பொருளுக்கும், இன்னொரு பொருளுக்கும் இடையே உள்ள தூரத்தை நாம் நீளம் என்கிறோம். பரப்பைக் கண்டுபிடிக்க நீளம் ஜ் அகலம். இதேபோல் மற்றவையும் உள்ளன.

அளவைகளில் அடிநிலை அளவைகள், வழிநிலை அளவைகள் என்று இரு பிரிவுகள் உள்ளன. நீளம், நிறை, காலம் ஆகிய மூன்றுமே அடிநிலை அளவைகள். பரப்பு, அடர்த்தி, பருமன், வேகம் ஆகியவற்றை அடியொற்றி வருபவை வழிநிலை அளவைகள் ஆகும்.

பல்வேறு நாடுகளிலும் பல்வேறு அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் பிரிட்டீஷ் முறை பரவலாகப் பயன்பாட்டில் இருந்தது. எனினும் அதைக் கொண்டு கணக்கிடுவதில் பல இடர்ப்பாடுகள் இருந்தன. ஒரே சீரான- அதேசமயம் கணக்கிட எளிதாக உள்ள முறையின் தேவை உணரப்பட்டது.

இந்நிலையில், 1791-ம் ஆண்டு பிரான்சில் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தனர். அந்த முறைக்கு `மெட்ரிக்’ என்று பெயர். `மீட்டர்’ என்ற லத்தீன் வார்த்தைக்கு `அளவை’ என்று பொருள். நீளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல்லில் இருந்துதான் மெட்ரிக் என்ற பெயர் மற்ற அளவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை, கணக்கிட மிகவும் எளிது. எல்லாமே 10-ன் மடங்குகளாக வருவதால் நினைவில் வைத்துக்கொள்வதும் எளிது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வரும் முறை இதுதான்.

சிந்தித்துச் செயல்படும் விண்கலம் !

இன்று உலகின் முன்னணி நாடுகள் பலவும் விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. ஆனால் அந்த விண்கலங்களில் ஏதேனும் பிரச்சினை, கோளாறு ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்யக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், மனிதர்களைப் போல `சிந்தித்து’ச் செயல்படும் விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகிறார்கள்.

`2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்டுபிடிப்பாகும் இது. அந்தப் படத்தில், செயற்கை அறிவுடன் செயல்படும் விண்கல கணினி, விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்களைக் கொல்ல முடிவெடுப்பதாக வரும்.

இங்கிலாந்து விண்வெளிப் பொறியாளர்கள், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆதரவுடன், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள், தானியங்கி ஆய்வு வாகனங்களுடன், தம்மைச் சுயமாகக் கட்டுப் படுத்திக் கொள்ளக்கூடிய விண்கலங்களையும் உருவாக்கி வருகிறார்கள்.

இந்த அதிநவீன விண்கலங்களால், `கற்றுக்கொள்ளவும்’, பிரச்சினைகளைக் கண்டறியவும், பயணத்தின்போது தேவையான மாறுதல் களைச் செய்துகொள்ளவும், தாமே பழுதுபார்த்துக்கொள்ளவும், ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது எந்தளவு நல்லது என்று முடிவெடுக்கவும் முடியும்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, தனது தானியங்கி போக்குவரத்து வாகனம் மூலம் விநியோகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈடுபட்டது. அப்போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

`ஏடிவி2′ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தானியங்கி வாகனத்தை விண்வெளி நிறுவனமான ஆட்ரியம் உருவாக்கியுள்ளது. இந்த வாகனம், முன்னதாக `புரோக்கிராம்’ செய்யப்பட்ட வழித்தடத்தின்படி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும். இதில் பல `சென்சார்களும்’, மோதலைத் தடுக்கும் அமைப்புகளும் இருப்பதால், பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் போய் இணையும்.

மனிதர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்குக் கொண்டுபோய், திருப்பிக் கொண்டு வரக்கூடிய முதலாவது விண்கலத்தையும் உருவாக்கப் போவதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.