Daily Archives: மார்ச் 27th, 2011

கூட்டணிக்குள் கூட்டணி; கூட்டணியில் எதிரி: தி.மு.க., முகாமில் நடக்கும் உள்ளடி வேலை

வேட்பு மனு தாக்கல் முடிந்து, பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், “தி.மு.க., ஆட்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும்’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பது, பல்வேறு விவாதங்களை தூண்டி விட்டுள்ளது.

இன்னும் தேர்தல் முடியவில்லை; யார் வெற்றி பெற்றுள்ளார்; யாருக்கு மெஜாரிட்டி உள்ளது; யார் ஆட்சி அமைப்பார் என்ற எந்த விவரமும் தெரியாத நிலையில், ராமதாஸ் முந்திக் கொண்டு, இத்தகைய அறிவிப்பை வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. “ஆட்சியில் பங்கு’ என்ற காங்கிரசாரின் முயற்சியை முறியடிப்பதற்கான திட்டத்தில் இதுவும் ஒன்று என, ஒரு தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. தி.மு.க., – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க., 60 தொகுதிகள் தர தயாராக இருந்தது. காங்கிரஸ் 63 தொகுதிகளை கேட்டு நின்றது. இந்த மூன்று தொகுதிகளுக்காக கூட்டணியே முறியும் அளவுக்கு நிலைமை மோசமான போதும், காங்கிரஸ் தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை. அதற்கு காரணம், 60 இடங்களுக்கு மேல் வாங்கும் ஒவ்வொரு இடமும் தி.மு.க.,வை கூட்டணி ஆட்சிக்கு இழுத்துச் செல்லும் ஆயுதம் என்று அக்கட்சி கருதியது. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றது. ஆனால், தி.மு.க.,வின் வியூகம் வேறு விதமாக உள்ளது.

அண்ணாதுரையால் தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட, காங்கிரஸ் அதிகாரத்துக்கு கருணாநிதி மீண்டும் மறுவாழ்வு கொடுத்தார் என்று வரலாற்றில் இடம் பெற்று விடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். அதற்கு, தி.மு.க.,வுக்கு பா.ம.க.,வின் உதவி தேவைப்படுகிறது. கடந்த 2006 தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்ற போது, எந்தக் கட்சிகளும் ஆட்சிக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்காத போது, முதல் ஆளாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவாலயம் சென்று, ஐந்து ஆண்டுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என கடிதம் கொடுத்தார். அதன் பின், அனைத்து கட்சிகளும் அதே பாணியை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அதற்கு கைமாறாக, பா.ம.க.,வுக்கு கேட்ட இடங்களை தி.மு.க., முந்திக் கொண்டு வழங்கியுள்ளது. கடந்த முறை ஏழு தொகுதிகளிலும் தோற்ற கட்சிக்கு எந்த பேரமும் இல்லாமல், 30 தொகுதிகளை வாரி வழங்கியது. கூட்டணிக்குள்ளேயே ஒரு கூட்டணியாக தி.மு.க.,வும், பா.ம.க.,வும் இருந்து வருவதாகவே காங்கிரசார் கருதுகின்றனர். எனவே, தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பெற காங்கிரஸ் தயவு தேவைப்பட்டாலும், காங்கிரஸ் தயவின்றி பா.ம.க., முட்டுக் கொடுக்க தயாராக உள்ளது என்பதை காண்பிக்கவே, இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. கடந்த முறை கூட்டணி ஆட்சி அமையவிடாமல் தடுத்த ராமதாஸ், இந்த முறையும் அதே முயற்சியில் ஈடுபடுகிறார் என காங்கிரசார் கருதுகின்றனர். இதனால், காங்கிரசின் கோபம் பா.ம.க., பக்கம் திரும்பியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் ராமதாசின் பாதையிலேயே பயணத்தை துவக்கியுள்ளார். தற்போது தி.மு.க., 119 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த உள் ஒப்பந்தத்தின் மூலம், பா.ம.க., – வி.சி.,க்களையும் சேர்த்தால், 159 இடங்களில் போட்டியிடுவதற்கு சமம். இதிலிருந்து மெஜாரிட்டி பிடித்துவிடலாம்; காங்கிரசின் தயவு தேவைப்படாது என்பதே தி.மு.க.,வின் கணக்கு. அதற்கு கைமாறாக, ராஜ்யசபா சீட் தர தி.மு.க., தயாராக உள்ளது. இந்த உள் கூட்டணி விவகாரம் தற்போது காங்கிரசார் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.

நன்றி-தினமலர்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம்

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார்.

20 நிமிடம் நடந்த சந்திப்புக்கு பின் இயக்குனர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிலைப்பாடு என்ன? என்று மக்கள் மத்தியிலும், இயக்கத்தினர் மத்தியிலும் கேள்வி நிலவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரு முடிவு எடுத்துள்ளோம். தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் இயக்கத்தில் உள்ளனர். ஆனாலும், வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வர முனைப்பாக இறங்கி மக்கள் இயக்கத்தினர் வேலை செய்வார்கள். இயக்கத்தில், 20 முதல், 30 வயது உடைய இளம் ரத்தங்களே உள்ளனர். நாட்டில் அவ்வப்போது அரசியல் மாற்றம் வரவேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதுவும் சமீபகால அரசியலுக்கு மாற்றம் அவசியம் தேவை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். ஜெ., முதல்வராக வேண்டும். அதற்கு மக்கள் இயக்கத்தின் உழைப்பு முனைப்புடன் இருக்கும்.

நடிகர் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்வது பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால், அவரின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு உண்டு. மக்கள் இயக்கத்தில், 50 பேரை உறுப்பினராக கொண்ட, 47 ஆயிரம் பதிவு பெற்ற மன்றங்கள் உள்ளன. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிப்பது அரசியலுக்கு வருவதற்காக இல்லை. அரசியலுக்கு வர நாங்கள் அவசரப்படவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை நானும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொள்வோம். அதற்காக இயக்கம் ஆதரவு கொடுக்கவில்லை. இதில், சுயநலமும் இல்லை. சமீபகாலமாக நாட்டில் நடக்கும் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காரணமாக பொதுநல நோக்கில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலை விட, ஸ்பெக்டரமில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. நாடு வளர்ச்சி அடைந்துள்ளதோ இல்லையோ, ஊழல் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் நிலையைப் பார்த்து ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.

மக்கள் இயக்கத்தின் சார்பில் நான் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. நான் அரசியல்வாதியும் அல்ல. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமும் அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக இயக்கம். ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதை கண்டித்து நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் முதல்வராக கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் பலமுறை நலநிதி வழங்கியுள்ளேன். இதுவரை எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. நான் ஒரு தமிழன். எனக்கு திரைப்படம் மூலம் கலைஞரைத் தெரியும். தி.மு.க.,வைத் தெரியாது. நாட்டில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

சூரியனை சுற்றி சூழ்ந்த பாம்பு உருவம்: நாசாவின் அரிய புகைப்படம் வெளியீடு


விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும். இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன. இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்

நல்லது, கெட்டது குழந்தைகளுக்கும் தெரியும்!

`எது சரி, எது தவறு’ என்பதெல்லாம் வளர்ந்தவர் களுக்குத்தான் தெரியும், குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம், கூறுகிறோம். ஆனால், எது சரியல்ல என்பது குழந்தைகளுக்கும் தெரியும், ஒரு விளையாட்டில் எவ்வாறு நியாயமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பான ஆய்வை ஒரு சர்வதேச ஆய்வுக் குழு மேற்கொண்டது. இதில், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு முயற்சியில் வெற்றி பெற்றால், சில பரிசுப் பொருட்களைப் பெறுமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதில், பரிசுப்பொருள்களை எல்லாவற்றையும் ஒரே குழந்தை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளிடம் இதுமாதிரியான ஆய்வை மேற்கொண்டபோது அவற்றிடையே ஒற்றுமையின்மை வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“குழந்தைகளும் அதே மாதிரி செயல்படுகிறார்களா என்று நாங்கள் பார்த்தோம்” என, ஆய்வாளர்களில் ஒருவரான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் வார்ன்கென் கூறுகிறார்.

கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு கயிறைப் பிடித்து இழுத்தால், இனிப்பு, ஸ்டிக்கர் போன்ற பரிசுப் பொருட்கள் கிட்டும். ஒரு குழந்தை மட்டும் தனியாகக் கயிறை இழுக்க முடியாது. எனவே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று குழந்தைகளும் சேர்ந்து கயிறை இழுத்தார்கள். சிறு சண்டை, சச்சரவும் இன்றி கிடைத்த பொருட்களை நியாயமாகப் பகிர்ந்துகொண்டார்கள். “அந்தக் குழந்தைகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்” என்கிறார், ஆய்வாளர் வார்ன்கென்.

ஓவூ – புதிய வீடியோ சேட்டிங் டூல்

வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது. மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும்.
அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக, இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும், ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை http://www.oovoo.com/ Download.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால், நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன், அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின்னர் I accept – Create account. என்ற இடத்தில் கிளிக் செய்திட உங்கள் அக்கவுண்ட் அமைக்கப்படுகிறது.
பின்னர், ஓவூ அப்ளிகேஷன் உங்கள் திரையின் வலது பக்கத்தில் திறக்கப்படும். அதில் இதே போல அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்கள் காட்டப்படும். அடுத்து, பூமி படம் உள்ள டேப்பில் கிளிக் செய்திடவும். உடனே, ஓவூ உங்களுக்கான வீடியோ கால் லிங்க் ஒன்றைத் தரும். இந்த லிங்க்கினை உங்கள் நண்பர்களுக்கு இமெயில் மூலமாகவோ, வேறு வழியிலோ அனுப்பவும். அவர்களுக்கு ஓவூ அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. இந்த லிங்க் பெறுபவர்கள், இதில் கிளிக் செய்தால், சில நொடிகளில் அவர்கள் உங்களுடன் வீடியோ சேட் செய்திட இணைவார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் இவ்வாறு பெற்றவுடன், லிங்க்கில் கிளிக் செய்திட, என் கம்ப்யூட்டரில் தொலைபேசிக்கான மணி அடிப்பது போல் ஒலி கிடைத்தது. இதற்கு பதில் அளிக்க முடிவு செய்து ஓவூ வீடியோ காலிங் இன்டர்பேஸ் திறந்தேன். இணைப்பு வேகமாகவும், படங்கள் துல்லிதமாகவும் இருந்தன. இதில் நண்பர்களை இணைக்க, Add to call பட்டன் அழுத்தி இணைக்கவும்.
ஓவூ சேட்டிங்கில் சைட்பார் வியூ (Sidebar View) தரப்படுகிறது. இது வீடியோ விண்டோவின் வலது கீழாகத் தரப்பட்டுள்ளது. வீடியோ சேட் செய்து கொண்டே, இணையப் பக்கங்களையும் படிக்க விரும்பினால், இந்த சைட் பார் வியூவில் சேட்டிங் மேற்கொள்ளலாம். வீடியோ சேட்டிங் சிறிய அளவில் கிடைக்கும்.
இதில் நம்மை அழைப்பவர்களுக்குக் கம்ப்யூட்டரே பதில் அளிக்கும் வசதியும் உள்ளது. உங்கள் நண்பருக்கு, அவர் இல்லாத நேரத்தில் செய்தியை அனுப்பினால், அது அவர் மீண்டும் இணையத்தில் இணைகையில் காட்டப் படுகிறது. ஏற்கனவே ஓவூ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை அழைக்க, மெனு பாரிலிருந்து Contacts அழுத்திப் பின்னர், Import Contacts என்பதனை அழுத்தவும். இதன் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, பலவித சேவை வசதிகளைப் பயன்படுத்தலாம். வீடீயோ கால் ரெகார்டிங், டெக்ஸ்ட் சேட், போன் அழைப்புகளுக்கான சப்போர்ட் ஆகியவற்றை இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலதிகத் தகவல்களுக்கு http://www.oovoo. com/HowToooVooList.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

மீன் பிரியாணி

பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா-3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக்கூடியது.

மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்

மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக் கரண்டி

செய்முறை

* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்,

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை

ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

செப்’ தாமு