Daily Archives: மார்ச் 29th, 2011

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!

<span style=”font-family: Arial;”>ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தும், பாதிப்படைந்தவருக்கு வலி குறையவில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணில்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத்துவரிடம் அனுப்புகிறார். கண் மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார். கண்ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனுப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்த பிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடும்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். “எதற்கும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன’ என்று மருத்துவருக்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த நோயாளி. ரிசல்ட் படு சுத்தம். ஒரு பிரச்னையும் இல்லை. கடைசியாக வலி நிர்வாகத்துறைக்கு வருகிறார் அந்த நோயாளி. அங்கேதான் அவருக்கான சரியான தீர்வு கிடைக்கிறது.
எந்த நோயாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே வலி நிர்வாகத்துறை மருத்துவர்களிடம் போய்விட்டால் பிரச்னையே இல்லை. அவர்கள், வலி எதனால் வருகிறது, என்ன சிகிச்சை தரவேண்டும், நோய் எப்போது முழுமையாக குணமாகும் என்று அத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்துவிடுவர். இது ஒன்றும் மந்திர வித்தை இல்லை. அதே சமயம், “என்னிடம் ஒரு நாற்காலி இருக்கிறது. அதில் உட்கார்ந்தால் எந்த வலியும் இல்லாமல் போய்விடும்’ என்று சொல்லும் ஏமாற்று வித்தையும் அல்ல. புதுவிதமான மருத்துவ முறையும் அல்ல. “அல்ஜியாட்ரி’ என்றழைக்கப்படும், சிகிச்சை முறை தான் இது.
ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வரும் அலோபதி மருத்துவம் தான் இதுவும். அதன் அடிப்படையில், உலகெங்கும் இருக்கும் பல்வேறு டாக்டர்கள் செய்த ஆராய்ச்சிகளாலும், சோதனைகளாலும் கிடைத்திருக்கும் அதிசயம். பொதுவாக, மருந்து, மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மிக அதிகமான டோஸ்கள் கொண்ட மாத்திரையையோ, மருந்தையோ சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வரும். சிறுநீரகக் கோளாறு வரும். இதயத்தில் பாதிப்பு ஏற்படும். இது போல என்னென்னவோ எதிர் விளைவுகள் தோன்றும். ஆனால், அல்ஜியாட்ரி சிகிச்சையில் அது கிடையாது.
காரணம் என்னவென்றால், ஊசி மூலமாகச் செலுத்தப்படுவது மருந்து அல்ல. ஒரு வகை சுத்தமான காற்று என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் நிஜம். அதே போல நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளும், பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தாதவை. முக்கியமாக அறுவை சிகிச்சை என்பது கிடையவே கிடையாது. இந்தியாவில் மக்களை அதிகம் பாதிக்கும் நோய் எது? எயிட்சா? காச நோயா? நீரிழிவு நோயா? கிடையாது. “ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்ட்’ என்று சொல்லப்படும் மூட்டுவலிதான் என்று அடித்துச் சொல்கிறது ஒரு புள்ளி விவரம்.
“வயசானாலே மூட்டு வலி வந்துவிடும்’ என்று சிலர் சொல்வர். உண்மையில், வயதுக்கும், மூட்டு வலிக்கும் சம்பந்தமே இல்லை.
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, மூட்டு வலி சர்வ சாதாரணமாக வந்துவிடும். நமக்குத் தெரிந்த குடும்பங்களிலேயே, யாராவது ஒருவருக்காவது, நிச்சயம் மூட்டுவலி இருக்கும். இந்நோய்க்கு, மருத்துவத்துறையில் மருந்து, மாத்திரை, பிசியோதெரபி என்று, பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவற்றால் பலன் கிடைக்கவில்லை என்றால், டி.கே.ஆர்., என்ற அறுவை சிகிச்சையை இறுதியாகச் செய்வர். அதை, Total Knee Replacement என்று சொல்வர்.
அறுவை சிகிச்சை மூலம், செயற்கை முறையில் கால் மூட்டைப் பொருத்திவிடுவர். முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கூட இந்தச் சிகிச்சையைச் செய்திருக்கிறார். வலி கூடாது என்பதற்காக இந்த அறுவை சிகிச்சை. அதற்குப் பிறகு சிகிச்சை பெற்றவர்கள், ரோபோ மாதிரி நடப்பர். டி.கே.ஆர்., அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவில், 10 அல்லது 20 சதவீதம் தான் செலவு ஆகும். மூட்டுவலி மட்டும் அல்ல, தலைவலி, புற்று நோயால் ஏற்படும் வலி ஆகியவற்றுக்குக்கூட வலி நிர்வாகத்துறை சிகிச்சை கொடுத்து குணப்படுத்துகிறது. ஒரு நோயாளி வருகிறார். தனக்குத் தாங்க முடியாத தலை வலி என்று சொல்கிறார். உடனே மருத்துவர், தலைவலிக்கு மட்டும் மருந்து கொடுத்தால் அது தவறு. அந்த வலி வருவதற்கான மூல காரணத்தை ஆராய்ந்து சிகிச்சை தரவேண்டும். அதைத்தான் வலி நிர்வாகத்துறை செய்கிறது.
சரி, தலைவலி வந்தவருக்கு மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. அதனால்தான் தலைவலி என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு ஊசி போட்டால், வலி போய்விடும். அது மட்டும்தானா, வலி நிர்வாகத்துறையின் வேலை? இல்லை. அதையும் தாண்டி, அந்தக் கட்டியை அகற்ற என்ன செய்யலாம் என்று நோயின் மூலம் வேரைத் தேடிப் போய் ஆராய்கிறது இந்த துறை. அதற்கான சிகிச்சையையும் கொடுக்கிறது.
ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்று ஒரு நோயைப் பற்றி நாம் அறிந்திருப்போம். முகத்தில் திடீரென்று மின்னல் போல வந்து வலி தாக்கும். பாதிக்கப்பட்டவர் அப்படியே துடிதுடித்துப் போய்விடுவார். எவ்வளவு சிகிச்சை கொடுத்தாலும் தீராத அந்த நோய்க்கு வலி நிர்வாகத்துறை தரும் சிகிச்சை நிரந்தரத் தீர்வாக இருக்கிறது. “ஸ்லிப் டிஸ்க்’ பிரச்னை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிற ஒன்று. முதுகுத் தண்டுவடத்தில் கணையங்களுக்கு நடுவே இருக்கும் ஜவ்வு வெளியே வந்து, அதற்கு அருகே இருக்கும் நரம்பு பாதிக்கப்பட்டு ஏற்படும் முதுகு வலி, பெரும்பாலும், எடை அதிகமாக உள்ளவர்களுக்கும், அதிக தூரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் வரும் கொடிய நோய். இந்த நோய் வந்தவர்கள், மருத்துவரைப் பார்ப்பர். அவர் சொல்கிறபடி அறுவை சிகிச்சை செய்துகொள்வர். ஆனால், அது நிரந்தரத் தீர்வு அல்ல. இழந்த ஜவ்வு திரும்ப வராது. மேலும், பல பக்கவிளைவுகள் ஏற்படும். அறுவை சிகிச்சை, தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், அந்த வலி வந்துகொண்டே தான் இருக்கும். இந்த, “ஸ்லிப் டிஸ்க்’ பிரச்னைக்கு வலி நிர்வாகத்துறை சிகிச்சையில் பூரண குணம் பெறலாம். சிலருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும். தாங்க முடியாத தலைவலி இருக்கும். எப்போதும் உடல் அசதியாக இருக்கும். ஞாபக மறதி ஏற்படும். இந்த நோயை ஆங்கிலத்தில், ‘Fibromyalgia’ எ ன்று சொல்வர். இது, ஆண்களைவிட பெண்களை அதிகமாகத் தாக்கும் நோய்.
மருந்து கடைகளில், பெண்கள், “கை, கால், குடைச்சல். ஏதாவது மாத்திரை குடுங்க’ என்று கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் பார்த்தால், வலியால் அவதிப்படுபவர்கள் போல் தெரியாது. ஆனால், கடுமையான வலியைப் பொறுத்துக் கொண்டிருப்பர். இந்த நோய்க்கும் வலி நிர்வாகத்துறை சிகிச்சையில்’Trigger Point Injections’ மூலமாக குணம் பெறலாம். சில குழந்தைகள் மிக புத்திசாலியாக இருப்பர்.
ஆனால், நடக்கும் போது நேராக இல்லாமல், ஒரு மாதிரி கோணலாக நடப்பர். கைகளை வளைத்தது மாதிரி வைத்துக் கொள்வர். இதற்குக் காரணம் இருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், பிரசவ சமயத்தில் மூளைக்குள் போகிற ரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அதனால் தான் அதன் அசைவுகள் அப்படி இருக்கும். இதை, Cerebral Palsy என்று சொல்வர். இப்படியான பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் வலி நிர்வாகத்துறையில், Botox ஊசி மூலமாக குணப்படுத்தப்படுகின்றனர். மாதவிடாய் காலங்களிலும், மெனோபாசுக்குப் பிறகும், பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலிகளுக்கு நிவாரணம் வலி நிர்வாகத்துறையின் சிகிச்சையின் மூலமாகக் கிடைக்கிறது. வலி உடல் சம்பந்தமானது மட்டும் அல்ல; மனம் சம்பந்தமானதும் கூட. தொடர்ந்து வலியால் அவஸ்தைப்படுபவர்கள், பல்வேறு விதமான மனச் சிக்கலுக்கு ஆளாகிவிடுவர். அது மன அழுத்தத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடும். சமூகத்தோடு ஒட்டி உறவாட முடியாது. திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாது. நண்பர்களையோ, உறவினரையோ தேடிப் போக முடியாது. ஒரு கட்டத்தில், உறவுகளையே தள்ளி வைத்துவிடும் நிலைமை கூட வந்துவிடும். இதற்கெல்லாம் வலி நிர்வாகத்துறையில் தீர்வு கிடைக்கிறது.
வலியை மட்டும் குணப்படுத்துவது வலி நிர்வாகத்துறையின் குறிக்கோள் அல்ல. வலியின் அடிப்படைக் காரணிகளுக்குள் சென்று, அதை முழுவதுமாக ஆராய்ந்து, அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் அந்த பிரச்னையிலிருந்து பாதிக்கப்பட்டவர் விடுபட வழிவகுப்பது தான் இத்துறையின் முக்கிய நோக்கம். இவ்வாறு சொல்கிறார்


டாக்டர் பிரபு திலக்.

பெண்களே இப்படி சமாளியுங்க…!

`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.

புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…

`இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

`உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”

இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

“உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள்.

“இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.”எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்’ இது…

“சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

“பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

`இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும்.

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே!

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா?

செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

* கறுப்பாக இருந்தாலும் ‘களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாகவசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.

* வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.

* சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.

* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில்  அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.

* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.

நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால்  உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!

நிறத்தைக் கொடுக்கும் பூச்சிகள்!

சில உணவுப்பொருட்களைப் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதற்குக் காரணம் அவற்றின் மணமும், நிறமும்தான். நிறத்தைக் கொடுக்கும் பொருளை இயற்கையாகவும், செயற்கையாகவும் தயாரிக்கலாம்.

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள பாலைவனங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் நிறத்தைக் கொடுக் கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அந்தப் பூச்சிகளைப் பிடித்து நசுக்கிக் காயவைத்துப் பொடியாக்குவார்கள். அந்தப் பொடியோடு குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் கலந்து சிவப்பு நிறச் சாயத்தைத் தயாரிப்பார்கள். அந்தச் சாயத்தைத்தான் கேக் மற்றும் சில இனிப்பு வகை களில் சேர்த்து அவற்றுக்கு நிறம் கொடுக்கிறார்கள்.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பூச்சிகளில் இருந்து ஒரு கிலோ சாயம் எடுக்கலாம்.

ஐரோப்பிய நாடுகள் இந்தச் சாயங்களை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுக் கொடிகளுக்கும், ராணுவத்தின் ஆடைக்கும் நிறம் கொடுக்கின்றன.

இதைப் படிக்காம கிளம்பாதீங்க…

சீறிச் செல்லும் வேகத்தில் பைக்கில் பறக்கிறார்கள் இளம் பெண்கள். அவர்களின் வேகம் சில நேரங்களில் திகைக்க வைக்கிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், கைகளால் கியர் மாற்றும் `பைக்’களும் வந்தபிறகு பைக் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிப் போனது.

பெற்றோர், காதலர் போன்ற உறவுகளுடனும், பணி நிமித்தமாக தனியாக, தோழிகளுடன் என பைக்கில் பயணிக்கும் பெண்கள் ஏராளம். வாகனம் ஓட்டுவதில் ஆண்களைவிட பெண்களுக்கு சிரமம் கொஞ்சம் அதிகம் தான். வேகம் மட்டும் பிரச்சினை அல்ல, பெண்கள் உடை அணியும் முறை கூட அவர்களை விபத்தில் சிக்க வைத்து விடும்.

எனவே அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்கள் இதை ஒரு முறை படித்துவிட்டு பயணத்துக்கு கிளம்புங்க…

சேலை உடுத்தும் பெண்கள்..

சேலை உடுத்தி செல்லும் பெண்கள், அதிக இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ சேலை கட்டக் கூடாது. இறுக்கமாக அணிந்தால் பயணத்தின்போது சுமூகமாக இருக்காது. தளர்வாக இருந்தால் காற்றினால் மேலும் தளரும்.

முந்தானையைச் சரியாக தோள்பட்டையில் `ஊக்கு’ கொண்டு பின் செய்து இருக்க வேண்டும். முந்தானை காற்றில் பறப்பதுபோல இருக்கக் கூடாது. இடுப்பில் சொருகப்பட்டு இருக்க வேண்டும். சேலை காற்றில் பறந்தவாறு இருந்தால் `ரியர் வியூ’ கண்ணாடியை மறைக்கும். எனவே கவனம் தேவை.

வழவழப்பு தன்மை கொண்ட சேலையை உடுத்தி பயணிப்பது ஆபத்தானது. ஏனெனில் திடீர் `பிரேக்` போடும்போது அமர்ந்திருக்கும் நிலையில் இருந்து நழுவி வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்து இருக்கிறது.

இரவு நேரங்களில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தால் பளிச்சிடும் வண்ணம் கொண்ட சேலையை தேர்ந்தெடுங்கள். அது இரவில் ஒளியைப் பிரதிபலிப்பதால் பாதுகாப்பாக பயணிக்கலாம்.

பின்னால் (பில்லியனில்) அமரும் பெண்களுக்கு…!

துணிமணிகள் சக்கரத்திற்குள் செல்லாமல் தடுக்கும் `சாரி கார்டு’ இல்லாத பைக்கில் அமர்ந்து செல்வது பாதுகாப்பானது அல்ல.

சேலை அணிந்திருந்தால் இரு பக்கமும் கால் வைத்து பின் சீட்டில் அமர முடியாது. ஒரு பக்கமாகத்தான் அமர முடியும். வண்டியை ஓட்டுகிறவர், பின் சீட்டில் அமர்ந்து செல்பவர் என இருவருக்குமே இதனால் பேலன்ஸ் கிடைக்காது. எனவே கூடுமானவரை சேலை அணிவதை தவிர்க்கலாம்.

முந்தானை தொங்கியவாறு இருந்தால் பின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. எனவே முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு கவனமாக அமர வேண்டும்.

ஓட்டுனரின் இடுப்பைப் பிடித்தவாறு பயணிப்பதுதான் பாதுகாப்பானது. தோள்பட்டையைப் பிடித்தால் ஓட்டுனருக்கு சமநிலை (பேலன்ஸ்) கிடைக்காது.

திடீர் பிரேக் போடும் சூழ்நிலை ஏற்படும்போது ஓட்டுநரைப் பிடித்துக் கொள்ளாமல் இருந்தால் கீழே விழும் அபாயம் இருக்கிறது என்பதால் கவனமாக இருங்கள்.

பயணத்தின்போது செல்போனில் பேசினால் பைக் பேலன்ஸ் செய்வது சிரமமாக இருக்கும். கவனமும் சிதறும். விபத்து ஏற்படும்.

ஒரு பக்கமாக அமரும்போது கால்மீது கால்போட்டு அமருவது ஆபத்தானது. சவுகரியமாகவும் இருக்காது.

வெயிலுக்காகத் தலைமீது சேலையைச் சுற்றியிருந்தால் அதைச் சரியாக பின் செய்து இருப்பது நல்லது.

சுடிதார் அணிந்து பைக் ஓட்டும் பெண்களுக்கு…

அதிக இறுக்கமாகவோ, அதிக தளர்வாகவோ சுடிதார் அணிவதைத் தவிருங்கள். இறுக்கமாக அணிந்தால் பயணம் சவுகரியமாக இருக்காது.

துப்பட்டா இரு தோள்பட்டையிலும் பின் செய்யப்பட்டு, முன்பக்கமாக முடிச்சு போட வேண்டும். பின்பக்கம் முடிச்சு போட்டுக் கொள்வது தவறு. முடிச்சு அவிழ்ந்து விட்டால் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சரி செய்ய முயற்சிப்பது தவறு.

துப்பட்டாவைக் குறுக்காக அணிபவர்கள் தோள்பட்டையில் பின் செய்து முடிச்சை பக்கவாட்டில் இல்லாமல் முன்பக்கம் இருக்குமாறு அணிவது நல்லது.

முகத்தை மறைத்தோ அல்லது தலையை மூடியோ கழுத்தைச் சுற்றியவாறு துப்பட்டாவை போட்டிருந்தால் அதன் முனை எதிலாவது சிக்கினால் கழுத்து முறிந்து போகும் ஆபத்து இருக்கிறது.

சுடிதார் அணிந்தபடி பில்லியனில் இருப்பவர்கள்…

இரு பக்கமும் கால்போட்டு அமருங்கள். இது ஓட்டுநருக்கு சவுகரியமானது மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பானது. ஒரு பக்கமாக அமர்ந்தால் சேலை அணிந்து பயணிக்கும்போது உண்டாகும் ஆபத்துகள் அனைத்தும் இதிலும் உண்டு.

சில சமயம் பின் பக்க விளக்குகள், `நம்பர் பிளேட்` போன்றவற்றை சுடிதாரின் பின்பகுதி மறைக்கும். அப்போது இண்டிகேட்டர், பிரேக் லைட் தெரியாததால் பின்னால் வரும் வாகனம் மோதிவிடும் ஆபத்து உண்டு.

இரு கால்களையும் உங்களுக்கு உரிய `புட் ரெஸ்ட்`டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுனருக்கு பாலன்ஸ் கிடைக்காது.

பொதுவான கவனிக்க வேண்டியவை:

பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஓட்டுநரைப் போலவே ஹெல்மட் அணிவது பாதுகாப்பானது.

தலைமுடியை காற்றில் பறக்க விடக்கூடாது. நீண்ட கூந்தல் உள்ளவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.

கைக்குழந்தைகளை மடியிலோ, தோளிலோ தூக்கிச் செல்வதை தவிருங்கள். ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிச் செல்வதை தவிர்த்திடுங்கள்.

மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ்

கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகின்றன எனக் காணலாம். இதனால், இந்தச் செயல்பாடுகள் எப்படி கணக்கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப்பட்டே கிடைக் கின்றன. குறிப்பாக ஜியோமெட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கானவை நிறைய கிடைக்கின்றன. நம் தேவைக்கேற்ப செட் செய்திட real and complex numbers, degrees, radians அல்லது gradians, ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும் நமக்கு எத்தனை டெசிமல் இலக்கத்தில் விடை வேண்டும் என்பதனையும் செட் செய்து கொள்ளலாம்.
Area, pressure, temperature, velocity, time மற்றும் length ஆகிய பிரிவுகளுக்கான அலகுகளை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் கைகளில் எழுதுவதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒர்க்ஷீட் ஏரியாவில் நாம் நேரடியாகவே, ஈக்குவேஷன்களை எழுதி அமைக்கலாம்.
இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெற http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=9caca722-5235-401c-8d3f-9e242b794c3a என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதில் 32 மற்றும் 64 பிட்களுக்கென தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.