Daily Archives: மார்ச் 30th, 2011

விண்டோஸ் மீண்டும் பதிக்கையில்

கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.
முதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.
அடுத்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்: நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்களை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்கள்: எந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம்.

3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும். எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. பைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும். இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும். பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும்.
விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.

4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்: விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.

5. சர்வீஸ் பேக் பைல்கள்: நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களையும் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.

6. விண்டோஸ் இன்ஸ்டலேஷன்: விண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.

7. இன்ஸ்டால் செய்தபின்: ரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெர்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.

8.பாதுகாப்பு புரோகிராம்கள்: அடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.

9. ரெஸ்டோர் பாய்ண்ட்: புதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

மரம் வெட்டுவதும், குடிசைக்கு தீ வைப்பதும் சமூக நீதியா? விஜயகாந்த் கேள்வி

விஜயகாந்த் எந்த சமூக நீதி போராட்டத்தில் பங்கேற்றார் என, ராமதாஸ் கேட்டு வருகிறார். மரம் வெட்டுவதும், அடுத்தவர்கள் குடிசைக்கு தீ வைப்பதும் தான் சமூக நீதியா?,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் வேனில் இருந்தபடி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி நல்ல திட்டங்களை கொண்டு வரவில்லை. மக்கள் பிரச்னை குறித்து அவர் கவலைபட்டது உண்டா? விலை உயர்வு, மின் நிறுத்தம் மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. நல்ல வேளை இந்த முறை ஆற்காடு வீராசாமி தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஐந்தாண்டாக தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ம.க., ராமதாஸ் டாஸ்மாக் கடைகளை பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார். பெண்களை திரட்டி டாஸ்மாக் கடை முன் போராட்டம் நடத்தினார். இப்போது, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார். விஜயகாந்த் எந்த சமூக நீதி போராட்டத்திலாவது கலந்து கொண்டு, சிறை சென்றாறா? என, ராமதாஸ் கேள்வி கேட்கிறார். இவருக்கு ஜாதி பிரச்னையை தூண்டிவிட்டு குளிர் காய்வது தான் வேலை. ராமதாஸ் எந்த சமூக நீதி போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் எத்தனை வன்னியர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பார். நான் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன். எல்லா சமுதாய மக்களும் முன்னுக்கு வர வேண்டும் என நினைப்பவன்.

தற்போது, அனுதாபத்தை தேடும் முயற்சியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளது. எந்த அனுதாபத்தையும் மக்கள் நம்பி விடாதீர்கள். எம்.ஜி.ஆர் துவங்கிய கட்சியில் மக்களுக்காக நான் கூட்டணி சேர்ந்துள்ளேன். தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட, அ.தி.மு.க., கூட்டணியை ஆதரியுங்கள்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

ஓசூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் டாக்டர் ஜானை ஆதரித்து, ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: சினிமாவிலும், தேர்தல் அறிக்கை வெளியிடுவதிலும் யார் கதாநாயகன், கதாநாயகி என்பதை விட, பொது வாழ்வில் யார் கதாநாயன் என்பது தான் முக்கியம். மக்களுக்காக வாழ்ந்த பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், காயிதே மில்லத், அம்பேத்கர் ஆகியோர் கதாநாயகன்கள்.பொய் மற்றும் ஊழலின் மொத்த உருவமான கருணாநிதி, பொதுஜன வில்லனாக உள்ளார். தமிழின தலைவர் என தன்னை சொல்லி கொள்ளும் கருணாநிதி, தமிழர் உரிமையை கடுகளவு கூட விட்டு கொடுக்க மாட்டேன், என்றார்.தற்போது, கடலளவு விட்டு கொடுத்துள்ளார். குறிப்பாக இலங்கை தமிழினத்தை மொத்தமாக அழித்து விட்டனர். அதற்கு துணை போன மத்திய அரசை இதுவரை கருணாநிதி தட்டிகேட்கவில்லை. காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், பாலாறு அணை விவகாரம் உள்ளிட்டவைகளில் சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கு வழங்கிய உரிமைகளை கூட, கருணாநிதி இதுவரை பெற்று கொடுக்கவில்லை.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததால் விஜயகாந்த், 200 கோடி, 500 கோடி ரூபாய் வாங்கி விட்டதாக பரப்புகின்றனர். 30 ஆண்டாக சினிமா மூலம் என் குடும்பத்துக்கு தேவையான சொத்துகளை சேர்த்து விட்டேன். அதனால், இனி பொதுமக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். பணத்துக்காகவும், சீட்டுக்காகவும் நான் ஒருபோதும் விலைபோக மாட்டேன். மக்களுக்காகதான் கூட்டணி வைத்துள்ளேன். காங்கிரசில் தொண்டனுக்கு சீட் கொடுக்காமல், பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணுக்கு வழங்கியுள்ளார். இவர்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தால், நாட்டை சுடுகாடாக மாற்றி விடுவர்.ஜாதி ரீதியாக கட்சி நடத்தும் பா.ம.க., இந்த சட்டசபை தேர்தலோடு குளோஸ் ஆகிவிடும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

மக்கள் ஏமாற வேண்டாம் : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் முருகேசனை ஆதரித்து, வேப்பனஹள்ளியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:தே.மு.தி.க., மூன்றாவது அணி அமைப்பதாக கருணாநிதியின் குடும்ப, “டிவி’க்கள் பொய்யான செய்தியை பரப்பி வந்தது. ஆனால், என் மானசீக குருவான எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சியுடன் நான் கூட்டணி வைத்துள்ளேன்.எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஓட்டு சேகரித்து வெற்றி பெற்றார். இதே போன்று, வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற, வரும் 5ம் தேதியில் இருந்து, உடல் நிலை சரியில்லை என்று நாடகமாடி, மருத்துவமனையில் சேர்ந்து, பொதுமக்களிடம் இருந்து அனுதாப ஓட்டுகளை பெற, கருணாநிதி முயற்சித்து வருகிறார். இதை, வாக்காளர்கள் நம்பக் கூடாது.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கோங்குரா மட்டன்

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ
புளிச்சகீரை – 1 கட்டு
காய்ந்த மிளகாய் – 10
மிளகு – 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1 குழிக்கரண்டி

தாளிக்க

கறிவேப்பிலை, கடுகு – சிறிதளவு

செய்முறை

* மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும், புளிச்ச கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

* வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து அரைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

* இப்போது கீரையை சேர்த்து வதக்கி, தொடர்ந்து வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.

* அரைத்த விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* கீரை, மசாலா, மட்டன் எல்லாம் சேர்ந்து வெந்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.

* கோங்குரா மட்டன் சுவைக்க தயார்!

`செப்’ தாமு

ஓசோன் படலம்

சோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தில் உள்ள (ஓசோன்-O3 ) ஒருவகை காற்றுப் படலம்தான். சூரியனில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புறஊதாக்கதிர்களை பூமியில் விழாமல் தடுப்பது ஓசோன் அடுக்குதான். 93 முதல் 99 சதவீத புறஊதாக் கதிர்களை `ஓசோன் படலம்` கிரகித்துவிடுவதால்தான் நம்மால் இங்கு நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தப் படலத்தில் துளை விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபடாமல் தடுப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

***

ஓசோன் படலம் தரையில் இருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள காற்றுமண்டலத்தில் காணப்படுகிறது. பிரஞ்சு இயற்பியல் வல்லுனர்கள் சார்லஸ் பேப்ரி, ஹென்றி புய்சன் ஆகியோர் (1913-ல்) ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர். `சிட்னி சேப்மேன்’ என்ற இங்கிலாந்து விஞ்ஞானி (1930-ல்) இரு அணுநிலை ஆக்சிஜனும், ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன் (O3) என்று கண்டுபிடித்தார். சூரியஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் தாக்குவதால் ஆக்சிஜன் அணுக்களில் ஏற்படும் மாற்றமே ஓசோனை தோற்றுவிக்கிறது என்றார். மற்றொரு இங்கிலாந்து ஆய்வாளர் டோப்சன், ஓசோனின் அடர்த்தியை அளவிடும் `ஸ்பெக்ட்ரோபோட்டோ` மீட்டரை (டோப்சான் மீட்டர்) உருவாக்கினார்.

***

ஓசோன் மூலக்கூறும் நிலையற்றது தான். புறஊதாக்கதிரின் தாக்குதலால் உருவாகும் ஓசோன் அணுக்கள் மீண்டும் அந்த கதிர்கள் தாக்கும்போது அணுநிலை ஆக்சிஜனாகவும், ஆக்சிஜனாகவும் பிரிகிறது. இது ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி எனப்படுகிறது. ஸ்ட்ரேடோஸ்பியர் (50 கி.மீ. உயரத்திற்குள்) அடுக்கில் உருவாகும் ஓசோன் படலம் மட்டுமே இந்த சுழற்சிக்கு தப்பி நிலைக்கிறது. அதற்கு மேலுள்ள ஓசோன் அணுக்கள் இந்த சுழற்சியால் சிதைந்து விடுவதும், மீண்டும் உருவாவதுமாக இருக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் மட்டும் 90 சதவீத ஓசோன் படலம் இருக்கிறது.

***

ஓசோனின் செறிவு மிகவும் குறைவாக இருப்பது உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஏனெனில் செறிவு குறைந்த ஓசோன் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களை மிகுதியாக உட்கிரகிக்கிறது. புறஊதாக் கதிர்கள்(UV) அதன் அலைநீளத்தைச் சார்ந்து யு.வி. – ஏ, பி, சி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. UVA (400315 நா.மீ ), UVB (315280 நா.மீ ) மற்றும் UVC(280 – 100 நா.மீ.) அலை நீளம் கொண்டது. `சி` புறஊதாக்கதிர் (UVC) மனிதர்களுக்கு மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. UVB கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படலாம். UVA கதிர் மரபு சார்ந்த பாதிப்புகளை உருவாக்கும் ஆற்றலுடையது.

***

அண்டார்டிக்கில் ஓசோன் ஓட்டை இருப்பது அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 1978-ம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் குளோரோபுளோரோ கார்பன் உள்ள பல பொருட்களை பயன்படுத்த தடை விதித்தன. குளிர்பதனம் மற்றும் தொழிலகத் தூய்மை பணிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. `த மோன்ட்ரியல் புரோட்டோக்கால்’ என்ற சர்வதேச உடன்பாட்டின் படி 1987 முதல் சிதிசி உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு 1996-ம் ஆண்டு பெருமளவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓசோன் ஓட்டை பெரிதாவது தடுக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர
ALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரை யில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1: மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2: மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க
CTRL+E: சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+P: இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க