Daily Archives: ஏப்ரல் 1st, 2011

தமிழகத்தில் நெருக்கடி நிலை: கருணாநிதி “திடுக்’ குற்றச்சாட்டு

“சத்தமில்லாத நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவுகிறது,” என, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

ஈரோட்டில் நேற்று இரவு நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: திராவிட இயக்கத்தை தென்னகத்தில் பரவச் செய்யவும், இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றவும், திராவிட இயக்கம், தி.மு.க., என்ற அரசியல் இயக்கமாக மாறியது. முதல் தேர்தல் அதிகமான வெற்றியை தராவிட்டாலும், அதை தொடர்ந்து ஆட்சியை பிடிக்குமளவுக்கு வளர்ந்து, இன்றைய தினம் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. இந்தக் கூட்டணியில் உள்ள அத்தனை பேரும், அடியேனை முதல்வராக அடையாளம் காட்டுகின்றனர். ஐந்து முறை முதல்வனாக இருந்த என்னை ஆறாவது முறையும் முதல்வராக்க எண்ணுகின்றனர். இந்த அணி என்னை சுட்டிக்காட்டுவது போல், எதிரணியில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு சுட்டிக் காட்டினால் மறுநாள் பத்திரிகைகளில் அடிதடி, ரகளை என்ற புகைப்படங்கள் வெளியாகும். அங்கே ஒருவர் ஆண் தலைவர், இன்னொருவர் பெண் தலைவர் இருக்கிறார். ஒரு வேளை நான் கூறிவிட்டேன் என்பதற்காக, இதன் பிறகு பெயரை சொன்னாலும் சொல்லலாம். கூட்டணியினர் என்னை நம்புகின்றனர். நான் அவர்களை நம்புகிறேன். ஆட்சியில் நாங்கள் செய்த சாதனைகளை, வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பார்த்துவிட்டு என்னை நம்புகின்றனர்.

ஒரு அரசின் திட்டங்களை, அடுத்து வந்த அரசும் தொடர்ந்தால் தான் அந்த திட்டம் தொடர முடியும். காமராஜர் செயல்படுத்திய ஆரம்பக்கல்வி திட்டத்தை, சத்துணவு திட்டத்தை, நானும், அதன் பிறகு எம்.ஜி.ஆரும், அவரைத் தொடர்ந்து நாங்களும் தொடர்ந்தோம். இது தான் உண்மையான சத்துணவு என்பதற்கேற்ப ஐந்து முட்டை வழங்குகிறோம். பிள்ளையை ஊட்டி வளர்த்து, ஆரம்ப கல்வியையும் ஊட்டிய அரசு தான் தி.மு.க., அரசு. மத்திய அமைச்சர்கள் புகழக் கூடிய அளவுக்கு, மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில் தமிழகம் கல்வித்துறையில் வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு தி.மு.க., அரசு தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா? “தொழில் வளர்ச்சியை நசுக்கிவிட்டார்’ என்று அம்மையார் குறை கூறியிருக்கிறார். தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் துவங்க வெளிநாட்டினர் போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் நிறைய தொழிற்சாலைகள் உருவானதால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு மின் திட்டங்களை துவங்கவில்லை. நாம் தான் துவங்கியிருக்கிறோம்.நெய்வேலி விரிவாக்க திட்டமும், கூடங்குளம் திட்டமும் முடிவடையவில்லை. இத்திட்டங்கள் நிறைவடைந்தால், உங்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்.

அன்னை இந்திரா காலத்தில் நெருக்கடி நிலை நாட்டில் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் அவர் கூறும் போது, “நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட கொடுமைகளுக்கு அதிகாரிகள் தான் காரணம்’ என்று கூறி, சென்னையில் நடந்த கூட்டத்தில் மன்னிப்பு கேட்டார். அது போன்ற ஒரு கொடுமை இப்போது மேல்மட்ட அதிகாரிகளால் அமலுக்கு வந்துள்ளது. சத்தமில்லாமல் எமர்ஜென்ஸி நிலைமை இப்போது தமிழகத்தில் நடக்கிறது. தி.மு.க., கூட்டணியை உடைக்க நெருக்கடி கால கொடுமை மீண்டும் வீசப்படுகிறது. இதை நிதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகம் இருக்கும் வரை, தமிழனுக்கு சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை எங்கள் அணிக்கு தோல்வி கிடையாது. என்றைக்கும் வெற்றி தான். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நன்றி-தினமலர்

என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர்:விஜயகாந்த்

என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்புகின்றனர்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திருச்சியில் பேசினார்.

திருச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவெறும்பூர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் பூனாச்சி, முசிறி சிவபதி ஆகியோரை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். திருவெறும்பூர், ரயில்நகர், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய இடங்களில் விஜயகாந்த் பேசியதாவது: “பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தரவேண்டும். குறைந்த விலையில் பால் விற்பனை செய்ய வேண்டும்’ என்று மூன்றாண்டுக்கு முன் நான் கூறினேன். ஆனால், இப்போது தான் கருணாநிதி பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டில்லிக்கு பலமுறை சென்ற கருணாநிதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து வாய்திறந்திருப்பாரா? 5 ஆண்டுக்கு முன், 33.55 ரூபாயாக இருந்த பெட்ரோல் இன்று, 63 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து தொழில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. “கரன்ட் கட்’ அதிகரித்துள்ளது. கலர், கலராக டிக்கெட்டை கொடுத்து பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். தவறு செய்தால் யாரையும் விடமாட்டேன். கருணாநிதி, தன் பிள்ளைகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியம், வார்டு, வட்ட செயலர் வரை அனைவரையும் தவறு செய்யும்படி கூறுகிறார். எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனது கட்சி வேட்பாளரை அடித்ததாக, “டிவி’யில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர். நான் என் கட்சிக்காரரை தானே அடித்தேன்; உங்களையா அடித்தேன்? கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை கொடியை கீழே இறக்கச் சொல்கிறார் என்கின்றனர். பின்னால் நிற்கும் மக்கள் என்னை பார்க்க முடியாது என்பதால், கொடியை கீழே இறக்கும்படி கூறுகிறேன். இதை ஏதோ தவறுபோல், சித்தரித்து “டிவி’க்களில் ஒளிபரப்புகின்றனர். என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்கின்றனர். தவறான செய்திகளை பரப்புகின்றனர். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சான்; கொடியை இறக்கச் சொன்னான்; வாந்தி எடுத்தான் என, என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி என் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். ரோட்டில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, சோடா கொடுத்து அவரை மீட்க வேண்டும். அதுபோல், தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து துரத்துவது தான் தமிழகத்தின் உடனடி தேவை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

நன்றி-தினமலர்

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்

இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

இதன் விவரம் வருமாறு: * கடந்த பத்தாண்டுகளில் (2001 – 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.

* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.

* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதமாகும்.

படித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு: * மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

* 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வி உயர்வு: * 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.

* மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.

* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.

* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் – 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.

27 லட்சம் பேர் பங்கேற்பு: சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும், இரண்டு கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும்பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.

ஷார்ட்கட் கீகளை உருவாக்கலாம்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணைந்த ஒரு கட்டளை ஆகும்.
கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட், கண்ட்ரோல் (Alt, Shift, Ctrl) கீகள் இத்தகைய கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் எழுத்து அல்லது எண்களுக்கான கீகள் இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ தொகுப்பினைத் தருகின்றன. இந்த தொகுப்பினைப் பயன்படுத்துகையில் கம்ப்யூட்டரில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல ஷார்ட்கட் கீகள் உலகெங்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவானதாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக கண்ட்ரோல் + சி (Ctrl + C) காப்பி செய்வதற்கும், கண்ட்ரோல் + வி (Ctrl+V) பேஸ்ட் செய்வதற்கும் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S) சேவ் செய்வதற்கும் அனைத்து நாடுகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளன. சில புரோகிராம்களில் இவை வேறு படலாம்.
இந்த ஷார்ட்கட் கீகள் அனைத்தையும் ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கான ஷார்ட்கட் கீகள் நாம் முயற்சி எடுக்காமலேயே நம் நினைவில் அமைந்து விடுகின்றன. ஒவ்வொரு கட்டளைக்குமான ஷார்ட்கட் கீயினை அந்த மெனுவில் கட்டளைச் சொல்லில் அடிக்கோடு இழுக்கப் பட்ட எழுத்தே ஷார்ட்கட் கீயில் பயன்படுத்தப்படும்.
இன்னொரு வழியும் உள்ளது. எடுத்துக் காட்டு மூலம் விளக்குகிறேன். ஸ்டார்ட் (Start) பயன்படுத்தி கிடைக்கும் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் (All Progrmas) – அக்சஸரீஸ் (Accessories) – அட்ரஸ் புக் (Address Book) தேடிக் கண்டுபிடியுங்கள். இதை இயக்க லெப்ட் கிளிக் தருவீர்கள் அல்லவா? இப்போது ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் கீழாக உள்ள பிரிவான புராபர்ட்டீஸ் (Properties) என்பதில் கிளிக் செய்திடுங்கள். புராபர்ட்டீஸ் டயாலக் பாக்ஸில் ஷார்ட்கட் கீ (Shortcut key) என ஒரு பாக்ஸ் இருக்கும். இந்த பாக்ஸில் நன் (None) என இருக்கும். இதில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று பின் ஷிப்ட் (Shift) அழுத்தினால் அதில் கண்ட்ரோல்+ ஆல்ட் (Ctrl+Alt) கிடைக்கும். அதாவது அட்ரஸ் புக் புரோகிராம் திறப்பதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்பில் மாடிபையர் கீகள் இந்த இரண்டும் ஆகும். இனி அதனுடன் அ அழுத்துங்கள். பின் அப்ளை (Apply) அழுத்தி வெளியேறுங்கள். நீங்கள் இப்போது ஒரு ஷார்ட்கட் கீயினை உருவாக்கி விட்டீர்கள். இனி அட்ரஸ் புக் திறக்க கண்ட்ரோல் + ஆல்ட் + ஏ (Ctrl+Alt+A) அழுத்தினால் போதும்.
இந்த கீ தொகுப்பு ஏற்கனவே அமைக்கப்படாத புரோகிராம்கள் அனைத்திலும் இந்த ஷார்ட்கட் கீ செயல்படும். எடுத்துக்காட்டாக பேஜ் மேக்கர், வேர்ட், எக்ஸெல் போன்ற தொகுப்புகளில் இந்த ஷார்ட்கட் கீ யை அழுத்தினால் அட்ரஸ் புக் திறக்கப்படும். ஏனென்றால் இந்த கீ தொகுப்பினை வேறு எந்த கட்டளைக்கும் அந்த புரோகிராம்கள் பயன்படுத்த வில்லை. ஆனால் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்பினை ஒரு புரோகிராம் பயன்படுத்தி இருந்தால் இது அத்தொகுப்பில் எடுபடாது.
வேர்ட் தொகுப்பில் ஒரு ஷார்ட்கட் கீயினை ஏற்கனவே உள்ளதற்குப் பதிலாக அமைக்கும் விதம் குறித்துப் பார்க்கலாம். வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களை எண்ணிச் சொல்ல தரப்பட்டுள்ள ஷார்ட்கட் கீ தொகுப்பு Alt+T+W. இதனை மிக எளிமையாக மாற்றவும் எப்படி ஷார்ட்கட் கீ தொகுப்பு உருவாக்கலாம் என்பதற்கும் கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. இதனை Alt+U ஆக மாற்றும் வழிகளைக் காணலாம்.
டூல்ஸ் மெனுவில் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் கிடைக்கும் விண்டோவில் கமாண்ட்ஸ் (Commands) என்னும் டேபிள் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸின் அடிப்பாகத்தில் கீ போர்டு (Keyboard) என்னும் பட்டன் கீழாகக் காணப்படும். அதனைக் கிளிக் செய்திடவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் பெட்டியில் டூல்ஸ் (Tools) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம் கமாண்ட்ஸ் (Commands) கட்டத்தில் ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால் டூல்ஸ் வேர்ட் கவுண்ட் (Tools Word Count) என்று ஒரு கட்டளை இருக்கும். கீழாக பிரஸ்நியூ ஷார்ட்கட் கீ (Press New Shortcut key) என்பதில் கிளிக் செய்து பின் Alt கீயையும் க் கீயையும் டைப் செய்திடவும். அருகே இருக்கும் அசைன் (Assign) பட்டனில் கிளிக் செய்து பின் ஓகேயில் என்டர் தட்டி அனைத்து பாக்ஸ்களையும் மூடுங்கள். இனி சொற்கள் எண்ணுவதற்கு Alt + U ஷார்ட் கட் கீகளாக அமையும்.
இது போல ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளுக்கு ஷார்ட்கட் கீகளை நமக்கு எளிதாகவும் நாம் விரும்பும் வகையிலும் அமைக்க முடியும்.
பொதுவாகக் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் இந்த ஷார்ட் கட் கீகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. இவற்றைத் தெரிந்து கொள்ளும்போதுதான் நாம் வீணாக எவ்வளவு நேரத்தைச் செலவு செய்திருக்கிறோம் என்பதனை உணர்வோம். எடுத்துக்காட்டாக சில நேரங்களில் தெரியாமல் கேப்ஸ் லாக் (Caps Lock) அழுத்தி விட்டு அவசரமாக மானிட்டரைப் பார்க்காமல் ஏதேனும் நூல் அல்லது ஏட்டினைப் பார்த்து டைப் செய்கையில் THERE EXIST A DIFFERENT SOLUTION WHICH MANY OF US DO NOT KNOW என அனைத்தையும் பெரிய எழுத்தில் டைப் செய்திருப்போம். பின் தவறை உணர்ந்து மீண்டும் டைப் செய்வோம். அப்போது தெரியாது இதனைச் சரி செய்திடும் வழி ஷிப்ட் + எப் 3 கீயில் (Shift + F3) தரப்பட்டிருப்பது. சரி செய்திட வேண்டிய சொற்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால் இந்த சொற்கள் இரு வேறு சரியான வழிகள் தரும். அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே சேவ் ஆன ஒரு பைலை வேறு ஒரு பெயரில் சேவ் செய்திட பைல் மெனு கிளிக் செய்து பின் சேவ் அஸ் என்ற பிரிவைக் கிளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் வேறு ஒரு பெயர் தருவோம். ஆனால் இதனை F12 கீ அழுத்தி செயல்படுத்தலாம்.
ஷார்ட்கட் கீகள் நம் வழக்கமான பணியை விரைவாக முடிக்க உதவும் திறவுகோல்களாகும். எப்போது மெனு கட்டளைகளைச் செயல்படுத்தினாலும் அதனைச் சற்று உற்று நோக்குங்கள். நீங்கள் இந்த கட்டளைகளுக்காக கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் ஷார்ட் கட் கீ என்ன? என்று காட்டப்படும். அடிக்கடி பயன்படுத்தும் மெனு கட்டளைகளுக்கான ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்து எளிதாகப் பயன் படுத்தி விரைவாகச் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.