Daily Archives: ஏப்ரல் 2nd, 2011

ஒப்பில்லாத ஓட்ஸ்


வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சுரங்கமாக விளங்குவது ஓட்ஸ். அது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க வல்லது. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிலையாய் வைக்கும். வியாதிகள் நம் உடலை அண்டாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. தன்னிடத்தே நிறைந்த நார்ச்சத்தினால் மலச்சிக்கல் இல்லாமல் உடலைப் பாதுகாக்கிறது.

ஒப்பில்லாத ஓட்ஸ்

இத்தனை உயர்வுமிக்க ஓட்சை நாம் தினசரி உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான ஆனந்த வாழ்வு வாழலாம். ஓட்சின் உயர்வுக்கு மற்றுமொரு காரணம், அதை சிறிதளவே உட்கொண்டாலும் வயிற்றை நிரப்பி நீண்ட நேரத்திற்கு பசி எடுக் காமல் இருக்க வைக்க வல்லது.

மூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பாகவே வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டிய மாணவர்கள் காலைச் சிற்றுண்டியுடன், ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு கிளம்பினால் 6 மணி நேரம் கழித்து மதிய உணவு உண்ணும் வரை பசி தாங்கி புத்துணர்ச்சியுடன் பரீட்சை எழுத உதவும்.

தினசரி ஓட்ஸ் சிறிதளவு உட்கொள்வதை வழக்கமாக்கி கொண்டால் அது இதயத்திற் கும் நன்மை பயக்கும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். பாலின் சத்துக்கள், உலர் பழங்களின் சுவை இரண்டையும் ஓட்சின் இயல்பான சுவையுடன் சேர்த்து இம்முறை ஓட்ஸ் கஞ்சி செய்வோமா!

ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 4 டேபிள் ஸ்பூன்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி, வால்நட், பாதாம்,
திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* 2 கப் பாலை ஒன்றரை கப்பாகச் சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும்.

* கொதிக்கும் பாலில், ஓட்ஸ், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

* இப்போது முந்திரி, வால்நட், பாதாம், திராட்சை அனைத்தையும் பொடியாக அரிந்து அதனை கொதிக்கும் பாலில் ஏலக்காய்த்தூளுடன் சேர்க்கவும்.

* ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஒப்பில்லாத சத்துடைய ஓட்ஸ் கஞ்சி ரெடி.

* சூடாக டம்ளரில் ஊற்றி கொடுக்கலாம். நீங்களும் சுவைக்கலாம்.

சுவைக்கான குறிப்பு

மேலும் அதிக சுவை விரும்புவோர் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க விடலாம்.

கவனிங்க…!

* காய்கறிகளை கழுவிய பிறகு வெட்ட வேண்டும், அப்போதுதான் மண் துகள்கள், அழுக்கு நீங்கும். கிருமிகள் ஓரளவுக்கு அகற் றப்படும். வெட்டிய பிறகு கழுவினால் சத்துப் பொருட்கள் குறைந்து விடும்.

* புழு, பூச்சி தாக்கிய காய்கறியை பாதிக்கப் பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பயன் படுத்தக் கூடாது. முழுவதையும் பயன் படுத்தாமல் இருப்பதே நல்லது.

* கண் கரிக்காமல் வெங்காயம் வெட்ட வேண்டுமானால், அதன் மூக்குப் பகுதியை அகற்றிவிட்டு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு வைத்திருந்து பிறகு வெட்டி பயன்படுத்தலாம். அதேபோல மூக்கு அரிந்த வெங்காயத்தை அடுப்பு வெப்பத்தில் லேசாக வைத்திருந்து பிறகு அரிந்து கொள்ளலாம்.

* சமையலில் உப்பு கூடினால் ஒன்றிரண்டு உருளைக் கிழங்கை வெட்டிப் போட்டு வேக வைத்துக் கொள்ளலாம். கிழங்கு சேர்க்காத குழம்பு எனில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றலாம். காரம் கூடினாலும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

* எப்போதுமே சாப்பிட்டபின் ஒன்றிரண்டு சீரகத்தை வாயில் போட்டுக் கொள்வது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

* சாப்பிட்ட பிறகு சூடாக டீ, காபி போன்ற பானம் பருகினால் இதயத்திற்கு நல்லது.

கீதா பாலகிருஷ்ணன்

முந்துகிறது அ.தி.மு.க.: லயோலா கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகளும் உள்ளதாக சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் தமிழகம் முழுவதும் 117 பேரவைத் தொகுதிகளில் மார்ச் 21 முதல் 29 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் மூன்று பேரவை தொகுதிகள் வீதம் மொத்தம் 117 தொகுதிகளில் 3,171 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.பேராசிரியர் ச.ராஜநாயகத்தின் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 30 பேர் இதில் ஈடுபட்டனர்.சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் ச.ராஜநாயகம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட, கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார்.

கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்: தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 48.6 சதவீதம் பேர் அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 41.7 சதவீதம் பேர் தி.மு.க. அணிக்கும், பிற கட்சிகளுக்கு 1.5 சதவீதம் பேரும், முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.அதிமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேரும் , தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என 36.7 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. புறக்கணிப்பால் பாதிப்பில்லை: ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று பெரும்பான்மையானோர் (53.6 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அதிமுக அணி பாதிக்கப்படும் என நான்கில் ஒருவர் (25.4 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வுக்குத்தான் பாதிப்பு என 7.4 சதவீதத்தினரும், தி.மு.க. அணியைப் பாதிக்கும் என 3.8 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

மின்வெட்டு முக்கியப் பிரச்னை: தங்கள் தொகுதியின் மிக முக்கியப் பிரச்னையாக மின்வெட்டை (25.2 சதவீதம்) பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விலைவாசி உயர்வு, குடிநீர், போக்குவரத்துப் பிரச்னை, ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் அடுத்தடுத்த முக்கியப் பிரச்னைகளாக மக்கள் தெரிவித்துள்ளனர்.எந்த அணியின் வேட்பாளர் ஜெயித்தாலும் தொகுதியின் பிரச்னை தீராது என 42.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தங்களது தொகுதியில் உள்ள பிரச்னைகளை தி.மு.க. அணியினரோடு ஒப்பிடும்போது அ.தி.மு.க. அணியினரால் தீர்க்க முடியும் என்று சற்று அதிகமானோர் (33.7) கருதுகின்றனர்.

வாக்களிக்கப் பணம்: பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறு என்று 80 சதவீதத்தினர் தெரிவித்திருந்தாலும், கடந்த தேர்தல்களில் ஒருமுறையாவது பணம் பெற்றதாக 47.9 சதவீதம் பேர் ஒத்துக்கொள்கின்றனர். பணம் வாங்கிக்கொண்டு தான் விரும்பும் வேறொருவருக்கு வாக்களிப்பது தவறல்ல என 31.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

அதிமுக அணிக்கு 105 தொகுதிகள்: இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலக்கட்டத்தில், 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது.கடுமையான போட்டி நிலவும் தொகுதிகள் எந்த அணிக்குச் செல்லும் என்பது வாக்குப் பதிவுக்கு முன்பாக மதிமுக எடுக்கும் நிலைப்பாடு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களைப் பொருத்து அமையும்.தேர்தல் வியூகத்தில் தி.மு.க. முன்னிலை: தேர்தல் வியூகத்தை சிறப்பாகச் செயலாக்கி வருவதில் தி.மு.க. அணி முன்னிலைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை, சுமூகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெருமுனைக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் ஆகியவற்றில் தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.உள்கட்சிப் பூசல் இன்மை, சுவரொட்டி, பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.

கள அனுபவம், திகட்டும் சலுகை அறிவிப்புகள்: சலுகைகள், இலவச அறிவிப்புகள் குறித்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களைத் திகைத்துப்போக வைத்துள்ளன. அதேபோல், அனைத்துத் தொகுதிகளிலும், அனைத்துக் கட்சிகளிலும் பூசல்கள் மலிந்துள்ளன. சில சூழல்களில் மனக்கசப்பாகவும், சில சூழல்களில் வெளிப்படையான எதிர்ப்பாகவும் அவை உள்ளன.

தடை உத்தரவு போன்ற சூழல்: தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடுகளால், வழக்கமாகத் தேர்தல் காலங்களில் காணப்படும் திருவிழாச் சூழல் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களில் உள்ள வெளி மாநிலக் காவலர்களால் தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைப் போன்ற இறுக்கம் நிலவுகிறது.சுவர் விளம்பரத்துக்கு காட்டப்படும் கெடுபிடிகளால் சிறுகட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குறித்த எந்த விவரமும் வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.எனினும், தேர்தல் ஆணையம் மிகப் பொறுப்பாக செயல்படுவதாக 60.5 சதவீதம் பேரும், தன்னுடைய அதிகார வரம்பை மீறிய கண்டிப்புடன் செயல்படுவதாக 24.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது: பேராசிரியர் ராஜநாயகம்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.லயோலா கல்லூரி சார்பில் கடந்த தேர்தல்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறை தே.மு.தி.க. அ.தி.மு.க. அணியில் இணைந்திருக்கிறது. இது அந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டதால் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி உருவாகியுள்ளது. கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்கு வங்கியில் சிறிய சிராய்ப்பு ஏற்படலாம். ஆனால், பெரிய சேதம் ஏற்படாது. அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் – கேட்கவில்லை:2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி ஆகிய கேள்விகள் எங்களது கேள்விப்பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களைப் பாதிக்கும் விஷயங்களை அவர்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தார்கள்.மணல் கொள்ளை, திருப்பூர் சாயப்பட்டறை போன்ற பகுதிகள் சார்ந்த பிரச்னைகளை மக்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவித்தனர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரமும் மக்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தால் அவர்களாகவே தெரிவித்திருப்பார்கள். இது ஊடகங்களால் திணிக்கப்பட்ட பிரச்னையாகவே களத்தில் தெரிகிறது என்றார் ராஜநாயகம்.ஏற்கெனவே உங்களது கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, என்னுடைய நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது ஒன்றுதான் என்றார்.

மிதக்கும் அரண்மனை!

உலகின் மிகவும் விலை உயர்ந்த, அரண்மனை போன்று தோற்றமளிக்கும் கப்பல் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி ரூபாய்.
பிரிட்டன் நாட்டில் துறைமுகம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல், மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்காக தயாராகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, “ஸ்டீரீட்ஸ் ஆப் மொனாக்கோ’ என, பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓட்டல்கள், நீச்சல் குளம், சூதாட்ட விடுதி, கார் ரேசுக்கான தனி பாதை, டென்னிஸ் மைதானம் ஆகியவை உள்ளன.
அரண்மனை போன்று வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கப்பலை இயக்குவதற்கு, 70 ஊழியர்கள் தேவை. கப்பலை இயக்கு வதற்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
எப்படியெல்லாம் வாழறாங்க!