Daily Archives: ஏப்ரல் 3rd, 2011

சிறுநீர் பரிசோதனையின் அவசியம்!

உடல் இயக்கம் சீராக நடைபெற காரணமாக இருக்கும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவு செரிமானமானவுடன் உருவாகும் கழிவுப்பொருட்களில் இருந்து சிறுநீரையும், கார்பன் டை ஆக்சைடையும் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான வேலையை செய்வது சிறுநீரகம்.

நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன வகையான நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

சில நேரங்களில் வலியில்லாமலும் சிவப்பு நிறத்திலும் சிறுநீர் வெளியேறும். அதற்கு காரணங்கள்:

* சிறுநீர் உருவாகும் பாதை அல்லது சிறுநீரகத்தில் நீண்டநாளாக நோய் இருப்பது.

* சிறுநீரகத்தின் சிறுநீர் உருவாகும் பாதையில் உள்ள கிரானுலோமேட்டஸ் பகுதியில் தொற்று நோய் உருவாதல்.

* சிறுநீரகத்தில் பெனின் நியோபிளாஸ்டிக் மற்றும் மாலிக்னன்ட் நியோபிளாஸ்டிக் போன்றவற்றில் புண் உண்டாதல்.

பால் போன்ற சிறுநீர் உருவாதல்:

கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலோ அல்லது நிணநீர் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ பால்போன்ற சிறுநீர் வெளியேறும்.

மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சிறுநீர் உருவாதல்:

இதற்கு காரணம் செரிமானம் சீராக இல்லாமல் இருத்தல், காய்ச்சல் அதிகமாக இருப்பது, பைலிருபின் அதிகரித்து இருப்பது.

மேகம் போன்ற சிறுநீர் உருவாதல்:

பாஸ்பேட், கார்பனேட், யூரேட், லியுகோசைட், ஸ்பெர்மட்டோசோவா மற்றும் பிராஸ்டேட்டிக் திரவத்தில் மாற்றம் உண்டாகி இருந்தால், மேகம் போன்ற சிறுநீர் வெளியேறும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

நீரிழிவு நோய் காரணமாக, சிறுநீரில் அதிகளவு கலோரி சத்து வெளியேறுவதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும். உடல் மெலிந்து காணப்படுவர்.

நீலம் கலந்த பச்சை நிற சிறுநீர்:

சியுடோமானஸ் என்ற ஒருவகை பாக்டீரியா தொற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் நீலம் கலந்த பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

யுவராஜின் வெற்றி `ரகசியம்’!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ்சிங்கின் வெற்றிநடை ரகசியம், அவர் புதிதாக அணிந்திருக்கும் `ஓம்’ பொறித்த தங்கச் சங்கிலிதான் என்று ஒரு பேச்சு உலவுகிறது.

அணியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே அவதிப்பட்ட யுவராஜின் ஆட்டம், உலகக் கோப்பையில் அசத்தல். அதற்குக் காரணம் `ஓம்’ சங்கிலியே என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அதே மாதிரி தாங்களும் செய்து அணிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

“யுவராஜ் மாதிரி `ஓம்’ சங்கிலி வேண்டும் என்று கேட்டு எனக்கு நிறைய `ஆர்டர்கள்’ வருகின்றன” என்கிறார், டெல்லியைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான அபேக்ஷா ஜெயின்.

இன்னொரு நகை வியாபாரி கூறுகையில், “யுவராஜ் சங்கிலி’ வேண்டும் என்று கேட்டு பல வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். `ஓம்’ என்பது அமைதியையும், இந்தியத்தன்மையையும் அளிப்பதால் யுவராஜ் அதை அணிகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார்.

“யுவராஜ் `ஓம்’ சங்கிலியை அணிந்திருப்பதைப் பார்த்ததுமே எனது நண்பர்கள் மூன்று பேர் அவ்வாறு அணியத் தொடங்கிவிட்டனர்” என்கிறார், நிதின் என்ற 21 வயது இளைஞர்.

தங்கத்தில் வைரங்கள் பொதித்த இந்தத் தொங்கும் அணியை வாங்க வேண்டும் என்றால் ரூ. 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை ஆகும். ஆனால் வெள்ளிச் சங்கிலியில் `அமெரிக்கன் டயமண்ட்’ பதித்த விலை குறைவானவற்றை பல நகைக்கடைக்காரர்கள் விற்று வருகிறார்கள்.

“யுவராஜுக்கு இந்தச் சங்கிலியைப் பரிசாக அளித்தவர் மும்பையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் பினா கோயங்கா. மதநம்பிக்கை மிக்க, கோவிலுக்குத் தவறாமல் செல்லும் யுவராஜுக்கு இது பொருத்தமான பரிசுதான்” என்று கூடுதல் தகவலைத் தருகிறார் யுவராஜின் மேலாளர் கேதர் காவ்டே.

இளந்தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கும் யுவராஜைப் பார்த்து மேலும் பலர் ஆன்மிக நாட்டம் கொள்வார்கள் என்பது சிலரின் நம்பிக்கை.

தாய்ப்பால் தராதது காரணம் குழந்தை படிப்பில் பின்தங்கியிருக்கிறதா?

ஐக்கிய நாடுகள் ஆதரவில் இயங்கும் யுனிசெப் அமைப்பும், இந்திய பிரஸ் இன்ஸ்டியூட்டும் இணைந்து, சென்னையில் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கில் குழந்தைகள் நலன் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் ஆகியோருக்கு என, யுனிசெப் இலக்குகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் ஓரளவு பின்பற்றுகின்றன. மருத்துவத் துறை, சமூகநலத் துறைகள் ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றும் பலர் இதில் பங்கேற்று கூறிய கருத்துக்கள், நாம் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் நலனில் மிகவும் பின்தங்கியிருக்கிறோமோ என்று கருத வைக்கிறது. இது தேர்தல் நேரம். இலவசங்களைப் பற்றி அதிகமாக பேசும் அளவுக்கு இவைகளை யார் சிந்திக்கப் போகின்றனர்.
அக்கருத்தரங்கில் கூறப்பட்ட சில தகவல்கள்

*குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் தர வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப் பால் கட்டாயம் தேவை. மூளை செல்கள், குறிப்பாக அறிவுத்திறன் வளர்க்கும் செல்களை வளரச் செய்யும் காலம் அது. அதை வளரச் செய்யும் அபூர்வ இயற்கையின் கொடை இது.
* தாய்ப்பால் தருவதை நிறுத்தி விட்டு, அப்புறம் பள்ளியில் படிப்பும் திறன் குறைவதாக கூறி மருத்துவ ஆலோசனை, கூடுதல் ஊட்டச்சத்து எதற்கு? அதற்காகும் செலவு எவ்வளவு? தவிரவும் மிகவும் ஏழ்மையில் இருக்கும் தாய் கூட முதல் ஆறு மாதங்களுக்கு தன் குழந்தைக்கு தேவைப்படும் பாலை தர திறன் பெற்றவர்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்போது பிரசவ வசதி இருப்பதால், வீட்டில் பிரசவம் என்பது மிகவும் குறைவு. ஆனால், கேரளாவை ஒப்பிடும் போது தமிழகத்தில் குழந்தை பிறப்பிற்கு பின் இறக்கும் தாய் எண்ணிக்கை அதிகம். ஆரம்ப சுகாதார நிலையங்களை முன்னணிப்படுத்தி தமிழக அரசு அக்கறை காட்டுவது நல்லது. ஆனால், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் சரியாக இயங்குவதில்லை.
* இங்கே டாக்டர்கள் நியமித்தாலும் அவர்கள் பணியில் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்றினால் தான், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகள் அடுத்த கட்ட மேல் சிகிச்சையை அபாயமின்றி மேற்கொள்ள முடியும். இந்த கட்டத்தில் தமிழகத்தில் நிலை பின்தங்கியிருக்கிறது.
* தற்போது கிராமங்களில் குழந்தைகளுக்கு தரப்படும் உணவு போதிய ஊட்டச்சத்து நிரம்பியதாக இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் சராசரி வருமானம் உடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு ஏற்பட்டு, அதிக நோய்களுடன் பலர் வாழ நேரிடும்.
* பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் இருப்பதைப் போல, கிராமப்புறப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பதால், மாணவியர் கல்வி பாதியில் விடுபட்டுப் போகிறது. அது மட்டுமின்றி, பள்ளிகளில் மாணவியருக்கு பாலியல் பலாத்காரம் என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. பள்ளிக் கழிப்பறையில் ஒரு சிறுமி குழந்தை பிரசவித்த செய்தி, அதன் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் முன்கூட்டியே அக்கறை காட்டாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
* ஒருங்கிணைந்த அணுகுமுறையால் விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் யுனிசெப் இலக்கை அடைவது சிரமம். அது ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக்கும் செயலுக்கு தடையாகும்.

மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்

ஆட்சியைப் பிடிக்கப்போவதாகத்தான் கூறிவந்தீர்கள். ஆனால், தற்போது கூட்டணி சேர்ந்துள்ளீர்கள்.

கடந்த 1962ல் சீனாவுடன் போர் சூழல் இருந்தது. எதிர்ரெதிர் துருவங்களாக இருந்தாலும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை அண்ணா ஆதரித்தார். இதுகுறித்து கேட்டபோது, “வீடு என்று இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும். நாடு என்று ஒன்று இருந்தால் தான் கட்சியை மாற்ற முடியும். இப்போது நாட்டுக்கே ஆபத்து வந்திருக்கிறது. முதலில் அதைத் தீர்க்க வேண்டும்’ என்றார்.அதைத் தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன். கலைஞரின் வீடா, தமிழ்நாடா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. கலைஞரின் குடும்பம், இந்த நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் கொள்ளை; எதிலும் கொள்ளை என்பதாகத் தான் இன்றைய நிலைமை இருக்கிறது. முதலில் இந்த தீய சக்தியை அழிக்க வேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வர். தெய்வம் எப்போதும் இறங்கி வந்து பேசாது. மக்கள் மூலமாகத் தான் பேசும். இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் தான் நான் இறங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு, இந்த ஆட்சியை ராமதாஸ் திட்டிக் கொண்டிருந்தார். இப்போது, ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது என்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா? இது கொள்கைக் கூட்டணியில்லை; கொள்ளைக் கூட்டணி என்று. இந்தக் கூட்டணியை விரட்டுவதற்காகத் தான், நான் கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.

திராவிடக் கட்சிகளுக்கான மாற்றாக உங்களை மக்கள் கருதிவந்த நிலையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக நீங்கள் முடிவெடுத்த பிறகும், நடுநிலையாளர்களின் ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?

கிடைக்கும். மக்கள் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். நான் ஒன்றும் ஆட்சியில் பங்கு வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லையே. செம்மொழி மாநாடு நடத்தி, தன் குடும்பத்தைத் தான் அமர வைத்தார். தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தி, நடனம் தான் பார்த்தார். இவரை அகற்ற கூட்டணி சேர்ந்திருப்பதால், என் நம்பகத்தன்மை அதிகரித்து, ஓட்டு கூடுமே தவிர குறையவே குறையாது.

அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், அவர்கள் தவறு செய்யாதபடி கண்காணிப் பீர்களா?

இன்னும் ஆட்சியே அமைந்துவிடாதபோது, கண்காணிப்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. மக்களின் விருப்பத்திற்கிணங்க, தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம். இப்போதைக்கு அது ஒன்று தான் எங்கள் குறி.

அ.தி.மு.க.,வுடனான உங்கள் கூட்டணி எப்படி இருக்கும்?

போகப் போகத் தெரியும். ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்து, என்னை வைத்து 10 படம் கூட பண்ணுவார். அதைப் போலத் தான் இதுவும். பழகிய பிறகே தெரியும்.

கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால், தே.மு.தி.க., என்ற கட்சியைத் தொடர்ந்து நடத்துவது பிரச்னையாகி இருக்குமா?

பிரச்னைக்கு அஞ்சுபவன் நான் இல்லை. வாழ்க்கை என்றாலே பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எதிர்கொண்டு சமாளிக்கும் நெஞ்சுரம் எங்களுக்கு இருக்கிறது. என் திருமண மண்டபத்தை இடித்தனர், நாட்டில் எங்கும் நடக்காத அநியாயமாக, கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதுக்கெல்லாம் கலங்கினேனா?

கூட்டணி என்றான பிறகு, உங்கள் கட்சியின் வளர்ச்சி சுருங்கிவிடாதா?
சுருங்காது. நாங்கள் பிரிந்து கிடந்தால் மீண்டும் கலைஞர் வந்துவிடுவார். பிரித்தாளும் சூழ்ச்சி தான் அவருடைய, “பாலிசி.’ அதனால் தான் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

உங்களுக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது.

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே. மக்கள் சொன்னதால் தான், நான் இந்த கூட்டணி முடிவுக்கே வந்தேன். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் தான் இவர் கட்சி நடத்துகிறார். “காங்கிரசுடனும், பணக்காரர்களுடனும் கூட்டணி வைக்கக் கூடாது’ என அண்ணாதுரை சொல்லியிருந்தார். அதை மீறி, 60க்கு 63ஐக் கொடுத்து இவர்கள் கூட்டணி சேரவேண்டிய அவசியமென்ன? இவர் மட்டும் மானத்தை விட்டு சேருவாராம். நாங்கள் சேர்ந்தால் மட்டும் தப்பா?

அ.தி.மு.க., கூட்டணியிலும் பெரிய இணக்கம் இருப்பது போல் தெரியவில்லையே. இடதுசாரிகளுடன் இழுபறி நிலவியது… ம.தி.மு.க., நிலை…

மற்ற கட்சிகளின் விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. எனக்கு முன்னால் இருந்தே அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் தான் இதுபற்றிய விவரம் தெரியும்.

கூட்டணிக்குள் கடைசியாக நுழைந்த நீங்கள், முதல் ஆளாக ஒதுக்கீடு வாங்கி வந்துவிட்டீர்கள். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக பணிபுரியுமா?

பணிபுரிபவர்; பணிபுரிய வேண்டும். நாங்கள் எதையும் எதிர்பார்த்து செயல்படவில்லை. அதேசமயம், கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். முழுமையாக கடைபிடிப்போம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நீங்களும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?

எல்லா தலைவர்களும் ஒரே மேடையில் தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று என்ன இருக்கிறது? மிகக் குறைந்த நாட்களே இருக்கும்போது, ஆளுக்கு ஒரு திசையாக பிரசாரம் செய்தால், நிறைய மக்களைச் சென்றடையே முடியுமே. இந்த ஆட்சியாளர்களை இப்படியே விட்டால், எகிப்து மாதிரி, லிபியா மாதிரி மக்கள் புரட்சி தான் வெடிக்கும்.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஏதேனும் இருக்குமா?

அதற்கு முன்பு முடிவு செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கின்றன. இப்போதே அதுகுறித்து முடிவு செய்வதற்கில்லை. எங்கள் தரப்பிலிருந்து, கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களிடமிருந்து ஏதேனும் திட்டத்தை எதிர்பார்க்கலாமா?

நிச்சயமாக. எந்தவொரு அமைப்புமே ஒரு வழிகாட்டுதலோடு, தொலைநோக்கோடு தானே செயல்பட முடியும். அதைப் பற்றி இப்போதே முடிவு செய்வதற்கு ஒன்றும் இல்லை. வெற்றி தான் எங்கள் ஒரே குறிக்கோள். இந்த ஆட்சியை அகற்றுவோம். எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைப்போம். மற்றதெல்லாம் பிறகு தான். ஊர் கூடி தேர் இழுப்போம். பிரச்னைகளை அதன் பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

உங்களுடைய பிரசார வியூகம் தான் என்ன?

நிறைய இருக்கிறது. இவர்களின் ஆட்சியில் பிரச்னைக்கா பஞ்சம்? இவர்களது ஊழல் லட்சக்கணக்கான கோடியை எட்டிவிட்டதால், 100, 200 கோடி ஊழல்களை எல்லாம், பத்திரிகைகளே செய்தியாக்குவதில்லை. சென்னையின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கிய வகையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அதை யாரும் பெரிதாக்கவில்லை. ஒரு லட்சம் கோடியைக் கேட்ட பிறகு, 200 கோடியெல்லாம் மக்களுக்கே சாதாரணமாகிவிட்டது போல.
மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்றனர். ஆனால், இவர்கள் செய்ததெல்லாம், மாநிலத்தில் சுயமா கொள்ளையடிக்கணும்; மத்தியில கூட்டா கொள்ளையடிக்கணும்கிறது தான்.

பல நல்ல திட்டங்களைச் செய்திருப்பதாகத் தானே தி.மு.க., அரசு சொல்கிறது?

அப்படி செய்திருந்தால் ஏன் காங்கிரசையும், ராமதாசையும் கெஞ்சுகிறீர்கள்; 63 சீட்டுக்காக அடித்துக்கொள்கிறீர்கள்; 121 சீட்டாக குறைத்துக்கொள்கிறீர்கள்? அனைத்து தொகுதிகளிலும் அவர்களே போட்டியிட வேண்டியது தானே! அப்புறம் ஏன், எனக்கு சவால் விட்ட அழகிரி என்னை, “நண்பர் நண்பர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அவரும் ஒன்றாக கோலி விளையாடினோமா? கிட்டிப்புல் விளையாடினோமா?இவ்வளவு இலவசங்களைத் தருகின்றனரே, எங்காவது விலைவாசி குறைந்திருக்கிறதா? அப்புறம், அதைத் தந்து என்ன புண்ணியம்? கொடுக்கின்ற இலவசங்களும், இவர்கள் வீட்டு சொத்தா, என்ன? எங்கள் வரிப்பணத்தைத் தானே கொடுக்கிறார்? இவர்கள் கட்டித் தந்த இலவச வீடுகள், எப்போது இடிந்து விழுமோ எனத் தெரியாத நிலையில் தான் இருக்கின்றன. அரிசி எதற்காக கொடுத்தனர்? கடத்துவதற்காக. “டிவி’ கட்சிக்காரங்களுக்கு கொடுத்தார். ஏழைகளுக்கு கொடுத்த 400 ஏக்கர் இலவச நிலத்தை விற்றுவிட்டதாக, “டிவி’யில் வந்த செய்தி, ஒன்றரை மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இவர்களுடைய வேலையே மிரட்டல் தானே.

நீங்கள் சொல்வது எல்லாமே தி.மு.க., எதிர்ப்பாக இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் காங்கிரசுக்கும்…

ஒண்ணுமே இல்லை. என்ன இருக்கிறது? தாமஸ் நியமனம் பற்றி ஒன்றும் தெரியாது எனச் சொல்லும் பிரதமர் தான் இருக்கிறார். அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினர்.

தேர்தலில் பணபலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், இவர்கள் என்ன தான் செய்தாலும் சரி, மக்கள் புரட்சியைத் தடுக்க முடியாது. எகிப்திலும், லிபியாவிலும் ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்களே? மக்கள் பின்வாங்கினார்களா? பணபலத்தை மக்கள் பலம் தூக்கி எறிந்துவிடும். கரும்புத் தோட்டத்துக்கு யானையைக் காவல் வைத்தது மாதிரி, தமிழகத்தில் கலைஞரை உட்கார வைத்திருக்கிறோம். அவர் அழிக்கத் தான் செய்வார். அவரிடமிருந்து எங்களால் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.

நீங்கள் 41க்கு 41ஐயும் வென்றுவிட்டால், என்ன செய்வதாக உத்தேசம்?
பொறுத்திருந்து பாருங்கள்.

நன்றி-தினமலர்

இளவரசர் திருமண ஊர்வலம் பழைய கார்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கும், அவர் காதலி கேத் மிடில்டனுக்கும், ஏப்., 29ம் தேதி, கோலாகலமாக திருமணம் நடக்க உள்ளது. வழக்கமாக திருமணம் நடக்கும் சர்ச்சுக்கு வரும் அரச புது மண தம்பதியினர், குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார வண்டியில் தான் வருவர்; ஆனால், கேத் மிடில்டன், பழைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வர விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த கார், இளவரசர் சார்லசுக்கு சொந்தமானது.
கடந்த, 1977ம் ஆண்டு மாடலான இந்த, “ரோல்ஸ் ராய்ஸ் பான்டன் 6′ ரக காரில், கடந்த டிசம்பர் மாதம் இளவரசர் சார்லசும், அவர் மனைவி கமிலாவும் சென்ற போது சேதமடைந்தது. மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, அதில், இவர்கள் கார் மாட்டிக் கொண்டது. கார் கண்ணாடிகள் உடைந்தன. இப்போது, இந்த காரின் பழுது நீக்கப்பட்டு, சரி செய்கின்றனர். காருக்கு புது வர்ணம் தீட்டப்பட்டு, மெருகேற்றப்பட்டு வருகிறது. திருமண நாளுக்கு முன்பாக கார் தயாராகி விடும்.

மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் சில மகிழ்ச்சிகளையும் சில கவலைகளையும் ஒன்றாக முன்வைத்துள்ளன. மகிழ்ச்சி கொள்வதற்கான காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கவலையடைவதற்கான காரணம், ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு இந்தியர்கள் என்கிறபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்கிற கணிப்பு, உணவு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அச்சத்தை உருவாக்குகிறது.மக்கள் தொகை அதிகரிப்பு 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 21.54 விழுக்காடாக இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்த வேகம் குறைந்துள்ளது. 17.64 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அதாவது 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 6 விழுக்காடுதான் தமிழக மக்கள் தொகை. அதிகபட்சமாக 16 விழுக்காடு மக்கள் உத்தரப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு 15.6 விழுக்காடுதான். தேசிய அளவைக் கணக்கிடும்போது இது குறைவு. இதுபோன்று கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையிலும்கூட தமிழகம் குறிப்பிடும்படியான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்கள் தமிழகத்தில் 73 விழுக்காடாகவும், ஆண்கள் 86 விழுக்காடாகவும் இருப்பதே இதற்குச் சான்று. தேசிய அளவில் ஏழு வயதுக்கு மேற்பட்டோரில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74 விழுக்காடு. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் கவலை தெரிவித்துள்ள புள்ளிவிவரம் பெண் குழந்தைகள் குறித்தது. ஆறு வயதுக்குள்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமியர் மட்டுமே உள்ளனர் என்பதுதான். இந்தியாவில் இந்த அளவுக்குக் குறைவாக இருந்தது இல்லை என்பதுதான் இந்தக் கவலைக்குக் காரணம். 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 978 சிறுமியர் இருந்தனர். இந்த விகிதாசாரம் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 927- ஆகக் குறைந்தது. இப்போது 914 ஆகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் சிறுவர்களின் எண்ணிக்கையே 15.88 கோடிதான். இது 2001 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு குறைவு. இது மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதற்கான அடையாளம் என்று மகிழ்ச்சி அடையும் அதேவேளையில், சிறுமியர் எண்ணிக்கை குறைந்துவருவது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது. அதற்காகத்தான் அனைவரும் கவலைப்படுகிறார்கள். இருப்பினும், பொதுவாக ஆண்- பெண் விகிதாசாரத்தைக் கணக்கிடும்போது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கின்றனர். 2001 கணக்கெடுப்பில் 933 பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. அப்படியானால் சிறுமியர் எண்ணிக்கை மட்டும் குறைந்திருப்பது ஏன்?இந்த நிலைமை இயற்கையாக ஏற்பட்டது அல்ல என்பதும், பெண்சிசுக்கள் வேண்டாம் என்கிற மனநிலை பொதுவாக இந்தியா முழுவதிலும் பீடித்திருக்கிறது என்பதும்தான் சிறுமியர் விகிதாசாரம் குறைவதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெண்சிசுக் கருக்கலைப்பு அதிகரிப்பதும் கிராமங்களில் பெண்குழந்தைகளை கொன்றுவிடுவதுமான நடைமுறைகள்தான் சிறுமியர் விகிதம் குறைவதற்கான காரணம் என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்சிசுக் கொலை என்பதை தடுப்பதில் அதிமுக, திமுக இரு அரசுகளும்ம தீவிரமாகச் செயல்பட்டன. அதன் விளைவு பெண்சிசுக் கொலைகள் குறைந்துவிட்டன. இப்பாதகச் செயலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு அறிமுகம் செய்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தொடக்கத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் வந்தாலும், தற்போது தொட்டில் குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துவிட்டது என்பதே, மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தைக் காட்டுகிறது.கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறியும் மருத்துவச் சோதனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய சோதனைகள் தடையற்று நடைபெறுவதாகவும், பெண்குழந்தைகளை சுமையாகக் கருதும் குடும்பங்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்ந்து நிகழ்வதும்தான் இவ்வாறு சிறுவர் சிறுமியர் விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்பது மகளிர் நல அமைப்புகள், களப்பணியாளர்களின் கருத்தாக இருக்கிறது. சிறுமியர் எண்ணிக்கை எந்தெந்த மாநிலங்களில் குறைந்துள்ளதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமை.இந்திய அரசியல்வாதிகளின் ஊழல், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக பணக்காரர், ஏழைகள் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 121 கோடி மக்களின் உணவுத் தேவையை இந்தியா எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இப்போது எழுகின்ற கேள்வி. இந்தியாவில் வறுமையும் உணவுப்பஞ்சமும் அதிகரிக்குமானால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும். மக்கள் தொகை அதிகரிக்கும் வேகம் குறைந்துவிட்டது என்று மெத்தனமாக இருக்காமல் அரசு செயல்படுவதோடு, இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

சாதனை நூலகம்!

 

பயன்படாத ரயில் நிலையம் ஏதாவது இருந்தால், அது, நம்ம ஊரில் பாழடைந்து, குப்பை கொட்டும் இடமாக மாறி இருக்கும். ஆனால், இங்கிலாந்தில் இப்படியொரு ரயில் நிலையம், இன்று, வித்தியாசமாய் சாதனை படைத்து வருகிறது.
இங்கிலாந்தில் நார்தம்பர்லாந்து என்ற பகுதியில், விக்டோரியா ஆலன்விக் என்ற ரயில் நிலையம் ஒன்று இருந்தது. வில்லியம் பெல் என்பவரால், 1887ல் வடிவமைக்கப்பட்டு துவக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், 1968ல் மூடப்பட்டது.
“பார்ட்டர் புக்ஸ்’ என்ற நிறுவனம், 1991ல், இங்கு, ஒரு செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடையை துவக்கியது.இன்று, இந்த புத்தகக் கடையில், 3 லட்சத்து, 50 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. எல்லாமே, செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்தான். ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் உள்ள ஹால், ரயில்வே பிளாட்பாரம், பெண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, ஆண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, பார்சல் ஆபிஸ் என மொத்தம், ஏழு அறைகள் புத்தகங்களால் நிரப்பப்பட்டுள்ளன.
இரண்டாவது வகுப்பு பயணிகள் தங்கும் அறையில், மக்கள் வந்து பேப்பர், புத்தகங்கள் படித்து, காபி அருந்தி, குளிரை சமாளித்து, கதகதப்பு ஏற்படுத்திக் கொள்ள எரி அடுப்பும் உண்டு. இங்கு, பல அபூர்வ புத்தகங்கள் உள்ளன. உதாரணமாக, 17 ஆயிரம் டாலர் மதிப்புள்ள, இத்தாலியன் இன்வென்ஷன்ஸ் என்ற புத்தகம், பாதுகாப்பாக கண்ணாடி அலமாரிக்குள் வைக்கப்பட்டுள்ளது. படித்த புத்தகங்களை விலைக்கு கொடுத்துவிட்டு, படிக்காத, அங்குள்ள புத்தகத்தை வாங்கிச் செல்லலாம் அல்லது நேரடியாகவும் விலைக்கு வாங்கலாம். கேட்ட புத்தகம் இல்லையென்றால், வரும்போது கொடுக்கச் சொல்லி, ஆர்டர் கொடுத்துவிட்டும் வரலாம்.
கிறிஸ்துமஸ் நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களும், இந்த நூலகம் செயல்படும். சுற்றுலாப் பயணிகள் இதைக் காண பெருமளவில் வருகின்றனர். “பிரிட்டிஷ் லைப்ரரி ஆப் செகண்ட் ஹேண்ட் புக் ஷாப்ஸ்’ என செல்லமாக இதை அழைக்கின்றனர். செகண்ட் ஹேண்ட் புத்தகங்களைப் பொறுத்தவரை, ஐரோப்பாவின் மிகப்பெரிய கடைகளில் இதுவும் ஒன்று.
***

இந்த நூலகத்திலும் திருட்டு பயம் உண்டு. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புத்தகம், திருடப்பட்டு, ஐந்து வருடங்
களுக்குப் பின், திரும்ப வந்து சேர்ந்தது. இரண்டாவது உலகப் போரின் போது, ஒரு கட்டத்தில் நாஜி படைகள் இங்கிலாந்தை பிடித்து விடும் என்ற பரபரப்பு நிலவியது. “அப்படியெல்லாம் நடக்காது, பயப்பட வேண்டாம்’ என்ற அடிப்படையில், “கீப் காம் அண்ட் கேரி ஆன்’ என, ஒரு போஸ்டர் அன்று ஒட்டப்பட்டது. அந்த போஸ்டர், இந்த
நூலகத்தில் இன்றும் உள்ளது.

மல்லூர் சிக்கன்

குழம்பு வகைகளை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான வித்தியாசமான சுவைகளில் தயாரிக்கிறார்கள். இதில் மல்லூர் தயாரிப்பு முறை அதிக சுவையானது. கோழிக்குழம்பை இந்த முறை மல்லூர் பக்குவத்தில் செய்து ருசிக்கலாம்.

மல்லூர் சிக்கன்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
தாளிக்க பட்டை – 2
லவங்கம் – 2

செய்முறை

* சிக்கனைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும், தொடர்ந்து காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* இப்போது சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி பின்னர் வேகுமளவு சிறிதளவு நீர் ஊற்றவும்.

* சிக்கன் வெந்தவுடன் போதுமான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* சிக்கன் டிரை ஆனதும் இறக்கி விடவும்.

* இதை வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாகவும், காரம் மிகுந்ததாகவும் இருக்கும்.

`செப்’ தாமு

ஜப்பான் சுனாமியில் கூகுள் உதவி

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய வுடனேயே, கூகுள் மிக அருமையான ஒரு வசதியைத் தன் தளத்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் தேடுபவர்கள் அறிந்து கொள்ள தகவல்களைத் தரலாம்.
அதே போல, ஒருவரைத் தொலைத்து விட்டுத் தேடுபவர், தான் இன்ன அடையாளம், பெயர் உள்ளவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன் எனத் தகவல் தரலாம். இதன் மூலம் இருவகையினரும் உதவி பெற்று, தொலைந்தவர்களுக்கு உதவலாம்.
தங்கள் நண்பர்களையும் உறவினர் களையும் தேடிய பலர், இந்த தளம் குறித்துக் கேள்விப் பட்டு உடனே தகவல்களைத் தரத் தொடங்கினார்கள். சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் நூறு பேரைப் பற்றிய தகவல்கள் வந்து விழுந்தன. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. சுனாமி தாக்கிய சென்டாய் என்ற பகுதியில் “Sato” என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் அதிகம். இந்த பெயரில் மட்டும் பல நூற்றுக்கணக் கானவர்களைப் பற்றிய பதிவுகள் இருந்தன.
குண்டுஸான் என்பவர், சென்டாய் பகுதியில் பல் மருத்துவராகப் பணியாற்றிய அகி சாட்டோ என்பவரைத் தேடித் தகவல் கொடுத்து, புகைப் படத்தினையும் வெளியிட்டிருந்தார். பூகம்பத்திற்குப் பின், ஆனால் சுனாமி அலை வரும் முன் அவருடன் பேசியதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அவர் செய்தியைப் படிக்க பரிதாபமாக இருந்தது. இன்னொரு செய்தியில், பாட்டிமா சாட்டோ என்பவர், அம்மா நலம். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று எழுதி இருந்தார். படிக்க நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இந்த தளம் இயங்கியது. தள முகவரி: http://japan.personfinder. appspot.com/?lang=en. இந்த அரிய சேவையினை அனைத்துப் பிரிவினரும் பாராட்டினார்கள். பலரும் பயன்படுத்தி உதவி பெற்றனர்.
ஜப்பானில் இயங்கும் அகில உலக செஞ்சிலுவை சங்கத்தின் கிளையும் இதே போல ஒரு தளத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தது.

பகவான் அருள் கிடைக்க வேண்டுமா?

நமக்கு பலவித சவுகரியங்களை செய்து கொடுத்துள்ளார் பகவான். உணவு, உடை, இடம் எல்லாம் கொடுத்திருக்கிறார். இவைகளை அனுபவிக்க, அவயவங்களையும் தக்கபடி கொடுத்திருக் கிறார்; நாம், அவைகளை அனுபவிக்கிறோம். இதற்காக, நாம் பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்துகிறோமா? “இவ்வளவும் நான் சம்பாதித்தது சார்…’ என்று, மார் தட்டிக் கொள்கிறோம். பகவானுடைய அருள் இன்றி, நம்மால் எதை சம்பாதிக்க முடியும்; எதை அனுபவிக்க முடியும். இதற்காக, பகவானுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை.
பகவானுக்கு நன்றி செலுத்த வேண்டுமானால், அது வெகு சுலபம். பகவான் நாமாவை சொன்னாலும் போதும். நேரம் இருந்தால், பகவான் நாம பஜனை செய் யலாம்; அதுவும் முடியாத போது, துளசி தளம், உத்ரணி தீர்த்தம் எடுத்து, கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி, கீழே விட்டாலும் போதும்; பகவான் திருப்தியடைவார்.
சமையல் செய்த பொருட்களை, அவனுக்குக் காட்டி விட்டு சாப்பிடுவதை, நைவேத்யம் என்பர். நாம் காட்டும் பொருட்களில், ஒரு துளி கூட அவன் எடுத்துக் கொள்வதில்லை; ஆனால், “இவன், இவைகளை எனக்கு காட்டி விட்டு சாப்பிடுகிறானே… அது போதும்…’ என்கிறார் பகவான்.
ஒரு வக்கீலிடம், “சார்… என் வழக்கை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்… நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை…’ என்றார் கட்சிக்காரர். அதற்கு, “இதென்ன பிரமாதம்… பணம் என்று ஒன்று இருக்கும் போது, எப்படி நன்றி சொல்வது என்று என்ன கேள்வி?’ என்று பதில் சொன்னார் வக்கீல். அதாவது, பணத்தை கொடுத்து விட்டால், நன்றி சொன்னதாக அர்த்தம் என்பது வக்கீலின் எண்ணம்.
பகவான் பணத்தை கேட்கவில்லை; மனதை தான் கேட்கிறார். “உன் மனம் எப்போதும் என் பக்கம் திரும்பி இருக்கட்டும்…’ என்கிறார். “முடியாவிட்டால், ஒரு நாளில், ஒரு வேளையாவது, ஒரு நிமிடமாவது என்னை நினைத்து வழிபடு; நான், உன்னை ரட்சிக்கிறேன்!’ என்கிறார்; ஆனால், நமக்குதான் அந்த ஒரு நிமிடம் கிடைப்பதில்லை.
எத்தனையோ காரியங்களை காலை முதல் இரவு வரை செய்கிறோம். ஐந்து நிமிடம் பகவானை நினைக்கவோ, ஜெபம் செய்யவோ முடிவதில்லை; காரணம், மனம் அதில் ஈடுபடவில்லை. மணிக்கணக்காக, “டிவி’ பார்க்க முடிகிறது; அதற்கு நேரம் இருக்கிறது; ஆனால், பகவான் புகழ்பாட நேரமில்லை; மனமும் இல்லை. இப்படியே போனால், பகவான் அருள் எப்படி கிடைக்கும்; அவனுக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்? மனம், அதில் ஈடுபட வேண்டும்.