யுவராஜின் வெற்றி `ரகசியம்’!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ்சிங்கின் வெற்றிநடை ரகசியம், அவர் புதிதாக அணிந்திருக்கும் `ஓம்’ பொறித்த தங்கச் சங்கிலிதான் என்று ஒரு பேச்சு உலவுகிறது.

அணியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே அவதிப்பட்ட யுவராஜின் ஆட்டம், உலகக் கோப்பையில் அசத்தல். அதற்குக் காரணம் `ஓம்’ சங்கிலியே என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அதே மாதிரி தாங்களும் செய்து அணிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

“யுவராஜ் மாதிரி `ஓம்’ சங்கிலி வேண்டும் என்று கேட்டு எனக்கு நிறைய `ஆர்டர்கள்’ வருகின்றன” என்கிறார், டெல்லியைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான அபேக்ஷா ஜெயின்.

இன்னொரு நகை வியாபாரி கூறுகையில், “யுவராஜ் சங்கிலி’ வேண்டும் என்று கேட்டு பல வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். `ஓம்’ என்பது அமைதியையும், இந்தியத்தன்மையையும் அளிப்பதால் யுவராஜ் அதை அணிகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார்.

“யுவராஜ் `ஓம்’ சங்கிலியை அணிந்திருப்பதைப் பார்த்ததுமே எனது நண்பர்கள் மூன்று பேர் அவ்வாறு அணியத் தொடங்கிவிட்டனர்” என்கிறார், நிதின் என்ற 21 வயது இளைஞர்.

தங்கத்தில் வைரங்கள் பொதித்த இந்தத் தொங்கும் அணியை வாங்க வேண்டும் என்றால் ரூ. 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை ஆகும். ஆனால் வெள்ளிச் சங்கிலியில் `அமெரிக்கன் டயமண்ட்’ பதித்த விலை குறைவானவற்றை பல நகைக்கடைக்காரர்கள் விற்று வருகிறார்கள்.

“யுவராஜுக்கு இந்தச் சங்கிலியைப் பரிசாக அளித்தவர் மும்பையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் பினா கோயங்கா. மதநம்பிக்கை மிக்க, கோவிலுக்குத் தவறாமல் செல்லும் யுவராஜுக்கு இது பொருத்தமான பரிசுதான்” என்று கூடுதல் தகவலைத் தருகிறார் யுவராஜின் மேலாளர் கேதர் காவ்டே.

இளந்தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கும் யுவராஜைப் பார்த்து மேலும் பலர் ஆன்மிக நாட்டம் கொள்வார்கள் என்பது சிலரின் நம்பிக்கை.

%d bloggers like this: