Daily Archives: ஏப்ரல் 4th, 2011

ஆரோக்கிய சுற்றுலா – நெஞ்சம் மகிழும் மேகமலை!

மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு.

தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் படுபிரசித்தம். மலை அடிவாரம் வரை கருங்கூந்தல்போல் விரிந்து நீண்டு கிடக்கும் சாலை, போகப் போக 20 அடியாகக் குறைந்து போகிறது. அதனால் பஸ்கள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. போகிற வழியெங்கும் இயற்கை தன்னை கொஞ்சமாக பிய்த்துப் போட்டிருக்கிறதோ என்கிற உணர்வு ஏற்படுவது நிச்சயம். காரணம்… அடர்த்தியான மரங்கள். முகம் காட்ட மறுக்கும் குயில் போல மரங்களுக்கு இடையே அமர்ந்து கிறீச்… கிறீச்… என சத்தமிடும் பறவைக் கூட்டம். நம்மை வரவேற்கிறது.
சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறது குரங்குகள் கூட்டம். மெதுவாய் போகலாமே என சாலையில் நடந்து சென்றால் போச்சு. கையிலிருக்கும் பொருட்களைப் பிடுங்கும் குரங்குகளின் அன்புத் தொல்லை நிச்சயம். சாலை இருபது அடியாக இருப்பதால், எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டால் மட்டுமே மலை ஏற முடியும். முழுவதும் பனிமூட்டம். சூரிய வெளிச்சம் உள்ளே வராது. அதனால் மலையில் லேசான இருட்டு. ஆங்காங்கே சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் குறைவுதான்.
மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் பஸ்சை நம்பி இருப்பதில்லை. மாறாக ஆண்களும், பெண்களும் குறுக்கு வழியில் மலையில் ஏறுகிறார்கள். எட்டு மணி நேர வேலைக்காக பதினாறு மணி நேரம் அவர்கள் மேலும் கீழுமாய் நடப்பது ஆச்சரியம்!
அதிகாலையில் மலை ஏறுபவர்கள் வேலை முடிந்து மாலை நான்கு மணிக்கு கீழே இறங்குகிறார்கள். வீடு வந்து சேரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடுமாம்.
ஆமார் மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் வருகிறது மேகமலை. வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். குளிர் தாங்கிக் கொள்ளலாம்.
“மேகமலையில் அவசரத்துக்கு டீ குடிக்க வேண்டும் என்றால் கூட வழியில்லை. ஒன்றிரண்டு “ரிசார்ட்டுகள்’ மட்டுமே உண்டு. மதிய உணவு அங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விலை சற்று அதிகம். குடும்பத்தோடு செல்பவர்கள் கையோடு உணவு கொண்டு செல்வது நல்லது!’ என்கிறார் அங்கே ஒரு “புராஜக்ட்’டுக்காக வந்திருக்கும் தர்மசந்துரு என்பவர்.
வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள். எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது உண்டாம். தண்ணீர் அத்தனை குளிர்ச்சி. வாவ்…!
இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். அங்கே திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு. அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வருகிறது கம்பன் பள்ளத்தாக்கு. இடையிடையே மலைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியில் ஒரு சில பயணிகள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சபரிமலை சீஸனின்போது அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அப்போதெல்லாம் அங்குள்ள காட்டு விலங்குகள் இடம் பெயர்ந்து பெரியார் அணைக்கட்டு, மேகமலைப் பகுதிகளுக்கு வந்துவிடுமாம். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த விலங்குகள் மனிதர்கள் யாரையும் இன்றுவரை தாக்கியது இல்லை என்பதுதான்.
காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அமோகம். முடிந்தவரை வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் சென்றால், இடங்களின் சிறப்பு பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.

எப்படிப் போகவேண்டும்?
பஸ்ஸில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பஸ் வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.

தங்கும் வசதி!
சிறிய, பெரிய “ரிசார்ட்டுகள்’ உண்டு. தங்குவதற்கு சில ஆயிரம் செலவாகும். இருந்தாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.

நெருக்கடியான நிலைமைதான்!-தேர்தல் களம்

கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், “ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?’ என்று கேட்கலாம். பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.””தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது” என்று கூறிவிட்டு, “”தேர்தல் ஆணையத்திடம் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை” என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம். அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார். “”நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் “என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல’ எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று பேசுகிறார்.மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான்.நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை. அது யாருக்கு என்பதுதான் கேள்வி…!

நன்றி-தினமணி

உப்பு… சில சிறப்புத் தகவல்கள்!


முற்காலத்தில், உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த `ஒஸ்டியா’ என்ற பகுதியில் இருந்து ரோமுக்கு உப்புக் கொண்டுவர ஒரு பெரிய சாலையையே ரோமானியர்கள் அமைத்திருந்தனர். அந்தச் சாலைக்கு `வயசாலரியா’ என்று பெயர். மேலும், முன்பு ரோமானியப் படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனர். அந்தப் பணத்துக்கு `சாலரியம் அர்ஜெண்டம்’ என்று பெயர். அது மருவித்தான் `சாலரி’ (சம்பளம்) ஆயிற்று.

நட்புக்கு உப்பை அடையாளமாகக் கொண்டிருந்தனர் அரேபியர்கள். உப்பே கிடைக்காத நாடுகளில் உப்பு வைத்திருப்பவர்கள் பணக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரேலில் உப்பு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நம் நாட்டிலும் நவக்கிரகங்களில் ஒன்றுக்கு உப்பு நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.

சீனர்களும், இந்தியர்களும், எகிப்தியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே உப்பைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். டிராய் நகரில் கி.மு. 13-ம் நூற்றாண்டில் மீன்களை உப்புப் போட்டுக் காயப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.

உப்பு, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று. உணவு செரிக்க, நரம்புகளின் செயல்திறனை அதிகரித்து உமிழ்நíர் சுரக்க உப்பு உதவி செய்கிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உப்பு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது அவசியமாகிறது.

நமது உடலை `உப்புக் கடல்’ என்று சொல்வது பொருத்தமாகவே இருக்கும். நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும், ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது. கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவற்றிலும் உடலுக்குப் போக மீதியாகும் உப்பு கலந்து வெளியேறுகிறது. உடலில் உள்ள நீரோட்டத்தையும், ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துவது இதுதான்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல உடலில் உப்பு அதிகமானால் வியாதி வரும். அதேபோல் உப்பின் அளவு குறைந்தாலும் நோய் தோன்றும்.

மார்பில் இதய வடிவிலான பென்குயின்!

இப்போது பெரும்பாலான இளைஞர்களும், இளைஞிகளும் அணியும், “டீ-சர்ட்’டில் இதய வடிவிலான ஓவியம் இருப்பதை காணலாம். காதலை வெளிப்படுத்தும் இந்த இதயத்தோடு, பென்குயின் ஒன்று நடமாடி வருகிறது.
கடும் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் அந்த பென்குயின் உடலில், இயற்கையிலேயே இவ்வாறு இதயம் போன்று வடிவம் தோன்றியுள்ளது. பல லட்சம் பென்குயின்களில் இதுபோல் ஏதாவது ஒன்றிற்குத்தான் இப்படி இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பல விருதுகளைப் பெற்ற பிரபல போட்டோகிராபரும், சினிமா தயாரிப்பாளருமான சூ பூட் என்ற பெண், இந்த பென்குயினை படம் எடுத்துள்ளார். இவர் பல முறை வட, தென் துருவ பகுதிகளுக்குச் சென்று, படம் எடுத்துள்ளார். “கடந்த, 20 ஆண்டுகளில் பல முறை பென்குயின்களை படம் எடுத்துள்ளேன், ஆனால், இதுபோன்ற ஒரு அபூர்வ காட்சியை இதுவரை பார்த்ததில்லை…’ என்கிறார் இவர்.

கோடை குளியல்!

கோடை வெயிலால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க தினமும் காலை, மாலை என இரண்டு வேளை குளிப்பது நல்லது. உடல் சூடு குறைந்தால், கோடையில் வரும் சின்னசின்ன நோய்கள் நம்மை தாக்காது.

* தினமும் குளிப்பதற்கு முன்பு, தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து, நன்றாக ஊறவிட்டு, அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும்.

* கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய் விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்து விடும். அதை போக்க, இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் சருமம் மென்மையாகி விடும்.

பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி

பவானிக்கு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி கொஞ்சம் வித்தியாசமானது.

தேவையானவை:

எலும்புடன் கூடிய சிக்கன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் – 100 கிராம்
மிளகாய் வற்றல் – மூன்று
மிளகாய் பொடி – 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது – 10 கிராம்
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
தேங்காய் சில் – ஒன்று
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு – 10 கிராம்
சீரகம் – கால் ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
பட்டை – ஒன்று
கிராம்பு – மூன்று

செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.

சமையல் நேரம்: 25 நிமிடம்.

அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிகழ்ச்சியில், பணம் பட்டுவாடா நடக்கிறதா என விசாரிக்க சென்ற தேர்தல் அதிகாரி காளிமுத்துவை தி.மு.க.,வினர் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று மாலை 4 மணிக்கு, வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு மு.க.அழகிரி வந்தார். கோயில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை
நடந்தது. இந்நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்து மற்றும் அலுவலர்கள், வீடியோ கிராபருடன் அங்கு வந்தனர். அப்போது, கோயிலில் தீபாராதனை செய்தபோது தட்டில் அழகிரி 100 ரூபாய் போட்டதை வீடியோவில் பதிவு செய்தனர். இதை கவனித்த அவர், “யாருய்யா வீடியோ எடுக்கிறது?’ என கேட்க, அருகில் இருந்த மதுரை துணை மேயர் மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர், “கேமராவை கொடுத்துட்டு வெளியே போங்கய்யா’ என்றனர்.பயந்துபோன வீடியோகிராபர், கேமராவை தேர்தல் அதிகாரி காளிமுத்துவிடம் கொடுத்தார். பின், அதிகாரிகள் கிளம்பும்போது, காளிமுத்துவின் தலையை மூவரும் தாக்கினர். காளிமுத்துவை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் ஜீப்பில் தப்பினர்.

இது தொடர்பாக காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி, திருஞானம் உட்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (ஐந்து பேருக்கு மேல் கூடுதல்), 341 (வழிமறித்து தடுத்தல்), 332 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அடித்தல்), 188 (அரசு உத்தரவு, விதி மற்றும் தடையை மீறுதல்) பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார். தாக்குதலை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாக்கியவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யவேண்டும், என கோஷமிட்டனர்.
மாநில துணைத்தலைவர் ஞானகுணாளன் கூறியதாவது: தேர்தல் கமிஷன் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை நாங்கள் பின்பற்றி, விதிமீறலை கண்காணிக்கிறோம். வெள்ளலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதை வீடியோ படம் எடுக்க தாசில்தார் சென்றார். அவரை தாக்கியுள்ளனர். எனவே, நாங்கள் தேர்தல் பணியை புறக்கணிக்கலாமா? என ஆலோசனை நடத்துகிறோம். கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

தேர்தல் நாள் நெருங்குவதால் கட்சிகள் கலக்கம்: ஆதரவு அலையாக ஆர்ப்பரிக்காத சூழ்நிலை

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டும் உள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளன. தங்களது அணிக்கு பெரும்பான்மை கிடைத்து, ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கலக்கத்தில் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

வரும் 13ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. 11ம் தேதி மாலை, தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., – விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியிலும், அ.தி.மு.க., தலைமையில் தே.மு.தி.க., – இரு கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் மற்றொரு அணியிலும் போட்டியிடுகின்றன.

முதல்வர் கருணாநிதி, முதல் கட்டமாக கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம் செய்து முடித்துள்ளார். இன்று வடசென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை (5ம் தேதி) சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.இரண்டாம் கட்டமாக தென்சென்னை, மதுரை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தி.மு.க.,வுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 26ம் தேதி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கினார். கடந்த 1ம் தேதி சென்னையில் அதிவிரைவு பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மதுரையிலும், நாளை முதுகுளத்தூர், பரமக்குடி, காரைக்குடி, மதுரை, கோவை பகுதியில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிரசார மேடையில் ஏறி, இறங்குகின்றனர்.

இரு அணியிலும் தலைவர்கள் பிரசாரம் சூடுபிடித்திருந்தாலும் எந்த அணிக்கும் வாக்காளர்களின் ஆதரவு அலை வீசவில்லை. இலவச திட்டங்களை தி.மு.க.,வை போல அ.தி.மு.க.,வும் அறிவித்திருப்பதால் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் பொதுமக்கள் சரிசமமாக கருதுகின்றனர்.

தேர்தல் பணியில் இரு அணிகளின் தொண்டர்களும் களத்தில் காணப்படுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இருப்பதால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலை நீடிக்கிறது. தவிரவும், பா.ஜ., – இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில் இருப்பதால், எந்த அணிக்கு இது வாய்ப்பைக் குறைக்கும் அல்லது சாதகமாக்கும் என்ற குழப்பமும் இருக்கிறது.

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், இலவச “டிவி’, காஸ், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை ஆளுங்கட்சிக்கு ஆதரவை பெற்றிருந்தாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த பிரச்னைகள் எல்லாம் அ.தி.மு.க., அணிக்கு ஆதரவாக மாறுமா? என்பதிலும் தெளிவு இல்லை.மேலும், தொகுதி சீரமைப்பு, அந்தந்த பகுதியின் வளர்ச்சி நிலைமை, வேட்பாளரது பின்புலம் போன்றவற்றை வைத்து ஓட்டுப் போடும் நிலை இருப்பதாக, பலரும் கருதுகின்றனர்.

மேலும், தேர்தல் கமிஷன் கெடுபிடி செய்வதாக ஆளும் தி.மு.க., கூட்டணி வெளிப்படையாக குறைகூறுவது, இத் தேர்தலில் வித்தியாசமான அம்சமாகும். “நியாயமற்ற செயலில் ஈடுபடுவதாக’ முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார். எதிரணியில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்யப்போவதில்லை என்பதும் வெளிப்படையாகியிருக்கிறது.

தமிழகத்தில் வெயில் அதிகரித்த நிலையில், அடுத்த ஒருவார காலத்தில் முக்கியமான கட்சிகள் எடுக்கும் உத்திகள் தான் வாக்காளர் மனதில் அதிகமாக ஈர்ப்பை ஏற்படுத்தும். அதுவரை ஆதரவு அலை என்பது எக்கட்சியும் இருப்பதாகக் கூற இயலாத சூழ்நிலை தான், இத் தேர்தலில் தற்போது ஏற்பட்டிருக்கும் புதுமையான நிலவரம் ஆகும்.

வெஸ்டல் வழங்கும் இ-ரீடர் சாதனங்கள்

சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை யும், டேப்ளட் பிசிக்களையும் வெளியிட்டுள்ளது.
நூல்களைப் படிப்பதில் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வருகிறது. அச்சில் மட்டுமின்றி, நூல்கள் இப்போது டிஜிட்டலாகவும் இணைய வலைகளில் வெளியாகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றை டவுண்லோட் செய்து இ-ரீடர் என்னும் சாதனத்தில் பதித்துப் படிக்கலாம். பல நூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. கைக்கு அடக்கமாக இயங்கும் இந்த சாதனத்தில் பல்லாயிரக் கணக்கான நூல்களைப் பதித்து வைத்து, எங்கும் எளிதாக எடுத்துச் சென்று, தேவைப்படும்போது படிக்கலாம். இதனால் ஒரு நூலகமே நம் கைகளுக்குள் அடங்கிவிடுகிறது. இந்த நூலகத்தில் நம் விருப்பப்படி நூல்களைப் புதிதாகச் சேர்க்கலாம். படித்தவற்றை நீக்கி, இன்னொரு இடத்தில் பத்திரப்படுத்தலாம்.
அச்சில் நூல்களைப் படிக்கையில், அதன் பக்கங்களில், உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எழுதி வைக்கிறீர்களா! அப்படியானல் இதில் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு, இதிலும் பக்கங்களில் கருத்துக்களை, மிக எளிமையாகவும், வேகமாகவும் எழுத வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இந்த சாதனங்கள் அனைத்தும் 6 மற்றும் 9 அங்குல திரைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. கிரே கலரிலும், பல வண்ணங்கள் கொண்ட டிஸ்பிளே திரைகளுடனும் உள்ளன. வழக்கமான திரை, தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, 3ஜி மற்றும் வை-பி தொழில் நுட்பம் எனத் தேவைக்கேற்ற வகையிலும், வாங்குபவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நிலையிலும் இவை வடிவமைக்கப்பட்டு விற்பனை யாகின்றன. சில மாடல்கள் எம்பி3 ஆடியோ பைல்களையும் இயக்கு கின்றன. குறைந்த பட்சம் 2 ஜிபி மெமரி தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள வசதியும் உண்டு. இந்த சாதனங்களின் தொடக்க விலை ரூ.8,999.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இ-டைரியில் பேப்பர் நோட்புக், டிஜிட்டல் பேனா மற்றும் பிளாஷ் மெமரி கொண்ட ஒரு சிறிய சாதனம் உள்ளது. தாளில் எழுதப்படும் குறிப்புகள் மெமரியில் வாங்கப்பட்டு, அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றப் படுகின்றன. பின்னர் இவற்றை அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட்டாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த சாதனங்கள் அனைத்தும், சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ஆய்வு மையத்தில், இந்திய வாடிக்கை யாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன. குறிப்பாக,நூல்கள் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், அலுவலகங் களில் பணிபுரிபவர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் தேவை களையும் இந்த சாதனங்கள் நிறைவேற்று கின்றன. இந்த மையமே, இச்சாதனங் களை இயக்குவதற்கான உதவி மற்றும் விற்பனைக்குப் பின் பராமரிப்பினையும் தருகிறது.
பதினெட்டு இந்திய மொழிகளை இவை சப்போர்ட் செய்கின்றன என்றும் இவற்றின் மெனுக்களும் அந்த அந்த மொழிகளில் தரப்பட்டுள்ளன என்றும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த வகை சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் படிப்போரிடையேயும், கற்போரிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. முதல் முதலாக இந்தியச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை வடிவமைக் கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒருமுறை இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு 50,000 இ-ரீடர் சாதனங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொபைல் போனுக்கு அடுத்தபடியாக, இ-ரீடர் சாதனங்கள் மக்களிடையே பரவும் வாய்ப்பு உள்ளது என கணேஷ் நாராயணன் கூறுகிறார்.
இந்த சாதனங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிய http://www.leafreader.com/main.php?page=lreaders என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.சென்னையில் இந்நிறுவனத்தை 24342833 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்…

விரல் நகங்களை மிக நீளமாக வளர்த்து வைத்திருப்பது நல்லதல்ல. நகங்களுக்கு கீழுள்ள இடத்தில் அழுக்கும், நோயை உண்டாக்கும் கிருமிகளும் தங்கியிருக்கும். நாம் சாப்பிடும் போது, நகத்திலிருந்து சாப்பாட்டுடன் சேர்ந்து இவைகளும் வாய்க்குள் போய் விடும். அதே போல, நகத்தைக் கடிப்பதும் நல்ல பழக்கமல்ல. சிலருக்கு நகத்தைக் கடிப்பது, நிறுத்த முடியாத ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது. இது தவறு.

நகத்தை வளர வளர வெட்டிக்கொண்டே இருந்தால், நகத்துக்கடியில் கிருமி சேர வாய்ப்பே இல்லை. தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் நகம், நாம் உயிரோடிருக்கும் வரை வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அதை தடுக்க முடியாது. நாம் தான் அதை ஒழுங்காக, வளர, வளர, வெட்டி விட்டுக் கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் வயல்களில் வேலை செய்பவர்களின் விரல் நகங்களில், வேலை பார்க்கும் போது மண், அழுக்கு முதலியவை உள்ளே போய் சேர்ந்து, கறுப்பாக, பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இவர்களெல்லாம் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந் திருக்கும் போது, நகத்துக்கடியில் இருக்கும் அழுக்கை, தென்னங்குச்சியை வைத்து நோண்டி சுத்தம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். வேலை பார்க்கும் போது நகத்துக்கடி யில் மண், அழுக்கு முதலியவை சேருவது மிகவும் சகஜம். இதை தவிர்க்க முடியாது. ஆனால் இவர்கள் முதலிலேயே விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருந்தால், வேலை பார்க்கும் போது மண்ணோ, அழுக்கோ சேர வாய்ப்பில்லை அல்லவா!

கால் விரல்களிலும் நகங்களை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கால் நகங்கள் வாய்க்கு வரவேண்டிய வேலை இல்லை. அதனால் விட்டு விடலாம், எனவே கைவிரல் நகங்களைப் பற்றித் தான் அதிகமாக கவலைப்பட வேண்டும். இடது கை விரலில் நகங்கள் வளர்ப்பது இன்னும் மோசம். காலைக் கடன்களுக்கு இடது கைதான் அதிக மாக உபயோகப்படுகிறது. எனவே இடது கை விரல் நகங்கள் மிக மிக சுத்தமாக எப்பொழுதும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கை, கால் விரல் நகங்களை உரசி விட்டு, ஒழுங்காக, அழகாக, வெட்டி விட்டு சுத்தம் செய்து, நெயில் பாலிஷ் போட்டுவிட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி செய்ய அழகு நிலைங்கள் தற்போது நிறைய இருக்கின்றன. கை விரல் நகங்களுக்கு ரூ.150 லிருந்து ரூ.300 வரையிலும், கால் விரல் நகங்களுக்கு ரூ.250 லிருந்து ரூ.600 வரை யும் வாங்குகிறார்கள். இப்படியிருக்கும் போது, நகத்தை வளர்க்கக் கூடாது. வெட்ட வேண்டும் என்று சொன்னால் நகம் வளர்ப்பவர்களுக்கு கோபம் தான் வரும். என்ன செய்வது! நல்ல விஷயத்தை சொல்லித்தானே தீர வேண்டும். விரல் நகங்கள் நூறு சதவிகிதம் சுத்தமாக இருக்காது என்பதனால் தான், தற்பொழுது வெளிநாடுகளில் உணவு தயாரிக்கும் இடத்திலும், உணவு பரிமாறும் இடத்திலும் ரோபோக்களை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதேபோல் அழுக்கான நகம், செத்துப் போன நகம், காய்ந்து போன நகம், நோயினால் பாதிக்கப்பட்ட நகம்- இம்மாதிரி பார்ப்பதற்கு நன்றாக இல்லாத நகம் உடையவர்களுக்காகவே, தற்பொழுது `செயற்கை நகம்’ வந்து விட்டது. இயற்கை நகத்துக்கு மேலே, இந்த செயற்கை நகத்தை `க்ளிப்’ போல மாட்டிக் கொள்கிறார்கள்.

நகங்களை ஒழுங்காகவும், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண் டும். நகங்களுக்குக் கீழே அழுக்கு சேர விடக்கூடாது. கொஞ்சம் நகம் வளர்ந்தாலே, உடனே வெட்டி விட வேண்டும். நகங்களை வெட்டுவதற்கு `நக வெட்டிகள்’ பலவித மான மாடல்களில் கிடைக்கின்றன. நகத்தை வெட்டுகிறேன் என்று சொல்லி விட்டு, சிலர் நகத்தோடு சேர்த்து சதையையும் வெட்டிக்கொள்வார்கள். அந்த இடம் வீங்கி, சிவந்து, புண்ணாகி ஆறுவதற்கு ஒரு வாரம் ஆகும். அதிலும் சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு சில நேரத்தில் விரலையே எடுக்கும்படி ஆகி விடும். ஆகவே கவனமாக வெட்டுங்கள். வெட்டுவதற்கு முன்பும், பின்பும், வெந்நீரில் கைகளையும், நகவெட்டியையும் நன்கு கழுவிவிட்டு, அதற்குப் பின் வெட்டுங்கள்.

`நகச்சுத்து’ என்று சொல்வார்களே, அதுவும் இந்த மாதிரி காரணங்களினால் ஏற்படுவது தான். ஒருவர் உபயோகிக்கும் நகவெட்டியை, இன்னொருவர் உபயோகித்தால் கூட, ஒருவருடைய நகத்திலிருக்கும் `பங்கஸ் நோய்’ அடுத்தவருக்கு மிகச் சுலபமாக வர வாய்ப்புண்டு. வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியாக நக வெட்டியை வைத்துக் கொள்ள முடியாது. எனவே நகவெட்டியை உபயோகப்படுத்துவதற்கு முன்பு, வெந்நீரில் போட்டு, எடுத்து அதற்குப் பின் உபயோகியுங்கள். அதே மாதிரி நகங்களை வெட்டு வதற்கு முன் கை, கால்களை `டெட்டால்’ போன்ற கிருமி நாசினியை வெந்நீரில் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும்.

நகம் வெட்டுவதற்காக அழகு நிலையங்களுக்கெல்லாம் போக வேண்டிய தேவை யில்லை. வீட்டிலேயே பொறுமையாக அழகாக வெட்டிக் கொள்ளலாம். நன்கு நீளமாக வளர்ந்த பிறகு வெட்டலாம் என்று நினைப்பதை விட, ஞாயிற்றுக்கிழமைகளில், வாரத் திற்கொரு முறை எவ்வளவு அதிகமாக வளர்ந்திருக்கிறதோ, அவ்வளவு நகத்தையும் வெட்டி விடுங்கள். வலது கையால், இடது கைவிரல் நகங்களை வெட்டுவது சுலபம். அதே நேரத்தில் இடது கையால், வலது கை விரல் நகங்களை வெட்டுவது சற்று கடினம். பார்த்து செய்யுங்கள்.

நகங்களை வெட்டிய பின், வெட்டிய பாகங்களை நன்றாக தேய்த்து பாலீஷ் செய்து விடுங்கள். அடுத்தவர்களை விட்டு நகங்களை வெட்டச் சொல்லாதீர்கள். அவர்கள் நகத்தோடு, சதையையும் சேர்த்து வெட்டிவிட வாய்ப்புண்டு.

சிறிய குழந்தைகளுக்கு நகத்தை வெட்டிவிடும்போது, மிகவும் ஜாக்கிரதையாக செய்யுங்கள். கைகளை அடிக்கடி கழுவும் பழக்கமுள்ளவர்கள், அதிக ஸ்ட்ராங் இல்லாத லோஷன் அல்லது சோப்பில் கழுவ வேண்டும். அதிக நேரம் துணியுடனும், சோப்புடனும், பாத்திரத்துடனும் இருப்பவர்கள், கையில், கையுறை போட்டுக் கொள்ள வேண்டும். அதே மாதிரி சமையல்காரர்கள், பெயிண்ட் அடிப்பவர்கள் கையுறை போட்டுக் கொள்வது நல்லது. நெயில் பாலிஷ் போடுவது நல்லது என்று சிலர் சொல் வதுண்டு. நகங்கள் உடைவதற்கு நெயில் பாலிஷ்தான் காரணம். இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே, நகங்களுக்கு பாலிஷ் போடும் பழக்கம் இருந்ததாக கூறுவதுண்டு. நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிப்பதும் நல்லதல்ல.

இதைப் படிப்பவர்களில் சிலருக்கு, கையால் சாப்பிடுவதை விட்டு விட்டு, ஸ்பூனில் சாப்பிடலாமே என்று தோன்றும். கையில் சாப்பிடும் திருப்தி, ஸ்பூனில் கிடைக்குமா!

சற்று நீள நகங்கள், தொழில் ரீதியாக சிலருக்கு உபயோகப்படத்தான் செய்கிறது. இருப்பினும் அந்த நகங்களுக்கு உள்ளே, அழுக்கும், கிருமியும் வேண்டாதவைகளும் சேர வாய்ப்பு அதிகம் என்பதால், நகம் வளர்ப்பதை விட, வளர்க்காமல் இருப்பதே நல்லது.

சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் நன்றாக கைகளை கழுவுங்கள். சோப்பை உபயோகித்து, அடிக்கடி விரல்களையும், நகங்களையும் கழுவுங்கள். பச்சைக்காய்கறி கள், பழங்கள், கேரட், பால், மீன் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நகங்கள் ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய அனைத்தும் நல்லவையே.

கின்னஸ் சாதனைக்காக சிலர் நகங்களை வளர்க்கிறார்கள். இது சாதனைக்கு மட்டும்தான் உபயோகப்படுமே தவிர, வேறு எதற்கும் உபயோகப்படாது. ஹோட்டல்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கையுறை எதுவும் போடாமல்தான் மாவைப் பிசைகிறார்கள். காய்கறிகளை வெட்டுகிறார்கள். இன்னும் சமையலறையில் நிறைய வேலைகளில், கரண்டிக்குப் பதிலாக, கைகள்தான் உபயோகத்தில் இருக்கின்றன. அவர்கள் இவ்வாறு வெறும் கைகளை சமையலுக்கு உபயோகிக்கும் போது, அந்த கைவிரல் நகங்களுக்கு உள்ளேயிருக்கும் அழுக்கும், கிருமியும், அந்த சமையலிலும் போய்ச் சேருமல்லவா! இது நல்லதா! எங்கெல்லாம் வெறும் கையில் உணவு தயாரிப் பதை நீங்கள் பார்க்கிறீர்களோ, அங்கெல்லாம், நீங்களே உடனடியாக அவர்களை `கையுறை’ போட்டு வேலை பார்க்கச் சொல்லுங்கள். நகம் வளர்ந்திருந்தால் உடனே வெட்டச் சொல்லுங்கள். அடுத்தவர்களை சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் விரல் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். வீட்டில் உள்ளவர்களையும் வாரா வாரம் நகத்தை வெட்டச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதிகமாக வளர்க்கப்படும் விரல் நகங்கள், நோய்க்கிருமிகளை சுமந்து கொண்டிருக்கும் ஒரு வேண்டாத பொருள் தானே தவிர, அழகுப் பொருள் அல்ல.