Daily Archives: ஏப்ரல் 5th, 2011

விக்கிலிக்ஸ் அம்பலங்கள்

விக்கிலிக்ஸ் அம்பலங்கள் இந்தியாவின் மரியாதையைக் குறைப்பவர்களை அடையாளம் காட்டுகிறது. காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் அருவருப்பான பக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2008ல் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எம்.பி.க்களுக்கு பல கோடி ரூபாய்கள் கைமாறியதை, அமெரிக்க தூதரக அதிகாரிகள், தம் வாஷிங்டன் மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கின்றனர். அந்தத் தகவல், விக்கிலீக்ஸின் மூலம் வெளியே வந்துவிட, மக்களவையில் அமளி. பிரதமர் எல்லாக் குற்றச்சாட்டையும் நிராகரித்துவிட்டார். வாக்குக்குப் பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை வாக்குக்குப் பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை புலனாய்வு செய்த குழு, அப்படி ஒரு தவறு நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை கொடுத்துவிட்டது; நாட்டு மக்களும் அந்தக் குற்றச்சாட்டைப் புறம் தள்ளி, காங்கிரஸையே மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைத்துவிட்டனர்; எனவே, விக்கிலீக்ஸின் ஆவணங்களை ஏற்க முடியாது என்கிறார் பிரதமர். அடுத்த தினமே, பா.ஜ.க.வின் முகத்திரையும் கிழிந்தது. அரசியல் ஆதாயத்துக்காக பொது மேடைகளில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம். ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்த கருத்து, விக்கிலிக்ஸின் மூலம் வெளிவந்துவிட்டது. காங்கிரஸும் பா.ஜ.க.வும் இக்குற்றச்சாட்டுகளைச் சந்திக்கத் திராணியில்லாமல், நழுவிப் போவதற்கான காரணங்களையே அடுக்கிக்கொண்டு இருக்கின்றன. விக்கிலீக்ஸ் ஆவணங்களுக்கு சாட்சி உண்டா, சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்விகள் வெற்று விதண்டாவாதங்கள். இக்கடிதங்கள், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், வாஷிங்டன் வெளியுறவுத் துறைக்கு எழுதிய ரகசிய குறிப்புகள். இதில், பொய் எழுதவேண்டிய அவசியம் இல்லை. பொய்யை எழுதினால், அது அமெரிக்காவில் தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படும் என்பதால், தூதரக அதிகாரிகள் தாம் அறிந்த தகவல்களை, விவரங்களை மட்டுமே தொகுத்து எழுதுவர். மக்கள் வோட்டுப் போட்டு, மீண்டும் ஐக்கிய முன்னணியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதற்கு அர்த்தம், அவர்கள் குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டார்கள் என்பதில்லை. மெஜாரிட்டி, குற்றச்சாட்டைக் கழுவும் புனித தீர்த்தமல்ல! அன்று வோட்டுப் போட்ட பலர் இன்று வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். மக்கள்முன் ஒரு முகமும், திரைக்குப் பின் வோறொரு முகமும் காட்டுகின்றன இக்கட்சிகள். சுயலாப நோக்கங்கள், குறுகிய அரசியல் பார்வை, நாட்டைக் குறித்த அக்கறையின்மை ஆகியவை, இத்தகைய இரட்டை நிலைக்குக் காரணங்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, தக்கவைத்துக்கொள்ள எத்தகைய இழிவுக்கும் ஆயத்தமாக இருக்கின்றன இக்கட்சிகள். மக்கள் மனத்தில் ஏற்கெனவே மதிப்பிழந்து போன இக்கட்சிகளும் தலைவர்களும், விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளியானதால், மேலும் அசிங்கப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் புனலில் குளித்தெழுந்து இனியேனும் நேர்மை அரசியலை வழங்க கட்சிகளும் தலைவர்களும் முன்வரட்டும்.

மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்

“குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அப்படியா, என்ன பிரச்னைகள் வருகின்றன?’
“அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா பழக முடியல.’
சொன்னவனின் சிக்கல் குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
ஆண்ட்ரூ கார்னகி என்று அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரர். அமெரிக்காவின் முதல் பணக்காரர்களில் அவரும் ஒருவர். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி தொழில் துவங்கி, பெரும் பணக்காரர் ஆனவர்.
ஒருமுறை அவரிடம் இன்னொரு தொழிலதிபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
“எப்படி உங்களால் இவ்வளவு முன்னேற முடிந்தது. நானும் உங்களை மாதிரிதான் தொழில் துவங்கினேன். ஆனால் என்னால் வளர முடியவில்லையே?’ என்று கேள்வியைக் கேட்டார்.
“என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய ஊழியர்கள். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த அளவு உயர்ந்திருக்க முடியாது’ என்ற கார்னகி பதிலளித்தார்.
“உங்களுக்கு மட்டும் எப்படி நல்ல ஊழியர்கள் கிடைத்தார்கள். எங்கள் நிறுவனத்துக்கு அப்படிப்பட்ட ஆட்கள் கிடைக்கவில்லையே. நானும் எத்தனையோ பேரை முயற்சி செய்து பார்த்துவிட்டேன்!’
அதற்கு கார்னகி அந்த தொழிலதிபருக்கு ஒரு உதாரணத்தைச் சொன்னார்.
“தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கிறவர்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்களுடைய ஒரே இலக்கு தங்கத்தை சேகரிப்பதாகத்தான் இருக்கும். அப்படி தங்கத்தை எடுக்கும் போது வரும் மாசுக்களை பொருட்படுத்துவது கிடையாது. மாசுக்கள் நீக்கினால் தங்கம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் நான் மனிதர்களிடத்தில் இருக்கும் நல்ல திறமைகளை மட்டுமே பார்க்கிறேன். அவற்றை மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன். மாசுக்களை பொருட்படுத்துவதில்லை.’
கார்னகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னிடம் உள்ள குறை புரிந்தது. அப்போது குரு, அவனுக்கு சொன்ன WINமொழி:
மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்.

கொலைகார மீன்!

உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை.

பார்ப்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை, அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.

வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் வெண்ணையைக் கத்தி வெட்டுவது போல வெட்டிவிடும்.

பிரானா என்ற பெயருக்கே `பல்லை ஆயுதமாகக் கொண்ட மீன்’ என்றுதான் அர்த்தம். அது கடித்தால், ஒரு ரூபாய் அளவுக்குச் சதை துண்டாக வந்துவிடும். அமேசான் நதிக்கரையில் வாழும் பல மீனவர்கள் தங்கள் விரல்களை பிரானாவிடம் இழந்திருக்கிறார்கள்.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். அவற்றின் அழிப்புத்திறன் பயங்கரமானது. ஒருமுறை நீரில் தவறி விழுந்துவிட்ட ஒரு குதிரையைச் சில நிமிஷங்களுக்குள் பிரானாக்கள் எலும்புக்கூடாக்கிவிட்டன. 1976-ம் ஆண்டில் உருபு என்ற ஆற்றில் ஒரு படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 35 பயணிகளையும் பிரானாக்கள் தின்று தீர்த்தன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றிய பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள். பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால், கோடைக் காலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன.

பிரானாக்களுக்குக் கண் பார்வையும், மோப்ப சக்தியும் கூர்மையானவை. தண்ணீரில் தோன்றும் அதிர்வுகளிலிருந்து அவை தமது இரையைக் கண்டுபிடிக்கின்றன.

பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவை. சிவப்பிந்தியர்கள் ஒரு தாவர நஞ்சைத் தண்ணீரில் கலந்து பிரானாக்களை மயக்கமடையச் செய்து அவற்றைப் பிடிக்கிறார்கள். பிறகு அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்கிறார்கள்.

விரும்பாதவனும் முடியாதவனும்-அர்த்தமுள்ள இந்துமதம்

விரும்பாதவனும் முடியாதவனும்

`முடியாதவனை மன்னித்துவிடு; விரும்பாதவனைத் தண்டித்துவிடு’ என்கிறது இந்துதர்மம்.

தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி.

ஆனால், அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்திற்குரியவன்.

நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன?

`குறைந்த பட்சம் சில ஊர்களாவது, சில வீடுகளாவது கொடுங்கள்’ என்பதுதான்.

செய்ய முடியாதா துரியோதனனால்?

முடியும்; ஆனால் விரும்பவில்லை.

அதன் விளைவே பாரத யுத்தம்.

அனுமானும் விபீஷணனும் உரைத்தபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க முடியாதா, இராவணனால்?

முடியும்; ஆனால் விரும்பவில்லை.

அதன் விளைவே ராம-ராவண யுத்தம்.

`உன்னால் முடிந்ததைச் செய்’ என்று ஏன் பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள்?

“பெரிய விஷயத்தைச் செய்ய நினைத்தேன், முடியவில்லை” என்று வருந்திக் கொண்டிருக்காதே; “எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்” என்பது அதன் பொருளாகும்.

என் உடம்பு என் கையளவில் எட்டுச்சாண் உயரம் இருக்கிறதென்றால், எறும்பின் உடம்பு அதன் கையளவில் எட்டுச்சாண் தான்.

உணவைச் சமைத்ததும் யாராவது ஒரு அன்னக் காவடிக்கோ, பிச்சைக்காரனுக்கோ போட்டுவிட்டுச் சாப்பிடுவது என்ற பழக்கம் இந்துக்களுக்கு உண்டு.

பெட்டி நிறைய பணம் இருக்கிறது. பெட்டிச் சாவியும் செட்டியார் மடியில் இருக்கிறது. கொட்டிய கண்ணீரோடு திருமணமாகாமல் கோதையர் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர் கொஞ்சம் பெட்டியைத் திறந்தால் இறைவன் அவர்களுக்குச் சொர்க்க வாசலைத் திறப்பான். இவரால் முடியும்; ஆனால் விரும்பவில்லை.

இந்து தர்மத்தில் இவருக்குரிய தண்டனை என்ன?

வாழ்க்கையை ஓரளவுக்காவது அனுபவிக்க விரும்பியவர்களுக்கு அதனை மறுத்தாரல்லவா? அதனால் இவர் எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

பல லட்சம் செலவு செய்து இவர் தம் பெண்ணுக்குக் கல்யாணம் செய்திருப்பார். அது மலடியாகப் போய்விடும். அல்லது வாழா வெட்டியாகப் போய்விடும்.

`அறஞ்செய விரும்பு’ என்றார் ஔவைப்பாட்டி.

`செய்’ என்று அவர் ஆணையிடவில்லை `விரும்பு’ என்றுதான் சொன்னார்.

காரணம், செய்ய முடியாதவரும் இருக்கலாம் அல்லவா!

அவன் விரும்பினால்கூட போதும்; அதுவே கருணையின் பரப்பளவாகும்.

யூதர்களை மன்னித்திருக்க முடியாதா, ஹிட்லரால்?

போரின் நாசத்தைத் தடுத்திருக்க முடியாதா ஹிட்லரால்?

முடிந்தும் அவன் விரும்பவில்லை. விளைவு …?

மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ? அப்படியே இறைவன் அவனை நடத்தினான்.

வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால்கூட, அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கிறது.

வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைம்மாறாக ஒரு கவளச்சோறு உனக்குக் கிடைக்கிறது.

ஆகவே விரும்பு; முடிந்தால் செய்; முடியாவிட்டால் விரும்பு.

`விரும்பு’ என்ற உடனேயே தஞ்சாவூரைப் பார்த்து, இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக்கூடாதா என்று விரும்பாதே!

அதன் பெயர் விருப்பமல்ல; ஆசை!

விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும்.

தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.

ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு அடுத்தவனுக்கு அரை ஏக்கர் கூடக் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்?

வெறும் ஆறடிதான்!

இந்து சம்பிரதாயத்தில் அதுகூடக் கிடையாது.

ஆறடி நிலத்தில் மாறி மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள்.

இறைவன் தன்னுடைய விருப்பத்தைப் பூமியில் எப்படிப் பரவலாக வைத்தான்?

நீ சிந்தும் துளித் தண்ணீர், எறும்பு குளிக்கும் படித்துறையாகி விடுகிறது.

கழுதைக்கும் உணவாகட்டும் என்றுதானே காகிதத்தைக் கண்டு பிடிக்கும் அறிவை மனிதனுக்குக் கொடுத்தான்.

விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே!

`நெல்’ என்று ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால், `சோறு’ என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்டோம்.

`இறைக்கின்ற கேணி ஊறும்’ என்று ஏன் கூறுகிறார்கள்?

`கொடுக்கின்ற இடத்திலேதான் இறைவன் அருள் சுரக்கும்’ என்பதால்.

தேங்கிய நீர் தேங்கியே கிடந்து விட்டால், நோய்களுக்கு அது காரணமாகிறது.

தேங்கிய செல்வமும் தேங்கியே கிடந்து விட்டால் பாவங்களுக்கு அது காரணமாகி விடுகிறது.

இல்லாமை கொடுமையல்ல; இயலாமை குற்றமல்ல; விரும்பாமையே பாபமாகும்.

மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் `சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், இன்னும் ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கு வாழப்போவது போலவும் திட்டமிட்டே பொருள்களைப் பதுக்கி வைக்கிறான்.

குருட்டுப் பிச்சைக்காரனின் சட்டியில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு இருபது பைசாச் சில்லரை எடுப்பவனும் இருக்கிறான்.

செய்ய விரும்பாமையும், திருட்டுத்தனமுமே சமூகத்தைப் பாழ்படுத்துகின்றன.

பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர், எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார்.

கணவனும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே!

மனக் கதவு அடைத்துக் கொண்டது; அதனால் வாசற் கதவும் அடைப்பட்டு விட்டது!

கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப் போகிறதா என்றால் இல்லை.

அவரது வேலைக்காரனை எரித்த இடத்திலே தான் அவரையும் எரிக்கப் போகிறார்கள்.

வெறும் பிரமை, மயக்கம், சகலமுமே நிலையாகி விட்டது போல் தனக்குள்ளே ஒரு தோற்றம்!

இத்தகைய மூடர்களுக்காகவே இந்து மதம் நிலையாமையைப் போதித்தது.

திரும்பத் திரும்ப, `நீ சாகப் போகிறாய், சாகப் போகிறாய்’ என்று சொல்வதன் மர்மம் இதுதான்.

நிலையாமையை எண்ணி விரும்பாமையைக் கைவிடு.

உன்னைப் பற்றிய புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும் போது எத்தனை வீடு கட்டினாய் என்று கணக்கு எடுக்கப்படுவதில்லை. எவ்வளவு செய்தாய் என்பதே ஏட்டுக்கு வருகிறது.

எந்த நிலத்திலும் ஏதாவது ஒன்று விளையும். குறைந்த பட்சம் பறங்கியும் பூசணியுமாவது விளையும்.

நீ குறைந்தபட்சம் விரும்பி அதைச் செய்தால், அதுவே உன்னைப் பெரிய தோட்டக்காரனாக்கி விடும்.

மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்றும், திருஷ்டி படும் என்றும் இந்துக்கள் ஏன் சொல்கிறார்கள்?

`பிறருக்குப் பகிர்ந்து உண்ணாமை பாபம்’ என்று அப்படிச் சொல்கிறார்கள்.

சரியோ தவறோ, செய்ய முடியாதவனுக்கு நல்ல இருதயத்தையும், செய்ய விரும்பாதவனுக்குச் செல்வத்தையும் வழங்கியிருக்கிறான் இறைவன்.

கடலிலே நீரை வைத்து அதைக் குடிக்க முடியாமல் ஆக்கியவனல்லவா அவன்!

இதற்குக் காரணம் உண்டு.

ஒவ்வொருவருடைய புத்தியையும் அளவெடுப்பதற்கு இறைவன் நடத்தும் லீலை அது.

அனுபவத்தின் மூலம் ஒன்று நன்றாகத் தெரிகிறது.

செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்து போகிறது. அவனுடைய மரணமும் அப்படியே!

செய்ய விரும்பி முடியாதவனுடைய நிலை முடிவில் நிம்மதியடைகிறது.

காரணம், அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும், ஆண்டவனுக்கும் தெரியும்.

இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாகச் செத்ததும் இல்லை; அவன் சந்ததி அந்தச் செல்வத்தை அனுபவித்ததும் இல்லை.

ஏன், பலருக்குச் சந்ததியே இல்லை.

 

இளநீர்… ஆப்பிள்… சாத்துக்குடி..!

தென் இந்தியாவில் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாட்டின் ஓர் அங்கமாக உள்ளது இளநீர். கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் அதிக அளவில் இளநீர் அருந்த ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் இளநீர் விற்பனை செய்யும் தள்ளு வண்டிகளைப் பார்க்கலாம். தூய்மையானது, கலப்படம் இல்லாதது என்பதால் அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளுக்கும் இளநீர் பாதுகாப்பான பானம்.

இளநீரைப் போன்றே மற்றொரு பாதுகாப்பான பானம் சாத்துக்குடி. மருத்துவமனைகளில் நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள் தவறாமல் பைகளில் சாத்துக்குடிகளுடன் வரு வதைப் பார்க்கலாம். வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்தது சாத்துக்குடி. இதை சாறாகவும் பருகலாம். பழமாகவும் உண்ணலாம்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க் கும் போதும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் போதும், ஆப்பிள்களைக் கொடுப்பது வாடிக் கையான விஷயம்.

நோய் அழுத்தம் தொடர்பாக உடலில் உயிரி ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு சோடியம் சத்து நோயாளிகள் உடலில் அதிகம் சேரும். எனவே இதைச் சரி செய்ய அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது பொட்டாசியம் சத்து அதிகம் தேவைப்படும்.

மேற்கண்ட மூன்று உணவுகளிலும் கணிச மான அளவில் பொட்டாசியம் சத்து இருப்ப தால் உடலைச் சமச்சீராக வைத்துக் கொள்ள இவை உதவும். எனவே தான் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நோயாளிகளைப் பார்க் கும் போது இவற்றை எடுத்துச் செல்கிறோம்.

உயிர்வளியேற்ற எதிர்ப்பியாக விளங்கும் வைட்டமின் சி உடலில் ஏற்படும் கூடுதல் உயிர்வளியேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. மனஅழுத்தம் உள்ளவர்களின் உடலில் அதிக உயிர் வளியேற்றம் காணப்படும். எனவே பாதிக்கப்பட்ட திசுக்களைக் குணப்படுத்த வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடிச் சாறு அவர்களுக்கு அவசியம். இது அவர்கள் உடலில் ஏற்படும் அதிக உயிர்வளியேற்றத்தை தடுக்கும்.

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சில சிறுநீரக நோயாளிகளுக்கு திரவக் கட்டுப்பாடும், சிலருக்கு பொட்டாசியம் கட்டுப்பாடும், சிலருக்கு சோடியம் கட்டுப்பாடும் அவசியப்படும். எனவே சிறுநீரக நோயாளிகளைக் காணச் செல்லும் போது மட்டும் மேற்கண்ட பழங்களைக் கொடுப்பதில் மிகுந்த கவனம் தேவை.

சிறுநீரகக் கோளாறு இல்லாத பட்சத்தில் நீரீழிவு நோயாளிகள் தாராளமாக இளநீர் அருந்தலாம். ஆனால் இளநீருடன் சேர்ந்து உள்ளே இருக்கும் வழுக்கைத் தேங்காயை மறந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாத்துக்குடியைப் பழமாகவோ, சாறாகவோ கொடுக் கலாம். நாளொன்றுக்குத் தேவைப்படும் மொத்த கலோரிக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து ஆப்பிள்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சீஸ் ஆம்லெட்

தேவையான பொருட்கள்

முட்டை – 4
சீஸ் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* முட்டையை உடைத்து நுரை வரும் அளவுக்கு அடித்து வைத்துக் கொள்ளவும். சீசை துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் முட்டையை ஊற்றவும்.

* முட்டை வெந்தபிறகு துருவிய சீஸ், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வெந்ததும் மடித்து எடுக்கவும்.

* சீஸ் ஆம்லெட் ரெடி.

பேனை விரட்ட வழி தெரியவில்லையா?

குழந்தைகளின் தலையில் பேன் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சர்வதேச அளவில், இது பெரிய பிரச்னையாக உள்ளது. எத்தகைய முயற்சி செய்தாலும், இதற்குத் தீர்வு காண முடியவில்லை. எள் அளவே உள்ள இந்தப் பூச்சி, எந்த உயிரியின் உடலிலும் உட்புகாமல், வெளியிலேயே வாழும் தன்மை கொண்டது. ஆறு கால்கள் கொண்டது. மனித பேன்கள், பூனை, நாய், பறவை ஆகியவற்றின் மீது வாழாது. தலையில், பிறப்புறுப்பில், அதிக முடி கொண்ட உடல் பகுதிகளில் இவை வாழும். இதன் வாழ்நாள், 30 நாட்கள். உடலிலிருந்து உதிர்ந்து விட்டாலும், ஆடைகள், சீப்புகள், வியர்வை நிறைந்த ஹெல்மெட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணைகளில், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும். ஒரு ஜோடி (இரண்டு) பேன்கள், தங்கள் வாழ்நாளில், 100 முட்டைகள் இடும்.
பள்ளிச் சிறுவர், சிறுமியருக்கு தலையில் பேன் வளர்வது வாடிக்கையாக உள்ளது. 5 முதல் 11 வயது வரையிலான, 60 சதவீத பெண் குழந்தைகளின் தலையில் பேன் உள்ளது. சுய சுத்தமின்மை, வசதி இன்மை, பெற்றோர் கவனிப்பு குறைவு ஆகியவை, இதற்குக் காரணங்களாகக் கூறப்படுவது தவறு.
பேன் உள்ள ஒரு சிறுமியின் தலையுடன் ஒட்டி உறவாடினாலே, மற்றவருக்கும் பேன் வந்து விடும். பேனுக்கு பறக்கும் தன்மையோ, குதிக்கும் தன்மையோ கிடையாது. ஒருவர் தலையிலிருந்தோ, உடையிலிருந்தோ, தலையணை, படுக்கையிலிருந்தோ மற்றவருக்குப் பரவும். ஒருவர் தலையில் ஏறிய உடனேயே கடித்து, ரத்தத்தை உறிஞ்சத் துவங்கி விடும். வாயிலிருந்து வெளியேறும் ரசாயனம் தான், நமக்கு அரிப்பை உண்டாக்குகிறது. இதன் மூலம் உருவாகும் பாக்டீரியாவால், தலையில் தொற்றும் ஏற்படுகிறது. நாளமில்லா சுரப்பிகளில் நெறி கட்டி, கழுத்தில் வீக்கம் ஏற்படுகிறது. பேன்கள் தானாகவே தொற்று உருவாக்குவதில்லை.
பேனை விரட்ட, வீட்டு வைத்தியங்கள் உண்டு. பேன் சீப்பு போட்டு, தலையை வாரலாம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு, தினமும் பேன் சீப்பால் தலையை வார வேண்டும். ரசாயனங்கள், எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைப் பூசினால் பேன் போகும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், மண்ணெண்ணெயை தலையில் தடவி, தலையில் ஒரு துண்டைக் கட்டி விட்டு, 2 – 3 மணி நேரங்கள் ஊறினால், பேன் செத்து மடியும். எனினும், மண்ணெண்ணெய், தீப்பற்றிக் கொள்ளும் எண்ணெய் என்பதால், இந்த முறை, ஆபத்தானது. பேன் நீக்கும் ஷாம்பூக்கள், களிம்புகள் உள்ளன. அவற்றில், மாலத்தியான், லிண்டேன், பெர்மெத்ரின் ஆகிய ரசாயனங்கள் உள்ளன. இவை பேனைச் செயலிழக்கச் செய்து, 2 – 3 மணி நேரத்திற்குக் கட்டுப்படுத்தும். இவற்றைப் பூசி, இரண்டு மணி நேரத்திற்குள், தலையை வாரி விடலாம் அல்லது நீரால் அலசி விடலாம். அப்போது,செயலற்றுக் கிடக்கும் பேன்கள் உதிர்ந்து விடும். எனினும், இந்த முறையில், அனைத்துப் பேன்களும் போய்விடும் எனக் கூற முடியாது. மூலிகை மருந்துகளும் பேன்களை முழுமையாக ஒழிக்க வல்லவையாக இல்லை.
ஐவர்மெக்டின் என்ற மாத்திரையை உட்கொள்வதன் மூலம் பேனை விரட்டலாம். இந்த மாத்திரையை, மருத்துவர் ஆலோசனை இன்றி உட்கொள்ளக் கூடாது. உடல் எடைக்கு ஏற்றாற்போல், இந்த மாத்திரை உட்கொள்ளும் அளவும் மாறுபடும். 15 கிலோ எடைக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. ஒரு முறை சாப்பிட்டதும், எட்டாம் நாளில் மீண்டும் சாப்பிட வேண்டும். உயிருள்ள பேன்களுக்கு எதிராக இந்த மாத்திரை செயல்படும்.இந்த முறை, வசதியானது; வலியில்லாதது; சுலபமானது.

– டாக்டர் கீதா மத்தாய்

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) – 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.
இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச் ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்கு உள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும் தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.
இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச் செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவை இணைந்து செயல்படும். இதுவரை எக்ஸ்மார்க்ஸ் (Xmarks from www.xmarks.com) என்னும் ஆட் ஆன் புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகை இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போது குரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில் மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.
பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.
மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.
இந்த பிரவுசர் எச்.264 (ஏ.264) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடு கொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை. மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.