Daily Archives: ஏப்ரல் 6th, 2011

முகத்திரை கிழித்த விக்கிலீக்ஸ்!

விக்கிலிக்ஸ் அம்பலங்கள் இந்தியாவின் மரியாதையைக் குறைப்பவர்களை அடையாளம் காட்டுகிறது. காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் அருவருப்பான பக்கங்கள் வெளிவந்திருக்கின்றன.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2008ல் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எம்.பி.க்களுக்கு பல கோடி ரூபாய்கள் கைமாறியதை, அமெரிக்க தூதரக அதிகாரிகள், தம் வாஷிங்டன் மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கின்றனர். அந்தத் தகவல், விக்கிலீக்ஸின் மூலம் வெளியே வந்துவிட, மக்களவையில் அமளி.
பிரதமர் எல்லாக் குற்றச்சாட்டையும் நிராகரித்துவிட்டார். வாக்குக்குப் பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை வாக்குக்குப் பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை புலனாய்வு செய்த குழு, அப்படி ஒரு தவறு நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை கொடுத்துவிட்டது; நாட்டு மக்களும் அந்தக் குற்றச்சாட்டைப் புறம் தள்ளி, காங்கிரஸையே மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைத்துவிட்டனர்; எனவே, விக்கிலீக்ஸின் ஆவணங்களை ஏற்க முடியாது என்கிறார் பிரதமர்.
அடுத்த தினமே, பா.ஜ.க.வின் முகத்திரையும் கிழிந்தது. அரசியல் ஆதாயத்துக்காக பொது மேடைகளில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம். ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்த கருத்து, விக்கிலிக்ஸின் மூலம் வெளிவந்துவிட்டது.
காங்கிரஸும் பா.ஜ.க.வும் இக்குற்றச்சாட்டுகளைச் சந்திக்கத் திராணியில்லாமல், நழுவிப் போவதற்கான காரணங்களையே அடுக்கிக்கொண்டு இருக்கின்றன. விக்கிலீக்ஸ் ஆவணங்களுக்கு சாட்சி உண்டா, சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்விகள் வெற்று விதண்டாவாதங்கள்.
இக்கடிதங்கள், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், வாஷிங்டன் வெளியுறவுத் துறைக்கு எழுதிய ரகசிய குறிப்புகள். இதில், பொய் எழுதவேண்டிய அவசியம் இல்லை. பொய்யை எழுதினால், அது அமெரிக்காவில் தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படும் என்பதால், தூதரக அதிகாரிகள் தாம் அறிந்த தகவல்களை, விவரங்களை மட்டுமே தொகுத்து எழுதுவர்.
மக்கள் வோட்டுப் போட்டு, மீண்டும் ஐக்கிய முன்னணியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதற்கு அர்த்தம், அவர்கள் குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டார்கள் என்பதில்லை. மெஜாரிட்டி, குற்றச்சாட்டைக் கழுவும் புனித தீர்த்தமல்ல! அன்று வோட்டுப் போட்ட பலர் இன்று வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
மக்கள்முன் ஒரு முகமும், திரைக்குப் பின் வோறொரு முகமும் காட்டுகின்றன இக்கட்சிகள். சுயலாப நோக்கங்கள், குறுகிய அரசியல் பார்வை, நாட்டைக் குறித்த அக்கறையின்மை ஆகியவை, இத்தகைய இரட்டை நிலைக்குக் காரணங்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, தக்கவைத்துக்கொள்ள எத்தகைய இழிவுக்கும் ஆயத்தமாக இருக்கின்றன இக்கட்சிகள்.
மக்கள் மனத்தில் ஏற்கெனவே மதிப்பிழந்து போன இக்கட்சிகளும் தலைவர்களும், விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளியானதால், மேலும் அசிங்கப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் புனலில் குளித்தெழுந்து இனியேனும் நேர்மை அரசியலை வழங்க கட்சிகளும் தலைவர்களும் முன்வரட்டும்.

மொபைல் போன்: சில ஆலோசனைகள்

மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.
விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.
மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.

இறால் சுரைக்காய் மசாலா

தேவையான பொருட்கள்

இறால் – 1/2 கிலோ
சுரைக்காய் – 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
புளி – கோலியளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு – 1 டீஸ்பூன்

செய்முறை

* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். சுரைக்காயை நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு வெங்காயம், தக்காளி, தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

* மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்கவும்,

* இறாலையும், தேவையான அளவு உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி மசாலா திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.

* சுவைக்க சுவை மிகுந்த சுரைக்காய் இறால் மசாலா தயார்.

தங்கத்தை பூசினால் அழகு


“பளிச்” என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.

இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்’.

லண்டனைச் சேர்ந்த `பெரா’ என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்’ வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு’ என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.

முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத் தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.

“மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார் பெரா.

வேர்ட் டிப்ஸ்-வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த

 

வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த
வேர்டில் பலவகையான தகவல்களைக் கொண்டு டேபிள் ஒன்றை அமைக்கிறீர்கள். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த டேபிளில் டேட்டா அமைக்கப்பட்டிருக்கும் வரிசை சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டாவது படுக்கை வரிசை, மூன்றுக்கும் ஐந்திற்கும் இடையே வைத்திட எண்ணுகிறீர்கள். நான்காவ தனை இறுதியாகக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று விரும்பு கிறீர்கள். அல்லது நெட்டு வரிசையிலும் இதே போல மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிடுகிறீர்கள். மாற்றங்கள் அதிகம் தேவைப்படுவதால், புதிய டேபிள் ஒன்றை உருவாக்கி, அதில் படுக்கை மற்றும் நெட்டு வரிசைகளைக் காப்பி செய்து பேஸ்ட் செய்திட எண்ணலாம். அல்லது, இருக்கின்ற டேபிளிலேயே வரிசைகளைக் காப்பி செய்து மேலும் கீழுமாக மாற்றலாம். ஆனால் இவற்றில் குழப்பம் தான் மிஞ்சும். மேலும் காப்பி அண்ட் பேஸ்ட் செய்வதில் தவறு ஏற்பட்டால், மொத்த வேலையும் வீணாகும்.
இதற்குப் பதிலாக, வேர்ட் ஓர் எளிய வழியைத் தருகிறது. நகர்த்த வேண்டிய படுக்கை அல்லது நெட்டு வரிசையினை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அதில் கர்சரை வைத்து அழுத்தியவாறு எங்கு அந்த வரிசை அமைய வேண்டுமோ, அந்த இடத்தை நோக்கி இழுக்கவும். இப்போது வரிசையோ அல்லது அதில் உள்ள டேட்டாவோ நகராது. அதற்குப் பதிலாகச் சற்றுப் பெரிய கர்சர் ஒன்று நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். மவுஸ் கர்சரை விட்டவுடன், குறிப்பிட்ட வரிசை, கர்சரை எங்கு இழுத்துச் சென்றீர்களோ, அங்கு அதன் டேட்டாவுடன் அமைக்கப் படுவதனைப் பார்க்கலாம். படுக்கை வரிசையினை நகர்த்துகையில், தேர்ந்தெடுத்த பின்னர், அதன் இடது ஓர செல்லில் கர்சரை வைத்து இழுக்கவும். வேறு செல்லில் கர்சரை வைத்து இழுக்கையில், டேட்டா மட்டும் வரிசையின் இறுதி செல்லுக்கு எடுத்துச் செல்லப்படும்.

மெனுவிலிருந்து எஸ்கேப்:
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட் டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனு மீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

பாரா காப்பி:
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

இருவகை அடிக்கோடு:
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.
ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டபிள்யு.

வேர்டில் டேட்டா சார்ட்டிங்: ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, குணிணூtடிணஞ் செய்திட, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள் ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது.
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப் படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப் படுத்தலாம்.

தொடக்கங்களுக்குச் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
இப்படியும் டேபிள் உருவாக்கலாம்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் — டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும். இதற்குப் பதிலாக படுக்கை வரிசைத் தகவல்களை ஒரு கமா இட்டு அடிக்க வேண்டும். இதே போல நெட்டு வரிசைகளையும் வரிசையாக அமைக்க வேண்டும். பின் இவற்றை செலக்ட் செய்து “Table > Insert Table”. செலக்ட் செய்து கிளிக் செய்தால் டேபிள் உருவாகி நீங்கள் டைப் செய்த தகவல்கள் எல்லாம் அந்த டேபிளில் அமர்ந்திருக்கும். அகலத்தினை சுருக்கலாம்; நீட்டலாம். இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் “Table > Table Autoformat” என்ற பிரிவில் கிளிக் செய்தால் பல வகை டேபிள்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் தேவையான டேபிள் அமைப்பைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
எழுத்துக்களின் அளவு
வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகையின் அளவு அமைப்பதுபற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே டைப் செய்திடலாம். 1 முதல் 1638 வரை இதன் அளவை அமைக்கலாம். எழுத்தின் அளவை அரை மாத்திரை கூட கூட்டலாம். எடுத்துக் காட்டாக 11.5, 12.5 என்று கூட அமைக்கலாம்.
எழுத்தின் அளவினை அமைக்க, அதன் கட்டத்தில் கர்சரை எடுத்துச் செல்லாமலும் அமைக்கலாம். இதற்கு [Ctrl][Shift]> என்ற கீகளை அழுத்தினால், எழுத்தின் அளவு கட்டத்தில் அளவு அதிகமாவதைக் காணலாம். நீங்கள் விரும்பும் அளவு வந்தவுடன் அப்படியே விட்டுவிடலாம். இதனையே குறைக்க வேண்டும் என்றால் [Ctrl][Shift] என்ற கீகளை அழுத்தலாம்.
எழுத்தின் அளவை ஒரு பாய்ண்ட் அதிகரிக்க Ctrl+] என்ற கீகளை அழுத்த வேண்டும். இதனையே குறைக்க எனில் Ctrl+[ என்ற கீகளைப் பயன்படுத்தவும்.

மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி

அது கி.பி.1573-ம் ஆண்டு.

இன்றைய மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிப்பதற்காக வந்திருந்தார்.

சாமுண்டிதேவியை தரிசித்து முடித்ததும் மீண்டும் பல்லக்கில் ஏறி மைசூருக்கு புறப்பட்டார். சிறிது தூரம்தான் சென்றிருப்பார். திடீரென திரண்டு வந்த கருமேகங்கள் பலத்த மழையை கொட்ட ஆரம்பித்தன. மேகக்கூட்டங்கள் மோதிக்கொண்டு இடியையும் மின்னலையும் ஏற்படுத்தின.

ஒரு பிரம்மாண்ட மரத்தின் அடியில் பல்லக்கை இறக்கினர் வீரர்கள். `உன்னை தரிசிக்க வந்த இடத்தில் இப்படியொரு சோதனையா? நான் பாதுகாப்பாக ஊர் செல்ல அருள் புரியம்மா’ என்று அந்த மரத்தின் அடியில் இருந்தே வேண்டிய சாமராஜ உடையார், மலை உச்சியில் இருந்த கோவிலைப் பார்த்தார். ஆனால், ஏனோ கோவில் தெரியவில்லை.

வழக்கமாக அந்த இடத்தில் இருந்து பார்த்தால் கோவில் தெரிய வேண்டும். திடீரென்று கோவில் தெரியாததால் லேசாக பதற்றம் அடைந்த அவர், சில அடி தூரம் நகர்ந்து சென்று அன்னையின் கோவிலை தேடினார். அவரது வீரர்களும் மன்னரை பின்தொடர்ந்து சென்றனர்.

மரத்தின் அடியில் இருந்து பார்த்தால் தெரியாத அன்னையின் கோவில் இப்போது தெரிந்தது. அன்னை சாமுண்டிதேவியை அவர் வணங்கி முடித்த அடுத்த நொடியே மிக அருகில் பளிச்சென்று மின்னல் வெட்டியது. இடியும் விழுந்தது.

எந்த மரத்தின் அடியில் சிறிதுநேரத்திற்கு முன்பு நின்றிருந்தாரோ, அந்த மரம் இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

தன்னைக் காப்பாற்றவே தனது கோவிலை தெரியாமல் மறைத்து தன்னை காப்பாற்றி இருக்கிறாள் அன்னை சாமுண்டிதேவி என்பதை அறிந்த சாமராஜ உடையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதன்பிறகு, தனது உயிர் காத்த அன்னையின் கோவிலை மைசூரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் பெரிய அளவில் எழுப்ப தீர்மானித்தார் சாமராஜ உடையார். அதன் தொடர்ச்சியாக எழுந்ததுதான் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்.

மைசூரின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கு செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. சாமுண்டிமலை உச்சியில் கோவில் அமைந்துள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

மகிஷாசுரனை வதம் செய்து மண்ணுலக மாந்தரை காத்த அன்னை சாமுண்டீஸ்வரி, இங்கு சக்தி சொரூபமாக காட்சித் தருகிறாள்.

கருணை செய்யும் கயற்கண்ணி!-ஏப்., 7 – மதுரை சித்திரை திருவிழா ஆரம்பம்!


மீனாட்சி – மதுரையின் அரசி. இவளுக்கு, இந்தப் பெயர் வந்ததே, அவளது கண்களின் சிறப்பால் தான்!
காசி விசாலாட்சியை, “விசாலம்+அட்சி’ என்று பிரிப்பர். “அட்சம்’ என்றால் கண்கள். விசாலமான கண்களால் உலகைப் பாதுகாப்பவள் என்று அர்த்தம். காஞ்சி காமாட்சியை, காமம்+அட்சி என்பர். இதற்கு, “பக்தர்களின் விருப்பங்களை, தன் கண் அசைவிலேயே நிறைவேற்றுபவள்…’ என பொருள். மீனாட்சியை, “மீன்+அட்சி’ என்று பிரிப்பர். மீன் போன்ற கண்களால், பக்தர்களுக்கு அருள்பவள் என்று பொருள். மற்ற இருவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு, மீனாட்சிக்கு உண்டு. மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை. மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள். அவளது கண்கள் இமைப் பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.
மீனாட்சியை, மரகதவல்லி என்பர். மரகதம் பச்சை நிறமுடையது; பச்சை வண்ணம் செழுமை யின் அடையாளம். தொழில் பின்னணி அதிக மில்லாத மதுரை, இன்று, மிகப்பெரிய நகரானதற்கு காரணம், மீனாட்சியின் கைங்கர்யமே. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே இவ்வூர் உள்ளது. பச்சை, இரக்கத்தின் அடையாள மாகவும் உள்ளது. அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது.
அன்னை பார்வதி தேவியே மீனாட்சியாக மானிட அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்தாள். விசுவாவசு எனும் கந்தர்வனுக்கு, வித்யாவதி என்ற மகள் இருந்தாள். இவள், பார்வதி தேவியின் தீவிர பக்தை. அவளது அருட்கடாட்சம் பெற விரும்பி, தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். பூலோகத்திலுள்ள கடம்பவனத்தில் தங்கி, பார்வதி தேவியை எண்ணி தவமிருந்தால், அது நடக்குமென தந்தை சொன்னார். அதன்படி, அவள் கடம் பவனத்தில் தவமிருந்தாள். பார்வதி தேவியை தன் தாயாக மட்டுமின்றி, மகளாகவும் கற்பனை செய்தாள். கடம்பவனத்தில் இருந்த கோவிலில், அம்பாள் சன்னிதியில் பல சேவைகளைச் செய்து வந்தாள். பார்வதி தேவி, அவள் முன் தோன்றி, அருள்பாலித்தாள்; அவளது விருப்பத்தைக் கேட்டாள்.
“உன்னை என் பிள்ளை போல எண்ணி, உனக்கு பணி செய்தேன். நிஜத்தில், நீ எனக்கு பிள்ளையாக வேண்டும்…’ என்று வரம் கேட்டாள்; பார்வதி தேவியும் சம்மதித்தாள். “வித்யாவதி… நீ அடுத்த பிறவியில், சூரசேனன் என்ற சோழராஜனின் மகளாகப் பிறந்து, மதுரையை ஆளும் மலையத்துவச ராஜாவை திருமணம் செய்வாய். உனக்கு மகளாய் பிறப்பேன். பின்னர், இருவரும் பிறவா வரம் பெறுவீர்கள்…’ என்றாள். அடுத்த பிறவியில், இவர்களது மகளாக யாக குண்டத்தில் இருந்து பிறந்தாள் மீனாட்சி. தெய்வத்தை உளப்பூர்வமாக வணங்கினால், அது, நம் வீட்டுக்கே சொந்தம் கொண்டாட வந்து விடும் என்பதற்கு உதாரணம் மீனாட்சியின் பிறப்பு.
மீனாட்சியை போல சொக்கநாதரும் கருணையும், வீரமும் மிக்கவர். வேண்டியன வேண்டியபடி அருள்பவர். குழந்தை இல்லாத வந்தி எனும் பக்தைக்காக, பிள்ளையாக இருந்து மண் சுமந்தவர். அதற்காக ராஜாவிடம் பிரம்படியும் பட்டவர். தருமி என்ற ஏழைக்கு, பொற்கிழியை கொடுப்பதற்காக நக்கீரரிடமும், பாண்டியராஜாவிடமும் வாதாடியவர். இதன் மூலம் தமிழின் பெருமையை நிலை நிறுத்தியவர்.
மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி ஆகியவை உள்ளன. அந்தந்த மாத திருவிழாக்களில், சுவாமி பவனி இந்த வீதிகளில் நடந்தது. மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில், சித்திரை வீதியில், சித்திரை சுவாமி பவனி வந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர், இவ்விழா மாசி வீதிக்கு மாற்றப்பட்டது. மேலும், தேனூர் என்ற கிராமத்தில் நடந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை, மதுரை வைகைக்கு மாற்றி, சித்திரை திருவிழாவுடன் இணைத்தார் திருமலை நாயக்கர்.
சித்திரை திருவிழாவில் தான் மீனாட்சியம்மை மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பட்டாபிஷேகம், பல நாடுகளை வென்று சிவலோகத்தையே கைப்பற்றச் செல்லும் திக்விஜயம், திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். இதைத் தொடர்ந்து, அழகர் வைகையில் இறங்கும் விழா நடைபெறும். சித்திரை திருவிழா காண்போம். அங்கயற்கண்ணியின் கடைக்கண் கருணை பார்வை பெற்று, பிறந்த பயனை அடைவோம்.