Daily Archives: ஏப்ரல் 7th, 2011

வானிலையை எப்படி அறிகிறார்கள்?

வானிலையியல் என்பது வளிமண்டலத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களால் உண்டாகும் காற்று, மழை போன்ற இயற்கையின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான முறையாகும். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய வானிலையியல், சற்றுக் கடினமான ஒரு விஞ்ஞானம் ஆகும்.

நவீன வானிலையியல், கி.பி. 1709-ம் ஆண்டு காற்றழுத்தமானி, பாதரச வெப்பமானி போன்ற உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தோன்றியதாகக் கூறலாம்.

இந்தியாவில் முதல் வானிலையியல் ஆய்வுக் கூடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் 1892-ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியால் தொடங்கப்பட்டது.

பல தீவிரமான புயல்கள், மழையின்மை காரணமாக உண்டான கடும் பஞ்சங்கள் அன்றைய அரசாங்கத்தை உலுக்கின. அதன் விளைவாக, 1875-ம் ஆண்டு கல்கத்தாவில் இந்திய வானிலைத் துறை அமைக்கப்பட்டது. அதன் கிளை தற்காலிகமாக சிம்லாவில் நிறுவப்பட்டது.

ஆரம்ப காலத்தில், வானிலை ஆய்வுக் குறிப்புகளைப் பதிவு செய்ய சில நிலமட்ட ஆய்வுக் குறிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. அவற்றில், காற்றின் அழுத்தம், வெப்பநிலை, காற்றின் திசை, வேகம், மழை அளவு, காற்றில் உள்ள ஈரப்பதம், மேகங்களின் தன்மை, அளவுகள், சமநோக்குதூரம், அப்போதைய வானிலையை அளப்பதற்கு முன், ஒரு மணி நேரத்தின் வானிலை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் தற்போது இந்தியாவில் 571 நிலமட்ட வானிலை ஆய்வுக்கூடங்கள் உள்ளன. தென்துருவத்துக்கு அருகில் அண்டார்டிகாவிலும் நமது வானிலை ஆய்வுக்கூடம் உள்ளது.

இவற்றில் பெரும்பாலான நிலையங்கள் மூன்று மணிக்கு ஒருமுறை மேலே குறிப்பிட்ட வானிலைக் குறிப்புகளைச் சம்பந்தப்பட்ட வானிலை மையங் களுக்கு அனுப்புகின்றன. அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற நிலையங்கள் உள்ளன.

பலூன் மூலம், மேல்மட்டக் காற்றின் வேகம், வீசும் திசை ஆகியவற்றைக் கணிக்கும் 63 ஆய்வுக்கூடங்கள் நம் நாட்டில் உள்ளன. பலூன் மூலம் ஆய்வு நடத்தும் `ரேடியோ சாண்ட்’ வாயிலாக வளிமண்டலத்தில் 25- 30 கிலோமீட்டர் உயரத்தில் வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் பற்றி ஆராயவும் 34 கூடங்கள் உள்ளன. ரேடியோ நுண்ணலைகள் வாயிலாக காற்றின் திசை, வேகம் அறியும் ரேடார் நிலையங்கள் உள்ளன. புயலைக் கண்டறியும் ரேடார்களும் உள்ளன.

ஒரு வானிலை அறிவிப்பில் மூன்று வகையான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

முதல் வகையில், எந்த வகை சந்தேகமும் இல்லாத வாக்கியங்கள் உபயோகிக்கப்படும். உதாரணமாக, `இன்று வானம் தெளிவாக இருக்கும்’, `நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும்.’

இரண்டாவது வகையில் சந்தேகம் தொனிக்கும். `அனேகமாக’, `உண்டாகக்கூடிய’, `வாய்ப்புகள்’ போன்ற வார்த்தைகள் இடம்பெறும்.

மூன்றாவது வகையில், `மழை உண்டாகக்கூடிய சூழ்நிலைகள் சாதகமாக உள்ளன’, `மழை பெய்யலாம்’ என்பது போன்ற வாக்கியங்கள் இருக்கும்.

———————————————————-

`மிகைப்படுத்தல்’ ஏன்?

ஒரு வானிலை முன்னறிவிப்பில் சிலநேரங்களில், `சற்றே மிகைப்படுத்தல்’ தவிர்க்க முடியாதது. சிறிய வாய்ப்பே இருந்தாலும், பலத்த காற்று பற்றிய எச்சரிக்கையை வானிலை மையங்கள் வெளியிடும். அதை ஆங்கிலத்தில், `To erron the safeside’ என்கிறார்கள். இதில் பலத்த காற்று வீசும் வாய்ப்புக்கான சதவீதம் குறைவாக இருந்தாலும், ஒருவேளை பலத்த காற்று வீசினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

புத்தம்புது மூலிகை குளியல்

ருமத்தை சுத்தம்செய்து, புத்துணர்ச்சி தரும் நீராவி குளியல் எல்லோருக்கும் தெரியும். இதில் பழமையான மூலிகைகளை உள்ளடக்கிய புதிய நீராவி குளியல் முறை ஒன்று தற்போது புகழ் பெற்று வருகிறது. அதன் பெயர் ஹமாம் நீராவி குளியல். தொன்று தொட்ட பழங்கால முறைதான் என்றாலும், இதில் புதுப்புது விஷயங்களையும் புகுத்தி யுள்ளதால், வெளிநாட்டில் இதற்கு அதிக மவுசு.

நீராவி குளியல் துருக்கியில் அறிமுகமானது. அவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள வெட்ட வெளியில் தொட்டி போல் அமைத்து, நீராவி குளியல் எடுத்தனர். பின்பு கிரீஸ் மற்றும் ரோமன் நாடுகளில் பரவியது.

இந்தியாவில் போபாலில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஹமாம் நீராவி குளியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹமாம் என்றால் அரபி மொழியில் வெப்பம் என்று அர்த்தம். இவர்கள் தங்கள் உடம்பு சூட்டை தணிப்பதற்காக, நீராவி குளியலை ஒரு மாற்று வாய்ப்பாக பயன்படுத்தினர். அதில் ஜாலியாக பல மணிநேரம் குளிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் மூலிகைகள் அடங்கிய குளியலை உருவாக்கிக் கொண்டனர். மற்ற நீராவி குளியலை விட ஹமாம் நீராவி குளியல் சிகிச்சை போன்று சிறப்பானது.

கி.மு.600-ம் ஆண்டுவாக்கில் நீராவி குளியல் தோன்றியதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் முக்கிய பிரமுகர்கள்தான் முதலில் இந்த குளியலை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

“ஹமாம் நீராவி குளியலை அனுபவித்தவர்கள், அதன் பின்னர் வேறு எந்த குளியல் அனுபவத்தையும் தேட மாட்டார்கள்” என்கிறார் பிரபல நீராவி குளியல் நிபுணர் பங்கஜ்.

இந்த நீராவி குளியலுக்கான அறை வித்தியாசமாக, அழகாக தோற்றமளிக்கிறது. மசாஜ் மற்றும் நீவி விடும் உபகரணங்கள் மற்றும் புத்துணர்வு, அழகை மேம்படுத்தும் சாதனங்கள் என அனைத்தும் அதனுள் அணிவகுக்கின்றன. இந்த குளியலின் அடிப்படை வழிமுறை களுக்காக 25 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பின்னர் 55 நிமிடங்கள் உடம்பை மசாஜ் செய்கிறார்கள். 90 நிமிடங்களுக்கு ஹமாம் ரஸல் என்ற முறையில் உடல் சுத்தம் செய்யப் படுகிறது. இதற்கு ஆயிரம் ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

பெண்களுக்கென்று தனியாக நீராவி குளியல் நடத்தப்படுகிறது. பிரசவ சமயங்களில் இவ்வகை குளியல் மிகவும் பயனளிக்கும் என்கிறார்கள், நீராவி குளியல் நிபுணர்கள். பரபரப்பான நகர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் புத்துணர்ச்சியையும், மனதில் நிம்மதியையும் இது கொடுக்கிறது.

மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்

நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் தொடர்ந்து மின்சக்தி செலவாகிக் கொண்டிருப்பது என்பதை நாம் உணர்வ தில்லை. மின்சக்தியைப் பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இயக்கத்தினை நாம் கண்டு, கேட்டு உணர்கிறோம். அதனால், மின்சக்தி செலவாகிறது என்பது நம் கண்கூடாகக் காணும் ஒரு விஷயமாகிறது. ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் நமக்கு இது ஓரளவிற்குத் தெரிந்தாலும், இதில் என்ன செலவாகப் போகிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இதன் பயன்பாட்டில் நாம் மிச்சப்படுத்தும் மின்சாரமும் நமக்கு ஒரு சக்திதான். எனவே எந்த வகையில் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம் எனச் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

1: ஸ்விட்ச் ஆப்: பயன்படுத்தாத போது மின் சக்தியை நிறுத்திட வேண்டும். அல்லது ஹைபர்னேட் மோடில் நிறுத்திட வேண்டும். கம்ப்யூட்டர் அப்போது “உறக்கத்தில்’ (Sleep mode) இருக்கும். தேவைப்படுகையில், மீண்டும் இயக்கத் திற்குக் கொண்டு வரலாம்.

2. துணை சாதனங்களை விலக்கல்: நாம் பயன்படுத்தாத போது, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர், பிரிண்டர், ஸ்பீக்கர்களின் இணைப்பை நீக்கலாம். இந்த துணை சாதனங்கள் ஏதேனும் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப் பட்டு, அந்த ஸ்விட்ச் போர்டின் மின் இணைப்பை மொத்தமாகத் துண்டிக்க வசதி இல்லை என்றால், இவற்றின் இணைப்பு கேபிளை நீக்கிவிடலாம். ஏனென்றால், இணைப்பில் இருக்கையில் சிறிய அளவு மின் சக்தியை இவை பெற்றுக் கொண்டிருக்கும். குறைந்த வாட் அளவு மின் சக்தியை இவை எடுத்துக் கொண்டிருந்தாலும், அதனை நிறுத்துவது, தொடர் நாட்களில் பெரிய அளவில் மின் சக்தியை மிச்சப்படுத்தும்.

3. பவர் மேனேஜ்மெண்ட்: நம் கம்ப்யூட்டரில் பவர் மேனேஜ்மெண்ட் பிளான் என்னும் திட்டம் பதியப்பட்டு தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டர் தன் செயல்பாட்டிற்கு எப்படி மின் சக்தியை இழுக்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Start கிளிக் செய்து, Control Panel செல்லவும். Hardware And Sound என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் பவர் திட்டங்களை ஆய்வு செய்திடவும். Change Plan Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு display, sleep, and brightness settings ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்திடவும்.

4.ஸ்கிரீன் சேவர் தேவையா? பலர் கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் சேவர் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். இதற்காக விதம் விதமாய் ஸ்கிரீன் சேவர்களை இணையத்தில் இருந்தும், நண்பர்களிடமிருந்தும் பெற்று பயன்படுத்துகின்றனர். இந்த ஆசை கொண்டவர்கள், பெரும்பாலும் அனி மேஷன் உள்ள ஸ்கிரீன் சேவர்களையே அமைக்கின்றனர். கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கிய காலத்தில், திரைக் காட்சிகள் உறையாமல் இருக்க இது தேவையாய் இருந்தது. நவீன தொழில் நுட்பத்தில் ஸ்கிரீன் சேவர்கள், செயல் அடிப்படையில் தேவையற்ற ஒன்றுதான். எனவே அவற்றை எடுத்துவிடுங்கள். அல்லது மானிட்டரையே ஸ்விட்ச் ஆப் செய்து, பின் தேவைப்படும்போது ஸ்விட்ச் போட்டு காட்சியைக் கொண்டு வரலாம்.

5. ஒரு கண் வைக்கவும்: மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களுடன், உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. நான் பயன்படுத்துவது co2saver என்பதாகும். இதனை http://co2saver.snap.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத் தூண்டும்.

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் விக்கிரபாண்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவன் நாகாபரணத்தை குடையாக தாங்கியுள்ளார். சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.

தல வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருந்ததாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் பாண்டிய மன்னருக்கும், சோழ
மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழ மன்னனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

சிறந்த சிவ பக்தனான சோழ மன்னன், இறைவனை மனமுருக வேண்டி தனக்கு கண்பார்வை தந்து அருளும்படி வேண்டினான். இறைவனும் சோழமன்னனின் இறை பக்தியை கண்டு மெச்சி அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருளினார்.

கண்பார்வை பெற்ற சோழ மன்னன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தான். அதன் தொடர்ச்சியாக ஒரு கோவிலை பெரிய அளவில் புதுப்பித்து கட்டினான். அதுதான் சோழபுரம் விக்கிரபாண்டீசுவரர் கோவில்.

ஆரம்பத்தில், இந்த கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதனால் இங்குள்ள இறைவன் `விக்கிர பாண்டீசுவர்’ என அழைக்கப்படுகிறார். அதன் பிறகே சோழ மன்னர்களின் ஆளுகைக்கு இப்பகுதி உட்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

சோழபுரம் பகுதியில் வெளிநாட்டு நாணயங்கள் தவிர தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் நாணயங்களும் புதையலாக கிடைத்துள்ளன. முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுகள் சோழபுரம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும் பாண்டிய, நாயக்க மன்னர்களின் கால நாணயங்களும் கிடைத்துள்ளன.

இந்த கோவிலில் கால பைரவர், விநாயகர், சண்டிகேசுவரர், பிள்ளை சித்தர், நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

திருவண்ணாமலை சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மத்தியில் காணப்படும் அம்புகுறி இங்குள்ள சிவலிங்கத்தின் நடுவிலும் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இங்கு இறைவனுடன் வீற்றிருக்கும் அம்மன் குழல்வாய் மொழி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றை இந்த அம்மன் அருளுகிறார்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சோழபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் விக்கிரபாண்டீசுவரர் கோவிலை சென்றடையலாம்.