Daily Archives: ஏப்ரல் 9th, 2011

மக்கள் சக்தியுடன் வெற்றி கண்டார் ஹசாரே : ஊழல் ஒழிப்பு மசோதாவில் மத்திய அரசு பணிந்தது

நாடு முழுவதும் எழுந்த அபார ஆதரவு அலை வீசியதை கண்டு மத்திய அரசு ஒரு தனிநபரின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக முன்வந்து பணிந்தது. அன்னா ஹசாரேயின் கோரிக்கை அனைத்தையும் ஏற்று புதிய அறிவிக்கை வெளியிட்டதையடுத்து 5 நாள் தொடர்ந்து இருந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் ஹசாரே. லோக்பால் மசோதா தொடர்பான விஷயத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்காத உயர்ந்த இடத்தை பிடித்தார் ஹசாரே.

இந்த போராட்டம் நம் மக்களுக்கானது என்றும் இது இன்னும் முடியவில்லை., உண்மையான போராட்டத்தின் இது ஒரு தொடக்கம் தான் , இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றும் , மக்களின் ஒருமித்த ஆதரவு மற்றும் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று இன்றைய போராட்டத்தை முடித்துக்கொண்ட ஹசாரே கூறினார். மத்திய அரசையே ஆட்டிப்படைத்த அவர் தனது வெற்றி அல்ல என்று மெத்தப்பணிவாக கூறி மேலும் தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக மத்திய அரசின் லோக்பால் தொடர்பான அறிவிக்கை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கூடியிருந்த மக்களிடம் பேசி தம்முடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த ஆதரவாளர்களுக்கு குளிர்பானம் கொடுத்து, தாமும் தனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

மாலையில் வெற்றிப்பேரணிக்கு ஏற்பாடு: தாங்கள் மேற்கொண்ட அகிம்சை முறையிலான போராட்டம் வெற்றியடைந்த‌தை கொண்டாடும் வகையில், இன்று மாலை நடைபெறும் வெற்றி யாத்திரையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த போராட்டத்தில், தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யாத்திரை, இந்தியா கேட் பகுதியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட உள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ளின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே கடந்த 5 ம் தேதி உண்ணாவிரதம் துவக்கினார்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நான்காவது நாளாக அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. ஹசாரே தரப்பில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கைகள் இரண்டை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.

கபில் சிபல் தகவல்: நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை. பின்னர் அவர் கூறும்போது, “ஹசாரே தரப்பினர் வலியுறுத்தும் பிற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது. அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு தரப்பும் இணைந்த குழுவை அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த குழு அமைப்பது பற்றியோ, அந்த குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசு கெஜட்டில் வெளியிட இயலாது. வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபற்றி அனைத்து உறுதிமொழிகளையும் அளிக்கவும் தயார்.

இன்னொரு கோரிக்கையான, இருதரப்பும் அங்கம் வகிக்கும் அரசின் குழுவுக்கு அமைச்சரவையில் இல்லாத வெளிநபர் தலைவராக இருக்கவும் அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம் என்பதால், அதையும் ஏற்க முடியாது’ என்றார். இந்த தகவல்கள் உண்ணாவிரத மேடையில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த குழுவுக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தலைவராக இருப்பார் என்றும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது உண்ணாவிரத பந்தல் முன்பாக குழுமியிருந்த அனைவருமே கோபமும், ஆத்திரமும் அடைந்தனர். வரும் 13ம் தேதி ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடப்பது கண்டு அரசுகள் அலறுகிறது. இதன் வெளிப்பாடாக, ஆளாளுக்கு ஒரு போராட்டம் நடத்தும் அபாயம் ஏற்படும் என்று காங்., தகவல் தொடர்பாளர் சிங்வி கூறினார். பிரதமர் மன்மோகன் ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அரசும் நேற்று தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டது.

13ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்: முக்கிய கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதையடுத்து, நேற்று உண்ணாவிரத மேடையிலிருந்த படியே அன்னா ஹசாரே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 13ம் தேதி அன்று ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். ஊழலை எதிர்ப்பதில் அலட்சியம் காட்ட நினைக்கும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழு வேண்டுமென்றும், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 12ம் தேதி அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராமநவமி விடுமுறை என்பதாலும், மக்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்றும் நிர்வாகிகள் முடிவு செய்ததையடுத்து சிறை நிரப்பும் போராட்டம் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

நேற்று மாலை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஹசாரே தரப்பில், சுவாமி அக்னிவேஷ், கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர், மத்திய அமைச்சர் கபில் சிபல் வீட்டுக்குச் சென்று பேச்சு நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. லோக்பால் வரைவு மசோதா தயாரிக்கும் கமிட்டியில் அன்னா ஹசாரே, துணைத் தலைவராக நியமிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. இந்த கமிட்டியின் தலைவர் பதவியில் அரசு தரப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது..
பெருகிய ஆதரவு: டில்லி ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் குவியத் துவங்கினர். யோகா குரு ராம்தேவ், பாலிவுட் நட்சத்திரம் அனுபம்கெர் போன்ற பிரபலங்களும் வந்திருந்தனர். அனுபம்கெர் பேசும்போது, “சச்சின், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற முக்கியமானவர்களும் வர வேண்டும். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

நீரின் குண நலன்கள்!

நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்…..

மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்கும். கிணற்று ஜலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமுத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.

குளிர்ந்த நீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும். இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு நல்லது. காய்ந்து ஆறிய நீரானது பித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம் முதலிய நோய்கட்குச் சிறந்தது.

உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.

எக்ஸெல்: சார்ட்களின் வகைகள்

எக்ஸெல்: சார்ட்களின் வகைகள்
எக்ஸெல் தொகுப்பில் சார்ட்கள் தனி இடம் கொள்கின்றன. டேட்டாக்களை ஒப்பிட்டும், எதிர் எதிராகவும் காட்ட சார்ட் நமக்கு நல்ல ஒரு சாதனமாக அமைந்துள்லது. இதன் பல வகைகளைப் பற்றி இங்கு காணலாம்.
மொத்தம் 14 ஸ்டாண்டர்ட் சார்ட்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது ஏழு துணை வகைகளும் உள்ளன. இவற்றுடன் 20 கஸ்டம் சார்ட் வகைகளும் தரப்பட்டுள்ளன. ஆனால் இந்த வகை சார்ட்கள் பெரும்பாலும் கலர் மற்றும் கிராபிக்ஸ் தோற்றத்தில் மட்டுமே மாறுபாட்டினைக் கொண்டிருக்கும். கீழே 14 ஸ்டாண்டர்ட் சார்ட்கள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
1. ஏரியா சார்ட் (Area Chart): ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது வேறு வகைக்கான மதிப்பின் அடிப்படையில் அமையும் சார்ட். ஒரு வேல்யூ எந்த அளவிற்கு கூடுதலாக உள்ளதோ அதற்கேற்ற வகையில் அந்த அளவில் சார்ட்டில் அது இடம் பெறும்.
2. பார் சார்ட் (Bar Chart): இவை தான் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் சார்ட் ஆகும் .இதில் வேல்யூ படுக்கை வச பார்கள் மூலம் காட்டப்படும்.
3. பப்பிள் சார்ட் (Bubble Chart): மூன்று செட் வேல்யூவினை ஒப்பிட்டுக் காட்டுகிறது. இவை ஏறத்தாழ எக்ஸ்-ஒய் சார்ட் போல செயல்படும். எக்ஸ் மற்றும் ஒய் இதில் இரண்டு வேறு வேறு வேல்யூவினைக் குறிக்கின்றன.
4. காலம் சார்ட் (Column Chart): பார் சார்ட்டின் இன்னொரு வகை. இதில் வேல்யூக்கள் நெட்டு வரிசையில் அமைந்த பார்களினால் காட்டப்படும். எக்ஸெல் தொகுப்பில் இவை தான் டிபால்ட் சார்ட்டாக அமைக்கப் பட்டுள்ளன.
5. கோன் சார்ட் (Cone Chart): பார் அல்லது காலம் சார்ட் டைப்பின் இன்னொரு வகை. இதில் பார் அல்லது காலம் களுக்குப் பதிலாக கோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
6. சிலிண்டர் சார்ட் (Cylinder Chart): மேலே உள்ளது போன்றவை. இங்கு வேல்யூக்களை சிலிண்டர்கள் காட்டும் வகையில் சார்ட் அமைக்கப்படும்.
7. டப்நட் சார்ட் (Doughnut Chart): பை சார்ட் போன்றவையே இவை. ஆனால் பை சார்ட் போல ஒரு டேட்டா சிரீஸ் மட்டும் என்ற வரையறை இதற்குக் கிடையாது. ஒவ்வொரு சிரீஸ் வகையும் டப்நட் ஒன்றின் வளையத்தால் காட்டப்படும்.
8. லைன் சார்ட் (Line Charat): இந்த சார்ட்டில் ஒவ்வொரு ஒய் வேல்யுவிற்கும் ஒரு எக்ஸ் வேல்யு இருக்கும். ஒரு மதிப்பில் காலத்தினால் ஏற்படும் மாறுதலைக் காட்ட இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
9. பை சார்ட் (Pie Chart): ஒரே ஒரு டேட்டா சிரீஸ் மட்டும் இதனால் காட்டப்படும். அதாவது ஒர்க் ஷீட்டில் ஒரு நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள டேட்டா மட்டும் இதில் படமாகக் கிடைக்கும். இதில் அதிகமாக குறுக்காக தொடர்புள்ள வேல்யூக்களைக் காட்ட இயலாது. ஒரு டேட்டா சீரிஸில் உள்ள ஒவ்வொரு வேல்யூவும் ஒரு ஸ்லைஸால் காட்டப்படும். இப்படியே அடுக்கிக் காட்டப்படும். இந்த சார்ட் பார்ப்பதற்கு கவரும் வகையிலும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும்.
10.பிரமிட் சார்ட் (Pyramid Chart): பார் அல்லது காலம் சார்ட்டின் இன்னொரு வகை. இந்த சார்ட்டில் பார் அல்லது காலம் களுக்குப் பதிலாக பிரமிட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
11. ரேடார் சார்ட் (Radar Chart): இந்த ரேடார் கண்காணிக்கும் ரேடாரைக் குறிக்கவில்லை. ஒரு புள்ளியிலிருந்து ஒளி வெளியே ஒளிறுவதைக் குறிக்கிறது. இதில் மையம் என்பது சைபரைக் குறிக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு சீரிஸ் டேட்டாவும் பயணிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் ஒரு டேட்டா பாய்ண்ட் காட்டப்படும். இந்த டேட்டா பாய்ண்ட்கள் அனைத்தும் ஒரு வரியால் இணைக்கப்படும். இந்த சீரிஸ்களை வரிகள் குறுக்கே செல்வதால் ஏற்படும் ஏரியாவினை வைத்து மதிப்பை அறியலாம்.
12.ஸ்டாக் சார்ட் (Stock Chart): ஒரு டேட்டாவின் மூன்று முதல் ஐந்து வேல்யூக்களை இதன் மூலம் காட்டலாம்.
13. சர்பேஸ் சார்ட் (Surface Chart): வேல்யூக்களில் ஏற்படும் கால மதிப்பினை இது காட்டுகிறது. எனவே இது இரண்டு பரிமாணங்களின் தொடர்ச்சியாக உள்ள ஒரு வளைவாக இருக்கும்.
14. எக்ஸ்-ஒய் ஸ்கேட்டர் சார்ட் (XY Scatter Chart): வேல்யூக்களை ஜோடி ஜோடியாக ஒப்பிட்டுக் காட்டும். எக்ஸ் மற்றும் ஒய் கோஆர்டினேட் செட்களாகக் காட்டும். ஒரு சோதனையில் ஏற்படும் பல்வேறு விளைவுகளின் மதிப்பைக் காட்ட இந்த சார்ட் பயன்படும்.

சார்ட்களில் டேட்டா லேபிள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பை – சார்ட் அமைத்தால் அதில் டேட்டா விற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம். எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும்.
3.இதில் உள்ள Data Labels என்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது.
4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.
அடுத்து எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
2. பின் Chart மெனுவிலிருந்து Chart Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Chart Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இந்த பாக்ஸில் உள்ள Data Lables என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் பல்வேறு வகையான டேட்டா லேபிள்களைக் காட்டும். உங்களுடைய சார்ட்டின் தன்மைக்கேற்ப காட்டப்படும் டேட்டா லேபிள்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை மாறும்.
4. இந்த டேட்டா லேபிள்களைப் பார்த்தால் அடிப்படையில் ஐந்து வகைகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொன்றும் டேட்டாவின் தன்மை மற்றும் லேபிளின் வகை ஆகியவற்றை இணைப்பதில் வேறுபட்டிருக்கும். இவற்றிலிருந்து உங்கள் நோக்கத்தை வெளிக்காட்டும் சிறந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
5. OK கிளிக் செய்திடவும். சார்ட் லேபிள்களுடன் வடிவமைக்கப்பட்டு காட்டப்படுவதற்கு தயாராக இருக்கும்.

பஞ்சவர்ண மினி இட்லி

தினமும் இட்லிக்கு சாம்பார், சட்னி தொட்டு சாப்பிட்டு அலுப்பு ஏற்படுகிறதா? இந்த வாரம் உங்களுக்காகவே இனிய மாற்றங்களுடன் இட்லி செய்ய கற்றுக் கொள்ளலாம். பஞ்சு போன்ற மென்மையுடன் மெத்தென்று இருப்பதுதான் இட்லியின் பெருமை. காய்கறிகளையும் சேர்த்து நாம் செய்யப்போகும் இட்லியோ பஞ்சவர்ணத்தில் பச்சைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் `பச்சக்’கென்று ஒட்டிக் கொள்ளும் வகையில் இருக்கும்.

சின்ன இட்லி.. பெரியசுவை…

பஞ்சவர்ண இட்லியும் பெரிதாக இல்லாமல் சிறியதாக மினி இட்லியாகவே செய்வோம். ஆனால் சுவை மட்டும் அதிகமாக மேக்சி அளவில்

கிடைக்கும்.பஞ்சவர்ணத்தில் பார்க்க மட்டும் இனிமையானதல்ல இந்த இட்லி. கூடுதலாக ஆரோக்கியம் தரும் அருமைகள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கிறோம். தக்காளி, வெங்காயம், பூண்டு போன்ற சுவையும் சத்தும் மிக்க காய்கள், கொத்தமல்லி, புதினா போன்ற இலைகள், குழந்தைகளுக்குப் பிடித்த பல பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) போன்றவற்றை சேர்ப்பதால் சுவைக்கு சுவை, ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்.

பலசுவை, பல வண்ணம் கொண்ட குட்டி குட்டியான மினி இட்லிகளை சாப்பிடுவோரின் சுவை நாளங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கும். வாருங்கள் பஞ்சவர்ண மினி இட்லி செய்யலாம்.

பஞ்சவர்ண மினி இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 1 கப்
தக்காளி சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் துவையல் – 2 டேபிள் ஸ்பூன்
பலப் பழ ஜாம் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத் தேங்காய்ப் பூரணம் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* இட்லி மாவை 5 கிண்ணங்களில் ஊற்றவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவில் ஒன்றில் தக்காளி சட்னி, இரண்டாவதில் கொத்தமல்லி சட்னி, மூன்றாவதில் வெங்காயத் துவையல், நான்காவதில் பலப் பழ ஜாம், ஐந்தாவதில் வெல்லத் தேங்காய் பூரணம் போட்டு ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவையும் அதில் போட்ட கலவையுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள மாவுக்கலவையை எண்ணை தடவிய இட்லித் தட்டில் மினி இட்லிகளாக ஒரு மினி இட்லிக்கு 2 டேபிள்ஸ்பூன் என்ற கணக்கில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கண்ணைக் கவரும் வண்ணம் மிகுந்த சத்தான சுவையான பஞ்சவர்ண மினி இட்லி தயார்.

* பரிமாறுகையில் ஐந்து சுவைகளுடன் கூடிய மினி இட்லிகளை வரிசையாக அடுக்கி பரிமாறவும்.

உபயோகமான குறிப்பு

* காய்கறி ஊறுகாய், பூண்டுத் தொக்கு, இட்லி மிளகாய்ப்பொடி, பைன் ஆப்பிள் ஜாம் என்று அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப பஞ்சவர்ண மினி இட்லிகளின் சுவையை மாற்றி மாற்றிச் செய்யலாம்.

கையடக்கமான குறிப்பு

* சிறிய குழந்தைகளுக்கு இனிப்பு சுவையும், பெரியவர்களுக்கு கார சுவையும் நிறைந்த மினி இட்லிகளை அவரவர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு தயாரித்து அசத்தலாம்.

கீதா பாலகிருஷ்ணன்