பஞ்சவர்ண மினி இட்லி

தினமும் இட்லிக்கு சாம்பார், சட்னி தொட்டு சாப்பிட்டு அலுப்பு ஏற்படுகிறதா? இந்த வாரம் உங்களுக்காகவே இனிய மாற்றங்களுடன் இட்லி செய்ய கற்றுக் கொள்ளலாம். பஞ்சு போன்ற மென்மையுடன் மெத்தென்று இருப்பதுதான் இட்லியின் பெருமை. காய்கறிகளையும் சேர்த்து நாம் செய்யப்போகும் இட்லியோ பஞ்சவர்ணத்தில் பச்சைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் `பச்சக்’கென்று ஒட்டிக் கொள்ளும் வகையில் இருக்கும்.

சின்ன இட்லி.. பெரியசுவை…

பஞ்சவர்ண இட்லியும் பெரிதாக இல்லாமல் சிறியதாக மினி இட்லியாகவே செய்வோம். ஆனால் சுவை மட்டும் அதிகமாக மேக்சி அளவில்

கிடைக்கும்.பஞ்சவர்ணத்தில் பார்க்க மட்டும் இனிமையானதல்ல இந்த இட்லி. கூடுதலாக ஆரோக்கியம் தரும் அருமைகள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கிறோம். தக்காளி, வெங்காயம், பூண்டு போன்ற சுவையும் சத்தும் மிக்க காய்கள், கொத்தமல்லி, புதினா போன்ற இலைகள், குழந்தைகளுக்குப் பிடித்த பல பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) போன்றவற்றை சேர்ப்பதால் சுவைக்கு சுவை, ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்.

பலசுவை, பல வண்ணம் கொண்ட குட்டி குட்டியான மினி இட்லிகளை சாப்பிடுவோரின் சுவை நாளங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கும். வாருங்கள் பஞ்சவர்ண மினி இட்லி செய்யலாம்.

பஞ்சவர்ண மினி இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 1 கப்
தக்காளி சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் துவையல் – 2 டேபிள் ஸ்பூன்
பலப் பழ ஜாம் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத் தேங்காய்ப் பூரணம் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* இட்லி மாவை 5 கிண்ணங்களில் ஊற்றவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவில் ஒன்றில் தக்காளி சட்னி, இரண்டாவதில் கொத்தமல்லி சட்னி, மூன்றாவதில் வெங்காயத் துவையல், நான்காவதில் பலப் பழ ஜாம், ஐந்தாவதில் வெல்லத் தேங்காய் பூரணம் போட்டு ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவையும் அதில் போட்ட கலவையுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள மாவுக்கலவையை எண்ணை தடவிய இட்லித் தட்டில் மினி இட்லிகளாக ஒரு மினி இட்லிக்கு 2 டேபிள்ஸ்பூன் என்ற கணக்கில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கண்ணைக் கவரும் வண்ணம் மிகுந்த சத்தான சுவையான பஞ்சவர்ண மினி இட்லி தயார்.

* பரிமாறுகையில் ஐந்து சுவைகளுடன் கூடிய மினி இட்லிகளை வரிசையாக அடுக்கி பரிமாறவும்.

உபயோகமான குறிப்பு

* காய்கறி ஊறுகாய், பூண்டுத் தொக்கு, இட்லி மிளகாய்ப்பொடி, பைன் ஆப்பிள் ஜாம் என்று அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப பஞ்சவர்ண மினி இட்லிகளின் சுவையை மாற்றி மாற்றிச் செய்யலாம்.

கையடக்கமான குறிப்பு

* சிறிய குழந்தைகளுக்கு இனிப்பு சுவையும், பெரியவர்களுக்கு கார சுவையும் நிறைந்த மினி இட்லிகளை அவரவர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு தயாரித்து அசத்தலாம்.

கீதா பாலகிருஷ்ணன்

%d bloggers like this: