Daily Archives: ஏப்ரல் 10th, 2011

நல்ல தீர்ப்பு நம் கையில்

இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன… அதற்குள், உங்கள் பொன்னான ஓட்டுகளை பதிவு செய்ய, ஏதாவது முடிவெடுத்தாக வேண்டும். எதையெல்லாம் மனசுக்குள் கொண்டு வந்து எடை போடுவது, எந்த நியாய தராசில் வைத்து வேட்பாளர்களை நிறுப்பது, என்ன தான் ஜாதி, மதம், கட்சி சார்ந்த வாக்காளர்கள் என்று கணக்கு காட்டினாலும், வெற்றி வேட்பாளர்களை தீர்மானிப்பது, கடைசி நேரத்தில் முடிவெடுக்கும் நடுநிலை வாக்காளர்களே என்பது கடந்த கால வரலாறு. ஆகவே, நடுநிலை வாக்காளர்களான நாம் தான், இந்த தேர்தலிலும் வேட்பாளர்களை தீர்மானிக்க வேண்டும்.

 

“ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போட்டேன்’ என்று சொல்லிக் கொள்ளத் தான், எப்போதும் நம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு பிரியம். ஆகவே, சுயேச்சை வேட்பாளர்கள் ஜெயித்து வருவது அபூர்வத்திலும் அபூர்வம். உங்களுக்கு உழைக்கக்கூடிய, உங்களுக்கு உதவக்கூடிய, தொகுதியின் மேல் அக்கறை உள்ள, தேச பக்தியுள்ள நல்லவரை தேர்வு செய்யுங்கள் என்று எல்லாரும் சொன்னாலும், அப்படி எல்லாம் இப்போது எந்த வேட்பாளரும் இல்லை; அப்படியே இருந்தாலும், அவர் முன்னூற்று சொச்சம் ஓட்டு கூட வாங்க முடியாதவராகத்தான் இருப்பார். இதற்கு உதாரணம், நதிகளை தேசியமயமாக்குவதற்காக நீண்ட நடைபயணம் மேற்கொண்டவரும், “உன்னால் முடியும் தம்பி’ என்று, வாழ்க்கைகக்கு வழிகாட்டக் கூடிய தன்னம்பிக்கை நூல்கள் பல எழுதியவருமான, எம்.எஸ்.உதயமூர்த்தி, நம்பிக்கையுடன் மதுரை மத்திய தொகுதியில் நின்று, மாதக் கணக்கில் பிரசாரம் செய்தும், கடைசியில், ஆயிரத்திற்கும் குறைவான ஓட்டுகளே வாங்கினார். பரவாயில்லை… நான் ஓட்டளிக்கப் போகிறவரும், அந்த ஆயிரத்தில் ஒருவராக இருக்கட்டும் என்று ஓட்டளிக்கும் கொள்கை பிடிப்பு உள்ளவராக நீங்கள் இருக்கலாம் அல்லது அனைவரும் மோசமானவர்கள் தான்; ஆனாலும், ஓட்டளிக்கும் ஜனநாயகக் கடமையை நான் தவற மாட்டேன். ஆகவே, “49 ஓ’ பட்டனைத் தான் அழுத்துவேன் எனும் லட்சியவாதியாகவும் நீங்கள் மாறலாம், எதுவும் தப்பில்லை.

 

“கழகங்களுக்கு ஓட்டளித்து, ஓட்டளித்து ஒன்றும் பிரயோசனம் இல்லை; ரொம்பவே ஏமாற்றமாகி விட்டது. ஏதாவது மாற்றம் வேண்டுமே’ என, தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணிகள் இல்லாத மூன்றாவது கூட்டணிக்கு, நடுநிலை வாக்காளர்கள் ஆசைப்பட்டனர். மூன்றாவது கூட்டணி வைப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்., கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., – தே.மு.தி.க., ஆகிய கட்சியினர் முயற்சிக்கவும் இல்லை, மெனக்கெடவுமில்லை. முடிந்து போன விஷயத்தைப் பற்றி இப்போது பேசி, பயனும் இல்லை. இன்றைய தேதிக்கு, கழக கூட்டணிகளுக்கு கீழ், சுயேச்சைகளுக்கு மேல், அதிகம் விமர்சனத்தை சுமக்காத, கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பவர்களாக களத்தில் நிற்கும், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். இல்லை, தேசியமும், தெய்வீகமுமே நாட்டிற்கு, வீட்டிற்கு நல்லது என்பவர்கள், பா.ஜ., பக்கம் போகலாம். ஆனால், அவர்களுக்கே தெரியும், நாட்டில் நம் செல்வாக்கு என்ன என்பதை தெரிந்து கொள்ளத்தான் நிற்கிறோமே தவிர, ஆட்சியைப் பிடிக்க அல்ல என்று. உங்கள் தொகுதியில் யார், யார் எந்த, எந்த சின்னத்தில் நிற்கின்றனர் என்று, எங்கே உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் என்று கேட்டால், எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும். ஆகவே, இரு கழகங்களின் வேட்பாளர்கள் அல்லது இரு கழகங்களின் கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதே நிதர்சனம். இந்த இரு கழகங்களையும் முந்திக்கொண்டு, இந்த தேர்தலில் ஏகபோகமாக, இன்றைக்கு வரை நின்று கொண்டு இருப்பவர்கள் தேர்தல் அதிகாரிகள் தான்.

 

அடேங்கப்பா…! அன்றைக்கு ஓரு சேஷனைத்தான் பார்த்தோம்; இன்றைக்கு, திரும்பிய பக்கமெல்லாம் சேஷன்கள் தான். அதிலும், தனி மனுஷியாக, ஐந்தே கால் கோடி ரூபாயை நள்ளிரவில் பிடித்த சங்கீதா, அகில இந்திய அளவில், ஒரே நாளில் பிரபலமாகி விட்டார். அவரோ, “நான் என் கடமையைத் தானே செய்தேன்’ என்கிறார் அடக்கமாக! “குழந்தையின் ஒரு கால் வெள்ளிக் கொலுசு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, கோவில் அலுவலகத்தில் உள்ளது; தகுந்த ஆதாரத்தை சொல்லி, கொலுசை பெற்றுச் செல்லவும்’ என்று, ஸ்பீக்கரில் சத்தத்தை கேட்கும் பலர், கடந்த மாதம் காணாமல் போன நம் சகலை பிள்ளை கொலுசாக இருக்குமோ, எதற்கும் எட்டிப் பார்ப்போமே என்று, கோவில் அலுவலகத்திற்கு போனால், அங்கே இவரைப் போல, அந்த நூறு ரூபாய் கூட பெறுமானமில்லாத கொலுசிற்கு சொந்தம் கொண்டாடி, இருநூறு பேர் வரிசையில் நிற்பர். அப்படிப்பட்ட இந்த காலத்தில், ஐந்தே கால் கோடி ரூபாய் உரிமையை, யாரும் இதுவரை கோரவில்லை. அது யாருடைய பணம் என்றே இன்றளவும் தெரியவில்லை என்பது தான் வேடிக்கை. “அதெல்லாம் எங்க பணம்’ என்று, திருச்சி பகுதி வாக்காளர்களும் கூட வேடிக்கையாக பொருமவில்லை. இது கைப்பற்றப்பட்ட கோடிகள், இப்படி கைப்பற்றப்படாத கோடிகள் இன்னும் எங்கெங்கெல்லாம் பதுக்கப்பட்டு இருக்கிறதோ? இப்படி கோடிகளில் பிடிபடும் பணம் பெரும்பாலும், ஆளுங்கட்சி வட்டாரத்திலேயே பிடிபடுவதும், கொள்கை, லட்சியம் இவை எல்லாம் முன்னிலைப்படுத்தாமல், இலவசங்களை நம்பியே இறங்கியது மட்டுமல்ல, அதை நியாயப்படுத்தியதும் அபத்தம்.

 

கருத்துக் கணிப்புகள், அ.தி.மு.க., கூட்டணியை முதன்மைப்படுத்தியதும் துணை முதல்வர் ஸ்டாலின் போன்றவர்களே, “வாஷிங் மிஷின், பிரிட்ஜ் எல்லாம் கூட தருவோம்’ என்று சட்டப்பூர்வமான கையூட்டிற்கு ஆதரவாக ரொம்பவே இறங்கி வந்ததும் அடுத்த கூத்து. அரசியல் பெருந்தலைகள் எல்லாம் தேவையில்லை; நடிகர் வடிவேலுவும், குஷ்புவும் மட்டுமே போதும் என்று, அளவிற்கு அதிகமாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், மாற்று வேட்பாளராக இருப்பவர், தன் மனைவியையே ஏமாற்றும் வேட்பாளராகக் கூட மாறுவார். இதெல்லாமா அரசியலில் சகஜம் என்ற முகச் சுளிப்பை ஏற்படுத்தி இருப்பதும், ஆளுங்கட்சி கூட்டணிக்கு கறைகள் மட்டுமல்ல, குறைகளும் கூட. அவர்கள் அப்படி என்றால், இவர்கள் எப்படி? தனி மெஜாரிட்டியாய் ஆட்சி அமைக்க வேண்டும் என்றளவிற்கு காய்களை நகர்த்திய அ.தி.மு.க.,வால், வைகோ போன்ற நண்பர்களை கூட காயப்படுத்திவிட்டது. கடைசி நேரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், ஒரே மேடையில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் தோன்றவில்லை. நாகரிகமற்ற அரசியல் என்று தெரிந்த பின்னரும், நாகரிகமற்று விமர்சிக்கின்றனர், குறிவைத்து தாக்குகின்றனர் என்று கூறுவதும், அ.தி.மு.க., கூட்டணிக்கான குறைகள் மற்றும் கறைகள் இவைகளை எல்லாம் நியாய தராசில் நிறுத்தி வைத்து, அறிவு சார்ந்த வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும்.
மிகவும் கடமை உணர்ச்சியுடன், அதிகாரிகள் நடத்தும் இந்த தேர்தலை, நாம் மதிப்பதும், நன்றி செலுத்துவதும் எப்படி என்றால், தவறாமல் ஓட்டு போடுவதன் மூலம் தான். காரணம், அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல்வாதிகளோ, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்; காரணம், அது உங்கள் பணம்’ என்று, தங்களைப் போலவே லஞ்சம் வாங்கச் சொல்கின்றனர். அவர்களின் பேச்சைக் கேட்டு, அந்த அசிங்கம் பிடித்த பணத்தை தொடாமல், சிங்கம் போல கம்பீரமாக போய், உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் சொந்த வாகனங்களிலேயே போய், ஓட்டு போட்டு விட்டு வாருங்கள். சொந்தமாக சைக்கிள் கூட இல்லையா… பராவாயில்லை நடந்து போய் ஓட்டு போட்டு விட்டு வாருங்கள்; உங்கள் மனசு உங்களை பாராட்டும். ஓட்டுச்சாவடிக்கு போய்விட்டு, வரிசை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்பட்டு திரும்பாமல், கொஞ்சம் பொறுமையாக இருந்து, உங்கள் மதிப்புமிக்க ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். ஓட்டுப்பதிவு அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை என்பது ஓட்டுப் போடுவதற்காக. ஆகவே, அன்று, சீரியல்களில் மூழ்கி விடாமல், மறக்காமல் ஓட்டு போட்டு விடுங்கள். ஐந்து மணி வரை நேரம் இருக்கிறதே என்று அசட்டையாக இருக்காமல், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஓட்டுச்சாவடிக்கு போய், உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். மதிய உணவு முடித்து, நீங்கள் ஒரு முடிவெடுத்து ஓட்டுச்சாவடிக்கு செல்வீர்கள் என்றால், ஏற்கனவே உங்கள் பெயரில் ஒருவர் முடிவு எடுத்திருப்பார். ஆகவே, உங்கள் சிந்தனையை, தீர்க்கமான முடிவை, ஏப்., 12க்குள் எடுத்து விடுங்கள். உங்கள் முடிவு, நல்ல ஜனநாயகத்திற்கு வழிகாட்டட்டும்.

நன்றி-தினமலர்

இணையத்தில் யார் அதிக நேரம்!

இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை. கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது. தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர்.
இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா!
மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன.
காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன.
பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்.

அயிரை மீன் குழம்பு

`மீன் குழம்புகளில் அயிரை மீன் ருசியை அடித்துக் கொள்ள எதுவும் கிடையாது. உருவத்தில் சிறியதான அயிரை சமைக்க எளிதானது. ருசியில் மேலானது. மற்ற மீன்களைப்போல தலை, குடல்களை பக்குவம் செய்ய படாதபாடு பட வேண்டாம். லேசாக கிள்ளினாலே மீன் தலை நீக்கப்பட்டு சமைக்கும் பக்குவத்துக்கு வந்துவிடும். ஒரு வீட்டில் சமைத்தால் அந்த தெருவையே மணமணக்க வைத்து கிராமிய மணம் பரப்பும் பெருமையும் அயிரை மீனுக்கு உண்டு.

அயிரை மீன் குழம்பு

அதேபோல அசைவத்தில் எலும்பு, கொழுப்பு, குடல் என்று ஒதுக்கிவிட்டு சாப்பிடுபவர்கள் இருந்தாலும் ஈரலை வெறுப்பவர்கள் இருக்க மாட்டார்கள். சில சத்துக்களுக்கு இன்றியமையாததான ஈரலை வறுவல் செய்து ருசிக்கவும் இந்த வாரம் கற்றுக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

* மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

* புளியைக் கரைத்து வடிகட்டி, அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயம், தக்காளி இவை சேர்த்து வதக்கவும்.

* தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* இப்போது கரைத்த புளிக்கரைசல், மசாலா இவை சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.

* மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.

* சுவையான அயிரை மீன் குழம்பு மணக்க மணக்க தயார்.

செப்’ தாமு