Daily Archives: ஏப்ரல் 11th, 2011

பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்

“பேசுவது தப்பா குருவே’ என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்னை?’ என்றார் குரு.
“நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?’
“பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்’ என்று சொன்ன குரு, அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான். வேலையில் கெட்டிக்காரன். நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. வழக்கமான வாடிக்கையாளர்தான் பேசினார். அவர் வீட்டுக் குழாயில் ஏதோ பிரச்னை, உடனே சரி செய்ய வேண்டும் என்றார். ஆனால், அவரது வீட்டில் யாருமில்லை. “நீயே கதவைத் திறந்து கொண்டு போ. வீட்டு சாவி முன்பக்க ரோஜா தொட்டிக்குக் கீழே இருக்கிறது’ என்றார். அவனுக்குத் தயக்கம். காரணம், அவர் வீட்டில் ஒரு பெரிய சைஸ் அல்சேஷன் நாய் இருப்பதைப் பார்த்திருக்கிறான். “சார், உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே’ என்று சந்தேகத்தைக் கிளப்பினான்.
அதற்கு அவர், “அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வீட்டுக்குள்ள இருக்கும். ஆனா ஒரு விஷயம். வீட்டுல ஒரு கிளி இருக்கு. அது பேசும். ஆனா பேச்சுக் கொடுத்துராதே. குழாயை மட்டும் ரிப்பேர் பண்ணிட்டு கிளம்பிடு’ என்றார்.
அவனக்கு தயக்கம்தான், இருந்தாலும் வாடிக்கையாளர் வீடே என்று அங்கு போனான். சொன்னது போலவே பூந்தொட்டிக்குக் கீழ் சாவி இருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அல்சேஷன் அவனை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இவன் ஒழுகிக் கொண்டிருந்த குழாயை சரி செய்ய துவங்கினான். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், கிளியின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அவனை கிண்டலடித்துப் பேசியது. விதவிதமாய் திட்டியது. அவனால் தாங்க முடியவில்லை. கிளம்பும் போது பார்த்துக் கொள்வோம் என்று அமைதி காத்தான். வேலை முடிந்தது. அப்போதும் கிளி நிறுத்தவில்லை. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. வாடிக்கையாளர் சொன்ன அறிவுரையையும் மீறி, “அட முட்டாள் கிளியே, அறிவில்லையா, இப்படி தொந்தரவு செய்றியே’ என்று கிளியை நோக்கிக் கத்தினான்.
அதுவரை அவனிடம் பேசிக் கொண்டிருந்த கிளி, சட்டென்று அல்சேஷன் பக்கம் திரும்பி, “டைகர், அவனை விடாதே கடி’ என்றது. உடனே அல்சேஷனும் குழாய் ரிப்பேர்காரனை நோக்கிப் பாய்ந்து கடித்தது. அதனிடமிருந்து தப்பிப் போவதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குதான் தெரியும்!’
என்று இந்த வேடிக்கை கதையை சொன்னதும் தேவையில்லாமல் பேசுவதால் வந்த பிரச்னையை புரிந்து கொண்டான்.
அப்போது குரு அவனுக்கு சொன்ன Winமொழி:
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்.

இலவசங்கள் கொடுக்காமல் ஆட்சியை பிடிக்க வழி

மானியங்கள் உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் உண்மையில் பயன் உள்ளதா என் கேள்வி எழுந்துள்ளது. 2008 – 09 நிதியாண்டு பட்ஜெட்டில் 18 ஆயிரத்து 956 கோடி ரூபாயை நலத்திட்டங்களுக்கு செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது ஆண்டு மொத்த வருவாயில் 35 சதவீதம். நடப்பாண்டு பட்ஜெட்டில் மூலதன செலவிற்காக 9 ஆயிரத்து 140 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இது மொத்த வருவாயில் 17 சதவீதம். இதே போன்ற திட்டங்களுக்கு 2009 – 10 நிதி ஆண்டில் 20 ஆயிரத்து 55 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது இந்த ஆண்டு வரவில் 37 சதவீதம். இதில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சலுகைகளாக வழங்கப்பட்டுள்ளன.

* இலவச மின்சார மானியம் – ரூ.295 கோடி
* அரசு காப்பீட்டு மானியம் – ரூ.750 கோடி
* இலவச கலர் “டிவி’ வழங்குதல் – ரூ.500 கோடி
* பொது வினியோக உணவு மானியம் – ரூ.3,750 கோடி
* வீட்டு வசதி – குடிசை மாற்று வாரியம் – ரூ.1,800 கோடி
* சமத்துவபுரம் – ரூ.75 கோடி
* வீடு கட்ட மானியம் – ரூ.262 கோடி
* இலவச காஸ் அடுப்பு திட்டம் ரூ.140 கோடி
* வேலையில்லாதோர் இலவச மானியம் – ரூ.60 கோடி
மொத்த மானியம் – ரூ.7,632 கோடி

மொத்த வருவாயில் 14 சதவீதம் இலவச திட்டங்களுக்கு மானியமாக ஒதுக்க பட்டுள்ளது. இதற்கு மேல் அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி மூலம் 6 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. மொத்த நிதி பற்றாக்குறையான 12 ஆயிரத்து 860.45 கோடியில் மூலதன ஒதுக்கீடுக்கான செலவு 8 ஆயிரத்து 609.12 கோடியை கழித்தாலும், நிதி பற்றாக்குறை மட்டுமே 5 ஆயிரத்து 19.54 கோடி ரூபாய் இருக்கும். மொத்த இலவச மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 632 கோடி ரூபாயை தவிர்த்து பார்த்தால், அரசுக்கு உபரி நிதியே கிடைக்கக் கூடும். இதை வைத்தே இந்த மானியங்கள் பயனுள்ள திட்டங்களா இல்லையா என்பதை அறியலாம்.

இலவச “டிவி’ திட்டம், மக்கள் வேலை செய்யும் காலத்தை குறைக்கிறதே தவிர, திறமையை வெளிக்காட்ட வழி செய்யவில்லை. சில கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே பயன் அடைகின்றனர். இதற்கான மின் தேவையும் அதிகரிக்கும். இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை மக்கள் பெற்றனர். ஆனால் அரசு 750 கோடி ரூபாய் பிரிமிய தொகை செலுத்த நிதி ஒதுக்கி உள்ளது. அதாவது நான்கரை மடங்கு அதிக பிரிமியம் செலுத்தி இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதனால் காப்பீட்டு நிறுவனத்துக்கு தான் வருமானம். இதற்கு பதில் பொது மருத்துவமனைகளை விரிவுபடுத்தி எல்லா வகையான உயர் சிகிச்சை வசதிகளையும் நிரந்தரமாக கிடைக்கச் செய்யலாம்.

வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை மானியம் என்று 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு போக முயற்சிக்காமல், கையெழுத்திட்டு பணம் பெறும் சோம்பேறித்தனம் உருவாகி விட்டது. நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைப்பதால் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போகும். இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கும். தற்போதைய நிலையில் சாதாரண வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே கடினமாக உள்ளது. எப்படியும் வேலையை முடிக்க வேண்டும் என்போர் கூடுதலாக கூலியை கொடுத்து முடிக்க முற்படுவர். இதனால் மேலும் பொருட்கள் விலை கூடும். இப்படி, மானியத்தை கொடுக்கும் கொள்கைகளை விட்டு, அடிப்படை தேவைகளான, குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, சாலை, மின் உற்பத்தி போன்ற அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தால், இலவசங்கள் கொடுக்காமலே அந்த அரசு ஆட்சியை பிடிக்க முடியும். கட்சிகள் சிந்திக்க வேண்டும். வரும் காலங்களில் அரசுகள் அவ்வாறு அமைந்தால், மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.

நன்றி-தினமலர்

பனீர், காளான் பூரணம்

மிளகாய் பஜ்ஜி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜி சாப்பிட்டிருப்போம். வித்தியாசமாக, பனீரை துருவிய காளான் பஜ்ஜி செய்ய கற்றுத் தருகிறார், மதுரை ராயல்கோர்ட் ஓட்டல் சமையல் நிபுணர் கணேசன்.

தேவையானவை :

காளான் – 200 கிராம்
பனீர் – 150 கிராம்
முந்திரி பருப்பு – 50 கிராம்
வேர்க்கடலை – 25 கிராம்
மைதா – 150 கிராம்
சோளமாவு – 75 கிராம்
முட்டை – இரண்டு
எண்ணெய் – பொறிப்பதற்கு
பிரட் தூள் – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை: காளானை கழுவி சுத்தம் செய்து, மையத் தண்டை நீக்கி விடவேண்டும். முந்திரிபருப்பு, வேர்க்கடலையை சிறுகுருணையாக அரைத்து, அதனுடன் துருவிய பனீரை சேர்க்கவும். மைதா, சோளமாவு, உப்புடன் முட்டையை சேர்த்து நன்கு அடித்து பிசையவும். தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி, வேர்க்கடலை, பனீர் குருணையை காளானின் மையப்பகுதியில் அடைத்து, பஜ்ஜி மாவில் மூழ்க வைத்து, எண்ணெயில் பொறித்தெடுக்க வேண்டும்.வித்தியாசமான இந்த சுவை, குழந்தைகளை மிகவும் ஈர்க்கும்.

சமையல் நேரம்: 20 நிமிடம்

பாரம்பரிய பெருமைமிக்க அழகுக் களஞ்சியம்

மிழகத்தை பாரம்பரிய பெருமைமிக்க அழகுக் களஞ்சியம் என்று சொல்லலாம். பிரமிக்க வைக்கும் கலை நுட்பங்கள் நிறைந்த கோவில்கள், வரலாற்றுக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பிரமாண்ட கோட்டைகள், இயற்கையிடம் சிறப்பு வரம் வாங்கி எழிலோவியம் தாங்கி நிற்கும் பசுமைப் பள்ளத்தாக்குகள், அழகைக் கொட்டும் அருவிகள் என தமிழகத்தின் வனப்பு அளவிடற்கரியது.

***

நீண்ட கடற்கரைகள், விதவிதமான விழாக்கள், மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவுகள், உபசார உணர்வு மிக்க மக்கள்… என எல்லாமும் கொண்டது, தமிழ்நாடு. இவ்வளவு சிறப்புகளையும் சுற்றிப்பார்க்க, அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.

***

உலகின் 2-வது நீளமான பீச் மெரீனா, தமிழகத்தின் உயர்ந்த சிகரமான ஆனைமுடி, பழம் பெருமை சொல்லும் சிற்பங்களை தாங்கி நிற்கும் மகாபலிபுரம் சிற்பங்கள், தஞ்சை கோவில், இயற்கை அழகோவியங்களாக திகழும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல், ஊட்டி, உயிரியல் சரணாலயங்களான முண்டன்துறை, வேடந்தாங்கல், வண்டலூர், கோடியக்கரை, கன்னியாகுமரியில் சூரியோதயம், வான்புகழ் வள்ளுவர் சிலை என காணவேண்டிய அதிசயங்களின் பட்டியல் நீளும்.

***

தமிழகம் பல அதிசயங்களை உள்ளடக்கியது. தீரமிக்க சுதந்திர போராட்ட தியாகிகள், வரலாறுகள், களிப்புமிகு காட்சி கொண்ட வாசஸ்தலங்கள் மட்டும் நமது சிறப்பல்ல. சில ரசிக்க வைக்கும் வினோதங்களும் இருக்கின்றன. கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கும். சென்னிமலை மாமாங்க தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்தில் மட்டும் நீர் பொங்கிப் பிரவகிக்கும்.

***

திருச்சி மலைக்கோட்டை எனப்படும் அந்த குன்று தோன்றி 230 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இமயமலையைவிட மூத்த இந்த பாறையின் வயது பூமியின் வயதில் சரிபாதி.

***

குமரி மாவட்டம் கேரளபுரம் கோவிலில் உள்ள விநாயகர் சிலை, ஆறு மாதங்களுக்கு கறுப்பு நிறத்திலும் ஆறு மாதங்களுக்கு வெண்மை நிறத்திலும் காட்சியளிக்கிறது. அண்ணமங்கலம் பெரிய மலையில் உள்ள சுனையில் கடும் கோடையிலும் கூட நீர் வற்றுவதில்லை. ஊட்டி, குற்றாலம், ஒகேனக்கல் போன்ற பெருமை மிக்க நீர்வீழ்ச்சிகள் தவிர்த்து சிறப்புமிக்க சிற்றருவிகள் பலவும் தமிழகத்தில் ஆங்காங்கே உண்டு.

***

சேலம் பொய்மான்கரடு, சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் மலையில் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். பக்கத்தில் நெருங்க நெருங்க அந்த மாயத்தோற்றம் மறையும்.

***

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் குறிப்பிடத்தக்க சிறப்பு இருக்கிறது. இக்கோவிலின் தெப்பக் குளத்திற்குள் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நீருக்கு அடியில் ஒரு வெள்ளிப் பேழையில் ஸ்ரீஅத்திகிரி வரதராஜ பெருமாள் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சிலையை வெளியில் எடுத்து தரிசனத்திற்கு வைக்கிறார்கள்.

***

திருவக்கரை கோவிலின் பிள்ளையார் சிலை மிகப்பெரியது என்பதால் ஏணி மீது நின்றபடி பூஜை செய்யப்படுகிறது. ஏலகிரியில் உள்ள நிலாவூர் கிராமத்தில் தை மாதத்தில் முதல் பவுர்ணமி அன்று பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள். கரூர் உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலில் கருவறைக்குள் ஆண் பெண் குழந்தை அனைவரும் நுழைந்து சிலையைத் தொட்டு வழிபட முடியும்.

***

செண்பாக்கம் கோவிலில் செல்வ விநாயகருக்கு பூஜை அபிஷேகங்கள் எல்லாம் திறந்த வெளியில் வைத்து நடத்தப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் பிரகாசமான மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று தவறாகக் கருதி கப்பல்கள் வந்து தரை தட்டிவிடக் கூடாது என்பதற்காக தேவிக்கு நேர் எதிராக உள்ள கிழக்கு வாசல் கதவைத் திறப்பதே இல்லை.

***

நீலகிரி ரங்கசாமி சிகரப் பகுதியில் தூண் வடிவில் ஒரு பாறை உள்ளது. ரங்கசாமி தூண் என்று அழைக்கப்படும் இத்தூண் சுமார் 400 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் எந்தப்பகுதியில் இருந்தும் இந்த தூணில் ஏற முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை அடையாறில் ஒரே ஆலமரம் பல விழுதுகளைவிட்டு மிகப்பெரிய தோப்பாக மாறியுள்ளது.

டாஸ்க்பாரும் டூல் பாரும்:

டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும். இதிலேயே குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால் புரோகிராம்கள் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம் சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆன்டி வைரஸ் புரோகிராம் மற்றும் சில தொடங்கும்போதே இயக்கப்படும் புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகாரத்தின் மணி இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப் படும். நம் விருப்பப்படி புரோகிராம் களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக் கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.

ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்

தேவையான பொருட்கள்

ஈரல் – 1/2 கிலோ
முந்திரிப் பருப்பு – 10
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
மிளகுத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1 குழிக்கரண்டி

செய்முறை

* ஈரலை சுத்தம் செய்து கியூப்களாக நறுக்கி கொள்ளவும்.

* அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

* முந்திரி பருப்பையும் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்கவும்.

* ஈரல் நன்கு வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.