பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்

“பேசுவது தப்பா குருவே’ என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்னை?’ என்றார் குரு.
“நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?’
“பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்’ என்று சொன்ன குரு, அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான். வேலையில் கெட்டிக்காரன். நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. வழக்கமான வாடிக்கையாளர்தான் பேசினார். அவர் வீட்டுக் குழாயில் ஏதோ பிரச்னை, உடனே சரி செய்ய வேண்டும் என்றார். ஆனால், அவரது வீட்டில் யாருமில்லை. “நீயே கதவைத் திறந்து கொண்டு போ. வீட்டு சாவி முன்பக்க ரோஜா தொட்டிக்குக் கீழே இருக்கிறது’ என்றார். அவனுக்குத் தயக்கம். காரணம், அவர் வீட்டில் ஒரு பெரிய சைஸ் அல்சேஷன் நாய் இருப்பதைப் பார்த்திருக்கிறான். “சார், உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே’ என்று சந்தேகத்தைக் கிளப்பினான்.
அதற்கு அவர், “அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வீட்டுக்குள்ள இருக்கும். ஆனா ஒரு விஷயம். வீட்டுல ஒரு கிளி இருக்கு. அது பேசும். ஆனா பேச்சுக் கொடுத்துராதே. குழாயை மட்டும் ரிப்பேர் பண்ணிட்டு கிளம்பிடு’ என்றார்.
அவனக்கு தயக்கம்தான், இருந்தாலும் வாடிக்கையாளர் வீடே என்று அங்கு போனான். சொன்னது போலவே பூந்தொட்டிக்குக் கீழ் சாவி இருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அல்சேஷன் அவனை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இவன் ஒழுகிக் கொண்டிருந்த குழாயை சரி செய்ய துவங்கினான். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், கிளியின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அவனை கிண்டலடித்துப் பேசியது. விதவிதமாய் திட்டியது. அவனால் தாங்க முடியவில்லை. கிளம்பும் போது பார்த்துக் கொள்வோம் என்று அமைதி காத்தான். வேலை முடிந்தது. அப்போதும் கிளி நிறுத்தவில்லை. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. வாடிக்கையாளர் சொன்ன அறிவுரையையும் மீறி, “அட முட்டாள் கிளியே, அறிவில்லையா, இப்படி தொந்தரவு செய்றியே’ என்று கிளியை நோக்கிக் கத்தினான்.
அதுவரை அவனிடம் பேசிக் கொண்டிருந்த கிளி, சட்டென்று அல்சேஷன் பக்கம் திரும்பி, “டைகர், அவனை விடாதே கடி’ என்றது. உடனே அல்சேஷனும் குழாய் ரிப்பேர்காரனை நோக்கிப் பாய்ந்து கடித்தது. அதனிடமிருந்து தப்பிப் போவதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குதான் தெரியும்!’
என்று இந்த வேடிக்கை கதையை சொன்னதும் தேவையில்லாமல் பேசுவதால் வந்த பிரச்னையை புரிந்து கொண்டான்.
அப்போது குரு அவனுக்கு சொன்ன Winமொழி:
பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்.

%d bloggers like this: