Daily Archives: ஏப்ரல் 12th, 2011

ஏற்பது இகழ்ச்சி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதிகள் கொடுத்துள்ள இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளன. ஈ.வெ.ரா., அண்ணா ஆகியோர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தினர் நாங்கள் என மார்தட்டிக் கொள்கின்ற இந்த இரு கட்சிகளுமே இப்போது தமிழ்ச் சமூகத்தின் சுயமரியாதைக்குச் சவால் விட்டுள்ளன.  பகுத்தறிவுக் கொள்கைகளின் பரிணாம வளர்ச்சியான திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசுகள் நாங்கள்தான் என்பதில் போட்டி போடும் இந்த இரு அரசியல் கட்சிகளுமே தேர்தலுக்குத் தேர்தல் புதிய புதிய பாணிகளை (திருமங்கலம் பாணி, பென்னாகரம் பாணி) உருவாக்கி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி வருகின்றன.  1967-ல் நடைபெற்ற தேர்தலின்போது தி.மு.க. நிறுவனத் தலைவர் அண்ணாதுரைதான் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என படியரிசித் திட்டம் உள்ளிட்ட கவர்ச்சித் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கத் தொடங்கினார். அப்போதே, ஈ.வெ.ரா., காமராஜ் போன்றவர்கள் தமிழக அரசின் நிதிநிலைமையில் இத்தகைய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என விமர்சனம் செய்தனர். ஆனாலும் 1961-ல் தி.மு.க. வெற்றிபெற்றதும் ஒரு சில இடங்களில் மட்டும் படியரிசித் திட்டத்தை பெயருக்கு நடத்தி “மூன்றுபடி லட்சியம்; ஒருபடி நிச்சயம்’ என அண்ணா தன் பாணியில் அறிக்கைகள் கொடுத்தார்.  இத்தகைய கவர்ச்சித் திட்டங்களுக்கு நிதி தேவை என்பதற்காக “ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம்’ என தமிழக அரசு லாட்டரித் திட்டம் மூலம் தமிழகத்துக்கு லாட்டரியை அறிமுகப்படுத்திய பெருமையும் இவர்களையே சாரும். “கிடைத்தால் வீட்டுக்குக் கிடைக்காவிட்டால் நாட்டுக்கு’ என இதற்காக அடுக்குமொழி விளம்பரங்களையும் செய்தார்கள். உழைப்பை நம்பி வாழும் தமிழர்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டங்கள் இப்படித்தான் தமிழகத்தில் தொடங்கின.  “செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு’ என்று வாழ்ந்து பழகியவன் தமிழன். தன் கையே தனக்கு உதவி, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற சுயமரியாதை உணர்வு இயல்பாகவே தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. இறைவா என்னை யாரிடமும் கையேந்த வைத்துவிடாதே, பிச்சையெடுத்துத் தின்னும் கேவல நிலை மட்டும் எனக்கு வந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்ளும் தமிழர்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளனர்.  உலகனைத்தும் உள்ள உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமசிவன்கூட பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான். அதாவது உழைக்காமல் உண்பதைத் தவறு என சிவபெருமானே தனது திருவிளையாடல் மூலம் உணர்த்தியுள்ளார். தாகத்தில் தவித்த கணைக்கால் இரும்பொறை மரியாதையில்லாமல் வழங்கப்பட்ட குடிதண்ணீரைப் புறக்கணித்து உயிர்நீத்து மானம் காத்தான். “ஏற்பது இகழ்ச்சி’ என ஒளவை அழகுபட உரைத்துள்ளார். ஆனால், இன்று யார் இலவசங்களை அதிகம் கொடுக்கிறார்கள், யார் வாக்குக்குப் பணம் கொடுக்கிறார்கள் என அப்பாவித் தமிழ் மக்களைப் பேச வைத்துள்ளனர் இந்த அரசியல் வியாதிகள்.  கடந்த தேர்தலில் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்பு, விவசாய நிலம் என வாக்குறுதிகளைக் கொடுத்து வாகை சூடிய கருணாநிதி, இப்போது மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என முதல் சுற்றிலேயே அறிவித்துவிட்டார். ஜெயலலிதாவோ மின்விசிறியும் சேர்த்துத் தருவதாக அறிவித்துள்ளார். புதிதாகக் கடைகள் தொடங்கியுள்ள வியாபாரிகள் மக்களைக் கவர்வதற்காக ஒரு பொருள் வாங்கினால் இன்னொரு பொருள் இலவசம் என்று போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியாக விளம்பரம் செய்வது போலத்தான் தேர்தல் அறிக்கைகள் உள்ளன.  தமிழகத்தின் அடிப்படைத் தேவைகளான நதிநீர் இணைப்புத் திட்டங்கள், மின்உற்பத்தித் திட்டங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரம் வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு, மழைநீர் சேகரிப்பு, விவசாய வளர்ச்சி, நெசவுத் தொழில் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், முழுமையான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, தேர்ந்த நிர்வாகம் ஆகியவை குறித்து இரு அரசியல் கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது வருந்தத்தக்கது.  அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சூரிய ஒளி மின்சாரம், மழைநீர் சேகரிப்பு போன்ற பாராட்டத்தக்க சில அம்சங்கள் உள்ளன. ஏற்கெனவே தேர்தல் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்ட 2006 தேர்தல் அறிக்கையில் கருணாநிதி செயல்படுத்திய இலவசத் திட்டங்களால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமை தமிழக மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.  அதேபோல கருணாநிதி அறிவித்த இலவசத் திட்டங்கள் அனைத்துமே அவரது குடும்பத் தொழில்களுக்கு மூலதனமாக அமைந்து அவரது குடும்ப வருவாயைப் பெருக்கியது என்பதுதான் கண்கூடாக நாம் கண்ட உண்மை.  உதாரணமாக, இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியதன் மூலம் கருணாநிதியின் பேரன்களாகிய மாறன் குடும்பத்தினரின் சுமங்கலி கேபிள் நிறுவனமும், கருணாநிதியின் மகன் அழகிரி குடும்பத்தின் கேபிள் நிறுவனமும் பயனடைந்தன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திய தனியார் நிறுவனமாகிய ஸ்டார் குழுமம் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான நிறுவனம். இப்படி மக்களுக்கு இலவசமாக சில பொருள்களை வழங்கி, தனது குடும்ப வியாபாரங்களைப் பெருக்கும் விஞ்ஞான ரீதியான ஊழல் கருணாநிதிக்குக் கைவந்த கலை.  ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என கருணாநிதி அறிவித்துள்ளதன் உள்நோக்கம் ஏழ்மை அகற்றப்பட வேண்டும் என்பதல்ல, ஏழைகள் என்றும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும், அவர்களின் வாக்குகளை இத்தகைய இலவசத் திட்டங்களின் மூலம் பெற்று தானும் தன் குடும்பத்தாரும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதுதான் இந்த அறிவிப்புகளின் உண்மையான நோக்கமாகும்.  சமீபத்தில் நடைபெற்ற குஜராத், பிகார் சட்டமன்றத் தேர்தல்களில் கருணாநிதியின் தேர்தல் அறிக்கை பாணியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இலவசத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளைக் கொடுத்தது.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்கவும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை முறியடிக்கவும், காங்கிரஸ் கட்சி இத்தகைய தந்திரமான முயற்சிகளைச் செய்தது.  இலவச மின்சாரம், வண்ணத் தொலைக்காட்சி என குஜராத்தில் காங்கிரஸ் கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் நரேந்திர மோடியை வீழ்த்த முடியவில்லை. மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இலவசத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தியர்கள் தன்மானம் உள்ளவர்கள், குஜராத்தியர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கும் காங்கிரஸýக்குத் தக்க பதிலடி கொடுங்கள் என்று குஜராத் மாநில மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.  குஜராத் மக்கள் காங்கிரûஸ வீழ்த்தி மீண்டும் மோடியை அரியணையில் ஏற்றினர். இப்போது மோடி குஜராத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியுள்ளார்.  ஒரு லட்சம் கோடி உபரி நிதி வைத்துள்ளார். சாராய வருமானம் இல்லாமலேயே பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.  தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி இரண்டுமே சிறப்பாக உள்ளது. மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஒளிரும் குஜராத், மோடியின் ஆட்சியில் உருவாகியுள்ளது.  இதேபோல நிதீஷ்குமாரின் திறமையான நிர்வாகத்தால் பிகார் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதைக் கண்டு பொறுக்காமல் இத்தகைய கருணாநிதி பாணி இலவசத் திட்டங்களை லல்லுவும், காங்கிரஸ் கட்சியும் பிகார் மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளாகக் கொடுத்தனர். சுயமரியாதை உணர்வுள்ள பிகார் மக்கள் இலவச கவர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறமைக்கே வாக்களித்தனர். மிகப் பின்தங்கிய மாநிலமான பிகார் இப்போது தொழில் விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.  இப்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் இல்லை.  கேரளத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும், புதுச்சேரியிலும் இத்தகைய இலவசத் திட்டங்கள் உள்ளன. தமிழக அரசியலின் தாக்கம் கேரள மாநிலத்தையும், புதுச்சேரியையும்கூடப் பாதித்துள்ளது.  இலவசத் திட்டங்களைப்போல ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஏழை மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாசாரத்தை, தன்மானத்தைப் பற்றி பேசும் திராவிட இயக்கங்கள் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரே பயப்படும் அளவுக்கு பணவிநியோகம் தமிழகத்தில் இப்போது பரவலாக நடைபெறுகிறது.  திராவிட இயக்கத்தவர்கள் ஓட்டுக்குப் பணம் என்கிற நிலைமையைத் தோற்றுவித்துள்ளனர். காவல் துறையின் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கூட பணம் கடத்தப்படுவதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம்கூட தனது கவலையைப் பதிவு செய்துள்ளது.  ஒட்டுமொத்தமாகத் தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்கு நேரும் வகையில் இப்போதைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. இது தமிழர்களின் பண்பாட்டுக்கும், தன்மானத்துக்கும் விடப்பட்ட சவாலாகும். வாக்குகளை விலைக்கு விற்கக்கூடிய வாக்காளர் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கும் உரிமைகளை இழந்துவிடுகிறார்.  இலவசத் திட்டங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் இழந்துவிடுகிறார். தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவப் பெருந்தகை இரவச்சம் எனும் அதிகாரத்தில்  “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’  அதாவது பிச்சையெடுத்துத்தான் சிலர் உயிர் வாழவேண்டும் என்கிற நிலை இருந்தால் இந்த உலகைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும் என்று குறிப்பிடுகிறார்.  வருகிற தேர்தலில் தமிழக வாக்காளர்கள் இலவச மற்றும் கவர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து தங்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் வகையில் ஜனநாயகக் கடமையை நிலைநாட்ட வேண்டும்.  ஓட்டுக்குப் பணம் கொடுப்போரை ஓட ஓட விரட்ட வேண்டும். ஓட்டுரிமை நம் கைகளில் கிடைக்க நம் முன்னோர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளனர். வாக்களிப்பது நமது தேசிய, தெய்வீகக் கடமையாகும். தமிழக வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை மூலம் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க இறைவன் அருள்புரிவாராக.

 

நன்றி-தினமணி

வாக்காளர்கள் வாடிக்கையாளரா?

வாக்காளர்கள் நாட்டை ஆள்பவர்களுக்கு எஜமானர்கள். ஆனால், அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வாக்காளர் என்பவர் வாக்களிக்க வரும் வாடிக்கையாளரே என்ற கண்ணோட்டம்தான் நிலவுகிறது. அதனாலேயே எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் எதையெல்லாமோ இலவசமாகத் தருவோம் என அறிவிக்கின்றனர்.  நாம் வாங்கும் பொருள்களுடன் வழங்கப்படும் இலவசங்கள், நமது பணத்தில்தான் வழங்கப்படுகிறது என்பதே உண்மை. அதுபோல அரசியல் கட்சிகள் ஆட்சி அமைத்தபின் வழங்கப்படும் இலவசங்களும் நமது பணத்தில் வழங்கப்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?  1967-ல் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது ஓர் அறிக்கை வெளியிட்டார். அமைச்சர்கள் தம் வீடுகளிலேயே இருப்பர். சொந்தக் கார்களையே உபயோகிப்பர். பிரதமர் உள்பட முக்கியமானவர்கள் வரும்போதுதான் அரசு கார்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம்.  வெற்றி பெற்று அமைச்சராகி பதவி போதையில் திளைக்காமல், அரசுப் பணத்தை வீணாக்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒரு மூக்கணாங்கயிற்றைக் கட்டினார் அண்ணா.  ஆனால், இன்று நிலையோ வேறு. பிரதானக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், அரசுப் பணத்தை வீணாக்கும் வகையில் இலவசங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் போதாதென்று அன்பளிப்புகளை அளித்து மக்கள் மனதை மயக்கி, வாக்குகளைப் பெற்று அரியணை ஏறிவிடத் துடிக்கும் பதவி போதை எல்லா கட்சிகளுக்குமே தலைக்கேறிவிட்டது.  முந்தைய தேர்தலில் இதுபோன்ற முறைகேடான சம்பவங்கள் நடந்துள்ளது எனவும், அதனால்தான், தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மக்களுக்கு நன்மைபுரிய வேண்டும், நல்லாட்சி நடத்த வேண்டும் என உண்மையிலேயே எண்ணமிருந்தால் இலவசங்களை அறிவித்து, அன்பளிப்புகளைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்வரிசையில் இருந்துகொண்டே அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கலாம்; ஆலோசனை கூறலாம்; நல்லாட்சிக்கு வழிவகுக்கலாம்.  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அன்பளிப்பு வழங்க வேண்டுமானால் எவ்வளவு பெரிய தொகை தேவைப்படும். இத்தனை பெரிய தொகை அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது என்பது நம்ப முடியாத உண்மை.  ஏற்கெனவே நாட்டை ஆண்டு அனுபவித்த அரசியல் கட்சிகளிடம் இத்தனை பெரிய தொகை இருக்குமேயானால் அது எப்படி வந்தது என்ற கேள்விக்கு இடமில்லை. ஏனென்றால் தமிழக மக்கள் மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பக்குவம் உடையவர்கள். எனவே இருக்கும் பணத்தில் ஆலைகள் அமைத்தும், கல்விச்சாலைகள் அமைத்தும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியும், தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டு, புதியவர்களுக்கு வழிவிடுவதுதானே.  புதிதாகத் திறக்கப்படும் உணவகத்தில் சிறிது நாள்களுக்குத் தரமும் சுவையும் அதிகமாகவே இருக்கும். வியாபார சூட்சுமங்களை அறிந்த பின்னர் அதற்கேற்ப சுவையும் தரமும் மாறுபடும்.  அதுபோல, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொள்பவர் தத்தமது தொகுதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதுடன், எவ்வாறு விஞ்ஞான ரீதியாக ஊழல் புரியலாம் என அறிந்து கொள்ளும் முன்பு 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் ஒரு நேர்மையான ஆட்சியை அனுபவிக்கலாம்.  இதைவிடுத்து, விட்டேனா பார்? என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற போதையில், முறைகேடுகளை அரங்கேற்றித்தான் வருகின்றனர். தேர்தல் ஆணையம் நடத்தும் வாகனச் சோதனை மூலம் பிடிபடும் பணமே இதற்குச் சாட்சி.  பலதரப்பிலிருந்து வரும் எதிர்ப்புகளைச் சமாளித்து ஒரு நேர்மையான தேர்தலை நடத்திவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது. இதற்கிடையே தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை கவலையளிப்பதாக உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  “கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கி, வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்’. எனவே, தேர்தல் நேர்மையாக நடைபெற்றாலும், வலையில் விழாமல், நேர்மையான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் அளிக்கும் வாக்கில்தான் உள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க எந்த அரசியல் கட்சியாலும் இயலாத நிலையுள்ளதால், எப்படியாவது சட்டப்பேரவையில் நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்கைகள் மறந்த அரசியல் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளன.  எனவே நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும் எனும் நோக்கில் வாக்களிப்பதைத் தவிர்த்து, தொகுதிக்கு நன்மை செய்யும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களிப்பதே நல்லது. அவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை.  ஏழையாகவே இருக்க வேண்டும் என விரும்புவோருக்குத்தான் இலவசங்கள். நாடு செழிக்க வேண்டும், நாம் ஒவ்வொருவரும் செல்வந்தர்களாக வேண்டும் என உள்ளத்தில் ஒளி உண்டாயின் நாம் அளிக்கும் “வாக்கிலே’ ஒளி உண்டாகும். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் சிறந்த மக்கள் சேவகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தமிழகமும் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை.

மலைக்கவைக்கும் மணப்பெண் அலங்காரம்

`கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்தநாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கிய
மானது.

சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா?

திருமணத்திற்கு முன்…

* அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமை யான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங் கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.

* உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.

* முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்து கொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.

* திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்து கொள்ளுங்கள்.

* தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.

* கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

* இரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாக்ஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக் கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.

* மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

மேக் அப் போடுவது எப்படி?

* மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக் கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.

* அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.

* கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப `ஐ-ஷேடோ’வைத் தேர்ந்தெடுங்கள்.

* மேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

* கன்னத்திற்கு போடப்படும் `ரூஜ்’ தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரிசெய்திட முடியும்.

* மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட…பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.

* மேக் அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.

சிகையலங்காரம்

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு `ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூவைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச்சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.

திருமணப் புடவை

திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.

போட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு `ரா’ சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.

நடை பயிற்சிக்கு `புதுக்கூட்டணி’!

ஜெர்மனியில் முதியவர்களின் உடல் நலன் பற்றி ஒரு ஆய்வு நடந்தது. அவர்களது உடல்சோர்வு, மனச்சோர்வு ஆகியவற்றை போக்க வழி என்ன? என்று ஆராய்ந்தவர்கள் கடைசியில் பன்றியுடன் வாக்கிங் போனால் பலாபலன்கள் நிறைய கிட்டுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பொதுவாகவே குழந்தைகளும், பெரியவர்களும் வளர்ப்பு பிராணிகளுடன் மிகுந்த ஐக்கியம் காட்டு வார்கள். அவைகளுக்கு உணவூட்டுவது, துணைக்கு அழைத்துச் செல்வது என்று செயல் படுவதால் இவர்களும் புத்துணர்ச்சி அடைவார் கள். இப்படி வளர்ப்பு பிராணிகளுடன் பழகுவதில், பன்றிகளுடன் `வாக்கிங்’ சென்றால் கூடுதல் பலன் கிடைப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்தது.

இந்த பயிற்சியால் முதியவர்களின் உடல் எடை குறைந்தது. உற்சாகமாக இயங்க தொடங்கினார் கள். எண்ணங்களிலும் சிறப்பான முன்னேற்றங் கள் ஏற்பட்டன. தினமும் பன்றியுடன் நடைபயிற்சி சென்ற முதியவர் ஒருவர் கூறும்போது, “முதலில் பன்றியுடன் நடந்து செல்ல பயமாக இருந்தது. பிறகு பழகி விட்டது. நாய்களைவிட நன்றாக நெருங்கி பழகும் தன்மை கொண்டவை பன்றி கள். நான் இப்போது உற்சாகமாக இருக்கிறேன்” என்றார்.

“நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வது சுலபமல்ல. நாம் ஒரு ஓரமாக நடந்துபோனால் அவை எதிர்பக்கத்துக்கு இழுத்துச் செல்லும். ஆனால் பன்றிகள் அப்படி இல்லை. சாதுவாகவும், சுறுசுறுப்பாகவும் உங்களுடன் வரும். பூனை, ஆடு, நாய், குதிரை போன்ற மற்ற பிராணிகளைவிட பன்றி நடைபயணத்துக்கு நல்லது” என்கிறார் டாக்டர் வெர்மியூலன்.

`பன்றிகளை இறைச்சி, சூப், வறுவலுக்காக அதிகமாக வதை செய்வோம். இப்போது நடை பயணத்திற்காக பன்றிகளை வாங்குவது அதிகரித்துள்ளது’ என்கிறார் பன்றி விற்பனை யாளர் ஒருவர்.

வாய் கொப்பளித்தல்: எங்கே, எப்படி?

சாப்பிட்ட பின் கை அலம்புவதையும், வாய் கொப்பளிப்பதையும், சாப்பாட்டுப் பாத்திரங்கள் போடும் சமையல் அறையிலுள்ள (கிச்சன்) பேஸினிலேயே தான் நிறைய பேர் செய்கிறார்கள். கை அலம்புவதற்கென்று தனியாக ஒரு வாஷ் பேஸின் இருந்தாலும், நிறைய பேர் அங்கே கழுவாமல், பாத்திரங்களைப் போடும் கிச்சன் பேஸினிலேயே தான் கழுவுகிறார்கள்.

சாப்பிடும்போது கைக்கும், வாய்க்கும் இடையே ஏற்படும் தொடர்பில், வாயிலுள்ள எச்சில் மற்றும் எச்சிலோடு சேர்ந்த உணவுக்கூழ், நம் கையிலும் சாப்பாட்டுத் தட்டிலும் படத்தான் செய்கிறது. மேலும் கண்ணுக்குத் தெரியாத கையிலுள்ள கிருமிகள், பற்களின் இடையில் சிக்கியுள்ள சாப்பாட்டுத் துணுக்குகள் ஆகியவை நாம் வாய் கொப்பளிக்கும்போது, துப்பும் எச்சில் வழியாக கிச்சனிலுள்ள பேஸினுக்குத்தான் போய்ச் சேருகிறது. கிச்சன் பேஸின் குழாயில் வரும் தண்ணீர் கழுவுவதற்கு உபயோகப்படுத்தும் தண்ணீர்தானே தவிர, குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் தண்ணீர் அல்ல. கிருமிகள் அதிகமாக வளர்வதற்கும், பெருகுவதற்கும், ஏற்ற இடம் தண்ணீர் தான். எனவே எந்த வகை கிருமிகள் கிச்சன் பேஸினின் ஓரத்திலும், குழாய்த் தண்ணீரிலும் இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது.

மேலும் நமக்கு ஏதாவது நோய் இருந்தால், அந்த நோய்க்கிருமிகளும் ஒரு பாத்திரத்தோடு நிற்காமல், கிச்சன் பேஸினிலுள்ள மொத்த பாத்திரங்களிலும் போய் ஒட்டிக் கொள்ளும். இதனால் சாப்பிடும் பாத்திரங்கள், சமையல் பாத்திரங்கள் என எல்லாவற்றிலும் நோய்க் கிருமிகள் போய்ச் சேர்ந்து விடும். இது சரியல்ல.

ஒருவருடைய எச்சில் உணவை இன்னொருவர் சாப்பிடுவதே, மருத்துவ ரீதியாக நல்லதல்ல என்று நாம் நினைக்கும் போது, கிச்சன் பேஸினிலேயே வாயைக் கொப்பளிப்பது நல்லதா என்று யோசித்துப் பாருங்கள். இதனால் ஒருவருக்குள்ள நோய், இன்னொருவருக்கும் வர அதிக வாய்ப்புள்ளதல்லவா! இதனால்தான் வீட்டிலுள்ள பெரியவர்கள், எச்சில் உணவு சாப்பிடும் பழக்கத்தை உற்சாகப்படுத்த மாட்டார்கள். அப்படியிருக்கும்போது எச்சில் தட்டுகள் உள்ள இடத்தில், கையை அலம்பவும் வாயைக் கொப்பளிக்கவும் கண்டிப்பாக விட மாட்டார்கள்.

சிலர் சாப்பிட்டு முடித்த பின், சாப்பிட்ட தட்டிலேயே கையை கழுவுகிறார்கள். இதுவும் நல்ல பழக்கமல்ல. வயதானவர்களும், நடக்க முடியாதவர்களும் செய்து விட்டுப் போகட்டும் என விட்டு விடலாம். சிலர் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவும் போது, கையை மட்டும் கழுவிவிட்டு வாயைக் கழுவுவதோ அல்லது தண்ணீர் விட்டு கொப்பளிப்பதோ கிடையாது. கையை மட்டும் கழுவிவிட்டு, வாயைத் திறக்காமல், வாயின் வெளியிலே மட்டும் கையால் துடைத்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். இதுவும் சரியல்ல. கை கழுவும் போதே, தண்ணீரை வாயில் எடுத்து, நன்றாக வாயை பலமுறை கொப்பளித்து, வெளியில் துப்ப வேண்டும். அப்பொழுது தான் வாய் சுத்தமாக கழுவப்படும். வாயில் சாப்பாட்டுத் துணுக்குகள் எதுவும் தங்காது.

வெறுமனே வாயை வெளியில் மட்டும் துடைத்துக் கொண்டு வந்தால், பற்களுக்கிடையில் சிக்கியுள்ள உணவு அப்படியே இருக்கும். தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் இந்த எச்சில் உணவு பற்களுக்கிடையில் இருந்தால், அது கெட்டுப் போய் நாற்றமடிக்கும். மேலும் பற்களுக்கும் ஈறுகளுக்கும் அதிக தீங்கு விளைவிக்கும். சிலருக்கு வாய் நாற்றம் ஏற்படுவதற்கு இது ஒரு காரணம். எனவே சாப்பிட்டபின், வெளியே மட்டும் வாயை துடைப்பதை விட்டுவிட்டு, தண்ணீரை வாய்க்குள் எடுத்து நன்றாக கொப்பளித்து வெளியில் துப்புங்கள். இரவில் பால் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள், குடித்து முடித்த பின் வாயை நன்றாக கொப்பளித்து விட்டு படுக்க வேண்டும். குடித்து விட்டு, அப்படியே தூங்கினால் பற்கள் சீக்கிரம் பாழாகி விடும்.

சமையலறையிலுள்ள பேஸினில் சாப்பாட்டுப் பாத்திரங்களைப் போடுங்கள். கையை அதே பேஸினில் கழுவாதீர்கள். வாயையும் அதே பேஸினில் கொப்பளிக்காதீர்கள். சாப்பிட்ட பாத்திரங்களை பேஸினில் போட்டு விட்டு, கையை வேறு வாஷ் பேஸினில் போய் கழுவுங்கள். வீட்டில் தனித்தனியாக இரண்டு வாஷ் பேஸின் இல்லாதவர்கள், அதற்காக கவலைப்பட வேண்டாம். பாத்திரங்கள் இல்லாத வேறு இடத்தில் போய் கையைக் கழுவுங்கள். வாஷ்பேஸினே இல்லையென்றால், பிரச்சினையே இல்லை. சாப்பிட்டபின் கையை வீட்டிலுள்ள பாத்ரூம் அல்லது வீட்டின் பின்பகுதி அல்லது தோட்டத்துப் பக்கம் போய் கழுவுங்கள்.

நம் முன்னோர்கள், சில சிறந்த, நல்ல பழக்கங்களை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். தென்னிந்தியாவில் வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கம், வெகு காலமாகவே இருந்து வருகிறது. சூடான உணவை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது, அந்த சூட்டினால் வாழையிலையிலுள்ள சாறு நாம் சாப்பிடும் உணவோடு சேர்ந்து உணவின் ருசியையும் அதிகமாக்கி, நன்றாக பசியையும் உண்டு பண்ணி விடுகிறது என்பது வரலாறு.

முடிந்தவரை பாத்திரங்களுக்குப் பதிலாக, வாழை இலை, தையல் இலை, பாக்குமட்டை தட்டு போன்ற உபயோகித்தபின் தூக்கியெறியக் கூடியவைகளை சாப்பிட பயன்படுத்துங்கள். அசைவ உணவும், அதிக எண்ணெய் உள்ள உணவும் சாப்பிடும் போது, வாழை இலையில் சாப்பிடுவது நல்லது. இலைகளில் சாப்பிட்டால், சாப்பிட்டோமா, தூக்கிப் போட்டோமா என்றிருக்கும். பாத்திரம் கழுவ வேண்டிய வேலையும் இல்லை. தண்ணீரும் மிச்சம். தினமும் இலையில் சாப்பிட முடியவில்லையென்றால், அதிக எண்ணெய் உள்ள உணவு, அசைவ உணவு சாப்பிடுகிற அன்றாவது கண்டிப்பாக இலையில் சாப்பிட்டுப் பழகுங்கள். கிச்சன் பேஸினும் சுத்தமாக இருக்கும். ஆகவே சாப்பாட்டுப் பாத்திரங்கள் போடும் சமையலறையிலுள்ள வாஷ் பேஸினில் கை அலம்புவதையும், வாய் கொப்பளிப்பதையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நிறுத்திக் கொள்வதே சுகாதாரம்!

இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

நாம் உஷாராக இருக்கவில்லை எனில், வெயில் நம் உயிரைக் கூட பறித்து விடும். இப்போதே, சன் ஸ்ட்ரோக், அதிக சூடு, உடல் நீர் வற்றிப்போதல் ஆகிய காரணங்களால், ஒரு சில மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை.
உடல் ஆரோக்கியமாக இருக்க, 98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தேவை. இதற்கென உடல் முழுவதும் 40 லட்சம் வியர்வை நாளங்கள் நம் உடலில் உள்ளன. வெயில் காலத்தில், நம் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடனே, நம் மூளை, வியர்வை நாளங்களுக்கு, ரசாயன சமிக்ஞை கொடுத்து, அவை செயல்படக் கட்டளையிடுகிறது. இதையடுத்து வியர்வை சுரக்கிறது. வியர்வை காயக் காய, நம் உடல் வெப்பம் சீரான நிலையில் பாதுகாக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு, 4 வயது வரை, இந்த நாளங்கள் சரியான முறையில் வேலை செய்யாது. அதேபோல், மூப்பு அடைந்தவர்கள். அதிக உடல் எடையுடன் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், மன அழுத்தத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும், மாத்திரை சாப்பிடுபவர்கள் உடலிலும் இந்த நாளங்கள் சரிவர வேலை செய்யாது.

வியர்வை வெளியேறினாலும், அது காயாமல் போனால், உடல் வெப்பம் தணியாது. எனவே, சரியான முறையில் வியர்வை சுரக்க, போதுமான அளவு தண்ணீர் பருகுதல், உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்தல் அவசியம். அதிக வெப்பம் உள்ள பகுதியில், நீர் பருகாமல் தொடர்ந்து பணி செய்தாலும், உடலில் நீர் சத்து குறையும். முதலில் சோர்வு ஏற்படும். பின், தலைவலி, தலைசுற்றல், நாவறட்சி, காலில் ரத்த நாளங்களில் வலி ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு, இதனால், 104 டிகிரி பாரன்ஹீட் வரை, உடல் வெப்பம் ஏறும். இதை கவனிக்காமல்
விட்டால், வெப்ப அளவு, 105 டிகிரியை தொடும். அப்போது, மனக்குழப்பம், தெளிவின்மை, மயக்கம், இறுதியில் மரணம் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக, குழந்தைகளுக்கு சோர்வு ஏற்படுவதைக் கண்டறிய தெரியாது. உடல் சூட்டை வைத்து தான், அவர்களுக்கு வெப்ப பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய வேண்டும். ஜுரத்தைக் கட்டுப்படுத்துவதாக நினைத்து, கம்பளி, பெட்ஷீட் ஆகியவற்றால், அவர்களுக்கு போர்த்தி விடுவது தவறு.

தாகம் எடுத்தாலும் அவர்களுக்கு சொல்ல தெரியாது என்பதால், நாமாகவே அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். தவறினால், வெப்ப தாக்கம் ஏற்பட்டு விடும். எனவே, வெயில் காலங்களில், கூடுமான வரை, வீட்டினுள் இருக்க வேண்டும். வெயில் துவங்கும் முன் வெளியே சென்று, கூரை உள்ள இடங்களில் பணியாற்ற வேண்டும். வெட்டவெளியில் பணியாற்றக் கூடாது. வெப்பம் தணிந்ததும் வீடு திரும்பலாம். புடைக்கும் வெயிலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது கூட, சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தி விடும். முழுவதும் பருத்தி, லினென், சணல் மற்றும் இயற்கை இழைகளாலான உடைகளை மட்டும் உடுத்த வேண்டும். நைலான், பாலியஸ்டர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாகம் எடுப்பதற்கு முன்பே, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு, நீர் மோர் ஆகியவை பருக வேண்டும். காற்றூட்டப்பட்ட பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அவை, தாகத்தை அதிகரிக்குமே தவிர,
தணிக்காது. டீ, காபி, ஆல்கஹால் ஆகியவையும், தாகத்தை அதிகரிக்கும். வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை முதலில், நிழல் நிறைந்த, காற்றுள்ள பகுதிக்கு எடுத்து செல்ல வேண்டும். உப்பு சேர்த்த நீரைக் குடிக்கக் கொடுக்க வேண்டும். திக மின்வெட்டும், சூடு நிறைந்த சூழலும் கொண்ட நாம், நம்மையும், குழந்தைகளும், வயது மூத்தவர்களையும், நல்ல முறையில் கவனித்துக் கொள்வது அவசியம்.
– டாக்டர் கீதா மத்தாய்

டூயல் பூட்டிங் சிஸ்டம்:

ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரிலு விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.
எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல். இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விண்டோஸ் 7 பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம்.
கூடுதலாக விண்டோஸ் 7 மட்டுமின்றி விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை யும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.