இளநீர், மோர், எலுமிச்சை சாறு குடிக்கும் நேரம் வந்தாச்சு!

நாம் உஷாராக இருக்கவில்லை எனில், வெயில் நம் உயிரைக் கூட பறித்து விடும். இப்போதே, சன் ஸ்ட்ரோக், அதிக சூடு, உடல் நீர் வற்றிப்போதல் ஆகிய காரணங்களால், ஒரு சில மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை.
உடல் ஆரோக்கியமாக இருக்க, 98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தேவை. இதற்கென உடல் முழுவதும் 40 லட்சம் வியர்வை நாளங்கள் நம் உடலில் உள்ளன. வெயில் காலத்தில், நம் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடனே, நம் மூளை, வியர்வை நாளங்களுக்கு, ரசாயன சமிக்ஞை கொடுத்து, அவை செயல்படக் கட்டளையிடுகிறது. இதையடுத்து வியர்வை சுரக்கிறது. வியர்வை காயக் காய, நம் உடல் வெப்பம் சீரான நிலையில் பாதுகாக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு, 4 வயது வரை, இந்த நாளங்கள் சரியான முறையில் வேலை செய்யாது. அதேபோல், மூப்பு அடைந்தவர்கள். அதிக உடல் எடையுடன் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், மன அழுத்தத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும், மாத்திரை சாப்பிடுபவர்கள் உடலிலும் இந்த நாளங்கள் சரிவர வேலை செய்யாது.

வியர்வை வெளியேறினாலும், அது காயாமல் போனால், உடல் வெப்பம் தணியாது. எனவே, சரியான முறையில் வியர்வை சுரக்க, போதுமான அளவு தண்ணீர் பருகுதல், உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்தல் அவசியம். அதிக வெப்பம் உள்ள பகுதியில், நீர் பருகாமல் தொடர்ந்து பணி செய்தாலும், உடலில் நீர் சத்து குறையும். முதலில் சோர்வு ஏற்படும். பின், தலைவலி, தலைசுற்றல், நாவறட்சி, காலில் ரத்த நாளங்களில் வலி ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு, இதனால், 104 டிகிரி பாரன்ஹீட் வரை, உடல் வெப்பம் ஏறும். இதை கவனிக்காமல்
விட்டால், வெப்ப அளவு, 105 டிகிரியை தொடும். அப்போது, மனக்குழப்பம், தெளிவின்மை, மயக்கம், இறுதியில் மரணம் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக, குழந்தைகளுக்கு சோர்வு ஏற்படுவதைக் கண்டறிய தெரியாது. உடல் சூட்டை வைத்து தான், அவர்களுக்கு வெப்ப பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய வேண்டும். ஜுரத்தைக் கட்டுப்படுத்துவதாக நினைத்து, கம்பளி, பெட்ஷீட் ஆகியவற்றால், அவர்களுக்கு போர்த்தி விடுவது தவறு.

தாகம் எடுத்தாலும் அவர்களுக்கு சொல்ல தெரியாது என்பதால், நாமாகவே அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். தவறினால், வெப்ப தாக்கம் ஏற்பட்டு விடும். எனவே, வெயில் காலங்களில், கூடுமான வரை, வீட்டினுள் இருக்க வேண்டும். வெயில் துவங்கும் முன் வெளியே சென்று, கூரை உள்ள இடங்களில் பணியாற்ற வேண்டும். வெட்டவெளியில் பணியாற்றக் கூடாது. வெப்பம் தணிந்ததும் வீடு திரும்பலாம். புடைக்கும் வெயிலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது கூட, சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தி விடும். முழுவதும் பருத்தி, லினென், சணல் மற்றும் இயற்கை இழைகளாலான உடைகளை மட்டும் உடுத்த வேண்டும். நைலான், பாலியஸ்டர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாகம் எடுப்பதற்கு முன்பே, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு, நீர் மோர் ஆகியவை பருக வேண்டும். காற்றூட்டப்பட்ட பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அவை, தாகத்தை அதிகரிக்குமே தவிர,
தணிக்காது. டீ, காபி, ஆல்கஹால் ஆகியவையும், தாகத்தை அதிகரிக்கும். வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை முதலில், நிழல் நிறைந்த, காற்றுள்ள பகுதிக்கு எடுத்து செல்ல வேண்டும். உப்பு சேர்த்த நீரைக் குடிக்கக் கொடுக்க வேண்டும். திக மின்வெட்டும், சூடு நிறைந்த சூழலும் கொண்ட நாம், நம்மையும், குழந்தைகளும், வயது மூத்தவர்களையும், நல்ல முறையில் கவனித்துக் கொள்வது அவசியம்.
– டாக்டர் கீதா மத்தாய்

%d bloggers like this: