ஏற்பது இகழ்ச்சி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதிகள் கொடுத்துள்ள இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளன. ஈ.வெ.ரா., அண்ணா ஆகியோர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தினர் நாங்கள் என மார்தட்டிக் கொள்கின்ற இந்த இரு கட்சிகளுமே இப்போது தமிழ்ச் சமூகத்தின் சுயமரியாதைக்குச் சவால் விட்டுள்ளன.  பகுத்தறிவுக் கொள்கைகளின் பரிணாம வளர்ச்சியான திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசுகள் நாங்கள்தான் என்பதில் போட்டி போடும் இந்த இரு அரசியல் கட்சிகளுமே தேர்தலுக்குத் தேர்தல் புதிய புதிய பாணிகளை (திருமங்கலம் பாணி, பென்னாகரம் பாணி) உருவாக்கி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி வருகின்றன.  1967-ல் நடைபெற்ற தேர்தலின்போது தி.மு.க. நிறுவனத் தலைவர் அண்ணாதுரைதான் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என படியரிசித் திட்டம் உள்ளிட்ட கவர்ச்சித் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கத் தொடங்கினார். அப்போதே, ஈ.வெ.ரா., காமராஜ் போன்றவர்கள் தமிழக அரசின் நிதிநிலைமையில் இத்தகைய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என விமர்சனம் செய்தனர். ஆனாலும் 1961-ல் தி.மு.க. வெற்றிபெற்றதும் ஒரு சில இடங்களில் மட்டும் படியரிசித் திட்டத்தை பெயருக்கு நடத்தி “மூன்றுபடி லட்சியம்; ஒருபடி நிச்சயம்’ என அண்ணா தன் பாணியில் அறிக்கைகள் கொடுத்தார்.  இத்தகைய கவர்ச்சித் திட்டங்களுக்கு நிதி தேவை என்பதற்காக “ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம்’ என தமிழக அரசு லாட்டரித் திட்டம் மூலம் தமிழகத்துக்கு லாட்டரியை அறிமுகப்படுத்திய பெருமையும் இவர்களையே சாரும். “கிடைத்தால் வீட்டுக்குக் கிடைக்காவிட்டால் நாட்டுக்கு’ என இதற்காக அடுக்குமொழி விளம்பரங்களையும் செய்தார்கள். உழைப்பை நம்பி வாழும் தமிழர்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டங்கள் இப்படித்தான் தமிழகத்தில் தொடங்கின.  “செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு’ என்று வாழ்ந்து பழகியவன் தமிழன். தன் கையே தனக்கு உதவி, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற சுயமரியாதை உணர்வு இயல்பாகவே தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. இறைவா என்னை யாரிடமும் கையேந்த வைத்துவிடாதே, பிச்சையெடுத்துத் தின்னும் கேவல நிலை மட்டும் எனக்கு வந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்ளும் தமிழர்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளனர்.  உலகனைத்தும் உள்ள உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமசிவன்கூட பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான். அதாவது உழைக்காமல் உண்பதைத் தவறு என சிவபெருமானே தனது திருவிளையாடல் மூலம் உணர்த்தியுள்ளார். தாகத்தில் தவித்த கணைக்கால் இரும்பொறை மரியாதையில்லாமல் வழங்கப்பட்ட குடிதண்ணீரைப் புறக்கணித்து உயிர்நீத்து மானம் காத்தான். “ஏற்பது இகழ்ச்சி’ என ஒளவை அழகுபட உரைத்துள்ளார். ஆனால், இன்று யார் இலவசங்களை அதிகம் கொடுக்கிறார்கள், யார் வாக்குக்குப் பணம் கொடுக்கிறார்கள் என அப்பாவித் தமிழ் மக்களைப் பேச வைத்துள்ளனர் இந்த அரசியல் வியாதிகள்.  கடந்த தேர்தலில் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்பு, விவசாய நிலம் என வாக்குறுதிகளைக் கொடுத்து வாகை சூடிய கருணாநிதி, இப்போது மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என முதல் சுற்றிலேயே அறிவித்துவிட்டார். ஜெயலலிதாவோ மின்விசிறியும் சேர்த்துத் தருவதாக அறிவித்துள்ளார். புதிதாகக் கடைகள் தொடங்கியுள்ள வியாபாரிகள் மக்களைக் கவர்வதற்காக ஒரு பொருள் வாங்கினால் இன்னொரு பொருள் இலவசம் என்று போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியாக விளம்பரம் செய்வது போலத்தான் தேர்தல் அறிக்கைகள் உள்ளன.  தமிழகத்தின் அடிப்படைத் தேவைகளான நதிநீர் இணைப்புத் திட்டங்கள், மின்உற்பத்தித் திட்டங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரம் வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு, மழைநீர் சேகரிப்பு, விவசாய வளர்ச்சி, நெசவுத் தொழில் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், முழுமையான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, தேர்ந்த நிர்வாகம் ஆகியவை குறித்து இரு அரசியல் கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது வருந்தத்தக்கது.  அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சூரிய ஒளி மின்சாரம், மழைநீர் சேகரிப்பு போன்ற பாராட்டத்தக்க சில அம்சங்கள் உள்ளன. ஏற்கெனவே தேர்தல் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்ட 2006 தேர்தல் அறிக்கையில் கருணாநிதி செயல்படுத்திய இலவசத் திட்டங்களால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமை தமிழக மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.  அதேபோல கருணாநிதி அறிவித்த இலவசத் திட்டங்கள் அனைத்துமே அவரது குடும்பத் தொழில்களுக்கு மூலதனமாக அமைந்து அவரது குடும்ப வருவாயைப் பெருக்கியது என்பதுதான் கண்கூடாக நாம் கண்ட உண்மை.  உதாரணமாக, இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியதன் மூலம் கருணாநிதியின் பேரன்களாகிய மாறன் குடும்பத்தினரின் சுமங்கலி கேபிள் நிறுவனமும், கருணாநிதியின் மகன் அழகிரி குடும்பத்தின் கேபிள் நிறுவனமும் பயனடைந்தன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திய தனியார் நிறுவனமாகிய ஸ்டார் குழுமம் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான நிறுவனம். இப்படி மக்களுக்கு இலவசமாக சில பொருள்களை வழங்கி, தனது குடும்ப வியாபாரங்களைப் பெருக்கும் விஞ்ஞான ரீதியான ஊழல் கருணாநிதிக்குக் கைவந்த கலை.  ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என கருணாநிதி அறிவித்துள்ளதன் உள்நோக்கம் ஏழ்மை அகற்றப்பட வேண்டும் என்பதல்ல, ஏழைகள் என்றும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும், அவர்களின் வாக்குகளை இத்தகைய இலவசத் திட்டங்களின் மூலம் பெற்று தானும் தன் குடும்பத்தாரும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதுதான் இந்த அறிவிப்புகளின் உண்மையான நோக்கமாகும்.  சமீபத்தில் நடைபெற்ற குஜராத், பிகார் சட்டமன்றத் தேர்தல்களில் கருணாநிதியின் தேர்தல் அறிக்கை பாணியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இலவசத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளைக் கொடுத்தது.  குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்கவும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை முறியடிக்கவும், காங்கிரஸ் கட்சி இத்தகைய தந்திரமான முயற்சிகளைச் செய்தது.  இலவச மின்சாரம், வண்ணத் தொலைக்காட்சி என குஜராத்தில் காங்கிரஸ் கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் நரேந்திர மோடியை வீழ்த்த முடியவில்லை. மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இலவசத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தியர்கள் தன்மானம் உள்ளவர்கள், குஜராத்தியர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கும் காங்கிரஸýக்குத் தக்க பதிலடி கொடுங்கள் என்று குஜராத் மாநில மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.  குஜராத் மக்கள் காங்கிரûஸ வீழ்த்தி மீண்டும் மோடியை அரியணையில் ஏற்றினர். இப்போது மோடி குஜராத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியுள்ளார்.  ஒரு லட்சம் கோடி உபரி நிதி வைத்துள்ளார். சாராய வருமானம் இல்லாமலேயே பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.  தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தி இரண்டுமே சிறப்பாக உள்ளது. மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஒளிரும் குஜராத், மோடியின் ஆட்சியில் உருவாகியுள்ளது.  இதேபோல நிதீஷ்குமாரின் திறமையான நிர்வாகத்தால் பிகார் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதைக் கண்டு பொறுக்காமல் இத்தகைய கருணாநிதி பாணி இலவசத் திட்டங்களை லல்லுவும், காங்கிரஸ் கட்சியும் பிகார் மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளாகக் கொடுத்தனர். சுயமரியாதை உணர்வுள்ள பிகார் மக்கள் இலவச கவர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறமைக்கே வாக்களித்தனர். மிகப் பின்தங்கிய மாநிலமான பிகார் இப்போது தொழில் விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.  இப்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் இல்லை.  கேரளத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும், புதுச்சேரியிலும் இத்தகைய இலவசத் திட்டங்கள் உள்ளன. தமிழக அரசியலின் தாக்கம் கேரள மாநிலத்தையும், புதுச்சேரியையும்கூடப் பாதித்துள்ளது.  இலவசத் திட்டங்களைப்போல ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஏழை மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாசாரத்தை, தன்மானத்தைப் பற்றி பேசும் திராவிட இயக்கங்கள் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரே பயப்படும் அளவுக்கு பணவிநியோகம் தமிழகத்தில் இப்போது பரவலாக நடைபெறுகிறது.  திராவிட இயக்கத்தவர்கள் ஓட்டுக்குப் பணம் என்கிற நிலைமையைத் தோற்றுவித்துள்ளனர். காவல் துறையின் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கூட பணம் கடத்தப்படுவதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம்கூட தனது கவலையைப் பதிவு செய்துள்ளது.  ஒட்டுமொத்தமாகத் தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்கு நேரும் வகையில் இப்போதைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. இது தமிழர்களின் பண்பாட்டுக்கும், தன்மானத்துக்கும் விடப்பட்ட சவாலாகும். வாக்குகளை விலைக்கு விற்கக்கூடிய வாக்காளர் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கும் உரிமைகளை இழந்துவிடுகிறார்.  இலவசத் திட்டங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் இழந்துவிடுகிறார். தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் வள்ளுவப் பெருந்தகை இரவச்சம் எனும் அதிகாரத்தில்  “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’  அதாவது பிச்சையெடுத்துத்தான் சிலர் உயிர் வாழவேண்டும் என்கிற நிலை இருந்தால் இந்த உலகைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும் என்று குறிப்பிடுகிறார்.  வருகிற தேர்தலில் தமிழக வாக்காளர்கள் இலவச மற்றும் கவர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து தங்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் வகையில் ஜனநாயகக் கடமையை நிலைநாட்ட வேண்டும்.  ஓட்டுக்குப் பணம் கொடுப்போரை ஓட ஓட விரட்ட வேண்டும். ஓட்டுரிமை நம் கைகளில் கிடைக்க நம் முன்னோர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளனர். வாக்களிப்பது நமது தேசிய, தெய்வீகக் கடமையாகும். தமிழக வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை மூலம் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க இறைவன் அருள்புரிவாராக.

 

நன்றி-தினமணி

%d bloggers like this: