வாக்காளர்கள் வாடிக்கையாளரா?

வாக்காளர்கள் நாட்டை ஆள்பவர்களுக்கு எஜமானர்கள். ஆனால், அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வாக்காளர் என்பவர் வாக்களிக்க வரும் வாடிக்கையாளரே என்ற கண்ணோட்டம்தான் நிலவுகிறது. அதனாலேயே எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் எதையெல்லாமோ இலவசமாகத் தருவோம் என அறிவிக்கின்றனர்.  நாம் வாங்கும் பொருள்களுடன் வழங்கப்படும் இலவசங்கள், நமது பணத்தில்தான் வழங்கப்படுகிறது என்பதே உண்மை. அதுபோல அரசியல் கட்சிகள் ஆட்சி அமைத்தபின் வழங்கப்படும் இலவசங்களும் நமது பணத்தில் வழங்கப்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?  1967-ல் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது ஓர் அறிக்கை வெளியிட்டார். அமைச்சர்கள் தம் வீடுகளிலேயே இருப்பர். சொந்தக் கார்களையே உபயோகிப்பர். பிரதமர் உள்பட முக்கியமானவர்கள் வரும்போதுதான் அரசு கார்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம்.  வெற்றி பெற்று அமைச்சராகி பதவி போதையில் திளைக்காமல், அரசுப் பணத்தை வீணாக்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒரு மூக்கணாங்கயிற்றைக் கட்டினார் அண்ணா.  ஆனால், இன்று நிலையோ வேறு. பிரதானக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், அரசுப் பணத்தை வீணாக்கும் வகையில் இலவசங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் போதாதென்று அன்பளிப்புகளை அளித்து மக்கள் மனதை மயக்கி, வாக்குகளைப் பெற்று அரியணை ஏறிவிடத் துடிக்கும் பதவி போதை எல்லா கட்சிகளுக்குமே தலைக்கேறிவிட்டது.  முந்தைய தேர்தலில் இதுபோன்ற முறைகேடான சம்பவங்கள் நடந்துள்ளது எனவும், அதனால்தான், தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மக்களுக்கு நன்மைபுரிய வேண்டும், நல்லாட்சி நடத்த வேண்டும் என உண்மையிலேயே எண்ணமிருந்தால் இலவசங்களை அறிவித்து, அன்பளிப்புகளைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்வரிசையில் இருந்துகொண்டே அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கலாம்; ஆலோசனை கூறலாம்; நல்லாட்சிக்கு வழிவகுக்கலாம்.  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அன்பளிப்பு வழங்க வேண்டுமானால் எவ்வளவு பெரிய தொகை தேவைப்படும். இத்தனை பெரிய தொகை அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது என்பது நம்ப முடியாத உண்மை.  ஏற்கெனவே நாட்டை ஆண்டு அனுபவித்த அரசியல் கட்சிகளிடம் இத்தனை பெரிய தொகை இருக்குமேயானால் அது எப்படி வந்தது என்ற கேள்விக்கு இடமில்லை. ஏனென்றால் தமிழக மக்கள் மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பக்குவம் உடையவர்கள். எனவே இருக்கும் பணத்தில் ஆலைகள் அமைத்தும், கல்விச்சாலைகள் அமைத்தும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியும், தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டு, புதியவர்களுக்கு வழிவிடுவதுதானே.  புதிதாகத் திறக்கப்படும் உணவகத்தில் சிறிது நாள்களுக்குத் தரமும் சுவையும் அதிகமாகவே இருக்கும். வியாபார சூட்சுமங்களை அறிந்த பின்னர் அதற்கேற்ப சுவையும் தரமும் மாறுபடும்.  அதுபோல, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொள்பவர் தத்தமது தொகுதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதுடன், எவ்வாறு விஞ்ஞான ரீதியாக ஊழல் புரியலாம் என அறிந்து கொள்ளும் முன்பு 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் ஒரு நேர்மையான ஆட்சியை அனுபவிக்கலாம்.  இதைவிடுத்து, விட்டேனா பார்? என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற போதையில், முறைகேடுகளை அரங்கேற்றித்தான் வருகின்றனர். தேர்தல் ஆணையம் நடத்தும் வாகனச் சோதனை மூலம் பிடிபடும் பணமே இதற்குச் சாட்சி.  பலதரப்பிலிருந்து வரும் எதிர்ப்புகளைச் சமாளித்து ஒரு நேர்மையான தேர்தலை நடத்திவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது. இதற்கிடையே தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை கவலையளிப்பதாக உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  “கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கி, வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்’. எனவே, தேர்தல் நேர்மையாக நடைபெற்றாலும், வலையில் விழாமல், நேர்மையான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் அளிக்கும் வாக்கில்தான் உள்ளது.  தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க எந்த அரசியல் கட்சியாலும் இயலாத நிலையுள்ளதால், எப்படியாவது சட்டப்பேரவையில் நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்கைகள் மறந்த அரசியல் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளன.  எனவே நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும் எனும் நோக்கில் வாக்களிப்பதைத் தவிர்த்து, தொகுதிக்கு நன்மை செய்யும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களிப்பதே நல்லது. அவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை.  ஏழையாகவே இருக்க வேண்டும் என விரும்புவோருக்குத்தான் இலவசங்கள். நாடு செழிக்க வேண்டும், நாம் ஒவ்வொருவரும் செல்வந்தர்களாக வேண்டும் என உள்ளத்தில் ஒளி உண்டாயின் நாம் அளிக்கும் “வாக்கிலே’ ஒளி உண்டாகும். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் சிறந்த மக்கள் சேவகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தமிழகமும் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை.

%d bloggers like this: