அழகுப் பெண்… 5 பாம்புகள்… அதிசய யோகா

ந்த இளம் பெண்ணை பலர் சூழ்ந்திருக்கிறார்கள். அழகுப் பெண்ணான இவரது உடலையோ பல பாம்புகள் சுற்றியிருக்கின்றன. அறையில் லேசான ஒளி பரவி இருக்க அதிகம் இருள் விரவி காணப்படுகிறது. சுற்றி இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாம்புகளைக் கண்டதும் லேசான நடுக்கம்.

“யாரும் பாம்புகளைக் கண்டு நடுங்க வேண்டாம். அவை நம்மையே நமக்கு உணர்த்தும் உன்னத ஜீவன்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்று கூறி வகுப்பை தொடங்குகிறார் அந்த இளம் பெண். சீறும் பாம்புகளை சிங்காரமாக உடலில் சுற்றிக் கொண்டு யோகா கற்றுத் தருகிறார் இந்த மங்கை.

யோகா இந்தியர்களின் பழம்பெருமை மிக்க கலைகளில் ஒன்று. உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதுடன் மனிதனை இறைவனோடு இணைக்கும் திறனுடையதாக யோகக்கலையைப் பற்றி கூறுகிறார்கள். பாம்பை தெய்வமாக வழிபடும் வழக்கமும் இந்தியாவில் இருக்கிறது. பாம்பு போல உடலை வளைத்து செய்யும் யோகா பயிற்சி உண்டு. அதேபோல பாம்புகளை உடலில் ஊர்ந்து செல்லவிட்டு `பாம்பு மசாஜ்’ செய்வதன் மூலம் சில பலன்களைப் பெறும் தேகப் பயிற்சியும் இங்கே இருக்கிறது.

ஆனால் பாம்பு யோகா என்பது யோகா, பாம்பு வழிபாடு, பாம்பு மசாஜ் மூன்றையும் ஒன்றிணைத்து செய்யப்படுவது போன்று புதுமையாக இருக்கிறது. இந்த புதுமையை செய்து காட்டுபவர் இந்தியப் பெண்மணியல்ல. லண்டனை சேர்ந்த இளம் பெண் க்வாலி குமாரா. இவர் குண்டலினி யோகா பயிற்றுவிக்கும் பெண்.

லேசான ஒளியுள்ள அறையில், பிறை நிலா வடிவில் அரைவட்டமாக அவரைச் சூழ்ந்திருக்கும் ஆண், பெண் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை தொடங்குகிறார் க்வாலி..

“இலேசாக கண்களை மூடிக் கொள்ளுங்கள். பாம்பைப் பற்றிய பயத்தை விட்டுவிடுங்கள். இந்த அறையில் நிறைய பேர் அவற்றைக் கண்டு அஞ்சுவதை காண்கிறேன். பாம்புகள் நமது தேக சக்கரங்களை திறந்துவிடும் சாவிகளாகும். அவை நமது ஆற்றலை உடலெங்கும் பரவச் செய்யும். இதனால் வாழ்க்கை முழுவதும் புத்துணர்ச்சியுடன் இயங்கலாம். மறுமலர்ச்சி தெரியும்” என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறார்.

மாணவர்கள் அனைவரும் கண்களை மூடி தியானிக்கிறார்கள். பாம்புகளை மெல்ல மாணவர்களின் உடலில் சுற்றி பயிற்சி அளிக்கும்போது சிலரின் உடல் நெளிகிறது, சிலிர்க்கிறது. சிலர் கண்களை திறக்கவும், எழுந்துவிடவும், அசைந்து கொடுக்கவும் செய்கிறார்கள். அவ்வப்போது தவறுகளை சரி செய்து கொண்டே மெல்ல மெல்ல பயிற்சியின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் க்வாலி. 8 நாட்களில் ஒவ்வொரு கட்ட பயிற்சியாக சொல்லிக் கொடுக்கிறார்.

பாம்பு யோகா பற்றி க்வாலி பகிர்ந்து கொண்டவை…

“மக்கள் பாம்புகளைக் கண்டு நடுங்குவதைப் போலவே தனது நிஜமான ஆத்ம நிலையைக் கண்டும் அஞ்சுகிறார்கள். பாம்புகள் நம்மை நம் ஆத்மாவோடு இணைப்பவை. நமது உடலில் மூலாதாரம் முதல் முகுளம் வரை 8 சக்திச் சக்கரங்கள் இருக்கிறது. இவை ஆற்றல் சக்கரங்களாகும். வாழ்வியல் ஆசைகளாலும், கவலைகளாலும் இந்த சக்திச் சக்கரங்கள் மறைக்கப்பட்டு கிடக்கின்றன. மனிதர்கள் இவற்றை அறியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனாலேயே மகிழ்ச்சியற்றும், நலமற்றும் வாழ்கிறார்கள்.

பாம்பு யோகாவினால் இந்த சக்தி சக்கரங்களின் வழி திறக்கப்படுகிறது. இதனால் நமது ஆற்றல் இந்த சக்கரங்களின் வழியாக உடல் முழுமைக்கும் பரவுகிறது. பாம்புகள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இறுகி இயங்கும்போது அந்தந்த பகுதிகளின் இயக்கம் அதிகரிக்கிறது. சக்கர இயக்கத்தையும் தூண்டிவிடுகிறது. மனஅழுத்தம், இறுக்கம் தளர்த்தப்பட்டு அமைதி உண்டாகிறது” என்று விளக்குகிறார்.

“தினமும் 20 நிமிடம் யோகா பயிற்சி செய்தால் போதும். பயிற்சிக்குப் பிறகு ஆழமான அமைதி நிலவுவதை உணரலாம். பாம்புகளின் `இச்ச்’, `இஸ்’ சத்தம் நமது உணர்வுகளை தூண்டிவிடும்” என்றும் க்வாலி கூறுகிறார். இவர் பயிற்சி கொடுப்பதற்காக 11 பாம்புகளை பராமரித்து வருகிறார்.

%d bloggers like this: