உலக சாதனை படைத்த பெண் புறா

புறாக்களின் வீரத்தையும், புத்திக்கூர்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் விதத்தில் அவைகளுக்கு பறக்கும் பந்தயம் வைக்கப்படுகிறது. பந்தயத்திற்காக திக்கு திசை தெரியாத பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் விட்டாலும், தான் வளர்க்கப்படும் வீடு தேடி ஓய்வின்றி பறந்து வந்து விடுகிறது. சமீபத்தில் நடந்த பறக்கும் பந்தயத்தில் சாதனை படைத்திருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த 8 மாத பெண் புறா. அதன் பெயர் `பிளாக் குயின்’.

இந்த சாதனைப் புறாவின் சிலிர்க்க வைக்கும் பயணம் பற்றி பார்ப்போம்.

பெங்களூரில் இருந்து வாகனம் மற்றும் ரெயில் மூலம் மராட்டிய எல்லையில் உள்ள லேண்டடு பகுதிக்கு பிளாக் குயின் பெண்புறா அழைத்து செல்லப்பட்டது. இதேமாதிரி ஏராளமான பந்தய புறாக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்தன. போட்டியில் ஏறத்தாழ 25 புறாக்கள் கலந்து கொண்டன. புறா பந்தய போட்டியை நடத்துபவர்கள் கூட திசை தெரியாமல் தவித்த அந்த இடத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பந்தயப் புறாக்கள் அனைத்தும் கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்டன.

அடுத்தகணம் புறாக்கள் வானுயர பறந்தன. போட்டி தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் அதாவது மாலை 6.30 மணிக்குள் முதலில் வீடு சேரும் புறா வெற்றி பெற்றதாக கருதப்படும். போட்டியில் கலந்து கொண்ட புறா என்பதற்கு அடையாளமாக காலில் ரகசிய எண் கொண்ட வளையம் போடப்பட்டு இருந்தது.

ஆனால் 9 நிமிடத்திற்கு முன்பாகவே அன்று மாலை 6.21 மணிக்கு பிளாக் குயின் தன்னை வளர்க்கும் அமர்நாத் வீட்டை வந்தடைந்து பரிசை தேடிக் கொடுத்தது. 700 கிலோ மீட்டர் தூரத்தை ஓய்வின்றி கடந்து வந்து இந்த சாதனையை படைத்திருக்கிறது.

தற்போது பிளாக் குயின் தனது சொந்தங்களுடன் கூண்டில் உலாவிக் கொண்டிருக்கிறது. உரிமையாளர் அமர்நாத் கூறுகிறார்.

வானத்தில் பல்டி அடிக்கும் கர்ணபுறாக்களை எனது பெரியப்பா வளர்த்து வந்தார். எனக்கு இப்போது 55 வயது. நான் 12 வயதிலேயே புறா இனங்கள் மீது ஆர்வமாகி புறாக்களை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். `ஓமிங்’ என்று அழைக்கப்படும் ரேஸ் பந்தய புறாக்களை வளர்க்க தொடங்கினேன். இந்த புறாக்களுடன் கடந்த 3 ஆண்டுகளாக போட்டியில் பங்கு பெறுகிறேன்.

8 மாதமே ஆன பிஞ்சு பெண் புறா இப்போது இந்த சாதனையை படைத்து உள்ளது. 8 மாத பெண் புறா எதுவும் உலக அளவில் இதுபோன்ற சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது. புறா பயிற்சியில் எனக்கு உறுதுணையாக பயிற்சியாளர் வின்சென்ட் பால் இருக்கிறார். அவர் தான் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பது, சத்தான உணவு வழங்குவது, மருந்து மாத்திரை வழங்குவது போன்றவற்றை செய்து வருகிறார். பந்தய புறாக்களை வளர்க்கும் நுணுக்கம் அவருக்கு நன்றாக தெரியும்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டதால் தான் எங்களது புறா வெற்றி பெற்றுள்ளது. அடுத்து இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை புறாவை பறக்க விட வேண்டும் என்பது தான் எனது இலக்கு. எனது மகன் யஷ்வந்த் புறாக்களை பேணி பராமரிப்பதில் எனக்கு உறுதுணையாக இருக்கிறான்” என்றார்.

`பிளாக் குயின்’ புறாவின் பயிற்சியாளர் வின்சென்ட் பால் கூறுகையில், “இந்த புறா 700 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்துக்குள் கடந்து உள்ளது. ஒரு நிமிடம் கூட மரத்திலேயோ அல்லது தரையிலேயோ கால் பதித்து இருக்காது. அவ்வாறு கால் பதித்து இருந்தால் அது வெற்றி இலக்கை எட்டியிருக்க முடியாது. ஓய்வே எடுக்காமலும், பாதை மாறாமலும் பறந்து வந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த புறா பந்தயத்தில் ஒரு வருத்தம், உரிய அனுமதி பெற்று போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வனத்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. இது குறைந்தால் புறா பந்தயம் வளர்ச்சி பெறும்” என்றார்.

பிளாக் குயின் புறாவை வளர்க்கும் அமர்நாத் பெங்களூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனத்தில் பணி செய்து வருகிறார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பந்தய புறாக்களை மட்டுமின்றி பல்வேறு நாட்டை சேர்ந்த பேன்சி ரக புறாக்களையும், ஆகாயத்தில் பல்டி அடிக்கும் கர்ண புறாக்களை யும் வளர்த்து வருகிறார். இந்த புறாக்களை வளர்க்க மாதந்தோறும் அவர் செய்யும் செலவு எவ்வளவு தெரியுமா? ரூ.30 ஆயிரம்.

One response

  1. thank you for news about dove

%d bloggers like this: