Daily Archives: ஏப்ரல் 14th, 2011

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்… பிரமாதம்!

அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.

இது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாளிலிருந்தே ஊரெல்லாம் ஒலி பெருக்கிகள் முழங்கும்; அரசியல் விளம்பரங்களால் வெள்ளைச் சுவர்கள் அழுக்காகும்; காணும் திசையெல்லாம் கட்சித் தோரணங்கள் கலங்கடிக்கும்; ஊர்வலம் என்ற பெயரில் ஊரே குப்பையாகும்; தொண்டர்களின் வெள்ளத்தில் மதுக்கடைகள் மூழ்கிப்போகும்; ஓட்டுப்பதிவு நாளில், மக்கள் வெளியே வர பயப்படும் அளவுக்கு சூழல் மிரட்டும்.

இந்த தேர்தலில் இந்தக்காட்சிகள் எதுவுமில்லை; ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தாலும், அதுவும் இலைமறை காய்மறையாகத்தான் நடந்தது. சிறு சிறு தகராறுகள் அரங்கேறினாலும், அதுவும் பரவாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் இறுக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட, தேர்தல் நாளில் மக்களிடம் காணப்பட்ட உற்சாகம், தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தியது. ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது. வண்டி வைத்து வாக்காளர்களை தூக்கி வரும், தேர்தல் கால திடீர் கரிசனத்தை நேற்று எங்கும் பார்க்க முடியவில்லை. இறுதி கட்ட “கேன்வாஸ்’ என்ற பெயரில், வாக்காளர்களை வம்புக்கிழுக்கும் வேலையும் நடக்கவில்லை.

தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள்.இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்… சபாஷ்!

தமிழக வரலாற்றில் பணம் அதிகம் விளையாடிய தேர்தல்

தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் புகுந்து விளையாடியுள்ளது என, அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர். அதனால், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என கருதப்படுகிறது.

தமிழக தேர்தல் களத்தில் பணப் புழக்கத்தை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தியது. இதன் விளைவாக, இதுவரை 34 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. அத்துடன், 13 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பிடிபட்டுள்ளன. இதில், 5.18 கோடி ரூபாய் பணம், உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதால், உரியவர்களிடம் திருப்பி தரப்பட்டது.தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, பல்லாயிரக்கணக்கான புகார்கள் வந்ததில், 61 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்த புகார்களில் அதிகபட்சமாக, அனுமதியின்றி சுவர் விளம்பரம் உள்ளிட்ட கட்சி விளம்பரங்கள் செய்தது தொடர்பாக வந்த புகார்கள் மட்டுமே, 55 ஆயிரத்திற்கு மேற்பட்டவை.உரிய அனுமதியின்றி வாகனங்கள் இயக்கியதாக, 2,850 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக, 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஓட்டளிக்க பணம், பரிசுப் பொருட்களை பெற்றாலோ, கொடுத்தாலோ, ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. முறைகேடுகள் நடந்தால், தேர்தல் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது.இப்படி தேர்தல் கமிஷன் அறிவித்த அறிவிப்புகள், நடவடிக்கைகள் என அத்தனையையும் மீறி, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், பிரதான கூட்டணிகளான தி.மு.க., – அ.தி.மு.க., அணிகளின் சார்பில், பண வினியோகம் பலமாக நடந்துள்ளது.ஒரு சில இடங்களில், பலம் வாய்ந்த சுயேச்சை, பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களும் பணத்தை வாரி இறைத்துள்ளனர். இதனால், தமிழக தேர்தல் களத்தில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்பதை எளிதில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது.மாநகர் பகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் ஓட்டுக்கு 250 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நள்ளிரவு நேரங்களிலேயே அதிகளவு பண வினியோகம் நடந்துள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில், பகலிலேயே பண வினியோகம் ரகசியமாக நடந்துள்ளது. ஒரு சில கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே, பணத்தை நம்பாமல், மக்களை நம்பி போட்டியில் இறங்கியுள்ளனர்.பண வினியோகம் தொடர்பாக, பல இடங்களில், அரசியல் கட்சியினருக்கு இடையே கடும் மோதலும் நடைபெற்றுள்ளது. பல இடங்களில் பொதுமக்களே ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பணம் வினியோகம் தொடர்பாக நடந்த மோதலில், உடுமலைப்பேட்டையில் அ.தி. மு.க., வேட்பாளர் சண்முகவேலுவின் மண்டை உடைந்தது.தேர்தல் மோதல்களில் பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க., கிளை செயலர் கொலை செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தில் தே.மு.தி.க., அலுவலகம் கொளுத்தப்பட்டது. தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட்ட மதுரை கலெக்டர் சகாயத்திற்கு எதிராக அவருக்கு கீழே பணிபுரிந்த அதிகாரிகளே தூண்டி விடப்பட்டனர். ஆளும் கட்சியினர் அவருக்கு எதிரான புகார்களை தேர்தல் கமிஷனுக்கு தட்டிவிட்டபடி இருந்தனர்.

மொத்தத்தில் இந்த தேர்தலில், தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், முக்கிய வேட்பாளர்கள், பிரச்னைக்குரிய பகுதிகளில் போட்டியிடும் இடங்களில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகள் சிலர் விலை போய் விட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. இந்த தேர்தலில் வாக்காளர் போட்டோவுடன் கூடிய ஓட்டுச்சாவடி சீட்டு, மாற்று திறனாளிகளுக்கு தனி வரிசை, நமது ஓட்டை வேறு யாரேனும் போட்டிருந்தாலும் ஓட்டு போடும் உரிமை, “49 ஓ’ முழுமையான அமலாக்கம், தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்தல் போன்றவை இந்த தேர்தலின் சிறப்பம்சங்களாக திகழ்கின்றன.இத்தனையையும் தாண்டி, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும், கள்ள ஓட்டு விழக் கூடாது, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பதே உண்மையான ஜனநாயகவாதிகளின் பிரார்த்தனையாக இருந்தது.

ஸ்பெக்ட்ரம் ராஜா குவித்த ரூ.1,500 கோடி சொத்து :பறிமுதல் செய்ய அதிதீவிரம்

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் மூலம் சட்டத்திற்கு புறம்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் வாங்கிக் குவித்த 1,500 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில் நடந்த “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பீடு ரூ.1.76 லட்சம் கோடி. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட, பலர் கைது செய்யப்பட்டனர். இதில் மோசடி, பினாமியாக பல்வேறு வழிகளிலும் கோடிக்கணக்கான பணம் புழங்கிய விதம் ஆகியவை சி.பி.ஐ., விசாரணையில் உள்ள முக்கிய அம்சமாகும். மேலும், ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப்பிரிவினர் நடத்திய சோதனையில் தெரியவந்தது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள், நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், இது தொடர்பாக வாங்கிக் குவிக்கப்பட்ட அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களுக்கான விவரங்களை சேகரித்துள்ளனர்.மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, சென்னை மற்றும் டில்லியில் பெரம்பலூர் மற்றும் பல பகுதிகளில் உள்ள சொத்துக்கள் விவரங்களை பட்டியலிடும் பணியை அமலாக்கப்பிரிவு துவக்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக ராஜா மற்றும் அவர் குடும்பத்தார் வசமுள்ள 1,500 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்க உள்ளனர்.இவ்வாறு வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துக்கள் ராஜாவின் மனைவி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரில் உள்ளன. ராஜாவின் குடும்ப டாக்டரும் அமலாக்கத் துறையின் பிடிக்குள் சிக்கியுள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த உடன் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை துவக்குவது அமலாக்கப்பிரிவு விசாரணையின் தொடர் நடவடிக்கை தான். மேலும், வரும் 25ம் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன் இந்த நடவடிக்கை இருக்கலாம். சட்டவிரோதமாக பணத்தை பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்களை சேகரித்திருக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக முன்னணி நிறுவனங்களின் பிரமுகர்கள் உட்பட 57 பேர் மீது புகார் சேகரிக்கப்பட்டிருப்பதால், இது குறித்து அமலாக்க பிரிவினர் வெளிப்படையாக தற்போது தகவல் தர முன்வரவில்லை.மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே தரகராக செயல்பட்ட நிரா ராடியா மீது சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறையின் தயாராகி வருகின்றனர்.

நன்றி-தினமலர்

வெற்றிக்கு ஒரு பக்கம் – கற்றுத் தரும் கம்பெனிகள்!

உங்களுடைய குருநாதர் யார்? யாரிடமிருந்து நீங்கள் அதிகம் விஷயங்களை, பண்புகளை, நல்ல குணங்களை, பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?
இந்த கேள்விக்குப் பதிலாகச் சிலர் தங்களது பெற்றோரைக் குறிப்பிடுவார்கள்; இல்லாவிட்டால் எழுத்தாளர், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைத் தங்களது குருநாதர்களாகக் குறிப்பிடுகிறவர்கள்கூட உண்டு! ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, உயிரே இல்லாத சமாசாரங்களை சொல்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதாவது சரித்திரத்தில் வெற்றியடைந்த நிறுவனங்களைப் பார்த்து நாம் பழகவேண்டிய குணங்கள் ஏதேனும் உண்டா? அவற்றிடமிருந்து பாடம் கற்கமுடியுமா? சுவாரஸ்யமான இந்தக் கேள்வியுடன் ஜிம் காலின்ஸ், ஜெர்ரி போரஸ் என்ற இரண்டு மேலாண்மை நிபுணர்கள் அமெரிக்க கம்பெனிகளைப் புரட்டிப் பார்த்திருக்கிறார்கள். அவற்றில் மிகச் சிறந்தவை, பல தலைமுறைகளாக வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவை எனப் பதினெட்டு “க்ரேட்’ நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் போட்டியாளர்களோடு ஒப்பிட்டு அலசியிருக்கிறார்கள். இவை ஏன் ஜெயித்தன என்று யோசித்திருக்கிறார்கள்.
அவற்றை “பில்ட் டு லாஸ்ட்’ (ஆதடிடூதூ கூணி ஃச்ண்t) என்ற தலைப்பில் ஒரு சுவையான புத்தகமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அந்தக் குணங்களில் முக்கியமான சில, இங்கே சுருக்கமாக:
1. உங்களிடம் கைக் கடிகாரம் இருக்கிறதா? போகிற வழியில் “டைம் என்ன சார்?’ என்று நிறையப் பேர் கேட்கிறார்களா? வரிசையாக அவர்களுக்கெல்லாம் நேரம் பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தால், நீங்கள் வெறும் “வாட்ச்’மேன் ஆகிவிடுவீர்கள். வேண்டாம்! அப்படிக் கேட்கிற யாருக்கும் சொல்லாதீர்கள். அதற்குப் பதியாக அவர்களுக்கு மணி பார்க்கக் கற்றுக்கொடுங்கள், இதன்மூலம் உங்களைப் பின்பற்ற ஒரு கூட்டம் உருவாகும்.
2. இதுவா அதுவா என்று தடுமாறாதீர்கள். ஒரே நேரத்தில் இரண்டாகவும் நீங்கள் இருக்கமுடியும். மென்மை காட்டவேண்டிய நேரத்தில் மென்மை காட்டுங்கள், தேவையானபோது கடுமையாகவும் இருங்கள்.
3. காலத்துக்கு ஏற்ப மாறாதவர்கள் பிழைக்க முடியாது. ஆகவே, உங்களுடைய திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
4. பணம், லாபம், வருமானம் இதுதான் முக்கியம் என்று நினைக்காதீர்கள். அந்த வாழ்க்கை ஆரம்பத்தில் பரவசமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும்.
5. அதேநேரம், அப்படி மாற்றங்களுக்கு ஆளாகிறபோது உங்களது அடிப்படைக் கொள்கைகள், நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். அவைதான் உங்கள் அடையாளம், பலம், எல்லாமே!
6. உங்களுக்கென்று ஒரு பெரிய, மிகப் பெரிய, பிரமாண்டமான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கு எந்த அளவு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய உத்வேகமும் அதிகரிப்பதைக் காணலாம்!
7. புதிய விஷயங்களை முயற்சி செய்யத் தயங்காதீர்கள். ஒருவேளை துணிந்து இறங்கினால் அடிபடுமோ என்று யோசிக்காதீர்கள். அதற்குப் பயந்தால் நீங்கள் செக்குமாடுமாதிரி ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வரவேண்டியதுதான். தைரியமாகப் பல விஷயங்களை முயன்று பாருங்கள், அவற்றில் எது “க்ளிக்’ ஆகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
8. நிறையப் புத்தகங்கள் படியுங்கள். திறமைசாலிகளுடன் பேசுங்கள், அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேளுங்கள். ஆனால் இதுமட்டுமே உங்களுடைய வெற்றிக்கு வழி வகுக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பாதீர்கள். இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் தனித்துவமானவர்கள். ஆகவே, உங்களுக்கு எது சரிப்படும் என்பதை நீங்கள் மட்டுமே சரியாக உணரமுடியும்.
9. உன்னதமான நிலையை நோக்கி முன்னேற முடியாதபடி நம்மைத் தடுப்பதே “போதும்’ என்கிற மனோநிலைதான். ஆகவே, சுலபத்தில் திருப்தி அடைந்துவிடாதீர்கள். இன்னும் மேலே போகவேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருங்கள்.
10. எப்போதும் தொலைநோக்குப் பார்வையை இழந்துவிடாதீர்கள். ஒரு தெளிவான நோக்கத்தைத் தீர்மானித்துக் கொண்டு அதன் அடிப்படையில் நீண்ட கால திட்டங்களை வகுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.
இந்தப் பத்து விதிமுறைகளும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை. இவற்றைப் பின்பற்றி இருநூறு வருடங்களாகத் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருக்கும் நிறுவனங்களெல்லாம் இருக்கின்றன. நீங்களும் ஆரம்பித்துவிடுங்கள்.

பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு

இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.
1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும்.
2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.
3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது.
4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும் புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.
5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.
6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@ virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.
7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.
8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனே அவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.
9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்
10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.
11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.
13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.
14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.
15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.
17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.
18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.
19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.
20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகி றீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.
21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.
22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.
25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.
26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.
27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

ஆடம்பரச் செலவாளிகள்

கோடிக்கணக்கான ரூபாயை தங்களின் பிரியமான மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு பரிசாகச் செலவழிக்கும் இந்தியத் தொழிலதிபர்கள் இப்போது பெருகி வருகிறார்கள். இந்த கோடிகள் பட்டியலில் திரையுலக நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

2007-ல் முகேஷ்ë அம்பானி தனது மனைவி நீட்டாவின் 44-வது பிறந்தநாள் பரிசாக ரூபாய் 242 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர ஜெட் விமானத்தை வழங்கினார். இந்த சொகுசு ஜெட்டில் உயர்ந்த வகை மது அருந்தும் பார் வசதி, சொகுசான படுக்கை வசதி, ஷவருடன் கூடிய பாத்ரூம் வசதி மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் திக ழும் பொழுதுபோக்கிற் கான தனியறை வசதியும் உள்ளன. இந்த சொகுசு ஜெட்டில் முகேஷ்- நீட்டா தம்பதியர் எந்த ஊருக்குப் பறந்து சென்று உல்லாச மாகப் பொழுதைக் கழிக்கச் செல்கிறார் களோ, தெரியவில்லை.

முகேஷைப் போன்று இவரது சகோதரர் அனில் அம்பானி 2008-ல் தனது மனைவி தீனாவிற்கு 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 34 மீட்டர் நீளமுள்ள தியான் என்கிற மிகப் பிரம்மாண்ட கப்பல் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். ஒரு கப்பல் வேண்டும் என்று வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்த தீனாவின் ஆசை அன்புக்கணவர் அனில்அம்பானி மூலம் நிறைவேறியது!

ஜனவரி 2011-ல் சித்தார்த் மல்லையா தனது ஆருயிர் காதலியான தீபிகா படுகோனுக்கு மும்பையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

விஜய் மல்லையா, வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களை வாங்குவதில் பெரும் விருப்பம் உள்ளவர். புகழ்பெற்ற திப்புசுல்தான் வாளினை 2004-ல் 4 கோடிரூபாய்க்கு ஏலம் எடுத்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் விஜய் மல்லையா தேசப்பிதா மகாத்மா காந்தியின் ஒளிமிக்க புனிதமான வட்டவடிவ மூக்குக் கண்ணாடியை 8 கோடி ரூபாய்க்கு வாங்கிப் பாதுகாத்து வருகிறார் என்பதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பிரமிப்பு.

அமீர்கான் தனது மருமகன் இம்ரான் முதன்முதலில் நடித்து வெளிவந்த `ஜானே து யா ஜானே நா’ படத்தின் வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடினார். விழாவில் இம்ரானிற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் ஒன்றினைப் பரிசாக வழங்கினார்.

பாலிவுட் திரையுலகம் இதுவரையில் கண்டிராத வகையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி-ராஜ்குந்த்ரா திருமணம் 2009-ல் நடந்தது. இந்த திëருமண நிச்சயதார்த்தம் நடந்த போது உலகமே வியக்கும் வகையில் ஷில்பாவிற்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 காரட் வைரமோதிரத்தை நிச்சயதார்த்த மோதிரமாகப் பரிசளித்தார் ராஜ்குந்த்ரா. பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்தத்தின் போது அவருக்கு கணவரால் வழங்கப்பட்ட 7 காரட் நிச்சயதார்த்த மோதிரத்தை, இந்த 3 கோடி ரூபாய் மோதிரம் சாதாரணமாக்கி விட்டது.

ஷில்பாஷெட்டி திருமணத்தின்போது வாங்கப்பட்ட முகூர்த்தப்பட்டு 50 லட்சம் ரூபாய். அந்த முகூர்த்தப்பட்டிற்கு மேட்சாக வாங்கப்பட்ட தலை முடியலங்கார தங்க வைர ஆபரணங்கள், நெக்லஸ், வளையல் மற்றும் கம்மல் வகைகளின் மதிப்பு 3 கோடி ரூபாய்.

சல்மான்கான் சகோதரர்களின் பாசப்பிணைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் சல்மான்கான் தனது சகோதரருக்காக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். இதில், கான் சகோதரர்கள் தனியாக பார்ட்டி விருந்து என்ற கொட்டமடித்து மகிழ்கின்றனர்.

ஷில்பாஷெட்டிக்குப் போட்டியாக நடிகை கிம் சர்மா தனது நிச்சயதார்த்தத்தின் போது அணிந்திருந்த 13 காரட் நிச்சயதார்த்த மோதிரம், மற்றும் காதில் அணிந்திருந்த 13 காரட் கம்மல் ஆகியவற்றின் மதிப்பு 6 கோடி ரூபாயாகும்..!

பேக்காம்ஸ் நிறுவனத்தார் நடிகர் ஷாருக்கானுக்கு துபாயில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜன்னத் என்ற வீட்டைப் பரிசாக அளித்துள்ளனர்.

இனி என்றும் இன்பமே!

சகோதரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும், தந்தை – மகன் உறவு எப்படி அமைய வேண்டும், தாய்க்கு எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும், கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடந்து கொள்வது எப்படி, கைமாறு கருதாமல் உதவி செய்யும் மனப்பாங்கை பெறும் முறை போன்ற நல்ல விஷயங்களை எல்லாம் ராமபிரானின் வரலாற்றில் அறிந்து கொள்ளலாம்.
அயோத்தி மன்னர் தசரதரின் அருந்தவப் புதல்வராய் பிறந்தவர் ராமபிரான். இவரது சித்திமார்களின் பிள்ளைகள் லட்சுமணன், பரதன், சத்ருக்கனன். லட்சுமணன், சத்ருக்கனன் சுமித்திரைக்கும், பரதன் கைகேயியிக்கும் பிறந்தனர். ஸ்ரீமந்நாராயணன் ராமனாகவும், அவரது சகாக்களான ஆதிசேஷன், சங்கு, சக்கரம் ஆகியவை அவரது தம்பிகளாகவும், லட்சுமி தாயார் சீதாதேவியாகவும் பூமிக்கு வந்தனர்.
தசரதரின் மனைவி கைகேயி நல்லவளாயினும், தன் பணியாளாக இருந்த மந்தாரையின் சொல் கேட்டு, தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதரிடம் கேட்டாள். போதாக்குறைக்கு மூத்த மகன் ராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்றும் சொல்லி விட்டாள். ஒரு முதலாளி, தனக்கு தவறான ஆலோசனை சொல்லும் பணியாளர்களை உடன் வைத்திருக்கக் கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணம். அவளது சொல்லுக்கு கட்டுப்பட்டதால், எல்லா ராணிகளும் மாங்கல்யம் இழந்தனர்.
ஆனால், ராமனோ எந்தவித சலனமும் இல்லாமல், தந்தையின் உத்தரவை ஏற்று கிளம்பி விட்டார். இது, எங்கும் நடக்காத அதிசயம். சிறு சொத்துக்கு கூட, கோர்ட் வாசலை மிதிக்கும் சகோதரர்கள், விட்டுக் கொடுக்கும் மனநிலையைப் பெற வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ராமன் காட்டுக்கு கிளம்பி விட்டாலும், தம்பி பரதன், நாடாள மறுத்து விட்டான். ராமனின் பாத ரட்சையை சிம்மாசனத்தில் வைத்து, ராமனே ஆள்வதாக பாவனை செய்து கொண்டான். அண்ணன் – தம்பி உறவுக்கு இதை விட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது.
ராம சகோதரர்களின் மனைவிமார்களும் அப்படியே… எக்காரணம் கொண்டும் கணவனை தவிக்க விட்டு, அரண்மனை வாழ்வு வாழ மாட்டேன் என சீதை அடம்பிடித்து, அவனுடன் கிளம்பினாள். கணவனை அனுசரித்து மனைவி வாழ வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
“உங்கள் அண்ணனும், அண்ணியும் காட்டுக்குப் போனால், உங்களுக்கு அங்கே என்ன வேலை?’ என, லட்சுமணனின் மனைவி ஊர்மிளா கேட்கவில்லை. 14 வருட காலமும் அவளும் கணவனை விட்டுப் பிரிந்திருந்தாள். “அவர்கள் தான் ராஜ்யத்திலேயே இல்லையே… நம் இஷ்டத்துக்கு, 14 ஆண்டுகள் அயோத்தியை ஆளலாம்…’ என பரதனின் மனைவி மாண்டவியோ, சத்ருக்கனனின் மனைவி சுருதகீர்த்தியோ தன் கணவன்மாருக்கு தூபம் போடவில்லை. ஆக… இப்படி ஒரு அரிய குடும்பத்தை ராம சரிதத்தில் நாம் பார்க்கிறோம்.
ராமன் காட்டுக்குப் போன பின், ஆஞ்சநேயரை சந்தித்தார். முன்பின் தெரியாத ராமனுக்காக அவர் கடலையே தாண்டிச் சென்று, அவர் மனைவி இருக்குமிடத்தை அறிந்து வந்தார். தேவையே இல்லாமல் ராவணனைப் பகைத்துக் கொண்டார். இவ்வளவு செய்தும், “நீ எப்படி இந்த சாகசங்களையெல்லாம் செய்தாய்?’ என்று யார் கேட்டாலும், “எல்லாம் இந்த ராமனின் ஆசிர்வாதத்தால், “ராம ராம’ என்று சொன்னேன். அந்த திவ்யநாமம் வெற்றியைத் தந்தது…’ என்று, தன் வெற்றியை ராமனுக்கே அர்ப்பணித்தார். ராமபிரானோ, “இல்லை… இல்லை…இந்த சிரஞ்சீவி இல்லாவிட்டால், என் மனைவி எங்கிருக்கிறாள் என்றே தெரியாமல் போயிருக்கும். நானும், என் மனைவியும் உயிர் பிழைத்ததே இவரால் தான்…’ என்கிறார்.
அதாவது, நம் வாழ்வில் பெறும் வெற்றி நம் முயற்சியால் வந்ததல்ல… அது, இறையருளால் வந்தது, அதை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், பிறருக்கு நன்மை செய்பவன் எவனாயினும், அவனுக்கு கடவுளே அடிமையாகி விடுவார் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
ராமனின் வாழ்க்கை, மனித வாழ்வை திவ்யமாக நடத்த உதவுகிறது. “ஸ்ரீராமஜெயம்’ என்று சொல்பவர்களுக்கு, எந்தச் செயலிலும் வெற்றி கிடைக்கிறது; மனோபலம் அதிகரிக்கிறது. ஸ்ரீராமனின் பிறந்தநாளே ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.

ஞானம் ஏற்பட வேண்டுமா?

பகவான், எங்கும் இருக்கிறார். நம் கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக, அவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம் கண்ணுக்கு அவர் தெரிந்தாலும், நம் முன் பிரசன்னமானாலும் பிரச்னைகள் தான் உண்டாகும்; அதனால்தான், அவர், நம் கண்களுக்கு தெரியாமலே, இந்த உலகை வழி நடத்துகிறார்.
“உன் நாராயணன் எங்கே இருக்கிறார்…’ என்று, பிரகலாதனிடம் கேட்டான் இரண்ய கசிபு. அதற்கு, “அவர் எங்கும் இருக்கிறார்; அவர் இல்லாத இடமே இல்லை…’ என்றான்
பிரகலாதன். “இந்த தூணில் இருக்கிறாரா?’
எனக் கேட்டு, அந்த தூணை, இரண்ய கசிபு வெட்ட, அதிலிருந்து, நரசிம்மமாக வெளியே வந்தார் நாராயணன்.
ஸ்ரீராமனை காண வேண்டுமென்று கபீர்தாசரிடம் சொன்னார் ராமதாசர். அவருக்கு, தாரக மந்திரத்தை உபதேசித்து, ஒரு சமாராதனை செய்யும்படி சொன்னார் கபீர்தாசர். “அப்படி செய்தால், அங்கே பகவான் வருவாரா?’ என்று கேட்டார் ராமதாசர். “நிச்சயம் வருவார்; ஆனால், நாம் தான் கண்டு கொள்ள வேண்டும்…’ என்றார் கபீர்தாசர்.
ராமதாசரும், ஒரு சமாராதனைக்கு ஏற்பாடு செய்தார். சமையல், பட்சண வகைகளை எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்து, பகவானை எதிர்பார்த்திருந்தார்; ஆனால், பகவானை காணவில்லை. அங்கே ஒரு எருமை மாடு வந்து, சமையலறையில் நுழைந்து, அங்கிருந்த அன்னம், பாயசம், பட்சணம் முதலியவைகளை தின்று, அதையெல்லாம் கீழே உருட்டி விட்டு, அதன் மேல் படுத்துப் புரண்டது.
ராமதாசரும், மற்றவர்களும் பெரும்பாடுபட்டு, அதை விரட்டி, வெளியே துரத்தி விட்டனர். நெடு நேரம் காத்திருந்த ராமதாசர், கபீர்தாசரிடம் சென்று, “பகவான் வர வில்லையே… என்ன காரணம் தெரியவில்லையே…’ என்றார்.
அதற்கு, கபீர் தாசர் சிரித்துக் கொண்டே, “பகவான் தான் வந்தாரே… நீர் அதை புரிந்து கொள்ளாமல், அடித்து விரட்டி விட்டீர்களே… அது, என் முன்னால் வந்தது; அதன் மீது நீங்கள் அடித்த காயங்கள் கூட இருந்தது. நான் அதை தடவி கொடுத்து, காயத்தின் மீது பச்சிலை தடவி அனுப்பினேன்…’ என்றார்.
“அப்படியா… நாங்கள் அடித்து விரட்டியது ஒரு எருமை மாடு அல்லவா! அது சமையலறையில் புகுந்து, எல்லாவற்றையும் நாசம் செய்தது; அதனால், அதை அடித்து விரட்டினோம்…’ என்றார்.
“அது தான் உங்களுக்கு புரியாத புதிர்; தெரியாத விஷயம். எருமையாக வந்தது பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே உங்கள் சமாராதனையை கண்டு மகிழ்ந்து, அவர் அதை சாப்பிட ஆசையோடு வந்தார்; வந்தவர் எருமை ரூபத்தில் வந்தார். நீங்கள் எருமையை தான் பார்த்தீர்கள்; அதன் உண்மை ரூபமான ராமச்சந்திர பிரபுவை பார்க்கவில்லை; ஏமாந்து விட்டீர்கள்…’ என்றார் கபீர்தாசர்.
— இப்படியெல்லாம் நிறைய கதைகள் உண்டு. பகவான் எங்குமிருக்கிறார். எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும். எங்கும், எதிலும் கடவுள் இருக்கிறார் என்றும், எல்லாமே கடவுளின் அம்சம் தான் என்ற ஞானம் இருந்தால், அவரை எந்த ரூபத்திலும் காணலாம்.
“இருக்கிறார்’ என்பவருக்கு, அவர் இருக்கிறார்; “இல்லை’ என்பவருக்கு, அவர் இருப்பது தெரிவதில்லை; அவ்வளவு தான்.
இருட்டில் இருக்கும் பொருள்; கண்ணுக்கு தெரிவதில்லை, வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம். அந்த வெளிச்சம் தான் ஞானம்; இருட்டு தான் அஞ்ஞானம்; பொருள் தான் கடவுள். அஞ்ஞானம் என்ற இருட்டை, ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால், கடவுள் என்ற பொருளை காணலாம். முடியுமா பாருங்களேன்!
***