Daily Archives: ஏப்ரல் 17th, 2011

நாளொரு பர்த்டே… பொழுதொரு ட்ரீட்..!

இன்றைய யூத்களுக்கு ‘ட்ரீட்’ இல்லாமல் ஒருநாள் மாலைப்பொழுதும் கழியாது. ஆம்… நண்பர்கள், தோழிகள் யாருக்காவது பர்த்டே, வேலையில் சேர்ந்த நாள், முதல் சம்பளம் வாங்கிய நாள், திருமண நிச்சயதார்த்தம் என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக விருந்து இருக்கும். எதுவுமே இல்லாவிட்டாலும், அவர்களாகவே ‘கெட் டுகெதர்’ விருந்துக்கு ஏற்பாடு செய்து விடுவர். மொபைல் போன் இருக்கு; வீடியோ கான்பரன்சிங் வசதி வேறு இருக்கிறது. ஒரு சில நிமிடங்களில் தகவல் சொல்லி, ஆளுக்கொரு மூலையில் இருந்தாலும் வந்து விடுவர். பையிலே கார்டு இருக்கிறது; போதாதா விருந்துக்கு! இதில் பொழுதுபோக்கு, ஜாலி டூர் போன்ற நிகழ்ச்சிகளும் கூட இருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து, பக்காவாக பிளான் செய்வார்கள். கோயில் ட்ரிப்பும் கூட சில சமயம் இருக்கும். அதுவும் ஜாலியான கடவுள் பக்தியாகத்தான் இருக்கும். முன்பெல்லாம் குடும்பத்தோடு திருவிழா, உறவினர் வீட்டுக்குச் செல்வது போன்றவை இருக்கும். கூட்டுக்குடும்பமாக இருந்ததால், கூட்டமாகப் போய் வருவது பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால், இப்போது சிங்கிள் பேமிலி முறை வந்தாகி விட்டது: போதாக்குறைக்கு திருமணமாகாமல் ‘லிவ் இன் அரேஞ்மென்ட்’ ஊடுருவியும் விட்டது. இப்படியான மேற்கத்திய பாணி வாழ்க்கை முறையின் விளைவுதான் நாளுக்கொரு ‘ட்ரீட்’ ஜாலி. எப்போதும் வேலைதான்! யூத்களுக்கு மொபைல், இன்டர்நெட், சாட்டிங் போன்ற டிஜிட்டல் சமாசாரங்கள்தான் ‘யாமிருக்க பயமேன்’ துணையாக இருக்கின்றன. பாதி நேரத்தை மொபைல் பிடித்துக்கொண்டு விடும். மீதி நேரத்தை நெட் சாட்டிங் ஆக்கிரமித்து விடும். ஆபீஸ் வேலையில் மூழ்கிவிட்டால் போதும்; சுறு சுறுப்புக்கு குறைவிருக்காது. ஆக, தூங்குவதற்கு ஐந்து மணி நேரம் கிடைக்குமா என்பதே கேள்விதான். ஆனாலும் அவர்கள் எதிலும் சாதிக்கின்றனர்; அமெரிக்காவே வியந்துபோகும் அளவுக்கு பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இந்த திறமையும், துறுதுறு வேலையும்தான் இந்திய இளைஞர்களை உச்சத்தில் வைத்திருக்கிறது. அதே சமயம் ஏகப்பட்ட சம்பளம் கிடைப்பதால், செலவழிப்பதில் கஞ்சத்தனமே அவர்களிடம் இல்லை. சில ஆண்டுகள் முன்பு வரை, அமெரிக்காவில் மற்ற நாட்டினர் எல்லாம் வார இறுதியில் கையில் இருப்பதை செலவழித்து விடுவர். இந்தியர்களோ, எல்லா பணத்தையும் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி விட்டு, ரொட்டியும் கோலாவும் சாப்பிட்டு காலத்தை ஓட்டுவர். வார இறுதி ஜாலியெல்லாம் ‘நோ’. ஆனால், இப்போது அது தலைகீழ். வார இறுதி மட்டுமல்ல, நாளுக்கொரு விருந்துதான். நெட் காட்டிக் கொடுக்கும்! பேஸ்புக், ட்விட்டர் என்று சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் இன்றைய யூத்கள் பங்கேற்பு இருக்கிறது. உலகில் எந்த மூலையில் குறிப்பிட்ட நண்பர் இருந்தாலும், அவருக்கு பர்த்டே வாழ்த்தை, சரியான நாளில், சரியாக இரவு 12 மணிக்கு சொல்ல ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. பேஸ்புக்கில் தேடினால், பள்ளிப்பருவத்தில் படித்த நண்பர்கள் பற்றிய விவரம் தெரியும். அவர்களின் பர்த்டே தெரியும். அதை வைத்து வாழ்த்து சொல்லலாம். யார் யாருக்கு எப்போது பர்த்டே என்பதை எல்லாம் பேஸ்புக் காட்டிக்கொடுக்கும். நண்பர்களில் யாருக்காவது பர்த்டே வந்துவிட்டால் நள்ளிரவில் மொபைலில் எழுப்பி வாழ்த்து சொல்வதும், மிட்நைட்டில் கதவைத் தட்டி ‘பொக்கே’யை கூரியர் மூலம் தர வைப்பதும் கூட இன்றைய யூத்களின் ‘ஜாலி’ வாழ்க்கையில் முக்கிய அம்சம். ஜாலிக்காக மட்டும்தான் மெனக்கெடுகின்றனர் என்று நினைக்க வேண்டாம்; சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றனர். ஒருபக்கம் சாஃப்ட்வேர் பணியில் இருந்து கொண்டே, வார இறுதியில் கிராமங்களுக்குச் சென்று ஏழைக் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவை வளர்ப்பதில் இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுபோல, உலக வெப்பமயமாதலை தடுக்கவும், எய்ட்ஸ் நோயை விரட்டவும், ஜப்பான் சுனாமி நிவாரணத்துக்கு நன்கொடை வசூலித்து ‘நெட்’ மூலம் அனுப்புவதும் இளைஞர்களின் சமூக அக்கறைக்கு சான்று. சர்வதேச அளவில் இயங்கும் ‘பீட்டா’ உள்ளிட்ட பல சமூக அமைப்புகளில் இன்றைய இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். கிராமங்களில் பள்ளிகள் கட்டித்தருவது, பாரம்பரிய கோயில் பராமரிப்பு போன்ற சேவையிலும் யூத்கள் இறங்கி உள்ளதும் திருப்தியான விஷயம். சுறுசுறுப்புக்கு உதாரணம் ஒரு வகையில் மொபைல் போன் இடைஞ்சலாக இருந்தாலும், இளைஞர்களின் சுறுசுறுப்புக்கு அதுதான் காரணம். இன்றைய இளைஞர்கள் எஸ்.எம்.எஸ் அடிப்பதிலிருந்து, கூகுளில் தேடுவது வரை படு சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தால், ‘தலைமுறை இடைவெளி’ என்பதன் அர்த்தம் புரியும். லெட்டர் போட்டு பதிலுக்கு காத்திருப்பர் முந்தைய தலைமுறையினர். இன்றைய தலைமுறையினரோ, ஆப்ரிக்காவில் இருந்தாலும் சரி, அமெரிக்காவில் இருந்தாலும் சரி, சில நிமிடங்களில் முகவரியைக் கண்டுபிடித்து, கம்ப்யூட்டர் ஸ்கைப் போன் மூலம் பேசி விடுவர். நேருக்கு நேர் பழகும்போது ஏற்படும் உணர்வு பூர்வ நட்பு, இந்த இன்டர்நெட் உலகில் குறைவுதான். தனியாளாக இருக்கும் இன்றைய யூத்களுக்கு கூட்டுக்குடும்ப உறுப்பினர்களாக இருப்பது மொபைலும் ‘நெட்’டும் தான். அவை இல்லாவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க பாணி வாழ்க்கையில் மிஞ்சுவது ‘ஜாலி’ மட்டுமே. அது, ஃபாஸ்ட் ஃபுட் போன்றது. இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கையோ ‘ஃபுல் மீல்ஸ்’ போன்றது. முன்னது கொழுப்பை அதிகரிக்கும்; பின்னது, ஆரோக்கியத்தை நீடித்துத் தரும்.

வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும் கண்ணகி கோயில்!

வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, வரும், 18ம் தேதி நடை பெறுகிறது.
மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர்.
அவர் நினைவாக, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக – கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.
சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும்.
கடந்த, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது.
இதன் காரணமாக, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.
இந்த ஒருநாள், கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.
பழமையான, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும். இதற்கு, முதலில் தமிழ் ஆர்வலர்களும், கண்ணகியை வழிபடுவோரும் மறவாமல் வருடத்திற்கு ஒரு நாள் அனுமதிக்கப்படும் நாளன்று, ஒரு நடை போய் பார்த்துவிட்டு வருவது நல்லது.

காணக் கண்கோடி வேண்டும்!-ஏப்., 18 – அழகர் வைகை வைபவம்!

மலைகளில் சிறந்தது அழகர்மலை. தன் பக்த கோடிகளுக்கு தீர்த்தம் வழங்கி அருள்வதற்காக, ஏப்., 18 அன்று, மதுரை வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர். இறைவனைத் தேடி பக்தர்கள் செல்வதும், பக்தனைத் தேடி இறைவன் வருவதும் என்றும் உள்ள கதை.
இறைவனை அடைவதற்காக, ரிஷிகள், தங்கள் உடல், பொருள், ஆவியைத் துறக்க தயாராக இருந்தனர். வால்மீகி போன்ற ரிஷிகள், தங்களைச் சுற்றி, புற்று வளர்வது கூட தெரியாமல், பல்லாண்டுகள் தவமிருந்ததாக புராணங்களில் பார்க்கிறோம். தன்னை அடைய இத்தகைய தியாகம் செய்த அவர்களைச் சந்திப்பதற்காக, இறைவனும், பூமிக்கு வந்ததுண்டு.
ஸ்ரீமந்நாராயணன் எடுத்த ராமாவதாரத்தின் நோக்கமே, ரிஷிகளைக் காண வந்தது தான். அவர், தன் அவதார காலத்தில் வசிஷ்டர், விஸ்வாமித்திரர், சபரி அன்னை இன்னும் காட்டில் வசித்த பல ரிஷிகளைச் சந்தித்தார். மன்னனாகப் பிறந்தும், காட்டிற்கு போக வேண்டுமென்று, தனக்குத்தானே ஒரு பிரச்னையை உருவாக்கி, தான் மட்டும் செல்லாமல், தன் துணைவி லட்சுமியின் அவதாரமான சீதா, ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணனுடன் சென்றார். அதுபோல, பூலோகத்திற்கு அழகராகவும் அவர் வந்தார்.
மண்டூகர் என்ற மகரிஷி, ஒரு சாபத்தால், தவளையாகப் பிறந்து, வைகை ஆற்றில் சிரமப்பட்டார். அவருக்கு விமோசனம் அளிக்க பேரழகு பெட்டகமாக, சுந்தரராஜர் என்ற பெயரை கள்ளழகராக மாற்றிக் கொண்டு அருள் செய்தார். அவர் வைகைக்கு வந்ததால், பூலோகத்திலுள்ள பக்தர்களுக்கு அவரைக் காணும் பாக்கியம் கிடைத்தது. பூமிக்கு வரும் கடவுள் வெறுங்கையோடு வருவாரா என்ன… பிறவிப் பிணியைத் தீர்க்கும் தீர்த்தம் கொண்டு வந்தார்.
அழகர், ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள், சக பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பர். அழகர், பக்தர்களுக்கு தீர்த்தம் தந்து, தன் திருவடியோடு இணைத்துக் கொள்கிறார் என்றே பொருள்.
அவர், கள்ளர் வேடம் தாங்கி வருவதற்கு காரணம், பக்தர்களின் உள்ளங்களைக் கவர்வதற்கு தான்.
ஆனால், ஒரு செவிவழிச் செய்தி தான், கிராமத்து மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. அதாவது, மதுரையில் கோவில் கொண்டுள்ள தன் சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு, சீர்வரிசை கொடுக்க அவர் வந்தார். வழியில் திருடர் பயம் அதிகமாக இருந்தது. இவரும், மானிட அவதாரம் எடுத்த தன் தங்கை மீனாட்சிக்கு, மானிட வடிவம் தாங்கிய அண்ணனா கவே வந்தார். எனவே, சாதாரண மனிதர்கள் திருடர்களுக்கு பயப்படுவது போல், இவரும் பயப்படுவதாக பாவனை காட்டிக் கொண்டார். கள்ளர்களிடமிருந்து தப்ப ஒரு யோசனை செய்தார். இவரும், கள்ளனைப் போல் வேஷமிட்டு கொண்டார். அழகர்மலையில் இருந்து அவர் கிளம்பிவரும் வழியில், கள்ளனாக திரிந்த (மாறிய) இடம் தான், “கள்ளந்திரி’ என்ற பெயரில் அழைக் கப்படுகிறது.
கள்ளழகர் அழகை வர்ணிக்கிறாள் ஆண்டாள். “அவரையே கணவனாக அடைவேன்…’ என்று சூளுரைக்கிறாள். பெரும்பாலான பெருமாள் கோவில்களில், ஆண்டாள் நின்ற கோலத்தில் தான் இருப்பாள்; அவள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட, இந்த நிலை தான். ஆனால், அழகரின் அழகைக் கண்டாளோ இல்லையோ, அப்படியே உட்கார்ந்து, ரசிக்க ஆரம்பித்து விட்டாள். அதனால் தான், அழகர்கோவிலில் மட்டும் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.
ஆண்டாள் கண்ட அந்த அழகன், நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்கு அடுத்த நாள், மண்டூகருக்கு மோட்சம் தர கருட வாகனத்தில் அமர்ந்து, மீண்டும் இறங்குவார். ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி கொடுப்பார். இந்தப் பேரழகை பார்க்க, மதுரை சென்று வாருங்களேன்.

சித்திரை போளி

சில உணவுகளை மகிழ்ச்சிமிக்க பண்டிகை காலத்தில் மட்டும் செய்து சாப்பிடுவது நமது பழக்கம். அப்படிப்பட்ட சில உணவுகள் மகிழ்ச்சியை கூட்டும் உணவுகளாகவே கருதப்படுகின்றன. சித்திரைத் திருநாளை முன்னிட்டு இந்த வாரம் ருசியான போளி செய்து ருசிக்கலாம்.

சித்திரை போளி

ன்பம் நிறைந்த பல நிகழ்வுகள், துன்பம் மிக்க அனுபவங்கள் இரண்டும் நிறைந்ததுதான் மனித வாழ்வு. அதை அழகாக சித்தரிப்பது போல இருக்கப்போகிறது நாம் செய்யப்போகும் பூரணப் போளி. இனிப்பு சுவை மிகுந்த பூரணம், உப்புசுவையுடன் கூடிய மேல்மாவினுள் வைத்து செய்யப்படும் பூரணப் போளி, வாழ்வில் இன்பதுன்பங்கள் சமமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் உப்பு சுவை நிறைந்த சப்பாத்தியைப் போலத் தோற்றமளிக்கும் பூரணம் போளியை சாப்பிடுகையில் இனிப்பு சுவை தென்படும். அதுவே இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் வாழக்கையை சம மனநிலையுடன் வாழ வேண்டும் என்பதை நமக்கு காட்டும் வகையில் உள்ளது.

இம்முறை பூரணப்போளி செய்து சித்திரைத் திருநாளை வரவேற்போமா!

தேவையான பொருட்கள்

பூரணம் செய்ய

தேங்காய்த்துருவல் – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
வெல்லத்தூள் – 11/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

மேல்மாவிற்கு

மைதா மாவு – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணைய், நெய் – தேவைக்கேற்ப

செய்முறை

* மைதாமாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

* கடலைப் பருப்பை சிறிது நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து ஊறிய பருப்பை குக்கரில் வேக வைக்கவும். வெல்லத்தூளை சிறிது நீருடன் கொதிக்கவிட்டு தூசு நீங்க கெட்டியாகக் கொதிக்கவிட்டு வைக்கவும்.

* வெந்த கடலைப்பருப்பு ஆறியவுடன் அதனை தேங்காய்த் துருவலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு கெட்டியான விழுதாக அரைத்து வெல்ல நீருடன் கெட்டியாகக் கொதிக்கவிடவும்.

* ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பூரணம் ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

* ஊறிய மைதாமாவை சிறுசிறு உருண்டைகளாக்கி அதனுள் பூரண உருண்டைகளை வைத்து எண்ணை தடவிய வாழை இலையில் மெல்லியதாக தட்டவும்.

* தோசைக் கல்லை மெல்லிய தீயில் சுட வைத்து நெய், எண்ணை ஊற்றி வாழை இலையுடன் போளியைக் கல்லில் போட்டு மெல்ல வாழை இலையை உரித்து எடுத்து போளியை திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து இரண்டாக மடித்துப் பரிமாறலாம்.

சுவைக்கான குறிப்பு

* தோசைக்கல்லில் செய்கையில் எண்ணை போட்டு வெந்ததும் எடுத்த போளியின் மேல் சிறிது நெய் தடவி மடித்து பரிமாறலாம்.

கீதா பாலகிருஷ்ணன்

மலம்புழா – அனுபவிக்க ஓர் அணை!

ஒரு அணைக்கட்டுதான், ஆனால் அதனைச் சுற்றி, பார்ப்பதற்கும் இனிமையாய் பொழுதைப் போக்குவதற்கும் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. மலம்புழா கேரளாவில் இருக்கும் அணைக்கட்டு. கேரளா என்றதும் ஏதோ பெரிய தூரத்தில் இருக்கிறது என்று நினைத்துவிடவேண்டாம் கோவையிலிருந்து ஒன்றரை மணிநேர பயணம்தான். பேருந்தில் பயணம் செய்தால் கோவையிலிருந்து 48 கி.மீ. தொலைவில் பாலக்காடு. அங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் மலம்புழா.
கோவையிலிருந்து பயணிக்கும் பாதை முழுதும் நெஞ்சை அள்ளும் இயற்கைக் காட்சிகள். அணைக்கட்டை நெருங்கும்போதே குளிர்காற்று நம் முகத்தில் தவழ்ந்து செல்லும். மென்மையான கரங்களால் பாசத்தோடு நம் முகத்தை வருடி வரவேற்பது போன்றிருக்கும். நுழைவாயிலில் அணைப் பகுதிக்கும், பூங்காவை சுற்றிப் பார்க்கவும் நுழைவுச்சீட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். பூங்காவிலிருக்கும் இரயில் பயணத்திற்குள், நீச்சல் குளத்தில் குளிப்பதற்கும் தனித்தனியே நுழைவுச்சீட்டு இருக்கிறது.
பூங்காவிற்குள் நுழையும் முன்பு அருகிலிருக்கும் மீன் பண்ணையை பார்த்துவிடுங்கள். வானவில் வண்ணங்களில் அரை இஞ்ச் மீன்கள் முதல் ஆறடி மீன்கள் வரை வைத்திருக்கிறார்கள். அத்தனையும் அழகு. ஆனால் அந்த அழகிலேயே மயங்கியிருந்தால் அணைக்கட்டுக்குள் மற்ற இன்பங்களை அனுபவிக்க முடியாது.
எதிர்ப்புறமுள்ள மூங்காவுக்குள் நுழைந்ததுமே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்! குட்டி இரயிலில் ஏறி முழு அணைப்பகுதியையும் ஒரு சுற்று சுற்றி வரலாம். யானை சிலையிலிருந்து விழும் தண்ணீர் குழந்தைகளை பரவசப்படுத்தும். பூக்களின் நறுமணத்திற்கும், தேனிற்காகவும் வட்டமிடும் பட்டாம்பூச்சிகளின் கூட்டம் பூங்காவெங்கும் பறந்தபடி காணப்படும். மெள்ள சுற்றி வந்தால் அருகில் தெரியும் பிரமாண்டமான அணையின் தோற்றம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.
அணைக்கு முன்பக்கமாக தொங்கு பாலம் உள்ளது அதில் ஆடியபடியே செல்லும் அனுபவம் மயிர்க் கூச்செறிய வைக்கும். வேறெங்குமே கிடைக்காது. தொங்கு பாலத்தைக் கடந்ததும் பிரம்மாண்ட யக்ஷி சிலை உள்ளது. அதைத் தாண்டினால் படகுப் பயணம்.
படகுப் பயணம் முடிந்ததும் ரோப் காரில் ஏறி முழு அணையின் அழகையும் உயரே இருந்து ரசிக்கலாம். மலைக்கு அருகிலேயே செல்வதைப் போல் அட்டகாசமான அனுபவம் கிடைக்கும். ரோப் கார் முடிந்ததும் அணை மேல் ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம். பின்பு அருகிலுள்ள பாம்பு பாதுகாப்பகத்திற்குச் சென்று வரலாம்.
அணையிலிருந்து சிறிது தள்ளி ராக் கார்டன் இருக்கிறது. சண்டிகாருக்கு அடுத்ததாக இந்தியாவிலுள்ள பிரமாண்ட பாறைப் பூங்கா இதுதான். இங்கு இருக்கும் சிலைகளின் அருகில் புகைப்படம் எடுத்துக் கொள்ள கூட்டம் முண்டியடிக்கும்.
கோவையிலிருந்து பாலக்காட்டிற்கு 23.50 ரூபாய், பாலக்காட்டிலிருந்து மலம்புழாவிற்கும் 9.50 ரூபாய்தான் செலவு.
கேட்கவே நன்றாக இருக்கிறதல்லவா? அனுபவியுங்கள்!

முதலிடத்தில் தாஜ்மகால்

சுற்றுலாவுக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டும் நேரம் இது. அவரவர் தங்கள் வசதிக்கேற்ற இடங்களைத் தேர்வு செய்து சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலா தொடர்பான சில விவரங்கள்…

* இந்தியாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்து அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது சுற்றுலாத் துறை. கடந்த ஆண்டில் இத்துறை, 64 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டித் தந்துள்ளது.

* நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடியே 10 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 50 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 20 லட்சம் பேர், தாங்கள் வசிக்கும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்.

* இந்தியாவுக்கு அதிகமாக வந்த சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, கனடாவை சேர்ந்தவர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.

* மத்திய வயது சுற்றுலாப் பயணிகள், இந்தியாவுக்கு அதிகம் வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 17 சதவீதம் பேர் 35 முதல் 44 வயதுக்கு உட்
பட்டவர்கள். அடுத்து, 16 சதவீதம் பேர் 45 முதல் 54 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

* மேற்கு ஆசியாவில் இருந்து மிகக் குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் (21 சதவீதம்) இந்தியாவுக்கு வந்துள்ளனர். மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பெண்கள் (44 சதவீதம்) வந்துள்ளனர்.

* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதப் பங்களிப்பை சுற்றுலாத் துறை வழங்குகிறது. 9 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. 10 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் தொழில்துறையில் 18 பேருக்கும், விவசாயத்துறையில் 45 பேருக்கும், பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் 78 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கின்றன.

* இந்திய, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்திருக்கும் சுற்றுலாத் தலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால். கடந்த 2008-ம் ஆண்டில் தாஜ்மகாலை 28 லட்சம் உள்நாட்டு சுற்றுலாவாசிகளும், 6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டு களித்துள்ளனர்.

* இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகளை அதிகம் கவர்ந்த சுற்றுலா இடங்கள்- செங்கோட்டை (டெல்லி), குதுப்மினார் (டெல்லி), சூரியக் கோவில் (கொனார்க்), சார்மினார் (ஐதராபாத்). வெளிநாட்டுப் பயணிகளை ஆக்ரா கோட்டை, குதுப்மினார், ஹுமாயுன் நினைவிடம், பதேபூர் சிக்ரி ஆகியவை மிகவும் ஈர்த்துள்ளன.

எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களை வரிசைப்படுத்த

எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகை யான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரி சைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த வேண்டும் என சொல்ல வேண்டும். இதனை மேற்கொள்ள முதலில் டேட்டா இருக்கும் செல்லினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே ஒரு செல்லை மட்டும் வரிசைப்படுத்துவதாக இருந்தால் Sort Ascending அல்லது Sort Descending பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். எந்த செல்லைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த செல் அந்த பீல்டின் காலத்தில் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இந்த இரு பட்டன்களும் Standard டூல்பாரில் உள்ளன.
ஒரே வகை டேட்டா இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வகை டேட்டா வினை (எடுத்துக்காட்டாக பெயர் மற்றும் பிறந்த தேதி) வரிசைப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் எக்ஸெல் தொகுப்பிற்கு வேறு வகையில் இதனைத் தெரியப்படுத்த வேண்டும். எந்த பீல்டுகளை வரிசைப்படுத்த வேண்டும் எனவும் எந்த வகையில் அவற்றை அடுக்க வேண்டும் எனவும் கூற வேண்டும். இதற்கு முதலில் Data மெனு செல்லவும். அதில் Sort என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Sort விண்டோவில் மூன்று வகையில் பிரிப்பதற்கு, அவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு என வழிகள் தரப்பட்டிருக்கும். ஒவ்வொன் றையும் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் நீங்கள் விரும்பும் டேட்டா செல்லுக்கான பெயரைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமைக்கேற்றபடி அமைக்கவும். அவை ஒவ்வொன்றிலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் (உயர்ந்த மதிப்பு/குறைந்த மதிப்பு) அமைக்க ascending அல்லது descending தேர்ந்தெடுக்கவும். வகைப்படுத்த வேண்டிய டேட்டா செல்களுக்கு நீங்கள் ஹெடர் வரிசை (“Header row”) ஒன்று கொடுத்திருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும். இதற்கு கீழாக வசதி தரப்பட்டிருக்கும். இதனை நீங்கள் செலக்ட் செய்யாவிட்டால் எக்ஸெல் ஹெடரிலுள்ள சொல்லையும் எடுத்துக் கொண்டு பிரித்து அதற்கென ஒரு இடம் கொடுத்துப் பிரிக்கும். அல்லது ஹெடர் வரிசை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் “No header row” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்தும் முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டேட்டா தொகுப்பு நீங்கள் விரும்பிய படி வகைப்படுத்தப்பட்டு அழகாகக் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு செல்லில் உள்ள டேட்டாவினையும் சேர்த்து வகைப்படுத்திடத் திட்டமிட்டால் அதனை மாற்றித் தேர்ந்தெடுத்து வகைப்படுத்தலாம்.

விண்மீன்களின் ஆயுள்………

விண்மீன்களின் ஆயுள், அவற்றின் நிறை வெப்ப ஆற்றல் இவற்றுடன் தொடர்புடையது. விண்மீன்கள் அவற்றுள் ஏற்படும் நிறை ஈர்ப்பை ஈடுகட்ட அதிகமான ஆற்றலைச் செலவிட்டுக் குறிப்பிட்ட வெப்பநிலையைக் காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உயர் உள் வெப்பநிலையைக் காக்க ஹைட்ரசன் அணு கருப்பிணைவு அதிகமாகவும் துரிதமாகவும் நடைபெறும்.

இதனால் பெரியவிண்மீன்கள் துரிதமாகத் தமது ஹைட்ரசன் எரிசக்தியை இழந்து குளிந்து சுருங்கி ஆயுளை இழக்கின்றன. சொல்லப் போனால் ஒரு விண்மீனின் ஆயுள் அதன் நிறையின் இருமடிக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் இருக்கின்றது. அதாவது நிறை, இருபங்கு அதிகரித்தால் ஆயுள் நான்கில் ஒன்றாகக் குறைந்து விடும்.

இதிலிருந்து விண்மீன்களின் அளவும் நிறையும் அதிகரிக்க ஆயுள் குறைவது தெரிகின்றது. நமது சூரியன் ஒரு நடுத்தர அளவுடைய விண்மீனாகும். இதன் ஆயுள் சுமார் 10,000 மில்லியன் ஆண்டுகள். இதுவரை நமது சூரியன் பாதி ஆயுளை இழந்துள்ளது. நமது சூரியனைப் போல் முப்பது மடங்கு பெரிய விண்மீன் ஒரு சில மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும், நமது சூரியனை விட அளவில் மிகச் சிறிய விண்மீன் நமது சூரியனின் ஆயுளை விட அதிக மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும் பெற்றிருக்கும்.

அயிரை மீன் குழம்பு

மீன் குழம்புகளில் அயிரை மீன் ருசியை அடித்துக் கொள்ள எதுவும் கிடையாது. உருவத்தில் சிறியதான அயிரை சமைக்க எளிதானது. ருசியில் மேலானது. மற்ற மீன்களைப்போல தலை, குடல்களை பக்குவம் செய்ய படாதபாடு பட வேண்டாம். லேசாக கிள்ளினாலே மீன் தலை நீக்கப்பட்டு சமைக்கும் பக்குவத்துக்கு வந்துவிடும். ஒரு வீட்டில் சமைத்தால் அந்த தெருவையே மணமணக்க வைத்து கிராமிய மணம் பரப்பும் பெருமையும் அயிரை மீனுக்கு உண்டு.

அயிரை மீன் குழம்பு

அதேபோல அசைவத்தில் எலும்பு, கொழுப்பு, குடல் என்று ஒதுக்கிவிட்டு சாப்பிடுபவர்கள் இருந்தாலும் ஈரலை வெறுப்பவர்கள் இருக்க மாட்டார்கள். சில சத்துக்களுக்கு இன்றியமையாததான ஈரலை வறுவல் செய்து ருசிக்கவும் இந்த வாரம் கற்றுக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

* மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

* புளியைக் கரைத்து வடிகட்டி, அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

* நறுக்கிய வெங்காயம், தக்காளி இவை சேர்த்து வதக்கவும்.

* தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* இப்போது கரைத்த புளிக்கரைசல், மசாலா இவை சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.

* மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.

* சுவையான அயிரை மீன் குழம்பு மணக்க மணக்க தயார்.

செப்’ தாமு