Daily Archives: ஏப்ரல் 19th, 2011

குறிப்புகள் எழுத…`போஸ்ட் இட்’

`போஸ்ட் இட்’ என்று அழைக்கப்படும் தகவல் எழுதி ஒட்டும் வண்ணத்தாள்கள் 3எம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தால் முதலில் உருவாக்கப்பட்டு, இன்று உலகெங்கும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த நிறுவனம், புதுவித பசையைக் கண்டறியும் முயற்சியில் இருந்தது. ஸ்பென்ஸ் சில்வர் என்ற வேதியியல் அறிஞர் அதற்கான ஆய்வைச் செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு விளையாட்டுக்காரர். கன்னாபின்னாவென்று வேதிப்பொருட்களைக் கலந்து, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பார். அப்படியொரு நாள் செய்துகொண்டிருந்தபோது ஒருவிதப் பசை கிடைத்தது.

அந்தப் பசையைக் கொண்டு ஒரே ஒருமுறைதான் ஒட்ட முடிந்தது. பிய்த்துவிட்டு, மறுபடி ஒட்டினால் ஒட்டவில்லை. அவர் உருவாக்க விரும்பியதோ, நிரந்தரமாக ஒட்டும் பசை. ஸ்பென்ஸ் சில்வரின் நிறுவனத்தில் யாரும் அந்தப் பசையைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர் மனம் தளரவில்லை. இந்தப் பசையும் ஏதாவது ஒருவிதத்தில் உதவும் என்று நம்பினார். மேலும் பத்தாண்டுகள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

1974-ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை. சில்வருடன் பணியாற்றும் ஆர்தர் பிரை என்பவர் சர்ச்சுக்குச் சென்றார். அங்கே அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பக்திப் பாடல் புத்தகத்தின் `புக்மார்க்’ அடிக்கடி கீழே விழுந்துகொண்டிருந்தது. அதனால் ஆர்தர் பாடல் வரிகளைத் தவறவிட நேர்ந்தது. அப்போது அவருக்குள் ஒரு பொறி தட்டியது.

சில்வர் கண்டுபிடித்த தற்காலிகப் பசை இருந்தால் `புக்மார்க்’ போன்றவற்றைத் தேவையானபோது ஒட்டி, தேவையில்லாதபோது எடுத்துவிடலாமே!

இன்று கோடிக்கணக்கானோர் தங்கள் வீடுகளில், அலுவலகங்களில் `போஸ்ட் இட்’ நோட்ஸ் பயன்படுத்துகின்றனர். வண்ண சிலிப்பில் எழுதி, இன்னொரு காகிதத்தின் மீதோ, போனுக்கு அருகிலோ, பிரிட்ஜ் மேலோ, கதவிலோ ஒட்டிவிடலாம். பசையைத் தேட வேண்டியதில்லை!

எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா?

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசைசைய மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்…

எண்ணெய் பசை நீங்க:

* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க:

* குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும்.

* பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது.

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு!

பரபரப்பான நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து நாட்டில் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த, “மம்மிஸ்’ என அழைக்கப்படும் இறந்தவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து, கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், அரசிகளின் உடல்கள், மிக பிரமாண்டமான பிரமிடுகள், கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அந்த உடல்கள், கெட்டுப் போகவில்லை, அளவு மட்டும் சுருங்கி காணப்படுகின்றன. உடல்கள் கெட்டுப் போகாத அளவு, பிரமிடுகளில் அவைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிகோரி தாமஸ் தலைமையிலான குழு, கடந்த சில மாதங்களாக, எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகள் உடலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு, 53 உடல்களை மிக அதி நவீன, “சிடி’ ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் துல்லியமாக ஆராய்ந்தனர். மேடம் ராய் என்ற உடல் இதில் மிகவும் பழமையானது. கி.மு., 1580 முதல், 1550ம் ஆண்டு வரை வாழ்ந்த இளவரசி இவர். இந்த பெண், தன், 40வது வயதில் மரணமடைந் திருப்பார் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உடல்கள் எல்லாமே அரச குடும்பத்தினர், மற்றும் அவர்களது ஊழியர்களாகத்தான் இருப்பர் என்றும் நம்பப்படுகிறது. அவர்கள் என்ன வகையான உணவுகளை உட்கொண்டிருப்பர் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆடு, மாடு, கோழி, வாத்து என, அசைவ உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்திருப்பர்.
அவர்கள் உடலில் ஆராய்ச்சி செய்த போது, 45 சதவீதத்தினர் இதயத்தில், கால்சியம் அதிக அளவு படிந்திருப்பதை காண முடிந்தது. எனவே, அவர்களில் பெரும்பாலானோர், மாரடைப்பால் தான் மரணமடைந்திருக்கக் கூடும் என்றும், அந்த காலத்திலேயே இதய நோய்கள், மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
எனினும், “இந்த ஆராய்ச்சியின் காரணமாக, இப்போதைய ஆராய்ச்சிகளை குறை கூற வேண்டாம்…’ என, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட எகிப்து கெய்ரோ பல்கலைக்கழக டாக்டர் ஆடல் அலாம் கூறியுள்ளார். “புகை பிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால், ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும், கொழுப்பு சேராது. இதனால், இதய குழாய்களில் கால்சியம் சேராது என, சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன…’ என்கிறார் இவர்.

கோடையிலும் முகம் பளபளப்பா இருக்கணுமா?

“பியூட்டி பார்லருக்கு” செல்லாமல், நம் வீட்டு சமையலறை மற்றும் ஃபிரிட்ஜ்லிருக்கும் தயிர், வெண்ணெய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள், குங்குமப்பூ போன்ற பொருட்களை பயன்படுத்தியே நமது முகத்தை அழகு படுத்திக் கொள்ளலாம்.

அதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக….

* தயிருடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். எலுமிச்சை பழத் தோலை காய வைத்து, அதை அரைத்து அந்த பொடியையும் இதனுடன் சேர்த்து முகத்தில் தடவலாம்.

* வெள்ளரிக்காயின் சதைப்பகுதியுடன் தயிர் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இது, ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.

* வெள்ளரிக்காய், பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி ஆகியவற்றை தயிருடன் சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வர முகம் பட்டு போல ஜொலிக்கும்.

* பச்சரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, இதை தயிரில் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவ, முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாமுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வர, முகம் பொலிவுறும்.

* கை முட்டிப் பகுதி சிலருக்கு, கறுப்பாக காணப்படும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதை கை முட்டிப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வர, கறுமை மறையும். அதே போல், காப்பித் தூளுடன், சர்க்கரை சேர்த்தும் தேய்க்கலாம்.

* முலாம்பழத்தை சாறெடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர முகம் பொலிவு பெறும்.

* தர்ப்பூசணி பழச் சாறெடுத்து, அதை முகத்தில் பூச வேண்டும். அது காய்ந்து நன்கு இறுக்கமானது தெரிந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் பளபளப்பாக காணப்படும். இந்த, “பேஸ் மாஸ்க்”கை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.

* மாம்பழச் சாறை பஞ்சால் முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

தாய்மொழி

மொழியின் மூலமாகத்தான் பலவற்றையும் அறிந்து கொள்கிறோம். ஒரு மொழி பேசுவோர் மற்றொரு மொழியை அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் அவரவர் தாய்மொழி வழியே. மொழி ஏற்பட்டது ஆச்சரியமான படிநிலை வளர்ச்சியாகும். ஒவ்வொரு உயிரினங்களும் ஏதேனும் ஒருவிதத்தில் தங்கள் இனத்திற்கிடையே தொடர்பு கொள்கின்றன. மனிதனுக்குள்ள சிறப்பு பேச்சும், எழுத்தும், பகுத்தறிவும்தான். மனிதனை `பேசும் விலங்கு’ என்று வர்ணிப்பது உண்டு.

***

உலகில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றை 25 மொழிக்குடும்பங்களாக மொழியியலாளர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள். இவற்றில் 600 மொழிகளுக்கு வரிவடிவம், ஒலிவடிவம், இலக்கியம், வரலாறு இருக்கிறது. மொழிகளை கடவுளே தோற்றுவித்ததாக பலநாட்டு மக்களிடம் நம்பிக்கை உள்ளது. மனிதன் இயற்கையான அனுபவங்களின் வழியாக மொழியை உருவாக்கிக் கொண்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். சைகை, ஒலிக்குறிப்புகளே உருமாற்றம் பெற்று மொழியானதாக கருதப்படுகிறது.

***

மொழிகள் அதன் தன்மைக்கேற்ப சில சிறப்புகளை கொண்டுள்ளன. கிரேக்க மொழி `தத்துவ மொழி’ என சிறப்பித்து கூறப்படுகிறது. அதேபோல லத்தீன், `சட்டத்தின் மொழி’ என்றும், இத்தாலி, `காதலின் மொழி’ என்றும் பிரெஞ்சு, `தூதின் மொழி’ என்றும், ஆங்கிலம், `வணிகத்தின் மொழி’ என்றும் கூறுவர்.

இதுபோல தமிழ்மொழியின் சிறப்பு என்ன தெரியுமா? `இரக்கத்தின் மொழி’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சிறப்புக்குரிய தொடர் ஐ.நா. சபை கட்டிடத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

***

மேலைநாட்டு மொழிகளில் மிகப்பழமையான மொழி கிரேக்க மொழி. பல கிளைமொழிகளாக இருந்த கிரேக்கம், பேரரசர் பிலிப்பு காலத்தில் பொதுமொழியாக மலர்ந்தது. ஒலி எழுத்து முறையை உலகுக்கு தந்த மொழியாக இது புகழப்படுகிறது. 5 உயிரெழுத்துகளும், 19 மெய் எழுத்துகளும் கொண்டது. இம்மொழியின் பழமையான இலக்கியம் கி.மு. 8-ம் நூற்றாண்டை சேர்ந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தத்துவஞானிகள் கழகம் இயங்கியுள்ளது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகளும், ஹோமரின் இலியட், ஒடிசி நூல்களும் இன்றும் கிரேக்க மொழியை பெருமைப்படுத்துகின்றன.

***

ஆசியாவில் தொன்மையான மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். ஆரிய மொழி என்றும், வடமொழி என்றும் அழைப்பதுண்டு. சமஸ்கிருதம் என்றால் திருத்தப்பட்டது என்று பொருள். ஆரியர்கள் வடஇந்தியாவில் நுழைந்தபின்னர் அவர்களின் மொழி (சவுரசேனி) செம்மையுற்று கி.மு. 300-ல் சமஸ்கிருதம் ஆனது. 15 உயிர், 32 மெய்யெழுத்துகள் கொண்டது. இலக்கண, இலக்கிய கொள்கைகள் மிகுதியாக உள்ள மொழி. ரிக் வேதம், ராமாயணம், மகாபாரதம் போன்றவை சிறப்புமிக்க இலக்கியங்களாகும். மத்திய அரசின் செம்மொழி அந்தஸ்து பெற்ற இம்மொழி பேச்சு வழக்கு மொழியல்ல.

***

லத்தினும் பழமை மிக்க மொழி. கத்தோலிக்க மதத்தினரின் புனித மொழியான இது ரோமிலிருந்து இத்தாலி முழுமையும் பரவி அண்டை நாடுகளையும் ஆட்சி செய்த சிறப்புக்குரியது. ரோம பேரரசர்கள் கிரேக்கத்தை வென்றபிறகு தங்கள் மொழி வளர்ச்சிக்கு கிரேக்க அறிஞர்களை பயன்படுத்தினர். எனவே பெரும்பாலான இலக்கியங்கள் கிரேக்க அடியொற்றி உள்ளன. ரோம எழுத்து முறை கி.மு. 7-ம் நூற்றாண்டில் உருவானதாக கூறப்படுகிறது. 5 உயிர், 15 மெய் எழுத்துகள் உள்ளன. இம்மொழி இன்று பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் போற்றப்படும் மொழிகளில் ஒன்றாக இருக்கிறது.

***

ஆங்கிலம் உலகெங்கிலும் பேசப்படும் மொழி. ஆங்கிலேயர்கள் உலகம் முழுமையும் காலனி ஆட்சி நடத்தியதால் இது உலகமொழியாகி விட்டது. தாய்மொழியாக 38 கோடி பேரும், 2-வது மொழியாக 100 கோடிக்கு மேற்பட்டவர்களும் ஆங்கிலம் பேசுகிறார்கள். மருத்துவம், விஞ்ஞானம், கணினி உள்ளிட்ட அனைத்து துறையிலும் ஆங்கிலம் பேசுவோரின் ஆதிக்கம் காரணமாகவும் ஆங்கிலம் முக்கிய இடத்தை தக்கவைக்கிறது.

கண்டுபிடிப்புகளுக்கேற்ப நாள்தோறும் புதிய சொற்கள் உருவாக்கப்படுவதால் `வளரும் மொழி’ எனும் சிறப்பும் இதற்குண்டு. 26 எழுத்துகளே கொண்ட இம்மொழியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன.

***

தமிழர்களின் தாய்மொழியான தமிழுக்கு சிறப்பு சேர்ப்பது (ழ) ழகரம் ஆகும். இவ்வொலி சிறப்பு, உலக மொழிகளில் ஒருசிலவற்றுக்கே உண்டு. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மிகுதியாக பேசப்படுகிறது. உலகில் 8 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் பேசுகிறார்கள். தாய்மொழியாக அதிகம் பேர் பேசும் மொழிப்பட்டியலில் தமிழுக்கு 18-வது இடம் கிடைக்கிறது. 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பியம் மொழி இலக்கணத்தையும், வாழ்வியலையும் படம்பிடித்து காட்டுகிறது. 2,000 ஆண்டு பழமையான திருக்குறள் உலகிற்கே வாழ்வியலை வலியுறுத்தி உலகப் பொதுமறையாக திகழ்கிறது. 2008ல் தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றது.

***

சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 103 கோடி பேர் சீன மொழி பேசுகிறார்கள். சீனா, தைவான், சிங்கப்பூர், மலேசியாவில் அதிகம் பேசப்படுகிறது. பேச்சிலும், எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. வட்டார மொழிகளுக்கும், சீன மொழிக்கும் மிகுந்த வேறுபாடுகள் தெரியும். இருப்பினும் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் மொழியே பேச்சு மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை என்று இருவகை எழுத்து முறை உள்ளது. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. இது மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.

***

ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்துக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த மொழி பிரெஞ்ச். ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் படையெடுப்பால் பிரெஞ்சு பகுதியில் லத்தின் பேச்சு மொழியானது. பிறகு ஜெர்மானியர்களின் படையெடுப்பால் கலப்பு மொழியான `ரொமான்’ மொழி உருவானது. இம்மொழி செம்மைப்பட்டே பிரெஞ்ச் மொழி மலர்ந்தது. 12-ம் நூற்றாண்டில்தான் இம்மொழியில் இலக்கியங்கள் மலர்ந்தன. இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக 5 கண்டங்களிலும் அதிகம் பேசப்படும் சிறப்புக்குரிய பிரெஞ்சு மொழிக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஆங்கிலம் மாதிரி இதிலும் மொத்தம் 26 எழுத்துக்களே.

வெற்றிக்கு ஒரு புத்தகம் – மயக்கலாம் வாங்க!

உங்களுக்கு மற்றவர்களை மயக்கத் தெரியுமா? மற்றவர்களை மயக்கி, ஈர்க்கும் கலையை சொல்லித்தருகிற ஒரு கலகலப்பான புதிய புத்தகம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. கை கவாஸாகி எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் “என்சான்ப்மென்ட்’ (Enchantment).

இந்தப் புத்தகம் நெடுகிலும் நம்முடன் பழகுபவர்களை மயங்கச் செய்வது எப்படி எனப் பல அருமையான யோசனைகளை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார் கை கவாஸாகி. அவற்றிலிருந்து ஐந்து முக்கிய பகுதிகள்.

1. முதலில், அடுத்தவர்களுக்குப் பிடிக்கும்விதமாக நடந்துகொள்ளுங்கள். அதற்குச் சில வழிகள்:
*நேர்த்தியான உடை
*யாராவது ஏதாவது உதவி கேட்டால் யோசிக்காமல், தயங்காமல் “யெஸ்’ என்று சொல்லிவிடுங்கள். அதன்பிறகு அதை எப்படிச் செய்வது என்று யோசித்து நாலு “ஆனால்’களை, ஏழெட்டு நிபந்தனைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை. அந்த முதல் “யெஸ்’ உங்களுக்குப் பல ரசிகர்களை அள்ளித் தரும்!

2. இரண்டாவதாக, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாறுங்கள். இப்படி:
*முதலில் நீங்கள் அடுத்தவர்கள்மீது நம்பிக்கை வையுங்கள்.
*நீங்கள் ஒரு விஷயத்தில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்கிற உண்மையை மறைக்காமல் சொல்லிவிடுங்கள்.
*ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு என்ன லாபம் என்பதை மட்டும் பார்க்காமல், அடுத்தவர்களுக்கும் அதில் எதாவது பயன் வரக்கூடுமா என்று பார்த்து அதற்கு எற்ப செயல்படுங்கள்.

3. ஒவ்வொரு புதிய நபரைச் சந்திக்கும்போதும், ஒவ்வொரு புதிய வேலையைத் தொடங்கும்போதும் கச்சிதமாக திட்டமிட்டுத் தயார் செய்துகொள்ளுங்கள். இதுபோல:
*என்ன பேசப்போகிறோம் என்பதை முன்கூட்டியே மனத்தில் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொள்ளுங்கள்.
*நீங்கள் பேசும்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்பதையும் நீங்களே ஊகியுங்கள், அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துப் பயிற்சி எடுங்கள்.
*உங்கள் பேச்சில் யாராவது குறை சொன்னால் கோபித்து முகம் சுளிக்காதீர்கள். மனத்தைத் திறந்து வைத்திருங்கள். அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தைமட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நியாயமில்லை என்றால் சிரித்து மறந்துவிடுங்கள்.

4. உங்களுடைய பாதையில் தடைகள் வரும். சிலர் உங்களை நம்ப மறுத்துச் சந்தேகமாகப் பார்ப்பார்கள். அப்போது மனம் தளராமல் இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்:
*ஏதேனும் புதிய யோசனையைச் சொல்லும்போது, இதே மாதிரி விஷயம் வேறொரு கம்பெனியில், வேறொரு நகரத்தில், வேறொரு நாட்டில், வேறொரு காலகட்டத்தில், வேறொரு துறையில் எங்காவது வெற்றியடைந்திருக்கிறதா என்று உதாரணம் காட்டி நிரூபியுங்கள். “நாமும் ஜெயிப்போம்’ என்ற உறுதி சொல்லுங்கள்.
*ஒரு வேளை தோல்வி வந்தால், பிரச்னையில்லை. எப்பேர்ப்பட்ட சறுக்கலிலும் ஒரே ஒரு பாஸிட்டிவ் விஷயமாவது இருந்தே தீரும். அதைக் கண்டுபிடித்துக் கொண்டாடுங்கள். அதையே பிடித்துக்கொண்டு மேலே செல்லுங்கள்.

5. நீங்கள் உருவாக்கும் “மயக்கம்’ தாற்காலிகமாக இருந்து விடக்கூடாது. அவர்கள் நிரந்தரமாக உங்களது ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அதை உறுதி செய்துக்கொள்ள இந்த வழிகள் பயன்படும்:
*உங்களது துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அனுபவம் என்ன? திறமைகள் என்னென்ன? அதை மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா? இல்லை என்றால் நீங்களே எடுத்தச் சொல்லுங்கள். “சுய தம்பட்டம் அடிக்கக்கூடாது’ என்று நினைக்கிறவர்கள் இந்தக் காலத்தில் முன்னேறமுடியாது. “நான் சிறந்தவன்’ என்பது ஓகே, “நான் மட்டும்தான் சிறந்தவன்’ என்று சொன்னால்தான் தப்பு!
* அதற்காக எல்லா அதிகாரங்களையும் நீங்களே பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள். அதைச் சரியான முறையில் பகிர்ந்து கொடுங்கள். அவர்கள் தயங்கி நின்றால் வழிகாட்டி உதவுங்கள். பிரச்னை வரும்போது கை கொடுங்கள். கடைசியாக அவர்கள் வெற்றி பெறும்போது கை தட்டிப் பாராட்டுங்கள்.
*உங்களுடன் இருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருங்கள், அவர்களது குளைகளை முன்கூட்டியே உணர்ந்து சரி செய்யுங்கள்.

இந்த ஐந்து விதிகளைப் பின்பற்றினால் அனைவரும் உங்கள் பக்கம்தான்.

பாரம் தூக்கும் எந்திரம்!


`கிரேன்களை’ நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இதை பாரம் தூக்கும் எந்திரம் என்றும் சொல்லலாம். நாரை என்ற பறவையின் தோற்றம் போல் இருப்பதால் இதை `கிரேன்’ என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இம்மாதிரிக் கருவியை போர்களில் பயன்படுத்தினர். எதிரியின் கோட்டை மதில் மேல் உள்ள பொறிகளைத் தாக்கி அழிக்க இதுபோன்ற அமைப்பு ஒன்றைப் பயன்படுத்தினர்.

இன்றைய கிரேன்கள், பெரும் எடையுள்ள பொருள்களை ஏற்ற, இறக்க, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பெரிய தொழிற்சாலைகளில், துறைமுகங் களில் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

கிரேனில் பலவகை உண்டு. பொதுவாக, கோபுரம் போல் உயர்ந்து நிற்கும் கிரேன்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அமைப்பு, நீண்டு, உயர்ந்த கோபுரம் போலிருக்கும். அதன் மேல், படுக்கைவாட்டில் இயங்கும் கை போன்ற அமைப்பு. அந்தக் `கை’யின் ஒரு முனையில் பல்வேறு பொருட்களைத் தூக்குவதற்கு வசதியான உபகரணங்கள். அந்த உபகரணங்கள் ஏறவோ, இறங்கவோ ஏற்றபடி, கம்பிக் கயிறுகளால் `விஞ்ச்’ என்ற உருளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த உருளை, ஓர் எந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. கிரேனின் `கை’யின் மறுமுனையில் தூக்கப்படும் எடையைச் சமநிலைப்படுத்தவே இந்த அமைப்பு.

மிதக்கும் கிரேன்களும் உண்டு. தரை தட்டிப் போன, மூழ்கிப் போன கப்பலை நீருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர இவைதான் உதவுகின்றன. இரும்புத் தொழிற்சாலைகளில், பாலம் போன்ற அமைப்புடைய கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கம்ப்யூட்டருக்கு புதியவரா? பைலைச் சுருக்கவா, விரிக்கவா, மூடவா?

ஒவ்வொரு புரோகிராம் விண்டோவின் வலது மேல் மூலையில் நமக்கு மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. முதல் பட்டனைக் கிளிக் செய்தால் அது புரோகிராம் விண்டோவைச் சுருக்கி டாஸ்க் பாரில் வைத்திடும். அடுத்ததாக இரண்டு கட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக இருப்பது போன்ற கட்டங்கள் உள்ள பட்டனைக் கிளிக் செய்தால் அது பெரியதாக இருக்கும் புரோகிராம் விண்டோவைச் சுருக்கும். இதனை மீண்டும் கிளிக் செய்தால் விரிக்கும். மூன்றாவதாக பெருக்கல் அடையாளம் அல்லது எக்ஸ் அடையாளம் இருப்பதைக் கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ மூடப்படும். சரி. ஆனால் பல முறை நாம் இந்த பட்டன்களை மாறி கிளிக் செய்து விடுகிறோம். சுருக்குவதற்குப் பதில் விரித்தால் மீண்டும் சரியான பட்டனை அழுத்தலாம். ஆனால் பெருக்கல் அடையாள பட்டனை அழுத்தி விட்டால் புரோகிராம் மூடப்படும் வரை காத்திருக்க வேண்டும். பணியாற்றிக் கொண்டிருக்கிற நமக்கும் எரிச்சலாக இருக்கும். இந்த டிஜிட்டல் விபத்துக் களை எப்படி தடுப்பது? இந்த பட்டன் கட்டங்கள் சிறிது பெரியதாக இருக்கக் கூடாதா? என்ற ஆதங்கத்தை எப்படி ஆற்ரிக் கொள்வது? இந்த பட்டன் களைப் பெரிதாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கீழ்க்காணும் வழிமுறை களைக் கையாளுங்கள்.
1. டெஸ்க் டாப் திரையில் ரைட் கிளிக் செய்து அதில் Properties என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
2. பின்னர் கிடைக்கும் டேப்களில் Appearance டேபைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் என்ற Advanced பட்டனை எடுத்துக் கொள்ளுங்கள்.
3. “Item” என்ற கீழ் விரியும் பாக்ஸில் Active Title Bar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இந்த கீழ் விரியும் பாக்ஸுக்கு அடுத்ததாக அளவை செட்டிங் செய்திடும் இடம் இருக்கும். அதில் மேல் நோக்கி உள்ள அம்புக்குறியை அழுத்த அழுத்த பட்டன் சைஸ் அளவு பெரிதாகும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் — எந்த அளவிற்கு பட்டன்களைப் பெரிதாக்குகிறீர்களோ அந்த அளவிற்கு டைட்டில் பாரும் பெரிதாகும். அனைத்தையும் முடித்து ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் புரோகிராம் விண்டோக்கள் அனைத்திலும் வலது மேல் முனைப் பட்டன்கள் பெரிதாக இருக்கும்.

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?

இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம்.

அந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம்.

மேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும்போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது.

அத்துடன் கையால் உடம்பையும், உடைகளையும் தொட்டவாறும், கொம்புள்ள கிளைகளை முறித்தலும் அப்போது செய்யக்கூடாது.

நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.