Daily Archives: ஏப்ரல் 21st, 2011

நிறங்களை உணரும் கண்கள்

றிவியல் வளர்ச்சியால இன்னைக்கு புதுசு புதுசா எவ்வளவோ நிறங்கள் உருவாகி இருக்கு. அப்படின்னா, எல்லா நிறங்களையும் கண்களால உணர்ந்து கொள்ள முடியுமான்னு உங்க மனசுக்குள்ள ஒரு கேள்வி எழலாம். இந்த உலகத்துல எத்தனை விதமான நிறங்கள் இருக்கோ, அத்தனை நிறங்களும் நம்ம கண்களுக்குத் தெரியும்.

நாம பார்க்குற பொருள் என்ன நிறத்துல இருக்குன்னு கண்கள்ல உள்ள உணர்வு செல்கள் தூண்டப்பட்டு மூளைக்குத் தெரிவிக்க, மூளை தான் நிறங்களைக் கண்டுபிடிச்சு நமக்கு சொல்லுது. கண்ணோட பார்வைப் படலத்துல கூம்பு மற்றும் குச்சி வடிவம் என ரெண்டு வகையான ஒளிஉணர்வுச் செல்கள் இருக்குது. இந்தச் செல்கள், நரம்பு இழைகளோட தொடர்பு கொண்டிருக்கும். இந்த நரம்பிழைகள் இணைந்து பார்வை நரம்பாக மாறி, மூளையின் பார்வைக்கட்டுப்பாட்டு மையத்துக்குச் செல்லுது.

குச்சி செல்கள், மங்கிய வெளிச்சத்துல துல்லியமான பார்வைக்கு உதவுது. கூம்பு வடிவச் செல்கள், பிரகாசமான வெளிச்சத்தில் பார்க்கவும், நிறப்பார்வைக்கும் பயன்படுது. நிறப்பார்வைக்கு, சிவப்பு, பச்சை, நீலம் என 3 அடிப்படை நிறங்களை தனித்தனியே உணரவல்ல கூம்புச் செல்கள் உதவி செய்யுது. இந்த நிறங்களோட விகிதாச்சார கலவையால தான் மற்ற வண்ணங்களை உணர முடியுது.

உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!

அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்பர்; ஆனால், உங்களிடம் நான்கு கோடி ரூபாய் இருந்தால், நல்ல, “நண்பனை’ விலைக்கு வாங்க முடியும். ஆம்… கோடீஸ்வரர் ஒருவர், நான்கு கோடியே, 25 லட்சம் ரூபாய் கொடுத்து, நாய் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். உலகிலேயே, மிகவும் விலை உயர்ந்த நாய் இதுதான்.
மிகவும் அடர் சிவப்பு நிறம் கொண்ட, திபெத்திய மஸ்திப் இன வகையைச் சேர்ந்த இந்த நாயின் பெயர் ஹாங்டாங். வடக்கு சீனாவில், நிலக்கரி சுரங்க உரிமையாளர் ஒருவர், நான்கு கோடியே, 25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நாய், தினமும் கோழி, பன்றி இறைச்சிகளைத்தான் சாப்பிடும்.
இந்த நாய் வசிப்பதற்கு என்றே, தனி வீடு ஒன்றை இதன் உரிமையாளர் கட்டியுள்ளார். பிறந்து, 11 மாதமே ஆன இந்த நாய், கொழு, கொழுவென உள்ளது. இந்த நாயை பராமரிப்பதற்காக, தனிக் குழு ஒன்றை, இதன் உரிமையாளர் ஏற்படுத்தியுள்ளார். அவர்களுக்கு சம்பளமே மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் செலவாகிறது.
கம்யூனிச நாடான சீனா, இப்போது கொஞ்சம், கொஞ்சமாக முதலாளித்துவ நாடாக மாறி வருகிறது. பெரும் கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். பெரிய, பெரிய கார்கள், பங்களாக்கள் போன்றவை அவர்களின் சமூக அந்தஸ்தை காட்டுவதாக முன்பு இருந்தது; இப்போது, விலை உயர்ந்த திபெத்திய நாய் வைத்திருப்பவர்கள் தான் பெரும் கோடீஸ்வரர்கள் என கருதப்படுகின்றனர்.
இந்த சிவப்பு நிற நாய், மிகவும் அதிர்ஷ்டமானதாக சீனாவில் கருதப்படுகிறது. இந்த வகை நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், மிகவும் செல்வந்தர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர் என்ற நம்பிக்கையும் சீனாவில் உள்ளது.
விக்டோரியா அரசி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், செங்கிஸ்கான் போன்ற பிரபல மன்னர்கள், இதே போன்ற நாய்களை வளர்த்தனர். இங்கிலாந்து நாட்டில், இப்போது, இதே போன்ற திபெத் வகை நாய்கள் வெறும், 300 மட்டுமே உள்ளன. அதன் குட்டி நாய்கள், 75 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.
இதற்கு முன், அதிக விலைக்கு விற்கப்பட்ட நாயும், இதே திபெத் வகையைச் சேர்ந்ததுதான்; அதன் பெயர், சிவப்பு சிங்கம். அந்த நாய், நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
அதெல்லாம் சரி… இந்த அளவு விலை கொடுத்து நாயை வாங்கினால், என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆண் நாய், ஒவ்வொரு முறையும், அதே இனத்தைச் சேர்ந்த பெண் நாயுடன் கூடும் போது, அதற்கு, 10 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து விடுவாராம் இதன் உரிமையாளர்.

தவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்!

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை.

இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.

அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:

உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல்மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.

கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:

* எளிதில் சீரணமடையும்

* மலச்சிக்கலைப் போக்கும்

* சிறுநீரை நன்கு பிரிக்கும்

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* பித்த அதிகரிப்பை குறைக்கும்

* நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது

* உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.

* சருமத்தைப் பாதுகாக்கும்.

* வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

பயனுள்ள சில இணைய தளங்கள்!

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.
சர்ச் இஞ்சின்கள் – நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா? அப்படி ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம்.
1. டேஸ்ட்கிட் (Tastekid): புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா? இந்த தளம் (http://www.tastekid.com) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To): ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/
கூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:
1. ஜூங்கல் (Joongel): இதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது. ஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி:http://www.joongel. com/index.php
2.ஸ்குரூகிள் (Scroogle): கூகுள் தேடுதளத்தில் தேடுகையில், குக்கீஸ் நம் கம்ப்யூட்டரில் பிற்பாடு எளிதாக இருப்பதற்காகப் பதியப்படும். அதாவது நம்முடைய பெர்சனல் விருப்பங்கள் அதில் பதிந்து வைக்கப்படும். நாம் எந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் உங்கள் தேடலை மேற்கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது: www.scroogle.org/cgibin/scraper.htm.
3.சூப்பர் குக் (Supercook): பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும். இதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.
இந்த தளத்தின் முகவரி: http://www.supercook.com/

இனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பிற மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன.
1. ஜாமென்டோ (Jamendo): ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி: http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த இயந்திரன் ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது.
2. நட்சி (Nutsie): உங்களுடைய ஐபாடில் உள்ள பாடல்களை இணையத்திற்குக் கொண்டு சென்று, அவற்றை அங்கு வைத்தே கேட்டு ரசிக்கலாம். இது மற்றவர்களுக்கு கிடைக்காது. வேறு இணையான கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று இவற்றை ரசிக்கலாம். முகவரி: http://www.nutsie.com/main ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா? அதற்கென்றே சில தளங்கள் உள்ளன.

ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா? என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.
1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection): இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/
2. கீ எக்ஸ் எல் (keyxl): ஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.keyxl.com/
மேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.
1. சி.எல்.1.ப்பி. நெட் (cl1p.net): இணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள். இந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும். பின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: http://cl1p.net/
2. வெப் 2 கால்க் (web2calc): இந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/
3. ரெய்னி மூட் (rainymood): ஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா! பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/
4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி:http://whathappenedinmybirthyear.com/
மிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது கூகுள், யாஹூ எல்லாம் இல்லை. டிவிடி இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம்.

இரத்தங்களின் யுத்தம்- கவியரசு கண்ணதாசன்

இரத்தங்களின் யுத்தம்கவியரசு கண்ணதாசன்


`பரசுராமன் பரசுராமன்…’ என்று மூன்று முறை அழைக்கிறார் நீதிமன்றத்தின் டவாலி.

அடுத்தாற்போல், `பரசுராமன் மகன் ரங்கராஜன்’ என்று மூன்று முறை அழைக்கிறார்.

மகன் வாதி; தகப்பன் பிரதிவாதி.

நீதிமன்றத்திலே ரத்தம் நேருக்கு நேராக மோதிக் கொள்கிறது.

பாச அணுக்களால் ஊறி வளர்ந்த ரத்தம், பகை அணுக்களுக்கு இடம் கொடுத்தது எப்படி?

ஆம், சமயங்களில் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

தந்தையும் மகனும் மோதிக்கொள்வதும், அண்ணனும் தம்பியும் மோதிக் கொள்வதும் விபரீதமான நிகழ்ச்சிகளே. ஆயினும் எப்படியோ இவை நடந்து விடுகின்றன.

அன்பையும் பாசத்தையும் வலியுறுத்தும் இந்து மதம் தவிர்க்க முடியாத சில விதிவிலக்குகளையும் சுட்டிக் காட்டுகிறது.

உறவு ரத்தம் பகையாக மாறுவதே விதியின் வலிமை என்கிறது.

என்னுடைய ரத்தம் மிகவும் மென்மையானது.

உறவினருக்குச் சிறிது துன்பம் என்றாலும்கூட, என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

அவர்கள் என்னை ஏமாற்றி விட்டால்கூடப் பகை உணர்ச்சி எனக்கு வருவதில்லை.

சில இடங்களில் உறவினர்கள் மோதிக் கொள்ளும் வேகத்தைப் பார்க்கும்போது எனக்குத் திகைப்பு ஏற்படும்.

ஐந்து ரூபாய் வித்தியாசத்துக்காக அப்பனும் மகனும் அடிதடியில்கூட இறங்கி விடுகிறார்கள்.

தகப்பனார் இறந்து கிடக்கிறார். அவரது ஐந்து பிள்ளைகளும் பிணத்தின் பக்கமே போகவில்லை; பெட்டகத்தை உடைத்துப் பணத்தைப் பங்குபோடத் துவங்குகின்றனர்.

அடிதடி அரிவாள் தூக்கும் வரையில் முன்னேறுகிறது.

அவர்களது மனைவிமார்கள், உடனே இரண்டாவது போர்க்களத்தைத் துவங்குகிறார்கள்.

பிணம் இரண்டு நாட்கள் கிடந்து நாற்றம் எடுக்கிறது.

இரவு பகலாகப் பங்காளிகள் சமாதானம் செய்கிறார்கள்.

கடைசியில், மூத்த பிள்ளை கொள்ளிவைப்பதற்குக் கூட பணம் கேட்கிறான்.

இறந்து போனவனுக்காக ஒரு பிள்ளைகூட அழவில்லை.

அவன் சம்பாதித்த சொத்தும், கொண்டுவந்த மருமக்களும், தந்தை மகன் என்ற புனிதமான உறவை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டன.

என் உறவினர் ஒருவர் வீட்டில் நான் கண்ட காட்சி இது.

ஒரு தந்தை நன்றாகச் சம்பாதித்தார்.

தனது நான்கு பெண்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்.

தனது இரண்டு பிள்ளைகளுக்கும் அழகான பங்களாக்களைக் கட்டிக் கொடுத்தார்.

பெரிய இடத்தில் பெண் எடுத்தார்.

பிறகு, தமக்கென்று கொஞ்சம் செல்வத்தை ஒதுக்கிக் கொண்டு, ஒரு கோயில் விடுதியில் கடைசிக் காலத்தைக் கழித்தார்.

மரணத் தருவாயில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கே மரணமடைந்தார்.

அவரது சடலத்தைத் தங்கள் வீட்டில் போட்டுத் தூக்க ஒரு பிள்ளையும் ஒப்புக்கொள்ளவில்லை.

அவர்களல்லவா குழந்தைகள்!

என் வீட்டில் வேலைக்காரன் இறந்து போனாலும், அந்தச் சடலத்தைக்கூட அலங்கரித்து என் வீட்டிலிருந்தே தான் தூக்கி அனுப்புவேன்.

அவனோ தந்தை; வீடும் அவன் கட்டிக்கொடுத்த வீடு; பெற்ற பிள்ளைகள் பிணத்துக்குக்கூட இடம் தரவில்லை.

`நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது’ என்பார்கள்.

காரணம் பல ரிஷிகள் மனைவியராலும், பிள்ளைகளாலும் ஆனார்கள் என்பதால்.

ரத்தம் தண்ணீரைவிட கனமானது என்பார்கள்.

என்னுடைய கணக்கில் அது புஷ்பத்தைவிட மென்மையானது.

என் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லையென்று கேள்விப்பட்டால், என் உடம்பிலிருக்கும் ரத்தம் முழுவதும் தலைக்கு ஏறுகிறது, ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது.

ஆனால் சிலரது ரத்தம் இரும்பைவிடக் கனமாக இருக்கிறது.

இரும்பைப்போல் அது துருப்பிடித்துப் போகிறது.

உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும் உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.

மனிதனுடைய மந்த புத்தியும், இறைவனுடைய சொந்த புத்தியும் சம அளவில் தேடித் தரும் உறவு, மனைவி உறவு.

அது சரியாக அமைந்தாலும், தவறாக அமைந்தாலும், அதைத் தேடி எடுத்ததில் மனிதனுக்குப் பங்கு இருக்கிறது.

ஆனால், பிறப்பிலும், உடன் பிறப்பிலும், மனித அறிவுக்கு வேலையே இல்லை.

அது முழுக்க முழுக்க இறைவனுடைய நியதியில் வருவது.

பின் ஏனங்கே பகை வந்து, பாசம் சாகிறது?

அதைத் தெளிவாகக் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மீண்டும் நாம் `பகவத் கீதை’ க்குள்ளே தான் நுழைய வேண்டும்.

பாரதப்போரில் உறவுகள் ஒன்றையொன்று எதிர்க்க வேண்டி வந்தது.

இத்தனைக்கும் சிற்றப்பன், பெரியப்பன் பிள்ளைகள்தான். உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்கூட அல்ல!

அதிலும் அர்ச்சுனன் மயங்கி விழுகிறான். பாவம் அவன் என்னைப்போல.

பார்த்தனின் சாரதி பரந்தாமன் அவனைத் தூக்கி நிறுத்துகிறான்.

தவிர்க்க முடியாத அந்த யுத்தத்திற்கான நியாயங்களைக் கூறுகிறான்.

ஒருவன் மனம் முழுக்கக் கல்லாகிவிட்ட பிறகு அவனைப் பற்றிய உறவு முறைகளை மறந்துவிடவேண்டும் என்கிறான்.

ஒரு சகோதரனின் கழுத்தை இன்னொரு சகோதரன் அறுக்க முயன்றால், அதைத் தடுப்பதற்கு அவன் கையையாவது வெட்ட வேண்டி வருகிறதே! விருப்பத்திற்கு விரோதமான இந்த வினைக்கு விதியைத் தவிர, வேறு எந்தக் காரணத்தைக் கூற முடியும்.

இது `தற்காப்பு’ என்ற தலைப்பில் அடங்கும்.

இருவருமே ஒருவர் கழுத்தை ஒருவர் அறுக்கத் துணிந்து விட்டால், அந்தக் கேள்விக்கு இறைவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

பிறப்பு நிர்ணயிக்கப்பட்ட போது, அதன் நோக்கத்திற்கு ஒரு சட்டத்தையும், அந்தச் சட்டத்திற்குச் சில செக்ஷன்களையும், இறைவன் விதித்திருக்கிறான்.

பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு பிறப்புக்கும் ஒவ்வொரு செக்ஷனை வழங்கியிருக்கிறான்.

சில பிறப்புகள் பந்த பாசத்தினால் உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன் நிர்ணயித்திருக்கிறான்.

அதை அவன் நிர்ணயித்ததால் தான், அவனே கண்ணன் வடிவில் அதற்கு நியாயத்தைக் கற்பிக்கிறான்.

“அர்ச்சுனா,

கொலை செய்வது பாவம் என்றா நீ மயங்குகிறாய்?

இல்லை, அப்படித்தான் நீ என்ன கொலையே செய்யாதவனா?

ஏற்கெனவே பல போர்களில் பலரைக் கொன்றவன் நீ.

இங்கே ஏன் மயங்குகிறாய்?

எதிரே நிற்பவர்கள் யாரென்று பார்த்ததும் உனக்கு மயக்கம் வருகிறது இல்லையா?” என்று கேட்கிறான்.

பாவம் அர்ச்சுனன்!

சிருஷ்டிகர்த்தா, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஒரே மாதிரியான குணத்தைக் கொடுக்கவில்லை.

ஒரு ரத்தத்தை மலராகவும், ஒரு ரத்தத்தை இரும்பாகவும் படைத்தான்.

இரும்பு எழுந்து நின்றாலும்கூட மலர் துவண்டு விழுகிறது.

வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களையுமே, சில குடும்பங்களில் இப்படி க்ராஸ் போட்டு வைத்திருக்கிறான் இறைவன்.

அந்த க்ராஸ் இறைவனாலேயே விழுந்தது என்று கண்டு விட்டுக் கொடுக்கும்படி புஷ்பங்களை வேண்டிக் கொள்கிறது இந்துமதம்.

இரண்டு கைகளையும் தட்டினால் தானே சத்தம் வருமென்று, மென்மையான கையை அது அப்புறப்படுத்துகிறது.

`வன்செயலில் ஈடுபடும் கை தன் கருமத்தின் பலனை அனுபவிக்கும், என்று போதிக்கிறது.

பின் ஏன் பரமாத்மா அர்ச்சுனனை மட்டும் கொலை புரியத் தூண்டினான்?

ஒரு காடு அழிந்தால்தான் ஒரு வயல் உருவாகும் என்ற நிலை அங்கேயிருந்தது.

நான் வைத்த மரங்கள், நான் வளர்த்த மரங்கள் என்று பார்த்துப் பார்த்து மயங்குவதில் பயனில்லை.

அவற்றைவிடப் பயனுள்ள தானியங்களுக்காக அவற்றை அழிப்பது முறையே.

அங்கே நியாயம் தேவையைப் பொறுத்தது.

அப்படி இன்றியமையாத தேவை வரும்போது ரத்தங்களுக்குள் யுத்தம் வரலாம்; நீதிமன்றத்து டவாலியும் மூன்று முறை கூப்பிடலாம்.

ஆனால், மிகமிக இன்றியமையாத கட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில், மேன்மையான உறவுகள் விட்டுக் கொடுத்துப் போவதையே இந்துமதம் வலியுறுத்துகிறது.

தகப்பன்தான் இறந்து போய்விட்டானே, தம்பிக்கு என்ன ஆட்சியென்று ராமன் சிங்காதனத்தில் போய் உட்கார்ந்திருந்தால் யார் கேட்டிருக்கப் போகிறார்கள்?

கைகேயியின் கைகளில் விலங்கு மாட்டி, பரதனையே பாதுகாப்பாகக் காட்டுக்கு அனுப்பியிருந்தால் அதுவும் ஒரு கதையாகத்தானே இருந்திருக்கும்!

அப்படி ஆகியிருந்தால், ஸ்ரீராமன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக ஆகியிருக்க மாட்டார்; அயோத்தி இன்னொரு பங்காளதேஷ் ஆகியிருக்கும்.

ராமன் பரதனுக்கு விட்டுக் கொடுக்க, பரதன் ராமனுக்கு விட்டுக் கொடுக்க, விட்டுக் கொடுப்பதிலேயே ஒரு நாகரிக சம்பிரதாயத்தை உருவாக்கியது ராமாயணம்.

ஒரு நாற்காலி இருக்குமிடத்தில் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தால், ஒருவரைப் பார்த்து ஒருவர் `நீங்கள் உட்காருங்கள்’ என்று சொல்வது நாகரிகமா? ஒருவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுத் தான் போய் உட்காருவது நாகரிகமா?

விட்டுக் கொடுப்பது தவறில்லை; அது யுத்தத்தைத் தடுக்கிறது; ரத்தத்தைக் காப்பாற்றுகிறது.

இதில் நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வது ஒன்றுதான்.

“இறைவா, இனிமேலாவது தொட்டுக் கொடுக்கும் உறவுகளைத் தராதே; விட்டுக் கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு!”