Daily Archives: ஏப்ரல் 23rd, 2011

குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்…

ஆரோக்கியமாக இருங்கள்:

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

சரியான விதத்தில் சாப்பிடுங்கள்:

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

தீய பழக்கங்கள் கூடாது:

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சரியான நேரம்:

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.

பாலியல் அறிவு அவசியம்:

படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்:

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், “ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது’ என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், “”ஊட்டச் சத்து குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதிப்பாடு கொண்டுள்ளது. பொது வினியோக முறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன,” என்றார்.

இதன்பின் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி-தினமலர்

செரிமானத்தைத் தூண்டும் பெருங்காயம்

நம்ம தமிழ்நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் `கமகமக்க’ வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, `கடவுளர்களின் மருந்து’ன்னு குறிப்பிடுறாங்க. பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்ல தான் பெருங்காயச்செடி வளருது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காயவைச்சா, அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது.

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்துல செரிக்க வைக்கும். வாயுக்கோளாறை விரைவிலேயே சரிசெய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும்னு ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கு. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, வயிற்று வலி, வயிறு உப்புசமாக இருக்குறது போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

பூமியின் மொத்த மதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி..

பூமி உட்பட கோள்களை கரன்சி மதிப்பில் கணக்கிடும் முறையை விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாக்லின் கண்டுபிடித்துள்ளார். அவரது கணக்கின்படி, நாம் வாழும் பூமியின் பண மதிப்பு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி. கொஞ்சம் தலை சுற்றவே செய்யும். அதாவது 3,000 ட்ரில்லியன் பவுண்டு. (1 ட்ரில்லியன் =1 லட்சம் கோடி) கோள்களின் அளவு, வயது, வெப்பம், உயிரினங்கள், அடர்த்தி  மற்றும் வளங்கள் ஆகியவை அடிப்படையில் மதிப்பை கிரேக் கணக்கிடுகிறார். அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள கோள்களிலேயே பூமிதான் விலை மதிப்பில் முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மதிப்பு ரூ. 7.2 லட்சம் மட்டுமே.

உலோகத்தில் வெள்ளியே பரவாயில்லை போலிருக்கிறது. ஒரு கிராம் ரூ. 55 வரை விற்கிறது. வெள்ளி கிரகம் ஒரு ரூபாயை விட குறைந்த மதிப்புடன் கடைசி இடத்தில் இருக்கிறது. தவிர, 1,235 கிரகங்கள் உயிரினங்கள் கால் வைக்க முடியாத நிலையில் எல்லா வகையிலும் எதிர்மறை மதிப்பெண்கள் பெறுவதால், அவற்றுக்கு பண மதிப்பே இல்லை என்கிறார் கிரேக்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் கெப்ளர் விண்கலத்தின் மதிப்பு ரூ. 4,320 கோடி என்ற அடிப்படையில், கிரகங்களின் மதிப்பை கிரேக் கணக்கிட்டுள்ளார்.

கிரகங்களை கண்டுபிடிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்ட கெப்ளர் விண்கலத்தின் மதிப்பை வைத்து, பல்வேறு கிரகங்களின் முக்கிய அம்சங்கள் அடிப்படையில் மதிப்பை அவர் நிர்ணயித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்த பார்முலாவின்படி விலை மதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால், பூமியைப் போல அதிக மதிப்புள்ள கிரகங்களும் இல்லை என்பதை உணர முடிகிறது’’ என்றார்.

கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க..

வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று பளிங்கு போன்ற சருமத்தையும் சம்மர் பாழாக்கி விடும். இப்படிப்பட்ட சம்மரிலும் நீங்கள் அழகாக ஜொலிக்கவும், சூரியனே உங்கள் அழகைக் கண்டு வெட்கப்படவும் இதோ சம்மர் பியூட்டி டிப்ஸ்.

கோடைக்காலங்களில் சிலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதற்கு பாலேட்டில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால், முகம் ஈரப்பதமாகவும், வழுவழுப்பாகவும் மாறும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் பாலேடு உபயோகப்படுத்தக் கூடாது.

வியர்வை அதிகமாக உள்ள பெண்கள் சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் பூசி வந்தாலே போதும்.

வெயிலாலும், கவரிங் நகைகளை அணிவதாலும் சிலருக்கு கழுத்து மட்டும் கறுத்துவிடும். இதற்கு கோதுமை, ஓட்ஸ், பாசிப்பயிறு மாவு மூன்றையும் பாலுடன் கலந்து கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவி வந்தால் கறுமை படிப்படியாக மறைந்துவிடும்.

வேர்க்குரு பிரச்சினையுள்ளவர்கள், நீரில் சிறிது சந்தனம் கரைத்து அந்த இடங்களில் தடவி வந்தால் வேர்க்குரு ஓடியே போச்.

கோடைக்காலத்தில் சருமம் கருத்துப் போனால், இரவில் கசகசாவை பாலில் ஊறவைத்து அதைக் காலையில் அரைத்து உடம்பில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளித்து வந்தால் சருமம் நிறமாகவும், பள பளப்பாகவும் மாறும்.

பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து அதை முகத்தில் பூசிவர, முகத்திலுள்ள இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும்.

வெள்ளரிப் பிஞ்சு மற்றும் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி கண்ணின் மேல் வைத்தால் இந்த கொளுத்தும் வெயிலில் கண்களுக்கும் குளிர்ச்சி. தவிர நாட்பட்ட கறு வளையம் நீங்கிவிடும்.

தர்ப்பூசணியின் அடிப்பகுதியை முகம், உடம்பு, கை, கால்கள் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர சம்மரில் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும்.

தலைமுடிக்கு:

பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்.

வேப்பிலை, துளசி, புதினா மூன்றையும் நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை போய்விடும்.

மருதாணி, டீ டிகாஷன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன் முடிக்கும் நல்ல வலு கிடைக்கும்.

வெயில் காலங்களில் முடி வறண்டு காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி இலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் தேவையான அளவில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிக்க வேண்டும். இதனால் முடி உலர்ந்து போகாமல் இருப்பதோடு பொடுகுத் தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் 4 டீஸ்பூன் அளவு எடுத்து மிதமாக சூடாக்கி தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்த்த பின்னர் வெந்நீரில் டவலை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டினால் கூந்தல் வறட்சியின்றி காணப்படுவதோடு, முடியும் செழித்து வளரும்.

கோடைக்காலங்களில் தலை சருமம் வறண்டு காணப்படுபவர்கள் வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில் ஊற வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் சாஃப்ட்டாக மாறும்.

கழுத்து:

தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும்.

கழுத்துப் பகுதி கருப்பாக உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தமாவு நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நாளடைவில் அந்த கறுப்பு நீங்கிவிடும்.

முகம்:

பெண்கள் கோடைக் காலத்தில் வெளியில் செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பிறகும் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி Refreshing Lotion வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். அதோடு முகத்தில் அழுக்கும் சேர வாய்ப்பே இருக்காது.

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும் பெண்கள், தேங்காய்த் தண்ணீரை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைத்து வந்தால், முகத்தில் உள்ள தூசு, அழுக்கு, எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிங்கு போல் ஜொலிக்கும்.

கோடைக்காலங்களில் வெப்பத்தின் கொடூரத்தன்மை அதிகமாக இருப்பதால் பெண்களின் முகத்தில் வறட்சி ஏற்பட்டு சுருக்கங்கள் தோன்றுகின்றன. இதைத் தடுக்க வாரத்திற்கு 2 முறை முட்டையின் மஞ்சள் கருவுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.

சிலருக்கு முகத்தில் மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் கருப்பு கருப்பாக மச்சம் போல காணப்படும். இதற்கு சந்தனம், சாதிக்காய், வேப்பங்கொழுந்து இம்மூன்றையும் சமமாக எடுத்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர, அந்த கருமைநிறம் தானே மறைந்துவிடும். முகமும் அழகாகத் தோற்றமளிக்கும்.

உடல் மற்றும் கை, கால்கள்:

கோடைக்காலங்களில் சரும நோய்கள் நம்மை வந்து அண்டாமல் இருக்க இலுப்பை இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தாலே போதும் (இலுப்ப இலைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்).

கோடை காலத்தில் கை, கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாகிவிடும். நன்கு பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை, கால் மற்றும் உடல் முழுவதும் பூசி வர, உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும்.

வெயிலில் செல்லும்போது, குடை அல்லது தொப்பி போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் முகம், உடல், கை, கால்களுக்குப் பாதுகாப்பளிப்பதோடு, சருமத்தில் ஏற்படும் தேவையில்லாத கறுப்பு நிறத்தையும் தவிர்க்கலாம்.

வெயிலில் செல்வதற்கு முன் கை, கால்களில் மாய்ஸ்ரைசிங் க்ரீம், சன் ஸ்கிரீன் லோஷன் ஆகியவற்றைத் தடவிச் சென்றால், வெயிலில் கறுத்துப் போவதைத் தடுக்கலாம்.

விண்டோஸ் 7 – பைல் நிர்வாகம்

மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம். எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் தெரிந்திருக்க வேண்டிய தில்லை.
விண்டோஸ் 7 சிஸ்டம், எக்ஸ்பி சிஸ்டத்தின் விரிவாக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கீழே இன்னும் தெளிவான ஒரு இயக்கத்தைத் தர ஐந்து குறிப்புகள் தரப்படுகின்றன.
1. டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி: விண்டோஸ் 7 இயக்கத்தில் Documents என்பது, எக்ஸ்பி இயக்கத்தில் நமக்குக் கிடைத்த மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டராகும். ஆனால் இது ஜஸ்ட் ஒரு போல்டர் மட்டுமல்ல; டாகுமெண்ட்ஸ் என இங்கு அழைக்கப் படுவது இங்கு ஒரு லைப்ரரியாக உள்ளது. ஆபீஸ் தொகுப்பில் எதனை சேவ் செய்தாலும், அது இந்த லைப்ரேரியில் தான் சேவ் ஆகும். இது எக்ஸ்பியில் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்வதற்கு ஒப்பாகும். ஸ்டார்ட் மெனுவினைக் கிளிக் செய்தால், அங்கு டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி இருப்பதைக் காணலாம். அதில் நீங்கள் உருவாக்கிய அனைத்து பைல்களும் இருப்பதைக் காணலாம். அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து, அங்கு Libraries groupல் டாகுமெண்ட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், இவற்றைக் காணலாம். எனவே, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் முதலில் இயங்குகையில், இந்த டாகுமெண்ட்ஸ் லைப்ரேரியில் பைல்களை சேவ் செய்வதே நல்லது.
2. விரைவாக பைல் பெற லைப்ரரி: விண்டோஸ் சிஸ்டத்தின் முந்தைய பதிப்புகளில், பைல்களை நாம் போல்டர் களில் சேவ் செய்தோம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் நூற்றுக் கணக்கான பைல்களைக் கொண்டுள்ள போல்டர் களைக் காட்டும். நாம் உருவாக்கிய போல்டருக்கேற்ற வகையில், சில பல நிலைகளில் துணை போல்டர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். இது போன்ற பல துணை போல்டர்களை அமைத்தால், பைல்களைத் தேடிக் கண்டறிந்து திறப்பது சற்று சிரமமாக இருக்கும்.
விண்டோஸ் 7 லைப்ரேரி என்பது ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி. நிறைய கதவுகள் நிறைந்த ஹால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். முதல் கதவில் “Documents” என்று எழுதியுள்ளது. இதைத் திறந்தவுடன் அங்கு நம் பைல்கள் அனைத்தையும் அடக்கியுள்ள, சில பைல் கேபினட்டுகள் இருக்கும். அடுத்த கதவில் “Pictures” என்று எழுதியுள்ளது. இங்கு உங்கள் படங்கள் பைல்கள் அடங்கிய கேபினட்டுகள் உள்ளன. முன்பு டஜன் கணக்கில் இருந்த படிக்கட்டு அமைப்பெல்லாம் இல்லாமல், ஒரு சில லைப்ரேரிகளைக் கொண்டு இப்போதைய லைப்ரேரி அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் என்ன நடக்கிறது என்றால், லைப்ரரிகளில் உங்கள் பைல்கள் ஸ்டோர் செய்யப்படுவதில்லை. உங்கள் பைல்கள், இன்னும் பழைய முறையில், பல படிக்கட்டுகளாகத்தான் ஸ்டோர் செய்யப்படுகின்றன. லைப்ரேரி என்ற அமைப்பில் இவை சார்ந்த போல்டர்கள் இழுக்கப்பட்டு உங்களுக்கு பைல்கள் கிடைக்கின்றன. இது முதலில் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சற்றுப் பழகி விட்டால், இதிலிருந்து பைல்களை எடுத்துப் பயன்படுத்துவது எளிதாகிவிடும்.
இல்லை, எனக்கு பழைய முறைப்படி அனைத்து போல்டர்களைக் காட்டும் படிக்கட்டு முறைதான் வேண்டும் என்றால், அதுபோல் செட் செய்திடவும் வழி தரப்பட்டுள்ளது. இதற்கு Organize மெனுவிலிருந்து Folder And Search Options தேர்ந்தெடுக்கவும். அடுத்து Navigation Pane என்ற பிரிவில், Show All Folders என்ற ஆப்ஷனில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
3. ஹோம் குரூப் பாஸ்வேர்ட் தவிர்க்கவும்: ஹோம் குரூப்ஸ் என்பதுவும் லைப்ரரி போன்றதே. ஆனால் அவை நெட்வொர்க்கில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இயங்கு கின்றன. ஹோம் குரூப் நெட்வொர்க்கில் இயங்கும் எந்த கம்ப்யூட்டரும், மற்ற கம்ப்யூட்டருக்குத் தன் கம்ப்யூட்டரில் உள்ளவற்றை அணுகவும், அவற்றில் எழுதவும் அனுமதியினை வழங்கும். ஆனால், நீங்கள் இங்கு எதிர்பார்த்தபடி, ஹோம் குரூப்கள் பாஸ்வேர்டினால், பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இங்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை அமைப் பதனைக் காட்டிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், பத்து கேரக்டர்கள் அடங்கிய பாஸ்வேர்டினைக் கொடுக்கிறது. இந்த பாஸ்வேர்டை எழுதி வைத்துக் கொண்டு, அதனைத் தவற விட்டுவிடாதீர்கள். முதன்முதலில் நீங்கள் உங்கள் கம்ப்யூட் டரை இணைக் கும் போது தான் இது உங்களுக்குத் தேவையாய் இருக்கும். இணைந்த பின்னர், நீங்கள் அந்த பாஸ்வேர்டினை மாற்றிக் கொள்ளலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டம் ஏன் இது போல ஒரு பாஸ்வேர்டை, தான் உருவாக்கும் பாஸ்வேர்டைக் கட்டாயப்படுத்துகிறது என்று தெரியவில்லை. மேலும், இந்த புதிய அம்சமானது, விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே செயல்படுகிறது. இது மைக்ரோசாப்ட் எடுத்த தவிர்க்க வேண்டிய முடிவு. ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியதுள்ளது.
4. ஜம்ப் லிஸ்ட் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அனைவரும் விரும்பும் பல விஷயங்களில் ஜம்ப் லிஸ்ட் ஒன்றாகும். நீங்கள் பைல் ஒன்றை, அதனை எங்கு சேவ் செய்திருந்தாலும், அதை டாஸ்க் பாரில் பின் செய்துவிட்டால், அதனை உடனடியாகப் பெற முடியும். புரோகிராம் ஒன்றை இணைக்க, கீழே கொடுத்துள்ள படி செயல்படவும்.
1. ஸ்டார்ட் மெனுவினைக் கிளிக் செய்க.
2. அப்ளிகேஷன் புரோகிராமினைக் கண்டறிந்து அதனை ரைட் கிளிக் செய்திடவும்.
3. இப்போது, Pin To Taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் 7 உடனே ஐகான் ஒன்றை, டாஸ்க்பாரில் இணைத்துக் கொள்கிறது.
நீங்கள் இந்த அப்ளிகேஷன் பட்டியலில் அதற்கான பைல்களையும் பின் செய்திடலாம். பைலைத் திறந்து, பின்னர் அதன் புரோகிராம் ஐகானில், ரைட் கிளிக் செய்திடவும். பைல் ஒன்றை பின் செய்த பின்னர், அதனை வேகமாகத் திறந்திட முடியும். இதற்கு, புரோகிராம் ஐகானில் ரைட் கிளிக் செய்து, பின் செய்த பிரிவில், அந்த பைலைத் தேர்ந்தெடுக் கலாம். இங்கு நீங்கள் அண்மையில் பயன்படுத்திய பைல் பட்டியலையும் (Most Recently used files) காணலாம். ஆனால் இந்த பட்டியல், நீங்கள் புதிய பைல்களைத் திறந்து பயன்படுத்து கையில் மாறும். ஆனால் பின் செய்யப்பட்ட பைல்களின் பட்டியல், நீங்களாக, மேலும் பைல்களைச் சேர்க்கும் போதும், நீக்கும் போதும் மட்டுமே மாறும்.
5. விண்டோஸ் எக்ஸ்புளோரர் இருமுறை திறந்து பயன்படுத்தல்: ஒரே நேரத்தில், இரண்டு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து பயன்படுத்து வது மிக எளிதான ஒன்றாகும். முதலில் டாஸ்க்பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது, வழக்கமாக நீங்கள் திறப்பது போலத் திறக்கவும். (இதுவே ஒரு நல்ல, சிறப்பான அம்சமாகும்.) அடுத்து, விண்டோஸ் டைட்டில் பாரினை, இடது புறமாக இழுத்துச் செல்லவும். விண்டோஸ் 7 சிஸ்டம், திரையின் இடது புறம் ஒரு அவுட்லைன் காட்டும் வரை இழுத்துச் செல்லவும். இப்போது விண்டோவினை இழுத்துச் செல்வதனை விட்டுவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டம், உங்கள் மானிட்டர் திரையின் இடது பாதியில் எக்ஸ்புளோரர் விண்டோவினை அமைத்திருக்கும்.
இரண்டாவதாக ஒரு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எக்ஸ்புளோரர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். மேலே கூறியபடி, மவுஸால் அழுத்தி இழுக்கவும். ஆனால் இந்த முறை வலது பக்கம் இழுக்கவும். இப்போது திரையின் இரண்டு பகுதிகளில், இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர்கள் திறக்கப் பட்டிருப்பதனைக் காணலாம். இதனால், பைல்களை ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதும், காப்பி செய்வதும், இணைப்பதுவும் எளிதாகிறது.
மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே இந்த வேலையை மேற்கொள்ள, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, இடது அம்புக் குறிக்கான கீயை அழுத்தவும். இவ்வாறு செய்வதனால், திரையில் காணப்படும் விண்டோ, தானாகவே இடது பக்கம் இழுக்கப்பட்டு அமைக்கப்படலாம். இதே போல விண்டோஸ் கீ யை அழுத்திக் கொண்டு, வலது அம்புக் குறி கீயினை அழுத்த, வலது பக்கம் ஒரு விண்டோ அமைக்கப்படுவதனைக் காணலாம்.

ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.

* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

* வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

* கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

* கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

* உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

* கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

* வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.

* வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

* ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

* கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

தன்னைத்தானே வணங்கும் `மதுரை பிள்ளையார்’

முக்குறுணி விநாயகர் விநாயகரை பல்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் இட்டு அழைக்கிறார்கள். அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ளேயே பல பெயர்களில் விநாயகர் வணங்கப்படுகிறார்.

இவர்களில் முக்கியமானவர் முக்குறுணி விநாயகர். இவரே இக்கோவிலில் உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 6 கிலோ.

இந்த விநாயகருக்கு 3 குறுணி, அதாவது 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அதனால், முக்குறுணி என்ற பெயர் இவருக்கு நிலைத்துவிட்டது.

மன்னர் திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தார். அதை மீனாட்சியம்மன் கோவிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். அதற்கு ஆதாரமாக, இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின்
உருவங்களை பார்க்கலாம்.

மேலும், மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்
பாலிக்கிறார்.

விபூதி விநாயகர் மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்து கொள்ளும் வகையில் விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் விபூதியைக் கொண்டு இவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அவ்வாறு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது அவர்களது நம்பிக்கை.

விபூதி என்றால் `மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும், வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதேபோல், மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. பொதுவாக நாம் உலகில் ஆதிமூலமாக விநாயகரைத்தான் கருதுகிறோம். அவரை வணங்கிய பிறகுதான் பிற தெய்வங்களை வணங்குவது மரபு.

இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில், விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.