Daily Archives: ஏப்ரல் 25th, 2011

பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிர்மயமான ஈஸ்ட்கள்!

ஈஸ்ட்டு, பூஞ்சை வகையைச் சேர்ந்த ஒரு செல் தாவரம். சர்க்கரைக் கரைசலைத் திறந்து வைத்திருந்தால் சில நாட்களில் அதன் மேல் நுரை பொங்கி மெல்லிய ஏடு போல் படர்ந்திருக்கும். அந்தக் கரைசல், ஆல்கஹால் போல் ஒரு புளித்த வாசனையை வீசும். அதற்குக் காரணம், காற்றில் இருந்து அக்கரைசலில் வந்து கலந்த ஈஸ்ட்டுகள்தான்.

இந்த ஈஸ்ட்டு ஒரு செல் கொண்டது. இதற்கு செல் சுவரும் உண்டு. கார்போஹைட்ரேட்களாலும், பாஸ்பரஸ் கலவையாலும் ஆனது இந்தச் செல் சுவர். செல்லில் `நியூக்ளியஸ்’ எனும் ஒரு மையக்கருவும், அதையொட்டி வாக்குவமும் உள்ளது. சைட்டோபிளாசம் செல்சுவர் உள்ளது.

இந்த செல், முட்டை வடிவம் உடையதாகவோ, கோள வடிவம் உடையதாகவோ இருக்கும். இவை அரும்புதல் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஈஸ்ட் செல்லின் பக்கங்களில் இருந்து முட்டை வடிவ அரும்புகள் தோன்றும். அந்த அரும்புகள் பிரிந்து புதிய ஈஸ்ட் செல்களாக மாறும். தங்களுக்குத் தகுந்த சூழ்நிலையில் இவை விரைவாக வளரும்.

ஈஸ்ட் வளரும்போது சைமேஸ், இன்வர்ட்டேஸ் என்ற இரு பொருள்களை உருவாக்குகிறது. இவையே மாவுச் சத்தை சர்க்கரையாகவும், சர்க்கரையைச் சிதைவடையச் செய்து ஆல்கஹாலையும், கார்பன்-டை-ஆக்சைடையும் உண்டாக்குகின்றன. நொதித்தலின்போது நுரை பொங்கிவர, அத்துடன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறி, ஆல்கஹால் மட்டும் தங்கிவிடும். ஈஸ்ட்டின் இத்தன்மை, ரொட்டி தயாரிப்பதிலும், மதுபானத் தொழிலிலும் உதவுகிறது.

மனிதனுக்கு இத்தகையை மாற்றங்களைப் பற்றி நீண்டகாலமாகவே தெரிந்திருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதுபானம் தயாரித்து வந்திருக்கிறான். கருப்பஞ்சாறு, உருளைக் கிழங்கு, கீரை, மால்ட், ஆப்பிள், திராட்சை ஆகியவற்றின் சர்க்கரைக் கரைசலை காற்றுப் படும்படி வைத்து, ஆல்கஹால், விஸ்கி, பீர், ரம், ஒயின் போன்ற மதுபானங்களைத் தயாரித்தனர்.

எகிப்தியர்கள் ரொட்டி தயாரிப்பதில் முதன்முதலில் இதைப் பயன்படுத்தினர். இதை அவர்கள் யதேச்சையாகக் கண்டுபிடித்திருக்கலாம்.

ரொட்டி மாவை ஈஸ்ட்டுகள் புளிக்க வைப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. ஈஸ்ட்டுகள் இந்த மாவில் உள்ள மாவுச் சத்தை சர்க்கரையாக உறிஞ்சி மாற்றிக்கொள்கிறது. அவ்வாறு செய்யும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற, அக்குமிழ்கள் நுண்துகள்களாக மாறி ரொட்டிக்கு ஒரு மிருதுத் தன்மையைக் கொடுக்கின்றன.

கம்ப்யூட்டரே கதி

மெரிக்கா கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால் அமெரிக்க பெண்கள் எப்போதும் கம்ப்யூட்டரே கதி என்று ஆகிவிட்டார்கள் போல் தெரிகிறது. அவர்களின் மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு கணவரான ஆண் தேவை இல்லையாம். கம்ப்யூட்டர் இணைய தள தொடர்பு மட்டும் போதுமாம்.

இரண்டு வாரங்களுக்கு இலவசமாக இணையதள சேவை கிடைத்தால் செக்ஸ் கூட வேண்டாம் என்று 46 சதவீதம் அமெரிக்கப் பெண்கள் கூறியதாக அந்நாட்டு சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. அதை 30 சதவீதம் ஆண்கள் ஒத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய பெண்கள் என்ன சொல்கிறார்கள்?!

திருமணமான பெண்: (இவர் இரண்டு குழந்தைகளின் தாய்)

“எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால், கணவரோடு உறவு கொள்ள சரியான, போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால் கட்டித் தழுவுவதோடு நிறுத்திக் கொள்கிறோம். அவர் கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது டி.வி.யே கதி என்று கிடப்பார். நானும் தோழிகளுடன் எங்கேயாவது சுற்றுலா சென்று செக்சை மறந்துவிடுகிறேன். சமயத்தில் குழந்தைகளை கணவர் பார்த்துக் கொள்வார்” என்கிறார் ஜோனா பால். இவருக்கு வயது 33. இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்.

“எனக்கு 24 வயது. என்னுடைய ஜோடி பெயர் ஜிம்மி ஜூஸ். இன்டர்நெட் பார்க்கும்போது செக்ஸ் தொடர்புடைய நினைப்புகள் உண்மையிலேயே எனக்கு வருவதில்லை!” என்கிறார் கணினி இணையதள வடிவமைப்பாளர் ஷீத்தல்சிங்.

மருத்துவ மாணவி 23 வயதாகும் ஜெனிபர் கூறும்போது, “தேர்வும், இணையதளமும் எனக்கு முக்கியமானது. இன்டர்நெட் பார்க்கும்போது பசி எடுத்தாலும் கண்டு கொள்ளமாட்டேன். அதேபோல் செக்ஸ் உணர்வும் ஏற்படாது. என்னையும், செல்போனையும் பிரிக்கவே முடியாது” என்கிறார்.

திருமணமாகாத பெண்:

மீடியாவில் பணிபுரியும் நீலு கடாராவுக்கு இனிப்பு என்றால் அதிக பிரியம். இவருக்கு வயது 33 என்றாலும் இன்னும் திருமணமாகவில்லை. இவர் எதற்காக செக்சை விட்டுக் கொடுப்பாராம் தெரியுமா? “எனக்கு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம். கோவா ஸ்ட்ராபெர்ரி கிடைத்தால் எனக்கு செக்ஸ் இரண்டாம் பட்சம்தான்!” என்கிறார்.

திருமணமாகாத ஆண்:

வங்கியில் பணிபுரியும் அசோக் கூறுகையில், “எனக்கு பிளாக்பெர்ரி என்றால் ரொம்ப இஷ்டம். அதற்கு இணை செக்ஸ் இல்லை என்பதே எனது கருத்து. முதலில் பிளாக் பெர்ரிதான் வேண்டும் என்பேன்” என்கிறார்.

அமெரிக்கர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் எப்படி `எந்திரம்` ஆகிக் கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா!


நம்மைச் சூழ்ந்திருக்கும் விந்தைப் பொருட்கள்!

நம்மைச் சுற்றிலும் கோடிக்கணக்கான பொருட்களை நாம் பார்க் கிறோம்.

அறிவியல் அறிஞர்கள் அந்தப் பொருட்களை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்ததன் விளைவாக, அந்தப் பொருட்கள் யாவும் 92 வகையான அடிப்படையான தனிப்பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்தத் தனிப்பொருட்களை மூலகங்கள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மூலகங்களுக்கு உதாரணமாக இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி, பாதரசம், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தங்கத்தை எடுத்து அதனைப் பிரித்தெடுக்க முயன்றால் தங்கம்தான் கிடைக்குமே தவிர, வேறு பொருள் கிடைக்காது. இம்மாதிரியான சிறப்பு வாய்ந்த பொருளைத்தான் மூலகம் என்று கூறுகின்றனர்.

இரண்டு மூலகங்களோ அல்லது பல மூலகங்களோ ரசாயன முறைப்படி ஒன்று சேர்ந்து உருவானதை கூட்டுப்பொருள் என்பார்கள்.

தண்ணீரை எடுத்துக்கொள்வோம். தண்ணீர் ஒரே பொருள் அல்ல. பிராண வாயுவும் (ஆக்சிஜன்), நீரக வாயுவும் (ஹைட்ரஜன்) ஒன்று சேரும்போது தண்ணீர் உருவாகிறது. இவ்வாறு ஒன்று சேர்ந்து உருவான பொருளை ரசாயன முறைப்படி பிரிக்கவும் முடியும். தண்ணீரின் மூலம் மின்சாரத்தைப் பாயச் செய்தால் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் வெளிவருகின்றன. தண்ணீரின் இயல்பானது, தண்ணீரை உண்டாக்கும் இரண்டு வாயுக்களின் குணங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருக்கிறது.

இவ்வாறு கனிமப் பொருட்கள் ரசாயன முறையில் சேர்ந்து முற்றிலும் புதிய குணமுள்ள வேறு பொருட்கள் ஆகின்றன.

இப்புதிய பொருட்களில் இருந்து அவற்றில் அடங்கியுள்ள மூலகங்களை எளிதாகப் பிரிக்க முடியாது.

நாம் உணவில் உபயோகிக்கும் உப்பு ஒரு கூட்டுப்பொருள். சோடியம் என்ற உலோகமும், குளோரின் என்ற வாயுவும் சேர்ந்து சோடியம் குளோரைடு என்ற கூட்டுப்பொருள் உண்டாகிறது. அதைத்தான் `உப்பு’ என்று சொல்கிறோம். நாம் சுவாசித்து வெளியிடும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்சைடு) ஒரு கூட்டுப்பொருள். கார்பனும், ஆக்சிஜனும் சேர்ந்து கார்பன்-டை-ஆக்சைடு உண்டாகிறது. இவ்வாறு கணக்கற்ற கூட்டுப்பொருட்கள் உண்டு.

பல பொருட்கள் ரசாயன மாறுதலுக்கு உட்படாமல் ஒன்று சேர்ந்து இருப்பதற்குக் கலவை என்று பெயர்.

மணலும், சர்க்கரையும் சேர்ந்தது ஒரு கலவை. கந்தகப் பொருளும், இரும்பும் சேர்ந்தது ஒரு கலவை. சர்க்கரை, தண்ணீரில் கரைந்து விடுகிறது. அது ஒரு கலவை.

கூட்டுப்பொருள்களைப் போல அன்றி, கலவைப் பொருட்களில் கலந்துள்ளவற்றை புடைத்தல், தூற்றல், சலித்தல், இறுத்தல், வடிகட்டல், ஆவியாக்கிப் பிரித்தல் போன்ற பவுதீக முறைகளைக் கையாண்டு பிரித்துவிடலாம்.

பற்கள் சுத்தம்: ஏன்?


னக்கு சமீபத்தில் பல்வலி வந்ததால் பல் டாக்டரிடம் சென்றிருந்தேன். `இதற்கு முன் பற்களில் வலி வந்திருக்கிறதா?’ என்று டாக்டர் கேட்டார். `வாழ்நாளில் வந்ததில்லை. இன்றுதான் முதன் முதலாக பல் டாக்டரையே பார்க்க வந்திருக்கிறேன்’ என்றேன். வாயைத் திறக்கச் சொன்னார்.

எனக்கு அவரிடம் வாயைத் திறந்து காட்ட கூச்சம். வாய் மற்றும் பற்கள் சுத்தமாக இருக்கிறதா, இல்லையா? என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயம். இருந்தாலும் தைரியமாக வாயைத் திறந்து காட்டினேன். காரணம் நான் பெரிய மனிதனாக ஆனதிலிருந்து (அதாவது 18 வயது தாண்டியபிறகு என்று சொல்ல வந்தேன்) தினமும் மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு பிரஷ் பண்ணுவேன். காலையில் மட்டும் பேஸ்டுடன்; மற்ற வேளைகளில் பேஸ்ட் இல்லாமல். எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவேன். இது என் தந்தையின் டிரெயினிங்.

`அப்பா, பேசாம நீங்க எங்கே வெளியே போனாலும் பாக்கெட்டிலேயே ஒரு பிரஷ்ஷை எடுத்துக்கிட்டு போயிடுங்க. வெளியிலேயோ, ஹோட்டலிலேயோ, சாப்பிட்டீங்கன்னா, அங்கேயே பிரஷ் பண்ணிக்கலாம்’ என்று என் மகள் கூட என்னை கிண்டல் பண்ணுவாள். ஆகவே பற்கள் கண்டிப்பாக சுத்தமாக இருக்கும் என்ற தைரியம். மேலும் இன்றைய தேதி வரை பல்வலியே வந்தது கிடையாது. அது இன்னும் கொஞ்சம்

தைரியம்.பற்களை எல்லாம் டெஸ்ட் பண்ணிப் பார்த்த பின் டாக்டரைக் கேட்டேன், “என் பல் சுத்தம் எப்படி இருக்கிறது டாக்டர்? கண்டிப்பாக நன்றாக இருக்கணுமே. `குட்’, `வெரி குட்’, `வெரி வெரி குட்’ இதில் எது?” என்று கேட்டேன். `வெரி பேடு’ என்று படாரென்று பல் டாக்டர் என்னைப் பார்த்து சொல்லி விட்டார். ஆடிப் போய்விட்டேன். மூன்று வேளையும் பல் துலக்கும் நமக்கா இப்படி?டாக்டரிடம் விளக்கம் கேட்டேன். டாக்டர், “நீங்க மூன்று வேளையும் பல் தேய்க்கிறீங்க, இல்லை என்று நான் சொல்லவில்லை. நீங்கள் பற்களின் வெளிப்பக்கம் மட்டும்தான் தேய்த்து சுத்தமாக வைத்திருக்கிறீர்களே தவிர, பற்களின் உட்புறத்தில் நீங்கள் சரியாக தேய்க்கவில்லை. நீங்கள் எத்தனை முறை பல் தேய்க்கிறீர்கள் என்பது பிரச்சினை இல்லை. எந்த முறையில் பல் தேய்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம். அதனால் உள்பக்கம் சுத்தமாக இல்லை” என்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.

அது நாள் வரை மொத்த பற்களும் தெரிய, நன்றாக சிரித்த நான், அதற்குப்பிறகு வாயை திறக்கவே கூச்சப்பட்டேன். எப்போதும் சிரித்த முகமாக இருப்பார் என்று எல்லோரும் என்னைச் சொல்வார்கள். அதற்கு தண்டனை இது என்று நினைத்துக் கொண்டேன்.

பற்கள் உடலின் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆனால் நாம்தான் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பல் இல்லாவிட்டால் சொல் இல்லை என்று சொல்லுவது உண்டு. பற்கள் ஆரோக்கியமாக இல்லையென்றால் உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்காது.

கருவில் சிசு உருவான ஆறாவது மாதத்திலேயே அதன் வாயில் கீழ் வரிசையில் முன் பற்கள் இருக்குமிடத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது வளரும் பற்களுக்கு பால் பற்கள் என்று பெயர். சிறிய வயதில் சாப்பிடுவதற்கும் மழலைப் பேச்சுக்களை பேசுவதற்கும் பயன்படும் பால்பற்கள், பின்னாளில் வரவிருக்கும் நிரந்தர பற்களுக்கு முன்கூட்டியே இடத்தைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது என்று கூட பால் பற்களை சொல்லலாம்.

பற்களுக்கிடையில் நாக்கு மேலும் கீழும் இங்கும் அங்கும் புரண்டு வருவதால்தான் பேச்சு உருவாகிறது. நாக்கு புரண்டிருக்காவிட்டால் நாம் பேசியிருக்க மாட்டோம். உலகில் இத்தனை மொழிகள் தோன்றியிருக்கவும் மாட்டாது.

பற்களின் அழகே அவைகள் வரிசையாக ஒரே சீராக வெள்ளை வெளேரென்று இருப்பதுதான். பால் பற்களை ஒழுங்காக பராமரித்து கவனித்து வந்தால் அதன் பின் வளரும் நிரந்தர பற்கள் ஒழுங்காக சீராக வரிசையாக அதனதன் இடத்தில் வளர ஆரம்பிக்கும்.

குழந்தையின் மூன்றாவது வயதில் கிட்டத்தட்ட இருபது பற்கள் வளர்ந்து விடுகின்றன. ஆறு வயதிலிருந்து பதினான்கு வயதிற்குள் அநேகமாக பால்பற்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தானாகவே விழுந்து விடுவதும், சில குழந்தைகள் ஆடுகிற பல்லை கையாலேயே பிடுங்கிவிடுவதும் உண்டு. கிராமங்களில் சிறுவர்கள், ஆடும் பற்களை நூலைக்கட்டி இழுத்து பிடுங்கி விடுவார்கள்.

நிரந்தர பற்கள் கிட்டத்தட்ட ஆறாவது வயதிலிருந்து முளைக்க ஆரம்பிக்கும். பால் பற்கள் விழுந்த குழிகளில் புதுப்பல் (நிரந்தர பல்) முளைக்கும். இது மொத்தம் முப்பத்திரெண்டு ஆக இருக்கும். மேல் வரிசையில் பதினாறு பற்களும், கீழ் வரிசையில் பதினாறு பற்களும் இருக்கும். இதுதான் நிரந்தர பற்கள். உங்கள் வாழ்வின் இறுதிக் காலம் வரை உங்களோடு வரக்கூடிய பற்கள். எனவே இதைத்தான் நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதை சிலர் தவறாக பால் பற்களே என்று நினைத்து விடுவதுண்டு. அதனால் கவனமில்லாமல் இருந்து விடுவார்கள். பன்னிரெண்டு வயதளவில் நிரந்தரப் பற்கள் ஒவ்வொன்றாக முளைத்து விடும். `விஸ்டம் பற்கள்’ (கீமிஷிஞிளிவி ஜிளிளிஜிபி) என்று சொல்லக்கூடிய கடைவாய்ப்பல் மட்டும் பதினேழு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் வரும்.

நாம் வளர்க்கும் நம்மைச் சுற்றி வளரும் மிருகங்களுக்கும் அனேகமாக முப்பத்திரெண்டு பற்கள்தான் இருக்கும். மாடுகளுக்குக்கூட முப்பத்திரெண்டு பற்கள் தான். ஆனால் ஒரு வித்தியாசம் நம்மைப் போலல்லாமல் அவைகளுக்கு மேல் தாடையில் பனிரெண்டு பற்களும் கீழ்த்தாடையில் இருபது பற்களும் இருக்கும்.

அதேமாதிரி, மிகப்பெரிய விலங்காகிய யானைக்கு மொத்தம் இருபத்து நான்கு பற்கள்தான். `பிரீ மோலார்’ என்று சொல்லக்கூடிய பற்கள் முன்பக்கத்தில் பன்னிரெண்டும், மோலார் என்ற சொல்லக்கூடிய பற்கள் பின்பக்கத்தில் பன்னிரெண்டும் அமைந்திருக்கின்றன. யானையின் தந்தம் கூட பல்வகையைச் சேர்ந்ததுதான். இரண்டாவது `இன்சிஸார்’ என்று சொல்லக்கூடிய பல் தான் மாறி அதிகமாக வளர்ந்து தந்தமாகி விடுகிறது.

மனிதனுக்கு வயதான காலத்தில் பற்கள் அனைத்தும் கொட்டிவிட்டாலும் செயற்கைப் பற்கள் மற்றும் பல்செட் உதவியுடன் வாழலாம். ஆனால் யானைக்கு அப்படியல்ல. யானைக்கு, கடைசியாக ஆறாவது செட் பற்கள் (அதாவது 12 பற்கள்) முப்பது வயது ஆகும்போது முளைக்க ஆரம்பித்து அதன் வாழ்நாள் முழுவதும் அதாவது சுமார் எழுபது வயதுவரை இருக்கும். இந்த கடைசி செட் அதாவது ஆறாவது செட் பற்கள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்… யானை உயிரோடு இருக்காது. பல் இல்லாததாலும் சாப்பிட முடியாததாலும் யானை பட்டினி கிடந்து இறந்து விடுமாம்.

`பல் முழுவதும் விழுந்துவிட்ட 87 வயது முதியவர் ஒருவரை பற்கள் இல்லையே எப்படி சாப்பிடுகிறீர்கள்’ என்றேன். `பல் இல்லாவிட்டால் என்ன, எனக்கு பல்லை விட ஈறு தான் ரொம்ப ஸ்ட்ராங். நான் அசைவ உணவைக்கூட ஈறுகளுக்கிடையில் வைத்து அரைத்து விடுவேன்’ என்றார். அவர் சொல்வது உண்மை தான். சிலருக்கு ஈறும், தாடை எலும்பும் மிக மிக உறுதியாக இருக்கும்.

புதன் போட்டோவை அனுப்பியது ‘மெசஞ்சர்’

6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை சமீபத்தில் சென்றடைந்திருக்கும் ‘மெசஞ்சர்’ விண்கலம் முதல் போட்டோவை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா&2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் சென்ற ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு புதன் சுற்றுவட்ட பாதையை கடந்த 17&ம் தேதி சென்றடைந்தது. விஞ்ஞானிகளின் 36 ஆண்டு கால உழைப்பு வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நாசா கூறியது.

சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகத்தில் வெப்பநிலை பூமியைவிட பல மடங்கு அதிகம். அதாவது, 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சூரியனின் பார்வை படாத இடங்களில் குளிரும் அதிகம் இருக்கும். இதை சமாளித்து ஆய்வு பணியில் ஈடுபடும் வகையில் மெசஞ்சர் விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நாசா தெரிவித்தது.

இந்நிலையில், புதன் கிரகத்தை சென்றடைந்த ‘மெசஞ்சர்’ விண்கலம், கிரகத்தின் தரைப் பகுதியை படமெடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இதுபற்றி நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு மெசஞ்சர் விண்கலம் வெற்றிகரமாக புதன் கிரகத்தை சென்றடைந்துள்ளது. முதல் போட்டோவையும் அனுப்பியுள்ளது.

வட்டப்பாதையில் இருக்கும் விண்கலம் ஒன்றில் இருந்து புதன் கிரகத்தை படமெடுப்பது இதுவே முதல் முறை. விண்கலத்தில் உள்ள கேமரா உள்ளிட்ட அனைத்து கருவிகளும் கடந்த 23&ம் தேதி முதல் சிறப்பாக செயல்பட தொடங்கியிருக்கின்றன. விண்கலத்தின் ஆய்வுப் பணிகள் ஏப்ரல் 4&ம் தேதி முதல் தொடங்கும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

சிக்கன் டிக்கா மசாலா

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் – 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி – 200 கிராம்
வெண்ணை – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தயிர் – 1 கப்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2

செய்முறை

* அகலமான பாத்திரத்தில் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும்.

* சிக்கன் துண்டுகளை மசாலா கலவையில் புரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* அகலமான கடாயில் எண்ணை மற்றும் வெண்ணை சேர்த்து சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

* இப்போது நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* மசாலாவில் ஊற வைத்த சிக்கனை, தந்தூரி அடுப்பிலோ அல்லது மைக்ரோவேவ் ஓவனிலோ வைத்து இருபுறமும் சிக்கனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* தாளித்து வதக்கிய வெங்காயம், தக்காளியுடன் போதுமான அளவு உப்பு சேர்த்து அதனுடன் வேக வைத்த சிக்கனையும் சேர்த்து நன்கு கிளறவும். சிக்கனை இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

* தயாராகிவிட்டது டிக்கா மசாலா.

குறிப்பு

டிக்கா மசாலாவை இறக்குவதற்கு முன்பே தேவையெனில் `பிரெஷ் கிரீம்’ சிறிதளவோ அல்லது முந்திரிப் பருப்பு அரைத்ததையோ சிறிதளவு சேர்க்கலாம்.

இந்த டிக்கா மசாலா, சாதம் மற்றும் டிபனுக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

செப்’ தாமு

வேர்ட் டிப்ஸ்-பாரா தொடக்க இடைவெளி

பாரா தொடக்க இடைவெளி
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்க கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.
Ctrl + M: கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து கொடுக்கவும்.
Ctrl + Shift + M: கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடைவெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.
Ctrl + T:இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.
Ctrl + Shift + T: ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும்.
கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!

புல்லட் பாய்ண்ட்ஸ்
வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந் தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்து விடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.

பிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க

நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன் டேஷன் பைல்களைப் பயன் படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்து கையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள். எடுத்துக் காட்டாக, ஒருவர் Nணிtஞுண் பயன்படுத்தும் வகையில் மூடி இருப்பார். சிலர் அவுட்லைன் வகையில் பயன்படுத்தி முடித்திருப்பார். வேறு சிலரோ , ஸ்லைடுகளில் தம்ப்நெய்ல் பார்த்தவாறு மூடி இருப்பார்கள். நீங்கள் திறக்கும்போது, அல்லது யார் திறந்தாலும், இறுதியாக எந்த வகையில் மூடப்பட்டதோ, அந்த வகையிலேயே, அந்த பைல் திறக்கப்படும்.
இதற்கு மாறாக, ஒரே வகையில் அனைத்து (PowerPoint 2010) பிரசன்டேஷன் பைல்களையும் திறக்கும் வகையில் அமைக்கலாம். கீழ்க்காணும் வழிகளில் இதனை செட் செய்திடவும்.
1. ரிப்பனில் “File” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது Microsoft Office Backstage வியூ தோன்றும்.
3. இதில் “Options” பட்டனில் கிளிக் செய்திடவும்.
இந்த வழிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, பிரசன்டேஷன் திறந்து,பின்னர் Alt + T +O என்ற கீகளை அழுத்தலாம்.
4. இங்கு “Display” என்பதன் கீழாக, “Open all documents using this view” என்பதன் அருகே உள்ள கீழ்விரி அம்புக் குறியை அழுத்தவும். இங்கு பைல்கள் எந்த வகையில் திறக்கப்பட வேண்டும் என்பதற்குப் பல ஆப்ஷன்கள் கீழ்க்கண்டவாறு காட்டப்படும்.
* The view saved in the file (default)
* Normal outline, notes and slides
* Normal thumbnails, notes and slide
* Normal outline and slide
* Normal thumbnails and slide
* Normal notes and slide
* Normal slide only
* Outline Only
* Slide Sorter
* Notes
இவற்றிலிருந்து நீங்கள் விரும்பும் வகையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கிளிக் செய்து முடிக்கலாம்.

தண்ணீரில் மொபைல் விழுந்தால்

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.
1.முதலாவதாக, மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.
2. அடுத்து, மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.
3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி, ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல் போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.
இந்த வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.
நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர், பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன் சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி, நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.