Daily Archives: ஏப்ரல் 26th, 2011

நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு


இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

எரிமலைகளாலும் நன்மை உண்டு!


எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது. இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகுதிகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சிகோ, சிசிலி முதலிய இடங்களில் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக்கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய்வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

அனல் குழம்பு குளிரும்போது மேலிருந்து கீழே பாறையாக இறுகிக்கொண்டே போவதால் தங்கம், வெள்ளி, ஈயம், துத்தநாகம், பாதரசம் போன்ற பல உருகிய உலோகப் பொருட்களும் கட்டியாக மாறிப் பாறைகளோடு கலந்து விடுகின்றன. அவ்வாறு பூமிக்குக் கீழே சில அடி ஆழத்துக்குள்ளாகவே உலோகக் குழம்புகள் பாறைக் குழம்போடு வந்து படிவதால்தான் சுரங்கங்கள் மூலம் அவை நமக்கு எளிதில் கிட்டுகின்றன.

`சிவப்பு நாடா’ பெயர் வந்தது எப்படி?

அரசாங்கம், சட்டம் தொடர்பான தாமதங்களுக்கு `சிவப்பு நாடா’ (Redtape) என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா? இங்கிலாந்து அரசர்கள் சட்ட ஆணைகளைத் தோலால் ஆன காகிதங்களில் எழுதிச் சுருட்டி, சிவப்பு பட்டாலான ரிப்பன்களால் கட்டி வைப்பார்கள்.

பின்னர் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகார வர்க்கத்தினர் தங்களுடைய பணிகளுக்கு ஒரு முக்கியமான தோற்றத்தைத் தருவதற்காக சிவப்பு நாடா பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர். தங்களை அதிகாரிகள் மிஞ்சக் கூடாது என்பதற்காக வக்கீல்கள் தங்களுக்கு என்று ரிப்பன்களை தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

அரசாங்கம் மற்றும் சட்டப் பிழைகளால் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பற்றி எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், `சிவப்பு நாடாவை வெட்டிச் செல்லுதல்’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு இது எல்லோராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

வணிக வளாகங்கள் `மால்கள்’ எனப்படுவது ஏன்?

1950-ம் ஆண்டுகளில் வணிக வளாகங்கள் அதிக அளவில் தோன்றின. ஆனால் 1967 வரை அவற்றுக்கு `மால்கள்’ (Malls) என்ற பெயர் கொடுக்கப்படவில்லை.

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய விளையாட்டான `பாலமாக்லியோ’ இங்கிலாந்தில் `பால்-மால்’ என்ற பெயரில் அறிமுகமாயிற்று. 18-ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு மறைந்து போனது. அது விளையாடப்பட்ட லண்டன் தெரு ஒன்றுக்கு அந்தப் பெயர் வந்தது.

பணக்காரர்கள் இந்தத் தெருவில் உள்ள கடைகளுக்குள் அலைந்து திரிவது, பொருட்களை வாங்குவது ஒரு நாகரீகமான செயலாக ஆக, அந்த மாதிரியான பொருட்கள் விற்கும் வணிக வளாகங்கள் `மால்கள்’ என்று அழைக்கப்பட்டன.

பேஜ் மேக்கர் டிப்ஸ்

டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ்மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்தல்:
* டெக்ஸ்ட் பைலில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அந்த பாரா முழுவதும் செலக்ட் செய்திட மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும்.
* முதலில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்திடுங்கள். பின் மீண்டும் இன்னொரு இடத்தில், பல பக்கங்கள் தாண்டி இருந்தாலும், ஷிப்ட்+ கிளிக் செய்தால் இடையே உள்ள அனைத்து டெக்ஸ்ட்டும் செலக்ட் செய்யப்படும்.
* ஒரு முறை அல்லது இருமுறை கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து விட்டால் பின் எத்தனை முறை ஷிப்ட் + கிளிக் செய்திடும்போதும் அந்த எல்லை வரை அனைத்து டெக்ஸ்ட்டும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும்.
* ஆரோ கீகளை அழுத்தினால் கர்சர் நகரும். இதற்கு நம்பர் பேடில் இணைந்திருக்கும் ஆரோ கீகளைப் பயன்படுத்த விரும்பினால் நம் லாக் அணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஆரோ கீகள் உள்ள சிறிய பேடில் உள்ள கீகளைப் பயன்படுத் தலாம். ஆரோ கீகளை கண்ட்ரோல் கீயையும் இணைத்து அழுத்தினால் கர்சர் ஒவ்வொரு சொல்லாகத் தாவும். இடது, வலது, மேல், கீழ் என ஷிப்ட் கீயை ஆரோ கீகளுடன் அழுத்துகையில் டெக்ஸ்ட் தொடர்ந்து அந்த திசையில் செலக்ட் ஆகும்.

எழுத்தின் அளவை குறைக்க:
பேஜ் மேக்கரில் ஏற்படுத்திய ஸ்டோரி டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட பாண்ட் சைஸின் அளவைக் குறைக்கப் பல வழிகள் உள்ளன. ஷார்ட் கட் கீகளாக உள்ளவற்றைப் பார்க்கலாம். கண்ட்ரோல் + ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு > அழுத்தினால் எழுத்தின் அளவு 10, 12, 14, 18 என பெரிய சைஸுக்கு மாறும். கண்ட்ரோல் + ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு < அழுத்தினால் எழுத்தின் அளவு மேலே சொன்னபடி குறையும். இப்படி இல்லாமல் ஒவ்வொரு அளவாகக் குறைக்க / அதிகரிக்க வேண்டும் என்றால் கண்ட்ரோல் +ஷிப்ட் கீயை அழுத்தி > அல்லது < பயன்படுத்த வேண்டும்.

டெக்ஸ்ட் மாற்றம்:
தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் கீழ்க்கண்ட ஸ்டைல் மாற்றங்கள் ஏற்படுத்த கீ சேர்க்கைகள் தரப்பட்டுள் ளன.
நார்மல் — எப்5 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + ஸ்பேஸ் பார்
போல்ட் — எப்6 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + B
இடாலிக்ஸ் — எப் 7 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + K
சப்ஸ்கிரிப்ட் — கண்ட்ரோல் + \
சூப்பர்ஸ்கிரிப்ட் — கண்ட்ரோல் +ஷிப்ட்+ \
அடிக்கோடிட — கண்ட்ரோல் +ஷிப்ட்+ U

இளமை… இம்சை..!

இளமையில் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது இளநரை.

உணவுக் குறைபாடு, மரபுத் தன்மை, குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவது, மாசுபட்ட சுற்றுப்புறச் சூழல், அடிக்கடி ஷாம்பு போடுவது ஆகியவையே இளநரைக்கு அடிப்படை காரணம். இந்த காரணிகளை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருந்தால் இளநரையை தவிர்க்கலாம்.

அடுத்து இளமையில் முக்கியப் பிரச்சினையாக வருவது முகப்பருக்கள். முகத்தில் உள்ள எண்ணை சுரப்பி அதிகம் செயல்படுவதாலும் ஆன்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் தூண்டுதலும் காரணம் ஆகும். இளமைக்காலத்தில் இது அதிகம் சுரக்கும்.

தக்காளிக்கு குளிர்ச்சித் தன்மை இருப்பதால் முகப்பரு வராமல் தடுக்கும் தன்மை உள்ளது. உணவில் தக்காளியை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

இளமைக்காலத்தில் உலர்ந்த சருமத்தை உடையவர்கள், எண்ணைத் தன்மை உடைய சோப்பை பயன்படுத்த வேண்டும்.

எண்ணைத் தன்மை சருமத்தை உடையவர்கள், சாதாரண சோப்புகளை ஒருநாளைக்கு 4 அல்லது 5 முறை பயன்படுத்தி முகத்தை கழுவி பசை இல்லாமல் வைத்துக் கொள்ளவேண்டும்.

இளமையில் மற்றொரு பிரச்சினை… தேமல்.

உடம்பில் ஏற்படும் எல்லா வெண் புள்ளிகளுக்கும் பல காரணங்கள் உள்ளன. அதேபோல் தேமல் வந்தால் உடனே மருத்துவரை பார்த்து சோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இதற்கு பாட்டி வைத்தியம் சரிவராது.

உடலில் எடை கூடினாலோ அல்லது காலுக்கு தகுந்த செருப்பு அணியாவிட்டாலோ அல்லது ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்தாலோ பித்த வெடிப்பு ஏற்படும். மேலும் உடலில் இரும்புச் சத்து குறைந்தாலும் பித்த வெடிப்பு ஏற்படும்.

தற்போது கோடை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை `அப்தாஸ் அல்சர்’ எனப்படும் வாய்ப்புண் அடிக்கடி வர வாய்ப்புள்ளது. வைட்டமின் பி பற்றாகுறை, இரும்புச்சத்து குறைபாடு, குடல்புண் தொந்தரவு ஆகியவையே காரணம். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் மன அழுத்தம் காரணமாக வாய்ப்புண் ஏற்படும். உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொடர்ந்து வாய்ப்புண் இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.